விலக்கப்பட்ட உறவுகள் குறித்த உரையாடல்:
மாதீஸ்வரி நாவல் முன்வைக்கும்
கேள்விகளும் பதில்களும்
முனைவர் உமாமகேஸ்வரி க.

இந்தியச் சமூகம் சாதிகளாலும் சாதிய முரண்களாலும் இயங்குகிறது. சாதிய மேலாண்மை சமூக மேலாண்மையாக அதிகாரத்தைக் கைக்கொள்ளச் செய்கிறது. அது மரபாகத் தொடர்கிறது. ராஜாவாக, ஜமீன்தார்களாக, மிட்டாமிராசுகளாக வலம்வந்த குடும்பத்தில் நிகழும் ஒரு சிக்கல் எப்படி அக்குடும்பத்தை நிர்மூலமாக்குகிறது என்பதே ‘மாதீஸ்வரி’ நாவல்
உறவுநிலைகளில் எழும் முரண்பாடுகளும் சிக்கல்களுமே நல்ல நாவல்களுக்கு அடிப்படையாக அமைந்துள்ளன. தமிழில் எடுத்துக்காட்டுகள் பல உள்ளன. ஷாராஜ் எழுதிய மாதீஸ்வரி நாவல் அண்மைய எடுத்துக்காட்டு.

பாலியல் உணர்ச்சிகளை முறைப்படுத்தவும் ஒழுங்குபடுத்தவும் உறவுமுறைகள் ஏற்படுத்தப்பட்டன. இந்த உறவுமுறைகள் இயல்பாகத் தோன்றும் பாலியல் உணர்வுகளுக்கு ஏற்புடையனவா? எதிரானவையா? என்ற கேள்விக்கு பதில் தேடலே மாதீஸ்வரி. .
’என் பெயரை வலுவாக அடையாளப்படுத்தக் கூடியது என நான் கருதுவது மாதீஸ்வரி’ என ஷாராஜ் மதிப்பிடும் இந்நாவலை மதிப்பிடவேண்டியது அவசியம்.
இந்த நாவல் மூன்று இழைகளால் பின்னப்பட்டுள்ளது.
- மாதீஸ்வரியின் வாழ்வு
- பட்டிமுத்துவின் குற்றவுணர்ச்சி
- இந்து முஸ்லீம் ஒற்றுமைக்குலைவு
இந்த மூன்று இழைகளையும் கொரோனா காலகட்டப் பின்னணியில் நாவலாக்கியுள்ளார் ஷாராஜ்.
மாதீஸ்வரி நாவலின் தொடக்கம்:
எந்த ஊரோடும் பொருந்திப்போகும் துலுக்குவார்பட்டி என்ற கற்பனை ஊரைக் களமாகக்கொண்டு ஷாராஜ் எழுதியுள்ள இரண்டாவது நாவல் இது. நாவலின் முதல்வரி இப்படித் துவங்குகிறது.
’துலுக்குவார்பட்டி குக்கிராமமே மாதீஸ்வரியின் மரணத்தை எதிர் நோக்கியிருந்தது. ’
தொடர்ந்து
”எப்பேர்ப்பட்ட குடும்பம், எப்பேர்ப்பட்ட பரம்பரை , வெட்டவாளும் கட்ட சங்கிலியும்னு ஊரை ஆண்ட வம்சம். ஏழு தலைக்கெட்டு சகாப்தமே முடியப்போகுது. ஊராண்ட பரம்பரைக்கு இனி இந்த ஊருல வம்சமே இருக்காது. ”
”இத்தன காலமா மாதீஸ்வரியம்மா மூலைல மொடங்கிக் கெடந்துச்சு. குடும்பத்துல அந்தம்மாதான் கடைசியா ஒத்தையா ஊருல மிச்சம் மக்கமாரு ஊரைவிட்டுப் போனாங்கொ, அந்தம்மா உலகத்தைவிட்டே போகப்போகுது. ”
வீடுகள், தேநீர் கடைகள், காடு தோட்டம் எங்கும் பெருசுகள் பேசிக்கொண்டிருந்தன. இன்னும் பேசுவதற்கு பேசித்தீராத கதைகளும் காரியங்களும் ஏராளம் உள்ளன.” (ப. 18)
என்ற முதல் அத்தியாய முன்னுரை வாசகனுக்குள் எதிர்பார்ப்பை உண்டாக்குகிறது.
