சோலை சுந்தரப்பெருமாள் புதினத்தின் வழி கற்றல் குறைபாடுகளும் தீர்வுகளும்

முனைவர் மு.நளினி

இணைப்பேராசிரியர் &
தமிழ்த்துறைத் தலைவர்
எஸ்.ஐ.வி.இ.டி.கல்லூரி,
கௌரிவாக்கம், சென்னை-73
கைப்பேசி- 9940203960
மின்னஞ்சல்- dr.nalini.m@gmail.com

மனிதநேயம் போற்றுதல், மனித உரிமைகளை மதித்தல்  போன்ற விழுமியப் பண்புகள் கற்றறிந்த சான்றோர்களிடையே முன்னெடுக்கப்படும் இன்றைய சூழலில் விளிம்பு நிலை மக்களைச் சமுதாய  மைய நீரோட்டத்தில் இணைக்கும் சமூகச் செயல்பாடுகள் பரவலாக நிகழ்வதைக்  கண்ணுற முடிகிறது.

சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம், சமூக நீதி, சாதிமதபேதத் தகர்ப்பு போன்ற கொள்கைகள் நடைமுறை வாழ்வில் மேலோங்கி வருவதையும்,  மேலோங்க வேண்டிய இலக்கினையும்  கவனமாக ஆவணப்படுத்தும் எழுத்தாளர்களிடையே சோலை சுந்தரப்பெருமாள் மிகவும் குறிப்பிடத்தக்க இடத்தைப் பெற்றுள்ளார்.  தஞ்சைக் கீழ வெண்மணி கோர நிகழ்வை ஒடுக்கப்பட்டோர் நிலையிலிருந்து பதிவு செய்யும் செந்நெல்(1990) வேளாண் உற்பத்தித் தொழிலாளர்களின் வறிய, போராட்ட வாழ்க்கையை தப்பாட்டம்(2002), மரக்கால்(2007) போன்ற  புதினங்களில் பதிவு செய்துள்ளார்.

சோலையாருடைய எழுபதுக்கும் மேற்பட்ட சிறுகதைகளும் பிற நூல்களும் வண்டல்  மண் சார்ந்த மக்களின் அகவாழ்வையும் புற வாழ்வையும் சித்திரிப்பனவாக அமைந்துள்ளன.

வண்டல் மண் படைப்பாளர்களின் கதைகளைத் தொகுத்தும் வெளியிட்டுள்ளார். ‘தஞ்சை  வட்டாரத்தை வண்டல்மண் வட்டாரம் எனக்கொண்டு இலக்கியங்கள் ஆக்கம் பெற வேண்டும் எனத் தோழர் சோலை சுந்தரப்பெருமாள் நினைத்தார். அதன்படி 1993 – இல் வெளியிட்ட ஓர் சிறுகதைத் தொகுப்பிற்கு வண்டல் சிறுகதை எனப் பெயரிட்டார். அதைத் தொடர்ந்து 1999- இல் தஞ்சை கதைக் களஞ்சியம் 2001- இல் தஞ்சை சிறுகதைகள் என இரண்டு தொகுப்புகளை வெளியிட்டார்.’ (தி. நடராஜன், நாட்டார் பாடல்களில் நிலம் சமூகம் – அரசியல், ஆம்பல் பதிப்பகம் மு.ப.2023:16).  

இச்செயல்பாடுகளினூடே மைய நீரோட்டத்தில் இணைய முற்படும் விளிம்பு நிலைமக்களில்  உடல் குறைபாடு, மனநலக் குறைபாடு உடைய மாந்தர்களின் எதார்த்த வாழ்க்கையையும் இலட்சிய வாழ்க்கையையும் புனைவாகப் படைத்து அளித்துள்ளார். அவ்வகையில் சோலையாரின்  ‘உறங்க மறந்த கும்பகர்ணர்கள்’ என்ற புதினம் நியூ செஞ்சுரி புத்தக நிறுவனத்தில் முதல் பதிப்பாக 1990 -இலும், நான்காம் பதிப்பாக 2015 -இலும் வெளிவந்துள்ளது.

