பறையின் பண்பாட்டு அரசியல் சங்க காலம் முதல் சமகாலம் வரை
கு. இரவிகுமார்

முன்னுரை
பறையின் பண்பாட்டு அடையாள அரசியல் சங்க காலம் முதல் சமகாலம் வரை” எனும் இக்கட்டுரை வரலாறு (History) மற்றும் இனவரைவியல் (Ethnography) நோக்கில் பயணப்படவுள்ளது. இசை இரு வகைப்படும். ஒன்று கருவி இசை, மற்றொன்று குரல் இசை ஆகும். சங்க காலத்திலும் சமகாலத்திலும் இசைக் கருவிகளோடு தொடர்புடைய சமூகங்கள் எவை? இசைக் கருவிக்கும் இச்சமூகங்களுக்குமான தொடர்பு என்ன? இசைக்கருவியோடு தொடர்புடைய தொன்மக்கதைகள், புராணக்கதைகள், வரலாற்றுக் கதைகள் போன்ற சிறப்பு விழுமியங்கள் உள்ளதா? இசையின் சமூக மதிப்பு, இசைக் கருவிகளுக்கும், பாலினத்திற்கும், சாதிகளுக்கும் இடையிலான உறவுகள் என்ன? முரண்பாடுகள் என்ன? போன்ற ஏராளமான வினாக்களை முன்வைத்து அவ்வினாக்களுக்கு விடைதேடும் விதமாக இக்கட்டுரை பயணிக்கிறது.
ஆதிமனிதர்களின் தொழிலும் இசையும்
வரலாறு என்பது மானுட சமுதாயத்தின் நீண்ட நெடிய வளர்ச்சிப் போக்கினை வடித்துத் தரும் ஆவணம். விலங்கினத்திலிருந்து பிரிந்து காடுகள் அழிக்கப்பட்டதாலும், பிற காரணங்களாலும், கால்களால் நடந்து கைகளால் செயல்படத் தொடங்கினர், ஆதிமனிதர்கள். இயற்கையின் கூறாகப் படைக்கப்பட்டிருந்ததாலும், குகையில் வாழ்ந்த ஆதிமனிதர்கள் இயற்கையின் சீற்றத்தைக் கண்டு அஞ்சினர். இச்சீற்றத்தைத் தணிக்கவும் இயற்கையின் பிற படைப்புகளின் மேல் ஆதிக்கம் செலுத்தவும் தொடங்கினர். மனித வரலாறு இதிலிருந்து தொடங்குகிறது. மனிதர்கள் வளர்ச்சிப் பயணத்தை மேற்கொண்டார்கள். இவ்வாறு தொடங்கிய ஆதிக் காலத்திலிருந்து விண்வெளிப் பயணம் மூலம் பேருலகத்தை, அண்டத்தை அளாவும் இன்றைய நாள்வரை மனிதர்கள் வியத்தகு முன்னேற்றம் கண்டுள்ளனர். 64 கலைகளையும் கற்று சோதனைகளையெல்லாம் சாதனைகளாக மாற்றும் வல்லமை மனிதர்களால் மட்டுமே முடிந்தது. அதனாலேயே மனிதர்கள் இவ்வுலகில் எல்லாவற்றிலும் மய்யப் பொருளாகத் திகழ்கிறார்கள்.
மனித வாழ்க்கைக்கு இன்றியமையாத தேவை உழைப்பு. உழைப்பே மனிதனைப் படைத்தது என்பார் ஏங்கெல்ஸ். கருவிகளின்றேல் உழைப்பும் இல்லை. எனவே தான் பெஞ்சமின் பிராங்களின் மனிதனைக் கருவிகள் படைக்கும் விலங்கு என்று குறிப்பிட்டார். சிக்கி முக்கிக் கல்லையும், வில்லம்பையும் கொண்டு கீழ்மட்டத்தில் மிக எளிமையான வாழ்க்கையைத் தொடங்கினான் மனிதன். இடைவிடாத உழைப்பினால் புறத்தேயுள்ள பொருள்களையும், இயற்கையையும் மாற்றியமைத்து விட்டான், நாகரீகத்தையும் படைத்து விட்டான். காட்டு வாழ்க்கையின் போது விலங்குகளை வெற்றி கொண்டு ஆள வில்லம்பு படைத்துக் கொண்டான். பின்னர் வேளாண்மையில் ஈடுபட்டபோது விதைகள், மரம், செடி, கொடிகள், தட்பவெப்பம், கோள்களின் இயக்கங்கள், இரவு பகல் ஆகியவற்றின் தன்மையைக் கண்டறிந்து தனக்குப் பணியாற்றிச் சில விலங்குகளையும் பழக்கப்படுத்திக் கொண்டனர். இயற்கையை எதிர்த்துப் போராடிப் பொருளுற்பத்தியில் ஈடுபட்ட போது ஐம்புலன்களையும் பயன்படுத்தி புலனறிவுப் பெற்றனர். “அன்றிலிருந்து இன்று வரையிலான மனித வரலாற்றுப் பணியின் விளைவாக உருவானதே ஐம்புல அறிவு” என்று கார்ல் மார்க்ஸ் மூலதனத்தில் கூறியுள்ளார்.
காடுகளில் செடிகளும், மரக்கிளைகளும் உராய்வதால் ஏற்படும் ஒலியும், காகம் கரைதலும், குயில் கூவுதலும், மயில் அகவுதலும், யானை பிளிறிதலும், சிங்கம் கர்ஜித்தலும், வண்டினம் முரலுதலும், ஓடைகளின் சலசலப்பும், மனிதர்களின் நகைத்தலும், அழுகையும் அக்கால மனிதருக்கு ஒலி வேறுபாட்டையும், இசை நுணுக்கங்களையும் கற்றுத் தந்தன. மேலும் வேட்டையாடும் காலத்தில் மனிதனுக்கு கோலும் தோலும் இசைக்கருவிகளாக மாறின. ‘வரலாற்றுப் பொருள் முதல் வாதமும் கலையும்’ எனும் கட்டுரையில் பிளக்கனோவ், மனிதன் உற்பத்தி செய்து உழைக்கும் போது எழும் ஒலிகளே பின்னர்க் கருவி ஒலிகளாகப் பரிணமித்தன என்கிறார்.
