முப்பரிமாணம் : நூல்வழிப்பயணம் 7

மிருகத்தின் வாடை,
பெருந்தெய்வ வழிபாடும் பெண்தெய்வ வழிபாடும்,
பந்தயம்

அன்பாதவன் 7829985000

௦1 மிருகத்தின் வாடை -இலட்சுமண பிரகாசம்


‘வாழ்வின் சுகபோகங்களுக்கு மத்தியில் துன்பங்கள் வருகின்றனவா? அல்லது அதீத இச்சைகளும் அதன் மீதான பற்றுகளுமே நாம் நம்பிக் கொண்டிருக்கும் இன்பங்களுக்கு எதிர் பிம்பங்களை கனவாக காட்டுகின்றனவா..?’ என வினா எழுப்பும் இலட்சுமண பிரகாசத்துக்கு அவருடைய கவிதை வரிகளைக் கொண்ட ‘மிருகத்தின் வாடை’ கவிதைத் தொகுப்பு பதிலாக வாசகர் கரங்களில் வந்தமர்கிறது

“சுழன்றபடியிருக்கிறது மாயம்
இயங்குநிலை,
இயக்கமற்ற நிலைக்குச் செல்வதையும்
இயக்கமற்ற ஒன்று தன்னியல்பாய்
இயங்கு நிலைக்குச் செல்வதையும்
காமத்தைப்போல,
மரணத்தைப்போல
பிடிக்குள் அகப்படாத மாயம்”(ப.39)

தமிழில் பிறப்பால் சமணம் சார்ந்த ப்ரியா போன்றவர்கள் கூடத் தொடாத உள்ளடக்கங்களை இலட்சுமண பிரகாசம் தந்திருப்பது தமிழுக்குப் புதிது.

“என்னைச் சமணன் என வெட்டவெளியில் கழுவேற்றினார்கள்
இன்னும் வலிக்கிறது என் குதம்

அமைதியாக மடக்குநிலையில் வைக்கப்பட்டிருக்கிறது.
பிக்குவின் மழிகத்தி.

பிண்டி மரத்தினடியில்
பரிநிர்வாண மெய்தியவனின் நிழல்

சரிந்து விழும் நிழல்
விமானம்..மரம்
அல்லது ஒரு பெயரறியாத பறவை.
சுழன்றபடியிருக்கிறது மாயம்
இயங்குநிலை, இயக்கமற்ற நிலைக்குச் செல்வதையும், இயக்கமற்ற ஒன்று
தன்னியல்பாய் இயங்கு நிலைக்குச் செல்வதையும்.
காமத்தைப் போல, மரணத்தைப் போல
பிடிக்குள் அகப்படாத மாயம்.

கல்லில் செதுக்கப்பட்ட ஆயிரம் புரவிகளும் ஆயிரம் களிறுகளும்
கலிங்கத்துப் பரணியை நிகழ்த்திக் காட்டுகின்றன.” [ப 39, 40]

