காடரினக் கதைகள் – 6

பூனையும் கிளியும்

தொகுப்பும் ஓவியத்தூரிகையும் :
ப.குணசுந்தரி & து.சரண்யா

                ஒரு பெரிய காட்டின் நடுவே அரண்மனை ஒன்று இருந்தது. அதில் இளவரசனும் அவனுடைய தாயும் இருந்தனர். அந்த இளவரசன் நாள்தோறும் வேட்டைக்குச் செல்வான். ஒருநாள் அவளுடைய தாய் எனக்குத் தனியாக இருக்கப் பிடிக்கவில்லை. அதனால் பேச்சுத்துணைக்கு ஏதாவது பறவையினையோ விலங்கையோ கொண்டு வா என்றாள்.

                 ஒருநாள் இளவரசன் வேட்டைக்குச் சென்றான். அப்போது வழியில் வியாபாரி ஒருவன் கிளிகளை விற்றுக் கொண்டு வருவதைப் பார்த்தான். இளவரசன் அவனிடம் ஒரு கிளியை வாங்கி தன் வீட்டிற்குக் கொண்டு சென்றான். அந்தக் கிளி வளர்ந்து பேசவும் தொடங்கியது.

மீண்டும் அந்த வியாபாரி பூனைகளை விற்று வந்தான். இளவரசன் வியாபாரியிடம் பூனை ஒன்றினை வாங்கிச் சென்றான். அதன் பிறகு தாய் தனியாக இருப்பது போல உணரவில்லை.

மீண்டும் அந்த வியாபாரி ஒருநாள் பாம்புகளை விற்று வந்தான். அதில் ஒரு குட்டி மட்டும் அவனிடம் விற்பனை  ஆகாமல் இருந்தது. அதனை வியாபாரி சுமந்து செல்ல விரும்பாமல் தூக்கி எறியப் போவதாகக் கூறினான். அப்பொழுது அங்கு வந்த இளவரசன் வியாபாரியிடம் இல்லை இல்லை நீங்கள் அதைத் தூக்கி எறிய வேண்டாம் எனக்குக் கொடுத்து விடுங்கள் என்றான். அந்தப் பாம்புக் குட்டியை இளவரசன் வியாபாரியிடமிருந்து வாங்கிச் சென்று தன் வீட்டில் நீண்ட காலமாக வளர்த்து வந்தான்.

இளவரசனிடம் வளர்ந்த குட்டிப்பாம்பு பெரிதாக வளர்ந்ததால் முதலில் இருந்த பெட்டியில் இருந்து அதனை வேறொரு பெட்டிக்கு இளவரசன் மாற்றி வைத்தான். அந்தப் பெட்டியை வேறு அறையிலும் மாற்றி வைத்தான். அந்த அறைக்குத் தன் தாயைப் போகாமல் இருக்குமாறு எச்சரித்தான். இருப்பினும் அவன் தாய் அந்தப் பாம்பு இருக்கும் அறைக்குச் சென்று அந்தப் பாம்பைப் பார்த்து பயந்தாள்.

உடனடியாக இளவரசனிடம் அந்தப் பாம்பைக் காட்டில் விடும்படியாகக் கூறினாள். அதற்குச் சம்மதித்த இளவரசன் பாம்பைக் காட்டுக்குள் கொண்டு சென்று விடுவதற்கு முன் தன் வீட்டிற்கு முன்பாக ஒரு செடியை நட்டு நான் வருவதற்குள்  அது வாடி விட்டால் நான் இறந்து விட்டதாக அர்த்தம் என்றும் அது வாடவில்லை என்றால் நான் உயிரோடு இருக்கிறேன் என்றும் தன் தாயிடம் கூறிவிட்டு பெரிய பாம்பைச் சுமந்தபடி இளவரசன் காட்டுக்குள் சென்றான்.

