1

இனவரைவியல் நோக்கில
பழங்குடிகள் மற்றும் நாடோடிகள்

கு. இரவிகுமார்

உதவிப் பேராசிரியர், தமிழ்த்துறை.
மேரிமாதா கலை & அறிவியல் கல்லூரி,
பெரியகுளம்

முன்னுரை

     இந்தியா பல்வேறு மாநில ஒன்றியங்களை உள்ளடக்கியதாகும். ஒவ்வொரு ஒன்றியமும் மற்றொரு ஒன்றியத்திலிருந்து பல்வேறு வேறுபாடுகளைக் கடந்து பயணிக்கிறது. சாதி, மதம், மொழி, இனம், கடவுள், பண்பாடு, கலாச்சாரம், வாழ்வியல் மற்றும் வழிபாட்டு சடங்குமுறைகள், கலை, இலக்கியம், நிகழ்த்துக்கலைகள், தட்பவெட்பம், பருவநிலை, காலநிலை, நிலவியல் தன்மை, வழக்காறுகள், தொன்மங்கள், தொன்மக் கதைகள், இசை வடிவங்கள் என அனைத்துக் கூறுகளிலும் வேறுபாடுகள் நிறைந்துள்ளன. மேற்குறிப்பிட்ட பல்வேறு கூறுகளின் அடிப்படையில் மற்றும் இனவரைவியல் நோக்கில் இந்திய ஒன்றியங்களிலும், அவ்வொன்றியங்களில் ஒன்றான தமிழகப் பரப்புகளிலும் வாழ்ந்து வருகின்ற பழங்குடிகள் மற்றும் நாடோடிகள் பற்றிய அறிமுகத்தையும், வரையரையையும் இக்கட்டுரை விளக்கப்படவுள்ளது.

     பழங்குடிகள், நாடோடிகள், ஆதிவாசிகள், மலைவாசிகள், காட்டுவாசிகள், ஜிப்சிகள், ஏதிலிகள் எனப் பெயர்கள் கொண்ட அனைவரும் ஒரே சமூகத்தினர்களா? அல்லது ஒரே சமூகத்தில் நிலவி வரும் பல்வேறு பெயர்களா? அல்லது வேறு வேறு சமூகத்தினர்களா? என்கிற பல்வேறு வினாக்களுக்கு விடையளிக்கும் ஒரு சிறிய முயற்சியை இக்கட்டுரை முன்னெடுக்கிறது. மேலும் பல்வேறு பண்பாட்டுக் கூறுகளை, வரையறை செய்து அல்லது வகை தொகை செய்து பல்வேறு தரவுகளுடன், பல்வேறு உரையாடல்களுடன் இக்கட்டுரை கலந்துரையாடுகிறது.

இனவரைவியல் (Ethonography)

இனவரைவியல் என்பது கோட்பாடாக உருவாக்கப்படவில்லை. மாறாக ஆய்வு முறையாக உருவாக்கப்பட்டுள்ளது. இந்த ஆய்வு முறையைப் பண்பாட்டு மானிடவியலாளர் அல்லது அமெரிக்க மானிடவியலாளர் உருவாக்கியுள்ளனர். இவ்வாய்வு முறையோடு தொடர்புடைய மற்றொரு ஆய்வுமுறை உள்ளது. அவ்வாய்வு முறை இனக்குழு ஒப்பீட்டியல் (Ethnology)அல்லது இனவியல் எனக் குறிப்பிடப்படுகிறது. இனக்குழு ஒப்பீட்டியல் என்பது இரு இனக்குழுக்களின் பண்பாட்டு அம்சங்களை ஒப்பிட்டு ஆய்வு செய்வதற்காக உருவாக்கப்பட்டது. வரலாற்று நிலையிலும் கிடைத்தள நிலையிலும் இவ்வொப்பீடு செய்யப்படலாம். ஆனால் இனவரைவியல் (Ethnology)என்பது ஒரு குறிப்பிட்ட இடத்தில் வாழ்கின்ற ஒரு குறிப்பிட்ட மக்கள் குழுவின் அல்லது சாதியின் அல்லது இனத்தின் பண்பாட்டு அம்சங்கள் அனைத்தையும் சேகரித்து அவற்றின் பண்பாட்டு அர்த்தங்களைத் தெரிந்து வெளிப்படுத்தும் ஆய்வு முறையாகும். இவ்வாய்வு முறை வரலாற்றுப் பார்வையை அங்கீகரிக்காது. கிடைத்தளப் பார்வையை (Synchronic Approach)ஏற்றுக் கொள்ளும். ஆனால் இக்கட்டுரை வரலாறு, இனவரைவியல், இனக்குழுவியல் இம்மூன்றையும் பகுத்து ஆராய்ந்து நகர்கிறது.

ஒவ்வொரு இனமும், பல்வேறு பிரிவுகளாகப் பிரிந்து வாழ்வதைப் போலவே பழங்குடிகளும், நாடோடிகளும் பல்வேறு பிரிவுகளாகப் பிரிந்து வாழ்கின்றனர். அவர்கள் பல்வேறு பெயர்களால் குறிப்பிடப்படுகின்றனர். நலிவடைந்த பொருளாதாரத்துடன் வாழும் இம்மக்களுக்காக, இந்தியா விடுதலை அடைந்த பின்னர் அரசியல் அமைப்பில் சில தனிச்சலுகைகளையும், பல்வேறு திட்டங்களையும் தீட்டியுள்ளது. இதன்மூலம் இச்சமூகத்தினர்களின் வாழ்க்கைத் தரம் மேம்பட்டு வருகின்றது.

பழங்குடிகள் வரையறையும் விளக்கமும்

     பழங்குடி எனும் தமிழ்ச்சொல் “Tribe” எனும் ஆங்கிலச் சொல்லின் மொழிப்பெயர்ப்பாகப் பயன்படுத்தப்படுகிறது. “Tribe”என்பதன் மூலச்சொல் இலத்தீன் மொழியில் மூன்றில் ஒன்று (One-third)எனப் பொருளுடையது. அதாவது ரோம் நகரை மூவர் ஒன்று கூடி நிறுவினர் என்பதும் அதில் ஒருவரைக் குறிக்கப் பழங்குடி எனும் சொல் வந்ததென்பதும் வழக்காகும்.” என விளக்கம் தருகின்றனர். இனக்குழு மக்கள் என்றும், மலைவாழ் மக்கள் என்றும் ஆதிவாசி மக்கள் என்றும் இச்சொல்லுக்குத் தமிழில் வேறு மொழிபெயர்ப்புகள் உள்ளன. வெரியர் எல்வில், லூயிஸ் போன்றோர் “Tribe” எனும் சொல்லை நாகரீகத்தில் பின்தங்கியவர்கள் எனும் பொருளிலேயே பயன்படுத்துகின்றனர்.