மாதீஸ்வரியின் வாழ்வு;
மாதீஸ்வரியின் மரணப்படுக்கையில் தொடங்கி மரணப்படுக்கையிலேயே முடிகிறது நாவல். ஆளுமைமிக்க பெண்ணாகப் படைக்கப்பட்டிருக்கும் மாதீஸ்வரி ஒரு ஜமீன் குடும்பத்திலிருந்து, ஜமீனாக இருந்து மிராசுதாரராக மாறியிருக்கும் குடும்பத்திற்கு வாழ்க்கைப்பட்டு வந்தவர். சிறுவயதிலிருந்தே ஏழைகள்மீது பரிவு கொண்டவளாகச் சித்திரிக்கப்பட்டுள்ள மாதீஸ்வரி பாத்திரவார்ப்பு சமூகத்திற்குள் உள்ள ஏற்றத்தாழ்வுகளைக் களையவேண்டும் என்ற படைப்பாளனின் நிறைவேறாத கொடுங்கனவு.
ஊர்த்தலைவராக இருந்த கணவன் சென்ராயனை வினோபா பாவேவின் பூமிதான இயக்கத்திற்கு நிலம் தானமாக வழங்கவைத்தல், பஞ்சகாலத்தில் ஏழைகளுக்கு கிடங்கிலிருந்து தானியங்களை வாரம்தோறும் கொடுக்கச்செய்தது, தானே ஊர்த்தலைவரானபின், பட்டியல் சாதியினரிடமிருந்து சுயசாதியினரால் எழுதிவாங்கப்பட்ட பஞ்சமி நிலங்களை மீட்பதற்கான முன்னெடுப்புகள் என ஒரு லட்சியப்பாத்திரமாகவே படைக்கப்பட்டுள்ளார் மாதீஸ்வரி. ஏழைகளின் உழைப்பைச் சுரண்டியும் சாதிய அடக்குமுறைகளுக்கு ஆளாக்கியும் அதிகார மேலாண்மையைத் தக்கவைத்து சுகபோகம் அனுபவிக்கும் ஜமீன்தாரிய மனநிலையிலிருந்து மாறுபட்டு சிந்திப்பவளாக இருக்கிறாள் மாதீஸ்வரி.
சென்ராயனின் மறைவுக்குப் பின்னான மாதீஸ்வரியின் வாழ்வு துயரங்களாலானது. மணமாகி ஊர்த்தலைவர் பொறுப்பிலிருந்த மூத்தமகன் வெள்ளியங்கிரி தோட்டத்து வேலைக்குவரும் நூர்ஜஹான்மீது காதல் கொள்கிறான். இது தெரியவந்ததும் மாதீஸ்வரி நூர்ஜஹானின் தந்தையை அழைத்துப் பேசுகிறாள். ஒருவாரத்தில் நூர்ஜஹானுக்கு திருமணம் முடிகிறது. வெள்ளியங்கிரி பூச்சிமருந்து குடித்து மரிக்கிறான். ஊரார் உறவினரின் பழிச்சொல்லுக்கு ஆளான வேதனையோடு ஊர்த்தலைவராகிறாள். அவமானத்தால் உடைந்த மனத்திற்கு ஆறுதல்தேடி தங்கைமகள் சித்ராங்கியை வரவழைக்கிறாள். சிறுவயது முதலே வந்துபோய்க்கொண்டிருக்கும் துடிப்பான, அழகான, உழைக்கத் தயங்காத பெண் அவள். அடுத்த அவமானம் அவள்வழியே வருகிறது.
