கவிதை

அழகிய அன்றாடம்

பாக்யபாரதி

மறைந்த சூரியன் மீண்டும்
முயன்று உதிக்கிறது!
நம்பிக்கையுடன் காத்திருந்த
மலரொன்று சிரிக்கிறது!

அதனொளி பட்டு
மூடியிருந்த இமையது
மெல்ல விரிகிறது!
ஓய்வெடுத்த உடலது
உழைக்கத் துவங்குகிறது!

இரைதேடி பறவை
பறக்கத் தொடங்குகிறது!
இனம்விட்டுப் பிரியாமல்
பசுவொன்று மேய்கிறது!

சமமற்ற பாதையிலும்
எறும்பொன்று பருக்கையை
எடுத்துச் செல்கிறது!
ஆடும் இலையும் ஓடும் நீரும்
அதனதன் வேலையை
சரியாகச் செய்கின்றன

சுக துக்கங்களைச்
சுமந்துகொண்டு
காலச்சக்கரத்தைச் சரியாகச் சுழற்றுகிறது
அழகிய அன்றாடம்!

Leave a comment

Trending