தோல் நாவல் வெளிப்படுத்தும் சாதியமும் உழைப்புச் சுரண்டலும்

வே.அந்தோணிராஜா

உதவிப்பேராசிரியர், மொழித்துறை,
ஆர்விஎஸ் கலை அறிவியல் கல்லூரி, சூலூர், கோயம்புத்தூர்

ஆய்வுச்சுருக்கம்
டி. செல்வராஜ் எழுதிய “தோல்” நாவல், தமிழின் சாதிய அமைப்பு, சமூக நீதி, மனித உரிமைகள் மற்றும் ஒடுக்கப்பட்டவர்களின் வாழ்க்கையை ஆழமாக ஆராயும் ஒரு முக்கியமான படைப்பாக அடையாளப்படுகிறது. இதில், தோல் குறியீட்டாக்கம் பெற்று, சாதி அடிப்படையிலான வெறுப்பைக் குறித்து நிற்கிறது. சமூக ஒடுக்குமுறை, மனித தன்மை இழப்பு மற்றும் பொருளாதார சிக்கல்கள் போன்ற முக்கிய பிரச்சனைகளை இந்த நாவல் பதிவுசெய்கிறது. மேலும் நாவலில் மனிதர்களின் சமூக, பொருளாதார, கலாச்சார வாழ்வில் தோன்றும் பிரச்சனைகளை மையமாகக் கொண்டு, அதை மனிதர்களுக்கு ஒப்பிடப்பட்டு தோல் ஒரு அடையாளமாக பயன்படுத்தப்படுகிறது.
திறவுச்சொற்கள்:பொருளாதாரம்,சமூகம்,கலாச்சாரம்,மனிதன்,வாழ்வுரிமை
முன்னுரை
மனிதனின் உரிமைகளில் முதன்மையானதாக அமையக்கூடியது வாழ்வுரிமை ஆகும். ஆனால் தோல் நாவலில் வாழும் மக்களின் வாழ்வுரிமையானது இவற்றிற்கு எதிர்மாறான ஒன்றாக இருக்கிறது. இம்மக்கள் பசி, பட்டினி, பயம், பணிச்சுமை, நோய், அடிமைத்தனம் எனப் பல்வேறு சிக்கல்களுக்கு மத்தியில் இவர்களின் வாழ்வாதார நிலையானது அமைகிறது. இதில் சாதி அவர்களைத் தொடர்ந்து இடர்பாடுகளுக்குள் உட்படுத்துகிறது என்பதை வெளிப்படுத்துவதாக இக்கட்டுரை அமைகிறது.
மனிதனின் சுதந்திரம்
மனித சமூகம் தொடக்க காலத்தில் இயற்கைச் சீற்றங்களைக் கண்டு அஞ்சினான். பிறகு அதிலிருந்து தன்னைத் தற்காத்துக் கொள்ள முயற்சி செய்து ஓரளவு வெற்றி பெற்றுவிட்டான். ஆனால் மனிதர்களால் செயற்கையாகக் கட்டமைக்கப்பட்ட சாதி போன்ற கருத்தியல்கள் அவனை இப்பூமியில் வாழ்வதற்கு பெரும் தடையை நிகழ்த்தி வருகிறது. மனித வாழ்வு என்பது,
“அச்சமின்றி வாழ்தல், பாதுகாப்பாக வாழ்தல், தாம் விரும்பிய ஊரில் வாழ்தல், பசி இன்றி வாழ்தல்”1
என்று வாழ்வு உரிமை பற்றி இராஜ முத்திருளாண்டி குறிப்பிடுகிறார். மேலும் ஷெல்லி என்பார் சுதந்திரம் பற்றி குறிப்பிடுகையில்,
“சுதந்திரம் என்பது தான் இவ்வுலகின் சொர்க்கம்”2
என்று கூறுவதாக பேராசிரியர் இராஜ முத்திருளாண்டி குறிப்பிடுகிறார். ஆனால் நாவலில் தாழ்த்தப்பட்ட மக்களிடையே சுதந்திரம் என்பது காணப்படாத ஒன்றாக உள்ளது. ஷெல்லி தன்னுடைய கவிதையை ஒரு தூண்டு கோலாகக் கொண்டு முழங்குகிறார்.