இயற்கையைச் சார்ந்து இசை எழுந்தது என்பதற்குத் தமிழிசையே ஒரு சான்று. தொல்பழங்காலத்தில் தமிழ் நிலம் இயற்கையை அடிப்படையாகக் கொண்டு குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை என்று பாகுபடுத்தப்பட்டது. தொல்காப்பியப் பொருளதிகார அகத்திணையில் சூத்திரம் 20. இந்நிலப் பிரிவுகளுக்குத் தனித்தனியே தெய்வம், உணவு, மா, மரம், புல், பறை, செய்தி, யாழ் ஆகியன கருப்பொருளாக அமையும் என்று கூறுகிறது.
மனிதர்கள் கருவிகளைப் படைக்கத் தொடங்கிய காலத்திலேயே கூட்டு வாழ்க்கையும் தொடங்கி விட்டது. இக்கூட்டு வாழ்க்கையே கருவிகளையும், மொழியையும் படைத்தது. கருவியும் மொழியும் ஒன்றோடொன்று இணைந்தும் இயைந்தும் வளர்ந்து வந்துள்ளன. கருவிமாற்றம் மொழி மாற்றத்தை உருவாக்கியது. இவ்விரண்டுக்கும் அடுத்தபடியாகக் கூட்டு வாழ்க்கை மாய மந்திரங்களைக் கொண்ட சடங்குகளை உருவாக்கியது. மனிதர் உழைப்புக் காலத்திலும், அவர்கள் வாழ்விலும், தாழ்விலும் முனகலும், நகையும், முணுமுணுத்தலும், அழுகையும் இயல்பான ஒலியை உண்டாக்கின. இவற்றோடு ஆடலும் பாடலும் கூத்தும் இசையும் தேவையாயின. ஆடலுக்கும் பாடலுக்கும் கூத்துக்கும் இசைக்கும் இசைக்கருவிகள் உருவாக்கப்பட்டன.
தமிழில் இசைக்கருவிகள் நால்வகை: 1. தோற்கருவி 2. துளைக்கருவி 3. நரம்புக்கருவி 4. கஞ்சக்கருவி ஆகியன. தோற்கருவி எனப்படுபவை பறை, முரசு, தபேலா, மிருதங்கம், மேளம், துளைக்கருவி எனப்படுபவை புல்லாங்குழல், நாதஸ்வரம். இக்கருவிகளை காற்றுக்கருவி என்றும் அழைப்பர். நரம்புக்கருவி என்பது வீணை, யாழ். இக்கருவிகளை மிடற்றுக் கருவிகள் என்பர். கஞ்சக்கருவி என்பது உலோகத்தால் செய்யப்படுவதாகும். இதற்கு துணைக்கருவி என்று அழைப்பர்.
சங்க காலத்தில் தோற்றம், வாழ்க்கை முறை, தொழில்முறை, இசை அறிவு போன்ற வரலாற்று நிகழ்வுகளை சமகாலத்தில் இனவரைவியல் பார்வையோடு பொருத்திப் பார்க்கும்போது ஏராளமான உடன்பாடுகள் மற்றும் முரண்பாடுகள் அறியமுடியும்.
இனவரைவியல் (Ethnography)
இனவரைவியல் என்பது கோட்பாடாக உருவாக்கப்படவில்லை. மாறாக ஆய்வு முறையாக உருவாக்கப்பட்டுள்ளது. இந்த ஆய்வு முறையைப் பண்பாட்டு மானிடவியலாளர் அல்லது அமெரிக்க மானிடவியலாளர் உருவாக்கியுள்ளனர். இவ்வாய்வு முறையோடு தொடர்புடைய மற்றொரு ஆய்வுமுறை உள்ளது. அவ்வாய்வு முறை இனக்குழு ஒப்பீட்டியல் (Ethnology) அல்லது இனவியல் எனக் குறிப்பிடப்படுகிறது. இனக்குழு ஒப்பீட்டியல் என்பது இரு இனக்குழுக்களின் பண்பாட்டு அம்சங்களை ஒப்பிட்டு ஆய்வு செய்வதற்காக உருவாக்கப்பட்டது. வரலாற்று நிலையிலும் கிடைத்தள நிலையிலும் இவ்வொப்பீடு செய்யப்படலாம். ஆனால் இனவிரைவியல் (Ethnology)என்பது ஒரு குறிப்பிட்ட இடத்தில் வாழ்கின்ற ஒரு குறிப்பிட்ட மக்கள் குழுவின் அல்லது சாதியின் அல்லது இனத்தின் பண்பாட்டு அம்சங்கள் அனைத்தையும் சேகரித்து அவற்றின் பண்பாட்டு அர்த்தங்களைத் தெரிந்து வெளிப்படுத்தும் ஆய்வு முறையாகும். இவ்வாய்வு முறை வரலாற்றுப் பார்வையை அங்கீகரிக்காது. கிடைத்தளப் பார்வையை (Synchronic Approach) ஏற்றுக் கொள்ளும். ஆனால் இக்கட்டுரை, வரலாறு, இனவரைவியல், இனக்குழுவியல் இம்மூன்றையும் பகுத்து ஆராய்ந்து நகர்கிறது.
