காடரினக்கதைகள் – 5
வெரிக்கு பயாம (கீரியின் கதை)
தொகுப்பும் ஓவியத் தூரிகையும் :
ப. குணசுந்தரி & து. சரண்யா
ஒரு ஊரில் ஒரு வெரிகும் அதன் குடும்பமும் காட்டில் வாழ்ந்து வந்தது. அந்த வெரிகு தினமும் காட்டிற்குள் போய் காய்களை எடுத்து வந்து தன் பிள்ளைகளுக்கும் மனைவிக்கும் கொடுத்தது. ஒரு நாள் காலையில் வெரிகு குளிப்பதற்காகச் சென்றது. அப்போது அது ஒவ்வொரு நீர்நிலையின் அருகில் செல்லும் போதும்
இவுட தண்ணீயாடுவன்?
இவுட தண்ணீயாடாத
அதாவது இங்குக் குளிக்கலாமா? குளிக்க வேண்டாம் என்று கூறியபடி சென்றது. அப்போது ஒரு ஆற்றின் அருகே போய் நின்றது. அப்போது அந்த ஆற்றில் மாங்கனி ஒன்று மிதந்து வருவதைக் கண்ட வெரிகு அந்தக் கனியை எடுத்து சுவைத்தது. மாங்கனியின் சுவையில் வெரிகு மெய்மறந்து நின்றது.

உடனே அந்த மாங்கனி எந்த இடத்திலிருந்து வந்தது என்று பார்க்க வேண்டுமென நினைத்து ஆற்றின் ஓரத்திலேயே நடந்தது. அப்போது ஆற்றின் அருகே ஒரு பெரிய மாமரம் காய்த்து பழம்பழுத்து நிற்பதைக் கண்டது. அதன் அடியில் மாம்பழங்கள் விழுந்து குவிந்துக் கிடந்தன. அதனைக் கண்ட வெரிகு ஓடிச்சென்று ஒவ்வொரு பழமாக எடுத்து உண்டது.
திடீரென வெரிகு பழத்தைப் பின்புறமாகத் தூக்கி எறிந்தது. தான் ஒரு ஆண்மகனாக இருந்தாலும் தரையில் கிடக்கும் பழங்களை எடுத்துத் தின்பதை எண்ணி அவமானப்பட்டது.
கிடுகிடுவென மாமரத்தில் ஏறி எல்லாக் கிளைகளிலும் இருக்கும் பழங்களை வயிறு நிறைய பறித்துத் தின்றது. மாமரத்தில் இருந்து இறங்க வெரிகுக்கு மனமே இல்லை. அதனால் தன் கை, கால், வால் ஆகிய இடங்களில் மாம்பழங்களைப் பறித்து பிடித்துக் கொண்டு ஆற்றில் குதித்து நீச்சல் போட்டது.
அவ்வேளையில் கிழக்கே நீந்திச் செல்லும் பொழுது ஒரு பழத்தையும் மேற்கே நீந்தும்பொழுது ஒரு பழத்தையும் தெற்கே நீந்தும்பொழுது ஒரு பழத்தையும் வடக்கே நீந்தும்பொழுது ஒரு பழத்தையும் தின்று தீர்த்தது. அதிக நேரம் குளித்து விட்டதால் ஆற்றில் இருந்து கரைக்கு வெரிகு வந்துவிட்டது. வந்த உடனே வெரிகு அதிர்ச்சி அடைந்தது நின்றது. காரணம் தான் மரத்திலிருந்தபோது பறித்த மாங்கனிகளைக் காணவில்லை. அதனால் தன் உடல் உறுப்புகள் மேல் அதிகளவு சினம் கொண்டு நின்றது வெரிகு. தன் உறுப்புகளிடம் விசாரணையைத் துவங்கியது அந்த வெரிகு. முதலில்
கண்
கண்ணா கண்ணா நீ தின்றே?
