பாணனும் பொறாட்டும் -3 (நிறைவுப் பகுதி)

மலையாள ஆக்கம் : ஜெயசீலன்
தமிழில் அகமது கனி

மண்ணான் – மண்ணாத்தி

மண்ணானும் மண்ணாத்தியும் என்கிற பொறாட்டில் இருக்கிற தள்ள மண்ணாத்தி பொறாட்டு பற்றித்தான் சொல்கிறார்கள்.

தள்ள மண்ணாத்தியும் ஆசானும் அருள்வாக்குரைப்பவரும் அரங்கத்திற்கு வருகிறார்கள். பாலக்காட்டுக்காரர்களுக்கு பழக்கமான இந்த அருள்வாக்கு சொல்பவர்கள் ஈழுவர்களும் செறுமக்களும் ஆவார்கள். அருள்வாக்கு சொல்பவர்களை இங்கு தம்பாட்டி என்று சொல்வார்கள்.
தம்பாட்டி உடல்குலுக்கி அருள்வாக்கு உரைப்பார். கையில் வாளெடுத்து தம் தலையில் வெட்டப்போவார். இந்த சந்தர்ப்பத்தில் ஆசான் சொல்கிறார்: தம்பாட்டி கையினாலே தாங்கித்தான் வெட்டுவார்.
அப்போது அருள்வாக்குரைப்பவர் சொல்வார் – வேகமாய் வெட்டினால் என் மண்டை பிளந்துவிடாதா? மகனே, மனைவியும் நான்கு பிள்ளைகளும் உண்டு..உனக்குத் தெரியாதா?
அருள்வாக்குரைப்பவரிடம் தங்கள் துன்ப துயரங்களும் போக்க வேண்டி கோரிக்கை வைக்கிறார்கள். கல்லையும் நெல்லையும் பிரித்துக் கொடுப்பதுபோல் வாழ்க்கையில் துன்ப துயரங்களை தீர்த்துக் கொடுங்கள் என்று வேண்டிக்கொள்கிறார்கள்.
அப்போது, “நீங்கள் ஒரு கோழிக்குஞ்சை விடுங்கள்” என்று அருள்வாக்குரைப்பவர் சொல்கிறார்.
கடைசியில், ”நான் இல்லாத நேரத்தில் – என் வீட்டில் பண்ட பாத்திரங்கள் திருடுபோயிருக்கின்றன. களவாடிக்கொண்டு போனது யாரென்று சொல்லுங்கள்” என்கிறார்கள். அதற்கு அருள்வாக்குரைப்பவர் சொல்கிறார்: அது தெரிந்தால் நான் இங்கு எதற்கு வேசங்கட்டி உட்கார்ந்திருக்கேன்”.
அருள்வாக்குரைப்பவர், தன் கையில் உள்ள வாளை வீசி எறிகிறார். பகுத்தறிவான சிந்தனை மூடநம்பிக்கைக்கு எதிரான அடியாய் இங்கு மாறுகிறது. திறமையுள்ள ஆட்டக்காரர்கள் தம் மனோதர்மத்தை பயன்படுத்தி இந்த ஆட்டத்தை இன்னும் சிறப்பாக மாற்ற முடியும்.

