மொழிபெயர் சிறுகதை
ஒரு மழைக்காலம்..
கன்னட மூலம்: லஹரி
தமிழில்: லட்சுமி பைரப்பா

சில மாதங்களுக்கு முன்பு உடல்நிலை சரியில்லாமல் சிகிச்சைப் பெற்று குணமடைந்த சியாமண்ணா, ஒரு மாதத்திற்குப் பிறகு பரிசோதனைக்காக மீண்டும் அரசு மருத்துவமனைக்குச் சென்றார். அவருடைய நல்லநேரம், இடைவிடாது தொடர்ந்து ’ஜோ…’வென்று கொட்டிக் கொண்டிருந்த மழை அன்றைய தினம் அவரைத் தொந்தரவு செய்யவில்லை.
சியாமண்ணா சாயங்காலம் மருத்துவமனையிலிருந்து வீட்டிற்கு வந்தார். தன் மனைவி சியாமளாவிடம், “எல்லாம் சரியாயிடுச்சின்னு சொன்னாங்கமா. நல்லாதான் இருக்கேனாம். இன்னும் கொஞ்ச நாள் இந்த மருந்த சாப்டா போதும்ன்னு சொல்லிட்டாரு டாக்டர்.” என்றார் மகிழ்ச்சியுடன்.
“அப்பாடா. இவ்ளோ நாள் நாம ஒவ்வொரு மாசமும் எப்படி மருந்துக்கு பணத்தப் பொறட்டுறதுன்னு கவலபட்டிட்டு இருந்தோம். இன்னும் கொஞ்ச நாள். அவ்ளோதான், அதுக்கப்பறம் நமக்கு அந்தக் கவல இல்ல என்ன சொல்றிங்க?” என்றாள் சியாமளா நிம்மதியுடன்.
“ஆமா(ம்) சியாமு.. வியாபாரம் இல்லாம சாப்பாட்டுக்கே கஷ்டம் வந்துடுச்சு பாரு.. என்ன பன்றது.. எல்லாம் விதி.. நாளைக்கி என்னங்கறதே பெரிய கவலையாயிருக்கு. இதுக்கு நடுவுல இந்த வியாதியும் எனக்கே வரணுமா? எவ்வளோதான் சமாளிக்கிறது” என்று வாடிய முகத்துடன் சியாமண்ணா சொன்னார். கொஞ்ச நாளாகவே அவர்களுடைய வியாபாரம் நஷ்டத்தில் போய்க்கொண்டிருந்தது.
“சரிங்க நீங்க கவலப்படாதீங்க.. எல்லார்க்கும் வர்ற கஷ்டம் தான இது. நமக்கு மட்டும் இல்லல்ல.. நீங்க கொஞ்ச நேரம் போய் தூங்குங்க” என்று சொல்லிவிட்டு சியாமளா சமையலறைக்குச் சென்றாள். சியாமண்ணாவும் ஓய்வெடுக்கச் சென்றார்.
சிறிது நேரம் கழித்து.. சியாமண்ணா தூக்கத்திலிருந்து எழுந்தபொழுது சியாமளா தீவிரமாக எதையோ தேடிக்கொண்டிருந்தாள்.
“இப்போ பணத்துக்கு எவ்வளவு கஷ்டப்படுறோம். இந்த நெலமையில இருந்த ஒரேயொரு நல்ல கொடையையும் தொலச்சிட்டு வந்துருக்காரு.. இவரு மறதிக்கும் ஒரு மருந்து இருந்தா நல்லாயிருக்கும்..” சியாமளாவின் முணுமுணுப்பு கேட்டது.
“நா என்னத்த மறந்தன் சியாமளா.. எதுக்கு இப்படி முணுமுணுக்குற?” என்று புரியாமல் கேட்டார் சியாமண்ணா.