கண்ணா தின்ட(ற)
சுள்ளளும் சூடும ஒடிச்சு வந்தன
கண்டு வந்த கண்ணா தின்ட(ற)
அதாவது கண்ணா நீ மாங்கனியைத் தின்றாயா? என்று கேட்டுவிட்டு கண் எப்படி தின்றிருக்கும். அது பாதைகளில் கிடக்கும் கல்லையும் முள்ளையும் கண்டு வருதுதானே எனத் தனக்குத் தானே கேள்வியையும் கேட்டுப் பதிலையும் கூறிக் கொண்டது. அடுத்தது
மூக்கு
மூக்கா மூக்கா நீ தின்றே?
மூக்கா தின்ட மூங்கும்
முடையும் ஆமாந்து வந்த
மூக்கான் தின்ற
அதாவது, மூக்கே நீ தின்றாயா? மூக்கு எப்படி தின்றிருக்கும். அது காட்டில் நல்ல மணத்தையும் கெட்ட மணத்தையும் நுகர்ந்து சொல்வதுதான் அதனுடைய வேலை என்று தனக்குத்தானே கூறிக் கொண்டது. அடுத்தது,
வாய்
கொட்டியா கொட்டியா நீ தின்றே
கொட்டியா தின்ற தண்ணி உம்மி துப்புன
கொட்டியான் தின்ட
அதாவது வாயே வாயே நீ தின்றாயா? வாய் எப்படி தின்றிருக்கும் அது ஆற்றில் நீந்திக் கொண்டிருந்தபோது தண்ணீரைக் கொப்பளித்துக் கொண்டிருந்தது என்று தனக்குத் தானே கூறிக்கொண்டது. அடுத்தது,
காது
காதா காதா நீ தின்றே?
காதா தின் சுள்ளலும் சூடும ஒடிச்சு வந்தன
கேட்டுவந்த காதா தின்ற
(அதாவது, காதே காதே நீ தின்றாயா? காது எப்படி தின்றிருக்கும் அது வழியில் வந்தபோது சத்தத்தைக் கேட்பதற்குப் பயன்பட்டதே) என்று தனக்குத் தானே கூறிக் கொண்டது. அடுத்தது
கை
கையா கையா நீ தின்றே?
கையா தின்ட தண்ணிய வலிச்சு மீந்தின
கையா தின்ட
(அதாவது, கையே கையே நீ தின்றாயா? கை எப்படி தின்றிருக்கும் அது தண்ணீர விலக்கி விலக்கி நீந்துவதற்கு உதவியதே) என்று தனக்குத் தானே கூறிக் கொண்டது. அடுத்தது,
கால்
காலா காலா நீ தின்றே?
காலா தின்ட தீக்கி மீந்தின காலா தின்ட
(கால் எப்படி தின்றிருக்கும் நீச்சலுக்குக் கால் கூடத்தான் உதவியது) என்று தனக்குத் தானே கூறிக் கொண்டது. கடைசியாக
வால்
வாலா வாலா நீ தின்றே?
என்று வாலைப் பார்த்து கேட்டது. வால் எதுவும் பேசவில்லை.
மிண்டத்த மிறியத்த
மீண்டும் சினத்துடன் வெரிகு வாலை நோக்கி
வாலா வாலா நீ தின்றே?
மிண்டத்த மிறியத்த
வாலுக்கு எந்த வேலையும் இல்லை. வாலின் மௌனத்தைக் கண்ட வெரிகு கோபத்தின் உச்சத்தை எட்டியது. ஒரு கல்லை எடுத்து வாலை நசுக்கி அதனைப் பாறையில் ஒட்டிவிட்டது. வாலில் இரத்தம் வடிந்தது. வெரிகு வாலை நோக்கி என்னுடைய மாங்கனிகளைத் திருட்டுத்தனமாகத் தின்றாயல்லவா? இதுதான் அதற்கான தண்டனை என்றது.
