இரட்டைக்காப்பியத் தலைமையை இனங்காணுதல்
(மாஸ்லோவின் தேவைசார் வளர்ச்சிப்படிநிலைக் கோட்பாட்டை முன்வைத்து)
ரா. வி. ஜீவநாத்
| (கட்டுரையாளர்) ரா.வி.ஜீவநாத், முனைவர்ப்பட்ட ஆய்வாளர் 9498878782 , jeeva.r.v.7@gmail.com ORC ID:https://orcid.org/0009-0003-6387-2519 (நெறியாளர்) முனைவர் க.மாரியப்பன், உதவிப் பேராசிரியர் , 9486863620, gmariappan.du@gmail.com தமிழ்மொழி மற்றும் மொழிபெயர்ப்பியல் துறை, திராவிடப் பல்கலைக்கழகம், குப்பம் – 517 462, ஆந்திரப் பிரதேசம். |
ஆய்வுச்சுருக்கம் :
தமிழ்ச் சூழலில் இரட்டைக் காப்பியங்கள் என்ற சொல்லாடலால் பெரிதும் போற்றப்படுவது சிலப்பதிகாரமும், மணிமேகலையும் ஆகும். இச்சொல்லாடலை மரபார்ந்த சொல்லாக மட்டும் ஏற்காமல், தம் ஆய்வுகளின் மூலமும் இதனை ஏற்றவர்களாக வ.சுப.மாணிக்கம், வி.கனகசபாபதி போன்ற ஆய்வாளர்களைக் காணமுடிகின்றது. அதேபோன்று, அதற்கு எதிராக சிலம்பும், மேகலையும் இரட்டைக் காப்பியங்கள் அல்ல என்று மறுத்தவர்களாக மு.அருணாசலம், அ.ச.ஞானசம்பந்தன், தொ.மு.சி.ரகுநாதன் போன்ற ஆய்வாளர்களின் பார்வையும் கவனிக்கத்தக்கது. இவர்கள்
நிகழ்த்திய ஆய்வுகள் பெரும்பாலும் கதைக்களம், காலம், பொருத்தப்பாடு, உள்ளடக்கம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டதாகும். மேல் குறிப்பிட்ட மரபார்ந்த ஆய்வாளர்களின் பார்வையிலிருந்து சற்றே மாறுபட்ட கண்ணோட்டத்தில்
இக்கட்டுரையானது, தலைமாந்தர்களின் தலைமை இனங்கண்டு அதன் மூலம் இரட்டைக் காப்பியங்கள் என்று கூறப்படக்கூடிய சிலம்பும், மேகலையும் இயல்பிலேயே இரட்டைக் காப்பியத் தன்மையைப் பெறுகின்றனவா? அல்லது அவ்வமைப்பிற்கேற்ப உருவாக்கப்பட்டனவா? என்பதை விவரிக்கிறது. இதற்கு ஆபிரஹாம் ஹேரால்ட் மாஸ்லோவின் தேவைசார் வளர்ச்சிப் படிநிலை என்ற கோட்பாடு கையாளப்பட்டுள்ளது.
முன்னுரை :
தனிமனிதனின் தன்னிகரற்ற தலைமைத்துவப் பண்பை மையமிட்டுப்
புனையப்பட்டது பொருள் தொடர்நிலைச் செய்யுளான காப்பிய இலக்கிய வகைமை எனலாம். தமிழின் இரட்டைக் காப்பியங்களான சிலப்பதிகாரம், மணிமேகலை ஆகிய இரண்டிலும் காப்பியத் தலைமையை இனங்காண்பதன் மூலம் இரட்டைக் காப்பியங்கள் என்ற நிலையை இவை இயல்பிலேயே பெற்றனவா? அல்லது உருவாக்கப்பட்டனவா? என அறிய முயல்கிறது இக்கட்டுரை. இதற்கு தேவைசார் வளர்ச்சிப் படிநிலைக் கோட்பாட்டினை இக்கட்டுரை பயன்படுத்துகிறது.
‘தேவைசார் வளர்ச்சிப் படிநிலைக் கோட்பாடு’ – ஓர் அறிமுகம்:
மனிதர்கள் தாம் தோன்றிய காலம் முதல் தற்காலம் வரை பல்வேறு படிநிலைகளைக் கடந்து வந்துள்ளனர்.
முதலில் வேட்டையாடிப் பச்சைமாமிசம் தின்றிருந்தவர்கள் உண்பதில் தமக்கிருந்த கடினத்தைத் தாம் கண்டறிந்த நெருப்பிலிருந்து தமக்குத் தேவையான சுவையில் சமைத்து உண்ணத் தொடங்கினர். அதில் துவங்கியது அவர்களின் வளர்ச்சிக்கான பயணம்.
பருவநிலை மாற்றங்களுக்கு ஏற்பத் தம்மையும், தம் உடைமைகளைத் தற்காத்துக் கொள்ளவும் தாம் இருக்கும் நிலத்திற்கு ஏற்ப தமக்குப் பாதுகாப்பான இருப்பிடத்தினை அமைத்துக் கொண்டனர். அப்போதே உடைமைச் சமுதாயமும் உருவாகிற்று.