     பழங்குடி மக்களைப் பூர்வீக குடிகள் என்றும், மூத்தகுடிகள் என்றும், பழங்குடி மக்கள் என்றும் கூறுவர். பழமையான வாழ்க்கைமுறையையும், குடி அமைப்பையும் கொண்டுள்ளதால் இச்சமூகத்தினை பழங்குடி என அழைத்திருக்கலாம். ஆதிவாசி (ஆதிக்குடிகள், மலைவாசிகள்) என்ற சொல்லானது மலைகளில் வசிக்கின்ற மக்களைக் குறிக்கக்கூடிய சொல்லாகும். பழங்குடி மக்கள் பொதுவாக மக்கள் தொடர்பின்றிக் காடுகளைச் சார்ந்து வாழ்பவர்கள். பிற சமூகத்தினர்களை சார்ந்து வாழ்பவர்கள் அல்லர். சுயச்சார்பை நம்பியே வாழும் இவர்கள் தாங்கள் சேகரித்த காட்டு வளங்களையும், பண்டங்களையும் விற்று தங்களின் வாழ்வாதாரத்தை நிறைவேற்றிக் கொள்பவர்கள். மரபு சார்ந்த தொழில்நுட்பம் கொண்டவர்கள்.

     முனைவர்.சு.இராஜேந்திரன் அவர்கள் தனது “முதுவர் இனப் பழங்குடிகள்” எனும் நூலில் சின்காவின் கருத்துக்களை மேற்கோள் காட்டி பழங்குடிகளை விளக்குகிறார். “தனிமையாக்கப்பட்ட உயிரின வாழ்க்கைச் சூழல்படியும், சமூக நிலைப்படியும், பொருளாதாரம், அரசியல் சூழல்படியும் மற்றவர்களிடமிருந்து வேறுபட்ட மனித இனக்குழுவே பழங்குடி” என்று கூறுகிறார். மேலும் எ.எ.டி.லூயிஸின் கருத்துக்களையும் சுட்டிக் காட்டுகிறார், “பழங்குடிகளிடம் இன்றுவரை இருந்துவரும் தனிச்சிறப்பு, பண்பாடு, பழக்கவழக்கம், இடம் விட்டு இடம் செல்லும் நாடோடித் தன்மை, நாகரீக வளர்ச்சியற்ற தன்மை, சமூகக் கட்டுப்பாடு, நாகரீகமடைந்தவர் வாழும் இடத்தை விட்டு மிகத் தொலைவில் வாழ்ந்து வரும் தன்மை, நாகரீக மனிதர்களை விட மாறுபட்ட தோற்றம், உடையமைப்பு, உணவுப்பண்பாடுகள் ஆகியவை பழங்குடிகள் எனும் கருத்திற்கு ஆக்கம் சேர்க்கும்” என்கிறார்.

     மேலும் உணவு சேகரிப்போர் மிகப் பழைய இனத்தவராகக் கருதப்படுகிறார். காரணம் வேளாண்மைத் தொழிலில் அறிமுகமும், அனுபவமும் பெறவில்லை. மாறாக காடுகளில் கிடைக்கும் கிழங்குகள், காய்கனிகள், தேன், மூங்கிலரிசி, புல்லரிசி போன்றவற்றை உணவுப் பொருட்களாகக் கொள்கின்றனர். மேலும் காடுகளில் கிடைக்கும் வாசனைத் திரவியங்களைச் சேகரித்து பணமாகவும், பண்டமாற்று முறையாகவும் பெற்றுக் கொள்கின்றனர். நிலைத்த இடத்தில் தங்காமல் மலைகளில் நீர்ப்பாங்கான இடம் நோக்கி மாற்றிக் கொள்வர்;.

     ‘தமிழகப் பழங்குடிகள்’ எனும் நூலில் பக்தவத்சல பாரதி அவர்கள் கீழ்க்கண்டவாறு கூறுகிறார். “பழங்குடி எனக் கூறப்படும் வகையினர் தமிழில் பல வகையாக அழைக்கப்படுகின்றனர். அதாவது அரசியல்வாதிகள் உள்ளிட்ட வெகுசனத்தார் பழங்குடிகளை ஆதிவாசிகள், காட்டுவாசிகள் எனவும், இலக்கியவாதிகள் மலையின மக்கள், மலைவாழ் மக்கள், தொல்குடி, முதுகுடி, ஆதிக்குடி, பூர்வகுடி எனவும், காந்தியவாதிகள் காந்தியின் அடியொற்றி ‘கிரிஜன்’ எனவும் குறிப்பிடுகிறார்கள்.

     கல்விசார் சூழலில் பழங்குடி பற்றிய சொல்லாட்சி வேறு வகையாக மாறுபடுகின்றது. எட்கர் தர்ஸ்டனின் ‘Caste and Tribes of Southern India’நூல் வரிசையினை மொழிபெயர்த்த பேராசிரியர்.க.ரத்னம் ‘குலங்களும் குடிகளும்’ எனவும், மார்க்கசியவாதிகள் ‘இனக்குழு’ எனவும், மானிடவியலாளர்கள் ‘பழங்குடி’ எனவும் கூறுகிறார்கள். மேலும் பழங்குடி என்போர் ஒரு படித்தான சமூகக் குழுவினராவர். பொதுவான இடமும், கிளை மொழியும் கொண்டிருப்பர். பொதுவான முகப்பாங்குடைய சமூக ஒழுங்கமைப்பைக் கொண்டவர்கள். சமத்துவ சமூக முறையைப் பேணுபவர்கள். ஒருபடித்தான பண்பாட்டு முறையைக் கொண்டிருப்பார்கள். பொதுவான மூதாதையரையும், பஞ்சாயத்து முறையையும், சமய நம்பிக்கை முறைகளையும் பின்பற்றுபவர்கள்” என்று பக்தவத்சல பாரதி கூறுகிறார்.(தமிழகப் பழங்குடிகள்பக்கம் எண். 38)

பழங்குடியினர் வகைகள்

     சமூகவியலரிஞர்கள் மொழியமைப்பு, பண்பாடு ஆகியவற்றின் அடிப்படையில் பழங்குடிகளைப் பாகுபடுத்துவர். ஒரு பழங்குடியினர் வாழ்விடம் மிகத் தொடக்க காலம் முதல் அவ்விடத்திலேயே காணப்படின் அப்பழங்குடி முதுப்பழங்குடி அல்லது தொல்பழங்குடி என்று அழைக்கப்படுகின்றனர்.

     “குற்றம் செய்வதை முதன்மைத் தொழிலாகக் கொண்டிருந்தவர்களைக் குற்றவாளிப் பழங்குடி (Criminal Tribe)என்றும், இத்தொழிலை விடுத்து வேறு தொழில்களில் ஈடுபட்டுள்ள இவர்கள் இன்றைய நிலையில் முன்னாள் குற்றவாளி பழங்குடிகள் (Ex-Criminal Tribe)எனவும் கூறுவர்”.

