நச்சினார்க்கினியரின் உரைமேற்கோள்கள்

வீ.ரமேஷ்குமார்,

முனைவர்ப்பட்ட ஆய்வாளர், தமிழ்த்துறை & ஆய்வுமையம், அரசுக்கல்லூரி, சித்தூர், பாலக்காடு

நச்சினார்க்கினியரின் உரைமேற்கோள்கள்

      நச்சினார்க்கினியர் தொல்காப்பியம் எழுத்து, சொல் அதிகாரங்கள் முழுமைக்கும், பொருளதிகார முன் ஐந்தியல்களுக்கும் உரை எழுதியுள்ளார். அதில், எழுத்ததிகார உரையில் எடுத்தாளப்பட்டுள்ள மேற்கோள்களைத் தொகுத்து ஆராய்கிறது இக்கட்டுரை.

“பாரத்தொல் காப்பியமும் பத்துப்பாட் டுங்கலியும்

ஆரக் குறுந்தொகையுள் ஐஞ்ஞான்கும் – சாரத்

திருத்தகு மாமுனிசெய் சிந்தாமணியும்

விருத்திநச்சி னார்க்கினிய மே.” (2017:XCII)

என்ற பழம்பாடல், அவர் உரை எழுதிய நூல்களைக் குறிப்பிடுகின்றது. அவற்றுள், தொல்காப்பியப் பொருளதிகாரப் பின்னான்கியல்களும், குறுந்தொகையின் இருபது பாடல்களுக்கும் நச்சினார்க்கினியர் எழுதிய உரைப் பகுதிகள் இன்று கிடைக்கவில்லை.

இலக்கண நூலுக்கு இலக்கிய நெஞ்சம் கொண்டு

உரை எழுதுவதிலும், இலக்கிய நூலுக்கு இலக்கண

நெறி நின்று உரை வகுப்பதிலும் வல்லவர்

நச்சினார்க்கினியர். (1985:371)

என, நச்சினார்க்கினியரின் உரை நயத்தைக் குறிப்பிடுகிறார் இரா.மோகன். இலக்கண நூல்களுக்கு இலக்கிய மேற்கோள்களும், இலக்கிய நூல்களுக்கு இலக்கண மேற்கோள்களும் காட்டுகிறார். நச்சினார்க்கினியர் மேற்கோள் காட்டியுள்ள 83 நூல்களின் பெயர்ப் பட்டியலை உ.வே.சா., ‘பத்துப்பாட்டு மூலமும் நச்சினார்க்கினியருரையும்’ என்னும் நூலில் தந்துள்ளார் (2017:VIII – IX).

எழுத்ததிகார உரையில் இருபத்தைந்து நூல்களை மேற்கோள்காட்ட பயன்படுத்தியுள்ளார். சங்க இலக்கியத்தில் பதினான்கு நூல்கள், நீதி நூல்கள் மூன்று, காப்பியங்கள் மூன்று, இலக்கண நூல்கள் மூன்று, தொகை நூலான முத்தொள்ளாயிரம், சைவத் திருமுறைகளில் எட்டாவது திருமுறையான திருக்கோவை ஆகிய நூல்களைப் பயன்படுத்தியுள்ளார்.

483 நூற்பாக்களுடைய எழுத்ததிகாரத்தில், 59 நூற்பாக்களின் விளக்கப் பகுதிகளுக்கு இந்நூல் தொடர்களை 124 இடங்களில் பயன்படுத்தியுள்ளார்.

  • முன்பின் சூத்திரங்களை மாட்டேறு, கொண்டுகூட்டல் உத்தி முறையில் இணைத்து விளக்கம் தருகிறார்.
  • பல மேற்கோள் தொடர்களை, அவை எந்த நூலிலிருந்து எடுக்கப்பட்டன எனக் குறிப்பிடுவதில்லை. (சான்றாக:- நூ: 204, 232, 237, 363 உரைப் பகுதிகள்).
  • புதிய உதாரணம் தரமுடியாத இடங்களில் முன்னோர் சான்றுகளையே பயன்படுத்துகிறார்.

