தொல்காப்பியத்தில் ‘ஒன்பது’ – பகுதி 1
முனைவர் த.கண்ணன்
பேராசிரியர் & தலைவர்
அரிய கையெழுத்துச்சுவடித்துறை
தமிழ்ப் பல்கலைக்கழகம், தஞ்சாவூர் .
ஆய்வுச் சுருக்கம்
தொல்காப்பியம் 9 என்னும் எண் மதிப்பை ஒன்பது, ஒன்பான், ஒன்பஃது, தொண்டு எனும் சொற்களால் குறிக்கிறது. தொல்காப்பியம் குறிப்பிடும் ஒன்பது, தொண்ணூறு, தொள்ளாயிரம் எனும் சொற்கள் குறித்தும் அதன் எண் மதிப்புகள் குறித்தும் இதுவரை நிகழ்ந்துள்ள ஆய்வுகளை ஆராயுமிடத்து தொல்காப்பியம் மக்கள் வழக்காற்றில் நிலவி வந்த இச்சொற்களை எண் எழுதிய நெறிப்படி விளக்கிக் காட்டுகிறது என்பதை நிறுவுகிறது இக்கட்டுரை.
குறிச்சொற்கள்
ஒன்பது – ஒன்பான் – ஒன்பஃது – தொண்டு – தொண்ணூறு – தொள்ளாயிரம் – ஒன்று குறைந்த பத்து – தொள் .
முன்னுரை
தொல்காப்பியம் ஒன்பது எனும் எண்ணுப்பெயரை, ஒன்பது, ஒன்பான், ஒன்பஃது, தொண்டு எனக் குறிப்பிடுகிறது. ஆய்வறிஞர்கள் ஒன்பது என்பதை “ஒன்று குறைந்த பத்து” என்றும் “தொண்ணூறு” என்றும் பொருள் கொள்வதை அறியமுடிகிறது. இந்நிலையில் தொல்காப்பியம் குறிப்பிடும் ஒன்பது என்பதற்கான மதிப்பையும் அச்சொல்லின் பல்வேறு எடுத்துரைப்புகளையும் ஆராய்வதாக இக்கட்டுரை அமைகிறது. .
ஒன்பது
தொல்காப்பியம், 9 என்னும் எண்மதிப்பை ஒன்பது என்ற சொல்லால் குறிப்பதை,
“அப்பால் ஒன்பதும் அவற்றோ ரன்ன” (தொல்.சொல்.165:6),
“அவ்வகை ஒன்பதும் வினையெஞ்சு கிளவி” (தொல்.சொல்.223:3),
“ஒன்பதும் குழவியோ டிளமைப் பெயரே” (தொல்.பொருள்.545:4),
“இருபாற் பட்ட ஒன்பதின் துறைத்தே” (தொல்.பொருள்.75:24),
“உளவெனப் பட்ட ஒன்பதிற் றெழுத்தே” (தொல்.எழுத்.171:2),
என்னும் இடங்களில் காணமுடிகிறது.
தேவநேயப் பாவாணர், 9 என்பதற்கான சொல் தொண்டு என்றும், ஒன்பது எனும் சொல்லின்பொருள் முற்காலத்தில் 90 என்னும் மதிப்பில் வழங்கியது என்றும் குறிப்பிடுகிறார். இதனை, “தொண்டு + பத்து = தொண்பது – தொன்பது – ஒன்பது. ஒன்பது 90” என்பதால் அறியமுடிகிறது (இரா.இளங்குமரனார் (பதி.ஆ) 2004:187).
ஒன்பது என்பதில் உள்ள ஒன் என்பது ஒன்று எனவும் பது என்பது பத்து எனவும் கொள்ளப்பட்டு, ஒன்று குறைந்த பத்து என்பதாக ஒன்பது என்ற சொல் அமைவதைக் குறிப்பிடுகின்றார் சுந்தரசண்முகனார். நன்னூல் மயிலைநாதர் உரையும் ஒன்பது என்பதை ஒன்றூனமான பத்து என விளக்குகிறது.
“ஒன்றூனமான பத்து – ஒன்பது, அஃது அக்காலச் சொல்” என்பது மயிலைநாதர் உரை (நன்.எழுத்.193). “ஒன்று குறை பத்தின் சுருக்கமே ஒன்பது என்பதாகும்” என்பது சுந்தரசண்முகனார் விளக்கம் (புலவர் சுந்தர சண்முகனார் 1971:21).
