கொங்குநாட்டு வரலாறு
(சங்க காலம் முதல் ஐரோப்பியர் காலம் வரை)

ஷா.முஹம்மது அஸ்ரின்

முனைவர்ப் பட்ட ஆய்வாளர் (முழு நேரம்),
முதுகலைத் தமிழாய்வுத்துறை, ஜமால் முகமது கல்லூரி (தன்னாட்சி), திருச்சி – 20.
(திருச்சிராப்பள்ளி பாரதிதாசன் பல்கலைக்கழக இணைவு பெற்றது)
+91 9791309243 smdazrin1998@gmail.com

ஆய்வுச் சுருக்கம்
சங்க காலம் முதல் இக்காலம் வரை தமிழகத்தின் வடமேற்காக அமைந்துள்ள குறிப்பிட்ட நிலப்பகுதிகள் ‘கொங்கு நாடு’ எனும் பெயரில் வழங்கப்படுகின்றன. சேரர்கள், சோழர்கள், பாண்டியர்கள், பல்லவர்கள் ஆகிய மன்னர்களால் ஆட்சி செய்யப்பட்ட பகுதிகள் முறையே சேர நாடு, சோழ நாடு, பாண்டிய நாடு, தொண்டை நாடு என ஆட்சிபுரிந்த மன்னர்களோடு தொடர்புபடுத்தி அழைக்கப்பட்டதை அனைவரும் அறிவர். எனினும், ‘கொங்கு’ எனும் சொல்லை ஆராய்கையில் ஆட்சியாளர்களின் பெயரோடு சிறிதும் தொடர்பற்றதாகவே அமைந்துள்ளதை அறிய முடிகின்றது. நிலத்தின் அமைப்பையும், வளங்களையும் அடிப்படையாகக் கொண்டு ‘கொங்கு’ எனும் சொல் வழங்கப்பட்டதை இலக்கியச் சான்றுகள் மெய்ப்பிக்கின்றன. மேலும், கொங்குப் பகுதிகளை ஆட்சி செய்ததன் அடிப்படையிலேயே சோழ மன்னர்களில் ஒரு பிரிவினர் ‘கொங்குச் சோழர்கள்’ என்றும், பாண்டிய மன்னர்களில் ஒரு பிரிவினர் ‘கொங்குப் பாண்டியர்கள்’ என்றும் அழைக்கப்பட்டுள்ளனர். சங்க காலம் தொடங்கி ஐரோப்பியர் காலம் வரை மூவேந்தர்கள், கடையேழு வள்ளல்கள், குறுநில மன்னர்கள், பல்லவர்கள், ஹோய்சலர்கள், கங்கர்கள், இராஷ்டிரகூடர்கள், கொங்குச் சோழர்கள், கொங்குப் பாண்டியர்கள், மதுரை சுல்தான்கள், மலைநாட்டு சிற்றரசர்கள், உம்மத்தூர் உடையார்கள், விஜயநகர அரசர்கள், நாயக்கர்கள், மைசூர் அரசர்கள், ஆற்காடு நவாப்கள், ஆங்கிலேயர்கள் எனப் பல்வேறு அரசுகளால் கொங்குப் பகுதிகள் ஆட்சிசெய்யப்பட்டுள்ளன. ஒவ்வொரு அரசின் ஆட்சியின்கீழ் கொங்கு நாட்டின் எல்லைகள் வரையறுக்கப்பட்டுப் பல்வேறு பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன. இவ்வாறாக இலக்கியங்கள், கல்வெட்டுகள், செப்பேடுகள், அறிஞர் பெருமக்களின் குறிப்புகள், அகழாய்வு மற்றும் தொல்லியல் சான்றுகள் முதலானவற்றை அடிப்படையாகக் கொண்டு கொங்கு நாட்டின் வரலாற்றை ஆராய்ந்து விளக்கிட இக்கட்டுரை முனைகின்றது.
திறவுச்சொற்கள்
கொங்கு நாடு – எல்லைகள் – பிரிவுகள் – சங்க காலம் – மூவேந்தர்கள் – பல்லவர் காலம் – சோழர் காலம் – நாயக்கர் காலம் – ஐரோப்பியர் காலம் – இலக்கியச் சான்றுகள் – கல்வெட்டுகள் – அகழாய்வு மற்றும் தொல்லியல் சான்றுகள்
முன்னுரை
தமிழகத்தின் வரலாற்றுச் சான்றுகள் சங்க காலம் முதற்கொண்டு இலக்கியப் பாடல்கள் வழியாகக் கிடைக்கப் பெறுகின்றன. ஆதிகாலம் முதல் தமிழகத்தின் ஒரு பகுதியாக விளக்கும் கொங்கு நாட்டிற்குத் தமிழக வரலாற்றில் முக்கிய இடமுண்டு. அப்பகுதி வாழ் மக்களின் வரலாறு தமிழ் மக்கள் வரலாற்றின் ஒரு பகுதியாகவும் விளங்குகிறது. கொங்கு நாட்டின் வரலாற்றின்றி தமிழக வரலாறு முழுமைபெறாது. ஒரு நாட்டின் வரலாற்றை அறிவதற்கும், அவ்வரலாற்றை விளக்கி மெய்ப்பிக்கும் சான்றுகளாக இலக்கியங்கள் (Literatures), சாசன எழுத்துகள் (Epigraphy), பழங்காசுகள் (Numismatics), அகழ்வாராய்ச்சிகள் (Archaelogies), தொல்பொருட்கள் (Antiquites), கல்வெட்டுகள் மற்றும் செப்பேடுகள் (Inscriptions), அயல்நாட்டார் குறிப்புகள் (Foreigners Notes) ஆகியன விளங்குகின்றன. இவற்றைத் துணையாகக் கொண்டு சங்க காலம் முதல் ஐரோப்பியர் காலம் வரையிலான கொங்கு நாட்டின் வரலாற்றை ஆராய்ந்து விளக்கிடும் வகையில் இக்கட்டுரை அமைகின்றது.
ஆய்வு முன்முயற்சிகள்
சங்க காலக் கொங்கு நாட்டின் நிலையினை ஆராய்ந்துரைக்கும் வகையில் மயிலை சீனி வேங்கடசாமியின் ‘கொங்கு நாட்டு வரலாறு (பழங்காலம் – கி.பி. 250 வரையில்)’ என்ற நூலும், இரா.வடிவேலனின் ‘சங்க காலக் கொங்கு நாடு’ என்ற நூலும் விளங்குகின்றன. மேலும், ‘கொங்கு நாட்டு வரலாறு’ எனும் பெயரில் ம.இராமச்சந்திரன் செட்டியாராலும், யா.லட்சுமி நாராயணனாலும் கொங்கு நாட்டின் வரலாற்றை ஆய்ந்துரைக்கும் வகையில் தனித்தனியே எழுதப்பட்டுள்ள இரு நூல்களும் இவ்வாய்வுக் கட்டுரைக்கு முன்னோடிகளாகவும் வழிகாட்டிகளாகவும் அமைந்துத் துணைபுரிந்துள்ளன.
ஆய்வு அணுகுமுறைகள்
இலக்கியங்கள், பழங்காசுகள், கல்வெட்டுகள், செப்பேடுகள், அகழாய்வு மற்றும் தொல்லியல் சான்றுகளின் அடிப்படையில் சங்க காலம் தொடங்கி ஐரோப்பியர் காலம் வரையிலான கொங்கு நாட்டின் வரலாறு ஆராயப்பட்டுள்ளதால் ‘வரலாற்று முறை’ அணுகுமுறையும், வரலாற்றுத் தரவுகளைப் பல்வேறு அறிஞர் பெருமக்களின் குறிப்புகளோடு விளக்கியுள்ளதால் ‘விளக்க முறை’ அணுகுமுறையும் இவ்வாய்வில் பயன்படுத்தப்பட்டுள்ளன.
கொங்கு – பெயர்க்காரணம்
‘கொங்கு’ என்பது ஏற்றத்தாழ்வாகவும், மேடுபள்ளங்களாகவும் அமைந்த நிலப் பகுதியைக் குறிக்கும் சொல்லாகும். இயற்கை அமைப்பால் மேடுபள்ளங்களான குறிஞ்சி மற்றும் முல்லை நிலங்களைக் கொண்டு விளங்கியதால் ‘கொங்கு’ எனப் பெயர் வந்ததாகக் கூறப்படுகிறது. மேலும், குடகு மற்றும் துளு நாட்டிற்குக் கிழக்குத் திசையில் தாழ்வாக (குணக்காக) இருந்த நாடு ‘குணக்கு’ நாடாகிப் பின்னர் ‘கொங்கு நாடு’ எனப் பெயர் பெற்றதாகவும் கூறுவர். இதுகுறித்து, “கொங்கு என்பது சேர நாட்டின் பெயர்களுள் ஒன்று. குடகு என்பதைப் போலவே கொங்கு என்பதும் மேடு பள்ளமான வளைந்த நிலத்தைக் குறிக்கும். இந்த நில அமைப்பின் காராணமாகவே கொங்கு நாட்டிற்குக் கொங்கு என்ற பெயர் ஏற்பட்டது என்னும் முறையான கருத்து ஒன்றைப் பல ஆராய்ச்சியாளர்கள் வலியுறுத்தியுள்ளனர்” (லட்சுமி நாராயணன்.யா, கொங்கு நாட்டு வரலாறு, ப.13) என லட்சுமி நாராயணன் விளக்கியுள்ளதைக் காண முடிகின்றது.