இவை, நச்சினார்க்கினியரின் உரை இயல்புகளாகும். பிற நூல் தொடர்களை மேற்கோள்களாகப் பயன்படுத்துவதை உவமைபட விளக்குதல், சமயப் பதிவுகளை விளக்கத்தில் கொண்டுவருதல், பிற்கால இலக்கண மாற்றங்களை விளக்குதல், இளம்பூரணரை மறுத்தல், நுட்பமான உரை விளக்கம், சான்றொற்றுமை பகுதி என வகைப்படுத்தலாம்.

உவமைப்பட விளக்குதல்

      தொல்காப்பியப் பாயிர உரையில், பாயிரத்தின் இன்றியமையாமையை “அப்பாயிரந்தான், தலையமைந்த யானைக்கு வினையமைந்த பாகன்போலவும், ‘அளப்பரிய ஆகாயத்திற்கு விளக்கமாகிய ஞாயிறும் திங்களும் போலவும்” என்றும், பாயிரம் கேட்காது நூல் கற்கும்போது மாணவன் இடர்படுவான் என்பதற்கு, “குன்று முட்டிய குரீஇப் போலவும், ‘குறிச்சிபுக்க மான் போலவும்” என்ற உவமைகள் வாயிலாக விளக்குகிறார். மாத்திரை நீண்டு ஒலிக்கும் விதியைக் கூறும் சூத்திரத்தில் (நூ:6),

“கோட்டுநூறும் மஞ்சளுங் கூடியவழிப் பிறந்த செவ்வண்ணம்

போல நெடிலுங் குறிலுங் கூடிய கூட்டத்துப் பிறந்த பின்னர்ப்

பிளவுபடா வோசையை அளபெடையென்று ஆசிரியர் வேண்டினார்.

இவை கூட்டிச் சொல்லிய காலத்தல்லது புலப்படா, எள்ளாட்டியவழி

யல்லது எண்ணெய் புலப்படாவாறு போல என்று உணர்க.”(2003:80)

என்றும், உயிரெழுத்துக்களைத் தொகுத்துக் கூறும் சூத்திர உரையில் (நூ:8), அகர முதல எனும் குறளை மேற்கோள்காட்டி,

“இறைவன் ஒன்றேயாய் நிற்குந் தன்மையும் பல்லுயிர்க்கும்

தானேயாய் அவற்றின் அளவாய் நிற்கும் தன்மையும் போல.”(2003:81)

என்றும், உயிர்மெய் எழுத்துகளுக்கு அளவுகூறும் சூத்திர உரையில் (நூ:10),

“ஆயின் ஒன்றரை மாத்திரையும் இரண்டரை மாத்திரையும்

உடையன ஒரு மாத்திரையும் இரண்டு மாத்திரையும்

ஆயவாறு என்னையெனின், நீர் தனித்து அளந்துழியும் நாழியாய்

அரைநாழியுப்பிற் கலந்துழியுங் கூடி ஒன்றரை நாழியாய்

மிகாதவாறு போல்வதொரு பொருட்பெற்றி என்று

கொள்வதல்லது காரணங் கூறலாகாமை உணர்க.”(2003:83)

என்றும் உவமைப்பட விளக்குகிறார்.

சமயப் பதிவுகள்

      முதல் குறளை சூத்திரம்- 8ல் மேற்கோள்காட்டி உவமையாக இறைவன் என்ற சொல்லைச் சுட்டி, எல்லாமுமாக கடவுள் இருப்பார் எனும் அவைதிக நெறியைப் பதிவுசெய்கிறார். இதே குறளை, தனிமெய்களை அகரம் இயக்கும் எனும் சூத்திர உரையில் (நூ:46),

