குறிஞ்சாம்பூ நாவலில் பளியர்களின் மலைசார் வாழ்வியல்

ம.ஆன்றிஷா

ஆய்வுச் சுருக்கம்
விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் நகரின் மேற்கு தொடர்ச்சி மலை அடிவார பகுதிகளில் பளியர் என்ற இனக்குழுவினர் வாழ்கின்றனர். பளியர் ஈத்தைப் புற்களால் ஆன குச்சில்களில் வாழ்கின்றனர். இம்மக்கள் வசிக்கும் மலைப்பகுதியில் தட்டுப்பலா, சிறு செந்தட்டி, யானைச்செந்தட்டி போன்ற மனிதர்களுக்கு ஆபத்தான செடிகள் காணப்படுகின்றன. பளியர் வசிக்கும் மலைப்பகுதியில் ஏழு ஆண்டுகளுக்கு ஒரு முறை பூக்கும் குறுங்குறிஞ்சிச் செடி காணப்படுகிறது. இச்செடிகள் பூத்துக் குலுங்கும் போது பளியர் அதனை வரவேற்று சாமிக் கும்பிடு விழாவினைக் கொண்டாடி மகிழ்கின்றனர். மலைப்பகுதியில் கஞ்சா செடிகள் அதிகம் காணப்படுகின்றன. அச்செடிகளைப் பளியர்கள் வன இலக்கா அதிகாரிகளுடன் இணைந்து அழிக்கின்றனர். இம்மக்கள் பளிப்பாட்ட வேலைகளில் ஈடுபட்டு அதன் வாயிலாக ஈட்டும் அரிசி உணவினையும் வனபோஜனம் செய்ய வரும் நகரவாசிகளுக்கு உதவி செய்து அவர்கள் கொடுக்கும் உணவினையும் உண்கின்றனர். மேலும் மலைப்பகுதியில் கிடைக்கும் கிழங்கு, தேன், ஆற்றுமீன், காளான்கள், மாங்காய், ஈச்சம்பழம், நெல்லிக்காய், கிலாச்சிக்காய், அத்திப்பழம், போன்ற இயற்கை உணவுப் பொருட்களை உட்கொள்கின்றனர். பளியர்கள் அருவி நீரைக் குடிநீராகப் பயன்படுத்துகின்றனர். இம்மக்கள் தங்கள் இன மக்களை வழிநடத்த வேண்டி குழுத்தலைவராக ஊர் நாட்டாமை என ஒருவரை தெரிவு செய்து வைத்துள்ளனர். பளியர் தாங்கள் வசிக்கும் பகுதிகளுக்கு வரும் வெளி உலக மக்களுக்குச் சிறப்பான முறையில் விருந்தோம்பல் செய்யும் வழக்கமுடையவர்களாவர். இம்மக்கள் தங்கள் வயதினைக் குறிஞ்சி செடி பூக்கும் காலத்தை வைத்து கணக்கிட்டுக் கொள்கின்றனர். பளியர்கள் மலைப்பகுதிகளைக் குத்தகைக்கு எடுக்கும் முதலாளிகளிடம் வேலைச் செய்கின்றனர். அதுமட்டுமின்றி தோப்புக்கார முதலாளிகளிடம் காவல் காக்கும் வேலைகளையும் செய்கின்றனர். பளியர்கள் வசிக்கும் பகுதியின் மேற்கு திசையிலுள்ள தேவகிரி மலை வனப்பகுதியில் மன்னார்கள் எனும் இன மக்கள் வசிக்கின்றனர். அம்மக்களுடன் பளியர்கள் நல்ல உறவு முறையில் பழகுகின்றனர்.


முன்னுரை
பண்டைய காலத்திலிருந்து தமிழர்கள் தங்கள் வாழ்வியல் தேவைகளுக்குப் பொருந்துவது போல வாழிடச் சூழலைத் தேர்வு செய்து வாழ்ந்தனர். எனவே வாழ்கின்ற நிலச் சூழலுக்குத் தகுந்தபடி மக்களின் பண்பாட்டுக் கூறுகளும் நாகரீகமும் மக்களுக்குள் மாற்றங்கள் பெற்றிருந்தன. பெரும்பாலும் சங்க கால மக்கள் இயற்கையின் சூழலைச் சிதைக்காமல் இயற்கையைப் பண்படுத்தி வளங்களை நுகர்ந்து வாழ்ந்தனர். அதன் சாராம்சமாக மனிதன் வாழ்கின்ற நிலத்தை அடுத்த தலைமுறைகளுக்கு விட்டு செல்வது என்பது காலம் காலமாக பாரம்பரியமாக நடந்து வருகின்ற பண்பாட்டு கூறுகளில் ஒன்றாகும். அக்கூற்றை மெய்ப்பிக்கும் விதமாக நெடுங்காலமாக மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியான இராஜபாளையம் அய்யனார் அருவி கரையின் பக்கம் பளியர் என்ற பழங்குடி மக்களினத்தவர் வாழ்கின்றனர். பளியர்களின் அடிப்படைத் தேவைகளும் வாழ்வியல் பொருளாதாரமும் மலைச் சூழலைச் சார்ந்தே உள்ளது. இம்மக்கள் சங்க காலத்திலிருந்தே மலையில் வாழ்பவர்கள் நகர நாகரிகத்திற்கு அப்பாற்பட்டவர்கள். இப்பளியர் இனத்தவரைப் பற்றி களஆய்வு செய்து எழுத்தாளர் கொ.மா.கோதண்டம் என்பவர் குறிஞ்சாம்பூ எனும் நாவலைப் படைத்துள்ளார். அந்நாவலில் இடம் பெற்றுள்ள பளியர்களின் மலைச் சார்ந்த வாழ்வியலை வெளிப்படுத்தும் விதமாக இவ்வாய்வுக் கட்டுரை அமைகிறது.
திறவுச்சொற்கள்
இயற்கை, பளியர், குறிஞ்சி மலர்கள், குச்சில்கள், தேன், பச்சிலை.
ஆய்வு முன் முயற்சிகள்
வை.மாரீஸ்வரி என்பவர் ‘கொ.மா.கோதண்டத்தின் சிறுகதைகள் காட்டும் சமுதாய வாழ்வியல்’ எனும் தலைப்பில் மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் கீழ் இளமுனைவர் பட்டத்திற்காக பளியர் பற்றிய ஆய்வினை மேற்கொண்டுள்ளார்.
ஆய்வு அணுகுமுறை
ஆய்வுக் கட்டுரை எழுத விளக்க முறை அணுகுமுறை, ஒப்பீட்டு அணுகுமுறை, பகுப்பாய்வு அணுகுமுறைப் போன்ற ஆய்வு அணுகுமுறைகள் பயன்படுத்தப்பட்டுள்ளன.