இதனைத் தொடர்ந்து தமது மகிழ்ச்சியையும் துக்கத்தையும் பகிர்ந்து கொள்ளத் தமக்கான துணை, நட்பு, சுற்றம், நலன் விரும்பிகள் என ஏற்படுத்திக் கொண்டனர். பின் சுயத்தை நோக்கிய மனித மனம் அவர்களிடமிருந்து தம்மைத் தனித்துவப்படுத்த எண்ணி வலிமை மிக்கவராகவோ ஆளுமைத் திறம் மிக்கவராகவோ தலைமைத்துவப் பண்பு மிக்கவராகவோ தம்மைக் காட்டிக் கொண்டனர்.
இவ்வாறு பல்வேறு வகைகளில் தனித்துவத்தை அடைந்து அதன் மூலம் தன் மீதான தன்மதிப்பீட்டையும், தன் மீதான பிறர் மதிப்பீட்டையும் வளர்த்துக் கொண்டனர்.
இவ்வாறு தாம் கடந்து வந்த பாதைகளின் வழி ஏற்பட்ட அனுபவங்கள், அவற்றின் காரணமாகப் பெறப்பட்ட விரக்தி, ஏமாற்றம், சோர்வு ஆகியவற்றில் இருந்து விடுபட எண்ணினர். அதற்குத் ‘தன்னை உணர்தல்’ அல்லது ‘தன்மெய்ம்மையாக்கம்’ ஒன்றே வழி எனக் கண்டனர்.
இதன் காரணமாக முதலில் தன்னிறைவடைதல் போன்ற அனைத்து நிலைகளையும் கடந்து முக்தி என்பதே ஆன்மக் கடைத்தேற்றத்தின் உயரிய நிலை என்றும் இதனையே வாழ்க்கைப் பயணத்தின் இறுதி நிலையாகவும், பயனாகவும் கருதினர்.
மேலும் இவற்றை இக்காலத்திலும் உய்த்துணர முடிகின்றது.
இதுபோன்று காலந்தோறும் ஏற்பட்ட உளவியல் மாற்றங்கள், தேவைகள் அனைத்தையும் ஒன்றிணைத்து அதன் சாரமாக, தனிமனித வாழ்வில் ‘தேவைசார் வளர்ச்சிப் படிநிலை’ (Hierarchy of Needs) என்ற இக்கோட்பாடு உருப்பெற்றிருக்கிறது.

அமெரிக்காவைச் சேர்ந்த மனிதநேய உளவியலாளர் ஆபிரஹாம் ஹேரால்ட் மாஸ்லோ (Abraham Harold Maslow) 1902-1970 என்பவர் இக்கோட்பாட்டை வரையறுத்துத் தந்தார்.
ஆபிரகாம் ஹேரால்ட் மாஸ்லோவின் தேவைசார் வளர்ச்சிப் படிநிலை (The Hierarchy of Needs) என்ற கோட்பாடு 1943ஆம் ஆண்டு சைக்காலஜிகல் ரிவியூ (Psychological review) இதழில் மனித உந்துதல் கோட்பாடு (The Theory of Human Motivation) என்ற தலைப்பின் கீழ் எழுதப்பட்ட கட்டுரையில் முன்மொழியப்பட்ட உளவியல் சிந்தனையாக அமைந்துள்ளது. இக்கட்டுரையில் ஆபிரகாம், தேவைசார் வளர்ச்சிப்
படிநிலைகளை ஐந்தாக வகுக்கின்றார். அவை முறையே,
- உடலியல் தேவைகள் (Physiological needs) –
மனிதன் தான் வாழ்வதற்கு உயிரியலின் அடிப்படைத் தேவைகளான காற்று, உணவு, நீர், உறைவிடம், உடை, பாலியல் இச்சை, தூக்கம் இவை நிறைவடையாவிடின் மனித வாழ்க்கை உகந்ததாக அமையாது. மேலும்
மாஸ்லோவின் இந்தப் படிநிலை ஏனைய படிநிலைகளை விட முக்கியத்துவம் வாய்ந்தது. மேலும் அடுத்தநிலைக்கு நகர அடிப்படையானது இந்த உடலியல் தேவைகள். - தற்காப்புத் தேவைகள் (Safety needs) –
தம் உடைமைகளின் மீதான பாதுகாப்பு, தற்காப்பு, ஒழுக்கவிதி, சட்டம், நிலைபேறு, பயத்தில் இருந்து விடுதலை - சுற்றம் மற்றும் அன்புசார் தேவைகள் (Belongingness and Love Needs) – உடலியல் மற்றும் தற்காப்புத் தேவைகள் நிறைவடைந்த பின், சமூகம் மற்றும் சுற்றத்தின் மீதான உணர்வு சார்ந்த பிணைப்பு நிலை. இது தனிமனிதனின் நடத்தை வெளிப்பாட்டினால் எழும் உறவுநிலை. இதில் நண்பர்கள், நெருக்கமானவர்கள், நம்பகமானவர்கள், தம்மை
முழுவதுமாக ஏற்றுகொண்டவர்கள், தம்மீது அன்பைப் பகிர்ந்து கொள்பவர்கள், நலன் விரும்பிகள் எனத் தம்முடைய பிறப்பு முதல் ஒவ்வொரு நிலையிலும் இணையும் நபர்களைக் கொண்டு விரியும். - தன்மதிப்புருவாக்கத் தேவைகள் (Esteem Needs) – மாஸ்லோ இந்தப் படிநிலையை இரண்டாகப் பிரிக்கின்றார்
i) தன்மீதான தன்மதிப்பு – பெருந்தன்மை, சாதனை, நிபுணத்துவம், தற்சார்பு நிலை
ii) தன்மீதான பிறர் மதிப்பீடு – பிறரால் தாம் புகழப்படுவது,
அந்தஸ்து, தன்மானம் போன்ற தன்மதிப்பு உருவாக்கம். இவை குழந்தைகள், இளைஞர்கள் ஆகியோரின் முன்னேற்றத்திற்கு முக்கியமானதாக மாஸ்லோ கருதுகிறார். மேலும் அறிவாற்றல் தேவை மற்றும் அழகியல் தேவை என்றும் விரியும். - தன்னை உணர்தல் (தன்மெய்ம்மையாக்கம்) குறித்த தேவைகள் (Needs for Self-Actualization) –
தம் ஆற்றலை உணர்ந்துகொள்ளுதல், தன்நிறைவடைதல், தன்னை
வளர்த்துக்கொள்ளுதல் மற்றும் உச்சநிலை அனுபவத்தை நாடுதல்
இந்தத் தேவைசார் வளர்ச்சிப் படிநிலைகளில் முதல் நான்கு நிலைத் தேவைகளைக் கீழ்நிலை அல்லது அடிப்படை நிலைத் தேவைகள் என்றும் ஐந்தாவது நிலையை மேல்நிலை அல்லது உயர்நிலைத் தேவை என்றும் கூறுவர். அடிப்படைநிலைத் தேவைகளை அடையாது உயர்நிலைத் தேவையை அடைய இயலாது.