“என்னுங் குறளான் அகரமாகிய முதலையுடைய எழுத்துக்க

ளெல்லாம்; அதுபோல இறைவனாகிய முதலையுடைத்து உலகமென

வள்ளுவனார் உவமை கூறியவாற்றானும், கண்ணன் ‘எழுத்துக்களில்

அகரமாகின்றேன் யானே’ எனக் கூறியவாற்றானும், பிற

நூல்களானும் உணர்க.”(2003:103)

என்றும், திருச்சிற்றம்பலம், பெரும்பற்றப் புலியூர் ஆகிய சிவனின் கோவில்கள் உள்ள இடப்பெயர்களை ஆறெழுத்து ஒருமொழிக்கும், ஏழெழுத்து ஒருமொழிக்கும் சான்றுகாட்டிச் சமயச் சொல்லாடல்களைப் பதிவுசெய்கிறார்.

பிற்கால இலக்கண மாற்றம்

      ஞகாரம் ஆ,எ,ஒ உயிர்களோடு இணைந்து மொழிக்கு முதலில் வரும் (நூ:64) சூத்திர விளக்கப் பகுதியில், ஞகாரம் அகரத்தோடு இணைந்து மொழிமுதலாக வந்துள்ளதை,

            ‘ஞமலி தந்த மனவுச்சூ லுடும்பு’ (பெரும்பாண்.132)

காட்டி அதனை, திசைச்சொல் என்றும் வரையறுக்கிறார். இரண்டாம் வேற்றுமை உருபு திரிபுகளை (நூ:157) வரையறுக்கும் சூத்திர உரையில், ‘உயர்திணை மருங்கின் ஒழியாது வருதலும்’ எனும் வரையறைக்கு,

‘மழவரோட்டிய’ (அகம்.1)

அவற்கண் டெம்முள்’ (அகம்.48)

என்ற தொடர்களில் ‘ஐ” ஒழிந்து வருவதைச் சான்றுகாட்டுகிறார். இது அவருடைய நுண் வாசிப்பை வெளிக்காட்டுகிறது. இதுபோல, ஓகார இறுதி ஒன் சாரியைப் பெற்றுவரும் (நூ:180) என்ற வரையறைக்கு, இன் சாரியையும் பெற்றுவரும் என்பதற்கு,

            ‘ஒன்றாது நின்ற கோவினை யடக்க வந்து’ (சீவக.316)

என்ற செய்யுளை சான்றுகாட்டுகிறார். உகர சுட்டு வேற்றுமையில் வரும்போது, வல்லெழுத்து வந்தால் ஒற்றுமிகாது (நூ:263) என்ற விதியிருக்க, ‘உதுக்கண்’ (அகம்.4) என்ற இடத்தில் ஒற்று மிகுவதைச் சுட்டுகிறார்.

      இவ்வாறு விதிகளைக் கடந்த சொற்கள் செய்யுள்களில் வந்துள்ளதை மட்டும் எடுத்துக் காட்டுகிறார். அதன்மீதான எந்த கருத்துக்களையும் உரைப் பகுதியில் கூறுவதில்லை. வேறு எந்த வகையிலும் இதனை விவாதிக்காது ஏன்? என்பதை,

“தமிழ் உரைமரபில் எந்த இடத்திலும் மூல ஆசிரியனுக்குக்

கொடுக்கப்பட்ட அதிமுக்கியத்துவம் மறுக்கப்பட்டதற்குச்

சான்றுகள் இல்லை. அதாவது தான் உரையெழுத எடுத்துக்

கொண்ட பிரதியை (அ) பிரதியாசிரியரை மறுதலித்து உரை

கூறுவதில்லை. சொல்லுக்கும் அர்த்தத்திற்கும் உள்ள இடை

வெளியைப் பயன்படுத்தித் தன்னுடைய எல்லாவிதமான

கருத்துக்களையும் பிரதிலேற்றி அது பிரதியின் அர்த்தம்தான்

எனக் கூறுவர்.” (2008:42)

அ.சதீஷ் கூற்றுவழி புரிந்துகொள்ளமுடிகிறது.