     “இந்தியாவின் ஜனத் தொகையில் 7% மக்கள் பழங்குடியினர் ஆவர். ஏறத்தாழ இருபது மில்லியன் பழங்குடியினர் இந்தியாவில் வாழ்கின்றனர். இவர்களைப் புவியியல் அடிப்படையில் மூன்று பழங்குடி தொகுதிகளாகப் பிரிக்கின்றனர். 1. வடகிழக்கு தொகுதி 2. மத்திய தொகுதி 3. தென்தொகுதி. வடகிழக்கு தொகுதி மேற்கில் சிம்லா, எலவர் பகுதிகளில் இருந்து கிழக்கில் லுஷாய் மலை, மிஷ்மி நிலப்பகுதி வரை பரவியுள்ளது. காஷ்மீர், கிழக்கு பஞ்சாப், இமாசலப்பிரதேசம், அசாம், சிக்கிம் ஆகிய இடங்களும் இதில் சேரும். இந்தப் பகுதியில் வாழும் பழங்குடிகள் சீனா, திபெத்தியன், பர்மியன் வகையைச் சார்ந்த மொழிகளைப் பேசுகின்றனர். பீகார், மேற்குவங்கம், உத்திரப்பிரதேசம், ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம், வடக்கு பம்பாய், ஒடிசா, மத்திய நிலப்பரப்பில் அடங்கும். இம்மத்தியப் பகுதிகளில் வாழும் பழங்குடியினர் ஆஸ்டிரிக் வகையைச் சார்ந்த மொழி பேசுகின்றனர். இம்மொழி உயிருள்ள, உயிரில்லாத பொருட்களையும் பாகுபடுத்திக் காட்டும். பால், வயது போன்ற பாகுபாடுகள் காட்டுவதில்லை. மத்தியப் பகுதியில் ஓராவன், கோலம், கோண்டு, காண்;ட் போன்ற பழங்குடியினர் திராவிட மொழியைச் சார்ந்த ஒரு வார்த்தைகளை உபயோகிக்கின்றனர்.

     ஐதாராபாத், மைசூர், கூர்க், திருவனந்தபுரம், கொச்சி, சென்னை, அந்தமான் நிக்கோபார் தீவுகளும் இதில் அடங்கும். இந்த மூன்று பூகோளப் பிரிவுகள் தவிர விரிவான ஆராய்ச்சித் தேவைகளுக்கென்று இமயமலை அடிவாரத்தில் வாழும் பழங்குடியினர் தென்பகுதியில் வாழும் பழங்குடியினர் என்று மேலும் இரண்டு பிரிவுகள் அடிப்படையிலும் நோக்கப்படுகிறார்கள்”. (ஆய்வாளர் பெயர்.சத்தியசீலா, ஆய்வேடு : பழங்குடியினர் பற்றிய தமிழக நாவல்கள்ஒரு மதிப்பீடு)

     தமிழகத்தில் பல்வேறு வகையான பழங்குடியினர் வாழ்கின்றனர். தேனி மாவட்டத்தில் பளியர், இருளர் ஆகிய பிரிவினரும், திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் பகுதிகளில் பளியர் பிரிவினரும் வாழ்கின்றனர். கோயமுத்தூர் மாவட்டத்தில் தோடர், கோத்தர், குறும்பர் ஆகிய பிரிவினர்களும் நீலகிரி மாவட்டத்தில் தோடர், படுகர், கோடர், பளியர் ஆகிய பிரிவினர்கள் வாழ்கின்றனர். தமிழகம் மற்றும் கேரளா எல்லைப் பகுதிகளில் படுகர், மலையாளிகள், தொதுவர்கள், முதுவான்கள், முடுகர் போன்ற பிரிவினர்கள் வாழ்கின்றனர்.

பழங்குடியினர் அறிமுகம்

முதுவான்கள்

“முதுவான் பற்றிக் கட்டுரை எழுதியுள்ள பல்குணன் அவர்கள், முதுவான்கள் தங்கள் குழந்தைகளைத் தொட்டிலில் இடுவதில்லை. முதுகிலேயே கட்டி வளர்க்கின்றனர். தாயின் முதுகிலேயே வளர்ந்தவர்கள், ஆதலால் ‘முதுவான்’ எனப் பெயர் ஏற்பட்டதாகக் குறிப்பிட்டுள்ளார். மேலும் எங்கள் முன்னோர்கள் மதுரையில் வாழ்ந்து வந்தனர். அங்கு கொடிய பஞ்சம் ஏற்படவே மதுரையை விட்டு வெளியேறி காடுகளையும், மலைகளையும் கடந்து நல்ல இடம் நோக்கி அலைந்தனர். அவ்வாறு அலையும் போது ஓர் ஆற்றைக் கடக்கவே, கூடவே வந்து கொண்டிருந்த ‘தம்பிரான்கள்’ என அறியப்படும் மன்னரை முதுகிலேற்றி ஆற்றைக் கடந்தனர். எனவே ஆனந்தமடைந்த மன்னர் ‘என்னை முதுகில் இருத்தி ஆற்றைக் கடத்தியதால் உங்களுக்கு ‘முதுவான்’ என்ற பட்டத்தைத் தருகின்றேன்’ என்றார். (தகவலாளர் பெயர்மல்லியப்பன், இடமலக்குடி)

     “பல நூற்றாண்டுகளுக்கு முன் எங்கள் முன்னோர்கள் மதுரையில் வாழ்ந்து வந்தனர். பாண்டிய ராஜா கண்ணகிக்கு ஒரு தவறிழைக்க, அத்தவறைப் போக்க மதுரை மீனாட்சி அம்மனுக்குப் பாண்டிய ராஜா காணிக்கையாக ஆயிரம் திருவிளக்கேற்றி வைக்கவே மதுரை தீக்கிரையானது. பாண்டிய ராஜா உயிர் துறந்தார். மதுரையில் வாழ விரும்பாத எங்கள் முன்னோர் காடுகளையும் மலைகளையும் கடந்து கேரளத்திலுள்ள ‘பெரியாற்றுக் கடவு’ எனும் இடத்தை வந்தடைந்தனர். கூடவே மதுரையைத் தீக்கு இரையாக்கிவிட்டு நடக்க முடியாமல் வந்து கொண்டிருந்த கண்ணகியை முதுகில் ஏற்றி வந்தனர். எனவே கண்ணகி தன்னை முதுகிலே சுமந்ததால் “முதுவான்” என்ற பட்டத்தைக் கொடுத்தாள்’’. (தகவலாளர் பெயர்புதுக்குடித் தலைவர் துரைசாமி முதுவான் வயது – 56, நூலாசிரியர் : முனைவர்.சு.இராஜேந்திரன். நூல்  – முதுவர் இனப் பழங்குடிகள்)