பளியரின் வாழிடச்சூழல்
விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் நகரில் மேற்கு தொடர்ச்சி மலையின் அடிவாரப் பகுதி காணப்படுகிறது. இம்மலை அடிவாரத்தில் கோவில் மற்றும் அருவிகள் என இயற்கை அழகு ததும்பி காணப்படுகிறது. மலைப்பகுதியைச் சுற்றி வளைவாக இருந்த குச்சில்களுக்கு நடுவில் ஒரு பெரிய மரம். அம்மரத்தின் கீழே விரிந்த சமமான பாறை. அது தான் பளியர்களின் குடியிருப்புக் குறிச்சியாகும்.
உறைவிடம்
மனித வாழ்விடங்களின் தொகுப்பு குடியிருப்புகள் ஆகும். சுற்றுச்சூழலுக்கு ஏற்ப குடியிருப்புகளின் அமைப்பு முறைகள் மாற்றம் பெறுகின்றன. மலையின் மீது வாழும் பளியர்கள் ஆரம்ப காலத்தில் மலையின் மீது காணப்படும் குகைகளிலும், மரப்பொந்துகளிலும் வாழ்ந்தனர். அதன் பின்னர் மண் சுவர் இல்லாத குச்சில்களில் வாழ்ந்தனர். அதனை,
“ஒரு காலத்தில் குகைகளிலும் மரப்பொந்துகளில் வாழ்ந்த அவர்கள் தற்போது மண்சுவர் இல்லாத குச்சல்களில் வாழ்ந்து வருகின்றனர்”.
(குறிஞ்சாம்பூ, ப-X)
என்ற நாவலின் வரிகள் வாயிலாக அறிந்து கொள்ள முடிகிறது. குச்சில்கள் பாறைகளின் அருகிலும் பாறைகளின் இடுக்குகளிலும் கட்டப்படுவதை,
“பளியர்கள் நாகரீகத்தின் நிழலைக்கூட அறியாதவர்கள். இவர்கள் பெரும்பாலும் பாறைகளின்அருகிலுள்ள குச்சில்களிலும் பாறையிடுக்குக் குச்சிகளிலும் வாழ்ந்து வருகின்றனர்”.
(கொ.மா. கோதண்டத்தின் சிறுகதைகள் காட்டும் சமுதாய வாழ்வியல், ப-22)
என்னும் ஆய்வேட்டின் வரி உறுதிப்படுத்துகிறது. பளியரின் குச்சில்கள் தரகு மற்றும் ஈத்தைப் புற்களால் வேயப்பட்டிருக்கும். அவற்றின் உட்புறத்தில் இரு பக்கமும் மூங்கில்கள் கூரையோடு இணைத்து கட்டில்கள் போன்ற அமைப்பில் அமைக்கப்பட்டிருக்கும். இது போன்ற குச்சில்கள் அமைந்த பகுதிகளே பளியர்களின் குடியிருப்புப் பகுதிகளாகும். குச்சில்களை மூடுவதற்கு கதவுகள் காணப்படுவதில்லை. பழனி மலைப் பளியர்களும் புல்லால் ஆன வீடுகளில் வசிப்பதை,
“இவர்களது பொருளாதார ஏழ்மையினால் இவர்களின் வீடுகளும் எளிமையாகவே இருக்கின்றன. வீடுகளின் சுற்றுச்சுவரைக் கம்புகளாலும் மண்ணாலும் அமைக்கின்றனர். மேல் கூரையாக போதைப் புல்லைப் பயன்படுத்துகின்றனர்”.
(கோடை மலைப் பழங்குடியினர், ப-56)
எனும் வரிகள் சான்று பகர்கிறது. இதிலிருந்து மலைச்சூழலில் பாதுகாப்பின்றி பளியர்கள் வாழ்வதைத் தெரிந்து கொள்ள முடிகிறது. சங்க காலத்தில் வாழ்ந்த மக்கள் புல்லால் வேய்ந்த குடிசைகளில் வாழ்ந்தனர். பண்டைய காலப் புல் குடிசைகளை ஒத்ததாக பளியர்களின் குச்சில்கள் காணப்படுகிறது. பளியர்கள் காடுகளில் மலைபடு பொருட்களைச் சேகரிக்கச் செல்வர். அப்போது அவர்கள் தற்காலிகமாக தங்குவதற்காக ‘சாலெ’ எனப்படும் குச்சில்களை அமைத்துக் கொள்கின்றனர். காட்டிற்குள் அக்குச்சில்களில் ஒரு சில நாட்கள் அல்லது வாரங்கள் தங்கி மலைபடு பொருட்களையும் தங்கள் வாழ்வியலுக்குத் தேவைப்படும் பிற பொருட்களையும் சேகரிக்கின்றனர். சங்க கால மக்கள் புல்லால் ஆன வீடுகளில் வாழ்ந்துள்ளதை,
“படலைப் பந்தர்ப் புல்வேய் குரம்பை
நல்கூர் சீறூர் எல்லித் தங்கிக்”
(அகம், பா-87:3-4)
என்ற சங்க இலக்கியப் பாடல் வரிகள் தெரிவிக்கின்றன. மலைப்பகுதியில் வாழும் பளியர் இனமக்கள் பாதுகாப்பின்றியே தங்கள் குடில்களில் வாழ்வதை அறிந்து கொள்ள முடிகிறது. ஆனால் தற்போது இம்மக்கள் அரசின் நடவடிக்கையால் நல்ல வீடுகளில் வசிக்கின்றனர். வீடுகளைச் சுற்றி வேலி அமைக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி மின்சார வசதியும் அரசு செய்து கொடுத்துள்ளது. அத்தகவலை,
“அரசு நடவடிக்கையால் தற்போது ஐயனார் கோயில் அருகிலேயே 25 வீடுகள் தொகுப்பு வீடாக அம்மக்களுக்கு கட்டித்தந்துள்ளார்கள்”.
(தமிழ்நாட்டில் பழங்குடியினர், பக்-296-297)
என்ற கள ஆய்வுக் கட்டுரை வரி எடுத்துக் காட்டுகிறது.
விஷச்செடிகள்
மலைப்பகுதியில் காலம் காலமாக வாழும் பளியர்கள் மலைச்சூழலுடன் ஒன்றி வாழ்பவர்கள். குறிஞ்சி நிலம் சார்ந்த மரபறிவு இம்மக்கள் அனைவரிடமும் காணப்படுகிறது. இவர்கள் பயன் தரும் மற்றும் தீங்கிழைக்கும் செடி, கொடிகளைப் பற்றி நன்கு அறிந்து வைத்துள்ளனர். பளியர்கள் வாழும் பகுதியில் உள்ள காடுகளில் மனிதர்கள் மற்றும் விலங்குகளுக்குத் தீங்கிழைக்கும் பல செடிகள் மற்றும் கொடிகள் காணப்படுகின்றன. அவற்றில் தட்டுப்பலா, சிறு செந்தட்டி, யானைச் செந்தட்டி போன்றவை முக்கியமான விஷச் செடிகள் ஆகும். இந்த செடிகளின் தீங்கிழைக்கும் நச்சுத்தன்மைக் குறித்து மக்கள் முன்கூட்டியே தங்கள் வாழ்வியல் அறிவால் கண்டறிந்து அவற்றிலிருந்து விலகி வாழ்கின்றனர்.