மாதீஸ்வரியின் மூன்றாம் மகனான பட்டிமுத்து தோட்டத்தில் எந்த வேலையும் செய்யாமல் சமவயது கூட்டாளிகளுடன் ஊர்சுற்றுவது, பெண்களைப்பற்றி கொச்சையாகப் பேசுவது, பாலியல்படங்கள் பார்ப்பது என பொறுப்பற்றுத் திரிபவன். அவனைப் பொறுப்பாக்க மாதீஸ்வரி எடுத்த முயற்சிகள் பலிக்கவில்லை. சித்ராங்கியின் அறிவுரையால் தோட்டத்திற்கு வருகிறான் பட்டிமுத்து . பட்டிமுத்துவின் குற்றவுணர்ச்சிக்கான புள்ளி இங்கு துவங்குகிறது.
சித்ராங்கியின்மீது காம உணர்வுகொள்கிறான் பட்டிமுத்து. அவனது பார்வையின் பொருளைப் புரிந்துகொள்ளும் சித்ராங்கி ஒதுங்கிப்போனாலும் அவனை வெறுக்கவில்லை. காரணம் அவனின் மீதான விருப்பம்தான். இருவரின் உணர்வுகளும் உடல்களை வென்றுவிடுகிறது. தவறு என்ற நினைப்போடே உறவுதொடர்கிறது. சித்ராங்கியின் கர்ப்பம் வெளியே தெரிந்தால் கொன்றுவிடுவார்கள் என்ற அச்சத்தால் வேறுமாநிலத்திற்கு தப்பிப்போகிறார்கள்.
”ஊர்-உலகத்து மூஞ்சில முழிக்கறதுக்கு எனக்கு அருகதையே இல்ல. அந்தப் பரம சண்டாளப் பாவி பட்டிமுத்தானைப் பெத்த பாவத்துக்கு தண்டனையா, இனிமே நான் இந்த வீட்டுக்காம்பெளண்ட விட்டு வெளிய போக மாட்டேன். ஆயுசு பூரா இங்கயே கெடந்து சாகப்போறேன்” (ப. 140) என்று சூளுரைத்துவிட்டு தன்னைச் தனிமைச்சிறையில் அடைத்துக் கொள்கிறாள் மாதீஸ்வரி. ஊராரின் மதிப்பைப் பெற்ற மாதீஸ்வரி, மகன் செய்த செயலுக்காகத் தன்னையே தண்டித்துக்கொள்ளும் செய்தி சுற்றுவட்டாரத்தில் அவளது மதிப்பை மேலும் உயர்த்தியது.
வேறுமாநிலத்தில் கடும் உழைப்பாளிகளாக , உணவுக்கே போதாமல் கஷ்டஜீவனம் நடத்தி பன்னிரண்டு ஆண்டுகளுக்குப்பின் பிரகதீஷ், பிரபல்யாவுடன் திரும்ப வரும் பட்டிமுத்து, சித்ராங்கியை உறவினர்கள் வசைபாடுகிறார்கள். மாதீஸ்வரி வீட்டிற்குள்ளேயே அனுமதிக்கவில்லை. பொதுமனிதர்கள் மூலம் இருவீட்டு சொத்திலிருந்தும் பங்கு வாங்குகிறார்கள். சித்ராங்கியின் பாகத்தை விற்றுவிட்டு கோவைக்கருகில் நிலம்வாங்கி மேட்டுக்காட்டைத் தோட்டமாக்கி வசதியான வாழ்க்கைக்கு முன்னேறுகிறார்கள்.
பட்டிமுத்து தன்பங்கை விற்காமல் இடையிடையே ஊருக்கு வந்து தாயிடம் மன்னிப்பு பெற்றுவிட வேண்டும் என்று துடிக்கிறார். தாயின் பாராமுகத்தால் தன் செயலை நினைத்து, குற்றவுணர்ச்சிக்கு ஆளாகி மனரீதியாக பாதிக்கப்படுகிறார். மகனும் மகளும் அவருக்காகப் பரிதாபப்படுகிறார்கள். கூடவே ஆறுதலாக இருக்கிறார்கள். தன் செயலை நியாயப்படுத்தும் தாய்மீது கோபப்படுகிறார்கள். பிரபல்யா வாய்ப்புக் கிடைக்கும் போதெல்லாம் வார்த்தைகளால் குத்திக்கிழிக்கிறாள். தாய்தந்தை வழி தங்கள் பரம்பரைப் பெருமைகளை அறிந்து கொண்டவர்கள் பாட்டியைச் சந்திக்கவேண்டும் என ஆசைப்படுகிறார்கள்.
