பாட்டொன்று கேட்டேன் 12

நம் நெஞ்சம் மறந்து போகாத புதிய பறவை

ஜி. சிவக்குமார்

கூடுதல் குறைவாக இருக்கலாம். ஆனால் நம் எல்லோருமே துயரங்களின் அழுத்தத்தில்தான் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். “தன்னந் தனியே இருந்தவன் நெஞ்சில் சஞ்சலம் இல்லையடா இன்னொரு உயிரைத் தன்னுடன் சேர்த்தால் என்றும் தொல்லையடா” என்பது பேரனுபவத்தில் ஊறித் ததும்பிய வரிகளல்லவா?

தன் வாழ்நாளில் ஒரு முறையாவது தற்கொலை செய்து கொள்ள வேண்டுமென எண்ணாத மனிதர்கள் கிடையாதென்ற வார்த்தைகளை நீங்கள் ஆமோதிக்கீறீர்களா இல்லையா?

அப்படியொரு பெருந் துயரத்தில், “என் தேவனே என் தேவனே ஏன் என்னைக் கை விட்டீர்?” என்ற இயேசுவின் வார்த்தைகளுக்கு நிகரான வரிகளை ஒருவன் சொல்கிறான்.

எனது கைகள் மீட்டும் போது வீணை அழுகின்றது
எனது கைகள் தழுவும் போது மலரும் சுடுகின்றது

யார் இவன்?அப்படியான பெருந் துயரம் என்ன? பார்ப்போம்.

தொழிலதிரான கோபால், சிங்கபூரிலிருந்து கப்பலில் வரும் போது லதா அறிமுகமாகிறாள். கப்பலில் ஒரு நிகழ்வில், அத்தனை பேரின் வற்புறுத்தலின், குறிப்பாக கோபாலின் வற்புறுத்தலின் பேரில் லதா பாடுகிறாள். என்னவொரு அற்புதமான பாடல்.

உன்னை ஒன்று கேட்பேன்.
உண்மை சொல்ல வேண்டும்
என்னைப் பாடச் சொன்னால்
என்ன பாடத் தோன்றும்?

இதுவரை காதல் அனுபவம் இல்லாததால் காதல் பாட்டுப் பாட இயலாது. தாயாகவில்லையாதலால் தாலாட்டும் பாட இயலாது என்பதை இப்படிப் பாடுகிறாள்.

காதல் பாட்டுப் பாட
காலம் இன்னும் இல்லை
தாலாட்டுப் பாட தாயாகவில்லை

தாலாட்டுப் பாட என்ற வரிகளைப் பாடும் போது, தா…லா. . ட்டு பாட என்கிறாரே எத்தனை
அழகு.

விதவிதமான வாத்தியக் கருவிகளும், நேர்த்தியான ஆண், பெண் நடனக் கலைஞர்களின் நடனமும், வண்ண உடைகளில் சிவாஜியும், சரோஜா தேவியும் (எப்போதும் போல இந்தப் படத்திலும், சரோஜா தேவியின் மேக்கப் செலவில் ஒரு லோ பட்ஜெட் படமே எடுக்கலாம்) இப்படி, கப்பலொன்றின் தளத்தில் நிகழ்வதாகப் படமாக்கப்பட்டிருக்கும் காட்சி மிகவும் வித்தியாசமானதாக இருக்கிறது.

பியானோ தொடங்கி ஒவ்வொரு இசைக்கருவியையும் சிவாஜி வாசிப்பதாக பாவனைதான் செய்கிறார் என்பதை நம்புவது அத்தனை சுலபமல்ல.

மனைவியை இழந்த கோபாலுக்கு லதா மிகப் பெரிய ஆறுதலாக இருக்கிறாள். இருவரும் காதல் வயப்படுகின்றனர். இந்தச் சூழ்நிலைக்கு மற்றுமொரு அழகான பாடல்.

சிட்டுக் குருவி முத்தம் கொடுத்து சேர்ந்திடக் கண்டேனே.