இளம்பூரணரை மறுத்தல்

      இளம்பூரணர், சேனாவரையர், பேராசிரியர் மூவரும் நச்சினார்க்கினியர் காலத்துக்கும் முந்தைய உரையாசிரியர்களாவர். சேனாவரையரும் பேராசிரியரும் தொல்காப்பிய எழுத்ததிகாரத்துக்கு உரை எழுதவில்லை. எனவே எழுத்ததிகார மறுப்புரை என்பது நச்சினார்க்கினியரைப் பொறுத்தவரை இளம்பூரணரை மறுப்பதாகவே அமைகிறது. மறுக்குமிடங்களை, பெயர் சுட்டாது மறுத்தல், அவர்காட்டிய மேற்கோளைக் காட்டி மறுத்தல் என வகைப்படுத்தலாம்.

சாரியைகளின் பெயரும் முறையும் கூறுமிடத்தில் (நூ:119) இளம்பூரணர்,

எடுத்த நறவின் குலையலங் காந்தள்’ (கலி.40) என்புழி

அலம் என்பதொரு சாரியையும் உண்டாலெனின், அதனை

அலங்கு காந்தள் என்பதன் விகாரமென்ப’. (2003:119)

என்று விளக்க, அதே மேற்கோளைக் காட்டி நச்சினார்க்கினியர்,

            ‘இது வினைத்தொகை; சாரியை அன்று’ (2003:143)

என்று பெயர் குறிப்பிடாது மறுக்கிறார். இகர ஈற்று உயர்திணைப் பெயர் திரிந்து முடியும் இடங்களைக் கூறும் சூத்திரத்துக்கு (நூ:154) இளம்பூரணர், ‘எட்டிப்பூ, காவிதிப்பூ’ ஆகிய சொற்களை உதாரணமாகத் தருகிறார். இச்சூத்திர உரையில் நச்சினார்க்கினியர், ‘எட்டி மரம் அல்ல, தேயவழக்காகிய சிறப்புப் பெயர்’ என்று விளக்கி,

              ‘எட்டி குமர னிருந்தோன் றன்னை’ (மணிமே.4:58)

என்ற தொடரைச் சான்றுகாட்டுகிறார். இளம்பூரணர், ‘மன்னிய பெரும நீ’ (புறம்.91) என்ற தொடரை மேற்கோளாகப் பயன்படுத்துகிறார் (நூ:210). இதனை நச்சினார்க்கினியர்,

ஏவல் கண்ணிய’ என்பதனான் ஏவல் கண்ணாததும்

உளதென்று கூறி ‘மன்னிய பெரும நீ’ (புறம்.91) என

உதாரணங் காட்டுகவெனின், அது பொருந்தாது;

கூறுகின்றான் அவன் நிலைபெற்றிருத்தல் வேண்டுமென்றே

கருதிக் கூறதலின் அதுவும் ஏவல் கண்ணிற்றேயாம்.” (2003:203)

என்று கூறி, நுட்பமாக விளக்குகிறார். பல சூத்திர உரைகளில், மேற்கோள்களாகக் கொடுக்கப்படும் சொற்களுக்கு வேறு இலக்கணக் குறிப்புகளைத் தந்தும் இளம்பூரணரை மறுக்கிறார்.

நுட்பமான உரை

      தொல்காப்பியச் சூத்திரங்களில் வரும், தொகுத்துச்சுட்டும் சொற்களான ‘பிறவும், இன்ன பிறவும் மற்றும் புறனடை சூத்திரங்கள், உரையாசிரியர்களின் புலமையைக்காட்ட இடமளிக்கின்றன. அப்பகுதிகளுக்கு மொழியில் ஏற்பட்ட மாற்றம், இலக்கணத்தில் ஏற்பட்ட மாற்றங்களை உள்வாங்கி, நுட்பமாக விளக்குகின்றனர்.