இனி சொல்லப்படுவது, கூட்டப்பொறாட்டுகளைப் பற்றியவை ஆகும்.
வைணவர்கள், கும்ப பூசாரிகள், கூட்டச்செறுமக்கள், வேட்டுவக்கணக்கர், கொடை பறையர், சக்கிலியர், கூட்டத்தொட்டியர், கூட்டப்பாணாட்டிகள்……. என எல்லாம் சேர்ந்து அரங்கேறுகிறது கூட்டப் பொறாட்டு. பாணப்பொறாட்டுகளில் கூட்டப்பொறாட்டுகள் இல்லை. அதிலே ஒற்றைப் பொறாட்டும் இரட்டைப் பொறாட்டும் மட்டுமே இருக்கின்றன. இன்று கூட்டப் பொறாட்டுகள் கண்ணியார்களியில் மட்டுமே அரங்கேறி வருகின்றன.
சித்தூர் தாலூக்காவிலும் ஆலத்தூர் தாலூக்காவிலும் உள்ள நாயர் வட்டாரங்களில் அம்மன் கோவில்களில் வேண்டுதல்களுக்காக மரபாக நடத்தப்படுவதுதான் கண்ணியார்களி ஆகும்..
நாயர்கள் மட்டுமின்றி ஈழுவ, ஆசாரி, வடுகன், மண்ணாடியார் ஆகிய
வகுப்பினரும்கூட இந்த வேண்டுதல் சடங்கை நடத்திவருகின்றனர். தற்காலத்தில் இருபதுக்கும் குறைவான இடங்களில் மட்டுமே இந்த கண்ணியார்களி நடத்தப்பட்டுவருகிறது. மேடம் மாதத்தில் வரும் விஷு(முழுவு)க்குப்பின்தான் இந்த களியை நடத்துவார்கள்.
தேசக்களி, நேர்ச்சக்களி, மலமக்களி என்கிற பெயர்களிலும் இந்த கண்ணியார்களி அறியப்படுகிறது. இது வழக்கமாக நான்கு நாள்கள் நடக்கும் களி ஆகும்.
பெரும்பாலான இடங்களில் இது மூன்று நாள்கள் மட்டுமே நடத்தப்பட்டுவருகிறது.
பொன்னானை, ஆண்டிக்கூத்து, வள்ளோன், மலமா என்பவைதாம் நான்கு நாள்கள் நிகழும் களிகளாகும்.
தற்காலத்தில் பொன்னானையும் ஆண்டிக்கூத்தும் ஒரே நாளில் நிகழ்த்தி, மொத்தம் மூன்று நாள்களாக குறைத்துவிட்டார்கள்.
ஆண்டி, வள்ளோன், மலமா இவை மூன்றும் சிவசக்தியைப் பிரதிநிதிப்படுத்துகின்றன. வேளாண் வளர்ச்சியோடு தொடர்புடைய இயற்கைதான் இந்த கண்ணியார்களியில் வருகிறது.
தாரிகாவதத்தை இதில் முக்கியமாகப் பார்க்கலாம். எண்பத்தியொன்று, ஐம்பத்தாறு, அறுபத்தொன்று என்ற கணக்கில் வருகின்றன சுலோகங்கள்.
உள்ளூர் மக்கள் – சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை தலைப்பாகை கட்டி, கண்ணெழுதி, பொட்டுவைத்து, உடலில் ஆபரணங்கள் அணிந்து, நல்ல உடையணிந்து வாத்தியக்கருவிகளுடன் சேர்ந்து, வட்டத்தில் தாளத்துடன் களி நடத்துவார்கள்.
விவசாய அபிவிருத்திக்கான தொடக்கம் குறிக்கிற ”கண்ணியார் கொள்ளுக” என்கிற சடங்கு இந்த களியுடன் தொடர்புடையது.
இரவு 9 மணி முதல் மறுநாள் விடியல் வரை இந்த சுலோகங்கள் சொல்கிற கண்ணியார் வட்டக்களி, பார்வையாளர்களுக்கு அலுக்கத் தொடங்கிவிட்டது என்கிற காரணத்தால் மறைந்த முன்னோர்கள் இந்த கண்ணியார்களிக்கு இடையில் பொறாட்டுகளிகளை சேர்த்துவிட்டனர். இப்போது நடப்பிலுள்ள கண்ணியார்களி என்கிற வட்டக்களி தொடக்கத்தில் பெயருக்கு மட்டும் களியை நிகழ்த்திவிட்டு, மீதமுள்ள நேரம் – விடியும் வரை – பொறாட்டுகள் மட்டுமென முடிவடையும். அப்படி கண்ணியார் களியுடைய வரலாற்றில் பொறாட்டுகளிக்கும் தொடர்பு இருக்கிறது.

