பாணனும் பொறாட்டும் (பகுதி – 2)

மலையாளப் படைப்பு : ஜெயசீலன்
தமிழாக்கம் : அகமது கனி

குறவன் குறத்தி

வடக்கன் பாட்டுகளில் காணப்படுகிற குறவனும் குறத்தியும்தான் இந்த பொறாட்டுகளில் குறிப்பிடப்படும் குறவன் குறத்தி ஆவார்கள். கை பார்த்து குறி சொல்வதில் இவர்களுக்கு பிரத்தியேகமான திறமை இருக்கிறது. குறவனுக்கு இரண்டு மனைவிகள் இருப்பது சாதாரண வழக்கம்தான். இரண்டு மனைவிகளும் மேடைக்கு வருவார்கள். குறவருக்கு சித்தனர் என்கிற பேரும் உண்டு. பண்டைக் காலத்தில் சமண மதம் ஏற்றுகொண்ட ஆதி திராவிடர்கள்தான் குறவர்கள். கேள்விக்காரனுடைய கேள்விகள் மூலமாக குறவனுடைய மனைவிகளின் எண்ணம் வெளிப்படுகிறது. குறவனே சொல்லுகிறான்: எனக்கு இரண்டு மனைவிகள் இளங்குடியும் முதுகுடியும். இரண்டு மனைவிகளைக் கட்டினால் இவர்களை யார் பார்த்துக்கொள்வது என்ற கேள்விக்காரனுடைய கேள்விக்கு குறவனிடம் பதில் இருக்கிறது.

இருகுடி கெட்டியராளுகளெ ஞான்
ஓரோன்னாயிட்டும் செய்திடாம்
வேலர்க்கில்லே ரண்டாளச்சா
வள்ளியென்னும் தைவானயுமாயி
பரமசிவனில் பார்யமாராயி   
சிரசில் வச்சு நடந்நிட்டில்லே 
கங்காதேவிய சிரசிலிருத்தி                                                                 பார்வதிதேவியக்கூட நடத்தி
இந்திரனில்லே நாலாளச்சா
ஊர்வசி மேனக ரம்ப திலோத்தம
பதினாறாயிரமெட்டும் ஸ்த்ரீகளெ
கிருஷ்ணன் கெட்டிவலிச்சிட்டில்லே?

இதையெல்லாம் சொல்கிற குறவனுக்கு குறத்தி மேலே சந்தேகந்தான். அவர்கள் இருவருக்கும் இடையேயான தர்க்கத்தின் முடிவில் குறத்திக்கும் சொல்வதற்கு விசயம் இருக்கிறது.

உத்தமியாயிட்டாணும் பெண்ணும்                                                   
லோகத்தில் இல்லா நாணு                                                                 
கத்தி எறியுந்ந தீபமாணே                                                        
சத்தியமாமல்லோ

(மற்ற பொறாட்டுகளைப் போல இங்கேயும்) குறவனுக்கு பரிபூரணமான திருப்தி இல்லாவிட்டாலும் கடைசியில் அவர்கள் ஒன்றுசேர்கிறார்கள்.

கவரனும் கவரச்சியும்

பறைச்சி பெற்றெடுத்த பன்னிரு குலத்திலே ஞானியும் வாக்குரைப்பவருமான பாக்கனாரின் வழித்தோன்றல் என்று பெருமைப்பட்டுக்கொள்கிற — பாலக்காடு மாவட்டத்திலே மலவர்க்கக்கார் (மலையர்) என்ற பெயரில் இருக்கும் இவர்கள் — பணத்தாலும் சமூக அந்தஸ்த்தாலும் கீழ்த்தட்டில் வசிக்கும் மக்களாகிய கவரர்கள்.