புலவர் செ.இராசு. அளித்த தகவலின் பேரில் ஈரோடு காளிங்கரா கால்வாய் அருகில் வளையல்கார தெருவில் உள்ள அய்யனாரப்பன் கோயிலுக்குச் சென்ற எழுத்தாளர் எஸ்.இராமகிருஷ்ணன், ஒரு பீடத்தில் இருந்த அந்த கழுமரம் பனை மரத்தாலானது, ஆறடிக்கும் குறைவான உயரம். பனஞ் செதில்கள் தேய்ந்து போயிருந்தன. சிலுவை போன்ற வடிவில் குறுக்குச் சட்டம் போடப்பட்ட அந்தக் கழுமரத்தில் இரண்டு இரும்புச் சங்கிலிகள் இணைக்கப் பட்டிருந்தன. கழுமரத்தை இப்போது காத்தவராயன் என்று வணங்குகிறார்கள்’என தனது வலைத்தளத்தில் பதிவு செய்துள்ளார்
கழு என்பது ஒரு அடிமரம் அல்லது மரம் போன்ற ஒரு நீளமான தண்டு. தரையில் நடப்பட்டு, மேல்முனை ஊசிபோல் கூர்மையாக்கப் பட்டிருக்கும். பலியாளைக் கூர்மையின்மேல் அமர்த்தி, அவர் உடல் இரண்டாய்க் கிழிபடும்படியாக, அவர் கால்களைப் பிடித்து கீழ்நோக்கி விசையாக இழுப்பார்கள்’என விளக்கமளித்துள்ளார் சிங்கராயர் (நூல்:பெரியார் பார்வையில் இஸ்லாமும் புத்தமும்).
‘கழுமரத்தின் உச்சியில் கூர்மையான மான் கொம்பு அல்லது இரும்பு முனை இருக்கும் அதில் குற்றவாளியின் ஆசனவாய் பொருத்தப் பட்டுக் காவலர்களால் தோள் பிடித்து அமுக்கப்படுவான். அவன் உடம்பு இறங்க இறங்க முனையானது உள்ளே வந்து புகுந்து கபாலம் வழியாக வெளிப்பட்டுக் கொடூர மரணம் நிகழும். மரணாவஸ்தை யாக இருக்கும்’என வர்ணித்துள்ளார் எழுத்தாளர் அருணன்.
திருவிளையாடற் புராணம் எழுதிய பரஞ்சோதி முனிவர், குலச்சிறையார், பல தச்சர்களை அழைத்து, வயிரமுடைய முதிர்ந்த மரங்களில் சூல வடிவிலான கழு மரங்களை (இந்த கழுக்கோல்) நிறுத்தியதாகத் தெரிவிக்கிறார்.’[ கோ.செங்குட்டுவன்,
சமணர் கழுவேற்றம் ஒரு வரலாற்று தேடல் ப 58]
“ கவிதை பொதுமக்களின் ரொட்டி “ என்கிற ஒரு கூற்றுமுண்டு.. இலட்சுமண பிரகாசம் தன் கவிதைத்துண்டுகளை அவ்வண்ணமே பிரித்துத் தருகிறார்.
“இந்த மண்ணை எத்தனை முறை அள்ளியள்ளித் தின்றிருப்பேன்.
அத்தனை சுவையானது இந்த மண்.
ஒரு பிடி மண்ணை எனக்காக கையில் வைத்திருங்கள்.
ஆமென்.”

“மசமசத்து பெய்கிறது வெயில்
ஆடுபுலி கட்டம் சும்மாக் கிடக்கிறது
ஆனாலும், சோழி உருளுது
மகாபாரத கூத்துக்கான ஒத்திகை
நாளெல்லாம் நடக்குது.
நெஞ்செரிக்குது நாட்டுச்சாராயம்
கூத்தியா வீட்டு மீன்குழம்பு ருசிக்கத்தான் செய்கிறது
நடுராத்திரியில் திரௌபதி வேசம்
துகிலுரிதல் வேளையில்
சபதம் போடும் பாட்டு
பகலில் உறுத்தும் காமமும்
சிவந்து போகிறது
ரம்மி சீட்டு ஒரு ஜோக்கர்
கொலசாமிக்கொரு சுருட்டும் நாட்டுச்சாராயமும் படையல்.
வக்காளி ஆட்டம் நம்ம கையில்
கருப்பேறிய வாயில் வெத்திலைச் சிரிப்பு”[ப.30]

நவீனக்கவிதையின் மிகப்பெரிய வெளிப்பாட்டுச்சுதந்திரம், படைப்புவெளிக்குள், சூரியனுக்கு கீழேயுள்ள எதையும் கவிதைப்பரப்புக்குள் கொண்டுவரலாம் என்பதே! மொழியைப் புதியப் பொருள்நிறைந்த ஆயிரம் அர்த்தங்களோடு புதுப்பிப்பது கவிதை. எனவேதான் கவிதையைமொழியின் அரசி என்கிறோம்.பேச்சுமொழியில் கவிதைசொல்லும்கலை தமிழில் பரவலாகவில்லை. மேலும் வாசகன்மேல் நவீனக்கவிதை என்ற பெயரில் உருட்டிவிடப்படும் உரைநடை வாக்கியங்களைச் செதுக்கிச்செதுக்கி கவிதையாய் உணர்ந்து கொள்ளவேண்டிய கட்டாயத்தில் தவிக்கும் வாசகனுக்குச் சுவையான இளநீராகக் கிடைக்கிறது இலட்சுமண பிரகாசத்தின் கவிதை

