இளையவன் சிவா கவிதைகள்

1.
என்ன எதிர்பார்க்கப்போகிறது
இந்த வாழ்க்கை
விழும்போது தாங்கிட கரங்களையும்
அழும்போது துடைத்திட அன்பையும்
தவிர.
2.
கணக்கற்று நீள்கின்றன
காணும் திசையெங்கும்
கைப்பேசிகளின் புத்துலகம்.
காணவே முடிவதில்லை
பொதுக்கழிப்பிடங்களின் கம்பீரம்.
3.
கொஞ்சம் அன்பு
கொஞ்சம் கெஞ்சல்
கொஞ்சம் கோபம்
கொஞ்சம் எதிர்பார்ப்பு
கொஞ்சம் ஊடல்
ஒட்டிக் கொண்டிருந்தாலே
எட்டிப் பார்ப்பதில்லை
எல்லையற்ற
பழியும் பாவமும்.
4.
எல்லோருக்கும் தெரிகிறது
எதிர்பார்ப்புகளின் அழுத்தம்
விடமுடியா ஆசையில்
தள்ளாட்ட நடை போடுகிறது
வாழ்வின் யதார்த்தம்
5.
கால்நடை போலே கவனத்தில் பதிக்காது
கல்லையும் மண்ணையும் கலந்தது போலே
சிந்தனையற்று வெந்ததைத் தின்று
விதியைப் பின்பற்றி வேடிக்கை பார்த்தபடி
அறிவின் வளர்ச்சியில் அடியெடுத்து வைக்காது
அடிமையாய் புழுவாய் கைநாட்டாய் கடைச்சரக்காய்
தெருவில் திரிந்த விலங்கின வரிசையில்
தன்னையும் இணைத்தபடி வாழ்வை நகர்த்தியவனுக்கு
விரிந்தே கிடந்த கல்வியின் பாதையில்
வரலாறுகள் திரும்பின.
சுருங்கிக் கிடந்த மனதின் இருட்டுக்குள்
சொர்க்க வாசலென ஒளியூட்டிய எழுத்தின் பின்னே
இளைப்பாறுதல் தொடங்கிய எண்ணங்களுக்குள்
உணர்வென வளர்ந்தது அவனவன் ஆற்றலின் எல்லை.
கல்வியின் கரங்களைப் பிடித்தபின்
கற்பனை விரிய காட்சிகள் பிறக்க
தன்னை அறிந்தே தரணியைப் பார்க்கிறான்.
எழுச்சியின் ஏற்றத்தில் எங்கும் பிறக்கலாம்
விரிவானத்தின் வெளிச்சப் பாதை.
6.
பகுத்தறியும் பாதையிலே பண்போடு நடைபோட
மனத்தோடு காண்பதெல்லாம் மற்றவர் நிலை நின்று
உணரத் தலைப்பட்டால்
ஆறறிவின் பயனறியும்
ஆனந்தமெனும் குணம் பெறலாம்.
கேட்பதெல்லாம் சிறந்ததென்றே
கண்மூடி நம்பியிராமல்
அறிவின் உரைகல்லில் அலசிப்பார்த்திடலே அவசியமாகிறது.
காண்பதெல்லாம் கவருகின்ற காட்சியென்றே கணக்கீட்டில் விழுந்திடாமல்
கவனத்தை அதில் செலுத்தி ஆராய்தல் தலைப்படலே
அடுத்தடுத்த நகர்விற்கு அவசியமாகிறது.
எண்ணத்தில் கசடுகளை ஏற்றிக்கொண்டாலோ
மயக்கத்தில் நம்மைப் புகுத்தி
மரணத்தைத் திறந்து விடும்
மதிகெட்ட மனம்.
காணும் உயிரெல்லாம் தனதென்றே
பேணும் முறையென்னும் கருணைக்குள் புகுந்த பின்னே
பிரித்தாளும் நிலை தாண்டி
பேதமை புதைத்துவிட்டு
அன்பாலே இணைந்திடும் கரங்கள்.
காண்பதும் கேட்பதும்
கவனத்தில் செய்யும் செயலும்
அறிவின் ஆழத்தில் மெய்ப்பொருள் கண்டுவிட்டால்
அகிலமெங்கும் ஆனந்தம்
விளைந்திடுமே உமது திறத்தாலே.
இளையவன் சிவா

Leave a comment