மரணப் படுக்கையிலிருக்கும் மாதீஸ்வரியம்மாவை கடைசிவாய்ப்பாகப் பார்த்துவிடவேண்டும் என பட்டிமுத்து குடும்பத்தினர் வருகின்றனர். நடுப்புணிக்காரர் என்ற பொதுமனிதர் அழைத்துப் போனபோது விரட்டிவிடுகிறார்கள். பிரகதீஷும் பிரபல்யாவும் மதிலைத் தாண்டிக் குதித்துச் சென்று ‘தங்களைப் பேரப்பிள்ளைகளாக ஏற்றுக்கொள்ளும்படி’ கேட்கிறார்கள். அவர்களை ‘பாவத்தின் வித்துகள்’ என்று வெளியே விரட்டிவிடுகிறார் மாதீஸ்வரியம்மா.
பெற்றோரின் செயலால் பிள்ளைகள் அடையும் உளவியல் சிக்கல்களை ஷாராஜ் பிரகதீஷ், பிரபல்யா பாத்திரங்கள் கொண்டு நிறைவாகச் சித்திரித்துள்ளார். பெற்றோரின் உறவுமுறை தெரிந்துவிடுமோ என்ற பயத்தில், நண்பர்களைத் தவிர்த்து தங்களைத் தனிமைப்படுத்திக் கொள்கிறார்கள். பிரகதீஷிற்கு பெண்கொடுக்க யாரும் முன்வருவதில்லை. பிரபல்யா திருமணத்தையே வெறுக்கிறாள். . மாதீஸ்வரியம்மா தங்களை ஏற்றுக்கொண்டால் மனவலிக்கு ஆறுதல் கிடைக்கும் என்ற நோக்கில் பிரகதீஷ் சாகும்வரை உண்ணாவிரதப் போராட்டத்தை முன்னெடுக்கிறான். அது பேசுபொருளாகிறது.
நாவலில் மூன்றாவது இழையாக இந்து முஸ்லீம் ஒற்றுமைக்குலைவு என்பதை கொரானா காலகட்டத்தோடு இணைத்து நாவலில் கட்டியுள்ளார் ஷாராஜ். இந்துத்துவவாதிகளின் ’கொரானா ஜிகாத்’ என்ற தவறான பரப்புரையால் இஸ்லாமிய ஜிகாத் இயக்கத்தொடர்பிலிருந்த முஜிபுர் ரகுமான் அடித்துக் கொல்லப்படுகிறான். சுக்கூரின் மகன் யூனுஸ் சாதாரணக்காய்ச்சலை கொரானா என்று ஏசிய ஊராரின் பழிச்சொற்களால் மனக்காயப்பட்டு தற்கொலை செய்து கொள்கிறான். இந்து முஸ்லீம் உறவுக்கு எடுத்துக்காட்டான ஊரில் இரு சமூகத்தினரும் ஒருவித அச்சத்துடனும் நம்பிக்கையின்மையுடனும் வாழும்நிலை உருவாகிறது.
