சிபு மோடையில் கவிதைகள்
தமிழாக்கம் : பிரசாத் தாமோதரன்

*முட்டை
..
அன்று..
அமுதா டீச்சர்
முட்டை போட்டாள்
எனது ஸ்லேட்டில்..
வீடு செல்லும் வரை உடையக்கூடாது
எச்சரித்தாள்..
மதியம்
வீடு திரும்பும் முன்
கரும்பலகையோரம் வடிந்திருந்த சாக்பீஸ்பொடியால்
முட்டையை எட்டாக்கினேன்..
வீட்டை எட்டியதும்
எட்டின் வெற்றிக்கு
அவிச்ச முட்டை
நீட்டினாள் அம்மா..
கல்லுக்குச்சியால் கையொப்பமும் தீட்டினாள்..
மறுநாள்
எட்டை முட்டையாக்கி டீச்சரிடம் காட்டினேன்..
சிறு மனதைக் காயப்படுத்தியதின் மகிழ்ச்சியில் அவள்..
நானும் மன்னித்து விட்டேன்..
டீச்சரை ஏமாற்றி விட்டேனே..
முழுக்கிறுக்கன்
எல்லாவித கிறுக்குத்தனத்தையும் சேர்த்துக் கட்டி
ஒரே தலைக்குள் போட்டுவிட்டால்
அவன் எப்படியிருப்பான்
எதிர் மாற்றங்களுக்குள்
மூழ்கித் தள்ளாடி
வலிமைகளுக்கு நடுவே
உணர்வற்றவனாக
நிம்மதி நிம்மதி என்றபடி
சவாசனத்தில் ஆழ்வானோ?
மேலும் மேலும் ஆடை
அணிவானா?
இல்லை
ஆடையே வேண்டாமென்று
தூணிலே சாய்ந்தபடி
புகை பிடிப்பானோ?
எல்லா விதமான கிறுக்கும்
ஒரே தலையில் புகுந்தால்
அவனுக்கு எந்த மதம்?
மதம்பிடித்த
மதவெறியனாய்
அவன்
என்னவெல்லாம் செய்வான்?
பள்ளிவாசல் இடிப்பானா?
கோவில் கட்டுவானா?
விருந்தினரே தெய்வம் என்று
பணிவிடை செய்வானா?
விருந்தினரை வேள்வியிலே பலியிடுவானோ?
பிறந்த குழந்தையை
சூலத்தில் ஏற்றுவானோ?
முதல் பாடம் கற்றுத்தந்த
கையை அறுப்பானோ?
மேய்ப்பனாக வேடமிட்டு
ஆட்டுக்குட்டியின்
தலையை வெட்டி
கூட்டத்தை நடுங்க வைப்பானோ?
எல்லாவித கிறுக்கும் உள்ள
ஒருவரைப் பார்க்க வேண்டுமானால்
இரண்டு கண்களையும்
நோண்டி எடுத்த பின்
கண்ணாடியிலே போய்ப்பார்க்கவும்

Leave a comment