தனிமை
மலையாளப் படைப்பு பி.எம். கோவிந்தன் உண்ணி
தமிழாக்கம் : பெரியார் விஜயன்

தமிழில் பெரியார் விஜயன்
நதியிலிருந்து
இரவில் மட்டும் கேட்கும்
அலறல்களுக்கு
மனிதக்குரல்.
பகலில்
நதி ஓடுவதே தெரியாது
இயக்கமற்றிருப்பதாக தோன்றும்
நீரின் மீது நடக்கலாம் .
நான் நதிக்கரையில் வசிக்கிறேன்
பகல் முழுவதும்
மௌனம் நிலைக்கும்
இரவில் பூதங்களின் ஓசை
அதன் காரணத்தை
தொடக்கத்தை
முடிவை
நான் ஆராய்வதில்லை
அதனால் வசிக்கிறேன்
காட்டோரத்தில்
நதிப் பள்ளத்தாக்கில்
பகலில் வானமும்
இரவில் பேய்களும்
என்னைப் பார்க்கின்றன
அக்கரையில் இருந்து
நீங்கள்
கையை ஆட்டி
என்னை அழைத்து
ஏதோ கேட்கிறீர்கள்
ஆனால் நீங்கள் பேசுவது
எனக்குக் கேட்கவில்லை.
என்னைக் குறித்து நீங்கள்
என்ன நினைக்கிறீர்கள் ?
இப்பொழுது
ஒன்றை மட்டும் சொல்கிறேன்
நீங்கள் நினைப்பது போல நான்
பூமியின்
மீனவனோ
மீனோ அல்ல
சலனமற்ற ஓவியத்தின்
ஓரத்தில்
சும்மா நின்றுகொண்டிருக்கிறேன்
வாழ்க்கை முழுவதும்
தனியனாக.

Leave a comment