“ஆள்பவர் சிலர் ஆளப்படுபவர் பலர்”
“தூங்கிக் கிடக்கும் சிங்கங்களே? விழிமின் எழுமின்”3
என்று மக்களிடையே வேகம் மூட்டுகிறார். அதனைப் போன்று நாவலில் மக்களின் அடிமைத்தன வாழ்க்கையைப் போக்கி சுதந்திர வாழ்வு வாழ சங்கரன் சங்கம் ஒன்றை ஏற்படுத்தி அதை அவர்களின் சுதந்திர வெளியை உருவாக்கிக்கொள்ள வழிவகை செய்கிறார்.
நாவலில் தொழிலாளர் பிரச்சனை
தோல் நாவலில் தொழிலாளர்களின் பிரச்சனை,

  1. வாழ்வுப் பிரச்சனை
  2. தொழிற்பிரச்சனை
    என்று இரண்டு வகைகளில் பிரிந்து இருப்பதைக் காணமுடிகிறது.
  3. வாழ்வுப் பிரச்சனைகள்
    அடிப்படை வசதிகள்
    பொருளாதாரப் பிரச்சனை பாதுகாப்பு
  4. தொழிற்பிரச்சனைகள்
    முதலாளிகள் ஆதிக்கம்
    தொழிலாளர் நலன் காக்கப்படாமை
    பணிச்சுமை

    வாழ்வுப் பிரச்சனை (அடிப்படை வசதிகள்)
    உணவு, உடை, இருப்பிடம்

    மனிதனின் அன்றாட வாழ்வில் இன்றியமையாத் தேவையாக இவை அமைகின்றன. தோல் பதனத் தொழிலாளர் தம்முடைய அன்றாட அடிப்படை தேவைகளைப் பெறுதலே சிக்கலான நிலையாக உள்ளது.
    உணவு, உடை
    உணவும் உடையும் உயிர்கள் அனைத்துக்கும் பொதுவானது என்று திருவள்ளுவர் குறிப்பிடுகிறார்.
    ”ஊணுடை எச்சம் உயிர்க்கெல்லாம் வேறல்ல”4
    மனிதனின் அடிப்படைத் தேவைகளில் முதன்மையானதாக அமையக்கூடியது உணவு ஆகும். தங்களின் ஒரு ஜான் வயிற்றுக்கு உணவு வேண்டித் தோல்தொழிற்சாலையில் ஒவ்வொரு நாளும் சேரிமக்கள் நரக வேதனை அடைகின்றனர். ஒருவேளை உணவிற்காகத் தோல் தொழிற்சாலைப் பணிக்குச் செல்லும் அவர்களின் உடம்பில் தோல் கழிவுகளின் துர்நாற்றம் நீங்காமல் இருக்கிறது. அந்த வாடையுடன் உணவு உண்பது என்பதே அவர்களின் நிலையாக உள்ளது.
    அவர்கள் காசுக்காகச் சிரமம் அடையும் நாட்களில் ஆட்டுத் தோல்களிலும், மாட்டுத் தோல்களிலும் கசாப்புக் கடைக்காரன் விட்டு வைத்து இருக்கும் எஞ்சிய மாமிசத்தையும், குச்சிக் கிழங்கையும் சேர்த்து அவியல் செய்து உண்ணுவர். இவ்வாறு உணவிற்கே துன்பம் அடையும் நேரத்தில் உடை என்பது அவர்களின் இரண்டாம் நிலையாக உள்ளது. உடை என்பது ஒருவனின் மானம் காக்கப்படுவதற்காக மட்டுமே அணியப்படுகிறது. ஆனால் தோல் தொழிலாளர்கள் கிழிந்த ஆடை, கந்தல் ஆடை போன்றவற்றையே அணிகின்றனர். புத்தாடை அணிதல் என்பது நான்கு வருடத்திற்கு ஒருமுறை நடைபெறும் திருவிழாவின் பொழுதே புதிய ஆடைகளை அணிகின்றனர்.