02.பெருந்தெய்வ வழிபாடும் பெண் தெய்வ வழிபாடும்
சிகரம் ச. செந்தில்நாதன்


தோழர் சிகரம் ச.செந்தில்நாதன் அவர்கள், மார்க்சிய சிந்தனையாளர். செல்வழிச் சிவந்த நல்வழி ஞாயிறுகளின் சொல்வழி நடப்பவர். அவருக்கு தெய்வங்கள் என்னும் இறைசக்தி மேல் நம்பிக்கை இல்லாமல் இருப்பதற்கு முக்கியக் காரணம் நூலாசிரியரான தோழர், ஜனசக்தியை நம்புபவர். அதேநேரம் எளிய மக்கள் நம்பி வணங்கும் இறைமை குறித்து அவருக்கு எண்ணிலடங்காக் கேள்விகள் இருக்கின்றன; கூடவே மக்கள் சக்தி மீதும் நம்பிக்கை இருக்கிறது. உழுகுடி மக்களின் உணர்வாய்.. உறவாய்க் கலந்த சிறுதெய்வ வழிபாடுகளும், நிறுவனமயமான பெருந்தெய்வ வழிபாடுகளும் அவர் சிந்தனையை ஈர்க்கின்றன, வினாக்களின் வீதியில் அவரைக் கொண்டு நிறுத்த, அவற்றின் மீது ஒரு வழக்கறிஞராக, வழக்காடு மன்றம் நடத்த விழைவதே ’பெருந்தெய்வ வழிபாடும் பெண் தெய்வ வழிபாடும்’ எனும் இந்நூல். சா. செந்தில்நாதன் அவர்கள் இந்நூல் வழியாக தர்க்கங்களால் ஒரு சொற்சிலம்பம் நிகழ்த்தியிருக்கிறார் என மதிப்பிடலாம். வெகுமக்கள் மொழியில் சொன்னால் ‘வூடு கட்டி வெள்ளாண்டுருக்கார்’

’பெருந்தெய்வ வழிபாடும் பெண் தெய்வ வழிபாடும்’எனும் இந்நூலில்:

 தாய் வழிச் சமூகம்
 பெருந்தெய்வ வழிபாட்டின் தோற்றம்
 சிறுதெய்வ வழிபாடு
 பட்டியல் சாதியினர் தாழ்த்தப்பட்டோர் நிலை
 பெண் தெய்வ வழிபாடு
 முக்கிய அம்மன் கோயில்கள்
 சித்தர்கள் ஒரு புதிர்
-எனும் ஏழு கட்டுரைகள் வழியாக சிறுதெய்வ, பெண்தெய்வ வழிபாடுகளை திசை திருப்பி அவற்றின் பண்பாட்டு விழுமியங்களை மூடி மறைத்து, ஒற்றைக் கலாச்சாரத்தின் கீழ் நின்று பணி செய்யும் கோயில்களாக, சிறுதெய்வக் கோயில்களும் பெண்தெய்வக் கோயில்களும் வழிபாட்டு முறைகளும் மாறிக் கொண்டிருக்கும் நிலையை தத்துவ தரிசனத்தோடும், தர்க்கங்களின் தராசு முள் பார்வையோடும் வாசகனுக்கு ஏற்ற எளிய மொழியில் விளக்கி இருப்பது தோழரின் எழுத்தாளுமைக்குச் சான்று
வேட்டைச் சமூகம், கால்நடைகளை மேய்க்கத் தொடங்க. நிலம் என்பது உடமையாக, சொத்தாக மாற, ‘தன் சொத்து தன் வாரிசுக்கே’என்ற நிலை மாற, தாய்வழிச் சமூகம் விடைபெற்று தந்தை வழி சமூகம் தன் அதிகாரத்தைத் தொடங்கியது. ‘ஆநிரை கவர்தல்’ தமிழ் இலக்கியத்தில் ஒரு முக்கியப் பங்கு வகிப்பதை உணர்கையில், கால்நடை வளர்ப்பு, தந்தை வழிச் சமூகத்தை ஏற்படுத்தியதும், ஆணின் ஆதிக்கத்துக்கும் தனிச்சொத்துடைமைக்கும் வழி கோலிய வரலாறையும் பேரறிஞர் ராகுல்ஜியின் சொற்களால் தமிழ் வாசகனுக்கு ஒளிபாய்ச்சுகிறார் தோழர்.செந்தில்நாதன். சொத்துடைமை, தாய்வழிச் சமூகத்தை விழுங்கி ஏப்பம் விட்ட பின், தந்தை வழிச் சமூகமாய் மாறிய காலத்தில் கொற்றவை வணக்கத்தின் முக்கியத்துவம் குறைந்து போனதையும், திணைத் தெய்வமாய், பாலை நிலத்தின் அடையாளாமாயிருந்த கொற்றவையெனும் பேருரு ஒன்று சிற்றுருவாய் மா(ற்)றிய வரலாற்றுண்மையையும் பதிவு செய்யத் தவறவில்லை நூலாசிரியர்
தான் சார்ந்த ஆண் தெய்வத்தோடு இணைக்கப்படுவதாலேயே பெயரும் பெருமையும் கிடைப்பதும் உண்மை. சிதம்பரம் ஆடல் வல்லானின் ஊர்த்துவத் தாண்டவம், சக்தியை தில்லைக் காளியாய் துரத்தியது எல்லைக்கெனில், வணிகமயமாக்கப்பட்ட மேல்மருவத்தூர் சடங்குகள் பெண் பக்தைகளுக்கான விதிவிலக்காயிருப்பவை பக்தைகளின் சக்தி, நிரம்பியதோ என்னவோ மருவத்தூர் கோயிலெனும் வியாபார ஸ்தலமாய் உருவாக்கியவரின் வாரிசுகளுக்கு, மருத்துவக் கல்லூரி, பொறியியல் கல்லூரி, இன்ன பிற சொத்துக்கள் என உடைமைகள் குவிந்த்தே நடைமுறை நிஜமாச்சு.
சிறுதெய்வமோ பெருந்தெய்வமோ பெண் தெய்வங்களுக்கு பெரிதாய் எங்கும் முக்கியத்துவம் இல்லை என்பதே காலம் காலமான கசப்பான உண்மை.