பல வருடங்களாக எங்கள் வீட்டில் சிட்டுக் குருவிகள் உடன் வசித்து வருகின்றன. முத்தம் கொடுத்ததையல்ல. சிட்டுக் குருவிகள் சேர்ந்ததை பலமுறை நானும் கண்டிருக்கிறேன்.

ஒரு பெண், சங்கமத்தின் அழகை இதை விட எப்படி நாகரிகமாகச் சொல்ல முடியும்?

பறந்துசெல்ல நினைத்துவிட்டேன் எனக்கும் சிறகில்லையே
பழகவந்தேன் தழுவவந்தேன் பறவை துணையில்லையே
எடுத்துச்சொல்ல மனமிருந்தும் வார்த்தை வரவில்லையே
என்னென்னவோ நினைவிருந்தும் நாணம் விடவில்லையே

“நில்லடி என்றது நாணம். விட்டுச் செல்லடி என்றது ஆசை” என்ற பாடல் வரிகளின் தெளிவுரைதானே இந்த வரிகள். இருக்கட்டும். ஒவ்வொரு வரியும் இல்லையே என்பதைக் கவனித்தீர்களா, இல்லையா?

பாடலின் அடுத்த வரிகள் எப்படி ஒரே மாதிரியான வார்த்தையில் முடிகின்றன என்பதையும் கவனியுங்கள்.

ஒரு பொழுது மலராக கொடியில் இருந்தேனா
ஒரு தடவை தேன்கொடுத்து மடியில் விழுந்தேனா
இரவினிலே நிலவினிலே என்னை மறந்தேனா
இளமைதரும் சுகத்தினிலே கன்னம் சிவந்தேனா

“அஹஹஹஹஹஆஹா” என்றபடி அம்மையார் அழைக்க, குனிந்த சிவாஜி , அம்மையார் தொடர்ந்து, “அஹாஅஹாஒஹோஹோஒஹோஹோ” என்று பாடிக்கொண்டிருக்க நிமிர்ந்து உதட்டைத் துடைத்துக்கொள்கிறார்.

உதட்டுல முத்தம் குடுத்துட்டாராமா.

அந்தம்மா பாட்ட நிறுத்தாம பாடிக்கிட்டிருக்கறப்ப இவரு எப்படி உதட்டுல முத்தம் குடுத்தாரு?

பாக்கற நமக்கே சிரிப்பு வருதே. நாயகி உதட்டை, டிபன் சாப்டற மாதிரி பத்து நிமிஷம் சாப்பிட்டு முத்தம் குடுக்கற இன்றைய நாயகர்களுக்கெல்லாம் இதைப்பார்த்தா எவ்வளவு சிரிப்பு வரும்?

நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக வளரகிற காதலின்அடுத்த மலரைப் பாருங்கள்.

“ஆஹா மெல்ல நட மெல்ல நட மேனி என்னாகும்
படுக்கையை இறைவன் விரித்தான் – வரும்
பனித்திரையால் அதை மறைத்தான்
பருவத்தில்ஆசையைக் கொடுத்தான் – வரும்
நாணத்தினால் அதைத் தடுத்தான் – வரும்
நாணத்தினால் அதைத் தடுத்தான்

திருமணம் நிச்சயமானவுடன் ஒரு பெண்ணின் உடலிலும், மனதிலும் நிறைய மாற்றங்கள் உண்டாகின்றன. ஒரு புதிய அனுபவத்தின் எதிர்பார்ப்பும், பரவசமும், பயமும் அவள் மீது மாறி மாறி மோதுகின்ற அனுபவத்தை இதை விட எளிமையாக, இதை விட அழகாக எப்படிச் சொல்ல முடியும்?

திருமணம் என்றதும் அடக்கம்
கண்கள் திறந்திருந்தாலும் உறக்கம்
வருவதை நினைத்தால் நடுக்கம்
பக்கம் வந்துவிட்டாலோ மயக்கம்

இரயில் வண்டியைப் பார்த்தால் கடுமையான பாதிப்புக்குள்ளாகும் காரணத்தை லதாவிடம் கோபால் சொல்கையில் விரிகிறது கோபாலுக்கும் அவனது முதல் மனைவிக்குமான உறவு.