ஒன்பான்
தொல்காப்பியம் 9 என்ற எண் மதிப்பை ஒன்பான் என்ற சொல்லால் சுட்டுவதை,
“ஒன்றுமுத லொன்பான் இறுதி முன்னர்” (தொல்.எழுத்.438:1),
“ஒன்பான் ஒகரமிசைத் தகரம் ஒற்றும்” (தொல்.எழுத்.445:1),
“ஒன்பான் முதனிலை முந்துகிளந் தற்றே” (தொல்.எழுத்.463:1),
“ஒன்பா னிறுதி உருபுநிலை திரியாது” (தொல்.எழுத். 459:1, 470:1),
“நூறென் கிளவி ஒன்றுமுத லொன்பாற்கு” (தொல்.எழுத்.472:1),
“ஒன்றுமுத லொன்பாற் கொற்றிடை மிகுமே” (தொல்.எழுத்.475:2),
“இரண்டுமுத லொன்பான் இறுதி முன்னர்” (தொல்.எழுத்.480:1)
என்னும் இடங்களில் காணமுடிகிறது. இங்கு ஒன்பான் எனக் குறிக்கப்பட்டாலும் அதனால் குறிக்கப்படும் மதிப்பும் சொல்லும் ஒன்பது என்பதே என்பதை அறியமுடிகிறது. இதனால், ஒன்பான் என்ற சொல் ஒன்பது என்ற சொல்லின் வடிவாகவே எடுத்தாளப்படுவது விளங்கும்.
ஒன்பஃது
தொல்காப்பியம் 9 என்னும் எண் மதிப்பை ஒன்பஃது எனச்சுட்டுவதை,
“னகரத் தொடர்மொழி ஒன்பஃதென்ப” (தொல்.எழுத்.82:2),
“ … எழுநூற் / றொன்பஃதென்ப உணர்ந்திசி னோரே” (தொல்.பொருள்.406:3-4)
என்னும் இடங்களில் காணமுடிகிறது.
எழுத்ததிகாரத்தில் இடம்பெறும் ஒன்பஃது எனும் சொல் குறித்து, இளம்பூரணர், “ஒன்பஃது என்னும் ஆய்தம் செய்யுள் விகாரம்” என்றும் நச்சினார்க்கினியர், “ஆய்தம் விகாரம்” என்றும் சுட்டுகின்றனர். தொல்காப்பியப் பொருளதிகாரத்தும் ஒன்பஃது எனும் சொல் காணப்படுகிறது. அவ்விடங்களில் ஆய்தம் செய்யுள் விகாரமா? என்பது குறித்து உரையாசிரியர்கள் குறிப்பிடவில்லை. எனினும் ஒன்பஃது என்பது ஒன்பது என்ற சொல் வடிவாகவே இடம்பெறுவதை அறியமுடிகிறது.
பஃது என முடியும் எண்கள்.
தொல்காப்பியம் குறிப்பிடும் எண்ணுப்பெயர்ப் புணர்ச்சிகளில் பஃது என முடியும் எண்ணுப்பெயர்களைக் காணமுடிகிறது.
ஒன்று முதலாக ஒன்பது வரையிலான எண்கள் பத்துடன் புணர்கின்ற பொழுது, வருமொழியாகிய பத்து என்பதன் இடைநின்ற தகர ஒற்றுக்கெட அவ்விடத்து ஆய்தம் வந்து பஃது என்றாகி, ஒருபஃது, இருபஃது, முப்பஃது, நாற்பஃது, ஐம்பஃது, அறுபஃது, எழுபஃது, எண்பஃது எனப்புணர்வதைத் தொல்காப்பியம் குறிக்கின்றது (எழுத்.390-91, 438-45).
நூறுடன் ஒன்று முதல் ஒன்பது வரையிலான எண்கள் நூற்றொன்று, நூற்றிரண்டு, நூற்றுமூன்று, நூற்றுநான்கு, நூற்றுஐந்து, நூற்றுஆறு, நூற்றுஏழ், நூற்றுஎட்டு, நூற்றுஒன்பது என்று புணர்கின்றன (தொல்.எழுத்.472), இந்நிலையில் நூறு என்பதுடன் பத்து, இருபது, முப்பது முதலான எண்கள் புணர்வதைத் தொல்காப்பியம்,
“அவையூர் பத்தினும் அத்தொழிற் றாகும்” (தொல்.எழுத்.473)
என்றுரைக்கிறது. இந்நூற்பாவிற்குச் சான்று தரும் இளம்பூரணர், “நூற்றொருபஃது, இருபஃது, முப்பஃது, நாற்பஃது, ஐம்பஃது, அறுபஃது, எழுபஃது, எண்பஃது என வரும்” என்றுரைக்கிறார். இதனால், பத்து என்பது ஈற்றில் வருகின்ற பொழுது, ஒருபஃது இருபஃது எனவும் நூற்றொருபஃது. நூற்றிருபஃது எனவும் ஆய்தம் பெற்று முடிவதைக்காணமுடிகிறது.