பறையின் பண்பாட்டு அரசியல்
ஒவ்வொரு சமூகத்திற்கும் ஒவ்வொரு வகையான நிகழ்கலை அடையாளம் உண்டு. ஒரு குறிப்பிட்ட நிகழ்கலை வடிவம் ஒரு குறிப்பிட்ட சமூகத்தை மட்டும் அடையாளப்படுத்துவது மட்டுல்லாமல் அவை மற்றொரு சமூகத்தினரிடமிருந்து வேறுபட்டு காணப்படுகிறது. பறையாட்டம் எனும் நிகழ்த்துக் கலையை இன்றைய சூழலில் தமிழகப் பகுதிகளில் உள்ள ஒரு சிலப் பகுதிகளில் அருந்ததியர் மற்றும் பறையர் ஆகிய இரு சமூகத்தினர்கள் தொழில் முறையாக இசைத்து வருகின்றனர். இன்றைய தமிழ்ச் சமூகத்தில் பறையாட்டம் என்பது பறையர் சமூகத்தினருக்கே உரித்தான அடையாளம் என்று தெரிந்தும் தெரியாமலும், அறிந்தும் அறியாமலும், விரும்பியும் விரும்பாமலும் பேசப்பட்டு வருகின்றது. ஒரு வகையான உரையாடலும், கதையாடலும் நிகழ்ந்து வருகின்றது. இக்கதையாடல் அல்லது இவ்வுரையாடல் தொடர்பான விமர்சனங்களுக்கு பதில் விமர்சனங்களைத் தொடுக்காமல் விமர்சனங்களுக்குத் தேவையான பதிலை பல்வேறு கருத்துக்களின் வாயிலாகவும், பல்வேறு அறிஞர்களின் கூற்றுகளின் வழியாகவும் விளக்கப்படுகிறது.
இன்றைய சமூக அமைப்பில் பறையர்களின் நிலையை அறிந்து கொள்வதற்கும், உணர்;ந்து கொள்வதற்கும் அச்சமூகத்தினரைப் பற்றிய வரலாற்றுத் தகவல்கள் உதவும் என்பதால் வரலாற்றுச் சான்றாவணங்களையும் மேற்கோள் காட்டி விளக்கத்தை வளர்த்துச் செல்கிறது. பறை இசைக்கருவி பறையர் சமூகத்தின் பண்பாட்டு அடையாளங்களுள் ஒன்றாகத் திகழ்ந்ததா? அல்லது திகழ்கிறதா? அல்லது பிற சமூகத்தினரால் இச்சமூகத்தின் பண்பாட்டில் வலிந்து திணிக்கப்பட்டதா? பறை என்பது இழிவுக் கருவியா? அல்லது இச்சமூகத்தினரின் சிறப்புப் பண்பாட்டு அடையாளமா? உலகமயமாக்கலின் (Globalisation) தாக்கத்தினால் பறையும், பறையாட்டமும் எவ்வாறு மாற்றம் பெற்றுள்ளது என்கிற இயல்பான வினாக்களும் விடை அளிக்கப்படுகிறது.
பறையர் சமூக மக்கள் பெரும்பாலும் பறை இசைக் கருவியைத் தங்களுடைய அனைத்து சடங்குசார் சூழல்களிலும் பயன்படுத்தி வருகின்றனர். அதேபோல் இடைநிலை சாதியினர் தங்களுடைய சடங்குசார் சூழல்களில் பயன்படுத்தி வருகின்றனர். ஆனால் அவர்கள் தங்களின் சாதியத் தன்மைக்கேற்றவாறும், அதிகாரத் தன்மையை வெளிப்படுத்தும் அம்சமாகவும், பறை இசைக்கருவியைப் பயன்படுத்திக் கொள்கின்றனர். உயர்ந்த சாதியினர் என்று தங்களைத் தாங்களே கற்பிதம் செய்து கொள்ளும் சாதியினரான பிராமணர், இசைவேளாளர், செட்டியார், நாயக்கர் ஆகிய சாதியினர் பறை இசைக்கருவியைத் தங்களுடைய வாழ்வியல் மற்றும் வழிபாட்டுச் சடங்குகளில் பயன்படுத்துவதில்லை. இதற்கான காரணம் பறை என்பது ஆடு மற்றும் மாட்டுத் தோலால் செய்யப்படுவதாகும். அதனால் இக்கருவி இழிவானது எனக் கருதப்பட்டு மேற்குறிப்பிட்ட சமூகத்தினரால் பயன்படுத்துவதில்லை. மேலும் இக்கருவி அன்றாடம் மக்கள் பயன்படுத்தும் பொருள்களிலிருந்து செய்யப்படுவதால் மற்ற சாதியினர் இக்கருவியைத் தாழ்வானதாகக் கருதுகின்றனர்.