மலைகளும் (குறிஞ்சி), காடுகளும் (முல்லை) நிறைந்த நிலப் பகுதிகளைக் கொண்ட நாடாகக் கொங்கு நாடு விளங்குகிறது. மலைத்தேன் மற்றும் காட்டுத்தேன் மிகுதியாகக் கிடைக்கும் நாடாகவும், அவற்றை மிகுதியான அளவில் பயன்படுத்தும் மக்கள் வாழும் பகுதியாகவும் விளங்கியதால் ‘கொங்கு நாடு’ எனப் பெயர் வந்ததாகக் கூறுவர். தேன் மலிந்த நாடாகக் கொங்குப் பகுதி விளங்கியதை, “கொங்குதேர் வாழ்க்கை அஞ்சிரைத் தும்பி” (குறுந்தொகை, பா.2:1) என்பதால் அறிய முடிகிறது. ‘கொண்’ என்னும் சொல்லிற்கு ‘வீண்’ என்பது பொருள். வேளாண்மைக்குப் பயன்படாத குறிஞ்சி நிலப்பகுதியாக விளங்கியதால் ‘கொண் கான நாடு’ என வழங்கப்பட்டுப் பிற்காலத்தில் ‘கொங்கு நாடு’ எனத் திரிந்துள்ளது. இதனை உறுதிசெய்யும் வகையில், “கொங்கு நாட்டின் பெரும்பகுதி மலையாகவும் காடுகளாகவும் பயிர்த்தெழிலுக்குப் பயன்படாத நிலங்களாக உள்ளன. எனவே பயனற்ற காடுகள் நிறைந்த நாடு என்ற பொருளில் கொண்கானம் எனக் குறிக்கப்பட்டு இப்பெயரே கொங்கு என மாறியது என்ற கருத்து ஓரளவு பொருத்தமாகவே தோன்றுகிறது. ஆயினும் நாம் இக்கருத்தையும் உறுதியாகக் கொள்வதற்கில்லை” (இராமமூர்த்தி.வீ, கொங்கு நாட்டுக் கவுண்டர்கள், ப.6) எனும் வீ.இராமமூர்த்தியின் குறிப்பு அமைந்துள்ளது.
‘கொங்கு’ என்ற சொல்லுக்கு ‘மணம்’ என்ற பொருளும் உண்டு. குறிஞ்சியிலும் முல்லையிலும் மலர்கள் நிறைந்துப் பூத்துக் குழுங்க மணத்தோடு விளங்கியதால் ‘மண (கொங்கு) நாடு’ என்ற பெயரால் வழங்கப்பட்டுள்ளதாகக் கருத முடிகின்றது. இதனை, “கொங்கலர் பூம்பொழில் குறுகினர்” (சிலப்பதிகாரம். 10:220) எனும் இளங்கோவின் கூற்று உறுதிசெய்கின்றது. மேலும், கொங்கு மண்டலப் பகுதிகளைக் குறிக்கக் ‘கொங்காணம்’ எனும் சொல் பயன்படுத்தப்பட்டுள்ளதைக் கல்வெட்டுகள் வழியாக அறிய முடிகின்றது. இதுகுறித்து சி.கோவிந்தராசன் அவர்கள், “இதனைக் (கொங்காணம்) கொங்கு மண்டலம் என்று கூறும் வழக்கமும் உண்டு” (கோவிந்தராசன்.சி, கொங்கு நாட்டுக் கல்வெட்டுகள், ப.1) எனத் தனது நூலில் குறிப்பிட்டுள்ளார்.
கொங்கு நாட்டு எல்லைகள்
சங்க காலக் கொங்குப் பகுதியானது இன்றைய கொங்கு பகுதியைக் காட்டிலும் மிகப்பெரிய அளவில் பரந்துவிரிந்து விளங்கியது. அக்காலத்தில் ‘கொங்கு நாடு’ என அழைக்கும் நிலையில் தனிப்பெரும் நாடாகக் கொங்குப் பகுதி விளங்கியதைக் “கொங்கு புறம்பெற்ற கொற்ற வேந்தே!” (புறநானூறு, பா.373:8), “ஆகெழு கொங்கர் நாடு” (பதிற்றுப்பத்து, பா.22:15), “வாடாப் பூவின் கொங்கர் ஓட்டி” (அகநானூறு, பா.253:4) முதலான சங்க இலக்கியப் பாடல் அடிகளால் அறிய முடிகின்றது. மேலும்,
“கொங்கு நாடு கடந்துபோய்க்
குலவு மலைநாட் டெல்லையுற”
(கழறிற்றறிவார் நாயனார் புராணம், பா.141)
எனும் பெரியபுராணப் பாடலால் பிற்காலத்திலும் தனி நாடாகக் கொங்கு விளங்கியதை உறுதிப்படுத்துகிறது. மேலும், ‘தமிழ் மண்டிலம் ஐந்து’ எனத் திருமந்திரத்திலும், ‘வியன் தமிழ்நாடு ஐந்து’ எனத் தண்டியலங்காரப் பழைய மேற்கோள் பாடலிலும் தமிழ்நாடு ஐந்து உட்பிரிவுகளைக் கொண்டு விளங்கியதாகக் கூறப்பட்டுள்ளதைக் காண முடிகின்றது. இவற்றின் வாயிலாகச் சேரநாடு, சோழநாடு, பாண்டிய நாடு, தொண்டை நாட்டுடன் கொங்கு நாட்டையும் சேர்த்துத் தமிழ்நாடு ஐந்து எனக் கூறும் வழக்கம் முற்காலத்தில் இருந்தது தெளிவாகிறது.
ஒரு நாட்டின் முதலுறுப்பாக அந்நாட்டின் எல்லைகளும், இயற்கை அமைப்புகளும் விளங்குகின்றன. முற்காலக் (கடைச்சங்க கால) கொங்கின் கிழக்கு, மேற்கு, வடக்கு, தெற்கு எல்லைகளை “அதன் தெற்கு எல்லைக்கு அப்பால் பாண்டி நாடு இருந்தது. அதன் மேற்கு எல்லை சையகிரி (மேற்குத் தொடர்ச்சி) மலைகள். மேற்குத் தொடர்ச்சி மலைகளுக்கு மேற்கே சேரநாடும் துளுநாடும் இருந்தன. கொங்கு நாட்டின் கிழக்கு எல்லைக்கப்பால் சோழநாடும் தொண்டை நாடும் இருந்தன. அதன் வடக்கு எல்லை, மைசூரில் பாய்கிற காவிரியாறு (சீரங்கப்பட்டணம்) வரையில் இருந்தது.” (சீனி வேங்கடசாமி.மயிலை, கொங்கு நாட்டு வரலாறு, பக்.11-12) என மயிலை சீனி வேங்கடசாமி குறிப்பிட்டுள்ளதைக் காண முடிகின்றது.
“வடக்குப் பெரும்பாலை வைகாவூர் தெற்கு
குடக்குப் பொருப்புவெள்ளிக் குன்று கிடக்கும்
களித்தண் டலைமேவுங் காவிரிசூழ் நாட்டுக்
குளிர்தண் டலையளவு கொங்கு.”
(கொங்கு மண்டல சதகம், பா.4)
எனும் பாடலில் வடக்கில் தலைமலையும் (பெரும்பாலை), தெற்கில் வைகாவூரும் (பழனி), மேற்கில் வெள்ளி மலையும், கிழக்கில் குளித்தலையும் கொங்கு நாட்டின் எல்லைகளாகக் குறிப்பிடப்பட்டுள்ளதைக் காண முடிகின்றது. மேலும்,
“மதிற்கரை கீட்டிசை தெற்குப் பழனி மதிகுடக்குக்
கதித்துள வெள்ளி மலைபெரும் பாலை கவின்வடக்கு
விதித்துள நான்கெல்லை சூழ வளமுற்று மேவிவிண்ணோர்
மதித்திட வாழ்வு தழைத்திடு நீள்கொங்கு மண்டலமே!”
(கொங்கு மண்டல சதகம், பா.2)
என்ற பாடலில் கிழக்கில் மதிற்கரை எல்லையும் (குளித்தலை), தெற்கில் பழனியும், மேற்கில் வெள்ளி மலையும், வடக்கில் பாலையும் (தலைமலை) கொங்கு நாட்டின் எல்லைகளாக அமைந்திருந்ததாகக் கூறப்பட்டுள்ளன. இவை அனைத்தும் பிற்காலச் செய்யுள்கள் வாயிலாக அறியவரும் கொங்கு நாட்டின் எல்லைகள் என்பது குறிப்பிடத்தக்கது.
கொங்கு நாட்டின் பிரிவுகள்
“கொங்கு நாடு வட கொங்கு, தென் கொங்கு, மழ கொங்கு (கிழக்கு), மேல் கொங்கு என்னும் பிரிவுகளைக் கொண்டிருந்தது” (வடிவேலன்.இரா, சங்க காலக் கொங்கு நாடு, ப.55) என்கிறார் இரா.வடிவேலன். கோவையின் கிழக்கு, பல்லட வட்ட வடபகுதி, அவிநாசி, கோபி, பவானி, ஈரோடு ஆகிய பகுதிகள் ‘வட கொங்கு’ என்றும், கோவையின் தென்பகுதி, பல்லட வட்டத்தின் தென்பகுதி, பொள்ளாச்சி, உடுமலை, தாராபுரம், கரூர், பழனி, திண்டுக்கல் ஆகிய பகுதிகள் ‘தென் கொங்கு’ என்றும் அழைக்கப்படுகின்றன. கோவையின் வடக்கு, அவிநாசிக்கு மேற்கேயுள்ள பகுதிகள் ‘மேல் கொங்கு’ (மீ கொங்கு) எனவும், காவிரிக்கு கிழக்கிலுள்ள பகுதிகளான திருச்செங்கோடு, சேலம், இராசிபுரம், நாமக்கல், கரூரின் கிழக்குப் பகுதி ஆகியன ‘மழ கொங்கு’ (கீழ் கொங்கு) எனவும் கூறப்படுகின்றன.
“குடகக் கொங்கர் … ”
(சிலப்பதிகாரம், 30:159)
“ஆரூரன் தம்பிரான் ஆரூரன் மீகொங்கில்”
(ஏழாம் திருமுறை, கோயிற் பதிகம், பா.10)
“மழ கொங்கம் அடுப்படுத்தும் ……”
(வேள்விக்குடிச் செப்பேடு)
ஆகிய இலக்கிய மற்றும் செப்பேடுக் குறிப்புகளில் மேல் கொங்கு மற்றும் கீழ் கொங்குப் பகுதிகள் குறிப்பிடப்பட்டுள்ளதைக் காணமுடிகின்றது. இவற்றுள் மேல் கொங்கினைக் குறிக்க இளங்கோவடிகள் ‘குட’ எனும் சொல்லைப் பயன்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.