    இருப்பிடம்
    தோல் தொழிற்சாலைக்குப் பணிபுரிய வரும் சேரி மக்கள் தங்களின் சொந்த ஊரை விடுத்து வருகின்றனர். அவ்வாறு வரும் மக்கள் ஊரின் ஒதுக்குபுறமாக குடிசைகள் அமைத்து வாழ்கின்றனர். அவர்கள் வாழும் பகுதிக்கு சேரி என்று பெயரிட்டு அழைக்கப்படுகின்றது. தாழ்த்தப்பட்ட மக்கள் குடியிருக்கும் பகுதியை இன்றும் சேரி என்றே அழைக்கின்றனர். ஆதிக்கச் சாதியினரின் குடியிருப்புகள் தாழ்த்தப்பட்ட மக்களைத் தொட்டு வரும் காற்றுகூடத் தங்களைத் தீண்டிவிடாத அளவிலே வீடுகளை அமைத்துக் கொள்ள வேண்டும் என்பதை சாதியச் சமூகம் தீர்மாணித்து சமூக இயல்பாகக் கட்டமைத்து வைத்துள்ளது.
    பொருளாதாரப் பிரச்சனைகள்
    குடும்பநிலை
    கல்வி
    தோல்பதனத் தொழிலாளர்கள் தங்களின் அன்றாடத் தேவையைப் பூர்த்திசெய்து கொள்ளும் அளவிற்குக் அவர்களின் வருவாய் பற்றாக்குறையாக இருக்கும்போதே பொருளாதாரச் சிக்கலானது ஏற்படுகிறது.
    குடும்பநிலை
    தங்களின் குடும்ப வறுமைக் காணரமாகவே, சொந்த மண்ணையும், ஊரையும் விடுத்து வரும் மக்கள், தோல் பதனத் தொழிலால் மிகுந்த கொடுமையான நிலையை அடைகின்றனர். தோல்பதனத் தொழிலாளர்கள் தங்களின் குடும்பத்தைக் காப்பதற்காகச் சுண்ணாம்பு நீரில் தோல் அலசும் பணியும், முடிதள்ளும் பணியும், மலம் அள்ளும் பணியும் செய்து வருகின்றனர். முதலாளிகளின் குடும்பம் செழித்து வளமுடன் வாழத் தொழிலாளர்களின் பல குடும்பங்கள் பின்னுக்குத் தள்ளப்பட்டு அடிமைகளாக வைக்கப்படுகின்றனர். அவை ஒன்று சேர்ந்ததே சமூகம் என்ற அமைப்பு உருவாக்கப்படுகிறது. ஆனால் இங்கு முதலாளி என்ற ஒருவனின் குடும்பம் நன்றாக வாழ ஒரு சமூகமே சிதைக்கப்படுகிறது.
    கல்வி
    கல்வி என்பது அறிய செல்வம். இச்செல்வத்தை எவராலும் திருட இயலாது, அழிக்க இயலாது.
    “தொட்டனைத்தூறும் மணற்கேணி மாந்தர்க்குக்
    கற்றனைத் தூறும் அறிவு”5
    என்று கல்வி பற்றி திருவள்ளுவர் குறிப்பிடுகிறார். கல்வியைக் கற்க கற்க அறிவு பெருகச் செய்யும். இத்தகையச் சிறப்பு மிக்க கல்வியைத் தொழிலாளர்களின் குழந்தைகள் கற்கக் கூடாது என்ற நோக்கில் முதலாளிகள் வட்டிக்குப் பணம் கொடுத்தமையால் தொழிலாளர்களின் பிள்ளையைப் பணி செய்ய சொல்கின்றனர். அஸன் ராவுத்தர் தான் கொடுத்த பணத்திற்காக ஆசிவாதம் மகனை “இந்த வயசுலே சேத்து உட்டாத்தாமலே நல்லா வசங்கி வேலையக்கத்துக்கு. வொன்க ஒனக்கும் ஒத்தாசையா இருக்கும்” என்று கூறுகிறார்.
    இளமையில் கல் என்பது போல சிறுவயது முதலே தொழில் செய்ய சுற்றால் மட்டுமே பழகிக்கொள்ள முடியும், பள்ளியில் சேர்ந்து படித்து என்ன பெரிய அரசு அதிகாரியாகவா! பணி செய்ய போகிறான் உன்மகன் என்று கூறுகின்றார். கல்வியை அனைவரும் கற்க உரிமை உண்டு. ஆனால் அன்றையக் காலக்கட்டத்தில் கல்வி ஆதிக்கச் சாதியினர் கைப்பற்றிக் கொண்டிருந்த சூழலை நாவல் வெளிப்படுத்துகிறது.
