காடரினக் கதைகள் – 8

ஆரியமலா (ஆரியமாலா)

( ஆரியமாலா எனும் பெயர் கதையில் ஆரியமலா என்று வருகின்றது)

தொகுப்பும் ஓவியத்தூரிகையும் :
ப.குணசுந்தரி & து. சரண்யா

கதை மாந்தர்கள்
1. ராஜா
2. ராணி
3. இராஜகுமாரன்
4. ஆரியமலா
5. தாதிப் பெண்கள்
6. மான்குட்டி

                ஒரு காட்டில் ராஜாவும் ஒரு ராணியும் தனித்து வாழ்ந்து வந்தனர். அவர்களுக்கு ஒரு ஆண்மகவு பிறந்தது. நாள்தோறும் ராஜா வேட்டைக்குச் செல்வது வழக்கம். அந்த ராஜா வடக்கு, தெற்கு, மேற்கு ஆகிய மூன்று திசைகளில் மட்டுமே வேட்டைக்குச் சென்று வந்தான். ஒரு நாள் கிழக்குத் திசைக்கு வேட்டையாடச் சென்றான். அப்போது அங்கே ஓர் அதிசயத்தைக் கண்டு மனம் நெகிழ்ந்தான்.

                அன்றிலிருந்து அந்த இராஜா தான் கிழக்குத் திசைக்குச் சென்றபோது கண்ட காட்சியை நினைத்துக் கொண்டே இருந்தான். ஊண் உறக்கமின்றி அந்த இராஜா சாகும் தருவாய்க்குத் தள்ளப்பட்டான். அந்நிலையில் இராஜா மனைவியிடம் தன் மகன் வேட்டைக்குச் செல்லும்போது தெற்கு, மேற்கு, வடக்கு என மூன்று திசைகளில் மட்டுமே அனுப்பு. கிழக்குத் திசைக்கு மட்டும் அனுப்பாதே எனக் கூறி இறந்தான்.

                இராஜாவின் மறைவுக்குப் பிறகு ராணியும் அவளுடைய மகனும் தனித்தே அந்தக் காட்டில் வாழ்ந்தனர். இராணியின் மகன் வளர்ந்து ஆளானான். அவன் வேட்டைக்குச் செல்ல ஆரம்பித்தான். அவனுடைய தாய் கிழக்குத் திசைக்கு மட்டும் வேட்டைக்குச் செல்லாதே என எச்சரித்தாள். மகனும் தன் தாய் கூறியபடியே சில மாதங்கள் கிழக்குத் திசைக்கு வேட்டைக்குப் போகாமல் இருந்தான்.

படம். து. சரண்யா

ஒரு நாள் காலையில் வேட்டைக்குச் சென்றபோது அவன் கிழக்குத் திசையை நோக்கிச் சென்றால் என்ன? அத்திசையில் என்னதான் இருக்கிறது சென்று பார்க்கலாம் என எண்ணினான். அவனுடைய குதிரையைக் கிழக்குத் திசையை நோக்கி கூட்டிச் சென்றான். அங்கே சிறிது தூரம் சென்றவுடன் அவன் கண்ட காட்சி அவனை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. அன்று மாலை அவன் வீட்டிற்கு வந்தான். ஏதோ ஒரு சிந்தனையில் ஆழ்ந்தபடியே இருந்தான்.

அவனுடைய தாய் அவனிடம் மகனே என்ன நடந்தது. ஏன் ஏதோ ஒரு சிந்தனையிலேயே இருக்கிறாய்? என்றாள். அதற்கு அவன் ஒன்றும் இல்லை எனப் பதிலுரைத்தபடி தன்னுடைய மெத்தையில் சாய்ந்தான். தன்னுடைய மகன் பசியோடு இருப்பதை அறிந்த தாய் அவனுக்குப் பாலும் பழமும் இனிப்பும் எடுத்து வந்து உண்ணுமாறு கூறினாள்.

பால்பழம் உங்கவேணும் மகனே உங்கவேணும்

எனக் கூறினாள். இதைக் கேட்ட மகன் தனக்கு உணவு உண்ண விருப்பம் இல்லாத காரணத்தைத் தன் தாயிடம் தெரிவித்தான்.

பால்பழம் உங்க மாட்டென் தாயே – உங்க மாட்டேன்
பாய்போட்டா தூக்கமில்லே
படுக்க விரிச்சா – நித்திரையில்லே

ஆரியமலையைக் கண்டுவந்த நாள் முதலா எனக்கு – கண்ணுறக்கமில்லேதாயே
கண்ணுறக்கமில்லே

என்று தான் ஆரியமலா என்ற தேவ கன்னியைக் கிழக்குத் திசையில் இருந்த கோட்டையில் கண்டதாக அவன் கூறுகிறான். இதைக் கேட்ட தாய் தன் மகன் கிழக்குத் திசையில் வேட்டைக்குச் சென்று வந்திருக்கிறான் என்பதை உணர்ந்தாள்.