இப்புதினத்தின்   தலைமைப்பாத்திரமான அப்புனு மனவளர்ச்சி குன்றியவனாகக்  காணப்படுகிறான். அப்புனுவின் குழந்தைப் பருவம் முதல் இளமைப்பருவம், வளரிளம்பருவம் வரையிலான நிகழ்வுகள் புதினத்தில் இடம்பெற்றுள்ளன. அவற்றின் மூலம் அப்புனுவின் மன வளர்ச்சிக் குறைபாடுகள்  எதிர்கொள்ளப்படும் சூழல்களும் அவற்றுக்குக் காணப்படும் தீர்வுகளும் புதினத்தில் பல இடங்களிலும் சித்திரிக்கப்பட்டுள்ளன. பொதுவான உளவியல் அடிப்படையிலும் கல்விஉளவியல் அடிப்படையிலும், இச்சிக்கலைச் சமூகத்தினர் புரிந்துகொண்டு ஏற்றுக்கொள்ளவேண்டிய கடமையும் பொறுப்பும் உள்ளது. இதனைக் குறிப்பாக உணர்த்தும் வகையில் பிற பாத்திரங்களும் படைத்துக்காட்டப்பட்டுள்ளன.  

ஆசிரியர் தேர்ந்தெடுத்த செவத்தி ஓர் உயிருள்ள படைப்பு. மனநிலை பாதிக்கப்பட்ட அப்புனுவின் வாழ்வில் அபூர்வ மலர்ச்சி தரும் செவத்தி என்ற பெண்ணின் கதை இது. அதே சமயம் அபூர்வ கனவுகளை வரித்துக் கொண்ட மருதாயி என்ற இன்னொரு பெண்ணின் கனவுகள் உடைந்து சிதறும் கதையும் இதுவே.

வாழ்வின் உயரங்களை எட்ட வேறுவழி இல்லாது உழைப்பை மட்டுமே நம்பி உயிர் வாழும் எளிய மக்களின் கதை இது. அவர்கள் நிலையில் வாழ்வின் உயரத்தில் நின்று வழிகாட்டுகின்ற மன அழுக்கற்ற ஓர் உயர்ந்த மனிதனின் (ராஜாமணியின்) கதையும் இதுவே.

பிள்ளைப் பாசத்திற்காகச் சாதியக் ‘கட்டுமானங்கள் தளர்வதை ஏற்றுக் கொள்ளும் சின்னசாமி ஒரு புறம். சாதிய, சொத்துடைமை அழுக்குகளில் பெற்றோரை. சகோதரனை, புறக்கணிக்கும் ஈரமற்ற சிவராமன் இன்னொருபுறம்.

இப்படி எதிர் எதிர் நிலைகளின் சந்திப்பை, மோதலை, வெற்றி தோல்விகளைச் சித்திரிப்பது உயிர் இலக்கியம் என்று ஏற்கிறார் புதுக்கோட்டை பாலா தன் மதிப்பீட்டில் (உ.ம.கு. பக்.4).

சோலை சுந்தரப்பெருமாள் அத்தகைய எதிர்நிலைகளின் சித்திரத்தைப் படைத்துக்காட்டுவதோடு இப்பாத்திரங்களுக்கிடையே ‘அப்புனு’ ஊடாடி உறவாடுவதையும் மறுதலிக்கப்படுவதையும் புனைந்து காட்டுகிறார்.

செல்லப் பெயரிட்டு வழங்குதல்

மயக்குறு மக்களைப் பெறுதலே மிகச்சிறந்த பேறாக, படைப்புப் பலபடைத்து….(188). என்ற புறப்பாடலில் பாண்டியன் அறிவுடை நம்பி பாடியுள்ளான்.

அப்புனுவுக்கு பெற்றோர் இயற்பெயராக ஏதேனும் வைத்திருக்கக்கூடும் ஆயினும் அப்பெயரால் அழைக்காமல் அவனைச் செல்லமாக அப்புனு என்று அழைத்ததே வீடுமுதல் பள்ளிவரை எல்லா இடங்களிலும் பதிவாகியுள்ளது. இதுவே இவன்மேல் பெற்றோர் கொண்டுள்ள நேசத்தை வெளிப்படுத்துகிறது.

கற்றல் குறைபாடுள்ள குழந்தைகளை அடிப்படையில் அவர்கள் இன்னவகையான குறைபாடு உடையவர்கள் என்று அடையாளம் கண்டுகொள்ள வேண்டியது பெற்றோரின் முதல் கடமை. டிஸ்லெக்ஸியா, டிஸ்ப்ராக்ஸியா, டிஸ்கால்குலியா, டிஸ்கிராபியா, ஆடிட்டரி பிராசசிங் கோளாறு, காட்சி செயலாக்கக் கோளாறு, சொற்கள் அல்லாத கற்றல் கோளாறு, பேச்சின் அப்ராக்ஸியா என குறைபாடுகள் பற்றிக் கல்வி உளவியலாரும் மருத்துவரும் விளக்குகின்றனர்.