மேலும், கொங்கு நாடு செழிப்பாக இருந்த காலத்தில் பூந்துறை நாடு, தென்கரை நாடு, காங்கய நாடு, பொன்கலூர் நாடு, ஆறை நாடு, வாரக்க நாடு, திருவாவினன்குடி நாடு, மண நாடு, தலைய நாடு, தட்டய நாடு, பூவாணிய நாடு, அரைய நாடு, ஒடுவங்க நாடு, வடகரை நாடு, கிழக்கு நாடு, நல்லுருக்கா நாடு, வாழவந்தி நாடு, அண்ட நாடு, வெங்கால நாடு, காவடிக்கா நாடு, ஆனைமலை நாடு, ராசிபுரம் நாடு, காஞ்சிக் கோவில், குறுப்பு நாடு என 24 உட்பிரிவுகளைக் கொண்டு விளங்கியுள்ளது. இதனை மெய்ப்பிக்கும் வகையில் கார்மேகக் கவிஞரின் பாடலிலும், வாலசுந்தரக் கவிராயர் பாடலிலும் இடம்பெற்றுள்ள ‘நாலாறு நாடு’ எனும் தொடர் அமைந்துள்ளதைக் காண முடிகின்றது.
“நாலா கலையலை வாரிதி மாந்தி ஞயம்பொருந்தத்
தோலா மொழிக டிகழ்நா வலர்கள் சுகம்பொருந்த
நாலாறு நாடு மிணைநாட்டுங் குஞ்சரி நாதனுடன்
மாலால கண்ட ரமர்பதி சேர்கொங்கு மண்டலமே”
(கொங்கு மண்டலச் சதகம், பா. 3)
“நாலாறு நாடது நாற்பத்தெண் ஆயிரம் நற்கொங்கு சேர்
பாலான கங்கைதன் வங்கிசத் தோர்பச்சைப் பார்ப்பதியூர்
சேலாங் கருணை வடிவுடை நாயகி சேரும்வஞ்சி
மாலாங் கமலம் அமுதூட்டுவார்கொங்கு மண்டலமே”
(கொங்கு மண்டலச் சதகம், பா. 4)
ஆகிய கொங்கு மண்டலச் சதகப் பாடல்கள் வழியாகவும் இருபத்தி நான்கு உட்பிரிவுகளைக் கொண்ட நாடாகக் கொங்கு நாடு விளங்கியது உறுதியாகின்றது. “நாலாறு நாடுகளுக்கு பூந்துறை நாடு தலைமை நாடாக விளங்கியது” (வடிவேலன்.இரா, சங்க காலக் கொங்கு நாடு, ப.57) என்கிறார் இரா.வடிவேலன். பிற்காலத்தில் மக்கள் பெருக்கத்தின் காரணமாக உள்நாடுகள் (நாலாறு நாடுகள்) 42 நாடுகளாகப் பிரிந்து, இன்று தனி மாவட்டங்களாகவும், மாநகராட்சிகளாகவும் இயங்கி வருகின்றன. நீலகிரி, கோவை, திருப்பூர், ஈரோடு, நாமக்கல், சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களும், கரூர் மாவட்டத்தின் குளித்தலை, திண்டுக்கல் மாவட்டத்தின் பழனி ஆகிய நிலப்பகுதிகளும் இன்று கொங்கு நாட்டுப் பகுதிகளாக விளங்குகின்றன.
சங்க காலத்தில் கொங்கு நாடு (கி.மு.600 – கி.பி.300)
கொங்கு நாட்டுப் பகுதிகளைப் பல வேந்தர்களும், வேளிர்களும் தலைநகராகக் கொண்டு ஆட்சி புரிந்துள்ளனர். அத்தி, அதிகமான், ஆய், இருங்கோவேள், ஈரந்தூர்கிழான், தோயன் மாறன், ஏற்றை, ஓரி, கங்கன், கட்டி, கடிய நெடுவேட்டுவன், திருமுடிக்காரி, குமணன், கொடுமுடி, கொண்கானங் கிழான், தாமான் தோன்றிக்கோன், தித்தன், நள்ளி, நன்னன், பண்ணன், பாரி, பழையன், பிட்டன் கொற்றன், புன்றுறை, பேகன், மாவேள் எவ்வி, விச்சிக்கோ ஆகியோர் கொங்குப் பகுதிகளை ஆட்சி புரிந்ததைச் சங்க இலக்கியப் பாடல்கள் உறுதிப்படுத்துகின்றன.
மூவேந்தர்களுள் ஒருவராக விளங்கிய சேர மன்னர்கள் கொங்கு நாட்டை ஆட்சி செய்துள்ளனர். இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன் உம்பற்காட்டு (ஆனைமலை) 500 ஊர்களைப் பிரம்மதேயமாகக் கொடுத்ததாகக் குமட்டூர் கண்ணனார் பாடியுள்ளார். “கி.பி முதல் நூற்றாண்டின் தொடக்கத்தில் பாலக்காட்டுக் கணவாய் வழியாகக் கொங்கு நாட்டிற்கு வந்த சேரர்கள் கொங்கு நாட்டின் தென் பகுதியில் சில ஊர்களைக் கைப்பற்றினர்” (முருகராஜ்.ஆ, விஜயமங்கலம், ப.8) என்கிறார் முருகராஜ். கி.பி. 3-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த குட்டுவன் கோதையின் வெள்ளிக்காசு ஆத்துபொள்ளாச்சியில் கண்டெடுக்கப்பட்டுள்ளது. இவற்றின் வாயிலாகச் சங்க காலத்தில் கொங்கு நாட்டுப் பகுதிகளைச் சேர மன்னர்கள் ஆட்சி புரிந்தது உறுதியாகிறது.
“கடையெழு வள்ளல்கள் என அழைக்கப்படும் அனைவரும் கொங்கு நாட்டின் புரவலர் பரம்பரையினரே” (மாணிக்கம்.இரா.கா, கொங்கும் தமிழும், ப.64) எனக் கடையெழு வள்ளல்களைக் கொங்கு நாட்டோடு தொடர்புபடுத்திக் குறிப்பிட்டுள்ளார் இரா.கா.மாணிக்கம். கடையெழு வள்ளல்களில் ஒருவனான அதிகமான் தகடூரைத் (தருமபுரி) தலைநகராகக் கொண்டு தெற்கே நாமக்கல் பகுதி வரை ஆட்சி புரிந்துள்ளான். நாமக்கலில் கிடைத்த பெருங்கற்குன்று ஆலயக்குகைக் கல்வெட்டில் ‘அதியேந்திர விஷ்ணுக்கிரகம்’ எனப் பொறிக்கப்பட்டுள்ளது. இது நாமக்கலை ஆட்சிபுரிந்த அதிகமானால் கட்டப்பட்ட ஆலயம் என்பது தெளிவாகிறது. மேலும், தருமபுரிக்கு தெற்கே ‘அதமன் கோட்டை’ என்னும் பெயரில் ஊர் அமைந்துள்ளது. “இது ‘அதிகமான் கோட்டை’ என்பதன் திரிபு” (வடிவேலன்.இரா, சங்க காலக் கொங்கு நாடு, ப.89) என்கிறார் இரா.வடிவேலன். அதிகமான் ஔவைக்குக் கொடுத்த அரிய நெல்லிக்கனி சேலம் மாவட்டத்தை அடுத்த கஞ்சமலையில் விளைந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது. “ஔவையார் பட்டி, ஔவையாரம்மன் கோயில் ஆகியன கொங்கு நாட்டில் இருக்கின்றது” (வடிவேலன்.இரா, சங்க காலக் கொங்கு நாடு, ப.90) எனப் பதிவுசெய்துள்ளதைக் காணமுடிகின்றது. இவை அதிகமானுக்கும் கொங்கு நாட்டிற்கும் இடையேயான தொடபினை உறுதிசெய்கின்றன.
திருக்கோயிலூர்க்கு மேற்கே தென்பெண்ணையாற்றின் தென்கரை அடங்கிய பகுதி ‘மலாடு’ ஆகும். கடையெழு வள்ளல்களில் ஒருவனான காரி கொங்கு நாட்டைச் சேர்ந்த நடுநாட்டின் தலைமை ஊரான திருக்கோயிலூரைத் தலைநகராகக் கொண்டு மலாட்டை ஆட்சி புரிந்தான். இவன் ‘மலையமான் திருமுடிக்காரி’, ‘மலையமான்’, ‘கோவற் கோமான்’ போன்ற பெயர்களால் அழைக்கப்படுகிறான். கொங்கு நாட்டுப் பகுதியான வையாவி (வையாபுரி என்றும் வழங்குவர்) நாட்டிலுள்ள பொதினி (பழனி) மலையைத் தலைநகராகக் கொண்டு பேகன் ஆட்சி புரிந்தான். ஆவியர் குடியில் பிறந்த இம்மன்னன் கடையெழு வள்ளல்களில் ஒருவனாக விளங்குகிறான்.
பொதிகை மலைத் தலைவனான ஆய் அண்டிரன் ஆய்குடியைத் தலைநகராகக் கொண்டு ஆட்சி புரிந்துள்ளான். இவனை ‘ஆய்’, ‘வேள் ஆய்’, ‘அண்டிரன்’ எனப் பல பெயர்களால் புலவர்கள் பாடியுள்ளனர். இம்மன்னர்களைக் குறித்த பாடல்கள் புறநானூறு, அகநானூறு, குறுந்தொகை, நற்றிணை, சிறுபாணாற்றுப்படை முதலான சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளதைக் காண முடிகின்றது.
ஓரி எனும் மன்னன் கொல்லி மலையைத் தலைநகராகக் கொண்டு ஆட்சிபுரிந்தான். இவன் கடையெழு வள்ளல்களில் ஒருவனாகவும், சிறந்த வில்லாளியாகவும் விளங்கினான். இவனுக்கு ‘வல்வில் ஓரி’, ‘ஆதன் ஓரி’ ஆகிய வேறு பெயர்களும் உண்டு. இம்மன்னைப் புகழ்ந்து சங்க இலக்கியங்களிலும், பிற்கால இலக்கியங்களிலும் பாடல்கள் பாடப்பட்டுள்ளன.