பறைக்கும் பிற சாதிகளுக்குமான முரண்பாடு பற்றிப் பார்க்கும்போது இசைவேளாளர் என்று சொல்லக்கூடிய சமூகத்தினரின் இசை முறைக்கும், பறையர் சமூகத்தினரின் இசை முறைக்கும் வேறுபாடு காணப்படுகிறது. அதாவது இசை வேளாளர் என்பவர்கள் நிறுவன சமயம் சார்ந்த கோயில்களில் இசைப்பவர்களாக உள்ளனர். இவர்களின் இசைக்கருவி தவில். இக்கருவியும் மாட்டுத் தோலால் தான் செய்யப்பட்டுள்ளது. இவர்களின் இசை முறை என்பது ரம்மியமாகவும், அதே நேரத்தில் உணர்ச்சிகளை மனதிற்குள் புதைத்துவிடும் விதமாகவும் இருக்கும். இதற்குக் காரணம் இவர்களின் சமூகத் தகுதியாகும். இசைக்கருவி மற்றும் இசையின் தகுதி, சிறப்பு ஆகியவை சாதியின் தகுதி, சிறப்பு ஆகியவற்றைப் பொருத்தவையாகவே அமைகின்றன. உயர்ந்த சமூகம் சார்ந்தவர்களாகத் தங்களைக் கருதிக் கொள்ளும் (தமிழக அரசின் பார்வையில் இவர்கள் மிகவும் பிற்படுத்தப்பட்டவர்கள்) இவர்களின் இசையும் உயர்ந்தோர்க்கானதாகக் கருதப்படுவதால் அத்தகையோரின் வாழ்வியல் அனுபவத்திற்கு ஏற்பவும், கருத்தியலுக்கு ஏற்பவும் இசை மென்மையாக்கப்படுகிறது. ஆனால் அதே தோலால் செய்யப்படும் பறையானது தாழ்த்தப்படுவர்களாகக் கருதப்படும் பறையர் சமூகத்தின் அடையாளமாக கற்பிதம் செய்யப்படுவதால் அவர்களுடைய இசை பிற தாழ்த்தப்பட்ட மிகவும் பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு மட்டுமே உரியது எனப் புனைவு செய்யப்பட்டுள்ளது. மேட்டுக்குடி மக்களுக்கான தவில் இசை, உணவை உள்முகமாக்கி அவர்களின் உடலைக் கட்டுப்படுத்துகிறது, அமைதிப்படுத்துகிறது. பறையர் சமூகத்தினர் உழைப்பில் நேரடியாகப் பங்கு பெறுபவர்கள். தொழில் வெளியில் இச்சமூகத்தினரை ஆதிக்க சாதியினரால் உழைப்பு நிலையிலும், உணர்வு நிலையிலும் ஒடுக்கப்படுவதால் கலைவெளியில் அவ்வொடுக்குதலில் இருந்து மீள்வதற்கான கூத்து, இசை வடிவங்களை வெளிப்படுத்த வேண்டிய தேவை ஏற்படுகிறது. அதாவது இச்சமூகத்தினருடைய பறை இசை ஒடுக்கப்பட்ட உணர்வுகளை மனதிலிருந்து வெளியே கொண்டு வருகிறது. மேற்குறிப்பிட்ட கருத்துக்கள் இன்றைய காலகட்டத்தை முன்வைத்து விளக்கப்பட்டதாகும். இனி பறை பற்றிய சங்க காலக் கருத்துக்கள் பின்வருமாறு,
சங்க காலத்தில் பறையும் சாதியும்
சங்க காலத்தில் வாழ்ந்த மக்களை அவர்கள் வாழும் நிலங்களுக்கு ஏற்பப் பெயரிட்டு அழைத்து வந்தனர். அந்நிலவியல் தன்மைக்கு ஏற்பத் தொழில்முறைகளும் செய்து வந்தனர். அத்தொழில் முறைக்கு ஏற்ப குடிகள் உருவாயின. அக்குடிகளுள் ஒன்று பறையர் குடி ஆகும். இப்பறையர் குடியினர் சங்க காலத்தில் இசைத் தொழிலையும் செய்து வந்துள்ளனர் என்பதைச் சங்க இலக்கிய பாடல்களில் ஒன்றான புறநானூற்றுப் பாடல் வரிகளின் மூலம் அறிய முடிகிறது. சான்றாக,
“துடியன் பாணன் பறையன் கடம்பன்
இந்நான் கல்லது குடியும் இலவே”
(புறநானூறு: 335)
மேற்குறிப்பிட்ட துடியன், பாணன், கடம்பன் ஆகிய குடிகள் சங்க கால கட்டத்தில் இசை தொடர்பான, பாடல்கள் தொடர்பான தொழில் முறைகளைச் செய்து வந்தமைக்கு ஏராளமான வரலாற்றுச் சான்றாதாரங்கள் உள்ளன. ஆனால் பறையர் குடியினர் தொடர்ச்சியாக இசைக்கருவி தொடர்பான தொழில்கள் செய்தமைக்கு வேறெந்தச் சான்றுகளும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கதாகும். அறிஞர் குணா அவர்கள் எழுதியுள்ள “வள்ளுவப் பார்ப்பாரியம்” எனும் நூலில் பறை என்பதற்குப் புதியதொரு விளக்கத்தைத் தருகிறார். “ஆன்றடங்கிய ஞானத்தாலும் தவத்தாலும் மாபெரும் அறிஞர்களாயிருந்தவர்கள் அரசர்களுக்கு ஆசான்களாயிருந்து வழிகாட்டி வந்தனர். சாக்கையர், கணிகர், நிமித்தகர், பார்ப்பார் என்றெல்லாம் அழைக்கப்பட்டு வந்த வள்ளுவர்களோ அரசர்க்கும் பிறருக்கும் கருமத் தலைவர்களாயிருந்து நாள் கோள் மீன் பார்த்து நல்லது கெட்டதைப் பற்றிச் சொல்லி வந்ததுடன் பிறப்பும் மணமும் இழவும் முதலான வாழ்வியல் நடப்புகளுக்குரிய சடங்குகளை நடத்தி வந்தனர். காலப்போக்கில் கணியன், நிமித்திகன், சாக்கையன், வள்ளுவன், பார்ப்பான், மறையோன் எனும் வெவ்வேறு பெயர்கள் மயங்கி ஒன்றாகி விட்டன. மேலும் தமிழ் நான்மறைக் கற்று ஓதி வேள்வி செய்து வந்த வேத முதல்வர்களையே ஆக்கியோர் என்றும் மறைகளை கற்பித்தவர்கள் என்றும் மறைகளைக் கற்றவர்கள் என்றும் பொருள்படும் பெயரே மறையோர் எனும் பெயராகும். மறையர் எனும் சொல் மயங்கி பறையர் என்றானது” என்று விளக்கம் அளிக்கிறார்.
மேலும் ‘பறை’ எனும் சொல்லுக்கு குணா அவர்களின் கருத்தை தனது முனைவர் பட்ட ஆய்வில் பேராசிரியர் பு.சித்திரவேல் (தலைப்பு – தலித்துகளின் வாழ்க்கைப் பயணச் சடங்குகள் – செயல்பாட்டியல் கோட்பாட்டு அணுகுமுறை) அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளார். “நிலக்கிழாருக்கு குத்தகைப் பணத்திற்குப் பதிலாக பறை என்ற முகத்தலளவையால் (மரக்கால்) நெல்லினை அளந்து கொடுத்ததால் ஏற்பட்ட பெயரே பறையர்” எனச் சுட்டியுள்ளார்.