செல்வதற்கு முன் ஒருவேளை நான் நட்ட செடி வாடத் தொடங்கினால் உடனே கிளியையும் பூனையையும் அனுப்புமாறு கூறியிருந்தான். பெரிய பாம்பைச் சுமந்து கொண்டு  நெடுந்தொலைவு சென்றான்.

காட்டின் நடுவே ஒரு பெரிய புற்று இருந்தது. அந்தப் புற்று இருந்த இடத்தில் பாம்பு தன்னை இறக்கிவிடச் சொன்னது. இளவரசன் பாம்பை அது சொன்ன இடத்தில் இறக்கி விட்டான். பாம்பு வேகமாகப் புற்றினுள் சென்றது.

புற்றினுள் சென்ற பாம்பு அங்கே அதன் உறவினர்களை எல்லாம் பார்த்தது. பாம்பு ராஜாவிடம் போய் தன்னை வளர்த்த இளவரசன் வந்திருப்பதாகக் கூறியது. பாம்பு இராஜா இளவரசனை உள்ளே அழைத்து வருமாறு கூற எப்படி இளவரசனை நான் அழைத்து வருவது என்று குட்டிப்பாம்பு கேட்டது. அப்போது புற்றிலிருந்த சிறு மண் துகள்களை எடுத்து பாம்பு ராஜா குட்டிப் பாம்பிடம் கொடுத்தது. இந்த மண் துகள்களை இளவரசனின் மீது போடு அப்போது அவன் பாசி மணியாக மாறிவிடுவான். அவனைப் புற்றினுள் கொண்டு வா என்றது.

குட்டிப்பாம்பு மண் துகள்களைக் கொண்டு போய் இளவரசனின் மீது போட்டது. இளவரசன் பாசிமணியாக மாறினான். பாசிமணியை வாயில் கவ்வியபடி பாம்பு புற்றினுள் சென்றது. அங்குப் பாம்பு ராஜா இளவரசனை மனிதனாக மாற்றியது.

இளவரசனை நோக்கி பாம்பு ராஜா குட்டிப் பாம்பினை வளர்த்ததற்காக உனக்கு என்ன பரிசு வேண்டும் என்று கேட்டது. அதற்கு இளவரசன் எனக்கு எந்தப் பரிசும் வேண்டாம் தங்கள் கையில் இருக்கும் மோதிரம் போதும் என்றான்.

பாம்பின் கையிலிருந்த மோதிரம் மிகவும் சக்தி படைத்ததாக இருந்தது. அந்த மோதிரத்தை இடதுபக்கமாகத் திருப்பினால் கடலில் கோட்டை எழும்பும். வலது புறமாகத் திருப்பினால் தேவகன்னிகள் துணைக்கு வருவர் என்று கூறியது அந்தப் பாம்பு ராஜா. மேலும் அந்தப் பாம்பு அவன் செல்லவிருக்கும் திசையைக் கூறி அங்கே ஒரு இளவரசி இருப்பதாகவும் கூறியது.

இளவரசியைக் காண வேண்டி இளவரசன் நெடுந்தூரம் சென்றான். இளவரசி இருந்த ஊரை அடைந்தான். அங்கே பூவிற்கும் ஒரு பாட்டியின் வீட்டில் தஞ்சம் அடைந்தான். அவள் பெயர் பூவாட்டிச்சி கிழவி. அந்தக் கிழவி சொந்த பந்தம் யாரும் இல்லாமல் அனாதையாக இருந்தாள். இளவரசனைக் கண்ட பாட்டி தனக்கு ஒரு பேரன் கிடைத்ததாக மகிழ்ந்தாள்.

இளவரசனை அழைத்து பாலும் பழமும் கொடுத்து நல்ல உபசரிப்பும் வழங்கினாள். அந்தக் கிழவி நாள்தோறும் இளவரசிக்குப் பூக்களைப் பறித்து அரண்மனையில் கொண்டு போய் கொடுப்பாள். இளவரசியின் மெத்தையிலும் தலையிலும் சூடுவதற்காகப் பூக்களை அதிக அளவில் பறித்து வருவது அவளுடைய வேலை.