“விரையார் தொடையணி மூவேந்தர் ஆசை மிகுந்து நச்சத்
தரைமீது எலாவளமும் செறி கொல்லித் தட வரையான்
துரையாய்த் தமிழ்மொழிக்கு அல்லும் பகலும் சுரந்து செம்பொன்
வரையாது அளித்த நல் ஓரி வள்ளல் கொங்கு மண்டலமே”
(கொங்கு மண்டல சதகம், பா.43)
முதிர மலையையும் (பழனி மலைத்தொடரில் உள்ள மலை), அதனை சுற்றியுள்ள பகுதிகளையும் கடையெழு வள்ளல் காலத்திற்குப் பிற்பட்ட சிற்றரசனான குமணன் ஆட்சி புரிந்தான். இம்மலையானது வள்ளல் பேகன் காலத்தில் ஆவியர் குடிக்கு உரியதாயிருந்துப் பின் குமணனுக்கு உரியதானது. இம்மலையின் அடியில் ‘குமண மங்கலம்’ எனும் ஒரு சிற்றூர் உள்ளது. தனது தலையை வெட்டித் தம்பியிடம் கொடுத்துப் பரிசினைப் பெற்று வறுமை நீங்கி வாழுமாறு புலவரிடம் வாளைக் கொடுத்ததைக் கார்மேகக் கவிஞரின் பாடலால் அறிய முடிகிறது.
“நாட்டினைத் தம்பி கொளக் காடு சென்று நலிவுறுநாள்
பாட்டிசைத்தோர் புலவன் வேண்ட என்தலை பற்றியறுத்து
ஈட்டி என் தம்பியிடத்து ஈயில் கோடி பொன் எய்துமென்று
வாட்டங் கைத் தருமக் குமணன் கொங்கு மண்டலமே”
(கொங்கு மண்டல சதகம், பா.41)
கொங்கு நாட்டுப் பகுதிகளான பொள்ளாச்சி, வெள்ளலூர், கரூர், கலயமுத்தூர் ஆகிய இடங்களில் ரோமானிய நாணயங்கள் கிடைத்துள்ளன. “பெரும்பான்மையான நாணயங்கள் கி.மு. 44 – கிபி. 117 காலத்தைச் சேர்ந்தவை, சில நாணயங்கள் கி.பி. 180 – கி.பி. 323 காலகட்டத்தைச் சேர்ந்தவை” (இராமச்சந்திரன் செட்டியார்.ம, கொங்கு நாட்டு வரலாறு, ப.68) என இராமச்சந்திரன் செட்டியார் குறிப்பிட்டுள்ளார். மேலும், கோவையை அடுத்த போத்தனூரில் கண்டெடுக்கப்பட்ட மட்குடத்தில் 121 வெள்ளி நாணயங்கள் இருந்தன. அவை கி.மு. 44 முதல் கி.பி. 337 வரை ரோம நாட்டை ஆட்சிபுரிந்த அரசர்களின் நாணயங்கள் என அறிவியல் பூர்வமாக மெய்ப்பிக்கப்பட்டன.
“10-வது நூற்றாண்டுக்கு முன்னர் அகப்பட்ட நாணயங்கள் அனைத்தும் எல்லாம் உரோமானியருடையனவே. தமிழக அரசர்களுடைய நாணயங்கள் 10-வது நூற்றாண்டுக்கு முன்னர் கிடைக்கவில்லை” (இராமச்சந்திரன் செட்டியார்.ம, கொங்கு நாட்டு வரலாறு, ப.73) என்கிறார் ம.இராமச்சந்திரன் செட்டியார். ஆனால், கோவையில் கி.மு. 3-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த நாணயத்தில் ‘அதியமான்’ எனத் தமிழ்-பிராமி எழுத்துக்களில் பெயர் பொறிக்கப்பட்ட நாணயத்தை இரா. கிருஷ்ணமூர்த்தி கண்டுபிடித்துள்ளதாக நாளிதழில் (தினமலர், நவம்பர் 29, 2005) செய்தி வந்துள்ளது. நாணயத்தின் மத்தியில் வலப்பக்கம் நோக்கி நிற்கும் குதிரையின் முன்பகுதியில் ஒரு கையில் கேடயமும், மறு கையில் வாளையும் ஏந்தியவாறு உருவம் பொறிக்கப்பட்டுள்ளது. அவ்வுருவம் அணிந்திருக்கும் தலைக் கவசத்தில் கிரேக்கப் போர் வீரர்கள் அணியும் அலங்கார முடியமைப்பு காணப்படுகிறது. “இந்தியாவிலேயே 70% ரோமானியக் காசுகளில் கோவை மாவட்டத்தில் மட்டும் கிடைத்துள்ளது” (ஸ்ரீதர்.தி.ஸ்ரீ (ப.ஆ), கோயம்புத்தூர் மாவட்டத் தொல்லியல் கையேடு, ப.18) எனும் குறிப்பு காணப்படுகின்றது.
கொடுமணலில் கி.மு. 3 – கி.பி. 3-ஆம் நூற்றாண்டு காலத்தைச் சேர்ந்த மணிகள், சங்குகள், வளையல்கள், உலோகப் பொருட்கள், ரோமானிய கருப்பு சிவப்பு மட்கலன்கள், செம்பு நிற மட்கலன்கள் ஆகியன கிடைத்துள்ளன. “இங்குப் பச்சைக்கல், நீலக்கல், பளிங்கு, சூதுபவளம், ஜேஸ்பர், அகேட், குருந்தம், வைடூரியம், மாவுக்கல் முதலிய அரிய கற்களைக் கொண்டு மணிகள் செய்யும் தொழில் சிறப்பாக நடந்தது” (ராஜன்.கா, தொல்லியல் நோக்கில் சங்ககாலம், ப.122) எனக் கா.ராஜன் அவர்கள் தனது ஆய்வுநூலில் குறிப்பிட்டுள்ளார். இந்தக் கொடுமணலே சங்க இலக்கியங்களில் ‘கொடுமணம்’ என்ற பெயரில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதனை,
“கொடுமணம் பட்ட நெடுமொழி ஒக்கலொடு”
(பதிற்றுப்பத்து, பா.67:1)
“கொடுமணம் பட்ட வினைமாண் அருங்கலம்”
(பதிற்றுப்பத்து, பா.74:5)
ஆகிய பதிற்றுப்பத்துப் பாடலடிகள் உறுதிசெய்கின்றன. மேற்கூறியுள்ள இலக்கியச் சான்றுகளும், தொல்லியல் சான்றுகளும் சங்க காலத்தில் தொழில் நகரமாக விளங்கிய கொங்கு நாட்டுடன் யவனர்களுக்கு வணிகத் தொடர்பு இருந்துள்ளதை மெய்ப்பிக்கின்றன.
கொங்கு நாட்டைச் சேர்ந்த புகலூருக்கு அருகிலுள்ள ஆறுநாட்டார் மலை (புகழி மலை) குகைகளில் கி.மு. 3-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த கற்படுக்கைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. மேலும், பழனியிலுள்ள ஐவர்மலையில் ஒரு பாறையின்கீழ் பஞ்ச பாண்டவர் படுக்கைகளும், திருச்செங்கோட்டு மலையில் அர்த்தநாரீசுவரர் ஆலயத்திற்கு மேல்புறத்திலுள்ள குகையில் நான்கு படுக்கைகளும் இருக்கின்றன. இவற்றின் வழியாகச் சங்க காலக் கொங்கு நாட்டில் சமணர்கள் வாழ்ந்துள்ளனர் என்பது தெளிவாகிறது.
மேலும், கொங்கு நாட்டில் சங்க காலப் புலவர்கள் பலர் வாழ்ந்துப் பல பாடல்களைப் படைத்துள்ளனர். சங்கப் புலவர்களான அரிசில்கிழார், ஆலந்தூர்கிழார், ஆவூர்க்கிழார், ஆவியார், ஆவூர் மூலங்கிழார், இடைக்குன்றூர்க் கிழார், இரும்பிடத் தலையார், எருக்காட்டூர்த் தாயங் கண்ணனார், எருக்காட்டூர்த் தாயங் கண்ணியார், ஔவையார், கண்ணகனார், கணியன் பூங்குன்றனார், கருவூர்க் கதப்பிள்ளைச் சாத்தனார், கருவூர்க் கதப்பிள்ளையார், கருவூர்ப் பெருஞ்சதுக்கத்துப் பூதநாகனார், கள்ளில் ஆத்திரையனார், கபிலர், காக்கைப் பாடினியார் நச்செள்ளையார், காரிகிழார், குட்டுவன் கீரன், குடவாயில் கீர்த்தனார், குன்றூர்க் கிழார் மகனார் கண்ணத்தனார், கூடலூர் கிழார், சாத்தந்தையார், நரிவெரூஉத் தலையார், நொச்சி நியமங் கிழார், பாரி மகளிர், புல்லாற்றூர் எயிற்றியனார், பெருங்குன்றூர்க் கிழார், வடம வண்ணக்கன் பெருஞ்சாத்தன், பெருஞ்சித்திரனார், பொருந்தில் இளங்கீரனார், பொன் முடியார், மோசி கீரனார், வீரை வெளியனார் ஆகிய புலவர்களின் பாடல்களில் கொங்கு நாட்டைச் சார்ந்த எண்ணற்ற குறிப்புகள் காணக்கிடைக்கின்றன. இவர்கள் அனைவரையும் “சங்க காலக் கொங்கு நாட்டுப் புலவர்கள்” (வடிவேலன்.இரா, சங்க காலக் கொங்கு நாடு, பக்.15-16) என இரா.வடிவேலன் குறிப்பிடுகிறார்.
கங்கர் மற்றும் பல்லவர் காலத்தில் கொங்கு நாடு (கி.பி. 300 – கி.பி. 900)
இக்கால கட்டத்தில் கொங்கு நிலப்பகுதியை முதலில் ரெட்டி வம்சமும், பின்னர் கங்க வம்சமும் அரசாண்டதாகக் ‘கொங்கு தேச ராஜாக்கள்’ என்ற நூலில் கூறப்பட்டுள்ளது. “ரெட்ட குலம் அல்லது ரெட்டி குலத்திற்குப் பின்னட் கொங்கு நாட்டை ஆண்டவர்கள் கங்க குலத்தைச் சேர்ந்தவர்கள்” (முருகராஜ்.ஆ, விஜயமங்கலம், ப.9) என முருகராஜ் குறிப்பிடுகிறார். ஸ்ரீவீரராஜ சக்கரவர்த்தி, கோவிந்தராயர், கிருஷ்ணராயர், கலவல்லவராயர், கோவிந்தராயர், சதுர்ப்புய கன்னரதேவ சக்கரவர்த்தி, திருவிக்கிரமதேவ சக்கரவர்த்தி ஆகிய ரெட்டி மன்னர்களின் பெயர்கள் காணக் கிடைக்கின்றன. இவர்கள் ‘ஸ்கந்தபுரம்’ என்னும் ஊரைத் தலைநகராகக் கொண்டு ஆட்சி புரிந்துள்ளனர். இறுதி ரெட்டி மன்னனான திருவிக்கிரமதேவன் சைவ சமயத்தையும், ஏனைய ரெட்டி மன்னர்கள் சமண சமயத்தையும் பின்பற்றியுள்ளதை அறியலாகிறது.
