கசடதபற சிறுகதைகளில் குறியீடு

முனைவர் க. உமா மகேஸ்வரி

இணைப்பேராசிரியர்,
தமிழ்த்துறை & ஆய்வுமையம்,
அரசுக்கல்லூரி, சித்தூர்,
பாலக்காடு, கேரளம்

தமிழ்ச் சிறுகதை வளர்ச்சியில் இதழ்களின் பங்கு முதன்மையானது. சிறுகதைகளை மட்டுமே தாங்கிவந்த மணிக்கொடி இதழின் தொடர்ச்சியாக 1970–இல் வெளிவந்த கசடதபற இதழ் நவீனத்துவப்படைப்புகளுக்கு முக்கியத்துவம் அளித்து வெளியிட்டது. நவீனத்துவம் படைப்புமொழியில் பெருத்த மாறுதல்களை ஏற்படுத்தியது. நவீனத்துவப் படைப்புகளின் பொதுக்குணங்களில் முக்கியமான ஒன்று குறியீடு.

படைப்பாளி, தான் கண்ட சமூக உண்மைகளைப் படைப்பில் கொண்டு வரும் போது நேரடியான விவரிப்பு எந்த விதத் தாக்கத்தையும் ஏற்படுத்தாது. ஆனால் அவற்றைக் குறியீடுகளாக மாற்றும் போது வாசகனுக்கு கதைக்குள் செல்ல வழி ஏற்படுத்த முடியும். வாசக கவனத்தைக் குவியச் செய்யவும் குறியீடுகள் உதவுகின்றன. கவிதைகளில் ஓரிரு சொற்களால் சாத்தியப்படுவதை, கதையில் சொல்லப்படும் பொருளையும், குறிப்பாக உணர்த்தும் பொருளையும் இணைத்தேதான் காட்டமுடியும். மொத்தக் கதையை வாசித்த பின்பே வாசகனால் குறிப்புப் பொருளை உணர்ந்து கொள்ள முடியும். ஆனால் படைப்பாளி குறிப்புப் பொருளுக்கான தடயங்களைக் கதைக்குள் வைத்திருப்பான். அவற்றைக் கொக்கிகள் என்கிறார் தர்மோ ஜீவராம் பிரமிள். “குறியீடுகள்” என்ற கொக்கிகள்தான் மன உணர்ச்சிகளை நோக்கி மனசினுள்ளேயே வாசகனை இழுப்பதற்காக வெளி உலகினுள் நீட்டி இருப்பவை” (தமிழின் நவீனத்துவம், ப.66). குறியீடுகள் கதை சொல்லும் வாழ்வியல் முரணைச் சரியான முறையில் சொல்லச் சிறந்த சாதனமாகின்றன.

கசடதபற இதழில் வெளியான சிறுகதைகளில் குறியீடு என்ற படைப்பு உத்தி எவ்வாறு பயன்படுத்தப்பட்டுள்ளது என்பதை இக்கட்டுரையில் காணலாம்.

நா.ஜெயராமனின் ‘பூட்ஸைக் கழற்றி’ என்ற கதை’ குறியீட்டுத் தளத்தில் இயங்குகிறது. செருப்பு நைந்து போனதால் பூட்ஸை வாங்குகிறான். நகர நாகரிகம் உருவாகி வந்த காலம். “ சாலையில் நிறைய கால்களை உற்றுப் பார்த்தான். அவனைப்போல பத்துப் பேர்களைத் தவிர மீதி தொண்ணூறு பேர்கள் பூட்ஸை சர்வ சாதாரணமாகப் பயன்படுத்துகிறார்கள் என்ற உண்மை வலுப்பெற்றது” (இ.எ.5, பிப்.1971, ப.11).

“அம்மா செருப்பு வாங்கலியா? என்று கேட்டாள். “ஏன் இதுக்கென்ன?” என்று அவன் பதிலுக்குக் கேட்டான். “நீ இந்த மாதிரியெல்லாம் வாங்க மாட்டியேன்னு கேட்டேன்”(மேலது, ப.12).

இதிலிருந்து அவனது குணத்தை ஊகிக்கமுடிகிறது. ஆனால் பூட்ஸைப் போடுவதற்கு ஒரு தயக்கம். எல்லோரும் தன் கால்களையே பார்ப்பது போல நினைப்பு.

“ஏதோ உளையில் மாட்டிக் கொண்ட காலைப் பெயர்த்து எடுத்து நடக்க வேண்டியது போன்ற பிரச்சனை அவனைப் பயமுறுத்தியது. எல்லோரும் இறங்கும் வரை காத்திருந்தான். இறங்கியபோது கால் நொடித்தது”(மேலது,ப.12).