      ‘பொன்’ எனும் பெயர்ச்சொல் செய்யுளில் எவ்வாறெல்லாம் வரும் என்று வரையறுக்கும் சூத்திரத்தில் (நூ:356) உள்ள ‘தொடரியலான” என்ற வரிக்கு விளக்கம் தரும் நச்சினார்க்கினியர்,

வன்கணத்துக்கண்ணும் லகரம் நிற்க, மகரம்

வல்லெழுத்திற்கேற்ற மெல்லெழுத்தாகத் திரிதல்

கொள்க. ‘பொலங்கலஞ் சுமந்த பூண்டாங் கிளமுலை’

(அகம்.16), ‘பொலஞ்சுட ராழி பூண்ட தேரே’, ‘பொலந்தார்க்

குட்டுவன்’ (புறம்.343) என வரும். இன்னும் இதனானே,

‘பொலநறுந்தெரியல்’ (புறம்.29), ‘பொலமல ராவிரை’ (கலி.138)

என்றாற் போல மகரங்கெட்டுப் பிறகணத்து முடிதலுங்கொள்க.” (2003:274)

என்று விரிவாக, மறைந்துள்ள கருத்துக்களை செய்யுள் உதாரணங்களோடு விளக்குகிறார். புள்ளி மயங்கியலுள் எஞ்சி நின்ற செய்யுள் முடிவுகளை வரையறுக்கும் சூத்திரத்திற்கு (நூ:481) ஆறு நூல்களில் இருந்து பதினொரு மேற்கோள்களைக் காட்டுகிறார். அகநானூறில் இருந்து ஐந்து செய்யுள்களை இந்நூற்பா விளக்கத்திற்கு சான்றுகாட்டுகிறார்.

இச்சூத்திரத்தில் வரும் ‘அன்னமரபின் மொழியிடை’ என்ற தொடரை விளக்கும் பகுதியில்,

கெழு’ என்றது பிறசொல்லிடத்தே ‘பணைகெழு பெருந்திறற்

பல்வேன் மன்னர்’ (மதுரைக்.234), ‘துறைகெழு மாந்தை’ (நற்.35)

என இயல்பாக வருவனவும்; ‘வளங்கெழு திருநகர்’ (அகம்.17),

‘பயங்கெழு மாமழை’ (புறம்.266) என நிலைமொழி யீற்றெழுத்துத்

திரிய வருவனவுங் கொள்க. இன்னும் இதனானே, இச்சாரியையது

உகரக்கேடும் எகர நீட்சியுங் கொள்க. ‘பூக்கேழ் தொடலை

நுடங்க வெழுந்து’ (அகம்.28), ‘துறை கேழூரன் கொடுமை நாணி’

(ஐந்துறு.11) இவற்றிற்கு, இரண்டாவதும் ஏற்புழி மூன்றாவதும்

விரிக்க. ‘செங்கேழ் மென்கொடி’ (அகம்.80) என்புழிக்கெழு வென்னும்

உரிச்சொல் ‘எழுத்துப் பிரிந்திசைத்தல்’ (சொல்,395) என்பதனான்

நீண்டதென்று உணர்க. ‘மெய்’ என்றதனான், ‘பூக்கேழென்’ (நற்.10)

புழி வல்லொற்று மிகுதல் கொள்க. இன்னுஞ் சான்றோர்

செய்யுட்கட் பிறசாரியை பெற்று விகாரங்கள் எய்தி முடிவனவற்றிற்

கெல்லாம் இச்சூத்திரமே விதியாக முடித்துக் கொள்க” (2003:332)

என்று நுட்பமாக விளக்கம் தருகிறார். இதேபோல, அதிகார புறனடை (நூ:483) சூத்திர உரைப் பகுதியில், பன்னிரண்டு நூல்களில் இருந்து, இருபத்தியொரு சான்றுகளைத் தருகிறார் நச்சினார்க்கினியர்.