யானைச் செந்தட்டி புற்களின் ஊடே காணப்படுகிறது. இத்தாவரம் யானைகளின் மீது பட்டால் அரிப்பு ஏற்பட்டு புண்கள் தோன்றுகின்றன. யானைகள் வலி மற்றும் அரிப்பால் விடாமல் சத்தம் எழுப்பிக் கொண்டே இருக்கும். இச்செடி யானைகளின் உடம்பின் மீது புண்களை ஏற்படுத்தி அவற்றைக் கொல்லும் அளவிற்கு திறன் வாய்ந்ததாகும்.
மலைக் காடுகளில் செந்தட்டி செடிகள் பரவலாக காணப்படுகின்றன. இது மலையில் வாழும் மக்களுக்குத் தீமைப் பயப்பதாகவே காணப்படுகிறது. இச்செடி உடலில் பட்டால் எரிச்சலும் சிவந்த தடிப்புகளும் உருவாகும். காப்பி மற்றும் ஏலத்தோட்ட தொழிலாளர்கள் செந்தட்டிச் செடிகளால் அவதிப்படுவதை,
“மழை ஓய்ந்ததும் செடிகள் சொட்டத் தொடங்கின. அவன் கைகால்கள் நடுங்க பற்கள் பதை பதைத்து தாளம் போட நின்றான். திடீரென்று வலது கொண்டைக்காலில் தீப்பிடித்தது போல் காந்தல் எரிச்சலில் அலறினான்.
(ஏலோ….லம், பக் -34)
எனும் நாவலின் வரிகள் துணை நிற்கின்றன. மேலும் தட்டுப்பலா மிக கொடிய விஷச் செடியாகும். படைப்பாசிரியரின்,
“சாமி, கொஞ்சம் வெலகி வாங்க, இது தான் தட்டுப்பலா! ரொம்ப விஷச்செடி. இந்த இலெ உடல்லே பட்டா உடனே ஊரலெடுக்கும். கொஞ்ச நேரத்துல காய்ச்சலும் வந்துடும். செடியில விழுந்தமோ…. அவ்வளவுதான், ஆள் குளோஸ்”.
(ஆரண்ய காண்டம், பக்-37)
என்னும் சிறுகதை வரிகள் இச்செடியின் நச்சுத்தன்மையை மிகத் தெளிவாக புலப்படுத்துகிறது. பளியர்கள் விஷ தன்மைகளைக் கொண்ட தாவரங்கள் அடங்கிய இயற்கைச் சூழலில் வாழ்கின்றனர். அழகு வாய்ந்த மலைச்சூழல் கண்ணுக்கு விருந்தாக அமைவினும் கொடிய நஞ்சைக் கொண்டுள்ள நாக பாம்பு போன்றதாகும்.
குறிஞ்சிப்பூ விழா
இராஜபாளையம் மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியில் காணப்படும் குறிஞ்சி மலர்கள் ஏழு ஆண்டுகளுக்கு ஒரு முறைப் பூக்கும் தன்மை வாய்ந்தது. பளியர்களின் தொழில்களில் முக்கியமானது தேனெடுத்தல் ஆகும். பளியர்கள் தேன் கூட்டில் இருந்து தேனைச் சேகரிக்கும் போது தீயிட்டு தேனீக்களைக் கொன்று தேனைச் சேகரிப்பதில்லை. அதற்கு மாறாக ஒருவித பச்சிலையை மென்று தேன் கூட்டில் எச்சில் துப்பி ஊதி விடுகின்றனர். பச்சிலையின் வாசனைக்குத் தேனீக்கள் கூட்டை விட்டு பறந்து ஓடிவிடும். இவர்கள் தேனீக்களைக் கொல்லாமல் தேனைச் சேகரிக்கின்றனர். அதனை,
“உச்சிக்கிளையில் தேன் கூட்டில் பச்சிலையை மென்று ஊதி விட்டு, என்ன மவளே இங்க வந்துட்டேங்”, என்றான் சடையன்”.
(குறிஞ்சாம்பூ, பக்-8)
என்ற நாவல் உரையாடல் வரிகள் காட்சிப்படுத்துகின்றன. வளங்களைக் கொடுக்கும் இயற்கையைப் பாதுகாத்து மீண்டும் புதுப்பித்துக் கொள்ள வேண்டுமென்ற நல்லொழுக்க எண்ணத்தை இதிலிருந்து அறிந்து கொள்ள முடிகிறது.
பளியர்கள் குறிஞ்சிமலர் பூத்தலை வரவேற்றுக் கொண்டாடி மகிழ்கின்றனர். தேனைச் சேகரித்து சாமிக்குப் படையல் போடுகின்றனர். இந்நிகழ்வினைச் ‘சாமிக் கும்பிடு’ என இம்மக்கள் கூறுகின்றனர். பளியர்கள் சாமிக் கும்புடு விழாவில் ஆடிப்பாடி முடித்ததும் ஆளுக்கொரு தொன்னைத் தேனும் கைகள் நிறைய அவித்த கிழங்குகளையும் பரிமாறுகின்றனர். கிழங்கைத் தேனில் முக்கி உண்கின்றனர்.
வாழைகிரி பகுதியில் குறிஞ்சி பூக்கள் பூக்கும் போது அவ்விடத்தில் வாழும் பளியர்கள் அதனை வரவேற்று ‘பூவாட்டு விழாவினை’ எடுக்கின்றனர். குறிஞ்சி பூக்கும் காலத்தில் முதல் முதலில் தேன் எடுக்கச் செல்லும் நிகழ்வையே பளியர்கள் ‘பூவாட்டு’ என்கிறார்கள். இம்மக்கள் முருகன் இருக்கும் திசை நோக்கி தேனை வைத்து வழிபாடு நிகழ்த்துகின்றனர். அந்நிகழ்வின் போது,
“எந்தெந்தப் பூவுல தேனு மணக்குது
செவ்வாழப் பூவுல தேனு மணக்குது
எந்தெந்த பூவுல தேனு மணக்குது
செவ்வந்திப் பூவுல தேனு மணக்குது
(ஆலாவட்டம், பக்-40)
எனும் வாய்மொழி பாடலைப் பாடி விழாவினைக் கொண்டாடி மகிழ்கின்றனர். குறிஞ்சித் தேனின் இனிமையை உணர்ந்த சங்ககாலப் புலவரும்,
“கருங் காற் குறிஞ்சி மதன்இல் வான்பூ
ஓவுக் கண்டன்ன இல்வரை இழைத்த”..