இவைபற்றிய தெளிவு அப்புனுவின் பெற்றோருக்கு இல்லையென்றாலும்  அவன்பால் கொண்ட நேசத்தால் எப்படியாவது அவனை முன்னேற்றிவிட வேண்டும் என்ற ஆர்வத்தில் ஆசிரியர்களிடம் பாடம் கேட்கச் சேர்த்துவிடுகின்றனர்.

அறிவுமலர்ச்சிக்குப் பாலுணர்ச்சி நிறைவேற்றம் காரணமா?

‘உறங்க மறந்த கும்பகர்ணர்கள்’ புதினத்தின்  அப்புனு மனவளர்ச்சி பெறாதவன். உடல் வளர்ச்சி பெற்றவன்.

“வாழ்வின் அபூர்வ க்ஷணங்களினால் செதுக்கப்பட்டு மனிதன் சீர்மை பெறுகிறான். சோலை சுந்தரப்பெருமாள் அத்தகைய தருணங்களை இந்தப் புதினத்தில் செதுக்கிக் காட்டுகிறார். மனவளர்ச்சி பெறாது உடல் வளர்ச்சி பெற்றுள்ள அப்புனுவின் வாழ்வில் செவத்தி நுழைவது அத்தகையதொரு அபூர்வ தருணம்.  அவனுடைய பாலுணர்ச்சிக்கு செவத்தி வடிகாலாகிறாள். இதன் மூலம் வளர்ச்சி குன்றிய அவனுடைய அறிவு மலர்ச்சி பெறுகிறது. அவன்  முழுமனிதன் ஆகிறான். பாலுணர்ச்சி ஆசை நிறைவேற்றத்தில் அப்புனு என்ற வளர்ந்த குழந்தை ஆரோக்கிய மனிதன் ஆகிறான் என்ற செய்தியில் அறிவியல் பலம் மட்டுமல்ல: கிராமத்தின் பாரம்பரிய நம்பிக்கையையும் காண்கிறோம். “

என்ற புதுக்கோட்டை பாலாவின் அணிந்துரைக் குறிப்பு பாலியல் சார்ந்த உளவியலின் சான்றாதாரங்களைக் கோருவதாக உள்ளது.

மருதாயி மஞ்சள்நீராட்டுவிழாவில் பாடல் ஒலித்தது.                  

‘மாங்குயிலே! பூங்குயிலே! சேதி ஒண்ணு கேளு…
உன்ன மாலையிடத் தேடி வரும்… (உ.ம.கு, பக்.75)

என்று ஒலி பெருக்கி ஒலிக்க அதற்கேற்ப அபிநயங்களுடன் ஆடிக்கொண்டு வந்த அப்புனு

‘யேய்! மருதைக்கு ‘கண்ணாலம் கண்ணாலம்’ என்று சொல்லியபடி மருதாயியை இழுத்துக் கொண்டு பந்தலுக்கு வந்தான்’. அப்புனுவுக்கு அகவாழ்க்கை சார்ந்த மகிழ்ச்சியான புரிதலும் அறிவும் உள்ளதை இந்நிகழ்வால் அறியலாம்.

அப்புனு தானே தன் தலையைச் சீவிக் கொள்வதும், சட்டையணிந்து கொள்வதும், பெண்களைக் கண்டால் வெட்கம் கொள்வதுங்கண்டு ‘தங்கத்தின் முகத்தில் பொலிவு கூடியது’ என்ற பதிவாலும் இக்கூற்றை உறுதிசெய்துகொள்ளலாம் (உ.ம.கு, பக்.114-115)

 மனநலம் குன்றியவருக்கும் பாலியல் வேட்கை இயல்பானது.

எல்லா உயிர்க்கும் இன்பம் என்பது
தான் அமர்ந்து வரூஉம் மேவற்று ஆகும்.
(தொல்.1169)

என்ற தொல்காப்பியர் கருத்தும் இங்கு எண்ணத்தக்கது.