புறநானூறு, மலைபடுகடாம், அகநானூறு, சீவகசிந்தாமணி ஆகியவற்றிலிருந்து முறையே மூன்று பாடல்களையும், நாலடியார் பாடல் இரண்டு, நான்மணிக்கடிகை, முல்லைப்பாட்டு, நற்றிணை, பெரும்பாணாற்றுப்படை, ஐங்குறுநூறு, குறுந்தொகை, கலித்தொகை ஆகிய நூல்களில் இருந்து முறையே ஒரு பாடல்வீதம் மேற்கோள் காட்டுகிறார். இவை நச்சினார்க்கினியரின் நுட்பமான வாசிப்பையும் புலமையையும் காட்டுகின்றன.

சான்று ஒற்றுமை

      இளம்பூரணர் பயன்படுத்தும் சொல் நிலையிலான பல சான்றுகளை நச்சினார்க்கினியர் காட்டினாலும், சில இடங்களில் இலக்கண குறிப்பு தருவதில் வேறுபடுகின்றார். இலக்கியச் சான்றுகளாக இளம்பூரணர் காட்டியவற்றையே நச்சினார்க்கினியரும் காட்டும் இடங்களாக பதினான்கு சூத்திர உரைகளை அடையாளப்படுகின்றன. எனினும் இளம்பூரணர் காட்டாத பல நூல்களின் தொடர்களை அப்பகுதிகளுக்கு நச்சினார்க்கினியர் பயன்படுத்துகிறார்

.

முடிவுரை

“எழில் மிகுந்த சொற்றொடர், உள்ளங் கவரும் உவமை,

இனிய ஓசை கெழுமிய வாக்கியம், என்றும் நெஞ்சத்தில்

நின்று நிலவும் எடுத்துக்காட்டு, இலக்கியச்சுவை முதிர்ந்த

கவிதை மேற்கோள் – ஆகியவற்றை நச்சினார்க்கினியர்

உரையில் காணலாம்” (1983:282)

என்று கூறும், மு.வை.அரவிந்தன் கூற்று இக்கட்டுரைவழி நிறுவப்பட்டுள்ளது. இலக்கண, இலக்கியங்களுக்கு உரை எழுதி இடைக்கால உரையாசிரியர்களில் பெரும் புலமையாளராக நச்சினார்க்கினியர் திகழ்கிறார். உரை எழுதுவதற்கும், பொருள்கோடலில் பல்வேறு நுட்பங்களுக்குச் செல்வதற்கு அடிப்படையில் இவர் ஒரு ஆசிரியராகப் பணியாற்றியது காரணமாக இருக்கலாம். பத்துப்பாட்டு பதிப்பின் ஒவ்வொரு நூல் முடிவிலும் “மதுரை ஆசிரியர் பாரத்துவாசி நச்சினார்க்கினியர் செய்தவுரை முற்றிற்று” என்று குறிப்பிடப்பட்டுள்ளதில் இருந்து இவர் ஆசிரியராக இருந்ததை அறியமுடிகிறது.

துணைநூற்பட்டியல்

இளவழகன், கோ. (ப.ஆ), தொல்காப்பியம்- எழுத்ததிகாரம்- நச்சினார்க்கினியம்,  தமிழ்மண் பதிப்பகம், சென்னை, 2003.

இளவழகன், கோ. (ப.ஆ), தொல்காப்பியம்- எழுத்ததிகாரம்- இளம்பூரணம்,       தமிழ்மண் பதிப்பகம், சென்னை, 2003.

சாமிநாதையர், உ.வே (ப.ஆ), பத்துப்பாட்டு மூலமும் நச்சினார்க்கினியருரையும்,      உ.வே.சா., நூல்நிலையம், சென்னை, 2017.

மோகன், இரா. சொக்கலிங்கம், ந. உரைமரபுகள், மணிவாசகர் பதிப்பகம்,       சிதம்பரம், 1985.

சதீஷ், அ. சங்க இலக்கிய உரைகள், அடையாளம் வெளியீடு, திருச்சி, 2008.

அரவிந்தன், மு. வை. உரையாசிரியர்கள், மணிவாசகர் பதிப்பகம், சிதம்பரம், 1983.

Leave a comment

Trending