(நற், பா-268)
என்னும் நற்றிணைப் பாடல் வாயிலாக சிறப்பித்துக் கூறுவதை அறிந்து கொள்ள முடிகிறது.
மலைப்பகுதியும் கஞ்சா செடியும்
மலைப்பகுதியில் இயற்கையாகவே கஞ்சா செடிகள் அதிகமாக வளருகின்றன. பளியர்கள் கஞ்சா செடிகளை வன இலாக்கா அதிகாரிகளுடன் சேர்ந்து அழிக்கும் பணியில் ஈடுபடுகின்றனர். இதற்கான கூலியை வன இலாக்கா அதிகாரிகளிடமிருந்துப் பெற்றுக் கொள்கின்றனர்.கஞ்சாவில் சடைக் கஞ்சா, அருகுக் கஞ்சா, ஆண் கஞ்சா, பெண் கஞ்சா, புகைக் கஞ்சா என பலவித கஞ்சா செடி வகைகள் இங்கு காணப்படுகின்றன. அதனை,
“ஆமாங்க சாமி. இது சடை கஞ்சா. எடை நெறய இருக்கும். இந்த பச்ச எலய சாப்புட்டாலே போதை ஏறிடுங்க. ஆண் கஞ்சாவும், அருகுக் கஞ்சாவும், புகை குடிச்சா போதை ஏறும். பெண் கஞ்சா விதைக் கஞ்சா வேற மருந்துகளுக்கும் ஆகும். வடையில போட்டும் சாப்புடலாம்”.
(குறிஞ்சாம்பூ, பக்-139)
என்ற நாவல் வரிகள் வாயிலாக கஞ்சா இலைகளைப் பளியர்கள் பயன்படுத்துவதை அறிந்து கொள்ள முடிகிறது. கோவை மாவட்டம் தளிஞ்சி மலைப் பளியர்களும் கஞ்சா செடிகளை அழிக்க வன இலாக்கா அதிகாரிகளுக்கு உதவுகின்றனர். அத்தகவலை,
“காட்டுக்குள் அபின், கஞ்சா போன்ற போதைப் பொருள் தயாரிக்கும் பயிர்கள் பயிரிடப்படுகின்றனவா என்பதை அறிந்து வனத்துறையினரிடம் கூறுகின்றனர். அதேபோன்று மேற்கூறிய போதைப் பொருட்கள் செய்யப்படுகின்றனவா என்பதையும் காட்டினுள் புகுந்து அறிந்து வந்து வனத்துறையினரிடம் கூறுகின்றனர்”.
(மலையில் வாழும் மண்மக்கள் பளியர், பக்- 36)

என்னும் புத்தக வரிகள் புலப்படுத்துகின்றது. மலைகளில் வாழும் பளியர்கள் கஞ்சா செடிகளைப் போதைக்காகவும், மருந்திற்காகவும் பயன்படுத்துகின்றனர். எனினும் தீங்கு விளைவிக்கும் செடி என்பதை உணர்ந்ததும் அதை அழிக்க வனத்துறைக்கு உதவி செய்வது அவர்களது நற்பண்பினை வெளிப்படுத்துகிறது.
உணவுப் பழக்கம்
உணவு முறை என்பது தனிப்பட்ட மக்களின் உணவுப் பழக்கம் மற்றும் சமையல் பற்றிய தொகுப்பாகும். ஓரிடத்தில் நிலையாக வாழும் மக்களின் உணவு முறை முற்றிலும் அவர்கள் வாழும் நிலத்தோடு தொடர்புடையதாக இருக்கும். அரசானது பளியர்கள் வசிக்கும் மலை மற்றும் மலைச் சார்ந்த பகுதிகளைக் குத்தகைக்கு எடுப்பதற்கு ஏலம் விடுகிறது. எனவே பல முதலாளிகள் அதனைக் குத்தகைக்கு எடுப்பர். இதனைப் ‘பளிப்பாட்டம்’ என்பர். பளியர்கள் பளிப்பாட்ட இடங்களில் வேலைப் பார்ப்பதற்காக கூலியாட்களாக நியமிக்கப்படுகின்றனர். பளிப்பாட்ட வேலைக்குக் கூலியாக அரிசி வழங்கப்படுகிறது. இப்படி கூலியாகக் கிடைக்கும் உணவே மக்களின் பிரதான உணவாக அமைகிறது. அச்செய்தியை,
“சாமி வார கூலி எனய ஆறுபடிக்கு மூணுபடியா கொறச்சா நாங்க எப்படி சாப்புடுது சாமி”.
(குறிஞ்சாம்பூ ,பக்-23)
என்ற நாவல் வரிகள் தெரிவிக்கின்றன. பளியர்கள் பெரும்பாலும் ஞாயிற்றுக் கிழமைகளில் பளிப்பாட்ட வேலைகளுக்குச் செல்வதில்லை. ஏனெனில் நகர்ப்புறத்திலிருந்து அருவியில் குளித்து வனபோஜனம் செய்ய வரும் நகரவாசிகளுக்குக் காட்டிற்குள் சென்று விறகு எடுத்துக்கொண்டு வந்து கொடுப்பதுடன் அவர்கள் உணவு உண்டதும் சமையல் பாத்திரங்களைத் தேய்த்து கழுவிக் கொடுப்பார்கள். அதற்காக நகர மக்கள் ஒருவேளை உணவினைக் கொடுத்து சமைத்து மிஞ்சுகிற கறி வகைகளையும், மிச்ச உணவையும் கொடுத்து விட்டுப் போவார்கள். அன்றைய நாள் ருசியான ஆகாரம் பளியர்களுக்குக் கிடைப்பது மட்டுமின்றி அவர்களுக்குப் பண்டிகைப் போன்ற உணர்வும் ஏற்படும்.
மலைப்பகுதியில் சக்கரவள்ளி கிழங்கு அதிகமாக கிடைக்கும். அக்கிழங்குகளை முனைக் கம்புகளால் தோண்டி எடுப்பர். அவ்வாறு சேகரித்த கிழங்குகளைப் பாறையில் போட்டு அதன் மேல் காய்ந்த புல் கட்டுகளைப் பரப்பி புல்லின் மேல் தீ மூட்டி கிழங்குகளைச் சுடுவர். பின்னர் அருவியில் அனைவரும் குளித்து விட்டு வந்து வெந்த கிழங்குகளைத் தேன் தொட்டு உண்கின்றனர்.