கொங்கணி வர்மன், மாதவ மகாதிராயன், அரிவர்ம மகாதிராயன், விஷ்ணுகோப மகாதிராயன், வளத்துக் கொண்ட மாதவ மகாதிராயன், கிருட்டிண வர்மன், கொங்கணி வர்மன்-I, துர்வினிதன், புஷ்கராயன், திருவிக்கிரமராயன், பூவிக்கிரமராயன், கொங்கணி மகாதிராயன், ராஜகோவிந்தராயன், சிவகாமராயன், பிரிதிவி கொங்கணி மகாதிராயன், இராஜமல்ல தேவராயன், கெந்த தேவராயன், சத்தியவாக்கிய ராயன், குணதுத்தும ராயன், இராஜமல்ல தேவராயன்-I ஆகிய இருபது கங்க மன்னர்களின் பெயர்கள் ‘கொங்கு தேச ராஜாக்கள்’ என்ற நூலில் குறிப்பிடப்பட்டுள்ளன. “கங்க அரசர்கள் அனைவரும் அறிவில் சிறந்தவர்களாகவும், அரசியல் முறையை நன்றாக அறிந்தவர்களாகவும் விளங்கினர்” (இராமச்சந்திரன் செட்டியார்.ம, கொங்கு நாட்டு வரலாறு, ப.111) என ம.இராமச்சந்திரன் செட்டியார் கூறுகிறார்.
இவர்கள் ‘தலைக்காடு’ (வடமொழியில் தளவனபுரம்) என்னும் ஊரைத் தலைநகராகக் கொண்டு ஆட்சி புரிந்துள்ளனர். இவ்வூரைத் தலைநகராகக் கொண்டு கங்கர்களின் பரம்பரை 6 அல்லது 7 நூற்றாண்டுகள் ஆட்சி புரிந்துள்ளனர். இவர்கள் ஆட்சி செய்த நாடு ‘கங்கவாடி’ என்ற பெயரால் வழங்கப்பட்டது. கங்கர்கள் ஆட்சி செய்த காரணத்தால் ‘கொங்கர்’ என்ற பெயர் ஏற்பட்டதாகச் சில அறிஞர்கள் கருதுகின்றனர். இவர்களின் ஆட்சியில் முகத்தல் அளவையாக கொங்கின் வடபகுதியில் ‘கண்டகம்’ என்பதும், தெற்கு மற்றும் கிழக்குப் பகுதிகளில் ‘சலகை’ என்பதும் பயன்படுத்தப்பட்டன. கொங்குவேளிர் என்பவரால் எழுதப்பட்ட ‘பெருங்கதை’ என்ற நூல் இக்காலத்தில் இயற்றப்பட்டிருக்க வேண்டும்.
தமிழகத்தின் மேற்குப் பகுதியைக் (கொங்கு நாடு) கங்கர்கள் ஆட்சி புரிந்த காலத்தில், கிழக்குப் பகுதியைப் (தொண்டை நாடு) பல்லவர்கள் ஆட்சி புரிந்தனர். காஞ்சிபுரத்தைத் தலைநகராகக் கொண்டு ஆட்சி செய்த பல்லவர்கள் வடக்கே சாளுக்கியர்களோடும், மேற்கே கங்கர்களோடும், தெற்கே சோழர்களோடும் போர் புரிந்துள்ளனர். நாயன்மார்களால் பதிகமாகப் பாடப்பட்ட தலங்கள் ‘பாடல்பெற்ற தலங்கள்’ என்றும், பதிகங்களில் பெயராகக் குறிப்பிடப்பட்ட தலங்கள் ‘வைப்புத் தலங்கள்’ என்றும் கூறுவர். கொங்கு நாட்டில் 14 தலங்கள் (7 பாடல் பெற்ற தலங்கள் + 7 வைப்புத் தலங்கள்) உள்ளன. இத்தலங்கள் திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரர் ஆகிய தேவார மூவரின் பாடல்களில் பதிவுசெய்யப்பட்டுள்ளன. கி.பி. 7-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த சம்பந்தர் மற்றும் அப்பரின் பாடல்களில் பவானி, திருச்செங்கொடு, கொடுமுடி, கரூர், பேரூர் ஆகிய தலங்கள் இடம்பெற்றுள்ளதக் காண முடிகின்றது. கி.பி. 8-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த சுந்தரரின் பாடல்களில் அவிநாசி, திருமுருகன்பூண்டி, கொடுமுடி, வெஞ்ச மாக்கூடலூர் ஆகியன பாடல்பெற்ற தலங்களாகவும், பேரூர், குரக்குத்தளி ஆகியன வைப்புத் தலங்களாகவும் பாடப்பட்டுள்ளன.
“ஆரூரன் தம்பிரான் ஆரூரன் மீகொங்கில் அணிகாஞ் சிவாய்ப்
பேரூரர் பெருமானைப் புலியூர்ச்சிற் றம்பலத்தே பெற்றா மன்றே”
(ஏழாம் திருமுறை, கோயிற் பதிகம், பா.10)
“கொங்கில் குறும்பில் குரக்குத் தளியாய் குழகா குற்றாலா”
(ஏழாம் திருமுறை, ஊர்தொகைப் பதிகம், பா.2)
ஆகிய பாடல்களால் சுந்தரர் வாழ்ந்த காலத்தில் பேரூர் மற்றும் குரக்குத்தளி தலங்கள் கொங்கு நாட்டுப் பகுதியில் இருந்தது உறுதியாகிறது. “கொங்கு நாட்டுக்கு சுந்தரர் மூன்று முறை வருகை புரிந்துள்ளார். அக்காலத்தில் கங்கர்கள் இராஷ்டிரகூடர்களின் ஆதிக்கத்தில் கொங்கு நாடு இருந்தது” (இராமச்சந்திரன் செட்டியார்.ம, கொங்கு நாட்டு வரலாறு, ப.136) என்கிறார் ம.இராமச்சந்திரன் செட்டியார்.
இராஷ்டிரகூட மன்னனான அமோகவர்ஷன் மறைவுக்குப் பின் ஆட்சியைக் கைப்பற்ற நுளம்பர்கள், கங்கர்கள், இராஷ்டிரகூடர்கள் ஆகியோருக்கு இடையே தலைக்காட்டில் போர் மூண்டது. இதனை ‘தலைக்காட்டுப் புரட்சி’ (கொங்கின் தலைநகராக விளங்கிய தலைக்காட்டினை கைப்பற்றுவதற்காக நடைபெற்ற போர்) என வழங்குவர். பின்னர் கி.பி. 894-ஆம் ஆண்டில் முதலாம் ஆதித்த சோழ மன்னன் கங்கப் பல்லவர்களைப் போரிட்டு வீழ்த்திக் கொங்கு நாட்டின் சில பகுதிகளைக் கைப்பற்றினான்.
சோழர் காலத்தில் கொங்கு நாடு (கி.பி. 900 – கி.பி. 1300)
இக்காலத்தில் சாளுக்கியர்கள் ஆட்சியில் இருந்த கொங்கு நாடு முழுவதுமாக சோழர்களால் கைப்பற்றப்பட்டது. கி.பி.1001ஆம் ஆண்டில் கங்கர்களை வீழ்த்தி தலைக்காட்டை இராஜேந்திர சோழன் கைப்பற்றினான். சோழர்களின் ஆட்சியில் ‘வட கொங்கு’, ‘தென்கொங்கு’ என இரண்டு பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டும், ‘முடிகொண்ட சோழ மண்டலம்’, கங்கை கொண்ட சோழ மண்டலம்’ ஆகிய பெயர்களைப் பெற்றும் கொங்கு நாடு விளங்கியது. கொங்கு நாட்டுக்குப் பகுதிகளுக்குத் தஞ்சைச் சோழர்களால் பிரதிநிதியாக அனுப்பப்பட்டவர்கள் ‘கொங்குச் சோழர்கள்’ என அழைக்கப்பட்டனர்.
விக்கிரம சோழன் (கி.பி.1004) தொடங்கி மூன்றாம் விக்கிரம சோழன் (கி.பி.1303) வரையுள்ள மன்னர்கள் கொங்குச் சோழர்களின் பரம்பரையினராகக் கூறப்படுகின்றனர். “இவர்கள் கி.பி.1000 முதல் கி.பி.1250 வரை கொங்கு நாட்டை ஆட்சி புரிந்தனர்” (இராமச்சந்திரன் செட்டியார்.ம, கொங்கு நாட்டு வரலாறு, ப.240) என ம. இராமச்சந்திரன் செட்டியார் குறிப்பிடுகிறார். கங்கர்களின் ஆட்சியில் கொங்கின் தலைநகராக விளங்கிய தலைக்காடு தகர்க்கப்பட்டுக் கொங்குச் சோழர்களின் தலைநகராகத் தாராபுரி (தாராபுரம்) விளங்கியது.