கொரானா பற்றிய செய்திகள் நாவலின் இடையிடையே வருகின்றன. தடுப்பூசி போடாமலிருக்கும் ஊராரிடம் பிரகதீஷ் இரண்டாவது அலையின் வீரியத்தை எடுத்துக்கூறுகிறான். மாதீஸ்வரியம்மா வீட்டுப்பணிப்பெண் முத்தரசியின் தந்தை கொரானாவின் முதல்பலியாகிறார். உதவ யாரும் முன் வராதபோது பிரகதிஷ் தன் உண்ணாவிரதப் போராட்டத்தை கைவிட்டு அவர்களுக்கு உதவ சுக்கூர் வீட்டு உணவை உண்டு தெம்பாகிறான். சுக்கூர், மற்றும் பாடைகட்டியவர்களின் உதவியோடு இறந்தவரின் உடலை அடக்கம் செய்கிறான். ஊரே அவனின் செயலை மெச்சுகிறது. நடுப்புணிக்காரர் மூலம் பிரகதிஷ் வரவழைக்கப்படுகிறான் நாலுகட்டு வீட்டிற்குள்.
”இந்த ஊரோட தலைவியா இருந்தவங்கற முறைல சொல்றேன். இன்னொரு மனுசனுக்காக, நீ உன்னோட சொந்த நோக்கத்துக்கான போராட்டத்தைக் கைவிட்டுட்டுப் போனதுனாலதான் உன்னையக் கூப்புட்டு வெச்சு” என பிரகதீஷிடம் தன் பிடிவாதத் தளர்வுக்கான காரணங்களைக் கூறுகிறார் (239). தனக்குப்பின் தன் வீட்டை கொரானா வார்டாகப் பயன்படுத்த அனுமதிக்கிறார்.
”நாம மறுபடி பாப்பமான்னு தெரியல. பாக்கமாட்டம். இதுதான் கடைசின்னு தோணுது. அதனால, இதையும் சொல்லிர்றன். உங்க அப்பா- அம்மாவை நான் என்னைக்கும் மன்னிக்க மாட்டேன்; அவுங்களை ஏத்துக்கவும் முடியாது. உந்தங்கச்சிகிட்ட எல்லாத்தையும் மறந்திட்டு, கல்யாணம் பண்ணிக்கச் சொல்லு. நான் சொன்னேன்னு சொல்லு . நீயே அவளுக்கு நல்ல மாப்பளையாப் பாத்துக் கல்யாணம் பண்ணி வெய்யி” (ப. 240).
பிரகதீஷின் உண்ணாவிரதம் வெற்றிபெற்றது அவனுக்குள்ளிருந்த மனிதநேயப் பண்பால்தான். தனக்குள்ளிருந்த எளியவர்கள் மீதான அன்பையும் கரிசனத்தையும் தன் மகன்களிடம் காணமுடியாத நிலையில் பிரகதீஷிடம் தன்னையே கண்டுகொள்கிறார் மாதீஸ்வரியம்மா. இதை ஆயிஷா நானியின்
“உங்கப்பத்தா ஏத்துக்குதோ இல்லையோ, அதோட நேசம், கருணை, தர்மம், தைரியம், காக்கற குணம் எல்லாமே உனக்குத்தான் வாய்ச்சிருக்குது. ”(ப. 231) என்ற கூற்று உறுதிப்படுத்துகிறது.
“உண்ணாவிரதத்தைக் கைவிட்டதுனால, உன்னோட நோக்கத்துல நீ தோத்துட்ட. இருந்தாலும் ஒரு தலைவனுக்கு உண்டான தகுதியோட , மனுசனா ஜெயிச்சிட்ட. அதுக்கு என்னோட பரிசு. ”(ப. 241)
என்று பேழையை நீட்டினார் மாதீஸ்வரியம்மா. “திறந்து பார்த்தான். இரண்டு அடி நீள வெள்ளி வாளும் அதே அளவு நீளமான வெள்ளிச் சங்கிலியும் இருந்தன”(ப. 241). அதிகாரத்தின் அடையாளமாக இருந்த ’வெட்ட வாளும் கட்ட சங்கிலியும்’ பிரகதீஷின் கைகளில் வந்து சேர்வதோடு நாவல் நிறைவடைகிறது.