ஒரு பாடகியாக அவன் வாழ்வில் அறிமுகமாகிறாள் சித்ரா.

கோபால், புகைபிடிக்கும் காட்சியுடன் துவங்கி, முந்தைய திரைப்படப் பாடல்களில் மிகப் பெரிய இடத்தைப் பிடித்து, தற்போது வழக்கொழிந்து போன பேங்கோஸை இரு ஆப்ரிக்கர்கள் வாசிக்க, நவநாகரிக யுவதிகளும், யுவன்களும் நடனமிட, “ஆஹா அஹஹஹஹா” என்றபடி மேடையில் சித்ரா தோன்றும் காட்சி நம்மை மயக்கத்திலாழ்த்தி ஒரு மாய உலகிற்குள் தள்ளுகிறது.

“பார்த்த ஞாபகம் இல்லையோ” என்று தொடங்கி

அந்த நீல நதிக்கரை ஓரம்
நீ நின்றிருந்தாய் அந்தி நேரம்
நான் பாடி வந்தேன் ஒரு ராகம்
நாம் பழகி வந்தோம் சில காலம்

என்று தொடர்கிற பாடல் முழுக்க முழுக்க ஒரு பிரிவுக்குப் பின் காதலனைச் சந்திக்கும் காதலியின் உணர்வுகள் கொப்பளிக்கும் பாடலாகவே மிளிர்கிறது.

அன்று சென்றதும் மறந்தாய் உறவை
இன்று வந்ததே புதிய பறவை

திரைப் படத்தின் டைட்டில் வந்து விட்டது.

எந்த ஜென்மத்திலும் ஒரு தடவை
நாம் சந்திப்போம் இந்த நிலவை

அடடா.

“மாலைப் பொழுதின் மயக்கத்திலே நான் கனவு கண்டேன் தோழி” போன்ற பாடல்களில் நடித்து, நடித்து சௌகார் ஜானகி என்றாலே அசோகவனத்துச் சீதை போன்ற ஒரு துயரச் சித்திரம்தான் நம் கண் முன்னே விரியும். அதனால்தான் இயக்குனர் இந்தக் கதாபாத்திரத்திற்கு இவர் பொருந்த மாட்டார் என்று சொல்லி விட்டார் போல. சிவாஜி கணேசன்தான் பிடிவாதமாக சௌகார் ஜானகியை நடிக்க வைத்தாராம். இந்தப் படத்தில், குறிப்பாக இந்தப் பாடல் காட்சியில் நாம் பார்ப்பது மிகவும் ஸ்டைலிஷ் ஆன சௌகார் ஜானகியை. என் நினைவில், இது போல் ஜானகி மிகவும் அழகான நாகரிக உடையில் தோன்றியது பணம் படைத்தவன் திரைப்படத்தில் “கண் போன போக்கிலே கால் போகலாமா?” பாடல் காட்சியில்தான்.

முதன் முதலாகப் பார்ப்பது, மெல்ல மெல்ல சித்ராவின் வசமாவது இப்படி அத்தனை உணர்வுகளையும் ஒற்றை வார்த்தையுமின்றி முக பாவனைகளால் சித்தரித்ததால்தானே அவர் நடிகர் திலகம்.

திருமணம் செய்து கொள்ள முடிவெடுத்த வேளையில் இறந்து போனதாகச் சொல்லப்பட்ட முதல் மனைவி சித்ரா உயிருடன் வருகிறாள். அவள் சித்ரா இல்லையென கோபால் உறுதியாகச் சொல்ல, தான்தான் சித்ரா என வந்த பெண் நிருபிக்கிறாள். ஆனால் அவள் சித்ராவாக இருக்கவே முடியாதென்ற உண்மையை கோபால் மட்டுமே அறிவான். உணர்ச்சிகளின் கொநதளிப்பில் எந்த விதத் திட்டமிடலுமின்றி கோபால், சித்ராவின் மரணத்திற்குக் காரணமானதுதான் அந்தக் கொடிய உண்மை. சித்ராவின் கொடுமையான நினைவுகளுக்கும் லதா தரும் ஆறுதலுக்குமிடையில் சிக்கித் தடுமாறும் கோபால் பாடுகிறான்.

