இகழ்தலும் வியத்தலும் இலமே
கு.பத்மநாபன்

தர்மபுரி கல்லூரி மாண்பமை முதல்வர் பேராசிரியர் கோ கண்ணன் பல ஆண்டுகளுக்கு முன்பு திருடன் மணியன் பிள்ளை என்ற புத்தகம் குறித்து என்னிடம் பேசிய நினைவு. அது ஒரு மொழிபெயர்ப்பு என்பதோ, சுயசரிதை என்பதோ அப்போது என் மனதில் பதிவாகி இருக்கவில்லை.
புதிதாக ஒன்றை கேள்விப்படும் போது மனது தெரிந்த ஏதோ ஒரு நினைவோடு அதனைச் சேர்த்துத் தொகுத்து அடுக்கி வைத்துக் கொள்கிறது.
சங்குதேவன் என்ற திருடனைப் பற்றிய புதுமைப்பித்தனின் கதை காரணமாகவோ மணியன் பிள்ளை என்ற பெயர் காரணமாவோ திருடன் மணியன் பிள்ளை நூல் 1930களில் எழுதப்பட்ட ஒரு தமிழ் சுயசரிதை என்றும், அது நீண்ட இடைவெளிக்குப் பிறகு இப்போதுதான் பதிப்பிக்கப்பட்டு இருக்கும் என்றும் பதிந்து விட்டது. ஆனால் புத்தகத்தைப் படிக்கத் தொடங்கிய போதுதான் உண்மையில் அது ஒரு மொழிபெயர்ப்பு நூல் என்றும், மாத்ருபூமி மலையாள இதழ் உதவி ஆசிரியர் ஜி. இந்து கோபன் என்பவரால் எழுத்தாக்கம் செய்யப்பட்டு குளச்சல் மூ யூசுப் அவர்களால் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டுக் காலச்சுவடு பதிப்பகத்தால் வெளியிடப்பட்ட ஒரு சுயசரிதை நூல் என்பதுடன் இந்த மொழிபெயர்ப்புக்காக திரு குளச்சல் மூ யூசுப் அவர்களுக்கு 2013 ஆம் ஆண்டு சாகித்ய அகாடமி விருது வழங்கப்பட்டுள்ளது என்ற தகவலும் தெரியவந்தன.
400 பக்கங்களுக்கு மேல் அமைந்த நீண்ட சுயசரிதை இது. வாசிக்கத் தொடங்கியவுடன் மணியன் பிள்ளையைத் திருடராகவே படைத்து, திருடனாகவே உலவ விட்டு, ஒரு திருடனாகவே இந்த உலகில் இருந்து விடுபடச் செய்ய வேண்டும் என கண்ணுக்குத் தெரியாத அந்த மாயக்கரம் விரும்பி விட்டது என்பது, தெரியத் தொடங்கி விடுகிறது.
கொல்லத்துக்கு அருகில் வாழத்துங்கல் என்ற சிற்றூரில் ஒரு பணக்காரக் குடும்பத்தின் கடைசி ஆண் வாரிசாக மணியன் பிள்ளை பிறக்கிறார். சகோதர உறவில் கைக்கு வந்த சொத்தை அபகரிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் மணியன் பிள்ளையின் அப்பா விஷம் வைத்து கொல்லப்படுகிறார்.
புத்தகம் இல்லை என்பதற்காகவே, முதல் ரேங்க் வரும் மணியன் வகுப்பில் பெஞ்சின் மீது ஏறி நிற்கும் நிலைமை ஏற்படுகிறது. தங்கமும் வெள்ளியும் இருக்கும் குடும்ப நகைப்பெட்டியை உறவினர்கள் வீட்டுக்குத் தலையில் தூக்கி வந்து மணியனும் அவனுடைய அக்காவும் வைக்கிறார்கள். குடும்ப நகைகள் போகட்டும், அவர்களுக்கு தலைச்சுமை கூலி கூட கிடைப்பதில்லை. நகரத்து ஹோட்டலில் எச்சில் இலையில் இருக்கும் சோற்றுப் பருக்கைகளை வெறித்துப் பார்த்துக் கொண்டிருக்கும் சிறுவன் மணியனின் சித்திரம் கண்ணுக்குத் தெரிகிறது.
அங்கிருந்து மெல்ல மெல்ல மணியனைக் குற்ற உலகம் தன் கையில் எடுத்துக் கொள்கிறது. விதியின் மாயக்கரங்களில் மணியன் பிள்ளை ஏறியும் இறங்கியும் ஆடும் ஆட்டம்தான் இந்த சுயசரிதை. ஏணியில் ஏறியும், பாம்பில் இறங்கியும் அவன் ஆடும் பரமபத விளையாட்டில் அவனுக்கே ஆன அறம்/ பாவம் குறித்த விழுமியங்கள் தொடர்ந்து இருக்கவே செய்கின்றன. படித்துக் கொண்டிருக்கும் ஒரு சிறுமியை வல்லுறவுக்கு உட்படுத்திய நிகழ்வு உட்பட பல நிகழ்வுகள் மணியன் பிள்ளையின் உள்ளே இருக்கும் அறம் குறித்த பிரக்ஞை காரணமாக இறுதி வரை துயரத்துடன் நினைவு கூறப்படுகின்றன.