                தான் எச்சரித்துக் கூறியும் கிழக்குத் திசைக்கு வேட்டையாடச் சென்ற தன் மகனை அவள் கடிந்து கொண்டாள். இருப்பினும் அவன் அந்தத் தேவகன்னி ஆரியமலாவைச் சென்று பார்க்க வேண்டுமென துடித்தான். ஆரியமலா இருக்கும் கோட்டையோ பத்து சுற்றுக் கோட்டை. பாம்பு கூடி நுழைய முடியாத மண்டபம். இருப்பினும் அவன்

புள்ளிமான் வேசம் கொண்டல்லவோ தாயே
பறந்தோடி நான் போய்வருவேன் தாயே –
போய் வருவேன்

புள்ளிமான் வேடமணிந்து ஆரியமலாவைப் போய் கண்டு வருவேன் என்று கூறுகிறான். அதற்கு அவனுடைய தாய்

போகாதடா என் மகனே போகாதடா
புள்ளிமான் வேசம் கொண்டு போகாதடா
என் மகனே போகாதடா

 புள்ளிமான் வேசம் கொண்டு போகாதடா என் மகனே
எத்தனையோ இகையாளி பகையாளி
உங்குமடா மகனே உங்குமடா

என்றாள்.

புள்ளிமான் வேடமணிந்து சென்றால் மானுக்கு எதிரிகளான புலி, சிங்கம் உன்னை உண்ணுமடா என அவள் கூறுகிறாள். இதைக் கேட்ட மகன் மீண்டும் தாயை நோக்கி

பக்ஷி வேசங் கொண்டல்லவோ தாயே நான்
பறந்தோடிப் போய் வருவேன்

எனப் பறவை வேடமணிந்து நான் ஆரியமலாவைப் போய் கண்டு வருவேன் என்கிறான். அதற்கு அவனுடைய தாய்

போகாதடா என் மகனே போகாதடா
பக்ஷிக்குப் பகையாளி மகனே பகையாளி
எத்தனையோ பகையாளி மகனே பகையாளி

எனப் பறவைகளுக்கும் பகையான வேறு பறவைகள் உன்னைத் தாக்குமடா மகனே நீ போக வேண்டாம் எனத் தாய் கூறுகிறாள். உடனே மகன் தன் தாயிடம் ஆரியமலாவின் கோட்டையைக் குறித்துக் கூறுகிறான்.

 செத்திறந்து போனாலும் மாண்டு மடிஞ்சு போனாலும்
 ஆரியமலா மடிமேலே தாயே ஆரியமலா மடிமேலே

எனத் தன் தாயிடம் அவன் இறந்தாலும் ஆரியமலாவின் மடிமேலேயே தான் எனக் கூறினான். இதைக் கேட்ட அவனுடைய தாய் மீண்டும் அவனைத் தடுக்க முயலவில்லை.

                எல்லாரு கோட்டையடா தாயே
                எட்டுசுத்து பத்து சுத்து – ஆரியமலா
                கோட்டையடா தாயே கோட்டையடா
                பாம்பேறாத மண்டக(ப)மா தாயே மண்டக(ப)மா

என்று எல்லாருடைய கோட்டையும் எட்டுச் சுற்று பத்துச் சுற்று. ஆனால் ஆரியமலாவின் கோட்டையோ பாம்பு கூட ஏறமுடியாத அளவு பெரிய கோட்டை என்றான். மேலும் அவன் ஆரியமலாவின் கூந்தலைக் குறித்துக் கூறுகிறான்.

எல்லாரு கூந்தலடா தாயே கூந்தலடா
எட்டுமுழம் பத்து முழம் ஆரியமலா கூந்தலடா
தாயே கூந்தலடா
பதினாறு பாகமடா தாயே – பதினாறு பாகமடா

என மற்ற பெண்களின் கூந்தல் குறைந்தது எட்டு முழம் அல்லது பத்து முழம். ஆனால் ஆரியமலாவின் கூந்தலோ பதினாறு பாகமாக இருக்கும் என்கிறான். இதைக் கேட்ட அவனுடைய தாய் ஆரியமலாவின் பேரழகை உணர்ந்தாள். மீண்டும் தன் மகனைத் தடுக்க அவளுக்கு மனமில்லை.

                தன் விருப்பப்படியே அவன் புள்ளிமான் வேடமிட்டு ஆரியமலாவைப் பார்க்க அவள் கோட்டை இருக்கும் கிழக்குத் திசை நோக்கி விரைந்தான்.

படம். து. சரண்யா

ஆரியமலாவின் கோட்டைக்கு வெளியே நின்று ஆரியமலாவின் பேரழகை இரசித்தபடி நின்றான். நிலவைப் போன்ற முகம் கொண்ட அவள் முகம் கோட்டையின் முகட்டில் இருந்து ஒளி வீசியது. அவளுடைய கூந்தலைத் தாதிப் பெண்கள் அவள் இருந்த இடத்திலிருந்து கோட்டையின் கண்களின் வழியே வெளியே எடுத்து வந்து பதினாறு பாகமாகப் பிரித்து வேலியில் உலரவைத்து சிக்கல் களைந்தனர். அப்பேற்பட்ட நீளமான கூந்தலைக் கொண்டவள் ஆரியமலா.