ஒருபஃது முதலான சொற்களுடன் ஒன்று முதல் ஒன்பது வரையிலான எண்கள் புணர்வதைத் தொல்காப்பியம் குறிப்பிடுகிறது.
ஒன்றுமுத லாகிய பத்தூர் கிளவி
ஒன்றுமுத லொன்பாற் கொற்றிடை மிகுமே
நின்ற ஆய்தங் கெடுதல் வேண்டும்” (தொல்.எழுத்.475)
என்றுரைக்கிறது. இங்கு, ஒருபஃது இருபஃது முதலான சொற்களே நிலைமொழிகளாக நின்று ஒன்று முதல் ஒன்பது வரையிலான எண்களுடன் புணர்கின்றன. இப்புணர்ச்சியில் ஒருபஃது எனும் நிலைமொழியின் ஆய்தம் கெட்டு ஒருபது, இருபது, முப்பது என்றாவதும் பெறப்படுகிறது.
தொல்காப்பியம் உருபியலில் ஒன்று முதலாகப் பத்தூர்ந்து வரும் சொற்கள் ஆன் சாரியை பெற்று முடிவதை,
ஒன்றுமுத லாகப் பத்தூர்ந்து வரூஉம்
எல்லா எண்ணுஞ் சொல்லுங் காலை
ஆனிடை வரினும் மான மில்லை
அஃதென் கிளவி ஆவயிற் கெடுமே
உய்தல் வேண்டும் பஃகான் மெய்யே” (தொல்.எழுத்.199)
என்றுரைக்கிறது. இச்சூத்திரத்தைச் சான்று காட்டி விளக்கும் நச்சினார்க்கினியர்,
“ஒருபஃது, இருபஃது, முப்பஃது, நாற்பஃது, ஐம்பஃது, அறுபஃது, எண்பஃது எனக் குற்றியலுகரப் புணரியலுள் விதிக்குமாறே நிறுத்தி, அஃதென்பதனைக் கெடுத்துப் பகரவொற்றை நிறுத்தி, ஆன்சாரியை கொடுத்து, ஒருபானை, இருபானை, என எல்லா எண்ணொடும் எல்லா உருபினையுஞ் செய்கையறிந்து ஒட்டுக. உம்மை எதிர்மறையாதலின் ஒருபஃதனை இருபஃதனை என எல்லாவற்றோடும் ஒட்டுக”
என்றுரைக்கிறார்.
இவற்றால், ஒருபஃது, இருபஃது என்று ஆய்தம் பெற்று அமைந்த எண்ணுப் பெயர்கள் புணர்ச்சியில் ஆய்தம இன்றிப் புணர்வதைக் காணமுடிகிறது.
9 எனும் மதிப்பை ஒன்பஃது எனக் குறிப்பதும் ஈற்றில் பத்து என முடிவுறும் எண்களில் ஒருபஃது இருபஃது முதலாகிய எண்கள் பஃது என முடிவதும் மேலும் கருதிப் பார்ப்பதற்குரியதாக உள்ளன.