     “முதுவான் பழங்குடியினர் பாண்டியர் வம்சத்தை சார்ந்தவர்கள் என்று கூறிக் கொள்வது ஒரு முக்கியமான வினாவினை எழுப்புகிறது. இருப்பினும் பாண்டியர் வரலாற்றையும் இம்மக்களின் வாய்மொழி வரலாற்றையும் ஒப்பிட்டு நோக்கும் போது ஒரு வரலாற்றை அறியமுடிகிறது. அதாவது சடையவர்மன் பராந்தகனால் (கி.பி. 11 – 12) தொடங்கி வைக்கப்பட்ட தெய்வ வழிபாட்டினை இப்பழங்குடிகள் இன்றும் கொண்டாடி வருகின்றனர். பாண்டியருடைய குல தெய்வமாகிய கன்னிப் பார்வதிக்கு ஆண்டுதோறும் தைப்பூசை விழா நடத்துவதற்கும், அவ்விழாவிற்கு வரும் அடியார்களை உண்பிப்பதற்கும் பொருளுதவி புரிவதற்கும் நிவந்தமாகப் புறத்தாய நாடு முழுவதையும் சடையவர்மன் பராந்தகன் வழங்கியுள்ளான் என்ற செய்தி முக்கியமானதாகும்”. (நூலாசிரியர் : முனைவர்.சு.இராஜேந்திரன். நூல்  – முதுவர் இனப் பழங்குடிகள்)

குறும்பர்கள்

     இச்சமூகத்தினர்கள் நீலகிரி மாவட்ட மலைத் தொடர்களில் வாழ்ந்து வருகின்றனர். முக்கியத் தொழில் தேன் எடுப்பது. இவர்களின் குடியிருப்புகள் பெரும்பாலும் நீர்ப்பாங்கான இடத்தில் அமைத்துக் கொள்வர். குறிப்பாக குறும்பர்கள் மலைகளில் விளையும் பொருட்களை வைத்து மருத்துவம் பார்த்துக் கொள்ளும் வழக்கத்தினை கொண்டவர்கள் ஆவர். இச்சமூகத்தினரிடம் இணைந்து அல்லது நட்பாக உள்ள கோத்தர், படுகர் ஆகிய இனக்குழுவினர் குறும்பர்களிடமிருந்து மருத்துவமுறையை கற்றுக் கொண்டுள்ளனர்.

இருளர்கள்

     இருளர்கள் பெரும்பாலும் அடர்ந்த காடுகளில் இருள் சூழ்ந்த பகுதிகளிலேயே தங்களின் வீடுகளை அமைத்துக் கொண்டுள்ளனர். அதனால் இருளர்கள் என்கிற பெயர் அமைந்ததாக கூறப்படுகின்றது. இருளர்கள் கோயம்புத்தூர் மாவட்டத்தில் அதிகமாக வாழ்கின்றனர். மேலும் நீலகிரி, தேனி, விருதுநகர் மாவட்டங்களிலும் வாழ்கின்றனர். இவர்களின் தொழில்கள் தேன் எடுத்தல், கூடைமுடைதல், வேட்டையாடுதல், ஆடு மாடு மேய்த்தல் ஆகும்.

படுகர்

     படுகர்கள் நீலகிரி மாவட்டத்தில் குன்னூர், ஊட்டி போன்ற பகுதிகளில் பெரும்பான்மையாக வாழ்ந்து வருகின்றனர். இவர்களின் தொழில்களாகத் தேன் எடுத்தல், தேயிலைத் தோட்டத்தில் வேலை பார்ப்பது மற்றும் இதர கூலிவேலைகளைச் செய்து வருகின்றனர். தோடர், கோடர் ஆகிய இனத்தினர் நீலகிரிக்கு வருவதற்கு முன்பே படுகர்கள் நீலகிரியில் வாழ்ந்து வந்துள்ளனர். இச்சமூகத்தினர்கள் சூரியனையும், இயற்கையும் தெய்வமாக வழிபடுகின்றனர். மேலும் தங்களது பிறப்பு முதல் இறப்பு வரையிலான சடங்குசார் சூழல்களில் கூத்து, நடனம், இசைக்கு முக்கியத்துவம் கொடுத்து நிகழ்த்துகின்றனர்.

தோடர்கள்

     “தோடர்கள் நீலகிரி மாவட்டத்தில் உதகமண்டலம், குன்னூர் ஆகிய வட்டங்களில் மட்டுமே வாழ்கின்றனர். இவ்வட்டங்களிலேயே மிக உயர்ந்த மலைகள் காணப்படுகின்றன. தோடர்கள் மிக உயர்ந்து விளங்கும் மலைப் பகுதிகளில் குளிர்மிக்க இடங்களில் வாழ்கின்றனர். இம்மக்கள் உருவமற்ற தெய்வத்தை வணங்குகின்றனர். இவர்கள் வாழ்க்கை எருமைகளை ஒட்டியே அமைகிறது. பஞ்சபாண்டவர்கள் வம்சம் என்பதற்கேற்ப ஒரு பெண்ணைப் பல ஆடவர்கள் மணக்கின்ற வழக்கம் இவர்களிடம் உண்டு. தோடர்கள் மேய்ச்சல் தொழிலைக் கொண்டவர்கள்” (ஆய்வேடுபழங்குடியினர் பற்றிய தமிழ் நாவல்கள் ஒரு மதிப்பீடு, ஆய்வாளர் : .சத்தியசீலா)

கோத்தர்கள்

     “கோத்தர்கள் கீழ் கோத்தகிரி (கினார்ட் கோகால்), கோத்தகிரி (போர்காட் கோகால்), கொல்லிமலை (கொல்லிமேல் கோகால்), திருச்சிகடி கோகால் (திரிக்காட் கோகால்), குந்தா (மேக்னாட் கோகால்), சோலூர் கோகால் (குர்கொஜ் கோகால்), கூடலூர் கோகால் (கல்காச் கோகால்) ஆகிய ஏழு இடங்களில் வாழ்கின்றனர். கோத்தர்கள் வாழும் ஊர்களுக்கு ‘கோக்கால்’ என்ற மறுபெயரும் உண்டு. இடைப்பட்ட மலைப்பகுதிகளில் நீரோடை அமைந்துள்ள பசும்புல் நிறைந்த பகுதிகளில் இவர்கள் குடியிருப்பு இருக்கும். இக்குடியிருப்பைச் சுற்றியே தோட்டங்களும் அமைந்திருக்கும். இவர்களின் தொழில் விவசாயம். இவர்கள் கிழங்கு வகைகள், காய்கறிகளைப் பயிர் செய்வர். தற்போது பணப் பயிரான தேயிலை, காப்பி பயிரிடுவார்கள். அய்யனூர், அம்மனூர் எனும் உருவமற்ற சாமிகளே கோத்தர்களின் குல தெய்வங்களாகும். ஒரு சேரியில் (குடியிருப்பு வரிசை) வாழ்பவர்கள், மற்றொரு சேரியில் தான் திருமணம் செய்து கொள்கின்றனர். வயதான பெரியவர்கள் தங்கத்தாலான கடுக்கண் போன்ற அணியை அணிந்துள்ளனர்”. (ஆய்வேடுபழங்குடியினர் பற்றிய தமிழ் நாவல்கள் ஒரு மதிப்பீடு, ஆய்வாளர் : .சத்தியசீலா)

பளியர்கள்

     பளியர்கள் பல்வேறு மாவட்டங்களில் வசித்து வருகின்றனர். தேனி, கோயம்புத்தூர், விருதுநகர், நீலகிரி ஆகிய மாவட்டங்களில் குறுகலாகவும், பரவலாகவும் வாழ்ந்து வருகின்றனர். ‘பழையர்’ என்ற சொல்லே மருவி பளியர் என்றானது என்கிற சொல் வழக்கில் இருந்து வருகின்றது. மேற்குத்தொடர்ச்சி மலைகளின் அடிவாரத்தில் அதிகமாக வாழ்ந்து வருகின்றனர். இவர்களின் தொழில் தேன் எடுத்தல், காவல் காத்தல், கிழங்கு விளைவித்தல், விளைகின்ற தாவரங்களுக்கு காவல் காத்தல் போன்ற தொழில்களைச் செய்கின்றனர். மேலும் மலைகளில் விளைகின்ற மூலிகைச் செடிகளைக் கொண்டு கைமருத்துவம் தொழிலையும் செய்கின்றனர்.