இது இப்படித்தான் நடக்க வேண்டும், இப்படித்தானே நடக்க முடியும், என்று மணியன்பிள்ளை கேட்பதாக முழு சுயசரிதையையும் தொகுத்துக்கொளள முடியும்.
மணியன் பிள்ளையாக, சலீம் பாட்ஷாவாக, பெந்தக்கோஸ்தெ கிறித்துவனாக மணியன் பிள்ளைக்குத்தான் எத்தனை முகங்கள்.
மைசூர் பகுதியில் குடியேறி நிலத்தை குத்தகைக்கு எடுத்துப் புகையிலை வியாபாரம் செய்து மணியன் ஒரு பெரும் புள்ளியாக உருவாவது சுயசரிதையின் சுவாரசியமான பகுதி. அப்போது கர்நாடக எதிர்க்கட்சித் தலைவராக புகழ்பெற்ற சோசியலிஸ்ட் ராமகிருஷ்ண ஹெகடே இருக்கிறார். ஆளும் காங்கிரஸ் சார்பில் மாநில முதல்வராக இருப்பவர் குண்டு ராவ். மணியன் பிள்ளையைத் தங்கள் கட்சி சார்பில் சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட வேண்டுமென்று இரண்டு கட்சிக்காரர்களும் கேட்டுக் கொள்கிறார்கள். குண்டு ராவையும் ஹெகடேவையும் மணியன் தனித்தனியே சந்திக்கிறார். வெற்றி பெற்றால் அமைச்சரவையில் கூட இடம்பெறும் வாய்ப்பு சிறுபான்மை இனத்தைச் சேர்ந்தவர் என்பதால் அமையக்கூடும். ஊருக்குப் பக்கத்தில் இருக்கும் கோயிலில் மணியன் பிரச்சாரம் தொடங்குகிறார். ஒரு கோடி ரூபாய்க்கு மேல் வியாபாரம் தொடர்பான பணம் வெளியில் நிலுவையில் இருக்கிறது.
மெகருன்னிசா என்பது மைசூரில் சலீம் பாட்ஷாவாகப் புகழுடன் வளர்ந்து வரும் மணியன்பிள்ளை என்ற மலையாளத் திருடனின் மனைவி பெயர்.
இன்னும் சில நாட்களில் தேர்தல் என்று விறுவிறுப்பாக எல்லாம் சென்று கொண்டிருக்கிறது. அப்போது ஒரு நாள் ஏதோ ஞாபகமாக மணியன் தனியே நடந்து வந்து கொண்டிருக்கும்போதுதான் “நில்லு, ஓடாதே மணியன் பிள்ளெ” என்ற குரல் கேட்கிறது. அது அவரைத் தேடி வரும் கேரள போலீஸ்காரர்களின் குரல். ஒரு பழைய குற்றவாளி பழைய வழக்கிற்காகப் பிடிப்படுகிறான். அரசியல்வாதி சலீம் பாஷாவின் சாம்ராஜ்யம் திடீரென்று அப்படியே சரிகிறது. உண்மையில் இது ஒரு திரைப்படக்காட்சி போலத்தான் இருக்கிறது. ஒரு சாதாரணத் திருடன் கோடீஸ்வரனாகி அரசியலில் ஈடுபட்டு அமைச்சர் ஆவது எல்லாம் வணிக சினிமாக்களின் காட்சிகள் என்று இந்த சுயசரிதையைப் படிப்பதற்கு முன்பு வரை நினைத்திருந்தேன்.
இதுமட்டுமல்ல, தமிழ்நாட்டில் வந்து மர வியாபாரம் செய்யும் மணியன் பிள்ளையை, ஒரு தேநீர்க் கடை வைத்துப் பிழைத்துக் கொள்ளலாம் என்று நினைக்கும் மணியன் பிள்ளையை, ஆட்டோ ஓட்டி பிழைத்துக் கொள்ளலாம் என்று நினைக்கும் மணியன் பிள்ளையை, ஒரு சிறந்த திருடன் என்பதற்கு வகை மாதிரி வடிவமாக படைக்க வேண்டும் என்று ஊழ் நினைத்திருக்கிறது போலும்!