தொண்டு
ஒன்பது என்பதைத் தொல்காப்பியம் தொண்டு எனவும் குறிப்பிடுகிறது. தொடைகளை விரித்துரைக்குமிடத்து,
“மெய்பெறு மரபின் தொடைவகை தாமே
ஐயீராயிரத் தாறைஞ் ஞூற்றொடு
தொண்டுதலை யிட்ட பத்துக்குறை யெழுநூற்
றொன்பஃதென்ப உணர்ந்திசி னோரே” (தொல்.பொருள்.406)
என்றுரைக்கிறது. இதனை, “வடிவு பெற்ற மரபினையுடைய தொடையினது பாகுபாடு பதின்மூவாயிரத் தறுநூற்றுத் தொண்ணூற்றொன்பது” என்று விளக்குவர் இளம்பூரணர். ஐயீராயிரம் (5 x 2000 = 10000), ஆறைஞ் ஞூற்றொடு (6 x 500 = 3000), தொண்டு தலையிட்ட பத்துக்குறை யெழுநூற்று ஒன்பஃது (699). ஆக இவற்றின் மொத்த மதிப்பு 13699 ஆகும். இவற்றுள் ஈற்றில் இருக்கும் எண் ஒன்பது என்பதாகும். இந்த ஒன்பது என்பதையே தொல்காப்பியம், “தொண்டு தலையிட்ட” என்றுரைக்கிறது. அதாவது ஒன்பதை ஈற்றில் உடைய என்றுரைக்கிறது. ஈற்றில் இடம்பெறும் எண்ணை, தலையிட்ட எனக் குறிப்பிட்டுச் சொல்வதைத் தொல்காப்பியத்துள் காணமுடிகிறது.
முப்பத்து மூன்று எழுத்துகளுள் இருபத்திரண்டு எழுத்துகள் மொழிமுதலாக வரும் என்பதைக் குறிப்பிடும் தொல்காப்பியம்,
“மூன்றுதலையிட்ட முப்பதிற் றெழுத்தின்
இரண்டுதலையிட்ட முதலா கிருபஃது” (தொல்.எழுத்.104:1-2)
என்றுரைக்கிறார். இவ்வாறே, உயர்திணை வினைமுற்றின் தொகை இருபத்து மூன்று என்பதை,
“பன்மையும் ஒருமையும் பாலறி வந்த
அந்நா லைந்தும் மூன்று தலையிட்ட
முன்னுறக் கிளந்த உயர்திணை யவ்வே” (தொல்.சொல்.205)
என்றுரைக்கிறார். இவ்விடங்களில் ஈற்றில் நிற்கும் எண், “தலையிட்ட” என்ற சொல்லுடன் கூறப்படுவதைக் காணமுடிகிறது. இவற்றுடன் “தொண்டு தலையிட்ட” (தொல்.பொருள்.406) என்பதை நோக்கும் போது, தொண்டு என்பது ஒன்பதைக் குறிப்பதாக அறியமுடிகிறது.
ஒன்பது என்பதைத் தொண்டு எனக் குறிப்பிடும் பிற பதிவுகளையும் காணமுடிகிறது. “தொடித் திரிவன்ன தொண்டுபடு திவவின்” (மலைபடு.21), “ஆறென ஏழென, எட்டெனத் தொண்டென” (பரிபாடல்.3:79), “தொண்டிருந் துன்பம் தொடரும்” (ஏலாதி.72), எனும் இடங்களிலும் ஒன்பது தொண்டு என்னும் சொல்லால் குறிக்கப்படுகிறது.
தேவநேயப் பாவாணார், “ஒன்பதிற்கு முதலாவது வழங்கின பெயர் தொண்டு என்பது” என்றுரைக்கிறார் (இரா.இளங்குமரனார் (பதி.ஆ) 2004:187).
தொண்டு – ஒன்பது
ஒன்பது என்பதை முதலில் தொண்டு என்றே குறித்தனர் எனக் குறிப்பிடும் தேவநேயப் பாவாணா், பிறகு அச்சொல் உலக வழக்கிழந்ததையும் அந்த இடத்திற்கு ஒன்பது எனும் பெயர் வந்ததையும் விளக்குகிறார்.
“தொண்டு என்னும் பெயர் எங்ஙனமோ தொல்காப்பியர் காலத்தில் உலக வழக்கற்றது. ஆயினும் செய்யுள் வழக்கில் இருந்தது…. தொண்டு என்னும் ஒன்றாம் தானப்பெயர் மறையவே பத்தாம் தானப் பெயர் ஒன்றாம் தானத்திற்கும் நூறாம் தானப்பெயர் பத்தாம் தானத்திற்கும் ஆயிரத்தாம் தானப்பெயர் நூறாம் தானத்திற்கும் கீழிறங்கி வழங்கத் தலைப்பட்டன. பின்பு ஆயிரத்தாம் தானத்திற்கு ஒன்பதாயிரம் என்ன வேண்டியதாயிற்று. சொற்படி பார்ப்பின் ஒன்பதினாயிரம் 90 x 1000 = 90000 ஆகும்” (இரா.இளங்குமரனார் (பதி.ஆ) 2004:187).