மலையாளிகள்

     “கொல்லிமலையின் மலை மக்கள் மலையாளிகள். இப்பெயர் கேரளத்தவரைக் குறிப்பதன்று. ஒரு ஆதிவாசிப் பிரிவின் பெயர். மலையாளிகளுக்கு தர்மகர்த்தா தான் நீதி உரைக்கும் தலைவராவார். இம்மக்களிடம் பெண்களுக்கு ஆண்கள் சீதனம் கொடுக்க வேண்டும். சில சந்தர்ப்பங்களில் பெண் வீட்டிலே மாப்பிள்ளைக்கு பாடுபட்டு வரவேண்டுமென்று நிபந்தனைகளும் உண்டு. பாலியலில் ஒரு நெறியான போக்கு இல்லை. ஒரு பெண் பல ஆண்களை மணக்கலாம். பெண் வீட்டார் இந்த மாப்பிள்ளைக்கு இந்தப் பெண்ணைக் கொடுப்பதாக மண்ணைத் தொட்டு சத்தியம் செய்து கொடுக்கிறார்கள். மண் தான் இவர்களுக்கு முதல் தெய்வம். இவர்கள் வாழ்வில் மண்ணிற்கு கொடுத்த முக்கியத்துவத்தை அறிய முடிகிறது”. (ஆய்வேடுபழங்குடியினர் பற்றிய தமிழ் நாவல்கள் ஒரு மதிப்பீடு, ஆய்வாளர் : .சத்தியசீலா)

தொதுவர்கள்

     நீலகிரி மாவட்டத்தில் தொதுவர்கள் பெரும்பாலும் கடவுள் நம்பிக்கையோடும், சமய நம்பிக்கையோடும், கால்நடை மீது நம்பிக்கை கொண்டவர்களாக உள்ளனர். கால்நடைகளில் ஒன்றான எருமை மாட்டினை புனிதக் குறியீடாகக் (Totem) கொண்டுள்ளனர். எருமை மாட்டின் பாலினை புனிதப் பாலாக நினைத்து தங்களது குழந்தைக்கு ஊட்டுகின்றனர். இறப்புச் சடங்கின் போது இறந்தவர்களை எரிக்கும் வழக்கத்தினைக் கொண்டுள்ளனர். மேலும் இறந்தவர்களுக்கு எருமை மாட்டினைப் பலிகொடுக்கும் சடங்கினையும் நிகழ்த்தி வருகின்றனர்.பிறப்பு முதல் இறப்பு வரையிலான அனைத்து வாழ்வியல் சடங்குகளிலும் எருமை மாடு என்பது குலக் குறயீடாக விளங்குவதை அறிய முடிகிறது.

சார்ந்தால்

     இந்தியப் பழங்குடியினரில் மிக முக்கியமான பழங்குடியினராகப் பேசப்படக்கூடிய இனமாகும். இந்திய விடுதலைப் போரில் இச்சமூகத்தினர்கள் ஆங்கிலேயர்களை எதிர்த்து போரிட்ட வரலாறுகள் ஏராளமாக உள்ளன. மிகப்பெரும் போர் வீரர்களாக இருந்துள்ளனர். தொல்குடி சமூகத்தினராவர். பழமையான பண்பாட்டு அமைப்புகளை பெரிதும் பின்பற்றுபவர்களாவர். இயற்கையை வணங்கினார்கள். குறிப்பாக ஆலமரம், அரசமரம், புளியமரங்களைத் தெய்வமாக வழிபட்டனர். மூதாதையர் வழிபாட்டில் அதீதமான நம்பிக்கையுடையவர்கள் ஆவர். இச்சமூகத்தினர்கள் இந்தியாவில் மேற்குவங்கம், பீகார், ஒடிசா மாநிலங்களில் வாழ்கின்றனர்.

பழங்குடியினரின் வழிபாடும் பொருளாதாரமும்

     தமிழகத்தில் மலைப் பகுதிகளில் வாழ்ந்து வருகின்ற பழங்குடியினர்கள் அனைவரும் இயற்கையையும், இயற்கையின் வெளிப்பாடாக விளங்குகின்ற மலைகள், மரம், செடிகள், விலங்குகள், சூரியன், பறவைகள் ஆகிய அனைத்துக் கூறுகளையும், விழுமியங்களையும் தெய்வங்களாக, முன்னோர்களாக நினைத்து வழிபடும் பழக்கவழக்கங்கள் இன்றும் நிலவி வருகின்றது.

மேலும் குலதெய்வ வழிபாடான முன்னோர் வழிபாடும் ஒருசில இனக் குழுவினர்களிடம் காணப்படுகிறது. மேலும் அனைத்து இனக்குழுக்களும் தங்களைத் தாங்களே சார்ந்து சுயச்சார்போடு வாழ்ந்து வருவது குறிப்பிடத்தக்கதாகும். சமவெளிப் பகுதிகளில், நகரப் பகுதிகளில் வாழ்ந்து வரும் மனிதர்களோடு பெரும்பாலும் விலகியே வாழ்ந்து வருகின்றனர். ஒரு சிலப் பண்டமாற்று முறைகளை மட்டுமே குறைந்தளவில் செய்து வருகின்றனர். குறிப்பாக தேன் எடுத்தல், ஆடு மாடுகளை வளர்த்தல், கூடை பின்னுதல், மூலிகை மருத்துவம் செய்தல் போன்ற தொழில்களை மட்டும் பரவலாகச் செய்கின்றனர். இத்தொழில்களை மட்டும் பிற சமூகத்தினரோடு கொடுக்கல் வாங்கல் அல்லது பண்டமாற்று முறை மற்றும் ஒருசில பொருட்களுக்குப் பணம் பெறுதல் போன்றவற்றைச் செய்து கொள்கின்றனர். பழங்குடியினர்கள் பெரும்பாலும் பொருளாதாரத்தில் பின்தங்கிய நிலையில் தான் இன்றளவும் வாழ்கின்றனர். இந்திய அரசு ஏராளமான நலத்திட்டங்களையும், உதவிகளையும் வழங்கி வருவதால் ஓரளவிற்கு கல்வியறிவு பெற்றுள்ளனர். இருப்பினும், அனைத்து சலுகைகளும் முழுமையாக பெற வேண்டும். மேலும் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள், மானிட செயற்பாட்டாளர்கள், மனித உரிமை கழகத்தினர் உதவிக்கரம் நீட்ட வேண்டும்.