பளியர்களின் முக்கிய உணவு பொருள்களில் தேன் முதன்மையானதாக கருதப்படுகிறது. இம்மக்கள் காட்டிற்குள் சென்று தேனை சேகரிக்கின்றனர். மிகப் பெரிய மரங்களில் கணுக்களுள்ள மூங்கில்களை ஒட்டி கட்டி அதன் வழியாக மரத்தின் மேல் ஏறித் தேன் சேகரிக்கின்றனர். தேன் கூட்டிலிருந்து தேனை எடுக்க தேனீக்களை இம்மக்கள் கொல்வதில்லை. மாறாக ஒரு வித பச்சிலையினை மென்று தேன் கூட்டில் ஊதி விடுகின்றனர். அப்பச்சிலையின் வாடையினால் தேனீக்கள் மயங்கி விழுகின்றன. அதன் பின் இவர்கள் தேனைச் சேகரிக்கின்றனர். மலையில் வாழும் பளியரின மக்கள் இயற்கையைச் சிதைக்காமல் பயன்படுத்தி கொள்வதை இந்நிகழ்வு புலப்படுத்துகிறது.
பளியர்கள் ஆற்றிலிருந்து கிடைக்கும் மீன்களையும் உணவாக உட்கொள்கின்றனர். துணிகளை விரித்து ஆற்றில் மீன் பிடிக்கின்றனர். மலைப் பகுதி ஈரப்பதம் வாய்ந்தாக காணப்படுவதாலும் அடிக்கடி மழைப் பெய்வதாலும் காளான்கள் இங்கு அதிகமாக முளைக்கிறது. மனித உடலுக்கு மிகச் சிறந்த உணவுப் பொருளாக விளங்கும் காளான்களை இவர்கள் உணவாக உட்கொள்கின்றனர். உண்ணக்கூடிய காளான் பல வகைகளில் காணப்படுவதை,
“அரிசி காளான், மனக்காளான், புற்று காளான், பால் காளான் போன்ற காளான் வகைகள் உள்ளன”.
(மலையாளி இன மக்களின் நாட்டுப்புற மருத்துவம் (பாப்பிரெட்டிபட்டி வட்டம்), பக்- 14)
என்ற ஆய்வேட்டு வரிகள் பறைசாற்றுகிகின்றன. மாங்காய், ஈச்சம்பழம், நெல்லிக்காய், கிலாச்சிக்காய், அத்திப்பழம் போன்றவற்றை உண்ணும் பழக்கத்தையும் கொண்டுள்ளனர். பளியர்கள் சிறு சிறு விலங்குகளை வேட்டையாடி உணவுத் தேவையைப் பூர்த்தி செய்து கொள்கிறார்கள். இதனை,
“பன்றி, முயல், மான் போன்றவற்றை வேட்டையாடுகின்றனர். மான்களைப் பிடிக்க கம்பி கன்னி போடுகின்றனர். கன்னியில் விழும் மானின் இறைச்சியினை உண்கின்றனர். முயல்கள் அதிகமாக காட்டின் பள்ளத்தில் வாழ்கின்றன. அப்பள்ளத்தை ‘மொசலு பள்ளம்’ என குறிப்பிடுகின்றனர். அப்பள்ளதிற்கு சென்றுச் பளியர்கள் முயல் வேட்டையில் ஈடுபடுகின்றனர். இவ்வாறு வேட்டையாடி உணவு தேவையில் தன்னிறைவு அடைகின்றனர். பன்றி, ஆடு, மிளா இவற்றை தூக்கு கண்ணி வைத்து பிடித்து அவற்றின் இறைச்சியை உண்கின்றனர்”.
(கொ.மா. கோதண்டத்தின் சிறுகதைகள் காட்டும் சமுதாய வாழ்வியல், பக்-23)
எனும் ஆய்வேட்டு வரிகள் வாயிலாக அறிந்து கொள்ள முடிகிறது. வேட்டையாடி உணவுத் தேவையைப் பூர்த்தி செய்யும் பழக்கம் சங்ககால மக்களிடையேயும் காணப்பட்டதை,
“முயல் சுட்டவாயினும் தருவேம் புகுதந்து
ஈங்கு இருந்தீமோ முது வாய்ப் பாண”
(புறநானூறு, பா. 319)
என்னும் பாடல் வரிகள் உணர்த்தி நிற்கின்றன.
குடிநீர்
அருவி நீரை மக்கள் குடிநீராக பயன்படுத்துகின்றனர். கூந்தப்பனையின் மடலைப் பயன்படுத்தி நீரை அருவியிலிருந்து எடுத்து குடியிருப்பு பகுதிகளுக்குக் கொண்டு வருகின்றனர். அருவியில் இருந்து பாறையின் மேல் நீர் விழுந்து விழுந்து பாறையில் ஒரு கேணி போன்ற அமைப்பு உருவாகி இருக்கும். அந்தப் பள்ளத்தில் நீர் நிறைந்து காணப்படும். அந்நீரை மக்கள் சேகரிக்கின்றனர்.
“பாறையோடு ஒட்டிப் பானையை வைக்க முடியாதகையால் பத்தல் போல இருந்த காய்ந்துபோன மரப்பட்டையை எடுத்து வந்து பாறையை ஒட்டி ஒரு முனையை வைத்தாள் குறுஞ்சாம்பூ. தண்ணீர் மரப்பட்டையில் விழுந்து இரண்டடி நீளத்தில் பானையில் விழுந்தது” (குறிஞ்சாம்பூ, பக்-155)
என்ற நாவல் வரிகள் பளியர்கள் குடிநீர் சேகரிக்கும் முறைமையைச் சுட்டிக்காட்டுகிறது. சங்க காலத்தில் மக்கள் அருவி நீரைக் குடிநீராகப் பயன்படுத்தியுள்ளதை,
“நன்மை எளிய நறுந்தண் சாரற்
கன்மிசை யருவி தண்ணெய் பருகி”
(புறம், பா-150;15-16)
எனும் சங்கப் பாடல் வரிகள் காட்சிப்படுத்துகின்றன.
பளியர் குடித்தலைவன்
ஒவ்வொரு இன மக்களையும் வழி நடத்துவதற்கு ஒரு தலைவன் தேவைப்படுகிறான். அதுபோல இராஜபாளையம் பளியரினத்திலும் குழு தலைவனாக சடையன் காணப்படுகிறான். தலைவன் இம்மக்கள் சார்ந்த முக்கியமான முடிவுகள் எடுப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறான். குழு தலைவனை மக்கள் நாட்டாமை என்று குறிப்பிடுவதாகப் படைப்பாசிரியர் குறிப்பிடுகிறார். நாட்டாமை மக்களுக்கு உடல்நிலை சரியில்லையென்றால் அதனை கவனித்துக் கொள்வதிலும், இனக்குழு சார்ந்த முக்கியமான முடிவுகளை எடுப்பதிலும் முக்கியப் பங்கு வகிக்கிறார். தங்கள் குழுக்களில் யாருக்காவது உடல் நிலை சரியில்லாமல் காய்ச்சல் ஏற்பட்டால் ஊர் நாட்டாமைச் சாமி கும்பிட்டு திருநீறு பூசுவார். இதனை,
“குடியிருப்புத் தலைவன் குருவாக இருந்து அனைத்து சடங்கு முறைகளையும் நடத்தி வைப்பவனாகத் திகழ்கிறான். தவறு செய்பவர்களைத் தண்டிக்கும் அதிகாரம் இவனுக்குண்டு.”
