மொழிபெயர் சிறுகதை

சதுப்புநிலம், எருமை, வெள்ளைக்கொக்கு

மலையாளப் படைப்பு : வி.எஸ். அனில்குமார்
தமிழாக்கம் : ப. குணசுந்தரி

(சதுப்பு நிலம் சுருங்கிவருவதனால் ஏற்படும் வாழ்வாதார இழப்பினை எண்ணி எருமையும் வெள்ளைக் கொக்கும் வருந்தி உரையாடுகின்றன.)

சென்னை நகரத்திற்கு அருகிலுள்ள பள்ளிக்கரணை கிராமத்தில் இருக்கும் மிகவும் பரந்து விரிந்த சதுப்பு நிலங்கள் சுருங்கி வருவதைக் கண்களால் காண்கின்றபோதும் மெய்யில் உணர்கின்றபோதும் வருந்துகின்றேன் என்றன, வெம்மைக்கு ஆற்றாது நீராட வந்த எருமையும் அதன் மேலுள்ள பூச்சிகளையும் கொத்தித் தின்ன பறந்து வந்திறங்கிய வெள்ளைக் கொக்கும்.

“மனிதனுடைய வளர்ச்சி நம்பமுடியாதவகையில் இருக்கிறது” வெள்ளைக்கொக்கு கூறியது.

“ஆனால் அவர்கள் பயன்படுத்துகின்ற வார்த்தைகள் வேறானவை. ஆச்சரியம்” என்றவாறு எருமை நீரில் இறங்கியது.

அதேசமயம் வெள்ளைக் கொக்கு தன் சிறகு விரித்தது “அவர்கள் நம்முடைய இந்தப் பரந்து விரிந்த சதுப்பு நிலங்களை எப்படியெல்லாம் சுருக்குகிறார்கள் என்று பார். அதுதான் பல் மருத்துவக் கல்லூரி. இந்தப்பக்கம் பொறியியல் கல்லூரி. இவ்விரண்டிற்கும் முன்னால் உள்ள வேளச்சேரியின் அந்தப்பக்கம் முழுவதும் கார் தொழிற்சாலையாக மாற்றப்பட்டுள்ளது. இது உலகின் மிகப்பெரிய கார் நிறுவனம். அதனுடைய மதிற்சுவரினை ஒட்டியபடி இருப்பது நகராட்சி மாற்றியமைத்து நன்கொடையாகக் கொடுத்ததுபோல் உருவான பெரிய சேரி. பொருத்தமில்லாத காட்சிகள். கார் தொழிற்சாலையும் சேரியும். சேரியில் மூன்றுமுறை தீ பிடித்திருக்கிறது. ஆறுபேர் இறந்துள்ளனர். நகரம் இங்கு இதைப்போலவே மாறி வருகின்றது” என்றது.

“சென்னையினுடைய கொடிய வேனிலின் வெப்பத்தைத் தாங்கிக் கொண்டிருக்க ஆறுதலாய் இருப்பது இந்த நீர்ப்பரப்பு ….”

“சதுப்பு நிலங்களை இப்படி வைத்திருப்பது இழப்பாகும் ….”

“நீர்க்கு மேல்பரப்பில் அடர்ந்து பரவலாய் வளர்ந்திருக்கின்ற நீளமான புற்கள், அடியிலே மீன்கள், பாசிகள், – நீ பறந்து வருவது … இனி எத்தனை நாளுக்கோ?”

“இந்த நீர்க்காடுகளோடேயே (இச்சதுப்பு நிலத்துடனேயே) இருவருடைய தொடர்பும் இல்லாதொழியும்.”

“பூச்சிகளைப் பிடிக்கத் தலைநீட்டுகின்ற உன்னுடைய தோழமை….”

“எங்களுக்குப் பறந்து போவதற்காவது ஓரிடம் இருக்கின்றது. வண்டலூரில் உள்ள உயிரியல்பூங்கா. அரியவகை இனம் வெள்ளைக் கொக்கு என்ற பெயருடன் தொங்கவிடப்பட்டிருக்கும். இரும்பு வலைகள் கொண்ட ஆகாச மேல்கூரையின் கீழே ஒடுங்கியிருக்கவேண்டும். நீ என்ன செய்வாய்?”

“தலைநிமிர்த்துவதற்குக்கூட நேரமில்லாத நகர வீதிகளில் இருட்டு. சொந்த மலம், சிறுநீர் இவற்றிலேயே இருப்பு. பூச்சிகள் பெருகிப்பெருகியிருக்க…….”

அந்நேரத்தில் சாரைசாரையாக நகராட்சியினுடைய குப்பை லாரிகள் பல பேரிரைச்சலும் புகையுமாய் வர, துர்நாற்றம் வீசும் நகரக் கழிவுகள் அனைத்தும் அங்கேயே கொட்டப்படுகின்றன. பல்லாயிரம் ஈக்களும் அதேயளவுடைய கொசுக்களும் மொத்தமாய் மேலெழும்புகின்றன. குப்பைக் கூளங்கள் குன்றுகள் போல் உயர்ந்து நிற்கின்றன

அதற்குப்பின்னால் ஒரு ஜேஸிபி வண்டி வந்து கொட்டிச்சேர்த்திருந்த கழிவுகளைத் தட்டி நிரவ சதுப்பு நிலத்தில் தள்ளத் தொடங்குகிறது. அவ்விதமாகவே அவர்கள் சதுப்பு நிலங்களை நிரவிக்கொண்டு வருகிறார்கள். அதனால் எஞ்சியிருக்கின்ற இடங்களிலேயே நீர் ஒதுங்கித் தேங்கியிருக்கின்றது.

“பார்” என்று வெள்ளைக் கொக்கு எருமையிடம் சொன்னது. “மனிதன் அவன் தன்னுடைய சொந்தக் கழிவுகளுக்கு மேலாகவே எல்லாவற்றையும் கட்டிக் கொண்டிருக்கிறான்.”


மொழிபெயர்ப்பாளர் குறிப்பு :

தன்னுடைய எழுத்துக்களை மொழிபெயர்ப்புச் செய்ய அனுமதி கொடுத்த எங்கள் ஆசிரியர் வி.எஸ்.அனில்குமார்க்கும், தோழர் பேராசிரியர் க. கதிரவனுக்கும், மொழிபெயர்ப்பு செய்யும்போது சில இடங்களில் எனக்கு ஏற்பட்ட தடுமாற்றம் நீங்குவதற்கு உதவிய திருமதி வே.ரதிமோல், (துப்புரவுப்பணியாளர், பாரதியார் பல்கலைக்கழகம்) அவர்களுக்கும் நன்றி.

Leave a comment

Trending