“ஏங்க, நீங்க ஆஸ்பத்திரிக்குக் கொண்டு போனது புது கொட.. நா போன மழக்காலத்துலயிருந்து இப்போ வரைக்கும் ஒவ்வொரு மாசமும் சிறுகச்சிறுக சேத்து வச்ச பணத்துல வாங்குனது அந்தக் கொட. இப்போ இருக்குற ரெண்டு கொடையிலயும் மழ என்ன வெளியவா தெறிக்குது? எல்லாம் உள்ளதானே கொட்டுது… அந்த ஒன்னுதான் நல்லாயிருந்துச்சு.. பழய கொடையில எண்ணக்கூட முடியாது அவ்ளோ ஓட்டைங்க இருக்கு. திரும்பவும் புது கொட வாங்குறதுன்னா எப்படி.. கிட்டத்தட்ட ஒன்னரை வருசம் ஆகுது பண வரத்து இல்லாம.. எதோ அப்பளம் விக்கிறதனால கொஞ்ச நஞ்சம் பணம் வருது..! இப்போ புதுக் கொடைக்கு எங்க போறது..? கொடை இல்லாம இந்த மழையில நா அப்பளம் விக்கப் போறது சாத்தியமா? நா ஒருத்தின்னா பரவால்ல.. அப்பளத்த பேக் பண்றதுக்கு கவர் இல்ல.. இந்த பேப்பர்லதான் கட்டிருக்கேன் இது நனையாதா..?” என்று கஷ்டப்பட்டு குரலை உயர்த்தாமல் பொறுமையாக ‘உங்களுக்கு அந்த கொடைய குடுத்து தப்பு பண்ணிட்டேன் ச்சே..!’ என மனதிற்குள் சொல்லிக் கொண்டாள் சியாமளா.
“நா எடுத்துட்டு வந்தேன் சியாமளா. அங்க எங்கயாச்சும் இருக்கும்.. வேணும்ன்னா பாரு.. நா நெஜமா மறக்கல..!” தனக்கு மறதி நோய் இருப்பது தெரிந்தும் சொன்னார்.
“நீ பக்கத்துல இருக்குற சுஜாதா வீட்டுக்கு எடுத்துட்டு போயிருப்ப.. போய் பாரு” என்றார் சியாமண்ணா. “நீங்க வந்ததுக்கு அப்புறம் நான் அங்க போகவே இல்ல. ஆனாலும் பாக்குறேன்..” என்று சொல்லி சியாமளா சங்கடத்துடன் சுஜாதா வீட்டிற்கு போய் அங்கே குடை இல்லை என்று திரும்பி வந்தாள்.
ஒருவேளை மருத்துவமனையில் இருக்குமோ என தோன்றியது அவருக்கு. “ஆனா மறுபடியும் ஆஸ்பத்திரிக்குப் போகணும்னா நூற் ரூபா தண்டம் அழனும். இருக்குறதும் ஒரேவொரு மினி பஸ். இனி அதுவும் நாளைக்குத்தான் வரும். பஸ்ஸுக்கு இல்லாம ஆட்டோவுக்கு வேற செலவு பண்ணனும். இப்போ இருக்குற நெலமைக்கு ஒவ்வொர் ரூபாவும் முக்கியம்..” என்றாள் சியாமளா.
சியாமளாவிற்கு ஒரு யோசனை வந்தது; உடனே மருத்துவமனையின் எண்ணுக்கு அழைத்தாள்.
“என்ன மேடம் ஒரு கொட இல்லங்குறதுக்கெல்லாம் எங்களுக்கு கால் பண்ணியிருக்கீங்க.. நாங்க பேஷன்ட்ட பாக்குறதா? இல்ல உங்க கொடய தேட்றதா?” என்று கோபத்துடன் கேட்டாள் ரிசப்ஷனிஸ்ட். விடாமல் தேடினாள் சியாமளா.. அடுத்தவர்களுக்கு என்ன தெரியும் இவர்களுடைய கஷ்டம்.. ஒவ்வொரு ரூபாயின் மதிப்பும் இவர்களுக்குத்தான் தெரியும்.
மருத்துவமனையிலும் குடை இல்லை. சியாமண்ணா பயணித்த பேருந்து நடத்துநர் சுதாகர் இவர்களுக்குத் தெரிந்தவர்தான். அவரிடம் சொல்லி பேருந்திலும் தேடியாயிற்று.
“மழக்காலத்துல கொட கெடச்சா அப்படியே விடுவாங்களா? கண்டிப்பா யாராச்சும் எடுத்துட்டுப் போயிருப்பாங்க சியமண்ணா.. சரி விடுங்க கவலப்படாதிங்க.. புது கொட வாங்கிட்டா போச்சு.. டிசைன் டிசைன் கொடைங்க எவ்ளோ இருக்கு?” என்று சிரித்தார் நடத்துநர். இவர்களின் பிரச்சனை பற்றி அவருக்கு என்ன தெரியும்?
இருவர் முகமும் வாடியது. கணவனின் உடல்நிலை சரியில்லாமல் போனதிலிருந்து சியாமளா அவரைத் திட்டுவதை விட்டிருந்தாள். முன்புபோல் இருந்திருந்தால் வீடே ரணகளமாயிருக்கும்.
