மேலத்தாங்கல் மு. நளினி
1. பெண்மரப்படகு
ஆண்டாண்டுகளாய்
நான் செதுக்கிச் செய்த படகு
மணல் வெளியிலேயே நிறுத்தி வைக்கப்பட்டிருக்கிறது

அதன் கம்பீரத்தை,
செய் நேர்த்தியை ,
கலைநயத்தை,
உறுதிப்பாட்டை,
செயல்திறனைக்
காண்பவர் வியக்காமல் கடந்துபோக முடியாது
இன்னும்
கரையிலேயே நிறுத்திவைக்கப் பட்டிருக்கிறது
மீன்பிடி படகுகள்
அலைகளுக்கு நடுவே
பறந்துபறந்து அலைகின்றன
கடல்
விழாக் கோலம் பூண்டுவிட்டதாய்
நம்பிக்கொண்டிருக்கிறார்கள்
உண்மையில்
சிறகொடிந்து துடிக்கும்
ஒரு பெரும் பறவையென
புரண்டு படபடக்கிறது
கடல்
நீலத் திமிங்கிலத்தோடு
ஆழங்களில் நீந்தி
சுறாக்களோடு
நீரியங்கியல் பழகி
வியூகம் வகுத்து
ஓர்க்காக்களை வேட்டையாட வேண்டும்
துடுப்புகளைத் தூரிகையாக்கிக்
கடல்பரப்பெங்கும்
வசந்தத்தை வரைய வேண்டும்
காயங்களாறிச்
சிறகு விரிக்கும் கடல்
கடலைச் செலுத்தும்
என் படகு
கனவுகள் கனக்க
கடற்கரையிலேயே
காத்துக்கிடக்கிறது
படகின்தாகம்
கடல்வெளியில் தளும்புகிறது
யுகங்களைக் கடந்த அடுப்பு
தீ நாக்குகளை விளாவியபடி
உக்கிரமாய்க்
கனன்று கொண்டிருக்கிறது
தாகம் தணியுமா
அடுப்பில் எரியுமா
பெண்மரத்தில் செய்தபடகு.
2. நிலவும் நானும்
கொல்லைப்புறத்தில்
நான் நட்டுவளர்த்த
ஒற்றை மரத்தின் கிளைகளில்
நிலா வந்தமர்ந்து போகிறது
விடியற்காலையில்
மரம் ஒளிசிந்துவதன் காரணத்தைப் பிற்பாடுதான் கண்டுபிடித்தேன்
அன்றொருநாள்
என் வீட்டுப் பலகணிக்கே
வந்துவிட்டது நிலா
எனக்காகத்
தன்மடியில் முடிந்துவைத்திருந்த
நட்சத்திரங்களை
அள்ளிக் கொடுத்தது
நானும் என் கவிதைகள் சிலவற்றைக் கொடுத்தேன்
ஔவைப்பாட்டிக்கு முருகன் சுட்டபழம் கொடுத்தது போன்றதொரு கதையை
விழிகளையும் விரல்களையும் அபிநயம்போல் அசைத்து அசைத்து சொல்லிக்கொண்டிருந்தது
நான் நட்சத்திரங்களைக்
கொறித்தபடிக்கேட்டுக்கொண்டிருந்தேன்
என் கவிதைகளைக்
கோப்பையில் ஊற்றிப்
பருகியநொடியில்
முகத்தில் கூடுதல் மலர்ச்சி காட்டியது
பின்னர் கைக்குலுக்கி விடைபெற்றது நிலா
இன்றும் என் கைகளில்
நிரம்பி வழிகிறது
நிலவின் ஒளி
ரேகைகள் மின்னி மறைகின்றன
நீங்கள் படிக்கமுடிந்தால்
படியுங்கள்
நிலாவில் என் கவிதை வரிகளை ….

Leave a comment