அடிப்படை அறஉணர்வு வேண்டும்

மனித பலவீனங்களைத் தனக்குச் சாதகமாக்கி, உல்லாசமான வாழ்க்கையை அமைத்துக்கொள்ளும் பிறவிகளை நினைத்து நூலாசிரியர் கொதிப்படையும் தன்மை நூல் முழுவதும் விரவிக்கிடக்கிறது. இவ்வகையில், இப்புதினத்தில் வரும் வாஞ்சியூரான் வேளாண் மக்களிடம் அதிக வட்டி வசூலிக்கும் கந்துவட்டிக்காரன். அடிப்படை அறஉணர்வு இல்லாதவன் அப்புனுவின் மருத்துவச்செலவுக்காக அவன் தந்தை சின்னச்சாமி வாஞ்சியூரானிடம் கடன்பெற்று மிகவும் அவமானப் படுத்தப்படுவதும் பின் தன் கடின உழைப்பால் பணத்தைத் திரும்பக் கொடுப்பதும் விளக்கப்பட்டுள்ளது.

இதுபோன்ற துயரமான சூழல் இன்றைய நடைமுறையில் மாற்றுத்திரனாளி குழந்தைகளுக்கு இல்லை. மாற்றுத்திரனாளி குழந்தைகளுக்கு கல்வி, உடற்பயிற்ச்சி, மருத்துவ சிகிச்சை, தொழிற்பயிற்சி அளிப்பதோடு வேலைவாய்பிற்குரிய ஏற்பாடு என அனைத்தையும் உண்டு உரைவிட நிறுவனமாக National institute of empowerment of persons with multiple disabilities – முட்டுக்காடு, தமிழ்நாடு போன்ற நடுவணரசின் நிறுவனங்களும், தமிழ்நாடு அரசு மாற்றுத் திறமாளிகள் நல இயக்குநரகம், மாற்றுத் திறனாளிகள் நல ஆணையரகம்,  மாநில அரசின் நிறுவனங்களும்  மாற்றுத்திறனாளிகளின் வாழ்வில் உயர்வையும் மேம்பாட்டையும் வழங்கி அவர்களை நன்மதிப்பிற்குரிய குடிமக்களாக்கி, சமுதாய மைய நீரோட்டத்தில் இணைக்கின்றன.

ஒற்றுமை உணர்வு வேண்டும்

 மேலும் சாதியுணர்வு மாறவேண்டும் என்ற சிந்தனையைச் சிவராமன் போன்ற சில கதாபாத்திரங்களின் மூலம் வெளிப்படுத்துகிறார் ஆசிரியர். அப்புனுவின் அண்ணன் சிவராமனின்  வெறுப்புணர்வு, கோபம், அக்கறையின்மை போன்ற அணுகுமுறையால் மனவருத்தத்தை ஏற்படுத்துவதோடு, அடித்து துன்புறுத்தி உடல் வருத்தத்தையும் ஏற்படுத்துகிறான்.

பண்ணையாள் ஐயாவு வீட்டின் மஞ்சள் நீராட்டு விழாவிற்குச் சென்று விருந்துண்டு வந்ததால் அப்புனுவையும் தாயையும் சிவராமன் திட்டி அடித்து துன்புறுத்தும் காட்சி, சாதி உணர்வையும் ஏற்றதாழ்வு உணர்வையும் வெளிப்படுத்துகிறது, ஆனால் உடல் உழைப்பின் அருமைப்பாட்டை உணர்ந்த அப்புனுவின் பெற்றோர் ஐயாவு வீட்டாரை வேறாக எண்ணவில்லை.

பொதுவாக மாற்றுத்திறனாளிகளிடம் சாதி உணர்வு, சமூக ஏற்றத்தாழ்வு உணர்வு தலைதூக்குவதில்லை. இவ்வுணர்வு முற்றிலும் இல்லாத சூழல் எப்பொழுதும் நிலவவேண்டும். வேற்றுமை உணர்வை அறவே தவிர்க்கவேண்டும்.  இதற்காக தன்னார்வளர் அமைப்புகள் மிகவும் நேச ஈடுபாட்டுடன் செயல்பாடுகளை முன்னெடுக்கின்றனர். வழக்கமாக ஆண்டுதோறும் தாய்க்கரங்கள் அறக்கட்டளை மாற்றுத்திறனாளிகளை ஒன்றிணைத்து நிகழ்ச்சிகளை நடத்திவருவதுபோல, 28-01-2024 அன்று பன்னாட்டு மாற்றுத்திறனாளிகள் விழா நடைபெற உள்ளது. இதுபோல் பல தனியார் அமைப்புகள் மாற்றுத்திறனாளிகளின் வாழ்க்கை மேம்பாட்டிற்கு உதவுகின்றன.