மேலும் ஒருபடிநிலை போதிய அளவு நிறைவு பெற்றாலும் ஏனைய படிநிலைகளைத் தொடரலாம். உயர்நிலைத் தேவை நிறைவடைவதன் மூலம் ஆரோக்கியத்தையும், மகிழ்ச்சியையும், மனித வாழ்வில் நிறைவையும் அளிக்கிறது.
கோவலன், கண்ணகி – தலைமையை இனங்காணுதல் :
இரட்டைக் காப்பியங்களான சிலப்பதிகாரம், மணிமேகலை ஆகியவற்றில் தலைமையை இனங்காணும் முயற்சியில் இரண்டிலும் பொதுவான முதன்மை மாந்தர்களை முதலில் எடுத்துக்கொள்வோம். முதலில் கோவலனையும் கண்ணகியையும் இணைத்தே தேவைசார் வளர்ச்சிப் படிநிலைக் கோட்பாட்டின் அடிப்படையில் பொருத்திப் பார்க்க இயலும். இதன் அடிப்படையில் மங்கலவாழ்த்துப் பாடலில் தொடங்கும் அவர்களின் பயணம் “பெருநிலம் முழுது ஆளும் பெருமகன்” (மங்கல.பா:31). என்று கோவலனையும், “மாகவா னிகர்வண்கை மாநாய்கன் குலக்கொம்பர் ஈகைவான் கொடியன்னாள்” (மங்கல.பா: 23-24) என்று கண்ணகியையும் புகழப்படுவதில் இருந்தே இருவருக்கும் அடிப்படைத் தேவைகள் ஆன உடலியல் மற்றும் தற்காப்புத் தேவைகளான உணவு, உடை, உறைவிடம் போன்றவற்றுடன் தலைமைக்குடியில் பிறந்தவர்களாகக் காட்டுவதில் இருந்தும் பெரும் நிலம் ஆளும் திறத்துடன் இணைத்துக் கூறுவதில் இருந்தும் இவர்கள் தற்காப்புத் தேவைகள் ஆகியவற்றில் ஓரளவு நிறைவு பெற்றவர்களாகக் காட்டுகிறது. இதற்குச் சிறந்த சான்றாக அவர்களின் இணைவிழாவும் சேர்த்தே விவரிக்கின்றார் இளங்கோவடிகள் (மங்கல.பா: 23-39). மேலும், நெடுநிலை மாடத்து இடைநிலை மாடத்தில் கண்ணகி மற்றும் கோவலன் இருவருக்கும் (மனை.கா: 13) கோவலனின் தாய் குடிவைத்ததுடன், அவர்கள் அறங்கள் செய்ய வழி வகை செய்துள்ளார். உடன் இருவரும் காமனும், இரதியும் போலச் சீற்றங்கொண்ட நாகங்களாய் ஒருவருடன் ஒருவர் பின்னிப் பிணைந்து இருந்தனர் (மனை.கா: 91-94) என்பதன் வழி கோவலன் கண்ணகியின் உடலியல் தேவை முழுமையடைந்ததைக் கோவலன் கண்ணகியிடம் வெளிபடுத்தும் உரையாடலின் வழி (மனை.கா: 28-80) நம்மால் காணமுடிகிறது. இதனைத் தொடர்ந்து சுற்றம் மற்றும் அன்புசார் தேவைகள் நோக்கிய கோவலன்,
மாமலர் நெடுங்கண் மாதவி மாலை
கோவலன் வாங்கிக் கூனி தன்னொடு
மணமனை புக்கு மாதவி தன்னோ
டணைவுறு வைகலி னயர்ந்தனன் மயங்கி
விடுத லறியா விடுப்பின னாயினன்
வடுநீங்கி சிறப்பிற்றன் மனையக மறந்தென்.