”தேவியர் எவருக்குமே
வழங்கப்பட்டதில்லை
விசுவரூப வாய்ப்பு”

இந்த நூலின் பலம் என்பது வரலாற்று, சமூகவியல் பின்னணியில் அமைக்கப் பெற்ற தர்க்கங்களின் அடிப்படையிலான வாதங்களின் வெற்றியாகும்.அதே நேரம் கள ஆய்வின்மையின் பலவீனமும் பளிச் சென்றே தெரிகிறது.
’பயம் தான் பக்திக்கு மூல காரணம்’[பக்கம் 76] என்கின்ற நூலாசிரியரின் கருத்தோடு சமகாலத் திரைப்படத் தொலைக்காட்சி, சமூக ஊடகங்களின் பாதிப்பும், அவற்றின் அதீத வெளிச்சமும் கூட பக்தி மார்க்கத்திற்கு காரணமாகின்றன. நடுகல் // நாகம்// மரம் போன்றவைமுக்கியத்துவம் பெற்றதையும் வாசகர்களுக்கு விளங்கும் வகையில் எளிய மொழியில் விவரித் திருப்பது சிறப்பு.

பெருந்தெய்வ ஆண் தெய்வங்களோடு போராட இயலாமல் தன் நிலை புரிந்து இரண்டாம் நிலை குடிமகன் என்ற நிலையில் குடிமக்களாகவே [SECOND CITIZEN POSITION] பெண் தெய்வங்கள் இருப்பதே சமகால நிஜம் காரணம் எந்த பெண் தெய்வத்திற்கும் வாய்ப்பதும் இல்லை, வழங்கப்பட்டதுமில்லை பேருரு தரிசன வாய்ப்பு..அந்த வகையில் இந்த நூல் பெண்ணியம் பேசுகிறது. பெண் தெய்வங்களுக்காக வழக்காடுகிறது.பெருந்தெய்வங்களிடம் போராடும் பெண் தெய்வங்களின் முடியா வழக்கும், ஓயாப் போராட்டமும் இன்னமும் தொடர்ந்துகொண்டே இருக்கிறது. இந்த நூலும் இதைத்தான் பதிவு செய்கிறது

03. பந்தயம் ( சிறுகதைகள் )
அமுதா ஆர்த்தி


” சமுதாய அமைப்பிலும் மனித உறவிலும் மாற்றங்கள் தோன்றி வளர்ந்து பெருகும் காலகட்டத்தில் வாழும் ஆக்க இலக்கிய கர்த்தாக்களின் உணர்வினை தாக்குவது புதிய சூழ்நிலையில் தோன்றும் மனித இன்னல் அல்லது புதிய சூழ்நிலையால் ஏற்படும் நடைமுறையே. இதுவே சிறுகதையின் கருவாக அமையும். குறிப்பிட்ட ஒரு சம்பவத்தில் மனித மனம் படும் பாட்டை அல்லது ஒரு பாத்திரம் இயங்குகின்ற முறைமையைக் குறிப்பதுவே சிறுகதை.” என சொல்லும் பேராசிரியர் கா. கைலாசபதி அவர்களின் சிறுகதை இலக்கணத்திற்கேற்ப எழுதப்பட்டுள்ள
அமுதா ஆர்த்தியின் கதைகளை வாசிக்கையில், சமகால எழுத்துலகில் ‘மனிதர்’குறித்த அக்கறையுடன் எழுதப்பட்டிருக்கிற சிறந்த தொகுப்பாகவே உணர்கிறேன்.

