பைய

பெ.பாண்டியன்,

உதவிப்பேராசிரியர், தமிழ்த்துறை,
டாக்டர்.ஆர்.கே.எஸ்.கலை அறிவியல் கல்லூரி,
இந்திலி, கள்ளக்குறிச்சி
9952156410, 8072900684
pandiyanp301987@gmail.com

            பழங்காலத்தில் வடக்கே வேங்கட மலை முதல் தெற்கே குமரி கண்டம் வரை பரவி காணப்பட்ட தமிழ்க் குடியானது இன்று உலகம் முழுவதும் பரந்து விரிந்து காணக்கிடக்கின்றது. பரந்துபட்ட தமிழ்ச் சமூகத்தில் தமிழ் மொழியானது  நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக மேலோங்கிக் கொண்டேச் செல்கிறது என்றால் அது மிகையாகாது. ஓர் இனதின் வளர்ச்சியின் அடிப்படையிலேயே அவ்வினத்தின் மொழியும் மேலோங்கும். மொழி என்பது தகவல் பரிமாற்றக் கருவி மட்டுமல்லாது, அது பன்னெடுங்காலமாய் ஓர் இனம் வாழ்ந்துகொண்டிருப்பதற்கான அடையாளமும் ஆகும். பழங்காலம் தொட்டு இன்று வரை ஒரு மொழியானது தன் அடையாளத்தைச் சிதைக்காமலும் , வளம் குன்றாமலும் காணக்கிடக்கிறது என்றால் அது அம்மொழியினில் காலங்காலமாய் தோன்றி வளரும் இலக்கண இலக்கியங்களையேச் சாரும். அத்தகைய இலக்கண இலக்கியங்களை மிகையாகக் கொண்ட தமிழ்மொழியானது என்றும் உயிர்ப்புடன் காணப்படுவது நம் மொழியின் பெருமை ஆகும்.

            உலகில் பிறந்து சிறந்த பல மொழிகள் காணப்பட்டாலும், சிறந்தே பிறந்தது எம் தமிழ்மொழி. தொல் பழங்காலம் தொட்டு தனித்த அடையாளமாய் காணப்படும் தமிழ் மொழியானது பல்வேறு வட்டாரங்களாகப் பிரிக்கப்பட்டு, வட்டாரத்துக்கு ஒரு வழக்கு என தனித்து பல்வேறு வட்டார வழக்காகவும் தமிழ்மொழி சிறந்து காணப்படுகிறது. வட்டார வழக்கு என்பது ஒவ்வொரு இடத்திற்குத் தகுந்தாற்போல் மாறுபடும். வழ்வியல் முறைகளினாலும் உணவுப் பழக்கவழக்கங்களினாலும் வட்டார வழக்கு மொழியானது மாற்றம் பெறும். வட்டார வழக்கானது தனித்த செல்வாக்கு பெற்றது. இடத்திற்குத் தகுந்தாற்போல்  ஒவ்வொரு சொல்லும் சிறப்புத் தன்மையுடன் விளங்கும்.

திருநெல்வேலி

            திருநெல்வேலிக்கு நெல்லை என்னும் மற்றொரு பெயரும் உண்டு. கி.பி.1790 செப்டம்பர் 1 இல் இம்மாவட்டம் ஆங்கிலேயர்களால் உருவாக்கப்பட்டது. பிற்காலப் பாண்டியர்களின் தலைநகராகவும் சிறிது காலம் விளங்கியது. பாளையக்காரர்கள் தலைநகராகக் கொண்டு ஆண்ட பகுதியும் இதுவேயாகும். தமிழக வரலாற்றில் தனக்கென ஒரு தனித்த சிறப்பிடம் கொண்ட இடம் நெல்லை ஆகும். திருநெல்வேலி மற்றும் அதனைச் சுற்றியுள்ள தென்னக மாவட்டங்களில் பேசப்படும் வட்டார வழக்கு மொழியினை நெல்லைத்தமிழ் என்பர். நெல்லை மக்கள் பேசும் தமிழ் மொழியினை எளிமையில் அடையாளம் கண்டுகொள்ள முடியும். நெல்லைத் தமிழுக்கென்று தனித்த சிறப்பிடம் உண்டு. வயதில் மூத்தோரை மரியாதை கலந்த சொல்லோடு அழைப்பதில் நெல்லை மக்கள் தனித்த அன்பு கொண்டவர்கள். இத்தகைய சிறப்பிடம் கொண்ட நெல்லையின் வட்டார வழக்கில் வழங்கப்படும் ‘பைய’ எனும் சொல்லானது வெறும் வட்டார வழக்குச் சொல் மட்டும் ஆகாது என்றும், அது பழங்காலம் முதல் தொன்று தொட்டு வழக்கில் வழங்கப்படும் சொல் என்னும் நோக்கில் இக்கட்டுரை பயணப்படுகிறது.