இச்செயலைக் கண்ட இளவரசன் எதற்காக இத்தனைப் பூக்களைப் பறித்து வருகிறீர்கள் என்று கேட்டான். இளவரசிக்காக என்று அந்தப் பாட்டி கூறினாள். இதற்கு இளவரசன் இனிமேல் நீங்கள் பூவைக் கட்டவேண்டாம் நான் உங்களுக்கு உதவி செய்கிறேன் என்றான்.

இளவரசி மெத்தையில் விரிக்கும் பூவில் முள்ளை வைத்து கட்டினான். பூக்களை வித்தியாசமாகக் கட்டி இருப்பதைக் கண்ட இளவரசி இது என்ன புதுமையாக இருக்கிறதே என்று கூறினாள். பாட்டி நீங்கள் தினமும் கட்டுவதைப் போல இல்லையே இந்த மலர்கள். வழக்கத்திற்கு மாறாகக் கட்டப்பட்டிருக்கிறது என்றாள். முதல் நாள் தன் பேரன் வந்திருப்பதை இளவரசிக்கு உணர்த்தவில்லை கிழவி.

மீண்டும் இளவரசன் அதேபோல பூக்களுக்கு இடையில் முள்ளை வைத்துக் கட்டினான். ஆனால் அன்று முள்ளோடு சேர்த்து ஓலையையும் வைத்துக் கட்டினான். அந்த ஓலையில் தான் இளவரசியைச் சந்திப்பதாக எழுதி இருந்தான். படுக்கையில் முள் இருப்பதை அறிந்த இளவரசி அந்த முள்ளை எடுக்க வேண்டும் என நினைத்துப் பிரித்துப் பார்த்தாள். அப்போது முள்ளோடு சேர்ந்து கட்டப்பட்டிருந்த ஓலையைப் பிரித்துப் படித்தாள். அன்றிலிருந்து இளவரசி இளவரசனைக் காணவேண்டும் என்று ஆவலோடு இருந்தாள்.

இளவரசன் நாள்தோறும் இளவரசியை நள்ளிரவில் சென்று சந்தித்தான். இளவரசியைத் திருமணம் செய்ய வேண்டும் என்று இளவரசன் நினைத்தான். அதற்காகக் கடலின் நடுவில் ஒரு கோட்டையை எழுப்ப நினைத்தான். பாம்பு ராஜாவிடம் இருந்து பெற்ற மோதிரத்தைக் கொண்டு அவன் நடுக்கடலில் கோட்டையை எழுப்பினான்.

உடனே எவ்வாறு போய் அரண்மனையிலிருந்து இளவரசியைக் கூட்டி வருவது என்று நினைத்த இளவரசன் சிறிது காலம் தலைமறைவாக இருந்தான்.

நடுக்கடலில் கோட்டையை எழுப்பியது யார் என்று மற்ற நாட்டு அரசர்களும் அவனைத் தேடி அலைந்தனர். பூவிற்கும் கிழவியும் இளவரசனைக் காணாததால் மனம் வருந்தி இறந்து போனாள். அப்போது வழிப்போக்கன் ஒருவன் நான்தான் அந்தக் கோட்டையைக் கட்டினேன் என்று பொய் உரைத்தான். அவன் மீது சந்தேகமடைந்த மற்ற அரசர்கள் அவ்வாறானால் நீ இந்தக் கோட்டையை இடித்து மீண்டும் கட்டு அப்போதுதான் உன்னை நம்புவோம் என்று கூறினர். ஆனால் அவனால் அதைச் செய்ய இயலவில்லை.