(அரங்கேற்ற.கா: 170 – 175)
மாதவியை விலைக்கு வாங்குகிறான். பின் இருவரும் காதல் இணையக் காமத்தில் கலந்தவர்களாக ஊடியும் கூடியும் இருந்ததாக அந்தி மாலைச் சிறப்புச் செய் காதையில் (31-34) காட்டப்படுகின்றான். சித்ராபதியினது சூழ்ச்சியின் காரணமாகத் தன்பொருளனைத்தையும் இழக்கிறான். கோவலனின் இத்தகைய செயலால் கண்ணகியும் தன்பொருளனைத்தையும் இழந்து தன் கணவன் உடன் இல்லாமையை எண்ணி ஏங்கியவளாய் உறக்கத்தை இழந்தாள் (அந்தி மாலை.கா 48-57, 66-67). இது தொடக்கத்தில் தம் இருவரும் நிறைவு பெற்ற படிநிலைகள் கோவலனின் செயலால் வீழ்ச்சியடைந்ததைக் காட்டுகிறது. மாதவியும் கோவலனும் மனதொத்துக் காதலித்தாலும் கோவலன் தன் தவறான புரிதலால் கானல்வரி காதையில் மாதவியிடம் இருந்து முழுவதும் விலகுகிறான். புறஞ்சேரியிறுத்த காதையில் மாதவியின் கடிதத்தைக் கௌசிகனிடம் இருந்து பெற்றதன் மூலம் தன் தவறை உணர்ந்தாலும் திரும்பி மாதவியிடம் சேர இயலாதவனாய் உள்ளான் (புறஞ்சேரி.கா: 47 – 101). இதன் காரணமாகக் கோவலனுக்குச் சுற்றம் மற்றும் அன்புசார் தேவைகளில் மாதவியுடன் முழுமையாக நிறைவடையவில்லை. ஆயினும் கோவலனுக்கு மாடலன் மறையோனின் நட்பு, கண்ணகிக்குத் தேவந்திகையின் நட்பு மேலும் இருவருக்கும் தம்மீது அன்பு பகிர்ந்தவராகக் கவுந்தியடிகள் இன்சொல் பகிர்தலும், நம்பகமானவர்களாக மாதரி மற்றும் அவள் மகள் ஐயை அடைக்கலம் கொடுத்து அன்பு காட்டுதல் என்ற நிலையில் நிறைவு பெற்றவர்களாகக் காட்டுகிறது. தன் மதிப்பு உருவாக்கத் தேவைகளில் கோவலன் முதலில் மாடலன் மறையோனால் கருணை மறவன் என்று புகழப்பட்டுகின்றான் (அடைக்கல.கா: 25 – 94) மேலும் முழுமையடைய அந்தப் படிநிலையை நோக்கி நகர்கிறான் என்பதைக் கண்ணகி, அந்தணர் முதலியோர்க்கு உணவளித்தல் முதலாகிய அறங்களைச் செய்யப் பொருளீட்டும் பொருட்டு வணிகம் செய்யப் பொற்கொல்லனிடம் சிலம்பு விற்க சென்று இறுதியில் கொலைக்களப் படுகிறான் (கொலை.கா: 71 – 217). தொடக்கத்தில் தேவைசார் வளர்ச்சிப் படிநிலையில் உடலியல் மற்றும் தற்காப்புத் தேவைகளில் நிறைவுற்றாலும் அன்புசார் தேவையின் பொருட்டு முதல் இரண்டு தேவைகளிலும் வீழ்ச்சி அடைகிறான். மீண்டும் முதல் இரண்டு படிநிலைகளுடன் சேர்த்து தன்மதிப்புருவாக்கும் தேவையின் பொருட்டு தனது தேவைகளில் அடுத்த நிலைக்கு முன் நகரும் போது கோவலன் கொல்லப் படுகிறான். இதன் காரணமாகக் கோவலன் தன்னை உணர்தல் அடையாமல் வீழ்ச்சி அடைகின்றான்.
அடுத்ததாகத் தன்மதிப்புருவாக்கத் தேவைகளைக் கண்ணகியிடம் உட்படுத்தும் போது திருமகளின் அழகும், தீதி இலா வடமீனின் திறம் இவள் திறம் (மங்கல.பா: 26-30) என்பதும் கொற்றவை ஏறிய சாலினி கண்ணகியைப் புகழ்ந்து கூறும் போது கண்ணகி நாணி புன்முறுவல் செய்தல் (வேட்டுவவரி: 44 – 53) மேலும் கண்ணகியைக் கவுந்தியடிகள் பாராட்டி மாதரியிடம் உரைத்தல் (அடைக்கல.கா: 131- 150) சீற்றத்துடன் வந்த கண்ணகி, வாயிற் காவலனினது புகழுரை (வழக்குரை.கா 35 – 42) கண்ணகியைக் குன்றக்குரவர்கள் புகழ்தல் (குன்றக்குரவை: 21 பாட்டுமடை) (வாழ்த்து கா: 1 – 29) காப்பியத்தின் இறுதியில் கண்ணகி தன்னை உணர்தலின் வழி தெய்வமாக்கப் படவில்லை என்பதனை கண்ணகி மணிமேகலையிடம் தாம் செய்த பாவச்செயல் எம்மை விடாது உன்னைப் போலவே நாங்களும் பல பிறவி எடுப்போம் என்று மணிமேகலையில் இடம் பெறும் கூற்றோடு (வஞ்சிமாநகர்புக்க.கா: 34 – 67) கண்ணகியும் தன்னை உணர்தலை அடையாமல் வீழ்ச்சிக்குள்ளாகிறார்.