இம்மன்னர்களின் பெயர்களைத் தாராபுரம், திருமுருகன்பூண்டி, விஜயமங்களம், களந்தை, பரஞ்சேர்வழி, பேரூர், பழனி, கண்ணாடிப்புத்தூர், நடுவாச்சேரி, சங்கராமநல்லூர், அவிநாசி, சேவூர், முத்தூர், திங்களூர், சத்தியமங்களம், அண்ணூர், காவேரிபுரம், கொங்கூர், தீர்த்தமலை, கொழுமம், வெள்ளலூர், குமரலிங்கம், சோழமாதேவி, போளுமாம்பட்டி, வெள்ளிரைச்சல், பெரியபாளையம், கொடுவேரி, மொடக்கூர், பெருமாநல்லூர், முடச்சூர், பெரியகோட்டை, வெஞ்சமாக்கூடல், எலந்தூர், பாரியூர், பெரியபாளையம், குடிமங்கலம், கொழிஞ்சிவாடி, குன்னத்தூர், கரவலூர் ஆகிய கொங்குப் பகுதிகளிலுள்ள ஆலயக் கல்வெட்டுகளில் காண முடிகின்றது. மேலும், விக்கிரம சோழ சதுர்வேதி மங்கலம், வீரசோழீசுவரமுடையார், விக்கிரம சோழ நல்லூர், ராஜராஜீசுவரமுடையார், முடிகொண்ட சோழபுரம் (முடிகொண்டம்), ராஜராஜபுரம் (தலைக்காடு), திரிபுவனமாதேவி சதுர்வேதி மங்கலம் (கொள்ளகரம்) ஆகிய ஊர்கள் கொங்குச் சோழர்களின் பெயர்களைக் கொண்டு விளங்கியதையும் வரலாற்று நூல்களால் அறியலாகிறது.
கொங்குச் சோழர்களான வீரசோழனும், வீரராஜேந்திர சோழனும் இருபெரும் பிரிவுகளை ஆட்சி செய்தமையால் ‘இரு கொங்கையும் ஆண்டவர்கள்’ என அழைக்கப்பட்டார்கள். பின்னர் இராஜேந்திரன், வீரராஜேந்திரன் ஆட்சியில் ‘அதிராஜராஜ மண்டலம்’ என்றும், விக்கிரம சோழன் ஆட்சியில் ‘வீரசோழ மண்டலம்’ என்றும், மூன்றாம் குலோத்துங்கன் ஆட்சியில் ‘சோழ கேரள மண்டலம்’ என்றும் கொங்கு நாடு வழங்கப்பட்டது. இவர்கள் ஆட்சி புரிந்ததைக் கொங்கு நாட்டிலுள்ள பெரிய களந்தை என்னும் ஊரிலுள்ள ஆதித்தேஸ்வரர் ஆலயத்தில் கிடைத்த வீரராஜேந்திரன் சோழன், விக்கிரம சோழன் ஆகிய கொங்குச் சோழர்களின் கல்வெட்டுகள் உறுதிப்படுத்துகின்றன.
கொங்குச் சோழர்களின் காலத்தில் பொன், வெள்ளி போன்ற உலோகங்களால் செய்யப்பட்ட வராகன், அச்சு, கழஞ்சு முதலிய நாணயங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன. அவற்றில் யானை உருவம் பொறிக்கப்பட்ட நாணயங்கள் ‘ஆனையச்சு’ என்றும், காட்டுப்பன்றி உருவம் பொறிக்கப்பட்ட நாணயங்கள் ‘வராகன் பணம்’, ‘வராகன் புள்ளிக்குளிகை’ என்றும், இயக்கி உருவம் பொறிக்கப்பட்ட நாணயங்கள் ‘சீயக்கி’ என்றும் அழைக்கப்பட்டன. மேலும், ‘அய்யபொழில்’ என்ற பெயரில் 500 உறுப்பினர்களைக் கொண்ட வணிகச் சங்கம் ஒன்றும் இருந்துள்ளது. இவர்கள் ஆட்சியில் கட்டப்பட்ட ஆலயங்கள் அரசர்களின் பெயர்களையும், அரசிகளின் பெயர்களையும் பெற்று விளங்கின. இதனை வீரசோழீசுவரம், அதிராஜராஜேஸ்வரம், வீரராஜேந்தீஸ்வரம், ராஜராஜேஸ்வரம், கோதைபிரட்டீஸ்வரம் ஆகிய ஆலயங்களின் பெயர்கள் உறுதிப்படுத்துகின்றன.
பிற்காலச் சோழ மன்னர்களின் வீழ்ச்சியால் வடபகுதியைச் சேர்ந்த ஹொய்சளர்களும், தென்பகுதியைச் சேர்ந்த பாண்டியர்களும் சோழப் பேரரசின் பகுதிகளைக் கைப்பற்றினர். கொங்கு நாட்டின் வடபகுதியை ஹளேபீடைத் தலைநகராகக் கொண்ட ஹொய்சளர்களும், தென்பகுதியை மதுரையைத் தலைநகராகக் கொண்ட பாண்டியர்களும் ஆட்சி செய்தனர். ஹொய்சளர்களுக்கும், பாண்டியர்களுக்கும் இடையே பகையைத் தீர்க்கும் பொருட்டு போர்களும், ஆட்சியை வலுப்படுத்தும் நோக்கில் திருமணங்களும் மேற்கொள்ளப்பட்டன. எனினும், ஜடாவர்மன் சுந்தர பாண்டியன் (1251-1271) ஹொய்சளர்களின் படைத்தளபதியான சிங்கணனைப் போரில் வென்று கொங்கு நாடு முழுவதையும் கைப்பற்றினான்.
இதனை, ‘எம்மண்டலமும் கொண்டருளிய’ எனத் தொடங்கும் இம்மன்னனின் மெய்க்கீர்த்தியும், ஜடாவர்மன் சுந்தர பாண்டியனுடன் ஆட்சிபுரிந்த ஜடாவர்மன் வீரபாண்டியனின் ‘கொங்கீழம் கொண்டு கொடுவடகு கோடழித்து கங்கை இருகரையும் காவிரியும் கைக்கொண்டு’ என்ற மெய்க்கீர்த்தியும் உறுதிப்படுத்துகின்றன. இவர்களின் பிரதிநிதியாகக் கொங்குப் பகுதிகளை ஆட்சிபுரிந்தவர்கள் ‘கொங்குப் பாண்டியர்’ என அழைக்கப்பட்டனர். “கொங்குச் சோழர் என்ற ஒரு வம்சம் கொங்கு நாட்டை ஆட்சி செய்ததைப் போலவே, கொங்குப் பாண்டியர்களும் கொங்கு நாட்டில் அரசாட்சி செய்து வந்தனர்” (முருகராஜ்.ஆ, விஜயமங்கலம், ப.25) என்கிறார் முருகராஜ்.
வீர பாண்டியன் (1265-1285), சுந்தர பாண்டியன் (1285-1300) ஆகிய இரண்டு கொங்குப் பாண்டியர்கள் ஆட்சி புரிந்ததாகக் கொங்கு நாட்டின் ஆலயங்களிலுள்ள கல்வெட்டுகளில் குறிப்பிடப்பட்டுள்ளது. வீர பாண்டியன் குறித்து 63 கல்வெட்டுகளும், சுந்தர பாண்டியன் குறித்து 40 கல்வெட்டுகளும் கொங்கு நாட்டுப் பகுதிகளில் படியெடுக்கப்பட்டுள்ளன. இவற்றின் வழியாகக் கொங்கு நாட்டில் பல்வேறு மன்னர்கள் ஆட்சி புரிந்துள்ளது உறுதியாகின்றது.
நாயக்கர் காலத்தில் கொங்கு நாடு (கி.பி. 1300 – கி.பி. 1650)
கி.பி. 1300-ஆம் ஆண்டில் கொங்குப் பாண்டியர்களின் ஆட்சி தளர்ச்சி அடையத் தொடங்கியது. வீரபாண்டியனுக்குப் பின் அரசாட்சியை ஏற்ற திரிபுவன வீரபாண்டியன் காலத்தில் கொங்கு நாடு 20 பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டதாக அமரவிடங்கப் பெருமாள் ஆலயக் கல்வெட்டுக் குறிப்பின்வழி அறிய முடிகின்றது. அரசாட்சியைப் பெறுவதற்காகப் பாண்டியர்களுக்கு இடையே ஏற்பட்ட உட்பகை மற்றும் டெல்லி சுல்தானின் படைத்தளபதியான மாலிக் கபூரின் வருகை ஆகிய காரணங்களால் பாண்டியர்கள் தளர்ச்சி அடைந்தனர். இதனால் பாண்டியர்களின் பிரதிநிதிகளாக விளங்கிய கொங்குப் பாண்டியர்களும் தளர்ச்சி அடையும் நிலை ஏற்பட்டது.
இந்நிலையைச் சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டு கொங்கு நாட்டுப் பகுதிகளை ஹொய்சல மன்னனான வீர வள்ளாளதேவன் கைப்பற்றத் தொடங்கினான். இதனை உறுதிப்படுத்தும் வகையில் அவிநாசி (கி.பி.1311), சேவூர் (கி.பி.1322), பேரூர் (கி.பி.1323), விஜயமங்களம் (கி.பி.1325) ஆகிய பகுதிகளில் வீர வள்ளாளதேவனின் பெயர் பொறிக்கப்பட்ட கல்வெட்டுகள் விளங்குகின்றன. கி.பி. 1310-ஆம் ஆண்டு மாலிக் கபூரின் வருகையால் வலிமை குன்றியிருந்த ஹொய்சலர்களைக் கி.பி. 1326-ஆம் ஆண்டு முகமது பின் துக்ளக் என்ற டெல்லி சுல்தானிய மன்னன் வீழ்த்தினான். பின்னர் டெல்லி சுல்தானியர்களின் பிரதிநிதிகளாகத் தமிழகத்தை ‘மதுரை சுல்தானியர்கள்’ ஆட்சி செய்தனர்.
மேலும், கேரளப் பகுதியை ஆட்சி செய்த மலைநாட்டு சிற்றரசர்கள் கொங்கு நாட்டின்மீது படையெடுக்கத் தொடங்கினர். மலைநாட்டை ஆண்ட வீரகேரளன் என்பவன் பேரூர், கோவன்புத்தூர் (கோயம்புத்தூர்) ஆகிய பகுதிகளை எளிதில் கைப்பற்றினான். கோவன்புத்தூர் என்ற பகுதிக்கு ‘வீரகேரள நல்லூர்’ எனப் பெயரிட்டான். “வெள்ளலூர்க் கல்வெட்டில் கோவை நகரும் சுற்றியுள்ள இடங்களும் ‘வீரகேரள நல்லூர்’ என அழைக்கப்பட்டது” (முருகராஜ்.ஆ, விஜயமங்கலம், ப.14) என முருகராஜ் தனது நூலில் குறிப்பிட்டுள்ளார். மேலும், ‘பேரூர் நாட்டு கோவன்புத்தூர் ஆன வீரகேரளநல்லூர்’ எனப் பொறிக்கப்பட்டுள்ள பேரூர் கல்வெட்டு வாயிலாகவும், ‘வீரகேரளவளநாடு’ எனப் பொறிக்கப்பட்டுள்ள ஆனைமலை சோமேசுவரர் ஆலயக் கல்வெட்டு வாயிலாகவும் கோவைக்கு வீரகேரள நல்லூர் எனும் பெயர் இருந்தது உறுதியாகின்றது.