 உலகளவில் ஆண்டுதோறும் டிசம்பர் மூன்றாம் நாள் மாற்றுத்திறனாளிகள் தினமாகக் கொண்டாடப்படுவதன் மூலம் ஒன்றுபட்ட உணர்வை ஏற்படுத்தப்படுகின்றனர்.

வாழ்க்கையை வெறுத்தலோ, தற்கொலை முயற்சியோ தீர்வு ஆகா:

            அப்புனுவின் பெற்றோர் அவ்வப்பொழுது அப்புனுவின் பொருந்தாத செயல்பாடுகளால் மனம் வருந்துகின்றனர். சலிப்பும், வாழ்க்கைமீது வெறுப்பும் ஏற்படும் சூழல்கள் புதினத்தில் குறிப்பிடப்பட்டிருந்தாலும் அவற்றையும் மீறி அப்புனுவின் நல்வாழ்வு மீதான நன்னம்பிக்கைத் தருணங்களும் விளக்கப்பட்டுள்ளன.

“ஏடே! அப்புனு தோப்புக்குள்ளே போடா…

பாதையில் உக்காராதே…

போதுண்டா உன்னாலே நாங்க வாங்கிக் கட்டிக்கிறது… வார்த்தைகள் அலுத்துக் கொண்டன. இது தாய் தங்கத்தின் உரையாடல் சலிப்பான குரல். (உ.ம.கு, பக்.33)

குடும்பத்தில் யாருக்கும் இல்லாத குறை அப்புனுக்கு மட்டும் எப்படி வந்தது? இதைத்தான் விதி என்பார்களோ! எனக்கும் தங்கத்திற்கும் பிறகு இவனுக்கு யார் கைக் கொடுத்து உதவப் போகிறார்கள்?” மூத்தமகன் சிவராமன். அப்புனுவை அவ்வப்போது படுத்தும் கொடுமையின் நினைவு வந்துவிட்டால் சின்னசாமிக்குத் தன் உயிர் மீதே வெறுப்பு ஏற்பட்டு விடும்.  (உ.ம.கு, பக்.10)

என்ற வருணணைக்கு மாறாக நம்பிக்கையூட்டும் வகையில் பின்வரும் மனிதநேயக் காட்சியை அப்புனு ராஜாமணி உரையாடலின் மூலம் சோலையார் விளக்குகிறார்.

“அப்புனு சிலேட்டில் ‘அனா ஆவன்னர்’ என்ற இழுப்புடன் ராணாமணியின் முகத்தைப் பயத்துடன் பார்த்தான்.

“உலகத்துல எனக்கு வேற ஒரு சந்தோஷமும் இல்லப்பா.. என் கூட இருக்கிறதத் தவிர..” அவன் மனதுக்குள் விசித்தான்.  (உ.ம.கு, பக்.51)

சார்!…”

அப்புனுவை ராஜாமணி அனுதாபத்துடன் பார்த்தான். இதில் அக்கறையுடன் பார்த்தான் என்று வந்திருந்தாலும் இன்னும் பொருத்தமாக இருந்திருக்கும்.

அன்பு, பரிவு, பாசத்துடன் அணுகவேண்டும்

அப்புனுவின் உடல் வளர்த்தியில் குறை சொல்ல முடியாது. இருபத்தைந்து வயது இளங்காளை போலத் தான் வளர்ந்து கிடந்தான். மூளை மட்டும் மிட்டாய் சப்பி சாப்பிடும் குழந்தையின் கனவுகளோடு நின்று போய் இருந்தது. இப்படிபட்ட கற்றல் குறைபாடுள்ள குழந்தைகளிடம் பிற குழந்தைகளைக் காட்டிலும் மிகவும் கூடுதலான அன்பு, பரிவு, பாசத்துடன் பழகவேண்டியது மிகவும் இன்றியமையாதது.  இத்தகைய மயிலிறகால் வருடிக்கொடுப்பது போன்ற மென்மையான அணுகுமுறையால் அக்குழந்தைகள் மனதில் உள்ள அச்சம் நீங்கி, நம்பிக்கை உணர்வு வெளிப்படும்.