மேலும் “சங்க காலத்தில் பறை எனும் சொல் நெல் அளக்கும் கருவியைக் குறிக்கும் சொல்லாகும். வேளாண்மைத் தொழிலோடு தொடர்புடைய நெல் அளத்தல் தொழிலைச் சங்க காலத்தில் ஒரு குறிப்பிட்ட நிலத்தில் வாழ்ந்த ஒரு குடியினர் செய்து வந்துள்ளனர். அக்குடியினர் பறை எனும் முகத்தலளவையால் (மரக்கால்) நெல்லினை அளக்கும் தொழிலைச் செய்ததால் அக்குடியினர் பறையர் என அழைக்கப்பட்டனர்” (குணா – வள்ளுவப் பார்ப்பாரியம். பக்கம் எண். 110, 111)
மேற்குறிப்பிட்ட கருத்துக்களின் அடிப்படையில் பறையர் சமூகம் சங்க காலத்திலிருந்து கி.பி.12ம் நூற்றாண்டு வரை மதிப்பு மிகுந்த சமூகமாக இருந்துள்ளது என்று கூறாவிட்டாலும் மதிப்பு குறைந்த சமூகமாக இல்லையென்பதை உணர முடிகிறது. கி.பி.12ம் நூற்றாண்டிற்குப் பிறகு பிற்காலச் சோழர்கள் காலத்திலும் அதற்குப் பிற்பட்ட நாயக்கர்கள் காலத்திலும் தான் பறையர் சமூகத்தினர்கள் வீழ்த்தப்பட்டுள்ளனர்.
சாதியும், தீண்டாமையும் ஆதிகாலம் தொட்டே வருவது கிடையாது. அவ்வாறு சொல்வோமானால் நாம் சாதிக்கும், தீண்டாமைக்கும் தொன்மையையும், நியாயத்தையும் உருவாக்கி விடுகிறோம் என்று அர்த்தமாகி விடும். உண்மையில் சாதியும் தீண்டாமையும் வரலாற்றின் குறிப்பிட்ட காலகட்டத்தில்தான் உருவாக்கப்பட்டது. அதன் பின்னர் தான் சாதிக்கேற்பத் தொழில் முறையும், தொழில் முறையில் இழிவுமுறையும் வலிந்து திணிக்கப்பட்டது.
“அம்பேத்கரும், அயோத்திதாசரும் இதனை மேலும் உறுதி செய்கின்றனர். தீண்டப்படாத சாதிகள் உருவாக்கப்பட்டு நிலம் உள்ளிட்ட அடையாளங்கள் ஆகியவை விரும்பிய தொழிலை மேற்கொள்ளும் சுதந்திரம் பறிக்கப்பட்ட இம்மக்கள் சுகாதாரமற்ற தொழிலை மட்டுமே சாதி இந்துக்களின் கட்டளைக்கேற்றவாறு செய்ய வைக்கப்பட்டனர். சாதிக்குள்ளே திருமணம், தொழில் பாகுபாடுகள், கல்வி மறுப்பு, ஊருக்கு வெளியே குடியிருப்பு ஆகியவை சாதிமுறை உண்டானதின் விளைவுகளேயாகும். பிணக்குழி தோண்டுதல், இறந்த விலங்குகளை அகற்றுதல் என்று இழி தொழில்கள் கட்டாயமாக்கப்பட்டன.
செத்த மாட்டெடுத்தல் என்பதின் தொடர்ச்சி தான் மாட்டுத் தோலால் ஆன பறைமேளம் அடிப்பதும், தீண்டாமையும், இழிதொழில்களும இம்மக்கள் மீது சுமத்தப்பட்ட பின்னால் தீண்டாமையையும் இம்மக்கள் இழிவானவர்கள் எனும் கருத்தையும் பல்வேறு புராணங்கள், பாடல்கள், தொன்மக் கதைகள் முதலே உருவாகி வளர்பவை, இயல்பானவை என்று தொடர்ந்து பரப்பி வருகின்றனர், மத இந்துக்களும் சாதி இந்துக்களும். இதனால் ஆண்டாண்டு காலமாக நாம் அடிமையாகத் தான் இருந்து வருகின்றோம். நம்முடைய தொழில்கள் இழி தொழில்கள் தான் போலும் ஆகிய கருத்துக்களைப் பறையர் சமூகத்தினர் ஏற்கின்றனர். உளவியல்பூர்வமாக இம்மக்களை அடிமையாக்கும் உத்தி ஆகும்”. (பறையொலியால் பரவும் இழிவு – கொதிப்பு வெளியீடு) இவ் உளவியல் அடிப்படையில் தான் பறையர் சமூகத்தினர் இன்றைய கால கட்டத்தில் தங்களுடைய வாழ்வியல் மற்றும் வழிபாட்டுச் சடங்குகளிலும் பிற சமூகத்து சடங்கு முறைகளிலும் பறையை இசைத்து வருகின்றனர்.