உச்சி வெயிலில் வெரிகு உக்காந்திருந்தது. சரி இனி வீட்டிற்குச் செல்லலாம் என எழுந்தது. வால் பாறையில் ஒட்டியிருந்ததால் அதற்கு வலி மிகுந்தது. உடனே வெரிகு இறைவனிடம் இந்த உலகில் என்ன மழை பெய்யாதா? இப்படி வெயில் அடித்தால் மனிதர்கள் எப்படி வாழ முடியும் என்று கதறிக் கொண்டிருந்தது.

அப்போது வானம் இருண்டு மழை பெய்யத் துவங்கியது மழை போட்ட போடில் வெரிகு குளிரால் கிடுகிடுவென நடுங்கியது. அதனால் மீண்டும் இறைவனிடம் எதற்காக இவ்வாறு மழை பெய்ய வைக்கிறாய் என்னால் குளிரைத் தாங்க முடியவில்லை என்றது. அப்பொழுது மழையும் நின்று சூரியன் மழை மேகங்களை விலக்கி வானில் ஒளிர்ந்தது. வெரிகு தன் வீட்டை நோக்கி நடந்தது.
மாலை நேரம் வந்தது. மழையில் நனைந்ததால் அன்று இரவு வெரிகிற்குக் காய்ச்சல் வர ஆரம்பித்தது. வாலை கல்லால் நைத்ததால் வாலில் சீழ் பிடிக்கத் தொடங்கியது. ஒரு சூரலை எடுத்து தன் வாலில் சுற்றி இறுக்கமாகக் கட்டியது. தன் மனைவியிடம் குளிர் தெரியாமல் இருக்க தான் படுத்திருக்கும் இடத்தைச் சுற்றியும் நெருப்பு மூட்டுமாறு கூறியது. வெரிகின் மனைவியும் அவ்வாறே செய்தது.
மறுநாள் காலையில் வெரிகின் வால் முழுவதுமாகச்சீழ் கட்டியது. வெரிகு அதனை ஒரு பாத்திரத்தில் எடுத்துக் கொண்டு ஊருக்குள் சென்றது. அதனை ஒவ்வொரு வீடாகக் கொண்டு போய் ‘மாமியாளே மாமியாளே மோராகாரம் வேணுமா? வேணாமா?’ என்று கேட்டது. அதைக் கண்டவர்களில் சிலர் ‘சீச்சீச்சீ அந்த வீட்டுக்குக் கொண்டுபோ அந்த வீட்டுக்குக் கொண்டுபோ’ என்று விரட்டினர்.
ஒவ்வொரு வீடாக அலைந்து கடைசியாக ஒரு வீட்டுக்கு வெரிகு சென்றது. அந்த வீட்டில் ஒரு பெண் இருந்தாள். அவள் வெரிகு சொன்னதை நம்பி அது என்ன என்று பார்க்காமலேயே மோராகாரம் என்று நினைத்து அதை வாங்கிக் கொண்டாள். பின்பு வெரிகிடம் அவள் அதன் பொருளுக்கு மாற்றாக உனக்கு என்ன வேண்டும் என்று ஒவ்வொரு பொருளாகக் கேட்க வெரிகு ஒவ்வொன்றாக மறுத்துக் கூறிக் கொண்டு வந்தது.
பெண் : உனக்குச் சட்ட வேணுமா?
வெரிகு : நான் என்ன சட்ட போடுரவனா?
பெண் : கோடாரி வேணுமா?
வெரிகு : நான் என்ன வெறகு வெட்டுறவனா?
பெண் : கத்தி வேணுமா?
வெரிகு : நான் என்ன வெட்டிப் பிழைக்குறவனா?