    பாதுகாப்பு வசதி
    தோல் தொழிற்சாலையில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு எந்த ஒரு பாதுகாப்பு வசதியும் செய்துதரப்படவில்லை. தூய்மையற்றக் காற்றை சுவாசிப்பதால் அவர்களின் சுவாசக் குழல் பாதிப்பிற்குள்ளாகிறது. உயிரை இழக்கும் சூழலும் ஏற்படுகிறது. தொழிலாளர்களுக்கு ஏதேனும் ஓர் ஆபத்து என்றால் முதலுதவி செய்வதற்கு கூட உரிய ஏற்பாடுகள் தொழிற்சாலையில் கிடையாது. எந்த ஒரு தொழிற்சாலையைத் தொடங்கும் போது, அங்கு தொழிலாளர்களுக்கு உரிய பாதுகாப்பு வசதியும், மருத்துவ வசதியும் அமைத்து இருத்தல் வேண்டும். தொழிலாளர்களுக்கு சரியான பாதுகாப்பு வசதி உள்ளதா! என்பதை அறிந்தே, அரசு தொழிற்சாலை இயங்க அனுமதி வழங்குதல் வேண்டும். ஆனால் இத்தகையச் சூழல் தோல் தொழிற்சாலையில் காணப்படவில்லை, மாறாக எவ்விதப் பாதுகாப்பு வசதியும் இன்றியே தொழிலாளர்கள் பணி புரிகின்றனர்.
    சுண்ணாம்புக் குழி
    தோல்தொழிற்சாலையில் பணிபுரியும் தொழிலாளர்கள் ஒவ்வொருவரையும், அவர்களின் திடகாத்திரமான உடல் பலத்தைக் கொண்டே பணிகள் பிரித்து கொடுக்கப்படுகிறது. சுண்ணாம்புக் குழியில் இறங்கி வேலை செய்ய நல்ல திடகாத்திரமான உடல்பலம் கொண்ட ஆண்களே அப்பணியைச் செய்கின்றனர். அவர்கள் சுண்ணாம்பு குழியில் இறங்கி வேலை செய்யவதற்கு எந்த ஒருவிதப் பாதுகாப்பு கருவியும் அளிக்கப்படவில்லை.
    நோய் ஏற்படுதல்
    தோல் தொழிலாளர்கள் சுண்ணாம்புக் குழியில் இறங்கி பணிபுரியும் போது சுண்ணாம்பு நீரின் புகையைச் சுவாசிப்பதாலும், பெண்கள் முடிதள்ளும் பணியைச் செய்யும்போது ஆட்டின் ரோமங்கள் அவர்களின் சுவாசப்பகுதியில் படுவதாலும், தொழிலாளர்கள் குறுகியக் காலக்கட்டத்திலே ஈழல் நோயால் பாதிக்கப்படுகின்றனர். அவர்களை இந்நோய் மரணம் வரை கொண்டு செல்கிறது.
    சுண்ணாம்பு நீரில் இறங்கித் தோல்களை அலசுவதற்குள் அவர்களின் உயிரே போய்விடும் நிலை ஏற்படுகிறது. அவர்களின் ஆடை முழுவதும் சுண்ணாம்பு நீரில் ஊறிக் கிடந்தமையால் சுண்ணாம்புத் தண்ணீர் பட்ட இடம் எல்லாம் நமைச்சல் (அரிப்பு) எடுக்கிறது. பிறகு அது புண்ணாகி இரணவேதனையை அளிக்கிறது.
  5. தொழிலாளர் பிரச்சனைகள்
    முதலாளிகளின் ஆதிக்கம்
    தொழிலாளர் நலன்
    பணிச்சுமை
    என்ற மூன்று நிலைகளின் காணலாம்.
    முதலாளிகளின் ஆதிக்கம்
    முதலாளிகளின் ஆதிக்கம் கீழ்க்கண்டவாறு சித்தரித்துக் காட்டப்படுகிறது.
    தொழிலாளர் அடக்குமுறை.
    உழைப்புச் சுரண்டப்படுதல்.
    முன் அறிவிப்பு இன்றி ஆலைகளை மூடுதல்.
    முன்பணம் பெறுவதால் உரிமை இழத்தல்.