கி.பி. 1336-ஆம் ஆண்டில் வித்தியாரண்ய நகரத்தை (விஜய நகரம்) தலைநகராகக் கொண்டு விஜயநகரப் பேரரசு தோன்றியது. இப்பேரரசின் மூத்த (முதலாம்) வம்சம் ‘சங்கம வம்சம்’ (கி.பி. 1336 – கி.பி. 1485) என்றும், இரண்டாம் வம்சம் ‘சாளுவ வம்சம்’ (கி.பி. 1485 – கி.பி. 1505) என்றும், மூன்றாம் வம்சம் ‘துளுவ வம்சம்’ (கி.பி. 1505 – கி.பி. 1570) என்றும், நான்காம் வம்சம் ‘ஆற வம்சம்’ (கி.பி. 1570 – கி.பி. 1600) என்றும் அழைக்கப்பட்டனர். சங்கம வமசமும், சாளுவ வம்சமும் கன்னட மொழியையும், துளுவ வம்சமும், ஆற வம்சமும் தெலுங்கு மொழியையும் போற்றினர்.
சங்கம வமசத்து அரசர்களான ஹரிஹரன், புக்கராயன், கம்பணன், ஹரிஹரன்-II ஆகியோர் சுல்தானியர்களை எதிர்த்துப் போரிட்டனர். கி.பி. 1384-ஆம் ஆண்டு ஹரிஹரன்-II மன்னனின் மகன் விருபாசன் சுல்தானியர்களை வென்று கொங்கு நாட்டை முழுமையாகக் கைப்பற்றினான். கொங்கு நாட்டுப் பகுதியான மொதள்ளியில் கி.பி. 1368-ஆம் ஆண்டில் கம்பணன்-II மன்னனால் பொறிக்கப்பட்ட கல்வெட்டு கிடைத்துள்ளது. மேலும், விஜய மங்கலம் (கி.பி. 1400), குமரிலிங்கம் (கி.பி. 1412), கொழிஞ்சிவாடி (கி.பி. 1440) ஆகிய கொங்கு நாட்டுப் பகுதிகளில் சங்கம வம்ச அரசர்களின் கல்வெட்டுக்கள் கிடைத்துள்ளன. இவற்றின் வாயிலாகக் கி.பி. 1368ஆம் ஆண்டில் கொங்கு நாட்டின் சில பகுதிகளையும், கி.பி. 1384ஆம் ஆண்டில் கொங்கு நாடு முழுவதையும் விஜயநகரப் பேரரசர்கள் ஆட்சி புரிந்தது உறுதியாகிறது.
இவர்களின் பிரதிநிதிகளாக விளங்கிய உம்மத்தூர் தலைவர்கள் கி.பி. 1489 முதல் கி.பி. 1517 வரை கொங்கு நாட்டை ஆட்சி செய்தனர். அவிநாசி, பெரியபாளையம், சேவூர், தணாய்க்கன்கோட்டை, திருமுருகன்பூண்டி, கொடுவாய், மரப்பாளையம், ஆரத்தொழு, தாராபுரம், பழனி, நம்பியூர் ஆகிய பகுதிகளில் கிடைக்கப்பெற்ற கல்வெட்டுகளில் உம்மத்தூர் தலைவர்களின் பெயர்கள் குறிப்பிடப்பட்டுள்ளன. பின்னர், உம்மத்தூர் தலைவர்களை வென்று துளுவ வம்ச புகழ்பெற்ற பேரரசரான கிருஷ்ணதேவராயர் (கி.பி. 1509 – கி.பி. 1529), அச்சுதராயர் (கி.பி. 1529 – கி.பி. 1542), சதாசிவராயர் (கி.பி. 1542 – கி.பி. 1570) ஆகியோர் கொங்கு நாட்டை ஆட்சி செய்தனர். இதனைத் தொண்டீசுவரமுடையார் ஆலயக் கல்வெட்டு (கி.பி. 1511), கொக்கராயப் பேட்டை கல்வெட்டு (கி.பி. 1518), திருச்செங்கோட்டுக் கல்வெட்டு (கி.பி. 1528), நஞ்சனஹள்ளிக் கல்வெட்டு (கி.பி. 1532), அவிநாசி கல்வெட்டு (கி.பி. 1538), சேவூர் கல்வெட்டு (கி.பி. 1545), காரிமங்கலம் கல்வெட்டு (கி.பி. 1556) ஆகியன உறுதிப்படுத்துகின்றன.
விஜயநகரப் பேரரசின் பகுதிகள் கிருஷ்ணதேவராயர் ஆட்சியில் ஆந்திரம், கர்நாடகம், சந்திரகிரி, செஞ்சி, தஞ்சாவூர், மதுரை என ஆறு மாகாணங்களாகப் பிரிக்கப்பட்டது. பேரரசின் பிரதிநிதிகளாக ஒவ்வொரு மாகாணத்திலும் நாயக்கர்கள் விளங்கினர். மதுரை மாகாண நாயக்கரின்கீழ் கொங்கு நாடு ஆட்சி செய்யப்பட்டது. விஜயநகரப் பேரரசு வலிமை குன்றியதால் பிரதிநிதிகளாக விளங்கிய நாயக்கர்கள் கி.பி. 1529-ல் எழுச்சி பெறத் தொடங்கினர். விசுவநாத நாயக்கரில் தொடங்கி திருமலை நாயக்கர் வரை (கி.பி. 1529 – கி.பி. 1659) மதுரையை ஆட்சி செய்த நாயக்கர்கள் ‘மதுரை நாயக்கர்கள்’ என அழைக்கப்பட்டனர். இவர்கள் காலத்தில் நாயக்கப் பேரரசின் ஆட்சிப் பகுதிகள் 72 பாளையங்களாகப் பிரிக்கப்பட்டு 72 பாளையக்காரர்கள் பிரதிநிதியாக அமர்த்தப்பட்டனர். திருமுருகன்பூண்டி (கி.பி. 1642), கண்ணாடிப்புத்தூர் (கி.பி. 1655), ஈரோடு (கி.பி. 1655), திருச்செங்கோடு (கி.பி. 1659) ஆகிய கொங்கு நாட்டுப் பகுதிகளில் நாயக்கர்கள் குறித்த கல்வெட்டுகள் காணப்படுகின்றன.
ஐரோப்பியர் காலத்தில் கொங்கு நாடு (கி.பி. 1650 – கி.பி. 1947)
மதுரை நாயக்கர்களுள் பெரும்புகழ் பெற்று விளங்கிய திருமலை நாயக்கரின் மறைவிற்குப் பின் கி.பி.1659-ஆம் ஆண்டில் மைசூர் அரசு எழுச்சி பெறத் தொடங்கியது. மைசூர் அரசன் கண்டீரவ நரசராஜா கி.பி.1652-ல் பொண்ணாகரம், தருமபுரி, தெங்கணிக்கோட்டை ஆகிய பகுதிகளையும், கி.பி. 1653-ல் ஒசூர், சத்தியமங்கலம் ஆகிய பகுதிகளையும் கைப்பற்றி மைசூரோடு சேர்த்தான். இவனைத் தொடர்ந்து கெம்பதேவன் என அழைக்கப்பட்ட தொட்ட தேவராயன் (கி.பி. 1659 – கி.பி. 1672) மைசூர் அரசனாக விளங்கினான். இவன் மதுரை சொக்கநாத நாயக்கரைப் போரிட்டு வென்று ஈரோடு, தாராபுரம் ஆகிய கொங்கு நாட்டுப் பகுதிகளைக் கைப்பற்றி மைசூரோடு சேர்த்தான். ஈரோட்டில் நிகழ்ந்த இப்போருக்குப்பின் மைசூரோடு சேர்க்கப்பட்ட கொங்கு நாடு கிபி. 1790-ஆம் ஆண்டு வரையில் மைசூரின் பகுதியாகவே விளங்கியது.
டெல்லியைத் தலைநகராகக் கொண்டு ஆட்சி புரிந்த மொகலாய மன்னன் ஔரங்கசீப் தென்னிந்தியாவின் சில பகுதிகளைக் கைப்பற்றினார். அப்பகுதிகளில் வரி வசூல் செய்யும் பொறுப்பாளர்களாகக் கி.பி.1692-ஆம் ஆண்டில் நவாப்களையும், நிஜாம்களையும் நியமித்தார். ஔரங்கசீப் மறைவிற்குப் பின் மொகலாயப் பேரரசின் வலிமை குன்றியது. இச்சூழலைப் பயன்படுத்திக் கொண்ட நவாப்கள் கி.பி. 1765-ல் சுதந்திர அரசாக தங்களை அறிவித்துக் கொண்டனர். இவர்கள் ஆற்காடைத் தலைநகராகக் கொண்டு ஆட்சி புரிந்ததால் ‘ஆற்காடு நவாப்கள்’ என்றும், ‘கருநாடக நவாப்கள்’ என்றும் அழைக்கப்பட்டனர். ஆற்காடு நவாப்களுக்கும், ஐதரபாத் நிஜாம்களுக்கும் ஏற்பட்ட பூசல்களை வணிக நோக்கில் வந்திருந்த ஆங்கிலேயர்களும், பிரெஞ்சுக்காரர்களும் நன்றாகப் பயன்படுத்திக் கொண்டனர். பிரெஞ்சுக்காரர்கள் நவாப்களுக்கும், ஆங்கிலேயர்கள் நிஜாம்களுக்கும் ஆதரவாகச் செயல்பட்டனர்.