இதைக் கேட்ட அந்தப் பெண் வேறு என்னதான் வேண்டும் உனக்கு என்று கேட்டாள். அதற்கு வெரிகு உங்கள் தோட்டத்தில் நின்று கொண்டிருக்கும் கன்றுக்குட்டி வேண்டும் என்றது. உடனே அந்தப் பெண்ணும் கன்றுக் குட்டியை அவிழ்த்து வெரிகிடம் கொடுத்தாள். அதைக் கூட்டிக் கொண்டு வெரிகு தன் வீட்டை நோக்கி காட்டிற்குள் நடக்க ஆரம்பித்தது.
வெரிகு சென்று கொண்டிருந்த வழியில் புலி ஒன்று படுத்து உறங்கிக் கொண்டிருந்தது. அதை வெரிகு கவனிக்காமலேயே கன்றுக்குட்டி கிடைத்த மகிழ்ச்சியில் பாட்டுப்பாடிச் சென்றது.
சீனம (சீழ்) கொடுத்திரு சேங்ஙர குஞ்சிய
வேண்டிச் சண்டோ வேண்டிச் சண்டோ
சீனம (சீழ்) கொடுத்திரு சேங்ஙர குஞ்சிய
வேண்டிச் சண்டோ வேண்டிச் சண்டோ
வெரிக்கின் பாட்டைக் கேட்ட புலி தூக்கத்தில் இருந்து மீண்டு எழுந்தது. வெரிகு கன்றுக்குட்டியுடன் வருவதைக் கண்ட புலி வெரிகிடம் சென்று மீண்டும் அந்தப் பாட்டைப் பாடுமாறு கூறியது. ஆனால் வெரிகுப் பாடவில்லை. அது புலியிடம் தனக்குத் தாகமாக இருப்பதாகக் கூறியது. அதற்குப் புலி
நீயே தவாள தொண்பின் – இண்டவாடி
போற்று தண்ணியக் குடி – என்றது.
தவளை தொண்பின் என்று கத்திய இடத்தில் போய் தண்ணீரைக்குடி என்றது. மேலும் போகும்போது காற்று வேகம் கடல்வேகத்துடன் போ, தண்ணீரைக் குடித்த பிறகு பொறுமையாக நத்தை போல வா என்றது. வெரிகும் அதைப்போன்றே செய்தது.
வெரிகு போன உடனேயே கன்றுக்குட்டியைப் புலி கொன்று தின்று விட்டது. பிறகு கன்றுக்குட்டியின் எலும்புகளைக் கொண்டு போய் தேள், பாம்பு போன்றவைகளின் வளையில் போட்டது. வெரிகு புலி இருக்கும் இடத்திற்கு வந்து பார்த்தது. அங்கே புலி குறட்டை விட்டுத் தூங்கிக் கொண்டிருந்தது. கன்றுக் குட்டி இருந்த இடத்தில் அதைக் காணவில்லை. அதனால் புலியை எழுப்பி கன்றுக்குட்டி எங்கே எனக் கேட்டது. ஐயோ நான் பார்க்கவில்லையே இங்கேதான் இருந்தது.
நானும் நீ போனவுடன் நன்றாகத் தூங்கி விட்டேன். வா கன்றுக்குட்டியைத் தேடலாம் என்று வெரிகினை அழைத்துக் கொண்டு தேள், பாம்புகளின் வலையில் போட்ட எலும்புகளை எடுத்து வந்து வெரிகிடம் காட்டி பார் பாம்பும் தேளும்தான் கன்றுக்குட்டியைக் கொண்டு போய் தின்று விட்டன என்றது. வெரிகிற்குச் சந்தேகம் வந்தது.
புலியைக் கொன்றுவிடவேண்டும் என்று வெரிகு நினைத்தது. அந்த நேரத்தில் புலிக்குத் தாகம் எடுத்தது. வெரிகு நான் போய் நீர் குடித்த இடத்திலேயே நீயும் போய் நீர் குடி என்று புலியிடம் கூறியது. ஆனால் போகும்பொழுது பொறுமையாகப் போ வரும்பொழுது காற்று வேகம் கடல்வேகத்துடன் வா என்றது. புலி போனவுடனே அதைக் கொல்வதற்காக (தொண்டு) மூங்கிலால் செய்யும் கொலைக்கருவி ஒன்றைச் செய்தது. இரண்டு மூங்கிலை வளைத்துக் கொண்டு ஒன்றைப் பூட்டி புலி வரும் வழியில் வைத்தது.