இந்த சுயசரிதை திருடர்கள், காவல் துறையில் இருப்பவர்கள், நீதிபதிகள் என்று சமூகத்தின் பல அடுக்குகளில் இருப்பவர்கள் குறித்த ஒரு வண்ணமயமான உலகைத் திறந்து காட்டுகிறது.
கோட்டும் சூட்டும் போட்டு பணக்கார மது விடுதிகளிலும், உணவகங்களிலும், முதல் வகுப்பு ரயில் பெட்டியிலும் மட்டுமே கை வைக்க விரும்பும் சுகா என்ற திருடன், மீனை மட்டுமே திருடும் ஒரு முஸ்லிம் திருடன், நாளை விடுதலை என்று தெரிந்தும் தப்பிச் செல்வதில் இருக்கும் சுவாரசியம் காரணமாகச் சிறையில் இருந்து தப்பித்து மறுபடியும் மறுபடியும் மாட்டிக்கொள்ளும் ஒருவன், தெருவோர விபச்சாரிகளிடம் சென்று ஆணுறுப்பு வீங்கி சீழ் பிடித்து வேதனைப்படும் ஒரு திருடன் என்று எத்தனை வகைத் திருடர்கள்!
அடுத்து பாலியல் தொழிலாளர்கள். பொன்னம்மாள் போன்ற குடிசையில் வாழும் சாதாரண விபச்சாரிகள், ஒரு போலீஸ்காரன் கன்னத்தில் ஓங்கி அறை வைக்கும் அளவு பலமும் தைரியமும் கொண்ட சந்திரிகா போன்ற விபச்சாரிகள், படப்பிடிப்பு இடைவெளியின் போது உயர்ந்த நட்சத்திர விடுதிகளுக்கு வந்து ஒரு மணி நேரம் இருந்து சம்பாதித்துப் போகும் துணை நடிகைகள்.
போலீஸ்காரரிடையேயும்தான் எத்தனை வகை. காவல்துறையினர் குறித்துப் பொதுவாக முன்வைக்கப்படும் கருப்பு வெள்ளைச் சித்திரத்தை இந்த சுயசரிதை கலைத்துப் போடுகிறது. திருடனின் காசில் கிடைத்தவரை சுருட்டிக் கொள்ளும் போலீஸ்காரர்கள், அதேசமயம் திருடனைத் திருத்தி வாழ வைக்க வேண்டும் என்பதற்காகக் கடைசிவரை பாடுபடும் காவல்துறை அதிகாரிகள், ஜெயிலில் கிடைக்கும் சப்பாத்திகளைத் தொப்பிக்கு அடியில் தலையில் மறைத்து வைத்துக் கொண்டு வீட்டுக்கு எடுத்துச் செல்வதால் சப்பாத்திப் பிள்ளை என்றே பெயர் வாங்கும் ஒரு போலீஸ்காரர், திருடனுடைய ஒரு கையில் விலங்கு மாட்டி அவனுடன் உட்கார்ந்து ரயிலில் சீட்டு விளையாடும் போலீஸ்காரர், பேருந்தில் திருடனை உட்கார்த்தி வைத்துவிட்டுக் கடைக்குச் செல்லும் போது பேருந்து புறப்பட்டு விட பேருந்தின் பின்னால் மூச்சிரைக்க ஓடிவரும் பரிதாபமான போலீஸ்காரர்கள்.
நீதிபதிகள் குறித்தும் நிறைய பதிவுகள் நூலில் உள்ளன. பொதுவாகவே கடுகடுப்பான, சனியன் சனியன் என்று திட்டிவிட்டுப் பேச ஆரம்பிக்கும் பெண் நீதிபதி, மணியன் பிள்ளை தன் வழக்குக்காகத் தானே வாதிடும்போது அவனுடைய வாதத் திறமையில் மெய்மறந்து வியக்கும் நீதிபதிகள்
இப்படி இப் புனைவு வாசகனுக்கு இந்த நாவல் வழங்கும் அனுபவங்கள் பல.
சுயசரிதை என்று எழுத நினைத்து நாவல் என்று இங்கு எழுதி இருக்கிறேன். இதனை நான் அழிக்கப் போவதில்லை, திருத்தவும் போவதில்லை. காரணம், வாசிக்கும் போது பல நேரங்களில் இது ஒரு நாவல் என்று என்னுள் தோன்றிய எண்ணத்தை என்னால் கட்டுப்படுத்த முடியவில்லை என்பதால் நாவல் என்ற வார்த்தையை என் ஆழ் மன வெளிப்பாடாகவே நினைத்து அப்படியே விட்டு விடுகிறேன்.