ஆனால் மதுராபுரி தெய்வத்தின் மூலம் முற்பிறப்பை உணர்ந்து உண்ணா நோன்பிருந்து உயிர் துறந்தாள் என்பது மாஸ்லோவின் தன்னை உணர்தலின் வினைத்திட்பமாகக் கொண்டாலும் மேல் குறிப்பிட்ட கண்ணகி மணிமேகலை உடனான உரையாடல் உச்சநிலை அடைந்ததற்கான வெளிப்பாடாக அமையாதது இங்குத் தன்னை உணர்தல் நிலையில் பின்னடைவாகவே கொள்ளமுடிகிறது.
மேலே கூறப்பட்ட கோவலன் கண்ணகி வாழ்வியல் காப்பியத்தின் திருப்புமுனை பகுதியான கானல்வரியின் போது மாதவி பாடிய பாடலில் தெளிவுற கோவலன் நேரடி விளக்கத்தைப் புரிந்திருந்து பிரிவு ஏற்படாமல் இருந்திருந்தால் காப்பியத்தின் போக்கு முழுவதும் மாற்றம் ஏற்பட்டிருக்கக் கூடும் அல்லது கோவலன் கொல்லப்படாமல் இருந்திருப்பின் கோவலன், கண்ணகி இருவரும் தன்னை உணர்தல் அடைந்திருக்கக் கூடும். அந்நிலை அடையாமைக்கான காரணம் இளங்கோவடிகள் தம் காப்பியத்திற்கான கருதுகோளாக ஊழ்வினை உருத்து வந்து ஊட்டும் என்ற காப்பியப் போக்கினைச் சிதையாமல் இயற்றியுள்ளார். ஆனால் இவ்விரண்டிற்கும் ஊழ் அடிக்கருத்தாக அமைவதை காணமுடிகிறது. அதன் காரணமாகப் பிறப்பறுக்கும் நிலை ஏய்தினால் மட்டுமே முக்தி அடையலாம் என்ற நோக்குடனே குறிப்பொருளாகச் சிலம்பில் இருந்து மணிமேகலை துறவு பற்றி மணிமேகலையின் இறுதி வரை அமைகின்றது.
மணிமேகலை – தலைமையை இனங்காணுதல் :
மணிமேகலையின் பாத்திர அமைப்பு பொருத்தவரை பெரிதும், தேவைகளைக் காட்டிலும் தேடல்களை மையமிட்டதாக அமைக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது. சிலப்பதிகாரத்தில் மாடலன் மறையோன் மூலம் மாதவிக்கும் கோவலனுக்கும் பிறந்த மகளாகப் பெயர் சூட்டு விழாவில் அறிமுகப்படுத்தப்படுகிறாள் (அடைக்கல.கா: 22 – 43). அதைத் தொடர்ந்து வருவதுரைத்தல் போல் கோவலன் தான் தீக்கனா கண்டதாகவும் அதில் மாதவி தன் மகள் மணிமேகலையை அறவாணரிடம் ஒப்படைக்கப்படுவதாகக் காட்டப்படுகிறாள்.
அணிதிதழ் போதி அறவோன் தன்முன்
மணி மேகலை மாதவி அளிப்பவும்
நனவு போல நள்ளிருள் யாமத்துக்
கனவு கண்டேன் கடிதுஈங்கு உறும்என
(அடைக்கல.கா: 103-106)
அதனை தொடர்ந்து வாழ்த்துக் காதையில் அடித்தோழியர் அரற்றாக,
காதலன் றன்வீவுங் காதலிநீ பட்டதூஉம்
ஏதிலார் தாங்கூறு மேச்சுரையுங் கேட்டேங்கிப்
போதியின்கீழ் மாதவர்முன் புண்ணியதா னம்புரிந்த
மாதவி தன்றுறவுங் கேட்டாயோ தோழீ
மணிமே கலைதுறவுங் கேட்டாயோ தோழீ; (வாழ்த்து.கா:7)
மணிமேகலை துறவு பூண்டது அறியமுடிகிறது. இதனை தொடர்ந்து இறுதி காதையான வரந்தரு காதையில் மணிமேகலை துறவைப் பற்றிச் சேரன் வினவ அதற்குத் தேவந்திகை விவரிப்பதாக அமைகின்றது (வரந்தரு.கா: 9 – 34) மணிமேகலைக் காப்பியத்தில் தேவைசார் வளர்ச்சிப் படிநிலை அடிப்படைத் தேவைகளாக உடலியல் தேவைகளில் உண்டி, உணவு, உறையுள் என்கிற புறக்காரணிகளுடன் பெரிது மாஸ்லோவும் சீத்தலைச்சாத்தனாரும் ஒன்றுபடுகின்றனர்.
கறமெனப் படுவ தியாதெனக் கேட்பின்
மறவா திதுகேண் மன்னுயிர்க் கெல்லாம்
உண்டியு முடையு முறையுளு மல்லது
கண்டது இல்
(ஆபுத்திரனோடு மணிபல்லவ மடைந்த.கா: 228 – 231)
என்பதைக் கருத்தில் கொண்டு அமுதசுரபி மூலம் முதலில் வறியவர்களுக்குப் பசியைப் போக்குகின்றதையும், மேலும் பசிப்பிணியிலிருந்து விடுபட மணிமேகலைக்கு மணிமேகலா தெய்வம் மந்திரம் ஒன்றைக் கூறுகிறாள்.