பைய

            நெல்லை மற்றும் அதனைச் சுற்றியுள்ள மாவட்டங்களில் மிகையாக வழக்கில் வழங்கப்பட்டு வரும் சொல் ‘பைய’ எனும் சொல் ஆகும். பைய என்றால் மெதுவாக என்று பொருள்படும். இது சாதாரணமாக எல்லோராலும் வழங்கப்பட்டு வரும் வட்டார வழக்குச் சொல் ஆகும். உதாரணமாக ஒரு தாய் தன் மகனை கடைக்குப் போய் வரச் சொல்கின்றார் என்றால், ஏலே பைய போயிட்டு பைய வாலே! என்பார். எனவே இது எல்லோராலும் எளிமையாக வழக்கில் பேசப்பட்டு வரும் சொல்லாகும். இத்தகைய சிறப்பு வாய்ந்த பைய எனும் சொல் இன்று நெல்லை மாவட்ட வட்டார வழக்கில் பேசப்பட்டு வந்தாலும், இது நெல்லை மாவட்ட வட்டார வழக்குச் சொல் மட்டுமல்ல; தூய தமிழ்ச் சொல்லும் ஆகும். பைய எனும் தூய தமிழ்ச் சொல்லானது தொல் பழங்காலச் சமூகத்திலிருந்து தற்காலம் வரை பேசப்பட்டு வரும் சொல் ஆகும்.  

            சங்க இலக்கியங்கள் முதலான பழந்தமிழ் இலக்கியங்களில் ‘பைய’ எனும் சொல் மிகையாகக் காணப்படுவதிலிருந்து அது தூய தமிழ்ச் சொல் என்பது புலனாகிறது. பன்னெடுங்காலமாய் வழக்கில் இருந்த சொல்லை மரபு மாறாமல் உள்ளதை உள்ளபடியே நமக்குக் காத்துக் கொடுத்த பெருமை நெல்லை மக்களையேச் சாரும். பழங்காலத்திலிருந்து வழக்கில் வழங்கப்பட்டிருந்த ஒரு சொல்லானது, இடைக்காலத்தில் வழக்கொழிந்து போகாமல் தற்காலம் வரை பயன்பட்டுக் கொண்டிருக்கிறது என்றால் அது இன்று வரை மரபினைக் கட்டிக் காத்து வரும் தமிழ்ச் சமூகதையேச் சாரும் என்றால் அது மிகையாகது.

சங்க இலக்கியத்தில் பைய

            மெல்ல, மெதுவாக என்று பொருள்படும் ‘பைய’ எனும் தமிழ்ச்சொல்லானது பழங்கால தமிழ்கூறும் நல்லுலகத்தில் பரவலாகக் காணப்பட்டுள்ளது. பைய எனும் தமிழ்ச் சொல்லானது சங்க அகப்பாடல்களிலேயே மேன்மையாகக் காணப்படுகின்றது. தலைவன் தலைவியரது அன்பு நெறியினை வெளிப்படுத்தும் பொருட்டு, இச்சொல் பரந்துபட்டுக் காணப்படுகின்றது. தலைவனைக் காணாத தலைவிக்குப் பசலைநோய் ஏற்பட்டது தலைவிக்கு மெல்ல மெல்ல பசலை நோய் படர்ந்ததை,

                        உள்ளு தோறு உள்ளுதோறு உருகி

                   பைஇப் பையப் பசந்தனை பசப்பே    (நற்றிணை – 96:10,11)

எங்கிறது நற்றிணை. பசலை நோய் பைய (மெல்ல) நகர்ந்ததினை மேற்கண்ட பாடலடிகள் குறிப்பிடுவதன் மூலம் அறியலாம். தலைவி, தலைவனோடு உடன்போக்கு மேற்கொள்கின்றாள். உடன்போக்கு மேற்கொண்ட தலைவியினை செவிலித்தாய் காணப் புறப்படுகின்றாள். பாலை நிலத்தின் வழியாகச் சென்ற தலைவன், தலைவியரைக் கண்டாயா? என வழியில் கண்டோரிடம் செவிலித்தாய் வினவ, அவர்கள் அவ்வழியே மெல்ல நடந்து சென்றனர் என்பதைக் குறிக்க பைய எனும் சொல்லைப் பயன்படுத்தியதை,