‘இந்தக் கடவுள் ஏன்தான் இப்படி எனக்கு மட்டும் இவ்ளோ கஷ்டத்த கொடுக்குறாரோ.. இன்னும் எத்தன நாள்தான் இந்தப் போராட்டமோன்னு தெர்லயே’ சியாமளாவின் மனம் நொந்தது.
அப்போது வெளியிலிருந்து ஏதோ சத்தம் கேட்டது. என்னவென்று பார்க்க போன சியாமண்ணா மனைவியைச் சத்தமாக கூப்பிட்டார். என்ன ஆனது என்று ஓடினாள் சியாமளா.
“இங்க பாரு சியாமளா!” சியாமண்ணா முகத்தில் பெரும் மகிழ்ச்சி.
என்னவென்று பார்த்தால் அவர்களுடைய புது குடை அங்கேயே வீட்டின் மற்றொரு வாசலில் இருந்தது. மருத்துவமனையில் இருந்து வந்த சியாமண்ணா, வழி நெடுகிலும் மழை சிறு சிறு தூறலாகப் பெய்து கொண்டிருந்ததால் குடையை விரித்தபடியே கொண்டு வந்து, அதை அப்படியே விரித்த நிலையில் வீட்டின் முன்புறத்தில் வைத்துவிட்டார். விரித்த நிலையிலான குடை என்பதால் அது காற்றால், இருந்த இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு நகர்ந்து போய்விட்டிருக்கிறது… அதன் மேலே தார்ப்பாய் ஒன்றும் விழுந்து மறைத்ததால், அவர்கள் இருவரும் தேடும்போது அவர்களின் கண்களுக்கு அகப்படவில்லை. கொஞ்ச நேரத்தில் மீண்டும் வீசிய காற்றால், தார்ப்பாய் விலக சியாமண்ணா வெளியே வந்தபோது குடையைப் பார்த்துவிட்டார்.
இருவரின் முகத்திலும் அளவில்லா ஆனந்தம்.
‘இப்படி நமது வாழ்க்கையில் தோன்றும் துன்பங்கள் பலவும் நிலையற்றவையே; நமது மகிழ்ச்சியைத் தற்காலிகமாக மூடியிருக்கும் தார்ப்பாயானது விலகும் வரை காத்திருந்தாலே போதும், வாழ்க்கை மகிழ்ச்சி கொண்டதாகிவிடும்.’
லஹரி (1987):
அபர்ணா என்ற இயற்பெயரைக் கொண்ட லஹரி தென் கர்நாடகத்தின் விட்லா பகுதியைப் பிறப்பிடமாகக் கொண்டவர். கன்னட இலக்கியத்தில் முதுகலைப் பட்டம் பெற்ற இவர், தற்போது தன்னுரிமை மொழிபெயர்ப்பாளர், கன்னட மொழி போதிப்பவர், இதழாளர் உள்ளிட்ட வேலைகளைப் பார்த்தபடி சென்னையில் வசித்து வருகிறார். இதுவரை அச்சு வடிவில் இரண்டு புதினங்களையும், பிரதிலிபி உள்ளிட்ட மின் தளங்களில் முப்பதுக்கும் மேற்பட்ட புதினங்களையும் எழுதியுள்ளார்.
லட்சுமி பைரப்பா (2002):
லட்சுமி பைரப்பா ஓசூரின் மஞ்சளகிரியைப் பூர்வீகமாகக் கொண்டவர். தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் முதுகலைத் தமிழ் முடித்தவர். தற்போது ஆந்திர மாநிலம் குப்பம் திராவிடப் பல்கலைக்கழகத் தமிழ் மற்றும் மொழிபெயர்ப்பியல் துறையில் ’ஒப்பியல் நோக்கில் நவீனத் தமிழ் நாவல்களும் கன்னட மொழியின் எஸ். எல். பைரப்பா நாவல்களும்’ என்ற பொருண்மையில் முனைவர்ப்பட்ட ஆய்வினை மேற்கொண்டு வருகிறார். பன்மொழிச் சூழலையும் குடும்பத்தையும் பின்னணியாகக் கொண்ட லட்சுமி மொழிபெயர்ப்பு, ஒப்பிலக்கியம் ஆகிய துறைகளில் பெரிதும் ஈடுபாடுகொண்ட ஆய்வாளர்; தமிழ், தெலுங்கு, கன்னட மொழிகள் பயின்றவர்.

Leave a comment