சிறுகதை வெளியிட்டு உத்தியில், மரபு ரீதியான கதை சொல்லல், அதற்குப்பின் நவீனக் கதைமொழி, பிறகோ பின் நவீனத்துவம் என பல உண்டெனினும் அமுதாவின் கதைகள், எதார்த்த வகை எழுத்துகளுக்கும் நவீன வகை எழுத்துகளுக்கும் இடைப்பட்டதாக இருப்பதை காணலாம்.

நவீனத்துவத்தில் மானுட அக்கறை மறைக்கப்பட்டு மொழி குறித்த பிரக்ஞையே முதன்மையாக்கப்படுதலே கள யதார்த்தம். ஆனால் அமுதாவின் கதைகள் சமூகம் புறக்கணித்த மனிதரை, ஆதரவற்ற, பிறரது உதவி தேடும் மனிதரை, கதைகளாய் பதிவு செய்பவை. மனிதர்கள், மனிதமனவிகாசங்கள்பண்பாட்டுவிழுமியங்கள், மனிதஉறவின்சிக்கல்கள், வரலாற்றுத்தகவல்கள், அரசியல்எனப்பலறையும்சரியானவிகிதத்தில்அழகியலோடுகலந்துநெய்கையில்பூரணமானதொருசிறுகதைகிடைத்துவிடுகிறது

பந்தயம் தொகுப்பில் 12 சிறுகதைகள். ஒவ்வொரு கதையும் தன்னளவில் தனித்துவம் வாய்ந்தது.கதைகளில் நடமாடுபவர்கள் நேற்று இன்று சற்றுமுன் என நாம் சந்தித்த, சந்திக்கிற மனிதர்கள். எளிய மனிதர்கள் அமுதாவின் பலமே ஸ்தூல மனிதர்களை பேனா மற்றும் கணிப்பொறிக்குள் நுழைத்து மறுபக்கத்தில் மறக்கவியலாப் பாத்திரங்களாக வாசகன் பார்வைக்கு தரும் எழுத்து திறன் தான் !.

தொகுப்பின் மிகச்சிறந்த கதை ரயிலை துரத்தும் இரவு. அப்படியாயின் பிற கதைகளில் சாரம் இல்லையா? எழலாம் கேள்வி..! நவரத்தினங்களில் வைரத்துக்கு கூடுதல் மதிப்பு இருப்பதால் ஏனைய 08 கற்களும் மதிப்பு குறைந்தவையாகிவிடாது அல்லவா.. ! மட்டுமின்றி ‘மாதங்களில் நான் மார்கழி ‘என்ற கண்ணனை பார்த்து புன்னகைக்காதா புரட்டாசி..?‘ரயிலை துரத்தும் இரவு’கதையில் சிறுகதையின் செய்நேர்த்தி பட்டு நெசவினைப் போல கனகச்சிதம் என்பேன்
.
விருத்தாசலம் சந்திப்பிலிருந்து கிறிஸ்துமஸ் தினத்திற்கு முந்தைய நாளில் முன்பதிவேதும் செய்யாமல் எக்ஸ்பிரஸ் இரயிலின் பொதுப்பெட்டியில் பெண் குழந்தையோடு நாகர்கோயில் செல்ல வேண்டிய இளம் பெண்ணின் மனப்போராட்டம் தான் கதை. யாரோ ஒரு ரயில்வே போலீஸ்காரர் மூலமாக டிடிஆர் பெட்டியில் இடம் வாங்கி கொடுக்க, விடியும் வரை அந்த பெட்டியில் ஓர் இரவை கடத்துவதும், கழிப்பதுமே கதையோட்டம், என்றாலும் பயணத்தின் பரபரப்பும், தனிமையின் பலவீனமும், மனித குணங்களின் தூய்மையும் அழுக்குகளும் என எல்லாம் கலந்து நேர்த்தியான கதையாக உருவாகியுள்ளது.
மணிப்பூரில் பல ஆண்டுகளுக்கு முன் இராணுவத்துக்கு எதிரான போராட்டத்தில் பெண்கள் தங்கள் நிர்வாண உடலை ஆயுதமாகக் கொண்டனர் என்பது வரலாறு. நேசர் உணவகம் – கதையின் முடிவும் மனப்பிறழ்வு கொண்ட பெண் ஒருத்தி கொடுமனம் கொண்ட கதைக்கணவன் பாத்திரத்துக்கு ‘தன் பாவாடையை தூக்கி நிர்வாணத்தை காட்டுகிறாள்’. ஒரு ஆண் தோற்கும் இடம் எஃதென புரிந்தவள்..!