மக்கள் யாக்கை யுணவில் பிண்டம்
இப்பெரு மந்திர மிரும்பசி யறுக்குமென்
றாங்கது கொடுத்தாங் கந்தர மெழுந்து
நீங்கிய தாங்கு நெடுந்தெய்வந் தானென்.
(மந்திரங்கொடுத்த.கா: 90 – 94)
இதனைத் தொடர்ந்து மணிமேகலையின் வழி தற்காப்புத் தேவைகளாகக் காணுங்கால் இளமையான வளையல் அணிந்த பெண் என்று கூறி யாரும் விலைப் பொருள் உரைக்கவோ, மனந்திறந்து பேசவோ உரையாடவும் செய்யார் ஆகையால் வேற்று உரு எடுக்கவும், வான்வழி செல்லவும் மந்திரத்தை மணிமேகலா தெய்வம் தருகிறார் (மந்திரங்கொடுத்த.கா: 75 – 83) அதன் விளைவாகக் காயசண்டிகை வடிவம் பெற்று உதயகுமரனிடம் இருந்து தப்புவது. இராசமாதேவியின் கட்டளையேற்றுத் தவறு செய்ய முயன்றவனிடம் இருந்து ஆண் உருப்பெற்றுத் தப்பித்தல்,
ஆங்கவன் சென்றவ் வாயிழை யிருத்த
பாங்கில் ஒருசிறைப் பாடுசென் றணைதலும்
தேவி வஞ்சம் இதுவெனத் தெளிந்து
நாவியல் மந்திரம் நடுங்கா தோதி
ஆண்மைக் கோலத் தாயிழை யிருப்பக்
காணம் பெற்றோன் கடுந்துய ரெய்தி
(சிறைவிடு.கா: 43 – 54)
சமயவாதிகளிடம் மாற்று வடிவத்துடன் சமயவாதம் செய்தல். மேலும் எப்பொழுதெல்லாம் மணிமேகலை காப்பிய நோக்கத்தில் இருந்து தடம்பிறழப் படுகிறாளோ அப்பொழுதெல்லாம் மணிமேகலா தெய்வம், தீவதிலகை, கந்திற் பாவை போன்ற தெய்வங்களின் துணைக் கொண்டு மீளுகிறாள் (மந்திரங்கொடுத்த.கா: 6 – 93). தீவதிலகை அமுதசுரபி பெற வழிகாட்டுதல் (பாத்திரம்பெற்ற.கா: 35 – 60). உதயகுமரன் இறப்பினால் துயருற்று இருந்த மணிமேகலைக்குத் துயர் நீங்கும் பொருட்டும், காப்பியத்தில் அடுத்தடுத்து நிகழ்வதை வருவது உரைத்தலின் மூலம் மணிமேகலையைக் காத்தல் போன்ற செயல்களின் வழி கந்திற்பாவை உதவுதல் (கந்திற்பாவை வருவது உரைத்த.கா: 72 – 189). சுற்றம் மற்றும் அன்புசார் தேவைகளை அடைதலில், உதயகுமரன் மீதான காதலை முற்பிறப்பின் தொடர்ச்சியாகத் தொடர்ந்தாள் (மந்திரங்கொடுத்த.கா: 42 – 45). உதயகுமரன் மணிமேகலை விலைமகள் என்பன போன்று பலவாறாக வசைமொழி கூறினாலும் அவன்பால் தன்நெஞ்சைப் பறி கொடுத்தாள் (மணிமேகலாதெய்வம் வந்து தோன்றிய. கா: 82 – 93). மேலும் உதயகுமரனை நெறிபடுத்த எண்ணி அவன் மீது காதல் கொண்டிருந்தாலும் நிலையாமையைப் போதிக்கிறாள். (உதயகுமரன் அம்பலம் புக்க.கா: 134 – 143) பிறப்பறுக்கும் பொருட்டு வேட்கை = துறவாக உயர்வழிபடுத்தும் (Sublimation) முயற்சியில் உதயகுமரனைக் காஞ்சனன் வாளாலெறிந்த காதையில் இழக்கிறாள். அதன் காரணமாகத் துயர் கொண்டவளாக மணிமேகலை காட்டப்படுகிறாள் (கந்திற்பாவை வருவது உரைத்த.கா: 01 – 71) சுற்றம் மீதான அன்பாகச் சிறைக் கோட்டம் அறக்கோட்டமாக மாற்றியது காயசண்டிகை பசிப்பிணி போக்கியது எனப் பசியால் வாடிய உயிர்களுக்கு உணவளித்தலின் மூலம் காணமுடிகிறது.