பறையின் போராட்ட அரசியல்
இன்றைய காலகட்டத்தில் உள்ள அடுக்குமுறைகளையும், ஏற்றத் தாழ்வுகளையும் தொழில் முறைகளையும் ஏற்க மறுக்கிற பறையர் சமூகத்தினரில் ஒரு சாரார் இன்று பறை இசைக்கருவியை இசைக்கக்கூடாது எனும் கருத்தினை வலுவாகப் பரப்பி வருகின்றனர். “இதற்குச் சான்றாக 1985ம் ஆண்டு சுதந்திரத் தினத்தன்று காட்டுமன்னார்குடிக்கு அருகில் சுமார் பத்து கிலோமீட்டர் தொலைவில் உள்ள ரெட்டியூர் கிராமத்தைச் சேர்ந்த திரு.பாண்டியன் என்பவர் (இவர் பி.ஏ. பட்டம் பெற்றவர்) “பறையடிக்கும் இழிதொழிலைச் செய்ய மாட்டோம்” என்று போராடியதற்காக் காவல் துறையினரால் சுட்டுக்கொல்லப்பட்டார். மேலும் திரு.கக்கன் அவர்கள் பிறந்த மேலூர் அருகில் உள்ள தும்பைப்பட்டிக்குப் பக்கத்து ஊரான வஞ்சி நகரம் எனும் கிராமத்தில் கந்தன் என்பவர் சுத்தமான குடிநீர் வசதி, வீதியில் செருப்பணிந்து நடப்பதற்கான உரிமை, பறைமேளம் அடிக்க மறுப்பு என்பதற்காகப் போராடியதால் 1987ம் ஆண்டு சாதி இந்துக்களால் கொலை செய்யப்பட்டார். இதன் அடிப்படையில் பார்க்கும் பொழுது பறை இசைக்கருவி இச்சமூகத்தில் இழிவுக்கருவியாகப் பார்க்கப்படுகின்றதே தவிர பண்பாட்டு அடையாளமாக பார்க்கப்படவில்லை” (நூல் – வஞ்சி நகர கந்தன் – ஸ்டாலின் ராஜாங்கம்). மேலும் ஒரு குறிப்பிட்ட தொழில் அடையாளத்தை மட்டும் வைத்துக் கொண்டு அவ்வடையாளம் ஒட்டுமொத்த பறையர் சமூகத்தினருக்கும் உரித்தானது என்று கூறிவிட முடியாது. மேலும் ஒரு சிலப் பகுதிகளில் பறை அடித்தல் தொழிலைச் செய்வதால் மட்டும் பறைத் தொழில் பறையர் சமூகத்தினருக்கு முதன்மைத் தொழில் என்று கூறிவிட முடியாது.
பறை என்பது ஆதிக் கருவி என்றும் அக்கருவி தமிழர்களின் கருவி என்றும், தமிழர்களுக்கே உரிய மகத்தான அடையாளம் என்று புளகாங்கிதம் அடையும் பிற சாதி இந்துக்கள் அல்லது பிற சமூகத்தினர்கள் அவர்களின் முதன்மைத் தொழில்களாக பறை இசைப்பதை வரவேற்கக்கூடியதாக உள்ளது. பறை இசைத்தலை அனைத்து தமிழ்ச் சாதியினரும் இசைக்க வேண்டும். அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆவது போல், அனைத்து சாதியினரும் பறை இசைக்க வேண்டும் என்பதே சாலச் சிறந்ததாகும்.
பறை என்பது போர்க்கருவி என்றும், போர்ப்பறை என்றும் ஆதிக்க சாதியினரை வீழ்த்தக்கூடிய ஆயுதக் கருவி என்றும் மார்தட்டிக் கொள்ளும் ஒரு சில பறையர் சமூகத்தினர் “சாப்பறையைப் போர்ப் பறையாக” மாற்ற வேண்டும் என்றக் கருத்தினை முன்னிறுத்தி வருகின்றனர். இக்கருத்து 1990களுக்குப் பின்னர் முன் வைக்கப்பட்ட கருத்தாகும். இக்கருத்து தமிழகத்தில் பின் நவீனத்துவ சிந்தனையில் முன்மொழியப்பட்டதாகும். அதாவது தீட்டு என்று சொல்லக்கூடிய ஒன்றை புனிதமானதாகக் கூறுவதும், புனிதம் என்று சொல்லக் கூடியதை தீட்டாக கட்டும் மடைமாற்றம் ஆகும். பின் நவீனத்துவ சிந்தனை முறை ஐரோப்பிய நாடுகளில் உருவானதாகும். இக்கருத்து தமிழ்ச் சூழலுக்குப் பயன்படுத்துவது தவறான ஒன்றாக எண்ணப்படுகிறது. சாப்பறையைப் போர்ப்பறையாக மாற்றுவதன் மூலம் பறையர் சமூகத்தில் பெருவாரியான மாற்றங்கள் நிகழ்வது கிடையாது. மாறாக சாப்பறையை போர்ப்பறையாக மாற்றப்படும் பொழுது பறையர் சமூகத்தினரை மீண்டும் பறை இசைக்கருவியை இசைக்க வைப்பதே நிகழும். மீண்டும் பறையர் சமூகத்தினரை அடிமையாக்க முயற்சிப்பதாகும். இது உளவியல் ரீதியாக திட்டமிட்டு நிகழ்த்தப்படும் இழிவு முறையாகும்.
உலகமயமாக்கல் சூழலில் பறை
உலகமயமாக்கலின் தாக்கத்தினால் பறை இசைக்கருவி இன்று பறையர் சமூகத்தின் பண்பாட்டில் வலிந்து திணிக்கப்பட்ட சாதியத் தன்மையில் இருந்தும் சாதிய இறுக்கத்தில் இருந்தும் பறிக்கப்பட்டடு வேறொரு தன்மைக்கு குறிப்பாக சாதியற்ற தன்மைக்கு கொண்டு செல்லப்படுகிறது. குறிப்பாக தமிழ்ச் சமூகத்தில் அடிமை முறையும், அடிமைத் தொழிலும், சேவைத் தொழிலும் வலிந்து திணிக்கப்பட்ட காலத்திலிருந்து இன்றுவரை நிலவும் சாதியத்தையும், தீட்டையும் போக்குகிறது. பொதுவெளிகளில் பறையைப் பல்வேறு தன்னார்வலர்கள், தொண்டு நிறுவனங்கள், செயற்பாட்டாளர்கள், முற்போக்குச் சிந்தனையாளர்கள், பகுத்தறிவுவாதிகள் பயன்படுத்தி வருகின்றனர். இதனால் இக்கலை பல்வேறு மாநிலங்கள், நாடுகள் பயணப்படுகின்றன. இதனால் பறையின் ஆட்டங்கள், அடவுகள், உடைகள் மாற்றப்படுகின்றன. உலகமயமாக்க சூழலில் எந்தப் பொருளுக்கு கவர்ச்சித் தன்மை (ஈர்ப்பு) உள்ளதோ, அப்பொருளுக்குச் சந்தையில் மதிப்பு கூடுகிறது. எனவே இக்கலைக்கும் மதிப்பு உயர்கிறது. இதனால் இக்கலை இன்று ஓரளவிற்குச் சாதிய தாக்கம் இன்றி, சாதிய தீண்டாமை, தீட்டு இன்றி, ஒடுக்குமுறையின்றி மொழி, இனம், சாதி கடந்து பயணப்படுகிறது.