சற்றே நீண்ட நெடுங்கதை வடிவத்தில் எழுதப்பட்டக் கதையில் வயிற்றுக்கு உணவும், வாழுமிடப் பாதுகாப்பும் இல்லை எனினும் ‘ஆண்’என்கிற மமதை கணவன்களாகிய கொடுங்கோலியாத்களிடம் வியாபித்திருப்பதை விரிவாய் காட்சிகளுடன் காண்பிக்கும் கதையில், வர்ணனைகள் கூட கதையமைப்போடு பொருத்தமாக சொல்லி இருப்பது சிறப்பு
அமுதாவின் கதாபாத்திரங்கள் ஏன் தோல்வியை மட்டுமே சந்திக்கின்றன? ஏன் இவர்களுக்கு மட்டும் இத்தனை கசப்பும் துவர்ப்புமான வாழ்க்கை ?கேள்விகளை எழுப்புவது தானே படைப்பாக்கத்தின் பணி!
பதிலாக முகிழ்க்கிறது அமுதா ஆர்த்தியின் என்னுரை :

“ பெருங்காட்டில் தனித்து விடப்படுகிற மனநிலையே கடந்த காலம். வாழ்க்கையில் பயம் மட்டுமே தொற்றிக்கொள்ள, காலம் அதன் போக்கில் அடையாளம் கண்டது. ஒவ்வொருவருக்கும் ஏராளமான கதைகள் உண்டு.அக்கதைகள் சொல்வதில் வேறுபடுகின்றன. அவற்றை எழுதி முடித்ததும் இலகுவான மனநிலை உருவாகிறது. இந்த மனநிலைக்காகவே மீண்டும் மீண்டும் கதைக்குள் கதையாக இருக்க விரும்புகிறேன்”

“ எழுத்தை விட வாழ்க்கை நுட்பமானதாகவும் புதிர்கள், எதிர்பாராத திருப்பங்கள் நிறைந்ததாகவும் இருக்கிறது. வாழ்க்கையின் முன்னெழுத்து பாவம் போல் இருக்கிறது “ என்பார் தோழர் ச.தமிழ்ச்செல்வன். வாழ்க்கை போலவே மனித மனங்களும் மனிதர்தன் செயல்பாடுகளும் வெளிப்படுத்தும் நாமொழியும், உடல் மொழியும் புதிர்களாலய், விடை தெரியாத விடுகதைகளாய்தான் நிரவித் தெரிகின்றன. அவற்றிலிருந்து நிகழ்வுகளைத் தேடிப்பிடித்து, சேகரித்து, கதைகளாய்க் கோர்த்துத் தருவது, பெரும் சவால். ஆனால் அத்தகைய சவாலை, அமுதா ஆர்த்தி அனாயசமாகக் கையாண்டிருக்கிறார் என்பதற்கு பந்தயம் தொகுப்பு நிரூபணம்.

ஊர், கிராமம், நகரம், வீதி, வீடு என்பதெல்லாம் என்ன? மனிதர்கள் வாழும் பகுதிதானே! மனிதர்கள் இல்லையெனில், மனிதர்களின் மனமாச்சர்யங்கள், அபிலாசைகள், உயர்குணங்கள், பிறழ்வுகள் இவற்றோடு மற்றவைகளும் எப்படி கதைகளாய், கவிதைகளாய், ஓவியங்களாய் உருவாகும். இருண்மை, உள்முகத்தேடல், ஆன்மவிசாரணை போன்ற கலைப்பொய்களுக்கும் அடிப்படை மனிதர்கள்தானே! அப்படி நம் கண் முன்னே பார்த்த/ பார்க்கும் மனிதர்களின் பற்றிய கதைத்தொகுப்பு இதுவென உறுதிபடக் கூறலாம்.
அமுதாவின் கதைகளின் பள்ளிச்சிறுமிகள், பாசம் கொண்ட பாட்டிகள், பொறுப்பில்லாத ஆண்கள், மனப்பிறழ்வு மனிதர்கள் யாவரும் விரிவான ஆய்வுக்கு உட்படுத்த வேண்டியவர்கள்.

Leave a comment

Trending