இதனால் தொண்டு என்பதன் மதிப்பு 9, ஒன்பது என்பதன் மதிப்பு 90, தொண்ணூறு என்பதன் மதிப்பு 900, தொள்ளாயிரம் என்பதன் மதிப்பு 9000, என இருந்தது, பிறகு தொண்டு என்பது மறைந்த நிலையில் பிற எண்ணுப்பெயர்கள் முறையே கீழிறங்கிக் குறிக்கலாயின என்றுரைக்கிறார். அவ்வாறு கீழ் இறங்கிய நிலையில் 9000 என்பதை ஒன்பதினாயிரம் என்ற சொல் குறிக்கலாயிற்று என்றுரைக்கிறார்.
ஒன்பது என்பது 90 எனும் மதிப்புடைய எண்ணுப்பெயர் என்பது தேவநேயப் பாவாணர் கருத்து. இதனை விளக்கும் தேவநேயப் பாவாணர், “தொண்டு + பத்து = தொண்பது – தொன்பது – ஒன்பது. ஒன்பது 90. என்றுரைக்கிறார். (இரா.இளங்குமரனார் (பதி.ஆ) 2004:187). ஒன்று முதலான எண்கள் பத்துடன் புணர்கின்ற பொழுது. பத்து என்பதன் தகர ஒற்றுக்கெட்டு, அங்கு ஆய்தம் வந்து ஒருபஃது, இருபஃது. முப்பஃது என்றவாறு புணரும் என்பதைத் தொல்காப்பியம் சுட்டுகிறது. அவ்வாறாயின்,தொண்டு என்பதுடன் பத்து புணர்கின்ற பொழுதும் வருமொழியாகிய பத்து என்பது பஃது என்றாகி, தொண்பஃது எனப் புணர வேண்டும், அவ்வாறு வராமல், தொண்பது என்றாகியிருக்கிறது.
ஒருபஃது, இருபஃது எனும் சொற்கள் நிலைமொழியாய் நின்று வருமொழியுடன் புணர்கின்ற பொழுது ஒருபது, இருபது எனப் புணர்வது இதனுடன் ஒப்புநோக்குதற்குரியதாகும்.
சொல்லமைப்பும் புணர்ச்சிவிதியும்
ஒன்பது என்னும் சொல் தனிமொழியான சொல் அல்ல என்பதும் அச்சொல் ஒன்று + பத்து எனும் இரண்டு சொற்கள் இணைந்தது என்றுரைக்கும் தேவநேயப் பாவாணர், தொண்பது – தொன்பது என்பதில் உள்ள முதன்மெய் நீங்கி ஒன்பது என்றாகியதையும் தெலுங்கில் முதன்மெய் நீங்காது தொனுமிதி என்று வழங்குவதையும் சுட்டிக்காட்டித் தொல்காப்பியம் குறிப்பிடும் புணர்ச்சிவிதிகளை மறுத்துரைக்கிறார்.
“ஒன்று முதல் பத்துவரை ஏனை யெண்ணுப் பெயர்களெல்லாம் தனி மொழிகளாகவும் ஒன்பது மட்டும் தொடர்மொழியாயும் இருத்தல் காண்க. தொன்பது என்னும் பெயரே முதன்மெய் நீங்கி ஒன்பது என வழங்கும். தெலுங்கில் முதன்மெய் நீங்காது தொனுமிதி எனவே வழங்குகின்றது. சொற்கள் எங்ஙனம் நிலைமாறினும் புணர்ச்சி செய்யுங்கால் சொற்றொடர்ப்படியே செய்ய வேண்டும். அஃதன்றி ஒன்பது + பத்து = தொண்ணூறு. ஒன்பது + நூறு = தொள்ளாயிரம் எனப் புணர்த்து விகார விதியுங் கூறுதல் புணரியலொடு மாறுபடுவதொன்றாம்” (இரா.இளங்குமரனார் (பதி.ஆ) 2004:187,188).
இக்கூற்றால், தொல்காப்பியம் குறிப்பிடும் புணர்ச்சிவிதி மறுக்கப்படுவது விளங்கும். எனினும், தொல்காப்பியம் குறிப்பிடும் புணர்ச்சிவிதிகள் சரியென்பதற்கான சிந்தனைகளைக் கீழ்வருமாறு முன்வைக்கலாம்.