                அவளைக் காண புள்ளிமான் வேடம் அணிந்த ராஜகுமாரன் ஆரியமலாவின் முன் சென்று துள்ளித் திரிந்தான். அதைக் கண்ட ஆரியமலா அந்த மான் குட்டியைப் பிடித்துக் கொடுக்குமாறு தாதிப் பெண்களிடம் கூறினாள்.

மான்குட்டி ஓடுதடா தாதிப் பெண்ணாளே
மான்குட்டிய பிடிச்சுக்குடுங்க தாதிப் பெண்ணாளே

எனத் தாதிப் பெண்களிடம் முறையிட்டாள். இதைக் கேட்ட தாதிப் பெண்களும் அந்தப் புள்ளிமான் குட்டியைப் பிடிப்பதற்கு முயன்றனர். மான்குட்டி தப்பி ஓடியது. மான்குட்டியைப் பிடிக்க முடியவில்லை எனத் தாதிகள் ஆரியமலாவிடம் கூறினர். அதற்கு அவள் தன் கூந்தலில் இருந்து சிக்கலை எடுக்கும்போது கிடைக்கும் முடியினைப் புள்ளிமான் குட்டி மேயும் இடங்களில் எல்லாம் வலைபோல விரித்து வையுங்கள் என்றாள்.

                மறுநாள் காலையில் புள்ளிமான் ஆரியமலாவின் தோட்டத்திற்கு வந்தது. அதன் கால்களில் ஆரியமலாவின் கூந்தல் வலைபோல் பின்னியது. மான்குட்டி சிக்கிவிட்டது என மகிழ்ந்த தாதிப் பெண்கள் அதனை ஆரியமலாவிடம் கொண்டு காண்பித்தனர். அவள் அறையின் எதிரே இருந்த வேறு அறையில் அந்தப் புள்ளிமான் குட்டியை அடைத்து வைத்தனர்.

                நள்ளிரவில் அந்த மான்குட்டி ஆரியமலாவின் அறையில் சென்று அவளுடன் படுத்துக் கொண்டது. அதைக்கண்ட அவள் தாதிப் பெண்களை அழைத்து மான்குட்டியை அதனுடைய அறையில் கொண்டுபோய் விடுமாறு கூறினாள். ஆனால் மான்குட்டி மீண்டும் மீண்டும் ஆரியமலாவின் அறைக்கே சென்றது.

ஆரியமலாவும் தாதிப் பெண்களை அழைத்து நள்ளிரவில் தொல்லை கொடுக்க வேண்டாம் என நினைத்து மான் குட்டியைத் தன் அறையிலேயே வைத்துக் கொண்டாள். சிறிது நேரம் கழித்தவுடன் மான்குட்டி இராஜகுமாரனாக உருமாறியது. அன்று இரவே இராஜகுமாரனும் ஆரியமலாவும் கணவன் மனைவியாகினர்.

                மறுநாள் காலையில் சூரியன் எழுவதற்குள் எழுந்துவிடும் ஆரியமலாவின் அறைக்கதவுகள் திறக்கப்படவில்லை. தாதிப் பெண்கள் சென்று அவளுடைய அறையைத் திறந்த பொழுது ஆரியமலாவின் மெத்தையில் ஆரியமலாவின் கால்களும் இராஜகுமாரனின் கால்களும் பிணைந்து கிடப்படைக்கண்டு அவர்கள் மான் குட்டியாக வந்தது இராஜகுமாரன்தான் என்பதை உணர்ந்து ஆரியமலாவின் அறையை விட்டு வெளியேறினர்.

ஆரியமலாவை மணமுடித்துக் கொண்ட பின்பு இராகுமாரன் தன் தாயைத் தாமரைப் பூவாக மாற்றி அந்தக் கோட்டைக்குக் கொண்டு சென்றான்.

                தன் தாய் காட்டில் தனியே இருந்ததினால் அவன் இவ்வாறு செய்தான் என்றும் தான் தாய் தந்தையைப் பற்றிய தகவலை ஆரியமலாவிடம் சொல்லாமல் இருந்த காரணத்தால் தன்னுடைய தாயைத் தாமரைப் பூவாக மாற்றிக் கோட்டைக்குக் கொண்டு சென்றான் எனவும் கூறுவர்.

……………….

(தகவல். மங்கம்மாள் பாட்டி, வயது72. வில்லோனி செட்டில்மென்ட். 01.06.2018.)

அருஞ்சொற்பொருள்

  • உங்க வேணும் – உண்ண வேண்டும்
  • க்ஷி – பறவை

Leave a comment

Trending