எங்கே நிம்மதி? எங்கே நிம்மதி?
அங்கே எனக்கோர் இடம் வேண்டும்.

மீண்டுமொரு முறை அழுத்தமாகச் சொல்கிறேன். கொடுந் துயரின் மொத்தக் கசப்பும் ததும்புகிற வரிகளல்லவா அழுகின்ற வீணையையும், சுடுகின்ற மலரையும் காட்டித் தருகின்ற இவை.

எனது கைகள் மீட்டும்போது வீணை அழுகின்றது

எனது கைகள் தழுவும்போது மலரும் சுடுகின்றது

தொடர்ந்து,

கண்ணைப் படைத்து
பெண்ணைப் படைத்த

இறைவன் கொடியவனே

என்னும் போது, கிட்டத்தட்ட அத்தனை ஆண்களும், உடன் பாடியபடி வெளிப்படையாகவோ, மறைமுகமாகவோ தங்கள் கண்களில் வழியும் கண்ணீரைத் துடைத்துக் கொள்வார்கள்தானே?


நான் பலமுறை குறிப்பிட்டிருக்கிறேன். இரண்டே வரிகளில் ஒரு திரைப்படத்தின் மொத்தக் கதையையும் அலட்சியமாகச் சொல்லி விடுவது கண்ணதாசனின் முத்திரை. இந்த வரிகளைப் பாருங்கள்.

பழைய பறவைபோல ஒன்று பறந்து வந்ததே

புதிய பறவை எனது நெஞ்சை மறந்து போனதே

கவனியுங்கள் நண்பர்களே. பறந்து வந்தது பழைய பறவை அல்ல. அதைப் போல ஒன்று. வந்திருப்பது சித்ரா அல்ல. சித்ராவைப் போல வேறொருத்தி. இப்போது திரும்பப் படியுங்கள். அதுதான் கண்ணதாசன்.

புதிய பறவை என மறுபடியும் டைட்டில்!

தாள முடியாத துயரத்தில், தாயைத் தவிர யார் மடியில் ஒரு ஆண் உறங்க முடியும்? துயரில் தவிக்கும் ஆணுக்கு அவன் மனைவி தாயாக மாறுகிற ரசவாதம் எத்தனை அற்புதம். தாய்க்குப் பின் தாரமென்கிற வேதத்தின் சாட்சிதான் இந்த வரிகள்.

என்னைக் கொஞ்சம் தூங்க வைத்தால் வணங்குவேன் தாயே

இன்று மட்டும் அமைதி தந்தால் உறங்குவேன் தாயே

இந்தப் பாடலில் ப்ளூட், ஹார்ப், வயலின், கிளாரினட், மண்டோலின், ட்ரம்பட்ஸ், ட்ரம்போன் என்று 250-இலிருந்து 300 வாத்தியங்கள் பயன்படுத்தப்பட்டனவாம்.

பார்க்கவும் கேட்கவும் திகட்டாத பாடல் இது. ஒவ்வொரு முறை பார்க்கும் போதும் அடடா இதைச் சென்ற முறை பார்க்கும் போது தவற விட்டு விட்டோமே என்று நினைக்குமளவு ஒரு அற்புதம் காணக் கிடைக்கும்.

“யார் அந்த நிலவு? ஏன் இந்தக் கனவு” பாடல் பதிவான பிறகு அதைப் படமாக்கலாம் என்று இயக்குநர் சொல்லும் போதெல்லாம் சிவாஜி தட்டிக் கழித்துக் கொண்டேயிருந்தாராம். அவருக்கு இந்தப் பாடல் பிடிக்கவில்லை போல. அதனால் இந்தப் பாடலை விட்டு விடலாமென்று இயக்குநர், எம். எஸ். வி. யிடம் சொல்ல, அந்தப் பாடலை விட மனதில்லாத எம். எஸ். வி, சிவாஜியிடம் “பாடல் பிடிக்கவில்லையா?” என்று கேட்டிருக்கிறார். அதற்கு சிவாஜி சொன்ன பதில் என்ன தெரியுமா?