ஒன்பது x பத்து = தொண்ணூறு
தொண்ணூறு எனும் எண்ணுப் பெயர், தொண்டு + நூறு = தொண்ணூறு, என்றிருக்க வேண்டும் என்பது பாவாணர் கருத்து, ஆனால் தொல்காப்பியம் ஒன்பது + பத்து = தொண்ணூறு என்றாவதைக் குறிப்பிடுகிறது. கணக்கியல் முறைப்படி தொல்காப்பியர் கூற்றே சரியென்பதைத் தொல்காப்பிய விதிகளை கணக்கியல் முறைப்படிக் காணும்பொழுது அறிந்துகொள்ளமுடிகிறது.
ஒன்று முதல் ஒன்பது வரையிலான நிலைமொழிகளுடன் பத்து எனும் வருமொழி வந்து புணர்வதைத் தொல்காப்பியம் கீழ்வருமாறு சுட்டுகிறது.
ஒன்று முதல் ஒன்பது வரையிலான எண்களின் நிலைமொழிக் குற்றியலுகரம் மெய்யுடன் கெட்ட போதும், ஆறு எனும் எண்ணில் மட்டும் குற்றியலுகரம் மெய்யுடன் கெடுவதில்லை (438). வருமொழியில் நின்ற பத்து என்பதன் தகர ஒற்றுக் கெட அவ்விடத்து ஆய்தம் வந்து பஃது என்றாகிறது (438).
நிலைமொழியில் குற்றியலுகரம் மெய்யுடன் கெட்டு ஒன், இரண் என நிற்க, ஒன் என்பதன் னகர ஒற்று ரகரமாகி அதனுடன் உகரமும் சேர்ந்து ஒரு என்றாகிறது (439). அவ்வாறே இரண் என நிற்கும் நிலைமொழியின் ணகர ஒற்று ரகரமாகி அதனுடன் உகரமும் சேர்ந்து இரரு என்றாகி, பின்பு இடைநின்ற ரகரமாகிய உயிர்மெய் நிலைபெறாது இரு என்றாகிறது (439, 440).
நிலைமொழியில் நின்ற மூன்று ஆறு எனும் சொற்கள் 438 ஆவது நூற்பாவில் கூறியவாறு, மூன், ஆறு என நிற்கின்றன. இந்நிலையில் இந்த இரு எண்களின் முதல் எழுத்துகளும் குறுகி, முன் எனவும் அறு (அறுபஃது) எனவும் மாற்றமடைகின்றன. அந்நிலையில் முன் என்பதில் உள்ள ஒற்று வருமொழிப் பகரத்திற்கு ஏற்ப பகரமாகி முப்பஃது எனப் புணர்கிறது. (441).
நான்கு என்பதன் குற்றியலுகரம் மெய்யுடன்கெட்டு நான் என நின்ற நிலையில் அதன் னகர ஒற்று றகர ஒற்றாகி நாற்பஃது எனப் புணர்கிறது (442).
ஐந்து என்பதில் உள்ள குற்றியலுகரம் மெய்யுடன் கெட்டு ஐந் என நின்றநிலையில் அதன் நகர ஒற்று மகர ஒற்றாகி ஐம்பஃது எனப் புணரும் (443).
ஏழ் எனும் நிலைமொழி, பத்துடன் புணர்வது 434, 438 எனும் நூற்பாக்களால் எடுத்துரைக்கப்படுகிறது. எனினும் தொல்காப்பியம் வகுத்துக்கொண்ட இயல் வைப்பு முறைக்கு ஏற்ப ஏழ் என்பது குற்றியலுகரச் சொல்லாகாத காரணத்தாலும் புள்ளியீற்றை உடைய சொல்லாக இருக்கும் காரணத்தாலும். ஏழ் என்பதன் புணர்ச்சி விதியைப் புள்ளி மயங்கியலில் குறிப்பிடுகிறார்.
ஏழ் எனும் நிலைமொழியுடன் அளவு, நிறை, எண் எனும் பெயர்கள் புணர்கின்ற பொழுது, நிலைமொழி, குறுகலும் ஈற்று மெய்யுடன் உகரம் வருதலும் உண்டு (390). அந்நிலையில் ஏழ் என்பது எழு என்றாகும். இந்நிலையில் பத்து என்பதன் இடையில் நின்ற ஒற்று கெட அவ்விடத்து ஆய்தம் வருகிறது (391). இதனால், ஏழ் + பத்து என்பது எழுபஃது என்று புணர்கிறது.