தன்மதிப்புருவாக்கம் தேவைகளில் தன்னை எதிர்த்தவர்களிடம் இருந்தே தன்மீதான தன்மதிப்பு உருவாகுவதைச் சிறைவிடு காதையின்கண் உதயகுமரனின் தாயான இராசமாதேவி தன் மகனின் இறப்பிற்குக் காரணமான மணிமேகலையைப் பலவாறாகத் துன்புறுத்தியும் அவப்பெயரை ஊர் முழுவதும் பரப்பினாலும் இறுதியில் மணிமேகலையைச் சித்ராபதியிடம் இருந்து காத்து மாதவரான அறவணருடன் அனுப்பி வைத்தல் (சிறைவிடு.கா: 35 – 147). இறுதியில் தன்னை உணர்தலின் பொருட்டுச் சமயக் கணக்கர்கள் தந்திறங் கேட்டு, வஞ்சிமாநகரில் மாசாத்துவானைச் சந்தித்து அவரோடு உரையாடி, அறவணடிகளிடம் தவத்திறம் தனக்கு அறிவிக்குமாறு வேண்டிப் பெற்று, பௌத்த சமயத்தின் நெறியில் பேதைமை முதலிய பன்னிரு நிதானங்களின் தோற்ற, ஒடுக்கம் முதலிய பிறவற்றையும் முறையே உபதேசம் பெற்று ஐயந்திரிபற உணர்ந்து பிறவித்துன்பம் ஒழிய என்று அந்நகரிலேயே நோன்பு நோற்றுப் பிறப்பறுக்கும் நெறியில் நின்றாள் என்று இறுதி காதையாகப் பவத்திறமறுகெனப் பாவைநோற்ற காதையில் நிறைவுறுகின்றது.
இந்நால் வகையான் மனத்திரு ணீங்கென்று
முன்பின் மலையா மங்கல மொழியின்
ஞான தீப நன்கனக் காட்டத்
தவத்திறம் பூண்டு தருமங் கேட்டுப்
பவத்திற மறுகெனப் பாவைநோற் றனளென்.
(பவத்திறமறுகெனப் பாவைநோற்ற.கா 260 – 265)
இதன்கண் மணிமேகலை பழம் பிறப்பு உணர்தலில் இருந்து பிறப்பறுக்கும் நிலை வரை நோக்கியவளாக இயங்குகிறார். மேலும், மாஸ்லோ தன்னை உணர்தல் (தன்மெய்ம்மையாக்கம்) அடைபவர்கள் அல்லது அடைந்தவர்களின் பண்புகளாகச் சிலவற்றைக் கூறுகிறார். அவை,
- மெய்ம்மையை உணரும் திறன்
- தன்னைத் தான் முழுமையாக ஏற்றுக்கொள்ளுதல்
- தன்னிச்சையான இயல்பு, எளிமை, இயல்பு தன்மை
- சிக்கல்களைப் புறவயத்தில் அணுகுவது
- உணர்ச்சி வயத்தில் இருந்து தம்மைத் தனிமைப்படுத்திக் கொள்வது
- புதுமையைப் பாராட்டல்
- உச்சநிலை அனுபவத்தை அடைதல்
- சமூகத்தின் மீதான அக்கறை
- ஆழமான தனிமனித உறவுநிலை
- படைப்பாக்கத்திறன்
- பண்பாட்டு நிலையில் இணங்க மறுப்பது
மேற்குறிப்பிட்ட அனைத்தும் பொருந்தியவர்களே தன்னை உணர்ந்தவர்கள் என்பது பொருளல்ல. மாறாகத் தன்னை உணர்ந்தவர்களிடம் இதில் சில பண்புகள் பொருந்தி இருப்பதைக் காணமுடிகிறது. மேலும் இத்தகைய பண்புகள் பொருந்திய அனைவரும் தன்னை உணர்ந்தவர்களாகக் கருதவும் இயலாது என்று மாஸ்லோ குறிப்பிடுகின்றார். இதன் அடிப்படையில் மணிமேகலையின் சில பண்புகள் பொருந்தி வருவதை வாசிப்பின் வழி உய்த்துணர முடிகின்றது. மேலும் தன்னை உணர்தல் என்பது ஓர் ஆற்றல்வளத்தை (one potential) எடுத்துத் தன்னை முழுமையாக உட்படுத்தி அந்த ஆற்றல் வளத்தைச் செய்து முடிப்பதேயாம். அவ்வாறே மணிமேகலை “உயர் அறங்களை அறிந்து உலகுக்கு ஒளியாக நீ திகழ வேண்டும்” (மந்திரங்கொடுத்த.கா: 48 – 49) என்ற மணிமேகலா தெய்வத்தின் வாக்கினை ஏற்று அதனையே தம் குறிக்கோளாகக் கொண்டு அதில் வெற்றியும் பெறுகிறாள்.
இரட்டைக் காப்பியத் தலைமை இனங்காணும் போது கோவலன், கண்ணகி இருவரும் தேவைசார் வளர்ச்சிப் படிநிலையில் முழுமைப் பெறும் முன் ஊழின் காரணமாக இடையிலே தெய்வமாக்கப்படுகின்றனர். ஆனால் மணிமேகலையின் பிறப்பு முதல் முக்தி அடைதல் வரை என மாஸ்லோவின் அனைத்துப் படிநிலைகளை ஓரளவேணும் கடக்கிறாள். தண்டியலங்காரத்தில் குறிப்பிடும் பெருங்காப்பியப் பண்பான அறம், பொருள், இன்பம், வீடு என்ற பார்வையினோடு தேவைசார் வளர்ச்சிப் படிநிலை என்ற கோட்பாடு பெரிதும் பொருந்தி வருவதைக் காணமுடிகிறது.