புலிபோய் நீர் குடித்துவிட்டு வெரிகினையும் கொன்று தின்றுவிட வேண்டும் என்று நினைத்து காற்று வேகம் கடல்வேகத்துடன் வந்து அந்தத் தொண்டில் தன் கழுத்தைச் சிக்க வைத்தது. இரண்டு மூங்கிலும் வளைந்து நிற்பதை விடுத்து மேலே எழுந்த போது புலி இரண்டு துண்டாகக் கிழிந்து தொங்கியது.
தன் கன்றுக்குட்டியைத் தின்ற புலியை வெரிகு கொன்றுவிட்டு காட்டிற்குள் அலைந்தது. அப்போது ஒரு உடும்புக் குட்டியைப் பிடித்து அதனை ஒரு மலைச்சரிவில் இருந்த பாறையின் இடுக்கில் கொண்டு போய் விட்டு அதனை எடுக்க முயன்றது. அப்போது அவ்வழியில் வரும் விலங்குகளை அழைத்து அந்த உடும்புக்குட்டியைப் பிடித்துத் தருமாறு கூறியது.
முதலில் யானை ஒன்று வருவதைக் கண்டு தாத்தா தாத்தா என்னுடைய உடும்புக் குட்டியைப் பிடித்துக் கொடுங்கள் என்றது. யானை அதைப்பிடிக்கச் சென்றபோது மலைச்சரிவில் அந்த யானையைத் தள்ளிவிட்டது.

அதைப்போலவே மான், பன்றி, குதிரை போன்ற பல விலங்குகளையும் மலைச் சரிவில் தள்ளிக் கொன்றது. வேறு வேலையில்லாத வெரிகு பொழுது போக்கிற்காக இவ்வாறு விலங்குகளைக் கொன்றது.

மறுநாள் காலையில் பல்காவிக்காயை எடுத்து பல்லில் தேய்த்துக் கொண்டது. அதனைத் தேய்த்தபிறகு வெரிகின் பல் சிவப்பு நிறத்தில் மாறியது.

அதன்பிறகு கூழாங்கற்களைப் பொறுக்கி ஓர் இடத்தில் குவித்து அதில் நெருப்பிட்டு கூழாங்கற்கள் சிவக்கும்படியாகச் சுட்டது. அந்த வழியில் மான் ஒன்று வந்தது. மானைக் கண்டதும் வெரிகு ஈ…… என்று சிரித்து தன்னுடைய சிவந்த பல்லைக் காட்டியது. வெரிகின் பல்லைக் கண்ட மான் என்ன உன்னுடைய பல் மிகவும் அழகாக இருக்கிறதே. இதைப் போலவே என்னுடைய பல்லையும் சிவப்பாக மாற்றுகிறாயா? என்றது. ஓ கண்டிப்பாக நீ இந்த இடத்தில் படுத்துக் கொள் என்று ஒரு இடத்தைக் காட்டியது. அப்போது மான் போய் அங்கே படுத்தது. மானின் நான்கு கால்களையும் கட்டியது. மானிடம் தன் வாயைத் திறக்குமாறு கூறியது. மான் வாயைத் திறந்த போது நெருப்பு முட்டை போலக் கிடந்த கூழாங்கல்லை இரண்டு குச்சிகளால் தாங்கி எடுத்து அதன் வாயில் போட்டது. சூடு தாங்காமல் மான் இறந்து போனது. இதைப் போலவே யானை, பன்றி, காட்டெருமை, கரடி போன்ற விலங்குகளைக் கொன்றது.