அறிவுக்குப் பொருந்தாத நம்பிக்கைகள் பலன் நல்கா

            அப்புனுவின் மேல்கொண்ட பாசத்தால் எந்தவழியிலாவது குணமாக்கிவிடவேண்டும் என்ற எண்ணத்தில் பல்வேறு மத பிரார்த்தனைகள், ஜோதிடம் பார்த்தல், குறிகேட்டல் போன்ற முயற்சிகளால் எப்பயனும் விளைவதற்கு வாய்ப்பில்லை என்பதை அப்புனுவின் பெற்றோர் உணர்ந்தனர். கற்றல் குறைபாடுள்ள குழந்தைகளின் அறிவு வளர்ச்சியை மேம்படுத்துவதில் இச்செயல்பாடுகள் தேவையற்ற கால விரயத்தை ஏற்படுத்துவது குறித்த விழிப்புணர்வு மக்களிடையே வேண்டும் என்பதை சோலையார் மேல் நிகழ்சியால் பதிவுசெய்கிறார்.

உளற்சிகிச்சையில் துல்லிய சொற்பயன்பாடு தேவை

            அன்பு, பரிவு, பாச அணுகுமுறையோடு துல்லிய சொற்பயன்பாட்டு உரையாடலும் மிகவும் தேவை என்பதை பின்வரும் நிகழ்வுகளால் அறியலாம்.

மருந்து மட்டும் கொடுத்து அப்புனுவைக் குணமாக்கிட முடியாது. நாம  காட்டுகிற பாசம், பரிவு, கொடுக்கும் பயிற்சியாலதான் முன்னேற்றம் கிடைக்கும்… இதுல எங்காவது இடறினா பலன எதிர்பார்க்க முடியாது. முயற்சி செய்யுங்க. சராசரி மனுஷ வளர்ச்சிக்கு அவனா “வந்துட முடியும்…”

இப்படித்தான் அந்தப் பெரிய டாக்டர் பட்டவர்த்தனமாய்ச் சொன்னார். என்றாலும், அந்த மருத்துவமனையின் பயிற்சிகள் சின்னச்சாமிக்கு சின்னதாய் ஒரு நம்பிக்கையைக் கொடுக்கத்தான் செய்தது. இப்படியும் மருத்துவம் பார்க்கிறார்களா? என்று வியந்து போனான்.

“இந்த டாக்டர்களுக்குத்தான் எத்தனை பொறுமையும் கண்டிப்பும் தேவைப்படுகிறது. சொந்த தம்பியையே கவனிக்க முடியாத சிவராமன் எங்கே? சேவைக்காக தங்களை அர்ப்பணிக்கின்ற அந்த டாக்டர்கள்… அடேயப்பா…?” சின்னசாமியும் அவன் மனைவி தங்கமும், டாக்டர்கள் சொன்னதைக் கூட புரிந்து கொள்ள முடியாமல் விழித்தார்கள்.

…அப்புனு! இது என்னா சொல்லு பார்க்கலாம்?” “சாக்லட்டு… சாக்லட்டு…” டாக்டர் கையை மேலே உயர்த்த உயர்த்த தாவித் தாவிக் கெஞ்சினான்.

“ஒனக்குதான். இந்தப் பெஞ்ச உன் தலையிலே தூக்கி வைப்பேன் அதோ அந்த ரூம்ல கொண்டு  போடனும். என்ன?”

அப்புனு ‘திரு திரு’ என விழித்தான்.

டாக்டரும் நர்சும் பெஞ்சைத் தூக்கி அவன் தலையில் வைத்தனர். கனமான மரபெஞ்சு அவன் தலைக்கு ஏறியது. அதன் கனத்தை அவன் உணரவில்லை; பயவுணர்வில் நடுங்கினான்.

“அப்புனு.. நான் சொல்றதக் கேட்பே இல்ல? தூக்கிக் கிட்டு போ… ம்…ம்…”

சாக்லெட்க்காக ஒரு கையை நீட்டித் தாவினான். ” இப்பத் தரமாட்டேன்… அந்த ரூம்ல கொண்டு போய் போட்டுட்டு வந்தாதான்..” என்று வழியைக் காட்டி விட்டு நின்று கொண்டார் டாக்டர்.

குறிப்பிட்ட அந்த அறைக்குள் போனவன் பெஞ்சைப் பொத்தென்று போட்டபின் பெஞ்சின் கால்கள் நொறுங்கின. பெஞ்சியின் கால்கள் ஒடிந்து போனதைப் பற்றி அவன் கவலை கொள்ளவில்லை. டாக்டரிடம் ஓடி வந்தான்.

…இந்தா… சாக்லெட்…”

“அய்ய்யா…”

குஷியாகக் குதித்து வாங்கிக் கொண்டான்.