பொய்யுரைத்த காரணத்தால் வழிப்போக்கன் சிறையில் தள்ளப்பட்டான். சிலகாலம் சென்றபின் கடலின் நடுவே கட்டிய கோட்டை இளவரசனுடையது என்று தெரியவந்தது. அதன் பிறகு இளவரசனும் இளவரசியும் திருமணம் செய்து கொண்டனர். இளவரசிக்குத் துணையாக தேவகன்னிகளை வரவழைத்தான் இளவரசன். அந்த இளவரசியைத் திருமணம் செய்ய வேண்டும் என்ற ஆசையில் வேறு ஒரு அரசனும் நெடுங்காலமாக காத்திருந்தான்.

               ஒருநாள் இளவரசன் இளவரசியைக் கடலின் நடுவே இருந்த கோட்டையில் விட்டுவிட்டு; வேட்டைக்குச் சென்று விட்டான். அவ்வேளையில் மாற்று அரசனின் அரண்மனையிலிருந்த குறிகாரி மாறுவேடமணிந்து கடலின் நடுவே இருந்த கோட்டைக்கு அருகே ஒரு குரங்கையும் தூக்கிக் கொண்டு சென்று வித்தை காண்பித்தாள். பார்ப்பதற்கு மிகவும் வேடிக்கையாக இருந்தது. இளவரசியின் தோழிகள் அனைவரும் சென்று அந்த வேடிக்கையைக் கண்டனர். இளவரசியைப் பார்க்க வருமாறு அழைத்தனர். அங்கு வந்த இளவரசியிடம் அந்தக் குறிகாரி பசி எடுப்பதாகக் கூறினாள். அதனால் குறிகாரியை அழைத்து அனைவரும் விருந்து கொடுத்தனர்.

விருந்தை உண்ட குறிகாரி இளவரசியைத் தனியே அழைத்துச் சென்று தான் ஏறி வந்த படகின் மேல் தள்ளிவிட்டாள்.

விழுந்த இளவரசி உடனே மயக்கமடைந்தாள். குறிகாரி மாற்று அரசன் அரண்மனைக்கு இளவரசியைக் கடத்திச் சென்றாள். இதனை அறிந்த தோழிகளாக இருந்த தேவகன்னிகள் இனி இங்கிருப்பது நமக்கு நல்லதல்ல என்று உலகை விட்டு மறைந்து போயினர். வேட்டைக்குச் சென்ற இளவரசன் மீண்டும் கோட்டைக்குத் திரும்பி வந்தான். ஆனால்; கோட்டையில் யாரும் இல்லை. இளவரசியும் இல்லை.

தேவ கன்னிகளும் இல்லை. இளவரசி எங்கே போனார் என்று இளவரசனுக்குத் தெரியவில்லை. அதனால் நோய்வாய்ப்பட்டு படுக்கையில் கிடந்தான். அவ்வேளையில்தான் அவன் வீட்டின் முன்னே நட்டுவைத்து வந்த செடி வாடத் தொடங்கியது. அதைக் கண்ட இளவரசனின் தாய் மனம் பதறினாள். தன் மகனுக்கு ஏதோ ஒரு துன்பம் நிகழ்ந்தது என்பதை அறிந்து கொண்டு தன் அரண்மனையில் இருந்த கிளியையும் பூனையையும் இளவரசனைத் தேடிச் செல்லுமாறு அனுப்பினாள்.

கிளியுடன் பூனை சேர்ந்து இளவரசனைத் தேடி புறப்பட்டது. அப்போது பாம்பு இருக்கும் இடத்தை அடைந்த கிளியும் பூனையும் பாம்பினைக் கண்டு பேசின. இளவரசன் சென்ற திசையைக் காண்பிக்கும்படியாகப் பாம்பிடம் அவை கேட்டன. பாம்பு இளவரசன் சென்ற திசையைக் கூறியது. ஒரு வழியாகக் கிளியும் பூனையும் இளவரசன் இருக்கும் இடத்தை அடைந்தனர்.