பழங்குடியினர் வரையறைகள்   

  1. மலைகளில் வாழக்கூடியவர்கள்
  2. தனித்த மொழியமைப்புகள்
  3. பழமையைப் பின்பற்றுபவர்கள்
  4. இயற்கையை கடவுளாக வணங்குவர்
  5. புலங்கு பொருள் பண்பாடு குறைவு
  6. மரபுவழி மருத்துவ முறைகளைப் பின்பற்றுபவர்கள்
  7. ஆண், பெண் சரிநிகர் சமத்துவத்தைப் பின்பற்றுபவர்கள்
  8. பண்டமாற்று முறையைப் பின்பற்றுபவர்கள்
  9. கூட்டுப் பண்பாடுடையவர்கள்
  10. முன்னோர் வழிபாடு பின்பற்றல் உடையவர்கள்
  11. வில் அம்பு, சிறிய கத்தியை வைத்து வேட்டையாடுபவர்கள்
  12. நாகரீகத்தையும், நகரத்தையும் விரும்பாதவர்கள்
  13. தேன், கிழங்கு வகைகள், சிறிய பறவைகளை வேட்டையாடுதல், மரபுவழி மருத்துவம் போன்றவை பிரதான தொழில்களாகும்.
  14. சொந்த வீடு இருக்கும்.
  15. ஒழுக்கத்தைப் பேணுபவர்கள்
  16. சிறுசிறு இசைக்கருவிகள் இசைப்பர்.
  17. குழு நடவடிக்கைகள், குழுவில் தலைமைப் பண்புகள் கடைபிடிப்பர்.
  18. காடுகளை நேசிப்பவர்களாய் இருப்பர்.
  19. காடுகளையும், பறவைகளையும், விலங்குகளையும் சுற்றுப்புறங்களை நேசிப்பவர்களாக இருப்பர்.
  20. காடு ஆறுமாதம், நாடு ஆறு மாதம் என அலைந்து திரியாமல் காடுகளில் வாழ்வர்.
  21. சுற்றுப்புறங்கள் குறித்து கணிப்புகள் அதிகமாக கொண்டிருப்பர்.
  22. இறந்தவர்களை எரிக்கும் வழக்கம் பெரும்பாலும் கொண்டிருப்பர்.
  23. பழங்குடியினர், மலைவாசிகள், ஆதிவாசிகள் இம்மூன்றும் ஒரே பெயரைக் குறிப்பதாக வாழ்பவர்கள். இவர்கள் நாடோடிகள் அல்லர்.
  24. பொதுவான மொழி, சமூக அமைப்பு, பண்பாடு, பழைமையைப் பேணுதல்.
  25. இந்தியாவில் பல்வேறு வகையான பழங்குடி இனமக்கள் வாழ்கின்றனர். பல்வேறு விதமான இனமாக இருந்தாலும் அடிப்படையாக உணவு, உடை, இருப்பிடம் போன்றவற்றில் ஒன்றுபட்டுள்ளனர். ஒருசில பழக்கங்கள் மட்டும் மாறுபடுகின்றன.
  26. இந்தியாவில் 7% பழங்குடி மக்கள் வசிக்கின்றனர்.
  27. தமிழ்நாட்டில் பல்வேறு வகையான பழங்குடிகள் வாழ்கின்றனர். இவர்களில் குறிப்பிடத்தக்க இனத்தவர்களாக இருளர், பளியர், குறும்பர், தோடர், முதுவர், படவர், கோத்தர், கோடர், மலையாளி போன்ற பழங்குடிகள் குறிப்பிடத்தக்கவர்கள். இப்பழங்குடிகள் தமிழகத்தில் நீலகிரி மாவட்டத்தில் அதிகமாக வாழ்கின்றனர்.

நாடோடிகள் அறிமுகம்

     நாடோடிகள் என்பதற்கு தமிழில் பொருள் கொள்ள வேண்டுமெனில் நாடற்று அலைந்து திரிபவர்கள் என்று பொதுவில் புரிந்து கொள்ளலாம். ஆனால்,‘Gypsy’என்ற சொல்லிற்கு ஐரோப்பா மற்றும் சில பகுதிகளில் ரோமன் மொழி பேசிக்கொண்டு ஓரிடத்தில் தங்காமல் பயணம் செய்து கொண்டிருப்பவர்கள் என்று ஆங்கில அகராதிகள் பொருள் கொள்கிறது. மேலும் ஜிப்சி என்ற வார்த்தை எகிப்து மொழியில் இருந்து உருவானதாகும். காரணம் ஜிப்சிகள் எகிப்து தேசத்திலிருந்து வந்தவர்கள் என்று நம்பப்படுகிறது. ஆகவே தான் நாடோடிகள் என்ற தமிழ்ச் சொல்லிற்கு‘Gypsy’ என்ற ஆங்கிலச் சொல் பொருத்தமானதல்ல என்று கூறப்படுகிறது.

     ஆங்கிலத்தில் நாடோடியாய்ச் சுற்றுபவர்களுக்கு பலவிதப் பெயர்களும், பட்டங்களும் உண்டு.

 Nomadsகால்நடைகளுக்கு மேய்ச்சல் தேடிப் பயணம் செய்து கொண்டேயிருப்பவன்.
 Vagrantவீடும், வேலையும் இல்லாத நபர்
 Itinerant Personஇடம் விட்டு இடம் செல்பவன்
 Rovingஅலைந்து கொண்டே இருப்பவன். இலக்கின்றி பயணம் செய்பவன். குறிக்கோளின்றி பயணம் செய்பவன்.

     தமிழகத்தில் நாடோடிக் குழுக்களாக சாட்டையடிக்காரர்கள், பாம்பாட்டிகள், குடுகுடுப்பைக்காரர்கள், குறளிவித்தைக் காரர்கள், தோல்பாவைக் கூத்தினர், பூம்பூம் மாட்டுக்காரர்கள், நாழிமணிக்காரர்கள், நரிக்குறவர்கள், குரங்காட்டிகள், ஜங்கமபண்டாரம், லம்பாடிகள், கிளி ஜோசியக்காரர்கள், பன்றிக்குளுவினர், மணியாட்டிக்காரர்கள், மண்டிகர், குறவர் ஆகியோர் உள்ளனர். மேற்குறிப்பிட்ட இனக்குழுவினர்கள் அனைவரும் மலைகளிலோ அல்லது காடுகளிலோ வசிக்கவில்லை. இவர்கள் சமவெளிப் பகுதிகளில் வாழ்கின்றனர். இக்குழுக்கள் அனைவரும் தமிழகத்தையும், தமிழையும் பூர்வீகமாகவும், தாய்மொழியாகவும் உடையவர்கள் அல்லர். மாறாக நூற்றுக்கு 90 சதவீதத்தினர் தெலுங்கு மொழியைத் தாய் மொழியாகவும், ஆந்திராவைப் பூர்வீகமாகவும் கொண்டுள்ளனர். நரிக்குறவர்கள் மட்டும் தங்களை ‘வீர சிவாஜி’யின் வம்சம் என்றும் மராத்தி மொழியை தாய்மொழியாகவும், மகாராஷ்டிராவை பூர்வீகமாக கொண்டவர்கள் என்று கூறப்படுகின்றது.