பறை பற்றிய தொன்மக் கதைகள்
கதை 1
அந்தக் காலத்தில் இராஜா ஒருவர் ஒரு ஆளை அழைத்துப் பறை இசைத்துப் ‘பழம் உதிர பழம் உதிர’ என்று அடிக்கச் சொன்னார். அதாவது பழம் உதிர பழம் உதிர என்று கூறினால் அந்த ஊரில் உள்ள வயது முதிர்ந்தவர்கள் இறந்து போகட்டும் என்று அர்த்தமாகும். இவ்வாறு அந்தப் பணியாளரும் பறையடித்துக் கொண்டிருந்த போது சிறுவர்களும், இளைஞர்களும் இவரைக் கேலி செய்து இவரின் மேல் கற்களை எரிந்துள்ளனர். இதனால் அந்தப் பணியாள் அவர்களின் மேல் கோபப்பட்டு “பூ உதிர, பிஞ்சு உதிர, காய் உதிர, பழம் உதிர” என்று ஆவேசமாக அடித்துள்ளார். அதன்பிறகு குழந்தைகளும், இளைஞர்களும், சிறுவர்களும், பெரியவர்களும் சாவினைச் சந்திக்க நேரிட்டதாம். இப்படி பறையடித்து அறிவிப்புச் செய்தவரின் வம்சாவழியினர் பறையர் என்ற பிரிவாயினர்.
கதை 2
அந்தக் காலத்தில் சிவன் நடனமாடும் போது இசைக்கருவிகள் இசைப்பதற்கு பலரும் முன்வந்துள்ளனர். ஆனால் சிவன் தன் கழுத்தில் உள்ள மாலையை எடுத்து மேலே எறிந்துள்ளார். இந்த மாலை யார் கழுத்தில் விழுகிறதோ அவர்கள் தான் இனிமேல் இசைக்கருவிகளை இசைக்க வேண்டும் என்று கூறியிருக்கிறார். அவ்வாறு சிவனும் எறிய அந்த மாலை பறையர் ஒருவரின் கழுத்தில் விழுந்துள்ளது. அன்றிலிருந்து பறை இசைக் கருவிகளை இசைப்பவர்கள் பறையர் என அழைக்கப்படுகின்றனர்.
கதை 3
அந்தக் காலத்தில் பறையரும் பார்ப்பணரும் அண்ணன் தம்பியாக இருந்துள்ளனர். இதில் பறையர் அண்ணனாகவும், பார்;ப்பணர் தம்பியாகவும் இருந்துள்ளனர். இருவரும் பசு மாடுகளை வளர்த்து வந்துள்ளனர். மேலும் இருவரும் தினமும் கோயிலுக்குச் சென்று பூசை செய்து வந்துள்ளனர். ஒருநாள் அண்ணன் தம்பியை அழைத்து தம்பி இன்று நீ மட்டும் கோயிலுக்குச் சென்று சாமிக்கு பூசை செய்து விட்டு வா, நான் போகவில்லை என்று கூறியிருக்கிறார். இவ்வாறு இருவரும் மாறி மாறி கூறியுள்ளனர். பிறகு அவரவர் வேலையைச் செய்துள்ளனர். அப்போது அந்த வழியாகச் சென்ற ஒருவர் அண்ணனைப் (பறையரை) பார்த்து, இன்று சாமிக்குப் பூசை செய்தாச்சா என்று கேட்க, அதற்கு அவர் என் தம்பி “பார்ப்பான்” என்று கூறியுள்ளார். அதிலிருந்து “பார்ப்பணர்” என்ற பிரிவினர் உருவாகியுள்ளனர். ஆனால் தம்பியாகிய பார்ப்பணர் பூசை செய்யவில்லை என்று தெரிந்ததும் இருவருக்கும் சண்டை ஏற்பட்டது. பின்பு இவர்களின் சொத்துக்கள் எல்லாம் பிரிக்கப்பட்டது. இறுதியில் பசுமாடுகளைப் பிரித்துள்ளனர். அப்போது பசுமாடுகள் ஆயிரக்கணக்கில் இருந்துள்ளன. அப்போது தம்பி அண்ணனைப் பார்த்து இம்மாடுகளையெல்லாம் எண்ணிப் பிரிப்பதற்கு இப்போது நேரமில்லை. எனவே நிற்கின்ற மாடுகள் எல்லாம் எனக்கு சொந்தம். படுத்திருக்கின்ற மாடுகள் எல்லாம் உனக்கு சொந்தம் என்று கூறியிருக்கிறார். அதற்கு அண்ணனும் சரி என்று கூறியிருக்கிறார். இதனால் தம்பியாகிய பார்ப்பணர் அன்றுமுதல் நின்றுள்ள மாட்டில் பாலைக் கநற்து தொழில் செய்தும், மீதியுள்ள பாலைச் சாமிக்குப் பூசைகள் செய்தும் பூசாரி ஆகியிருக்கிறார். ஆனால் அண்ணனாகிய பறையர் படுத்த மாட்டைச் சாப்பிட்டும், அதன் தோலை வைத்து பறை செய்தும் அன்று முதல் பறையடித்திருக்கிறார். அன்றிலிருந்து பறையர் என்கிற பிரிவினர் உருவாயினர்.
தொன்மக்கதையின் உளவியல் அரசியல்:
இம்மூன்று கதைகளையும் உற்றுநோக்கும் பொழுது பறை பற்றிய நுண்அரசியலை (Micro Politics) புரிந்து கொள்ள முடிகிறது. தொன்மம் என்றால் புனைவு எனப் பொருள்படும். புனைவு என்றால் பொய், கட்டுக்கதை அல்லது உண்மைக்குப் புறம்பானது என்பதே நிதர்சனம். இம்மூன்று கதைகளும் தெய்வத்தோடு தொடர்புபடுத்தியுள்ளனர்.