எழுபஃது என்பதற்கான புணர்ச்சிவிதி ஒன்று முதல் ஒன்பது வரையிலான எண்கள் பத்துடன் புணர்வதுடன் ஒன்று பட்டு அமைகின்றது. ஆனாலும் இயல் வைப்புமுறை நோக்கி எழுபஃது என்பதன் புணர்ச்சி தொல்காப்பிய புள்ளி மயங்கியலில் இடம்பெறுகிறது. புள்ளிமயங்கியலில் கூறப்பட்டடிருந்த போதும், புணர்ச்சி ஒற்றுமை கருதி குற்றியலுகரப் புணரியலிலும் ஏழ் என்பதனை அடக்கி, ஒன்று முதல் ஒன்பான் என ஏழையும் இணைத்தே குறிப்பிடுகிறார் தொல்காப்பியர். (438).
எட்டு என்பதன் நிலைமொழிக் குற்றியலுகரம் மெய்யுடன் கெட்டு எட் என நின்றநிலையில் அதன் டகர ஒற்று ணகர ஒற்றாகி எண்பஃது எனப் புணரும் (444).
ஒன்பது எனும் நிலைமொழியுடன் பத்து புணர்கின்றபொழுது. நிலைமொழிக் குற்றியலுகரம் மெய்யுடன் கெட்டு ஒன்ப என நிற்கவும் வருமொழி பஃது என நிற்கிறது. இந்நிலையில் ஒன்ப என்பதில் உள்ள ஒகரத்துடன் தகர ஒற்றுப் பொற்று தொன்ப என்றாகிறது. பிறகு தொன்ப என்பதில் உள்ள னகர ஒற்று ணகர ஒற்றாகி இரட்டிக்கிறது. பஃது என நின்ற வருமொழியின் இடையில் நின்ற ஆய்தம் கெட, தொண்ண்ப + பது, என நிற்கிறது. பின்பு நிலைமொழி ஈற்றில் உள்ள பகரமும் வருமொழி முதலில் நின்ற பகரமும் கெடுகிறது. இதனை ஆய்த பகரம் கெட என்கிறது தொல்காப்பியம். இதனால் தொண்ண் + து என நிற்க இடையில் ஊகாரக்கிளவி வந்து, ஈற்றில் நின்ற து என்பதில் உள்ள தகரம் றகரமாகி தொண்ணூறு எனப் புணர்கிறது (445). மேற்சுட்டிய புணர்ச்சிகளைத் தொல்காப்பியம்,
“ஒன்றுமுத லொன்பான் இறுதி முன்னர்
நின்ற பத்த னொற்றுக்கெட ஆய்தம்
வந்திடை நிலையும் இயற்கைத் தென்ப
கூறிய இயற்கைக் குற்றிய லுகரம்
ஆற னிறுதி அல்வழி யான” (தொல். எழுத்.438)
“முதலீ ரெண்ணினொற்று ரகரம் ஆகும்
உகரம் வருதல் ஆவயி னான” (தொல். எழுத்.439)
“இடைநிலை ரகரம் இரண்டென் எண்ணிற்கு
நடைமருங் கின்றே பொருள்வயி னான” (தொல். எழுத்.440)
“மூன்றும் ஆறும் நெடுமுதல் குறுகும்
மூன்றன் ஒற்றே பகாரம் ஆகும்” (தொல். எழுத்.441)
“நான்க னொற்றே றகாரம் ஆகும்” (தொல். எழுத்.442)
“ஐந்தன் ஒற்றே மகாரம் ஆகும்” (தொல். எழுத்.443)
“அளவும் நிறையும் எண்ணும் வருவழி
நெடுமுதல் குறுகலும் உகரம் வருதலும்
கடிநிலை யின்றே ஆசிரி யர்க்க” (தொல். எழுத்.390)
“பத்தென் கிளவி ஒற்றிடை கெடுவழி
நிற்றல் வேண்டும் ஆய்தப் புள்ளி” (தொல். எழுத்.391)
“எட்டன் ஒற்றே ணகாரம் ஆகும்” (தொல். எழுத்.444)
“ஒன்பான் ஒகரமிசைத் தகரம் ஒற்றும்
முந்தை ஒற்றே ணகாரம் இரட்டும்
பஃதென் கிளவி யாய்தபக ரங்கெட
நிற்றல் வேண்டும் ஊகாரக் கிளவி
ஒற்றிய தகரம் றகாரம் ஆகும்” (தொல். எழுத்.445)
எனச்சுட்டுகிறது. இப்புணர்ச்சி விதிகளின்படி இவ்வெண்கள் எழுதப்படும் முறையும் அதற்கான எண்ணுப்பெயரும் ஒரே நிரலாக அமைவதைக் காணமுடிகிறது. இதனைக் கீழ்வரும் அட்டவணை விளக்கும்.