மீண்டும் மறுநாள் காலையில் வெரிகு காட்டிற்குள் எந்த விலங்கை எப்படிக் கொல்வது எனத் திட்டமிட்டபடியே அலைந்தது. அப்போது ஒரு கரடி மரப்பொந்துக்குள் இருந்த தேனை எடுப்பதற்காக கஷ்டப்பட்டுக் கொண்டு இருந்தது. அதைக் கண்ட வெரிகு ஒரு புதருக்குள் போய் ஒளிந்து கொண்டது.
மலை உச்சியில் இருந்து ஒவ்வொரு முறை கரடி தேன் எடுக்கச் செல்லும்போதும் ஒரு பாறையை உருட்டியது. அதனுடைய சத்தத்தைக் கேட்டு கரடி அலறியடித்துக் கொண்டு ஓடியது. ஒவ்வொரு முறையும் இதே போன்று வெரிகு கல்லை உருட்டிக் கொண்டே இருந்தது. வெகுநேரம் கழித்து வெருகு கரடியிடம் போனது. கரடியின் கைகள் இரண்டும் புண்ணாக இருந்ததைக் கண்டது.
ஏதும் அறியாதது போல வெரிகு கரடியிடம் உன் கையிரண்டும் என்ன ஆனது புண்ணா இருக்கிறதே என்று கேட்டது. அதற்குக் கரடி நான் இந்த மரப் பொந்தில் இருந்த தேனை எடுக்க முயன்றேன். ஆனால் என்னை ஏதோ ஒன்று அச்சுறுத்துகிறது. என்னால் அந்தத் தேனை எடுக்க முடியவில்லை என்று வருந்தியது. இவ்வளவு தானா இரு நான் உனக்கு அந்தத் தேனை எடுத்துத் தருகிறேன் என்றது.
வெரிகு போய் அந்தத் தேனை எடுக்கத் தொடங்கியது. நல்ல தேனை ஒரு இலையிலும் தனக்குப் பிடிக்காத தேனை மற்றொரு இலையிலும் வைத்தது. பிறகு கரடியை நோக்கி உன்னால் அந்தத் தேனை எடுக்க முடியாததற்குக் காரணம் நீ தேனை இறைவனுக்கும் நம் முதியருக்கும் படைக்காமல் இருந்ததால் தான் என்றது.
பின்பு கரடி நல்ல தேனை மட்டும் எடுத்து இதை நான் இறைவனுக்குப் படைத்துவிட்டு வருகிறேன் என்று கூறி மறைவான இடத்திற்குக் கொண்டு போய் தனியாகத் தின்றுவிட்டு வந்தது. கரடி மீண்டும் வரும்பொழுது நல்ல தேனை உண்ணலாம் என வெரிகு காத்திருந்தது. ஆனால் வெரிகு வெறும் கையுடனே வந்ததைக் கண்டு தேன் எங்கே? எனக் கேட்டது அதை நான் முதியர்களுக்குப் படைத்துவிட்டேன் என்று கூறியது வெரிகு.
சரி வா இருவரும் இந்தத் தேனையே உண்போம் என்றது கரடி. இல்லை இல்லை வேண்டாம் நான் வேறு எங்காவது தேன் கிடைத்தால் உண்கிறேன் என்றது வெரிகு. சூரியன் மறையத் தொடங்கியது. வானம் இருள் பூசியது. வெரிகும் கரடியும் இரவு எங்கே தங்குவது என யோசித்தன. அப்போது கரடி என் வீட்டில் தங்கிக் கொள் எனக்கூறியது. இருவரும் கரடியின் வீட்டுக்குச் சென்றனர்.
செல்லும் வழியில் வெரிகு இரண்டு கரிவில் காய்களைப் பறித்துச் சென்றது. இருவரும் கரடியின் வீட்டை அடைந்தனர். கரடி வெரிகிடம் நீ மேல் மெத்தையில் படுக்கிறாயா? கீழ் மெத்தையில் படுக்கிறாயா? எனக் கேட்டது. வெரிகு மேல் மெத்தையில் படுப்பதாகக் கூறியது. வெரிகு மேல் மெத்தைக்குச் சென்றது. நள்ளிரவில் வெரிகு ஒரு கரிவில் காயை எடுத்து கருக்கு மொருக்கெனத் தின்றது. சத்தம் கேட்டு கரடி விழித்தது.