பாலக்காட்டின் மலையோரப் பிரதேசங்களிலும் உள் பிரதேசங்களிலும் நிறைய கவர குடில்கள் உண்டு. கூட்டமாக வசிப்பதுதான் இவர்களது விருப்பம். காட்டுக்குப் போய் மூங்கில் வெட்டி அதை பிரித்து காயவைத்து, தட்டி, வட்டி, முறம், முதலியன முடைந்து விற்றுப் பிழைப்பதுதான் அவர்களது வாழ்வாதாரம். தென்னிந்தியாவிலுள்ள திராவிட மொழிகளின் கலவைதான் இவர்களின் பேச்சுவழக்கு.

கவரனின் வரவு கானம்…….

ராராரீ ராரிரோ ராரிரங்காளி
ரூராரீ ரூரிரோ ரூரிரங்காளி
என்னங்களெ மேதி என்னெ பிரிந்தோடி
எல்லியோயுட்டாத்து
ஐதாறு திங்களாத்து பணித்தரம்
மாறோடி ஓயிற்றுட்டாத்து
பெரியிச்சேரி கஞ்ஞிவய்க்கோடி
அக்கியொந்நுமில்லாடா

புன்னப்பாற வட்டயிலோப்பயம்
விதறுகடி ஓயிற்றுட்டாத்து
விதறுகடிந்தப்போ நானும் விளுந்தப்போ
 ஆளெக்கொல்லி வந்திற்றுட்டாத்து

ஆளெக்கொல்லி என்று சொல்லப்படுவது பணத்தைக் குறிப்பதாகும். மூங்கில் மரத்தை வெட்டும்போது அதனுள்ளிருந்து நாணயங்கள் உதிர்ந்து விழுந்தன. ”ஆளெக்கொல்லி”யாகிய (அப்)பணத்தைக் கண்டு நான் பயந்தோடி வந்தேன்.

ஆனால், வீட்டில் வந்து பார்க்கும்போது கஞ்சி காய்ச்ச ஒரு மணி அரிசி கூட இல்லை. பின்னர், கூப்பன்2 கடைக்குப் போய்ப் பார்த்த போது அங்கிருந்து கடன் கிடைக்கவில்லை.இனி என்ன செய்வதென்று அறியாமல் கவரன் கலங்குகிறான்.

கவரனுடைய இந்தக் கற்பனையிலிருந்து மனித வாழ்க்கையின் சில தத்துவங்கள் இருக்கின்றன என்று தோன்றுகிறது. கவரனும் கவரச்சியும் சேர்ந்து பரியாணம்பற்ற திருவிழா பார்க்கப்போனதும், யானை மிரண்டோடிய நேரத்தில் ஆள் கூட்டத்தில் அவர்கள் பிரிந்ததும், அப்புறம் கவரச்சியே கண்டுபிடிக்கிற சிரமத்திற்கிடையில்தான், கவரன் இங்கு வந்தடைந்ததும் சொல்லப்படுகிறது. கவரச்சியைப் பார்க்கும்போது உண்டாகிற சண்டைக்கு வித்தியாசம் இருக்கிறது. கவரன் கோபப்படும்போதும் கவரச்சி பக்குவமாக பேசுவதைப் பார்க்கலாம். கதைகளும் சிறுகதைகளுமாய் நேரம் நீண்டுபோகிற பொறாட்டுகளிதான் இது.