ஒருவன் குற்றவாளியாக இருக்கலாம், ஆனால் அவன் குற்றம் செய்யாத போது நேர்மையான முறையில் சம்பாதித்த பணத்திலிருந்து கிடைத்த லாபத்தின் ஒரு சிறு பகுதி அவனுடைய அடிப்படை வாழ்க்கைத் தேவைக்காக அவனுக்கு வழங்கப்படலாம். இந்த அடிப்படையில் திருடன் மணியன் பிள்ளை நேர்மையான முறையில் சம்பாதித்த சொத்தில் இருந்து ஒரு நாலு லட்சம் ரூபாய் அவனுக்கு நீதிமன்றம் வாயிலாகக் கிடைக்கிறது. இப்படி ஒரு தீர்ப்பை வழங்குவது கர்நாடக உயர்நீதிமன்றம். இங்கும்கூட மணியனுக்கு எதிராகவே பகடை உருள்கிறது. இப்படி ஒரு திருடனுக்கு கிடைக்கும் பணம் அவனைப் போன்றவர்களுக்குக் கொடுக்கப்படும் தேவையற்ற சலுகையாகப் போய்விடும் என்று கர்நாடக அரசாங்கம் உயர் நீதிமன்றத்தில் மனு செய்து விடுகிறது. இப்போது மணியன் பிள்ளைக்குப் பணம் கிடைக்க வேண்டும் என்றால் அவர் உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்து வழக்கில் வெற்றி பெற்று வர வேண்டும். அடுத்த வேளைத் தேவைக்கு ஏதோ ஒரு வீட்டின் கூரையைப் பிரித்து உள்ளே இறங்க வேண்டிய மணியன் பிள்ளை போன்றவர்களுக்கு அதெல்லாம் இயல்வதில்லை. ஏதோ ஒரு பழைய வழக்கில் சேர்க்கப்பட்டு மணியன் பிள்ளை கைது செய்யப்படும் நிலையில் இந்த சுயசரிதை முடிவடைகிறது.
“மொழிபெயர்ப்பு தொடர்பாக எழுந்த சந்தேகங்களுக்காக தொலைபேசியில் அழைத்த போது பிள்ளையின் செல்போன் செயல்படவில்லை. மலையாள ஆசிரியர் ஜி இந்து கோபனைத் தொடர்பு கொண்டு கேட்டபோது மணியன்பிள்ளை பழைய வழக்கு ஒன்றின் காரணமாகத் தற்போது சிறையில் இருக்கிறார் என்று அறிந்து கொண்டேன்” என்று மொழிபெயர்ப்பாளர் குளச்சல் மூ யூசுப் எழுதுகிறார்.
ஏப்ரல் 9, 2024 உகாதி (தெலுங்கு புத்தாண்டு) அன்று மாலைப் பொழுதில் இந்த புத்தகத்தைப் படிக்க ஆரம்பித்தேன். இரவு நேரங்களில் தனியே இருந்து இந்தப் புத்தகத்தைப் படிக்க வேண்டும். தெருவில் தூரத்தில் கேட்கும் நாய் குரைக்கும் ஓசையும், எங்கோ செல்லும் வண்டிகளின் சத்தமும் ஒரு அமானுஷ்ய அனுபவத்தை நிச்சயம் வழங்கும்.
இந்த சுயசரிதையில் இடம் பெற்றுள்ள நாய்கள் குறித்து ஒரு சிறு குறிப்பு தனியே எழுத வேண்டும்.
போன வாரம் ஒரு நாள் குப்பத்தில் இறங்கி தனியே நடந்து வந்து கொண்டிருந்தேன். எங்களைப் போன்ற பார்வையற்றவர்களுக்கு ரயில்வே நிலையங்களில், பேருந்து நிலையங்களில், சாலைகளை கடக்கையில் வேறுபட்ட அனுபவங்கள்.
பகலிலும் மெல்லிய போதையில் எங்கள் கைப்பிடித்து அழைத்துச் செல்லும் விளிம்பு நிலை மனிதர்கள். சிலர் சற்று மனநிலை பாதிக்கப்பட்டவர்களாகவும் அவ்வப்போது அமைவதுண்டு.
குப்பம் ரயில் நிலைய நடைமேடைகளைக் கடக்க அமைக்கப்பட்டிருக்கும் மரப் படிக்கட்டுகளில் தனியே நடந்து வருகிறேன். கையைப் பிடித்துக் கொள்ளும் ஒருவர் சேலம் செல்ல வேண்டும் டிக்கெட் வாங்க காசு இல்லை என்கிறார். முதலாளி சம்பளம் கொடுக்கவில்லை என்றும், வேலையை விட்டுவிட்டு வந்து வட்டேன் என்றும் ஏதேதோ சொல்கிறார். பயணத்தில் இந்த புத்தகத்தைப் படித்துவிட்டு இறங்கி நடந்து வந்து கொண்டிருக்கும் என் மனதில் இவர் ஒரு தமிழ்நாட்டு மணியின் பிள்ளையாக இருக்குமா என்ற எண்ணம் எழாமல் இல்லை.

Leave a comment