சங்ஙாதி நீயினி எந்தன தின்பிடெ
வலாச்சலேவ் அதின்கு வேண்டுறு
இடாது கண்ண பூச்சிரு தின்பிடே
எனக்குப் பசிக்கிறது அதனால்தான் இடது கண்ணை தோண்டித் தின்றேன் என்றது. ஓ! அப்படியா சரி நானும் என்னுடைய கண்ணை எடுத்துச் சாப்பிடுகிறேன் எனக்கும் பசிக்கிறது என்றது. கரடி தன்னுடைய இடது கண்ணை தோண்டித் தின்றது. ஆனால் கருக்கு மொருக்கு என சத்தம் வரவில்லை. வாழைப்பழம் போல தொண்டையில் வழுக்கியபடி கரடியின் கண் வயிற்றுக்குள் சென்றது.
கரடி வலியால் துடித்துக் கொண்டிருந்தது. சிறிது நேரம் கழித்தவுடன் மீண்டும் வெரிகு இரண்டாவது கரிவில் காயை கருக்கு மொருக்கெனத் தின்றது. மீண்டும் கரடி வெரிகு என்ன தின்கிறது என்பதைத் தெரிந்து கொள்ள நீ என்ன சாப்பிடுகிறாய் எனக் கேட்டது. அதற்கு வெரிகு தன் வலது கண்ணையும் பசியின் மிகுதியால் தின்பதாகக் கூறியது. இதைக் கேட்ட கரடி தன்னுடைய வலது கண்ணையும் தோண்டித் தின்றது. ஆனால் முன்பு போலவே கரடியின் கண் வழுக்கி வயிற்றில் விழுந்தது.
மீண்டும் கரடி வெரிகுவிடம் நான் என் கண்ணைச் சாப்பிடும்பொழுது கருக்கு மொருக்கெனக் கேட்கவில்லையே என்றது. அதற்கு வெரிகு கரடியிடம் நீ நன்றாகக் கடித்து விழுங்கியிருக்க வேண்டும் என்றது. அன்று இரவு முழுவதும் இதைப் பேசியே இருவரும் உறங்கவில்லை.
மறுநாள் காலையில் கரடி வெரிகுவிடம் சங்ஙாதி (நண்பனே) இரண்டு கண்ணும் தெரியாமல் போய்விட்டதே நாம் இனி எப்படி பிழைப்போம் என்றது. அதற்கு வெரிகு சூரியன் வரும் திசையை நோக்கி கண்ணும் காலும் வருட்டே! என்று கூறி குதித்தால் போதும் நமக்கு கண் மீண்டும் கிடைக்கும் என்றது. இதை நம்பி கரடி வெரிகின் பின் சென்றது. ஒரு பெரிய காட்டருவியின் அருகே போய் இருவரும் நின்றனர்.
ஒரு சிறிய கல்லில் ஏறி நின்று வெரிகு கண்ணும் காலும் வருட்டே எனக் கூறி குதித்து தரையில் நின்றது. ஆஹா! சங்ஙாதி எனக்குக் கண் வந்துவிட்டது நீயும் வா வந்து குதி என்று சொன்னது. அதோடு கரடியைக் கூட்டிக் கொண்டு போய் அருவியின் விளிம்பில் நிறுத்தியது. கரடியிடம் சங்ஙாதி நீ இனி கண்ணும் காலும் வருட்டே எனக் கூறி குதித்து விடு என்றது.