     மேற்குறிப்பிட்ட மக்கள் தமிழகத்தில் மதுரை, விருதுநகர், இராமநாதபுரம், சென்னை, விழுப்புரம், கடலூர், திருச்சி, கோயம்புத்தூர், சேலம், தருமபுரி, தேனி, திண்டுக்கல், நாமக்கல் போன்ற ஊர்களில் பரவலாக வசித்து வருகின்றனர்.

     மேலும் நாடோடிகளைப் பற்றி கூர்ந்து நோக்கும்பொழுது நாடோடிகள் என்பவர்கள் காட்டாற்று வெள்ளம் போன்றவர்கள். குறிக்கோள் இன்றி சுற்றுபவர்கள். குறிக்கோள் இன்றி சுற்றுபவர்களை ஆங்கிலத்தில் ‘Meander’என்ற வார்த்தையைப் பயன்படுத்துகின்றனர். மேற்கண்ட வார்த்தையானது துருக்கி தேசத்தில் கரைபுரண்டு ஓடும் மியாண்டர் நதியிலிருந்து வந்த பெயராகும். காரணம் எதற்கும் கட்டுப்படாத நதியாய் நாடோடிகள் போய்க் கொண்டே இருந்தனர். நாடோடிகள் கட்டுத்தறி இல்லாத காளைகளாய், கடிவாளமில்லாத குதிரைகளாய் அலைந்து திரிந்திட முக்கியக் காரணம் நாகரீகங்களின் வளர்ச்சியில் உருவான (Growth of Civilisation)முறைபடுத்தப்பட்ட அரசுகளை அவன் விரும்பவில்லை. இவை தான் உலகளாவிய நாடோடிகளின் தோற்றமும், சொல்லாடலும் ஆகும்.

சங்க இலக்கியத்தில் நாடோடிகள்

     பண்டைத் தமிழகத்தில் வாழ்ந்த பாணர், விரலியர் நாடோடி வகையைச் சேர்ந்தவர்களாகவோ, அல்லது நாடோடித் தன்மையை உள்வாங்கியவர்களாகவோ இருப்பதற்கு வாய்ப்புகள் உண்டு. காரணம் அன்று அவர்கள் ஐந்திணைகளாலும் நடமாடி மக்களை மகிழ்வித்து வந்துள்ளனர். பாட்டும், கூத்தும், இசையும், அவர்களது நாடோடி வாழ்வின் மண்மகுடங்கள் ஆகும். சங்க காலத்தில் அவர்கள் உயர்ந்த நிலையில் வைத்து மதிக்கப்பட்டனர். அவர்களை மக்கள் ஒதுக்கியோ, தாழ்த்தியோ, நடத்தாமல் அன்பாய் அரவணைத்து வந்துள்ளனர் என்பதற்கு இலக்கியச் சான்றுகள் ஏராளம் உண்டு. அக்காலத்தில் இசைக்கருவிகள் பயன்படுத்தப்பட்டதற்கும் இலக்கியத்தில் இடமுள்ளது. எ.கா. யாழ், பறை (முல்லை நிலத்தில் வாழ்ந்த இடையர், இடைச்சியர்) நாடோடி வாழ்க்கை வாழ்ந்துள்ளனர். அவர்கள் புல்லாங்குழல் என்ற இசைக்கருவியைப் பயன்படுத்தியுள்ளனர். ஓரிடத்தில் நிலையாய் தங்காமல் இடம் விட்டு இடம் நகர்ந்து கொண்டே இருந்தனர்.

     மேலும் தமிழக வரலாற்றில் நீங்கா இடம் பிடித்துள்ள சித்தர்களும் ஒருவகை நாடோடி தன்மையை உள்வாங்கியவர்கள் ஆவர். இவர்கள் நாடோடிகளாய் வாழ்ந்துகொண்டே மனிதகுல மேம்பாட்டுக்காய் சித்தர்கள் ஆற்றிய தொண்டுகள் ஏராளம். மருத்துவம், தத்துவம், ஓகக்கலை (யோகா) நன்னெறி என்று அவர்கள் படைத்த சாதனைகள், சரித்திரங்கள் ஆகும்.

     அதே போன்று பண்டையக்காலத்தில் குறிஞ்சி நிலத்தில் வாழ்ந்த குறவன், குறத்தி பிரிவினர்களும் நாடோடிகளாய் மற்ற பகுதிகளில் சுற்றித் திரிந்து ஆடல், பாடல், ஆருடம் சொல்லுதல் என வாழ்ந்து வந்துள்ளனர். இவை உள்ள நாடோடித் தன்மைகள் என்பதற்கான மேலோட்டமான வரையறையாகும்.

நாடோடி தன்மைகளும், பண்பாடுகளும்

  1. நாடோடிகள் யாரையும் அடக்கவும் மாட்டார்கள், யாருக்கும் அடங்கவும் மாட்டார்கள்.
  2. நாடோடிகளில் குடும்பங்கள் இருக்கலாம். ஆனால் அவர்களிடத்தில் குழு அல்லது கூட்டம் தான் முதன்மையானது.
  3. நாடோடிகளில் தலைமை இருக்கும். ஆனால் அதே நேரத்தில் சமத்துவம் இருக்கும்.
  4. சொந்த வீடு, சொந்த ஊர், முகவரி இருக்காது.
  5. தனித்த மொழி
  6. ஆண், பெண் சரிநிகர் சமம். பெண்ணடிமைத் தனம் மிகவும் குறைவு.
  7. பிற மக்களை சாதி, மத, இனம் அடிப்படையில் இழிவாகப் பார்க்கும் மேட்டிமைத்தனம் இருக்காது.
  8. வளர்ச்சிபெற்ற நவீன கால சமூகத்தோடு ஒன்றரக் கலக்க இயலாமல், விலகிச் சென்று தனித்து வாழ்பவர்கள்.
  9. இசைக்கருவியோடு தொடர்புடையவர்களாக இருப்பார்கள்.
  10. இறந்தவர்களைப் புதைக்கும் வழக்கமும், திருமணச் சடங்கில் கருகமணி அணியும் பழக்கமும் இருக்கும்.
  11. வானமே கூரையாய் கால்போன போக்கில் செல்வார்கள்.
  12. குறிப்பாக தன்னுடைய சிந்தனையில் கூட அடுத்தவனுக்கு தீங்கு நினைக்காதவன் தான் நாடோடியாய் இருப்பான்.