பிரெஞ்சுக்காரர்களின் படைத்தளபதியாக விளங்கிய ஹைதர் அலி கி.பி. 1762-ஆம் ஆண்டு மைசூர் அரசராக முடிசூட்டிக் கொண்டார். இதனை வெறுத்த ஆங்கிலேயர்கள் ஹைதரின்மீது போர் தொடுத்தனர். இப்போர் கொங்கு நாட்டுப் பகுதியான ஈரோட்டில் கி.பி. 1767 முதல் கி.பி. 1769 வரை நடைபெற்ற முதலாம் மைசூர் போராகும். இதில் தோல்வியுற்ற ஆங்கிலேயர்கள் ஹைதருக்கு எதிராக மீண்டும் கி.பி. 1780-ல் போர் தொடுத்தனர். கி.பி. 1784-ஆம் ஆண்டு வரை நடைபெற்ற இரண்டாம் மைசூர் போர் உடன்படிக்கையால் முடிவுபெற்றது. இரண்டு போர்கள் நடைபெற்றும் ஆங்கிலேயர்களால் மைசூர் அரசை வெல்ல முடியவில்லை. இதனால் சூழ்ச்சிகாரனான காரன் வாலீஸ் தலைமையில் மைசூர் அரசுக்கு எதிராக மூன்றாம் (கி.பி. 1789 – கி.பி. 1792) மற்றும் நான்காம் (கி.பி. 1798 – கி.பி. 1799) மைசூர் போர்கள் நடைபெற்றன.
இப்போர்களில் தோற்கடிக்கப்பட்ட திப்பு சுல்தானின் (ஹைதர் அலியின் மகன்) மைசூர் அரசின் பகுதிகள் ஆங்கிலேயர்களின் ஆட்சியுடன் இணைக்கப்பட்டன. மேலும், கோயம்புத்தூர் கோட்டையைக் கி.பி. 1768, கி.பி. 1783, கி.பி. 1790 ஆகிய ஆண்டுகளில் ஆங்கிலேயர்கள் முற்றுகையிட்டனர். மூன்றாம் மைசூர் போர் இறுதியில் (கி.பி. 1792) சேலம் மற்றும் நான்காம் மைசூர் போர் இறுதியில் (கி.பி. 1799) கோயம்புத்தூர் ஆகிய கொங்குப் பகுதிகளை ஆங்கிலேயர்கள் கைப்பற்றினர்.
ஆங்கிலேயர்கள் ஆட்சியில் பவானி, தாராபுரம், சங்கர துர்க்கம் என்ற மூன்று பிரிவுகளாகக் கொங்கு நாடு பிரிக்கப்பட்டது. பின்னர் கொங்கு நாட்டை நான்காகப் பிரித்துக் கோவை, சேலம், மதுரை, திருச்சி ஆகிய நான்கு ஜில்லாக்களுக்கு வழங்கப்பட்டது. இவ்வாறு பிரிக்கப்பட்ட ஜில்லாக்களுக்குப் பொறுப்பாளர்களாகக் கலெக்டர்கள் (மாவட்ட ஆட்சியர்கள்) பணியமர்த்தப்பட்டனர். மேலும், தாலுகாவிற்குப் பொறுப்பாளர்களாகத் தாசில்தார்களையும், கிராமங்களுக்குப் பொறுப்பாளர்களாக மணியக்காரர்களையும் பணியமர்த்தினர். இதனால் கி.பி.1800-ல் 2000 வீடுகளும், 10000 மக்களும் கொண்ட பகுதிகள் கி.பி.1850-ல் 3000 வீடுகளும், 20000 மக்களும் கொண்ட பெரும்பகுதிகளாக உருப்பெற்றன.
கொங்குப் பகுதிகளான கோவை, சேலம், ஒண்டிப்புதூர், சிறுமுகை, சத்தியமங்கலம், பவானி, கௌந்தப்பாடி, சித்தோடு, திருப்பூர், தாராபுரம், சிவகிரி, வாளவாடி, ராசிபுரம், திருச்செங்கோடு, ஜலகண்டபுரம் ஆகிய இடங்களில் அதிகமான பருத்தி விளைந்ததால் நெசவுத் தொழில் சிறப்பாக நடைபெற்றது. இதனால் கோவையில் கி.பி. 1888-ல் ஆங்கிலேயர்களால் முதல் நூல் ஆலை நிறுவப்பட்டு மக்களுக்கு வேலைவாய்ப்புகள் வழங்கப்பட்டது. நீர்ப்பாசனம், மருத்துவம், கல்வி, போக்குவரத்து, மின்சாரம் போன்ற அடிப்படை வசதிகளை ஆங்கிலேயர்கள் ஏற்படுத்தினர். இதன் விளைவாகக் கொங்குப் பகுதிகளில் மக்களின் எண்ணிக்கையும், தொழிற்சாலைகளின் எண்ணிக்கையும் அதிகரித்தன. கி.பி. 1947-ஆம் ஆண்டில் ஆங்கிலேய ஆட்சி அகற்றப்பட்டுக் காலங்கள் பல கடந்தும் கொங்குப் பகுதியைச் சேர்ந்த கோவை மாவட்டம் ‘தென்னிந்தியாவின் தொழில் நகரம்’ எனப் பெயர்பெற்று விளங்குவது குறிப்பிடத்தக்கது.
முடிவுரை
பழந்தமிழகத்தில் தனிப் பெரும் பிரிவாகக் கொங்கு நாடு விளங்கியதைச் சங்க இலக்கியப் பாடல்கள் உறுதிப்படுத்துகின்றன. பல்வேறு காரணங்களையும் பொருளையும் அடிப்படையாகக் கொண்டே ‘கொங்கு’ எனும் சொல் பயன்படுத்தப்பட்டுள்ளதை அறியமுடிகின்றது. சங்க காலம் தொடங்கி இக்காலம் வரையுள்ள இலக்கியங்கள், கல்வெட்டுகள், நாணயங்கள், அகழாய்வு மற்றும் தொல்லியல் சான்றுகளைத் துணையாகக் கொண்டு கொங்கு நாட்டின் எல்லைகளும் பிரிவுகளும் ஆராய்ந்து விளக்கப்பட்டுள்ளது. மூவேந்தர்கள், கடையேழு வள்ளல்கள், குறுநில மன்னர்கள், பல்லவர்கள், ஹோய்சலர்கள், கங்கர்கள், இராஷ்டிரகூடர்கள், கொங்குச் சோழர்கள், கொங்குப் பாண்டியர்கள், மதுரை சுல்தான்கள், மலைநாட்டு சிற்றரசர்கள், உம்மத்தூர் உடையார்கள், விஜயநகர அரசர்கள், நாயக்கர்கள், மைசூர் அரசர்கள், ஆற்காடு நவாப்கள், ஆங்கிலேயர்கள் எனப் பல்வேறு அரசுகள் ஆட்சிபுரிந்த பகுதியாகக் கொங்கு நாடு விளங்கியுள்ளதை அறியமுடிகின்றது. மேலும், கொங்கு நாட்டுப் பகுதிகள் வணிக நகரங்களாக விளங்கியதை மெய்ப்பிக்கும் வகையில் தொல்லியல் மற்றும் அகழாய்வுச் சான்றுகள் விளங்குகின்றன.
துணைநின்ற நூல்கள்
இராசு.செ. (ப.ஆ), கொங்கு மண்டல சதகங்கள், தவத்திரு சாந்தலிங்க அடிகளார் கலை மற்றும் அறிவியல் கல்லூரி வெளியீடு, கோவை – 641 010, இரண்டாம் பதிப்பு: 2010.
இராமச்சந்திரன் செட்டியார்.ம, கொங்கு நாட்டு வரலாறு, அண்ணாமலை பல்கலைக்கழக சரித்திர வெளியீடு. கடலூர் – 608 002, முதற்பதிப்பு: 1954.
இராமமூர்த்தி.வீ, கொங்கு நாட்டுக் கவுண்டர்கள், லோட்டஸ் பப்ளிஷிங் கம்பெனி, திருச்சி – 620 001, முதற்பதிப்பு: 1977.
கோவிந்தராசன்.சி, கொங்கு நாட்டுக் கல்வெட்டுகள், பாரதியார் பல்கலைக்கழகம், கோவை – 641 046, முதற்பதிப்பு: 1988.
கௌதமபுத்திரன்.பெ. (ப.ஆ), ஈரோடு மாவட்டத் தொல்லியல் கையேடு, தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை வெளியீடு, சென்னை – 600 008, முதற்பதிப்பு: 2011.
சீனி வேங்கடசாமி.மயிலை, கொங்கு நாட்டு வரலாறு (பழங்காலம் – கி.பி. 250 வரையில்), நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் பிரைவேட் லிட், சென்னை – 600 098, முதற்பதிப்பு: 1974.
சுப்பிரமணியன்.ச.வே. (ப.ஆ), பன்னிரு திருமுறைகள், மணிவாசகர் பதிப்பகம், சென்னை – 600 008, முதற்பதிப்பு: 2007
சௌந்தர பாண்டியன்.சு, கொங்கு மண்டல வரலாறுகள், அரசினர் கீழ்த்திசைச் சுவடிகள் நூலக வெளியீடு, சென்னை – 600 005, முதற்பதிப்பு: 1997.
பசுபதி.ம.வே. (ப.ஆ), செம்மொழித்தமிழ் இலக்கண இலக்கியங்கள், தமிழ்ப் பல்கலைக்கழக வெளியீடு, தஞ்சாவூர் – 613 010, முதற்பதிப்பு: 2010.
மாணிக்கம்.இரா.கா, கொங்கும் தமிழும் (கட்டுரைத் தொகுப்பு), தமயந்தி பதிப்பகம், ஈரோடு- 638 452, முதற்பதிப்பு: 2003.
முருகராஜ்.ஆ, விஜயமங்கலம், தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை வெளியீடு, சென்னை – 600 008, முதற்பதிப்பு: 2009.
லட்சுமி நாராயணன்.யா, கொங்கு நாட்டு வரலாறு, ஸ்டார் பிரசுரம், சென்னை – 600 005, முதற்பதிப்பு: 1985.
வடிவேலன்.இரா, சங்க காலக் கொங்கு நாடு, அருணோதயம் வெளியீடு, சென்னை – 600 104, முதற்பதிப்பு: 2001.
ராஜன்.கா, தொல்லியல் நோக்கில் சங்ககாலம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவன வெளியீடு, சென்னை – 600 113, முதற்பதிப்பு: 2004.
ஸ்ரீதர்.தி.ஸ்ரீ. (ப.ஆ), கோயம்புத்தூர் மாவட்டத் தொல்லியல் கையேடு, தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை வெளியீடு, சென்னை – 600 008, முதற்பதிப்பு: 2010.

Leave a comment

Trending