‘பக்’கென்று அவன் கையைப் பிடித்துக் கொண்டார். “நல்ல பெஞ்ச உடைச்சிட்டே இல்லே…”. டாக்டர் முகத்தைக் கோபமாக வைத்துக் கொண்டு அவனைப் பார்த்தார்.

அப்புனு ‘தேம்ப ஆரம்பித்து விட்டான். “…ஊகூம்… அழக்கூடாது மெதுவால்ல வைக்கனும்…” தட்டிக் கொடுத்தார் (உ.ம.கு, பக். 11-13).

கற்றல் குறைபாடு உள்ள குழந்தைகளிடம் ஆசிரியரானாலும் மருத்துவாரானாலும் பெற்றோரானாலும் உடன் பழகும் சிறார் ஆனாலும் இயல்பாக எல்லோரிடமும் பேசுவது போல்  இல்லாமல் சிறப்புக் கவனத்துடன் சொற்களைத் தெளிவாகப் பயன்படுத்தவேண்டும். ஒரு சொல்லுக்குப் பல பொருளும் பல பொருளுக்கு ஒரு சொல்லும் தமிழ் போன்ற தொன்மையான மொழிகளில் மிகுதியாகக் காணப்படும்.  

‘போடு’ என்ற தலைச்சொல்லுக்கு இருபத்தொன்பது வகையான பொருள் வழங்கப்படுவதை உரிய பொருத்தமான மேற்கோள்களுடன் க்ரியாவின் தற்கால தமிழகராதி (1992)பதிவு செய்துள்ளது. இத்தகைய விரிவான சூழற் பொருள் கற்றல் குறைபாடு உடைய குழந்தைகளுக்குப் புரிந்து கொள்வதில் சிக்கலை ஏற்படுத்த வாய்ப்புள்ளது. எந்திரன் படத்தில் சிட்டி  ரோபோவிடம் டி. வி. யை போடு என்றவுடன் போட்டு உடைத்துவிடுவதைக் காணலாம்.  இதற்கு  தீர்வாக பெஞ்ச்சைக்  கொண்டு போய்  வை ?   டி. வி. யை இயக்கு?என்று தெளிவாகச் சுட்டலாம்.   

பாகுபாடின்றிக் குறையுடையோரையும் சமமாக நடத்துதல்

செவத்தியும் மறுதாயியும் அப்புனுவிடம் நேசமும் அக்கறையும் உடையவர்கள் செவத்தி அப்புனுவிடம் உள்ள குறைப்பாட்டைக் கருதாமல் இயல்பான எதிர் பாலினரிடம் செய்யும் குறும்புகளை அப்புனுவிடம் செய்கிறாள். அவ்வகையில் மரக்கட்டையைத் தூக்கி வரச்சொல்லும் காட்சி மேற்ச்சூட்டிய மருத்துவரின் சோதனையைப்  போல அவன் தெம்பைச் சோதிப்பதாக உள்ளது. மெல்ல மெல்ல கட்டை அப்புனுவின் தலைக்கு ஏறியது. ‘செயுச்சிட்ட செயுச்சிட்ட, என்று கையைத் தட்டிக் கொண்டு ஓடினாள் செவத்தி. அப்புனு செவத்தியின் மூலம் மனம் தெளிந்து வரும் நிலை, கற்றல் குறைபாடு உடைய மாணவர்களுக்கும், மன நிலை பாதிக்கப்பட்டவர்களிடம்  அக்கறை காட்டினால்  அதுவே தீர்வாகி அவர்கள் குணமடைவர் எனும் நிலையும் புதினத்தில் வெளிப்படுகிறது.

அறிவே ஆற்றல்

மெல்ல மெல்ல  கற்கும் அப்புனுவை ராஜாமணி அனுதாபத்துடன் பார்த்தான் என்ற நிலையைக் காட்டிலும் மிக்க கவனத்துடன் அக்கறையுடன் ஆசிரியர் அணுகுவதே மிகவும் தேவையாகிறது.  சில பள்ளிக்கூடங்களில் கற்றல் திறன் அடிப்படையில் மாணவர்களைத் தனிதனியாகத் தரம்பிரித்துப்  பாடம் நடத்தும் நிலை மாறி, உள்ளடக்கிய கல்வி (Inclusive Education) என்ற புதிய தேசியக் கல்விக் கொள்கைத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படுகிறது. அதன் செயல்பாடுகள் உரிய உள்ளக கட்டுமானங்களுடன் தரமான கற்பித்தல் பயிற்சியுடன் தகுதியுடைய ஆசிரியர் பணியமர்த்தல்களுடன் நடைபெற்றால் மட்டுமே மாற்றுத்திறனாளிகளின் வாழ்வில் மேம்பாட்டை எய்த இயலும்.