    தொழிலாளர் அடக்குமுறை
    தோல் தொழிற்சாலையில் பணிபுரியும் ஒவ்வொருவரும் முதலாளிகளின் கட்டுப்பாட்டில் அடிமைகளாக மட்டுமே வைக்கப்பட்டு இருந்தனர். தொழிலாளர்கள் எவரேனும் தவறு செய்தால், ஒரு கல் தூணில் கட்டிவைத்து அடியாள் கொண்டு ஐம்பது கசை அடிகள் கொடுக்கப்படும். தொழிலாளர்கள் செய்யும் பணியே அவர்களின் உடம்பில் இரண வேதனையை ஏற்படுத்தக் கூடியது. அதனோடு இந்தக் கசை அடிகளையும் பெற வேண்டியுள்ளது.
    தோல் தொழிற்சாலையில் முதலாளிகள் அவர்களின் அடியாட்கள் எவரேனும் தாக்கப்பட்டால், தோல் தொழிற்சாலைக்குள் புகுந்து தொழிலாளிகளை சரமாரியாக தாக்கிவிடுவர். அது மட்டுமல்லாமல் அங்கு காவல் துறையினர் வரவழைக்கப்பட்டு தடியடியும் நடத்தப்படும். அடியும், உதையும் தோல் தொழிற்சாலையில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு வழக்கமாகி விடுகிறது. ஆசீர்வாதம் தன் மனைவியை இழந்து நின்றபோது அன்றைய ஒருநாள் மட்டுமே அவருக்கு விடுப்பு அளிக்கப்படுகிறது. மனைவி இறந்த துக்கத்தைக் கூட அனுசரிக்கவிடாமல் மறுநாளே தோல்தொழிற்சாலை பணிக்கு முதலாளி வரச்சொல்கிறார்.
    ஒசேப்பு முதலாளியின் மைத்துனனை எதிர்த்ததன் காரணமாக, முதலாளிகளின் அடியாட்கள் ஒசேப்பை கல்தூணில் நிர்வாணமாகக் கட்டித் தொங்க விடுகின்றனர். அதனோடு மட்டும் அல்லாமல் உடும்புத் தோலினால் செய்யப்பட்ட சாட்டை வாரினால் தாக்கப்படுகிறான். இவ்வாறு செய்வது ஒசேப்புக்கு மட்டும் அல்லாமல் தோல் பதனத் தொழிற்சாலையில் பணிபுரியும் ஒவ்வொரு நபருக்கும் ஒரு எச்சரிக்கையாகவும், ஒரு பாடமாகவும் அமைகிறது. தாழ்த்தப்பட்ட மக்கள் என்பதற்காகத் தொழிற்சாலையில் அடிமைப்படுத்தப்பட்டதோடு மட்டும் விட்டுவிடவில்லை. இம்மக்கள் ஒவ்வொருவரும் மிருகத்தனமாகக் கொடுமைப் படுத்தப்படுகின்றனர். கடவுளின் படைப்பில் அனைவரும் மனிதனாகப் படைக்கப்பட்ட போதும், ஆண்டான் அடிமை சமூக முறையே நிலவுகிறது என்பதை இந்நாவல் வழி அறியமுடிகிறது.
    உழைப்புச் சுரண்டப்படுதல்
    தொழிலாளர்களின் உழைப்பு என்பது முதலாளிகளால் அதிக அளவில் சுரண்டப்படுகிறது. தொழிற்சாலைக்குப் பணிபுரியச் செல்லும் மக்கள் காலவரையறையின்றி வேலை செய்கின்றனர். அவர்களின் உழைப்பிற்கு ஏற்ற ஊதியம் கொடுக்கப்படுவது இல்லை. முதலாளிகளால் கொடுக்கப்படும் சொற்ப ஊதியமும் அவர்கள் வாங்கியக் கடனுக்காக வட்டி, அசல் என்று முதலாளிகள் போடும் கணக்கிற்கு ஏற்ப பணம் பிடித்தம் செய்யப்பட்டு, மீதம் உள்ள பணமே வழங்கப்படுகிறது. அதனைக் கொண்டு அவர்களின் வயிற்றுபசியைக் கூட முழுமையாக தீர்த்துக்கொள்ள இயலுவதில்லை. சுண்ணாம்பு நீரிலும், கடுக்காய் குழியிலும் நின்று தங்களின் உடல் வருத்த உழைக்கும் தொழிலாளர்களுக்கு எவ்வித பயனும் கிடைக்கப்பெறுவது இல்லை. தோல் தொழிற்சாலை தொழிலினால் அதிக இலாபம் பெறக்கூடியவர்கள் முதலாளிகளே ஆவர்.