முன்னோர்களிலிருந்து புதிய காலத்திற்கு..
பாணப்பொறாட்டுகள் என்கிற பெயருக்குப் பின்னால், அது எப்படி உருவானது என்பதும், அதில் ஈடுபடுபவர்களுக்குள்ள தொடர்பும், பாணர் சமுதாயத்தின் பங்களிப்பும்தான் காணப்படுகிறது.
பொறாட்டு என்கிற வடிவத்தை தற்காலத்தில் காணப்படுகிற வடிவத்திற்கு கொண்டுவந்தது பொல்புள்ளி மாயன், புத்தூர் சாமுக்குட்டி ஆகிய களி ஆசான்கள் ஆவார். வந்தன சுலோகங்களுடன் இந்த ஆசான்மார்களை துதித்துச் சொல்லுகிற சம்பிரதாயம் இப்போது இல்லாவிட்டாலும் சில காலத்திற்கு முன்புவரை இருந்ததாகச் சொல்லப்படுகிறது.
இந்த முன்-ஆசான்கள் மட்டுமல்லாது எத்தனூர் மாயன், ஆயக்காடு செல்லன், தேன்குறிச்சி முறிக்கையன் – இவர்களும் தங்களாலான பங்களிப்பை பொறாட்டுகளிக்கு நல்கியிருக்கிறார்கள். இவர்களுடைய வாழ்நாளையெல்லாம் கணக்கிட்டு நோக்கின், இன்றைய காலகட்டத்தில் காணப்படும் பொறாட்டுகள் உருமாறி இருநூறு ஆண்டுகள் பழமையுடையன என்றறிய ஏதுவாகிறது.
மிகப் பிரசித்தமாயிருந்த பொறாட்டுகளின் சங்கத் தலைவர்களாக இருந்த பீடிகக்கோடு மாயாண்டி, பல்லசேன பொன்னு, பல்லசேன குஞ்சு, பாலத்தோணி வேலாயுதன், எத்தனூர் முத்தாண்டி, தேன்குறிச்சி காசு, பள்ளத்தேரி குஞ்சன், வடவனூர் ராமநாதன், கண்ணனூர் கண்டு ஆகிய ஆளுமைகளை இவ்விடத்தில் நினைவுகூர்தல் அவசியமாகும்.
உடல் நலிந்தாலும் இன்றும் வாழ்ந்துகொண்டிருக்கிற கண்ணாடிச்சாமு எழுத்தச்சன், குழல்மன்னம் பழனிமல, மண்ணூர் கருப்பன், தத்தமங்கலம் மாங்கோடு முத்து ஆகியோரின் சேவையும் இந்த அரங்கத்தைச் செழுமைப்படுத்தியுள்ளது.
நென்மேனி கருப்பன்குட்டி, நல்லேப்பிள்ளி நாராயணன், நன்னியோடு கிருஷ்ணன், மண்ணூர் சந்திரன், குழல்மன்னம் ராமகிருஷ்ணன், பல்லசேன வேலாயுதன், நன்னியோடு சண்முகன் – இவர்கள் அனைவரும் தற்கால பொறாட்டுகளியின் ஆசான்களாக அறியப்படுகிறார்கள்.
காலமாற்றத்திற்கு ஏற்ப புதிய வடிவில் பொறாட்டுகளைப் படைப்பதிலும், பரிணாமமாக புதிய விடயங்களைச் சேர்ப்பதிலும் சில பொறாட்டுகளி சங்கங்கள் கவனம் செலுத்துவதுண்டு.
பாலத்தோணி வேலாயுதன் அரங்கேற்றிய ஜன்மிக்-குடியான் 3 பிரச்சனைகளைப் பற்றிய பொறாட்டு அறுபதுகளில் பரபரப்பாகப் பேசப்பட்டது. சமூகப் பிரச்சனைகளும் சொல்லத்தக்க நிகழ்வுகளும் நடக்கும்போது அவற்றைப் பற்றி பொறாட்டுகள் புனைந்து களிகள் அரங்கேற்றப்படுவதுண்டு.
அத்திக்கோட்டில் (சித்தூர்க்கு அருகில்) நிகழ்ந்த அங்கராத்து எனும் தம்பிரானுடைய யானை மதம்பிடித்து ஓடி ஒரு குழந்தையை மிதித்துக் கொன்றுவிட்ட கொடூர நிகழ்வும், மலம்புழ அணை அமைக்கும் காலத்தில் தோணி சரிந்து அதில் பயணித்த பணியாளர்கள் இறக்க நேர்ந்த நிகழ்வும் – சமூகப் பிரச்சனை சார்ந்த பொறாட்டு நாடகங்களுக்கு கருவாயின.
அரசியல் தலைவர்களாக இருந்த மகாத்மா காந்தி, ஏ.கே.கோபாலன், ஈ.எம்.எஸ். நம்பூதிரிபாடு, அழிக்கோடன், இந்திரா காந்தி – இவர்களைப் பற்றிய பாட்டுகள் வாய்ப்புகளுக்கு ஏற்ப இடையிடையே பயன்படுத்தப்படுவதுண்டு.
பொறாட்டு நாடகம் தற்காலத்தில் பொது மேடைகளிலும் நடத்தப்படுவதுண்டு.
பெண் வேடங்களை பெண்களே ஏற்று நடத்தப்படும் ஒரு அகாதெமியும் இப்போது இருக்கிறது.
தொலைக்காட்சி மூலமாகவும் இந்த கலைவடிவத்தை மக்களிடம் கொண்டுசெல்ல முடிகிறது. ஆகையால், பொறாட்டுகளி இப்போது எல்லாக் காலங்களிலும் அவசியமாக இருக்கிறது. கேரள சுற்றுலாத்துறை நடத்தும் “உத்சவம்” நிகழ்ச்சியில் பாணப்பொறாட்டு சுலோகம் பாடுதல் ஒரு முக்கிய அங்கமாகும்.
கவியும் ஒருங்கிணைப்பாளரும் நல்லுள்ளம் கொண்டோருமான செம்பகச்சேரி விஸ்வம் (கே.விஸ்வம்) அவர்கள், நாட்டாரியல் துறையில் செய்த பங்களிப்பு குறிப்பிடத்தக்கது. அவருடைய “பாணப்பொறாட்டுகள்” என்கிற புத்தகமும் இங்கு குறிப்பிடத்தக்கது. மேலும், இந்த (பாணப்பொறாட்டு) ஆய்வுக்குத் தேவையான தகவல்கள் இந்நூலில் இருந்துதான் எடுத்தாளப்பட்டுள்ளது.
கே.விஸ்வம் அவர்கள் எழுதிய ”மனம் போல மாங்கல்யம்”, நவீன காலத்து பொறாட்டு நாடகமாக விளங்குகிறது. ஓவியரும் சிற்பியும் (அகாதெமியிலே) நாட்டாரியல் பிரதிநிதியுமான ஷடானனன் ஆனிக்கத்து அவர்கள் இந்த பொறாட்டு நாடகக்கலைக்காக ஆற்றிய பங்களிப்புகள் மறக்கமுடியாதவை.
என் அறிவுக்கு எட்டாமல் போன (விடுபட்டுள்ள) பல கலைஞர்களையும் இந்த நேரத்தில் மனத்தில் நினைத்துக்கொள்கிறேன்.