வெரிகின் சொல்லைக் கேட்டு கரடியும் கண்ணும் காலும் வருட்டே எனக் கூறி குதித்த போது காட்டருவியில் விழுந்து இறந்தது. கரடியைக் கொன்றுவிட்டு வெரிகு அந்த ஆற்று ஓரத்திலேயே நடக்கத் தொடங்கியது. அங்கே ஒரு இடத்தில் வீட்டில் வளர்க்கும் நாய்களும் காட்டு நாய்களும் ஆற்றில் குளித்துக் கொண்டிருந்தன. அதனைக் கண்ட வெரிகு என்ன அனைவரும் இப்படி குளிக்கிறீர்கள். அனைவரும் ஒரே மூச்சில் நீரில் மூழ்கி ஒரே நேரத்தில் நீரைவிட்டு வெளியே வாருங்கள். அப்போதுதான் பார்க்க அழகாக இருக்கும் என்றது.
இதைக் கேட்ட நாய்கள் அதைப் போலவே செய்தன. பிறகு அந்த நாய்களை நோக்கி உங்கள் மோப்ப சக்தியை வைத்துக் கொண்டே நீருக்குள் மூழ்கினால் ஆற்றில் அடித்துப் போய்விடும் வந்து இந்தப் பாறையில் உங்கள் மோப்ப சக்தியை வைத்துவிட்டுப் போய் குளியுங்கள் என்றது. நாய்களும் அதுவும் சரிதான் வெரிகு சொல்வதைப் போலவே செய்யலாம் என்று தங்களுடைய மோப்ப சக்தியைக் கொண்டுபோய் பாறையில் வைத்துவிட்டன.
அந்த மோப்ப சக்தியை எல்லாம் வெரிகு நுகர்ந்து கொண்டு நீருக்குள் நின்று கொண்டிருந்த நாய்களை நோக்கி
செந்நாயும் சிறுப்புலியும் தண்ணீரில்
குளிச்சப்ப கால்பொடி எல்லாம்
துள்ளுதடோ துள்ளுதடோ!
என்று மர உச்சியில் போய் நின்று பாடியது. இதைக் கேட்ட செந்நாய்கள் அதோ நம் மோப்ப சக்தியை வெரிகு திருடிக் கொண்டு போகிறது என்று ஆற்றிலிருந்து கரைக்கு வந்தன.
கரையில் ஒட்டியிருந்த மோப்ப சக்தியை அவை நுகர்ந்தன. அதன்பிறகுதான் வீட்டு நாய்கள் வந்தன. எல்லா நாய்களும் சேர்ந்து வெரிகை விரட்டியபடி காட்டிற்குள்ளேயே போய்விட்டன. வீட்டு நாய்கள் விரட்ட முடியாமல் வீட்டிற்குத் திரும்பின. இக்காரணத்தினால்தான் வீட்டு நாய்களுக்கு மோப்ப சக்தி குறைவு என்று கூறுவர்.
………………..
(தகவல். மங்கம்மாள் பாட்டி, வயது72. வில்லோனி செட்டில்மென்ட். 11.09.2018.)
அருஞ்சொற்பொருள்
- கொட்டியா – வாய்
- தீக்கி – உதைத்து
- மிண்டத்த – பேசவில்லை
- மிறியத்த – மூச்சுகூட விடவில்லை
- கொடுத்திரு – கொடுத்து
- சேங்ஙர குஞ்சி – கன்றுக்குட்டி
- வேண்டிச் சண்டோ – வாங்கி விட்டேன்
- தவாள – தவளை
- தொண்பின் – சத்தம்
- இண்டவாடி – என்ற இடம்
- போற்று – போய்
- தொண்டு – மூங்கிலால் செய்யும் கொலைக்கருவி
- சங்ஙாதி – நண்பா
- எந்தன தின்பிடெ – என்ன சாப்பிடுகிறாய்!
- வலாச்சலேவ் – பசிக்கிறது.
- அதின்கு வேண்டுறு – அதனால
- பூச்சிரு தின்பிடே – தோண்டி தின்கிறேன்.

Leave a comment