ராஜா மணி போன்ற ஆசிரியர்கள் இருபத்தைந்து வயதாகும் அப்புனுவின் மன வயதைக் கொண்டே அப்புனுவுக்குப் பாடம் சொல்லிக்கொடுக்கிறார்கள். ஊனம், கற்றல் குறைபாடு ஆகிய காரணங்களை  முன் வைத்து குழந்தைகளிடம் காட்டும் ஏற்றத்தாழ்வுகளைக் களைய வேண்டும்.  கல்வி உளவியலில் இந்நிலையை, “மாணாக்கர்களைப் பற்றிய ஆசிரியர்க்கு அவர்கள் மீது தனிப்பட்ட செல்வாக்கு தருதல். அவர்களை நினைவில் வைத்திருந்து பெயர்கொண்டு அழைத்து, தன்னம்பிக்கையுடன் அவர்களை ஆசிரியர் அணுகலாம். உற்சாகமும் முகத்துக்கு முகம் நேர் தொடர்பும் கொண்டால், அவர்களை நன்னிலையில் உருவாக்கலாம். அறிவே ஆற்றல் என்பதை ஆசிரியர்கள் உணரவும் உணர்த்தவும் வேண்டும். மாணாக்கரின் மனங்களைப் பற்றிய அறிவு கல்விப்பயன்களை எய்தும் முறையில் கொண்டு செலுத்தத்தக்க ஆற்றலைத்   தருகின்றது.” எனும் பேராசிரியர் ந. சுப்புரெட்டியாரின் கல்வி உளவியல் கூறும் கருத்துப் புரிதலின் அடிப்படையில் சோலையார்  ராஜாமணி பாத்திரத்தை படைத்துள்ளார் எனலாம்.

பள்ளி வயது முதலே கற்றல் குறைபாடு கொண்டு அல்லல் படுபவர்கள் பலர்.  பெரும்பாலும் கற்றல் குறைபாட்டை மூளை வளர்ச்சிக் குறைபாடு என கற்பிப்போரும் குழந்தையைப் பெற்றவரும் கருதுகின்றனர். இது முற்றிலும் தவறான ஒரு கருத்து. மனப்பாடம் செய்து ஒப்பித்தல், நினைவாற்றல் திறனுடன் விளங்குதல் மட்டுமே சிறந்த கற்றலுக்குரிய தகுதியாகா. சிந்தனைத்திறனை வளர்த்துக்கொள்வதும் உரியநேரத்தில் உரிய வகையில் ஆற்றலுடன் செயல்படுதலும் கற்பித்தலில் அளிக்கப்படவேண்டிய மிக முக்கியமான பயிற்சிகள் ஆகும். இப்பயிற்சிகள் குறைபாடுடையவர்களுக்கேற்ப தனிச்சிறப்புடன் வடிவமைக்கப்படவேண்டியதும் மிகவும் இன்றியமையாதது. இவற்றோடு கட்டுரையில் குறிப்பிட்ட கற்பித்தல் செயல்பாடுகளுடன் அக்கறையுடன் கூடிய அணுகுமுறையாலும் கற்றல் குறைபாடுடைய மாணவர்களின் அறிவை மேம்படுத்தலாம். அவர்களின் வாழ்விலும் ஒளியூட்டலாம்.

சான்றாதரங்கள்

  1. சுப்பு ரெட்டியார் . ந. – கல்வி உளவியல் – எஸ். வாசன் கம்பெனி, மயிலாப்பூர், சென்னை-4 – 1961 
  2. சோலை சுந்தரப்பெருமாள்-  உறங்க மறந்த கும்பகர்ணர்கள், நான்காம் பதிப்பு : நவம்பர், 2015 நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், சென்னை- 600 098.
  3. க்ரியாவின் தற்காலத் தமிழ் அகராதி, க்ரியா பப்ளிகேஷன்ஸ், சென்னை.
  4. தி. நடராஜன் நாட்டார் பாடல்களில் நிலம் சமூகம் – அரசியல், ஆம்பல் பதிப்பகம் மு.ப.2023.

Leave a comment

Trending