(முப்பத்திரண்டாம் கருத்தரங்க ஆய்வுக் கோவை 2001, பக்- 1456)
எனும் வரிகள் சுட்டிக்காட்டுகின்றன. இம்மக்கள் மலைச் சூழலில் தங்களுக்கென்ற குழு அமைப்பினை ஏற்படுத்தி வாழ்வதனை இம்முறை மூலம் அறிந்து கொள்ளலாம்.
விருந்தோம்பல் பண்பாடு
பளியர்களை நல்லெண்ணத்துடன் சந்திக்க செல்லும் வெளி உலக மக்களைப் பளியர்கள் உபசரிக்கும் வழக்கமுடையவர்களாக காணப்படுகின்றனர். தங்களிடம் உள்ள உணவுப் பொருட்களைக் கொடுத்து இன்முகத்துடன் வரவேற்பதனை,
“அடிவார மலைத் தேனும் பலாவும் சுவையான சத்தான உணவுகளல்லவா, இதனை அப்படியே சுளைகளை எடுத்துத் தந்துவிடுடேன்! அவன் பழத்தை அறுத்து சுளைகளைப் பிரித்து கொடுத்தான். நரசிம்மன் தனக்கு சிறிது வைத்துக் கொண்டு மற்றவர்களுக்கும் பகிர்ந்து தந்தான்”.
(குறிஞ்சாம்பூ, பக் – 16 )
என்ற வரிகள் உணர்த்தி நிற்கின்றன. இதன் மூலம் பழங்கள், தேன், கிழங்குப் போன்றவற்றைக் கொடுத்து உபசரிப்பதை அறிந்துகொள்ள முடிகிறது. இம்மக்களுக்கு மலைப்பகுதியில் உணவு சேகரிப்பதுச் சவாலான காரியமாக உள்ளது. சேகரித்த உணவுகளைத் தங்களைக் காண வருபவர்களுக்கு அன்பாக வழங்குகின்றனர்.
நகர மக்கள் வீட்டிற்கு வரும் விருந்தினர்களுக்குத் தேநீர் வழங்குவது போல இம்மக்களிடம் ‘மிளகு வெண்ணி’ வழங்கும் பழக்கம் காணப்படுகிறது. பளியர்கள் தங்கள் குடியிருப்புப் பகுதிக்கு நல்லெண்ணத்துடன் வரும் மக்களுக்கு விருந்தோம்பல் செய்வது குறிப்பிடத்தக்கது ஆகும். விருந்தோம்பல் என்பது தமிழர்களின் பண்பாடுகளில் தலையாயப் பண்பாடு ஆகும். தன்னை நாடிவரும் விருந்தினர்களை இன்முகத்துடன் உபசரிப்பவன் வருந்தி கெடுவதில்லை என வள்ளுவர்,
“வரும்விருந்து வைகலும் ஓம்புவான் வாழ்க்கை
பருவந்து பாழ்படுதல் இன்று”.
(குறள்- 83)
என்ற குறளில் தெரிவிக்கிறார். அக்குறளுக்கு இலக்கணமாய் நடப்பது போன்றே பளியர்கள் விளிம்பு நிலை வாழ்வியலை மேற்கொண்டாலும் தங்களைக் காண வருபவரை இன்முகத்துடன் தங்களிடம் உள்ள பொருட்களை உண்ண கொடுத்து உபசரிக்கின்றனர்.
குறிஞ்சியும் வயது கணிப்பும்
பளியர்கள் தங்கள் வயதினைக் குறிஞ்சி செடி பூக்கும் காலத்தை வைத்து கணக்கிடுகின்றனர். இம்முறையை இயற்கை வயது கணிப்பு எனக் கூறலாம். அதாவது இரண்டு குறிஞ்சி வயது, நான்கு குறிஞ்சி வயது என குறிப்பிடுகின்றனர். இதிலிருந்து மக்கள் வாழ்வியலில் இயற்க்கையின் தாக்கத்தை அறிந்து கொள்ள முடிகிறது. இயற்கையுடன் இயைந்த வாழ்வைப் பளியர்கள் வாழ்வதை உணர முடிகிறது. தற்போது உள்ள மக்கள் பிறப்பை நினைவில் வைத்துக் கொண்டு வயதை கணக்கிடுகின்றனர். முதியவர்கள் வயதைப் பெரும்பாலும் தோராயமாகவே கூறுகின்றனர். அதனை,
“தற்போது இயற்கையை விட்டு விலகி வாழ வந்த பின்பு மக்கள் வயதுகணிப்பை ஒரு தோராயமாக கூறுகிறார்கள். இங்கு வாழும் மக்களின் குழந்தைகள் சரியான வயதில் பள்ளிக்கு செல்வதில்லை. தற்போது வாழும் மக்கள் குழந்தைகள் பிறப்பை பதிவு செய்து அதை கணிக்கின்றனர். முதியவர்களின் வயதைப் பெரும்பாலும் தோராயமானதாக கூறுகின்றார்கள்”.
(தமிழ்நாட்டில் பழங்குடியினர், பக்-299-300)
என்ற கள ஆய்வுக் கட்டுரை வரிகள் வாயிலாக அறிந்து கொள்ள முடிகிறது
தொழில்கள்
பளியர்களின் வாழ்வியல் பொருளாதாரம் மலைப்பகுதியைச் சார்ந்ததாக காணப்படுகிறது. மலைப்பகுதியினைப் பாட்டம் எடுக்கும் முதலாளிகளிடம் பளியர்கள் வேலைச் செய்கின்றனர். அதற்கான கூலியாக அரிசியும் குறைந்த அளவு பணமும் பெறுகின்றனர். தோப்புக்கார முதலாளிகளிடம் தோப்புகளைக் காவல் காக்கும் வேலையைச் செய்கின்றனர். வன இலாக்கா அதிகாரிகளுக்கு வனம் தொடர்பான வேலைகளில் ஒத்தாசையாக இருக்கின்றனர். பளிப்பாட்ட முதலாளிகள் பாட்டம் எடுக்கும் மலைப்பகுதியில் உள்ள மலைபடுப் பொருட்களைச் சேகரித்துக் கொடுப்பதே இவர்களின் முக்கிய வேலையாகும். கடுக்காய், இண்டம்பட்டை, நெக்கட்டங்காய், ஜாதிக்காய், பூலாங்கிழங்கு, புழுக்கம் பட்டை, கருங்குங்கிலியம், சாம்பிராணிப் பட்டை, கல்பிசின், கல் மதம், நன்னாரி வேர், வெட்டிவேர், விலாமிச்சை வேர், வலம்புரி வேர், கிளாச்சிக்காய், நெல்லி வத்தல், பேப்பு புடலை, கல்பாசி போன்ற பொருட்கள் அவற்றில் அடங்கும். மலைப்பகுதி ஈரமிக்க பகுதி. ஆதலால் கல்பாசி என்னும் பாசி அதிகமாக மலைப்பகுதியில் கிடைக்கிறது. பிரியாணிக்கு கல்பாசியைப் பயன்படுத்துகின்றனர். இதை பல சரக்குக் கடைகளில் பெரும் இலாபத்திற்குப் பளிப்பாட்ட முதலாளிகள் விற்கின்றனர். பளியர்கள் இதனைச் சேகரிக்கும் பணியில் பெரும்பாலும் ஈடுபடுகின்றனர். மேலும் தேன் சேகரித்து வன இலாக்கா அதிகாரிகளுக்கும், நகர மக்களுக்கும் கொடுக்கின்றனர். பளியர்களின் வாழ்வியலும், வாழ்வியல் பொருளாதாரமும் குறிஞ்சி நிலத்தைச் சார்ந்ததாகவே உள்ளது. கடுக்காயானது பல நோய்களுக்கு மருந்தாகப் பயன்படுவதை,
“*இதன் கனி, வெளிப் புண்களுக்கும் காயங்களுக்கும் பல புண்களுக்கும் வாய்ப்புண்டுகளுக்கும் தடவப்படுகிறது.