நாடோடிகளின் சாதியும் தொழிலும்

நாடோடிச் சமூகத்தில் பலவகையான பிரிவுகள் உள்ளன.

நரிக்குறவர்கள்:இச்சமூகத்தினர் வேட்டைத் தொழில், ஊசி பாசி விற்றல், கூலித்தொழில் செய்து வருகின்றனர்.
தொம்பர்கள்:இச்சமூகத்தினர் கழைக்கூத்தாடிகள் என்று அழைக்கப்படுவர். கயிற்றுமேல் நடந்து ஒருசில வித்தைகள் செய்பவர்கள் ஆவர்.
குடுகுடுப்பைகாரர்கள்:இச்சமூகத்தினர் இரவு நேரத்தில் குறிசொல்லும் தொழில் செய்பவர்கள் ஆவர்.
சாட்டையடிக்காரர்கள்:இச்சமூகத்தினர் பேருந்து நிலையம், இரயில் நிலையம் போன்ற இடங்களில் தங்களைத் தாங்களே சாட்டையால் அடித்துக் கொண்டு உறுமி என்ற இசைக்கருவியை இசைத்து யாசகம் பெறுவார்கள்.
பூம் பூம் மாட்டுக்காரர்கள்:இச்சமூகத்தினர் மாட்டை அலங்கரித்து கையில் சேகண்டி என்ற இசைக்கருவியை இசைத்து தொழில் செய்கின்றனர்.
பாம்பாட்டிகள்:இச்சமூகத்தினர் பாம்பு பிடித்தல் தொழிலைச் செய்து வருகின்றனர். ஒருசிலர் மூலிகை மருந்தும் தயாரிப்பார்கள்.
குறளி வித்தைக்காரர்கள்:இச்சமூகத்தினர் தெருமுனையில் நின்றுகொண்டு யாராவது கூட்டத்திலிருந்து போனால் இரத்தம் கக்கி செத்து விடுவீர்கள் என்று மிரட்டி பணம் பெறுவார்கள் ஆவர்.
குரங்காட்டிகள்    :இச்சமூகத்தினர் குரங்கை வைத்து வித்தை காட்டுவார்கள்.
நாழிமணிக்காரர்கள்:இச்சமூகத்தினர் கையில் ஆலயமணியை வைத்து கடைகளுக்குச் சென்று சாம்பிராணிப் புகை போடுவார்கள்.
ஜங்கம பண்டாரம்  :இச்சமூகத்தினர் சில தெய்வங்களைப் போல முகப்பூச்சு செய்து கதை சொல்வார்கள்.
சாதிப்பிள்ளை:இச்சமூகத்தினர் பித்தளைப் பாத்திரங்களுக்கு ஈயம் பூசுவார்கள்.
லம்பாடி:இச்சமூகத்தினர் உப்பு விற்கும் தொழில் செய்வர்.
பண்டாரம்:இச்சமூகத்தினர் சங்கு ஊதுதல், ஜோசியம் பார்த்தல் தொழில் செய்வர்
குளுவர்:இச்சமூகத்தினர் பன்றி மேய்த்தல், பாம்பு பிடிக்கும் தொழில் செய்து வருகின்றனர்.

முடிவுரை

     தமிழகத்தில் நாடோடித் தன்மைகள் கொண்டவர்கள். அனைவரையும் நாடோடிகள் என்று சொல்ல இயலாது. அவர்கள் நாடோடித் தன்மையை உள்வாங்கியவர்கள் என்று தான் பொருள்படும். அதேபோல் தமிழகத்தில் வாழும் மொழிச் சிறுபான்மையினரையும் நாடோடிகள் என்று சொன்னால் அது வரலாற்றுப் பிழையாகிவிடும். ஆனால் நாடோடிகள் என்பவர்கள் இன்றைய எந்திரத்தனமான சுயநல உலகில் அன்பையும், ஒற்றுமையையும், பறை சாற்றுவதோடு, அழிந்து போன பண்பாடுகள், கலைகளின் எச்சங்களாய் உலவி வருகிறார்கள். கூட்டு உழைப்பு, கூட்டு வாழ்வு, ஒருமித்த சிந்தனை, பொது நல நோக்கு போன்றவை நிலவிய பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட புராதன சமூகத்தை (Primitive Society) நினைவுறுத்தும் நடமாடும் பல்கலைக்கழகங்கள் தான் நாடோடிகள் என்றால் அது மிகையாகாது.

     தமிழக மலைப்பகுதிகளிலும், காடுகளிலும் வாழ்ந்து வருகின்ற பழங்குடியினருக்கென்று தனித்த குறியீடுகளும், அடையாளப் பண்புகளும், பழமை வாதமும், இன்றளவும் மிகவும் குறிப்பிடத்தக்கதாக போற்றப்படுகின்றது. மேலும் காடுகளையும், மலைகளையும், விலங்குகளையும், பறவைகளையும், சுற்றுப்புறங்களையும் பேணிக் காப்பதில் பழங்குடிகளுக்கு நிகர் பழங்குடிகளேயாவர். காடுகள் பற்றிய அறிவும், மலை மற்றும் மழை பற்றிய புரிதலும் விலங்குகள், பறவைகள் பற்றிய அறிவுக்கூர்மை மற்றும் அனுபவத் தன்மை பழங்குடியினரிடத்தே அதிகம் என்பதே நிதர்சனம்.

துணைநின்ற நூல்கள்

 ஆசிரியர்:பக்தவத்சல பாரதி
 நூல் :பண்பாட்டு மானிடவியல் மெய்யப்பன் பதிப்பகம். 2003.  
 ஆசிரியர்:முனைவர்.சு.இராஜேந்திரன்
 நூல்:முதுவர் இனப் பழங்குடியினர் சேகர் பதிப்பகம். 2008.  
 ஆசிரியர்:வி.என்.சாமி
 நூல்:விடுதலைப் போரில் பழங்குடி மக்கள் சுவாமி நிலையம் பதிப்பகம். 2005.  
 ஆசிரியர்:M.முருகேசபாண்டியன்
 நூல்:குடுகுடுப்பைக்காரர் வாழ்வியல் உயிர்மை பதிப்பகம். 2009.  
 ஆசிரியர்:பக்தவத்சல பாரதி
 நூல் :தமிழர் மானிடவியல் அடையாளம் பதிப்பகம். 2008.  
 ஆசிரியர்:இ.சத்தியசீலா
 நூல்:பழங்குடியினர் பற்றிய தமிழ் நாவல்கள் ஒரு மதிப்பீடு. 2004.  
 ஆசிரியர்:கே.ஏ.குணசேகரன்
 நூல்:நீலகிரி மலையின மக்கள் ஆட்டங்கள் அமுதா அச்சகம். 1989.  
 ஆசிரியர்:க.குணசேகரன்
 நூல்:இருளர்கள் ஓர் அறிமுகம். கிழக்குப் பதிப்பகம். 2008.

Leave a comment

Trending