ஆசாண்டே முறுக்கிச்சோந்ந சுண்டில்
விரத்தும் முன்பாட்டு
களிவிளக்கு தொழுது
தேச முத்திய தியானிச்சு
காரணவரேயும் கரக்காரேயும் கும்பிட்டு
குருபாதம் தொட்டு
மூணுவலம் களிச்சு எத்தும் நேரம்
முடிக்கொண்டையில் முல்லமால கெட்டழிஞ்சிருக்கும்
மாறத்து வெச்சுகெட்டு வேர்ப்பில் நனஞ்சிரிக்கும்
சோதியக்காரண்ட உறக்கச்சடவார்ன்ன
வாக்கினும் உண்டாவும் நனவு
பெண்கெட்டிலே ஆணுள்ள மாத்ரம்
பாட்டிலும் ஆட்டத்திலும் இம்பப்பட்டங்ஙனெ

(ஜோதி பாயி) கவிதை: கொடிச்சி

குறிப்புதவி:

  1. பாணப்பொறாட்டுகள், கே.விஸ்வம், தேசாபிமானி புக் ஹௌஸ்,
    திருவனந்தபுரம்.
  2. சித்தூர் தத்தமங்கலம் தேசத்த கண்யார் களியுட சரித்ரம், ஆய்வுநூல்,
    ஷடானனன் ஆனிக்கத்து
  3. பாலக்காடு தனது கலகள், ஆய்வுநூல், ஷடானனன் ஆனிக்கத்து
  4. குஞ்ஞுண்ணி கவிதகள் கதகள், டி.சி.புக்ஸ், 2006 பதிப்பு, குஞ்ஞுண்ணி
  5. ஆசாண்ட பத்ய க்ருதிகள், என். குமாரனாசான், டி.சி.புக்ஸ், 1999 பதிப்பு.
  6. கொடிச்சி. கவித சமகாலிக மலயாளம், 2010 மார்ச் 19, ஜோதிபாயி
    சொற்பட்டியல்:
  7. சட்டியுண்டாக்கனுள்ள மண்ணு புழயோரங்களிலாணு உண்டாவுக
  8. கஷ்டப்பாடு
  9. உச்சிக்குடுமபோலும் சுமடிண்ட பாரம் காரணம் இல்லாதாயி
  10. ப்ரமாணி
  11. இஸ்லாம் மதக்காரன்

6. பாஸ்கரன்

மொழிபெயர்ப்பில் அடிக்குறிப்புகள்:

  1. பாட்டி = பாண மகளிர்; woman of the class of strolling singers.
    பாணர் வருக! பாட்டியர்! வருக (மதுரைக் காஞ்சி.749);
    [பாட்டு → பாட்டி] சான்று: செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் அகரமுதலி.
    sorkuvai.tn.gov.in. (பாடினி, பாணமகள் என்பதாலேயே ஔவை பாட்டி என்று அழைக்கப்பட்டாள்)
  2. கூப்பன் கடை (அருகிய வழக்கு) = நியாய விலைக் கடை, பொது விநியோக அங்காடி.
  3. ஜன்மிக்-குடியான் பிரச்சினை = ஜன்மிகள் எனப்படும் பெரு நிலக்கிழார்களுக்கும் குடியானவர்களுக்கும் இடையே நிகழ்ந்த போராட்டங்கள், பிரச்சினைகள்.

Leave a comment

Trending