*இது நொறுக்கிப் பவுடராக்கப்பட்டு, ஆஸ்துமாவைக் குணப்படுத்தப் புகைக்கப்படுகிறது.”
(கோடை மலை பழங்குடியினர்,பக்-72)
என்ற வரிகள் சுட்டிக்காட்டுகின்றன. பளியர் சேகரிக்கும் மலைபடுப் பொருட்கள் ஒவ்வொன்றும் தனிப்பட்ட மருத்துவ குணத்தையும், மனிதர்களுக்குப் பயன்படும் வாழ்வியல் பயன்பாடுகளையும் கொண்டுள்ளன. பளியர்கள் இவற்றின் விலைமதிப்பு தெரியாமலேயே மலைக்காடுகளில் சென்று சேகரிக்கின்றனர். அதனை நகரவாசிகள் எளிமையாகப் பெற்றுக்கொண்டு குறைந்த அளவு கூலி மற்றும் உணவுப் பொருட்களைக் கொடுக்கின்றனர். தற்போது வனத்திற்குள் பயம் இல்லாமல் செல்வதற்காக வனத்துறையில் பளியர்களில் ஒருவரையே அரசு வன அதிகாரியாக பணி நியமனம் செய்கிறது.
மன்னார்களும் பளியரும்
பளியர்கள் வசிக்கும் அய்யனார் அருவி மலைப்பகுதியின் மேற்கு பகுதியினைக் கடந்தால் தேவகிரி மலை வனப்பகுதி வரும். இம்மலையடிவாரங்களில் மன்னார்கள் என்ற ஒர் இன மக்கள் வசிக்கின்றனர். அங்கு செல்ல ஒரு நாள் வருவதற்கு ஒரு நாள் என்று இரண்டு நாட்கள் ஆகும். பளியர்கள் மன்னார்களை உறவு நிமித்தமாக பார்க்கச் செல்வது கிடையாது. வழிப் போக்காக அல்லது ஏதேனும் காரணத்திற்காக அப்பகுதியினைக் கடக்கும் போது மன்னார்களைச் சந்திக்கும் சூழல் ஏற்படும். அப்போது தங்களிடம் உள்ள பொருட்களை உபசரணை நிகழ்வு கருதி கொடுப்பர். மலைக்காட்டின் வழிப் பாதையின் கிடைக்கும் காட்டு காய்கள் மற்றும் பழங்களை உட்கொள்கின்றனர். மன்னார்கள் வசிக்கும் பகுதியில் அதிகளவு யானைகள் காணப்படுவதை,
“மேற்கே இறங்கியதும் மன்னர்கள் கொம்பு ஊதி வரவேற்பது போல யானைகளின் பிளிறல் சத்தம் இவர்களை வரவேற்றது. பாதை நெடுகிலும் யானைகளின் கழிவு லத்திகள் பழையவைக் காய்ந்து நார்நாராகம், புதியவை உருண்டைகளாகவும் காணப்பட்டன. அதன் நாற்றம் மூக்கைத் துளைத்தது. இரண்டு பக்கமும் மூங்கில் ஈத்தைக் காடுகள்”
(குறிஞ்சாம்பூ, பக் -181 )
என்ற நாவல் வரிகள் படம் பிடித்துக் காட்டுகின்றன.
மன்னார்கள் வசிக்கும் பகுதியில் காப்பித் தோட்டங்களும், தேயிலைத் தோட்டங்களும் இருந்தன. தோட்டங்களைக் கேரள அரசு யானைகள் சரணாலயம் அமைக்க கருதி அப்பகுதியில் உள்ள தோட்ட தொழிலாளர்களுக்கும், முதலாளிகளுக்கும் நஷ்ட ஈடு கொடுத்து அனுப்பிவிட்டது. இவ்வகையில் அப்பகுதியில் மனித நடமாட்டத்தைக் கேரள அரசு குறைத்தது. தோட்டங்கள் கவனிப்பின்றி புதர் மண்டி பட்டு போய் காணப்படுகின்றன. ஒரு சில தோட்டங்கள் மட்டும் அப்பகுதியில் காணப்படுகிறது. தேயிலை மற்றும் காப்பித் தோட்டங்களில் இம்மக்கள் பணி செய்கின்றனர். மேலும் வன இலாக்கா அதிகாரிகளிடமும் காட்டு வேலைகளில் ஈடுபட்டுகின்றனர்.
அப்பகுதியில் வாழும் மன்னார் இன பழங்குடி மக்கள் நல்ல பொன்னிறம் வாய்ந்தவர்களாகவும், பளியர்களைப் போன்று உயரம் உடையவர்களாகவும் காணப்படுகின்றனர். மன்னார்களைச் சந்திக்கும் பளியர்களுக்குக் கிழங்கும் வெல்லமும், மீன் உணவும் கொடுத்து உபசரிக்கின்றனர். மன்னார்கள் ஈத்தைப் புல்லால் ஆன குச்சில்களில் வாழ்கின்றனர்.
இம்மக்கள் மைதா மாவினைப் பிசைந்து கூக்க வாழை இலையில் பொதிந்து தீயில் வாட்டி ரொட்டி செய்து உண்கின்ற பழக்கம் உடையவர்களாக உள்ளனர். மன்னார்கள் வாழும் பகுதியில் படுகையாறு என்ற ஆறு ஓடுகிறது. அது நேரடியாக தேக்கடி நீர் தேக்கத்தை அடைகிறது. இப்பகுதி நீர்வளம் மிக்க பகுதி ஆதலால் நிறைய மீன்கள் இம்மக்களுக்கு உணவாகக் கிடைக்கின்றன.