பாலியல் கட்டுப்பாடுகள் உறவுமுறைகளுக்கு உட்பட்டதா? மீறல்கள் ஏற்கத் தக்கதா? என்ற கேள்விதான் நாவலின் மொத்தமும். உறவு மீறிய பாலியல் ஈர்ப்புகள் என்ன விளைவுகளை ஏற்படுத்தும்? குறிப்பாக சகோதர சகோதரி உறவுமுறைக்குள் வரும் காமஉணர்வு சரியா தவறா?, எந்த இடத்தில் சரி? எந்த இடத்தில் தவறு?. இந்தக் கேள்விகளுக்கான பதிலை சித்ராங்கி பலரிடமும் கேட்கிறாள். முஸ்லீம்கள் சகோதர உறவில் மணமுடிக்கிறார்கள் ஏன் இந்துக்கள் அவ்வாறு செய்வதில்லை?. இதற்கான பதில் மாதீஸ்வரியிடமிருந்தும் முஸ்லீம் தோழிகளிடமுமிருந்து வருகிறது. ”ஒண்ணுவிட்ட அண்ணன் தங்கச்சி, தூரத்து சொந்தம்னு மட்டுமல்ல; எந்த ஜாதியானாலும் ஒரே குலத்துல கூட கல்யாணம் பண்ணிக்க மாட்டாங்க. ஒரே குலத்தைச் சேந்தவங்க, சொந்தமில்லன்னாலும், சகோதர உறவுமுறைதான். அதனால, ஒரே குலத்துல கல்யாணம் பண்ணமாட்டாங்க. கல்யாணப் பேச்சு எடுக்கறதுக்கு முந்தியே குலம்- கோத்திரம் கேக்கறது அதுக்குத்தான். வேற ஜாதில, மதத்துல கல்யாணம் பண்ணுனாலும் பண்ணலாமே தவுத்து, ஒரே குலத்துல பண்ணவே கூடாது. ” (ப. 118)
“நாங்க மச்சான் மொறையையும் கட்டிக்கலாம். ஆதம்- ஹவ்வாவே, அண்ணன் – தங்கச்சிதானே! அண்ணன் – தங்கச்சிலருந்துதான் இந்த உலகத்துல இருக்கற எல்லா மனுசங்களும் உண்டானாங்க. அதனால அண்ணன் – தங்கச்சி கல்யாணம் பண்ணுனாத் தப்பில்ல. ஆனா, கூடப் பொறந்த அண்ணன் – தங்கச்சி மட்டும் கல்யாணம் பண்ணிக்கக்கூடாது” (ப. 118).
சித்ராங்கி தனக்கான நியாயத்தை “ மனிதன் மட்டுமே இத்தகைய உறவுக் கட்டுப்பாடுகளை நியமித்துள்ளான். இயற்கைக்கு அப்படி எதுவும் இல்லை. மிருகங்கள், பறவைகள், பிராணிகள் இத்தகைய உறவுகளைப் பார்க்கின்றனவா? அவற்றுக்கு ஜாதி – மதம் –சாஸ்த்திரம் – சம்பிரதாயம் எதுவும் இல்லை. திருமணமும் தேவையில்லை. எந்த ஆணும் எந்தப் பெண்ணுடனும் உறவு கொள்ளலாம்.” ( ப. 127). என சித்ராங்கி தான் செய்வது தவறு என்று தெரிந்தும் குற்றவுணர்ச்சி இல்லாமல் இருக்கிறாள். ஆனால் பட்டிமுத்து “ மனுசனுக்கு மட்டும்தான் பகுத்தறிவு இருக்குது. அது மூலமா நல்லது கெட்டது பகுத்தறிஞ்சு இப்புடி, இப்புடி இருக்கணும்; இப்புடியெல்லாம் இருக்கக் கூடாதுன்னு முன்னோருக வகுத்து வெச்சிருக்கறாங்க. அதை மீர்றது செரியில்லயே” ( ப. 127) என்று பேசிக்கொண்டே. அவளோடுள்ள உறவைத் தொடர்கிறான்.