தெய்வத்தோடு ஒரு சமூகத்தினரையும் ஒரு கதையையும் சேர்த்துக் கூறும் போது அக்கதை பொது வெளியில் நம்பிக்கைக்கு உரியதாகவும், உண்மையின் சாட்சியாகவும் மாறும் என்கிற உளவியல் அடிப்படையில் இக்கதை பிணைக்கப்பட்டுள்ளது. அதாவது ஒரு இனத்தை அழிக்க வேண்டும் என்றால், முதலில் அந்த இனத்தின் மொழியை அழிக்க வேண்டும். அதுபோல் ஒரு சமூகத்தை அழிக்க வேண்டும் என்றால் அச்சமூகத்தின் பண்பாட்டில் அவதூறுகளையும், தீண்டாமைகளையும், புனைவுகளையும், தொன்மக் கதைகளையும் பரப்ப வேண்டும் என்பதே உளவியல் அரசியலாகும். கி.மு. கி.பி. என்று சொல்லப்படுகின்ற காலத்தில் இச்சமூகத்தினர்கள் பறை இசைக்கும் தொழிலை செய்தனர் என்றும், புராணத்தில் தெய்வங்கள் நடனமாட பறை இசைத்துள்ளனர் என்கிற கட்டுக்கதையை வலிந்து திணிக்கப்பட்ட அல்லது உருவாக்கப்பட்ட கதைகள் ஏராளம். இதில் இம்மூன்று கதைகளும் கால்கள் இல்லாமல் நடமாடிக் கொண்டிருக்கின்றன. இக்கதையின் மூலம் இச்சமூகத்தினரின் மூளையை மழுங்கடிக்கப்பட்டு அல்லது மூளையைச் சலவை செய்து பறையர் என்றால் பறை இசைப்பவர்கள் என்கிற சொல்லாடலை உருவாக்கியுள்ளனர். இச்சொல்லாடலே பொது வெளியில் இன்றளவும் நிலவி வருகிறது. ஆனால் இச்சமூகத்திற்குப் பல்வேறு பெயர்கள் இன்றளவும் வழக்கில் இருந்து வருகின்றது. அவை ஆதிதிராவிடர, வள்ளுவன், சாம்பான், கணியன், சாக்கையர், தலையாரி என்பவையாகும். இதில் ஏராளமான உட்பிரிவுகள், கிளைகள், கூட்டங்கள், வகையறாக்கள் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
முடிவுரை:
பறையின் பண்பாட்டு அடையாள அரசியல் சங்க காலம் முதல் சமகாலம் வரை எனும் இக்கட்டுரையில் மேற்குறிப்பிட்ட பல்வேறு வினாக்களுக்கும், விமர்சனத்திற்கும், கதையாடலுக்கும் விடையளிக்கும் விதமாகவும், பல்வேறு புனைவுகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாகவும் இந்த சிறிய ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இவ்வாய்வில் உள்ள பல்வேறு தரவுகள், கருத்துகள், கோட்பாடுகள், அறிஞர்களின் கருத்துகள், ஆய்வாளர்களின் ஆய்வுரைகள், ஒருசில நூல்கள், கட்டுரைகள், ஆய்வேடுகள் ஆகியவற்றில் குறிப்பிடப்பட்ட சான்றாதாரங்களின் அடிப்படையில் உற்று நோக்கும் போது இசையும், இசைக்கருவியும், நிகழ்த்துக்கலை வடிவங்களும் தமிழ்ச்சமூகத்தில் ஒவ்வொரு குடியினருக்கும் குறியீடாகவே இருந்துள்ளது. சாதியத்தின் எழுதப்படாத வரையறையின் அடிப்படையில் மேல், கீழ் என்ற பாகுபாட்டின் சனாதன பொதுப்புத்தியின் அணுகுமுறையில் பறையும், பறையாட்டமும் இரண்டாம் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளதை அறிய முடிகிறது. மேலும் இவ்வாய்வு பல்வேறு பார்வையில் விவாதிக்கப்பட்டு விரிவாக்கப்படும்.
பார்வை நூல்கள் :
- பக்தவத்சல பாரதி – பண்பாட்டு மானிடவியல்,
மணிவாசகர் பதிப்பகம்,
சென்னை – 600 018.
1999 – 2000
- கே.ஏ.குணசேகரன் – நாட்டுப்புற இசைக்கருவிகள்
தன்னானே பதிப்பகம்,
புதுச்சேரி. 2004
- குணா – வள்ளுவப் பார்ப்பாரியம்,
தமிழக ஆய்வரன்.
பெங்களுர்.
2006
- பொ.வேல்சாமி – கோவில் நிலம் சாதி
காலச்சுவடு
2007
- கே.ஏ.குணசேகரன் – தலித் கலை கலாச்சாரம்,
ராகாஸ் வெளியீடு,
சென்னை.
2006.
6. இரவிக்குமார், பூவிழியன், ஸ்டாலின், ராஜாங்கம், எக்ஸ்ரே மாணிக்கம் – பறையொலியால் பரவும் இழிவு.
கொதிப்பு வெளியீடு.
சீர்காழி. 2007
- மு.வளர்மதி – பறை
அம்ருதா வெளியீடு.
சென்னை. 2008
- கோ.கண்ணன் – பண்டைத் தமிழரின் ஒலி உணர்வும் இசை
உணர்வும்.
நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்.
சென்னை
- இ.முத்தையா – தமிழர் பண்பாட்டு வெளியில் நிகழ்த்து கலைகளும்
உலக நோக்கும்
காவ்யா வெளியீடு. 2010
- அ.கா.பெருமாள், நா.இராமச்சந்திரன் -தமிழக நாட்டார் நிகழ்த்துக் கலைகள்,
நாட்டார் வழக்காற்றியல் ஆய்வு மையம். 2001

Leave a comment