ஆண்கள் மூங்கில் கம்புகள் அடங்கிய வள்ளத்தில் ஏறி நீண்ட மூங்கில் கம்பால் தரையை உன்னி படகு போல வள்ளம் செலுத்தி மீன் பிடிக்க செல்கின்றனர். சில ஆண்கள் அருகில் உள்ள மலைகளில் தேன் எடுக்க செல்கின்றனர். பெரும்பாலும் பெண்கள் முழங்கால் அளவு நீரில் நின்று கொண்டு மீன் கூட்டம் இருக்கும் இடத்திற்கு மெல்ல சென்று உடுத்தியிருக்கும் சேலைகளின் கீழ் பக்கத்தினை இரு கைகளால் பிடித்து மீன் அருகில் சென்று வேகமாக சேலைகளை மேலே தூக்குகின்றனர். சேலைக்குள் சிக்கிக்கொண்ட மீன்களை இடுப்புக்கு மேல் வரை தூக்கியவாறு கரையில் மீன்களைத் தட்டி விட்டு மீண்டும் ஆற்றில் இறங்கி மீன் பிடிக்கின்றனர். இச்செயல் களங்கம் இல்லாத இம்மக்களின் குணத்தைக் காட்டுவதாக அமைகிறது. ஆற்றிலிருந்து பிடித்த மீன்களைப் பானையில் கரைத்து வைத்திருக்கும் தினை மாவில் முக்கி வைக்கின்றனர். கரைப்பகுதியில் சுள்ளிகளைச் சேர்த்து தீ வளர்த்து குச்சிகளில் மீனைச் சொருகி தீயில் சுடுகின்றனர். ஆண்களும், பெண்களும் கரைக்கு வந்து அதனைச் சுவைத்து உண்கின்றனர். இம்மீன் உணவினைப் பளியர்களுக்கும் கொடுக்கின்றனர்.
முடிவுரை
இயற்கையன்னையின் மடியில் வாழும் வாழ்வு மகிழ்ச்சிகரமானது. அதற்கு இணங்க பளியர்களும் இயற்கையின் வரப்பிரசாதமான மலையின் மடியில் வாழ்கின்றனர். எனவே இம்மக்கள் நகர நாகரீகத்தின் வாடைக்காற்றைச் சுவாசித்ததில்லை. பெரும்பாலும் மலைச்சூழலில் தங்களுக்குத் தேவையான அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்து கொள்வதிலேயே இவர்களின் பொழுது கழிகிறது. அதுமட்டுமின்றி தங்களுக்கென்ற தனித்த பண்பாட்டையும் நாகரீகத்தையும் உருவாக்கி வாழ்கின்றனர். பளியர்களின் வாழ்வின் மூலாதாரமே மலையும் மலையின் சூழலுமாகும். ஏனெனில் இயற்கை நல்கும் வளங்களைச் சேகரித்து வாழ்வியலுக்கான பொருளாதாரத்தையும் ஈட்டிக் கொள்கின்றனர். இம்மக்களின் வாழ்வு சுதந்திரமான இயற்கைச் சார்பு மிக்க வாழ்வாக உள்ளது. சங்க கால மக்களின் வாழ்வியல் எச்சங்களான பளியர் பழங்குடியினரை மரபு மாறாமல் இயல்பு நிலையிலேயே வாழ நகர மக்கள் அனுமதித்தல் வேண்டும். மலைச் சூழலில் வாழ மக்களுக்கு அடிப்படைத் தேவைகள், கல்வி வசதி, போக்குவரத்து வசதி போன்றவை கிடைக்க அரசு வழிவகைச் செய்தல் வேண்டும்.
துணைநூற் பட்டியல் 
[1] அய்யப்பன்.கி, தமிழ்நாட்டில் பழங்குடியினர், விசாலட்சுமி பதிப்பகம், விழுப்புரம் மாவட்டம், முதற்பதிப்பு 2024.
[2] கோதண்டம்.கொ.மா, குறிஞ்சாம்பூ, காவ்யா வெளியீடு, சென்னை, முதற்பதிப்பு, 2017.
[3] கோதண்டம்.கொ.மா. ஆரண்ய காண்டம், காவ்யா வெளியீடு, சென்னை, முதற்பதிப்பு 2017.
[4] சற்குணவதி, மலையில் வாழும் மண்மக்கள் பளியர், குணவதி பதிப்பகம், சென்னை, முதற்பதிப்பு 2005.
[5] சிற்பி பாலசுப்பிரமணியம், முப்பத்திரண்டாம் கருத்தரங்க ஆய்வு கோவை 2001, சபாநாயகம் பிரிண்டர்ஸ், சிதம்பரம், முதற்பதிப்பு 2002.
[6] செல்வராசு.அ, சங்க இலக்கிய உரை வேறுபாட்டு களஞ்சியம் புறநானூறு, நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (பி) லிட், சென்னை, முதற்பதிப்பு 2024.
[7] நாராயணசாமி.இரா, திருக்குறள் இனிய உரை, நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (பி) லிட், சென்னை, இருபதாம் பதிப்பு 2019.
[8] பரமசிவம்.மா, சங்க இலக்கிய உரை வேறுபாட்டு களஞ்சியம் அகநானூறு தொகுதி ஒன்று, நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (பி) லிட், சென்னை, முதற்பதிப்பு 2024.
[9] பாலாஜி.க, நற்றினை தொகுதி ஒன்று, நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (பி) லிட், சென்னை, முதற்பதிப்பு 2024.
[10]மாரிஸ்வரி.வை,“கொ.மா.கோதண்டத்தின் சிறுகதைகள் காட்டும் சமுதாய வாழ்வியல்”, இளமுனைவர் பட்ட ஆய்வேடு, மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம், திருநெல்வேலி, 2010.
[11] முத்தையா.ஓ , ஆலவட்டம், காவ்யா வெளியீடு, சென்னை, முதற்பதிப்பு 2019.
[12]ராஜாங்கம்.இரா, மலையாளி இன மக்களின் நாட்டுப்புற மருத்துவம் (பாப்பிரெட்டிப்பட்டி வட்டம்), ஆய்வியல் நிறைஞர் ஆய்வேடு, பாரதியார் பல்கலைக்கழகம், கோயம்புத்தூர்.
[13] ஜான் கென்னடி. சே.ச, கோடை மலை பழங்குடியினர், முகில் வெளியீடு, மதுரை, முதற் பதிப்பு 1999.
[14] ஜனநேசன், ஏலோ…லம், பாரதி புத்தகாலயம், சென்னை, முதற்பதிப்பு 2022.

Leave a comment

Trending