    “உழைப்பால் உயரலாம் எனும்
    உன்வேதம்
    எங்களுக்குப் பொய்த்துவிட
    நாங்கள் உழைத்தால்
    நீ உயரலாம் என்பது
    உண்மையாயிற்று”6
    என்று அபிமானி கூறுகிறார்.
    “நாங்கள் சிந்தும் வியர்வை குருதியின் பரிணாம வளர்ச்சியே மாடமாளிகைகள்”7
    என்று கனகராஜ் சுட்டிக்காட்டுகிறார். தொழிலாளர்களின் உழைப்பு சுரண்டலை,
    “உன் உழைப்பின் விளைவில் ஒண்டிப் பிழைக்காத உயிரேதும் இல்லை”8
    என்று சத்தியானந்தன் கூறுகையில் ஒடுக்கப்பட்டோருக்கு வலிமை பிறந்தாலும் எதிர்க்கத் திராணியற்றவர்களாக சமூகம் அவர்களை நிலைநிறுத்துகிறது.
    முன் அறிவிப்பு இன்றி ஆலைகளை மூடுதல்
    ஒரு வேலை உணவிற்காக தொழிலாளர்கள் அதிக துன்பம் கொண்ட அப்பணிக்கு செல்கின்றனர். முதலாளிகள் அனைவரும் ஒன்றுகூடி தொழிலாளர்களுக்கு எவ்விதமான முன் அறிவிப்பும் கொடுக்காமல் ஆலையை ஒருமாதகாலம் மூடிவிடுகின்றனர். இதனால் துன்பம் அடையும் மக்கள், தாங்கள் அறிந்த தொழிலும் மூடப்பட்டமையால் தமக்கு முன்பின் அறிமுகம் இல்லாத தொழிலுக்குச் செல்ல நேரிடுகிறது. தங்களின் வீட்டில் அடுப்பு எரிய வேண்டும் என்பதற்காகவும், பிள்ளைகளைக் காப்பாற்ற வேண்டும் என்பதற்காகவும், இவர்கள் மீன்விற்றல், அரிசி மண்டிக் கடையில் மூட்டை தூக்குதல் இதுபோன்ற பிறத் தொழில்களுக்குச் செல்கின்றனர்.
    பணிச்சுமை
    ஏசுவடியாள் என்ற பெண் கதாபாத்திரம் முடிதள்ளும் வேலைக்கு தள்ளப்படுகிறாள். அவ்வேலை கடினமானதாக இருக்கும் என்று அவள் எதிர் பார்க்கவில்லை. உப்பு தேய்த்து பதப்படுத்தப்பட்டு வரும் ஆட்டுத்தோல், மாட்டுத்தோல் இரண்டில் இருந்து வரும் ஊனின் வாடை அவளை வாந்தி எடுக்க வைக்கிறது.
    முதல் நாள் விவரம் அறியாமல் அவள் சுண்ணாம்புக் குழியில் இறங்கி விடுகிறாள். அவளுடைய தொடை முதல் பாதம் வரை சுண்ணாம்பு நீரின் வேகம் தாங்காமல் வெந்து இரணமாகி விடுகிறது. அதனால் காய்ச்சல் கூட அவளுக்கு ஏற்பட்டு விடுகிறது. இவ்வாறு தொழிற்சாலையில் பணிபுரியும் ஒவ்வொரு தொழிலாளர்களின் கையும், காலும் புண்களாகவே இருப்பதை நாவல் பதிவுசெய்கிறது. இத்தகைய வேதனையுடனே அவர்கள் ஒவ்வொருவரும் பணிக்குச் செல்கின்றனர்.
    இவர்களை போன்று துப்புரவு பணி மேற்கொள்ளும் பெண்களும் ஆண்களும் மனிதக் கழிவுகளை அள்ளும் கொடுமையான பணியைச் செய்கின்றனர். மனிதனுடைய பிறப்பில் இதனைவிடக் கொடுமையான துன்பம் அவனுக்கு வேறு எதுவும் கிடையாது. சுண்ணாம்புக் குழியில் இறங்கி வேலை செய்ய நல்ல திடகாத்திரமான மனிதனால் மட்டுமே முடியும். அவனுடைய திடமான உடம்பில் பாதியை சுண்ணாம்புக் குழியில் பணிசெய்தே இழந்து விடுவான். ஒரு மனிதன் தன்னையே தான் வெறுத்துவிடும் அளவிற்கு தோல் பதனத் தொழிலின் கொடுமையான நிலையை நாவல் அறியப்படுத்துகிறது.