தொட்டியன் தொட்டிச்சி

அறுவடையோடு தொடர்புடைய பாலக்காட்டிற்கு வந்துசேர்கிற சில மக்கள் கூட்டங்கள் உண்டு. ஒரே நேரத்திலே வியாபாரமும் பிச்சையெடுப்பதும் இவர்களுடைய நோக்கமாக இருக்கும். சோப்பு,சீப்பு, கண்ணாடி, ரிப்பன் போன்றன எல்லாம் விற்று நடப்பார்கள். சில நேரங்களில் இவையெல்லாம் வேண்டாமென்று வைத்துவிட்டு பிச்சையெடுக்க இறங்குவார்கள். பச்சை குத்துவதும் கைரேகை சோதிடம் பார்ப்பதும் இவர்களின் பிழைப்பின் ஒரு பகுதி. சாதாரண மிதுனப்பொறாட்டில் இருக்கிற (தம்பதி) பிரிவும் கேள்விக்காரன் காண்பித்துக் கொடுப்பதும் இந்தப் பொறாட்டிலும் உண்டு. அதற்கு அப்புறம் உள்ள சண்டை மிக வித்தியாசமானதாக இருக்கும். கணவன் மனைவி பிணக்கும் அதன் பின்னரான வாக்குவாதங்களுக்கும் முடிவில் உலகத்தைப் பற்றி சிந்திப்பதும் தத்துவம் பேசுவதும் இந்தப் பொறாட்டுகளியை வேறு தளத்திற்கு கொண்டுசெல்லும். தொட்டிச்சி அரங்கத்திற்கு வருகிறாள். தொட்டியனும் உண்டு. தொட்டியனுடைய கேள்வி …. .

தொட்டியன்: ஊருக்குப் போகலாமா புள்ள
தொட்டிச்சி: நா வர்றதில்ல
தொட்டியன்: காரணமென்ன?
தொட்டிச்சி: சண்ட
தொட்டியன்: என்ன சண்ட?
தொட்டிச்சி: எங்கேள்விக்கு பதில் சொல்லு.
பூமிக்கு முன்னே பிறந்ததாரு?
தந்தையில்லாத புத்திரனாரு?
பாலகணபதியப்பெற்றதாரு?
சிறகில்லாத பட்சியெது?
வேரில்லாத மரமெது?
இதுக்கு உத்தரம் சொல்லியே தந்தால்
பத்தினி நான் உன்கூட வருவேன்.

தொட்டியன்: பூமிக்கு முன்னே பிறந்தது ஜாம்பவான்
தந்தையில்லாது பிறந்தது விஷ்ணுபகவான்
பாலகணபதி தன் மாதாவு பார்வதி
சிறகில்லா பட்சி ஆத்மாவுதானே
வேரில்லா மரம் ஆகாசந்தானே
இப்படியாக்குமது அதுக்கெல்லாம் உத்தரம்
பத்தினி எங்கூட வருவாயடி

தொட்டியனுடைய பதிலில் திருப்தியாகி அரங்கிலிலுள்ள சபையோர்களை வணங்கி தொட்டியனும் தொட்டிச்சியும் மேடையிலிருந்து வெளியேறுகிறார்கள்.

சக்கிலியன் – சக்கிலிச்சி

இது ஒரு நீண்ட பொறாட்டுகளி ஆகும். சக்கிலியர்கள் ஆந்திரப் பிரதேசத்திலிருந்து குடியேறியவர்களாவார்கள். இவர்கள் தமிழும் தெலுங்கும் பேசுவார்கள். செருப்பு தயாரிப்பது இவர்களது தொழில்.

தப்பட்டை என்கிற வாத்தியக் கருவி கொட்டுகிற வழக்கமும் உண்டு. மேலும் காளை இறைச்சியையும் எருமை இறைச்சியையும் இவர்கள் உண்ணுவார்கள். அதனாலே சக்கிலியனைப் பார்த்த கேள்விக்காரன், அயித்தம் (அசுத்தம் மற்றும் தீண்டாமை) இருக்கிறது என்று சொல்கிறான். அதனை எதிர்த்து சக்கிலியன் கேள்வி கேட்கிறான்.

சக்கிலியன் : எதனாலே அயித்தம்?
கேள்விக்காரன்: செத்த மாடு, புழுத்த மாடு தின்கிறதாலே அசுத்தம்.
சக்கிலியன் : அசுத்தமானது எங்கு இருக்கிறது சாமி?
கேள்விக்காரன்: மனசுக்குள்ளே இருக்கிறது.
சக்கிலியன் : மனசுக்குள்ளே இருக்கிற அயித்தம் எப்படி போகும் சாமி?
கேள்விக்காரன்: ஆற்றிலே போய் வீழணும்.
சக்கிலியன் : ஆற்றிலே முழுகியது தேகமா, மனசா சாமி?
கேள்விக்காரன்: தேகம்.
சக்கிலியன் : அப்போது தேகத்தில் இருக்கிற அயித்தம் எப்படிப் போகும் சாமி?.. அது போகாது சாமி? அது ஒரு நினைப்புதான்!