| புணர்ச்சி மொழிகள் | புணர்ச்சி மாற்றங்கள் | எண்ணுப்பெயர்கள் வரிவடிவம் | எண்மதிப்புகள் |
| ஒன்று + பத்து | ஒன் + பஃது (438) ஒரு + பஃது (439) | ௰/௧௰ – ஒருபஃது | 1 x 10 = 10 |
| இரண்டு + பத்து | இரண் + பஃது (438) இரரு + பஃது (439) இரு + பஃது (440) | ௨௰ – இருபஃது | 2 x 10 = 20 |
| மூன்று + பத்து | மூன் + பஃது (438) முப் + பஃது (441) | ௩௰ – முப்பஃது | 3 x 10 = 30 |
| நான்கு + பத்து | நான் + பஃது (438) நாற் + பஃது (442) | ௪௰ – நாற்பஃது | 4 x 10 = 40 |
| ஐந்து + பத்து | ஐந் + பஃது (438) ஐம் + பஃது (443) | ௫௰ – ஐம்பஃது | 5 x 10 = 50 |
| ஆறு + பத்து | ஆறு + பஃது (438) அறு + பஃது (441) | ௬௰ – அறுபஃது | 6 x 10 = 60 |
| ஏழ் + பத்து | எழு + பத்து (390) எழு + பஃது (391) | ௭௰ – எழுபஃது | 7 x 10 = 70 |
| எட்டு + பத்து | எட் + பஃது (438) எண் + பஃது (444) | ௮௰ – எண்பஃது | 8 x 10 = 80 |
| ஒன்பது+ பத்து | ஒன்ப + பஃது (438) தொன்ப + பஃது தொண்ண்ப + பஃது தொண்ண்ப + பது தொண்ண் + து தொண்ண் + ஊ து (த்+ உ ) தொண்ண் + ஊ று (ற் + உ) (445) | ௯௰ – தொண்ணூறு | 9 x 10 = 90 |
மேற்சுட்டிய அட்டவணையில் எண்களின் மதிப்பும் எண்கள் ஒன்றுடன் ஒன்று தொடர்ந்து எழுதப்படும் முறையும் கவனிக்கத்தக்கது. இரண்டு எண்களின் பெருக்கல் மதிப்பாக ஒருபஃது முதலான எண்களின் மதிப்பு அமைகிறது. இந்நிலையில் ஒன்பதுடன் பத்து பெருக்கல் மதிப்பில் தொண்ணூறு என்ற எண்மதிப்பு வருகின்றது. எனவே தொண்ணூறு என்பது ஒன்பதுடன் பத்து எனும் எண்ணுப் பெயர் பெருக்கல் மதிப்பில் இணைந்த எண்ணுப் பெயர் என்பதும் அதனடிப்படையில் ஒன்பது + பத்து என்பதே தொண்ணூறு என்னும் மதிப்பைச் சுட்டுவதற்கான சொற்சேர்க்கை என்பதும் விளங்கும்.
தேவநேயப்பாவாணர், நூறு என முடிவதால் அதன் எண்மதிப்பு நூறாக இருக்க வேண்டும் எனக் கருதுகின்றார்.
பத்தின் வரிசையில் உள்ள 90 என்பதை நூற்றின் வரிசைப் பெயராக, தொண்ணூறு எனச் சுட்டுவது இச்சிக்கலுக்குக் காரணமாக அமைகிறது. இவ்வாறு அழைப்பது ஒரு சுவையான வழக்காறு என்பதை,
“இரண்டு பத்துக்களை இருபது என்றும் ஏழு பத்துக்களை எழுபது என்றும் கூறும் மக்கள் ஒன்பது பத்து என்பது நூறை நெருங்கிவிட்டதால் குறைந்த நூறு என்னும் பொருளில் அதனைத் தொண்ணூறு (தொள் + நூறு) எனக் கூறுவது ஒருவகைச் சுவையான வழக்காறாகும்” (புலவர் சுந்தரசண்முகனார் 1971:23)
என்றுரைக்கின்றனர்.
(இந்த ஆய்வுக்கட்டுரையின் தொடர்ச்சியைப் படிக்க இங்கே சொடுக்கவும்.)

Leave a comment