“இந்தப் பாடலை கண்ணதாசன் பிரமாதமாக எழுதியிருக்கிறார். நீங்கள் பிரமாதமாக இசையமைத்திருக்கிறீர்கள். டி.எம்.எஸ் பிரமாதமாகப் பாடியிருக்கிறார். உங்களையெல்லாம் தாண்டி இந்தப் பாடலுக்கு எப்படி நடிக்க வேண்டும் என்பதைத்தான் யோசித்துக் கொண்டிருக்கிறேன்” என்றாராம். அதனால்தான் அவன் ஒப்புயர்வற்ற மகா கலைஞன்.

இந்தப் பாடலின் காட்சியமைப்பு அசர வைக்கிறது. இந்தத் திரைப்படத்தில் உள்ள பாடல்களில் உச்சம் என இந்தப் பாடலின் காட்சி அமைப்பைச் சொல்வேன். அமானுஷ்யானதொரு சூழலில் உறக்கத்தில் அல்லது மயக்கத்திலிருந்து விழிக்கின்ற கோபால் தன்னைச் சுற்றி நடனமிடும் பைசாசஙகளைக் கண்டு நடுங்குகின்றான். கடும் கோடையில் வழியும் வியர்வையைத் துடைத்துக் குளிர்விக்கிற தென்றலாக லதா வந்து அவன் தலை சாய்த்து உறங்க மடி தருகிறாள். ஆனா, சிறிது நேரத்திலேயே கடுமையான முகத்துடன் சித்ரா வந்து அவனை அலைக்கழிக்கிறாள்.

இந்தப் பாடல் காட்சிகளில் இருளும் ஒளியும் நிகழ்த்துகிற மாயம் பிரமிக்க வைக்கிறது. குறிப்பாக சித்ரா வரும் காட்சிகளில் இருளும், லதா வரும் காட்சிகளில் ஒளியும் மிக அழகிய குறியீடுகள்.

“எங்கே நிம்மதி?” என்றபடி, இரண்டு கைகளையும் அகல விரித்தபடி சிவாஜி நிற்கிற காட்சியில் துவங்கி ஒவ்வொரு ப்ரேமிலும் சிவாஜியின் உடல் மொழியும், Posesஉம் அய்யோ… சொல்ல வார்த்தைகளே இல்லை.

அதன் பிறகு வேறு வழியில்லாமல் சித்ராவின் மரணத்திற்குத் தான்தான் காரணம் என்ற உண்மையை கோபால் சொன்னதும், தான் ஒரு காவல்துறை அதிகாரி, இந்த உண்மையை வரவழைக்கத்தான் தான் காதலிப்பதாக நடித்ததாக லதா சொல்வதும், அதைக் கேட்டு “எல்லாம் பொய்யா?” என்று கோபால் துடிப்பதும், “இல்லை கோபால். நானும் உங்களைக் காதலித்தேன்” என்று லதா சொன்னதும், பினனாட்களில் விவேக், இதை மிகப் பெரிய நகைச்சுவையாக்கிக் கேலி செய்ததும் வரலாறு.

“Chase a Crooked Shadow” என்ற ஆங்கிலப்படம், “சேஷ் அங்கா” என்ற வங்க மொழி வழி, புதிய பறவையானது. கண்களையும், மனதையும் கலங்கடிக்கும் திரைப்படக் காலத்தில், இப்படியொரு த்ரில்லரை இயக்கிய தாதா மிராசி உண்மையிலேயே ஆச்சர்யமான மனிதர்தான்.


பழைய பறவை போல ஒன்று பறந்து வந்ததே
புதிய பறவை எனது நெஞ்சை மறந்து போனதே

பாடலின் இந்த வரிகள் நினைவில் அலை மோதுகின்றன. ஒரு போதும் நம் நெஞ்சம் மறந்து போகாத புதிய பறவையல்லவா அது.

Leave a comment

Trending