பிறகு, சக்கிலியனுடைய பாட்டிலும் மனிதனின் பிறப்பு முதல் அவனது வளர்ச்சியில் உண்டாகிற மாற்றங்களும் ஜாதி என்கிற பெயரில் உண்டாக்குகிற தப்புகளும் சொல்கிறான். ஆணும் பெண்ணும் அல்லாத மற்றொரு ஜாதி பூமியில் இல்லை என்கிற உண்மையைச் சொல்கிறான். சக்கிலியன் சக்கிலிச்சியுடைய விவாதம் வேதாந்தமாகவும் தத்துவமாகவும் இருக்கிறது.

மண்ணான் – மண்ணாத்தி

மண்ணானும் மண்ணாத்தியும் என்கிற பொறாட்டில் இருக்கிற தள்ள மண்ணாத்தி பொறாட்டு பற்றித்தான் சொல்கிறார்கள்.

தள்ள மண்ணாத்தியும் ஆசானும் அருள்வாக்குரைப்பவரும் அரங்கத்திற்கு வருகிறார்கள். பாலக்காட்டுக்காரர்களுக்கு பழக்கமான இந்த அருள்வாக்கு சொல்பவர்கள் ஈழுவர்களும் செறுமக்களும் ஆவார்கள். அருள்வாக்கு சொல்பவர்களை இங்கு தம்பாட்டி என்று சொல்வார்கள். தம்பாட்டி உடல்குலுக்கி அருள்வாக்கு உரைப்பார். கையில் வாளெடுத்து தம் தலையில் வெட்டப்போவார். இந்த சந்தர்ப்பத்தில் ஆசான் சொல்கிறார்: தம்பாட்டி கையினாலே தாங்கித்தான் வெட்டுவார்.

அப்போது அருள்வாக்குரைப்பவர் சொல்வார் – வேகமாய் வெட்டினால் என் மண்டை பிளந்துவிடாதா? மகனே, மனைவியும் நான்கு பிள்ளைகளும் உண்டு.. உனக்குத் தெரியாதா?

அருள்வாக்குரைப்பவரிடம் தங்கள் துன்ப துயரங்களும் போக்க வேண்டி கோரிக்கை வைக்கிறார்கள். கல்லையும் நெல்லையும் பிரித்துக் கொடுப்பதுபோல் வாழ்க்கையில் துன்ப துயரங்களை தீர்த்துக் கொடுங்கள் என்று வேண்டிக்கொள்கிறார்கள்.

அப்போது, “நீங்கள் ஒரு கோழிக்குஞ்சை விடுங்கள்” என்று அருள்வாக்குரைப்பவர் சொல்கிறார்.

கடைசியில், ”நான் இல்லாத நேரத்தில் – என் வீட்டில் பண்ட பாத்திரங்கள் திருடுபோயிருக்கின்றன. களவாடிக்கொண்டு போனது யாரென்று சொல்லுங்கள்” என்கிறார்கள். அதற்கு அருள்வாக்குரைப்பவர் சொல்கிறார்: அது தெரிந்தால் நான் இங்கு எதற்கு வேசங்கட்டி உட்கார்ந்திருக்கேன்”.

அருள்வாக்குரைப்பவர், தன் கையில் உள்ள வாளை வீசி எறிகிறார். பகுத்தறிவான சிந்தனை மூடநம்பிக்கைக்கு எதிரான அடியாய் இங்கு மாறுகிறது. திறமையுள்ள ஆட்டக்காரர்கள் தம் மனோதர்மத்தை பயன்படுத்தை இந்த ஆட்டத்தை இன்னும் சிறப்பாக மாற்ற முடியும்.

(தொடரும்)

Leave a comment

Trending