ஷாராஜ், இந்த நாவலில் சித்ராங்கியை மட்டும் குற்றவாளியாக்குகிறார். “ அவளுக்குத் துளியேனும் குற்ற உணர்ச்சியே இல்லை… . . . . . . . . ஊர் – உலகம் அதை ஏற்காது; தவறென்று சொல்வது மட்டுமல்ல; தெரிந்தால் காறித் துப்பும் என்பதும் அவளுக்குத் தெரியும். அதைப் பற்றி அவளுக்குக் கவலை இல்லை. ” ( ப. 128). . அவளுக்கு பாலிச்சை அதிகம் என்கிறார். கூடவே “ இவனுக்கும் பாலியல் சுகம் பெரும் போதையாகவே இருந்தது. . . . . . . . . கலவி சுகமே ராஜ சுகம் என்று ரசவாத சித்தர் சொன்னது முற்றிலும் சரி. வாஸ்தவத்தில், அந்த ராஜசுகமே இவனுக்கு ராஜபோதையும் கூட ” (ப. 129). என பட்டிமுத்துவின் உணர்வைக் காட்டுகிறார்.
பட்டிமுத்துவின் இயல்பைக் காட்டும்போது பொறுப்பற்றவனாக, பாலியல் படங்கள் பார்ப்பவனாக, பெண்கள்மீது ஈர்ப்பு கொண்டவனாக, நண்பர்களோடு அதைப்பற்றியே பேசுபவனாக சித்திரித்துள்ளார். சித்ராங்கியைக் காம உணர்வோடு முதலில் பார்த்தவன் பட்டிமுத்துதான். . ஆனால் பட்டிமுத்துவை தான் செய்தது தவறு என்று மறுகுபவனாகக் காட்டுகிறார் ஆசிரியர். மகனுக்கு திருமணம், தடைபடுவதும் மகள் திருமணத்தையே வெறுப்பதும் தன் செயலால்தான் என்று உணராதவளாக இறுதிவரை சித்ராங்கியைப் படைத்திருப்பது குறையாகவே படுகிறது . பெண்களின் பாலிச்சை பற்றியும் திருமணம் மீறிய உறவுகள் குறித்தும் ரசவாத சித்தர் என்ற பாத்திரம்வழி பேசுகிறார். இதே விஷயம் இவருடைய “உய்யடா உய்” சிறுகதையிலும் பேசப்படுகிறது. இதை ஆசிரியரின் பார்வையாகவே கொள்ளத்தோன்றுகிறது.
முறை தவறிய பாலியல் உறவுகள் குறித்து ஆசிரியர், “தவறுகள் செய்வது மனித இயல்பு. பாவங்கள் சந்தர்ப்ப சூழல்களாலும், மனித பலவீனங்களாலும் ஏற்படுகின்றன. ஓரளவிற்கு இயற்கையையும் அதற்குக் காரணமாகச் சொல்லலாம். அறிந்தோ அறியாமலோ செய்கிற தவறுகளுக்காக வருந்தவும், தன்னை மீறிச் செய்துவிட்ட பாவங்களுக்காகக் குற்ற உணர்வு கொள்ளவும் வேண்டும் அல்லவா? அதுதானே மனித மாண்பு. அதில்லாமல், நான் செய்தது தவறல்ல; பாவமல்ல என்று வாதிட்டுக் கொண்டிருந்தால்……?( ப. 32) என்று தன் பார்வையை முன்வைக்கிறார். இதுவே நாவல் முழுதும் விவாதிக்கப்படுகிறது.
சமூகத்தில் விலக்கப்பட்டவற்றை விவாதத்திற்குள்ளாக்க வேண்டியது படைப்பாளனின் கடமை. அந்தவகையில் மாதீஸ்வரி நாவல் குறிப்பிடத்தக்கது.
நாவலில் இந்து-முஸ்லீம் சிக்கல்கள், கொரானாக்காலம் பற்றிய விரிவான விபரங்கள், இளைஞர்களின் பாலியல் உரையாடல்களின் நீட்சி, பெண்களைச் சித்தர்காலப் பார்வையில் பார்ப்பது போன்றவற்றைத் தவிர்த்திருந்தால் நாவல் செறிவாக வந்திருக்கும். முக்கியமான நாவலாகவும் மாறியிருக்கும்.

Leave a comment