இளவரசன் நோயால் அவதிப்பட்டுக் கிடப்பதைக் கிளியும் பூனையும் கண்டு அதற்கான காரணத்தையும் கேட்டு அறிந்தனர். மாற்று அரசனால் கடத்தப்பட்ட இளவரசி பச்சைக் குடிசையில் சென்று அமர்ந்தாள். அதன் விளைவாக 41 நாள்கழிந்த பின்னரே இளவரசியைத் தொட முடியும் என்று குறிகாரி கூறினாள்.

இளவரசி இருக்கும் திசையை அறிந்து கிளியும் பூனையும் சென்றன. முதலிரவின் போது இளவரசன் தன் கையில் இருந்த மோதிரத்தை இளவரசி கையில் அணிவித்திருந்ததால் அவனால் இளவரசியைக் காப்பாற்ற முடியாமல் இளவரசன் தவித்தான். ஆகையால் இளவரசனின் கையில் இருந்த மோதிரத்தை மீட்டு வருவதற்காக கிளியும் பூனையும் இளவரசி இருக்கும் இடத்திற்குச் சென்றனர்.

இளவரசி பச்சைக் குடிசையில் இருப்பதைக் கண்டு அவளிடம் கிளி பேசியது. இளவரசி மிகவும் வருந்தினாள்.

இளவரசனின் நிலையைக் கிளி கூறியது. உன்னை மாற்று அரசனிடமிருந்து இளவரசன் காப்பாற்ற வேண்டுமானால்  உன்னிடம் உள்ள இளவரசனின் மோதிரம் வேண்டும் என்று கிளி கூறியது. உடனே இளவரசி தன் கையில் இருந்த மோதிரத்தைக் கழற்றி கிளியிடம் கொடுத்தாள்.

கிளியும் பூனையும் அதனைத் தூக்கிக் கொண்டு இளவரசனிடம் சென்றன. அப்போது கிளியிடம் இருந்த மோதிரத்தைப் பூனை வாங்கியது. ஆனால் கிளியோ இல்லை இல்லை மோதிரத்தை நானே கொண்டு வருகிறேன் என்று பூனையிடமிருந்து கேட்டு மீண்டும் பெற்றுக் கொண்டது.

கடலின் நடுவே இருக்கும் கோட்டைக்கு இருவரும் சென்றனர். அப்போது கிளி ஒரு ஆற்றின்மேல் பறந்து சென்று கொண்டிருந்த போது கீக் கீக் எனக் கத்தியது. அப்போது வாயில் வைத்திருந்த மோதிரம் தவறி ஆற்றில் விழுந்தது. விழுந்த மோதிரம் அந்த ஆற்றில் கிடந்த பெரிய நண்டின் வளையில் போய் விழுந்தது. மோதிரம் விழுந்தது உன்னால்தான் என்று கிளியும் பூனையும் அவ்விடத்திலேயே ஒன்றோடு ஒன்று சண்டையிட்டுக் கொண்டன.

அவ்வேளையில் வெளியே வந்த நண்டு இந்தாருங்கள் உங்கள் மோதிரம். இதற்காக ஏன் சண்டையிட்டுக் கொள்கிறீர்கள் என்று மோதிரத்தை வெளியே கரையில் தூக்கிப் போட்டது. உடனே அதனைப் பூனை வாயில் கவ்விக் கொண்டது. இனி நீ மோதிரத்தைக் கொண்டுவர வேண்டாம் நானே கொண்டு வருகிறேன் என்று கூறியது பூனை. அதோடு மோதிரத்தைப் பத்திரமாகக் கொண்டு போய் இளவரசனிடமும் சேர்த்தது.

மோதிரம் கிடைத்தவுடன் முதல் வேளையாக இளவரசன் இளவரசியை மீட்க படையோடு சென்றான். மாற்று அரசனிடமிருந்து இளவரசியை மீட்டு இளவரசன் தன் தாயிடமே அழைத்துச் சென்று மகிழ்வோடு வாழ்ந்தான்.

……………..

(தகவல். கொலிசின்தாய், வயது47. வில்லோனி செட்டில்மென்ட். 27.09.2018.)

Leave a comment

Trending