சிலப்பதிகாரத்தைப் பொருத்தவரை நாற்பொருள் தன்மை முழுமைப் பெற்றுள்ளதைக் காணமுடிகின்றது. ஆயினும், காப்பியத்திற்கே உரிய வலுவான தலைமைப் பண்பை அடைந்த மாந்தராகச் சீவக சிந்தாமணியில் இடம் பெற்ற காப்பிய நாயகன் சீவகனைப் போன்று தேவைசார் வளர்ச்சிப் படிநிலைகளில் முழுமையடைந்த ஒரு தலைமையைச் சிலப்பதிகாரத்தில் இனங்காண இயலவில்லை.
மணிமேகலைக் காப்பியத்தில் மணிமேகலை, நாற்பொருள் மற்றும் மாஸ்லோவின் கோட்பாட்டுடன் விகிதச்சார அடிப்படையில் நிறைவுபெறுகிறாள்.
இரட்டைக் காப்பியத் தலைமையை இனங்காண்பதன் மூலம் இரண்டுநிலைகளைக் காணமுடிகின்றது.
ஒன்று சிலப்பதிகாரத்தில் இடம்பெறும் மணிமேகலையின் பங்கு, இரண்டு மணிமேகலையில் இடம்பெறும் சிலப்பதிகாரக் கதைமாந்தர்கள் மற்றும் நிகழ்வுகளின் பங்கு.
சிலப்பதிகாரத்தில் மணிமேகலையின் உரையாடல்கள் நிகழ்த்தவில்லை. ஆயினும் நிகழ்வுகளின் அடிப்படையிலேயே மணிமேகலை கடத்தப்படுகிறாள்.
மணிமேகலை காப்பியத்தில் சிலப்பதிகாரக் கதைமாந்தர்கள் உரையாடல் நிகழ்த்துகின்றனர். எடுத்துக்காட்டாக வஞ்சிமாநகர் புக்க காதையில் கண்ணகியுடன் மணிமேகலை நிகழ்த்தும் உரையாடலைக் காணமுடிகிறது. மேலும் சிலப்பதிகாரத்தில் வஞ்சிக்காண்டம் வரையான கதைக்களம் இறந்தகாலத்திலும், வஞ்சிக்காண்டம் தொடங்கி மணிமேகலைக் காப்பிய நெடுகிலும் நிகழ்காலத்தன்மையில் அமைந்திருப்பதைக் காணமுடிகிறது.
முடிவுரை:
மேல் கூறிய வண்ணம் இரட்டைக் காப்பியத்தில் இடம்பெறும் முதன்மை மாந்தர்களாகக் காணப்படும் கோவலன், கண்ணகி, மணிமேகலை இவர்கள் மூவரில் மாஸ்லோவின் தேவைசார் வளர்ச்சிப் படிநிலைகளின் வழி தன்னை உணர்தல் என்ற படிநிலையை அடைந்தவராக மணிமேகலையே காணப்படுகிறாள். இவ்வாறு மணிமேகலைத் தலைமையில் இரட்டைக் காப்பியத்தைக் காணுங்கால் இயல்புநிலை குறைந்தும் சிலப்பதிகாரத்தில் இடைசெருகல்கள் குறித்த ஐயத்தை உய்த்துணர முடிகிறது.
இதன் காரணமாகப் பௌத்த சமயத்தைப் பரப்பக் கருதிய சாத்தனார் பௌத்தக்காப்பியத்தை உருவாக்க சிலப்பதிகாரத்தின் கதை நீட்டிப்பாக மணிமேகலையை உருப்பெறச் செய்திருக்க வேண்டும். அல்லது, வஞ்சிக்காண்டத்தில் குறிப்பிட்டிருப்பது போல் இளங்கோவும், சாத்தனாரும் சமகாலத்தவராக இருந்திருக்கக் கூடும். அவருடைய காப்பியத்தை ஊக்குவிக்கக் கருதி, சாத்தனாரின் காப்பியத் தலைமையில் உள்ள மணிமேகலையை ஆங்காங்கே தம் படைப்பில் இளங்கோவும் இடம்பெறச் செய்திருக்கக் கூடும்.
அதன் விளைவாக இரட்டைக் காப்பியத்தின் தலைமையை மணிமேகலை பெறுமளவிற்கு உருப்பெற்றிருப்பதைக் காணமுடிகிறது

துணை நின்றவை
- சாமிநாதையர்.உ.வே.,(ப.ஆ), இளங்கோவடிகள் இயற்றிய சிலப்பதிகாரம்,
பதினான்காம் பதிப்பு – 2021, மகாமகோபாத்தியாய டாக்டர் உ.வே.சாமிநாதையர்
நூல் நிலையம், சென்னை. - சாமிநாதையர்.உ.வே., .,(ப.ஆ), மணிமேகலை, ஒன்பதாம் பதிப்பு – 2013,
மகாமகோபாத்தியாய டாக்டர் உ.வே.சாமிநாதையர் நூல் நிலையம், சென்னை. - சீனிவாசன். ரா., மணிமேகலை கதை, முதற் பதிப்பு – 2018 ராமையா பதிப்பகம்,
சென்னை. - பஞ்சாங்கம்.க., இளங்கோவடிகளின் சிலப்பதிகாரம், முதற்பதிப்பு – ஜனவரி 2020,
அன்னம், தஞ்சாவூர். - பகவதி.கு., திறனாய்வு அணுகுமுறைகள், மறுபதிப்பு – 2007,
உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், சென்னை. - Duane P.Schultz., Sydney Ellen Schultz., Theories Of Personality, Eleventh Edition,
University of South Florida, USA. - https://www.simplypsychology.org/maslow.html

Leave a comment