    தொழிலாளர் நலன்
    தொழிலாளர் நலன் என்பது இங்கு பேணப்படவில்லை என்பது வெளிப்படையாக நாம் அறிந்து கொள்ள இயலுகிறது. தொழிலாளர்களுக்கு எவ்வித பாதுகாப்பு வசதியும் இல்லை. அவர்கள் தொழிற்சாலையில் பணிபுரிந்த குறுகியக் காலகட்டத்திலே நோயினால் பாதிக்கப்படுகின்றனர். தங்களின் உடைமை, உரிமை என அனைத்தையும் இழந்து நிற்கும் அவர்களுக்கு இறுதியில் நோய் என்பது மட்டுமே பலனாக கிடைக்கிறது. கடைசி காலக் கட்டத்தில் வாழும் அவர்களுக்கு பண உதவி எதுவும் செய்து தரப்படுவது இல்லை. தம்முடைய இரத்தத்தை வியர்வையாகச் சிந்தி உழைத்த அம்மக்களை வயது முதிர்வு காலத்தில் முதலாளிகள் கைவிட்டு விடுகின்றனர். தொழிற்சாலையில் பணி புரிவதே கடினமான நிலையாக இருக்கும் போது, இங்கு பணிபுரியும் பெண்கள் மேலும் பல துன்பங்களுக்கு ஆளாக்கப்படுகின்றனர்.
    பெண்கள் வீட்டிலும் பணிசெய்து, தொழிற்சாலையிலும் பணிசெய்து அங்கு உள்ள முதலாளிகளாலும், பிறராலும் பெண்கள் கொடுமைகளுக்கு உள்ளாக்கப்படுகின்றனர். தொழிற்சாலையில் பணிபுரியும் தொழிலாளர் நலன் காக்கப்படுவதைக் காட்டிலும், பெண்கள் பல வன்கொடுமைகளுக்கு உள்ளாக்கப்படுகின்றனர். தொழிலாளர் நலன் என்பது கேள்விக் குறியாகவே உள்ளது.
    முடிவுரை
    தோல் நாவலில் தொழிலாளர் பிரச்சனையை ஒரு பாதியாகவும் போராட்டங்களை மறுபாதியாகவும் அமைத்துக் காட்டுகிறது.
    ஒவ்வொரு தொழிலாளர்கள் அடையும் இன்னல்களை எடுத்துக்காட்டும் போதும் ஆண்டான் அடிமைச் சமூகம் நிலைபெற்றிருப்பதை நாவல் வெளிப்படுத்துகிறது. முதலாளிகளின் நலமும், தொழிலாளர் அடிமை முறையும் நாவலின் மைய நீரோட்டமாக அமைந்துள்ளதைக் காணமுடிகிறது.
    அடிக்குறிப்பு
    இராஜமுத்திருளாண்டி, இலக்கியத்தில் மனித உரிமைகள், ப.38.
    இராஜமுத்திருளாண்டி, இலக்கியத்தில் மனித உரிமைகள், ப.66.
    டி.செல்வராஜ், தோல், ப.44.
    திருவள்ளுவர், திருக்குறள், ப.46.
    திருவள்ளுவர், திருக்குறள்,ப.400.
    டி. செல்வராஜ், தோல், ப.44.
    டி. செல்வராஜ், தோல், ப.181.
    டி. செல்வராஜ், தோல், ப.19.
    பார்வை நூல்கள் :
  6. இராஜமுத்திருளாண்டி, 2008, இலக்கியத்தில் மனித உரிமைகள், முதற்பதிப்பு, நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், சென்னை-600 050.
  7. திருவள்ளுவர், 2001, திருக்குறள் (பரிமேலழகர் உரை), இரண்டாம் பதிப்பு, அருணா பதிப்பகம், சென்னை -600 049.
  8. செல்வராஜ், டி., 2010, தோல், முதற்பதிப்பு, நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், சென்னை-600 050.

Leave a comment

Trending