                        மைஅணல் காளையொடு பைய இயலி

                   பாவையன்ன என்ஆய்தொடி மடந்தை  – (ஐங்குறு-389:2,3)

என்ற ஐங்குறுநூற்றுப் பாடலடிகள் மூலம் அறியலாம். தலைவி, தலைவனொடு உடன்போக்கு மேற்கொண்டு மெல்ல நடந்தாள் என்பதினையே மேற்கண்ட பாடலடிகள் உணர்த்துகின்றன. மேலும் தலைவியானவள் தன்னுடைய சிறிய பாதம் கொண்டு நிலத்திற்கு ஊறு நேராமல் மெல்ல நடந்ததினை,

                        “…………………………. சிறிய நின்

                   அடிநிலன் உறுதல் அஞ்சி பைய

                   தடவரல் ஒதுக்கம் தகைகொள இயலி     (அகம்- 323:4-6)

என்ற பாடலடிகள் உணர்த்துவதிலிருந்து தலைவி மெல்ல (பைய) நடந்ததினை அறியலாம். மேலும் வரைவிடை வைத்துப் பிரியப்போகும் தலைவனை எண்ணி, தலைவி வருத்தத்துடன் காணப்படுகின்றாள். அவளின் ஆற்றாமையினைக் கண்ட தலைவன், அவளை மெல்லத் தழுவி தேற்றுகின்றான். இதனை,

                        செவ்விய தீவிய சொல்லி அவற்றோடு

                   பைய முயங்கிய அஞ்ஞான்று அவை எல்லாம்     (கலி – 19:1,2)

என்கிறது கலித்தொகை. தலைவியை தலைவன் மெல்லத் தழுவி தேற்றியதை பைய எனும் சொல்லாட்சியினைப் பயன்படுத்தியுள்ளதினை அறிய முடிகின்றது. அணங்கு போன்ற பைந்தொடி பெண்டிர் வெறியாட்டு சிறப்பு மேற்கொள்ளும்போது, மெல்ல ஆடுதலைக் கொண்டனர். இந்த ஆடல் மரபானது பழங்காலம் தொட்டு, தற்காலம் வரை வழக்கில் நடைபெற்றுவரும் ஒரு மரபாகும். இன்றளவும் விழா எடுக்கும் காலங்களில் பெண்கள் ஒன்று கூடி ஆடும் மரபினைக் கொண்டுள்ளனர். பழங்காலத்தில் வெறியாட்டுடன் ஆடிய மகளிர் மெல்ல ஆடினர் என்பதினை,

                        அணங்கு அயர் வியங்களம் பொலிய பையத்

                   தூங்குதல் புரிந்தனர் ……………………….. “      –    (அகம் – 382:6,7)

என்ற அகநானூற்றுப் பாடல் அடிகளானது மெல்ல என்பதினை பைய எனும் தமிழ்ச் சொல் கொண்டு நிரப்பியதினை உணரலாம். மேலும், புனலாடுதல் என்பது பழங்காலப் பெண்களுக்கு உரிய சிறப்பாகும். பழங்காலப் பெண்கள் தங்கள் தோழிமார்களோடு சேர்ந்து புனலாடினர். அவ்வாறு புனலாடும்போது உழவுத்தொழில் செய்த களைப்பினால் பெண்கள் மெல்ல ஆடுதலைக் கொண்டனர்.

                        மெய்யது உழவின் எதிர்புனல் மாறுஆடிப்

                   பைய விளையாடு வாரும் மென்பாவையர்        (பரி-10:104,105)

என்று பரிபாட்டு பாடலடிகள் குறிப்பிடுவதிலிருந்து உணரலாம். உழவுத்தொழில் புரிந்த உழத்தியர் உழவின் களைப்பினால் மெல்ல ஆடியதினை பைய ஆடினர் என்று குறிப்பிட்டுள்ளதினை உணரமுடிகின்றது. ஆபரணங்கள் ஒளி பட்டவுடன் இயல்பாகவே மிளிறும் தன்மை கொண்டது. அத்தகைய மிளிறும் தன்மை கொண்ட  ஆபரணமானது மெல்ல ஒளி வீசியதினை,

                        பசும்பொன் அவிர் இழை பைய நிழற்ற        (ஐங்-74:2)

ஏங்கிறது ஐங்குறுநூறு. பொன்னால் செய்யப்பட்ட ஆபரணமானது மெல்ல ஒளி வீசியதினை பைய ஒளி வீசியது என்று குறிப்பிட்டுள்ளதினை அறியலாம்.

திருக்குறளில் பைய

உலகப் பொதுமறையான திருக்குறளில் சொல்லாத கருத்துக்களே உலகில் இல்லை எனலாம். உலகதின் பொதுச் சிந்தனைகளை உள்ளடக்கிய திருக்குறள், நெல்லை மாவட்ட வட்டார வழக்கு என்று பயன்படுத்திக் கொண்டிருக்கும் பைய எனும் தமிழ்ச் சொல்லினை ஓரிடத்தில் தெளிவாகப் பயன்படுதுகின்றது. தலைவனும் தலைவியும் சந்தித்துக் கொள்கின்றனர்; அவ்விடதில் தலைவியானவள் தலைவனைப் பார்த்து மெதுவாக புன்னகைக்கின்றாள். இந்தச் சூழலினை வள்ளுவர்,

            அசையியற்கு உண்டாண்டோர் ஏஎர்யான் நோக்கப்

          பசையினள் பைய நகும்     (குறள் – 1098 )

எங்கிறார். தலைவி, தலைவனைக் கண்ட இன்பத்தில் மெதுவாகப் புன்னகைத்ததினை பைய நகும் எங்கிறார். அதாவது தலைவி மெல்லச் சிரித்தாள் எங்கிறார். சங்கப் பாடல்களில் மட்டும் அல்லாது திருக்குறளிலும் பைய எனும் பயன்பட்டு மேன்மையடையச் செய்துள்ளது. பைய எனும் சொல் பாண்டிய நாட்டில் மிகையாக வழக்கில் வழங்கப்பட்டிருக்கக் கூடும். அதன் எச்சமே இன்று வரை அச்சொல் வழக்கில் வழங்கப்பட்டு வருகின்றது. சம்பந்தர் தேவாரத்திலும் இச்சொல் ஆளப்பட்டுள்ளது. மதுரை மாநகரில் சிவனடியார் திருமடத்தில் தீயோர் தீவைத்துள்ளனர். இச்செய்தியை சம்பந்தர் மெதுவாகச் சென்று பாண்டிய மன்னனுக்குத் தெரிவித்தார். இதனை,

                        பையவே சென்று பாண்டியற்கு ஆகவே     சம்பந்தர் தேவாரம்

என்ற தேவாரப் பாடலடி குறிப்பிடுவதன் மூலம் அறியலாம். பைய எனும் தமிழ்ச் சொல்லும் பயின்று வந்துள்ளதினை உணர முடிகின்றது. ‘பையச் சென்றால் வையத் தாங்கும்’ என்ற பழமொழியும் வழக்கில்  உள்ளது.

            தமிழ் மொழியானது பொதிகை மலையில் பிறந்தது என்பது ஒரு வகையான நம்பிக்கை ஆகும். அன்று தோன்றிய அந்த பொதிகை மலைத் தமிழே இன்று சிறப்புடன் விளங்கும் நெல்லைத் தமிழாகும். எனவே நெல்லைத் தமிழின் தொடக்க வடிவம் தூய தமிழ் வடிவமாகும்.

நெல்லைத் தமிழ் வட்டார வழக்குச் சொற்களுள் சில:

            அண்ணாச்சி  : பெரியோர்களை மரியாதையாக அழைப்பது

            ஆச்சி              : வயதான பெண்மணி ( பாட்டியை ஆச்சி என்பர் )  

            சாரம்              : லுங்கி ( கைலி )

            கோட்டி          : மனநிலை சரியில்லாதவர்

            வேசடை         : தொந்தரவு                           / பொறத்தால : பின்னால

            சேக்காளி       : நண்பன்                                / குறுக்கு : முதுகு

            தொரவா        : சாவி (திறவுகோல்)             / சீக்கு : நோய்

இவை மட்டுமல்லாது இன்னும் எண்ணற்ற வட்டார வழக்குச் சொற்கள் நெல்லைத் தமிழை அழகுபடுத்திக்கொண்டே இருக்கின்றன. 

துணைநூற்பட்டியல்

ஆசிரியர்க்குழு                                  -அகநானூறு

                                                            நியு செஞ்சுரி புக் ஹவுஸ் பிரைவேட் லிமிடெட்,

                                                            சென்னை -600 098,  இ.பதிப்பு-1981

நாராயணவேலுப்பிள்ளை.எம்        தேவாரம்

                                                            வர்த்தமான் பதிப்பகம்

                                                            சென்னை-600 017,  இ.பதிப்பு-1998

Leave a comment

Trending