“சுபாவமாகவே நடப்பதாகவே சொல்லிக் கொண்டான். தினமும், இதுஒரு சங்கடமாக இருக்குமோ என்று நினைத்துக் கொண்ட கணத்தில், தன் காலுக்கு பூட்ஸ் பழக்கமாகிவிட்டது என்று வற்புறுத்திக் கொண்டான்” ( மேலது,ப.13).

எப்படி ஒரு சிலர் மாற்றங்களை இயல்பாக ஏற்றுக்கொள்கிறார்கள் என்ற கேள்வி அவனுள் எழுகிறது. பூட்ஸ் என்பது ஒரு உறுத்தலாகவே இருக்கிறது.

“குதிகால் தேய்ந்திருந்த கட்டை விரலை வளைவு நைந்திருந்த செருப்பை மாட்டிக் கொண்டவன் முணுமுணுக்கற மாதிரி சொன்னான்: “மழை வர்றாப் போலிருக்கு எங்கேயாவது நனைஞ்சு வீணாப் போயிடுத்துன்னா என்ன பண்றது? நம்மாலே சும்மா வாங்க முடியறதா?” அவன் கால்களை வீசி வீசி நடந்து கீழிறங்கினான்” என முடிகிறது கதை (மேலது,ப.13).

பூட்ஸ் என்பது ஒரு குறியீடாகவே வந்துள்ளது. தனக்குப் பொருத்தமா இல்லையா என்பதை ஆராயாமல், அல்லது குழம்பி ஒன்றை ஏற்பது, பின் அதன் மீதே கவனம் குவிப்பது, அது தரும் சிக்கல்களிலிருந்து தப்பிக்கத் துடிப்பது, போன்ற மனநிலைகளின் குறியீடாகவே இக்கதை அமைந்துள்ளது. இந்த உண்மையை நேரடியாக கதைக்குள் பிரச்சாரம் செய்யாமல் பூட்ஸ் என்ற குறியீடு மூலமாக உணர்த்தப்படுகிறது. இந்தக் கதை குறித்து அடுத்த இதழ் ‘அபிப்ராயங்கள்’ பகுதியில் பாஹேஸ்வரி என்ற வாசகர்

“ ‘பூட்ஸைக் கழற்றி’–An individual who is not able to conform with the norms of society but forced to என்கிற உண்மை பின்புலத்தில் ஓரளவிற்குத் தெளிவாகவே வந்திருக்கிறது” (மேலது,ப.10).

என்று மதிப்பிடுகிறார்

நா.கிருஷ்ணமூர்த்தியின் ‘வருகை’ என்ற கதையின் தலைப்பே குறியீடாகி கதையை விளக்கி நிற்கிறது. தன் விருப்பப்படி வாழ விரும்பும் ரகு, படிக்கவும் எழுதவும் அது குறித்துப் பேசவும் கலைகளில் ஈடுபாடும் உடையவன்; தனிமையை விரும்புபவன்.

“தனித்திருப்பது என்பதுதான் உண்மை. ஒவ்வொருவனும் அப்படித்தான் இருக்கிறான். பீச்சிலே எவ்வளவோ பேர். ஆனால் யார் கிட்டயும் பேச முடியறதில்லை. யார்கிட்ட தான் பேசமுடியும், தெரிந்த ஒரு முகத்துக்கிட்டே தான். அறிமுகம் இல்லாதவரையில் எனக்கு என்ன சம்பந்தம் இருந்தது உன்னிடம்” (இ.எ.8, மே.1971, ப.5).

இயற்கையில் கரைய நினைப்பவன் ரகு.

“ஒருநாள் மழையிலே இரண்டு மணிநேரம் நனைந்தேன். மனசுக்கு ரொம்ப திருப்தியா இருந்தது. அதுதான் விஷயம். நீ என்னை எங்கே விட்டால் என்ன, நான் நானாக இருக்கற வரைக்கும்” (மேலது,ப.9).

தன்னுடைய சுயத்தைக் காப்பாற்றிக் கொள்ளவே மனிதன் நினைக்கிறான்.

நண்பன் வேணு, உடன் வரும் பிந்து, ரகு மூவரும் பேசிக் கொண்டிருக்கிறார்கள்.

“வேணுவிற்கு, பிந்து அவன் பக்கம் சாய்ந்து விட்டது வியப்பளித்தது. எப்படி ஒரு பைத்தியக்காரனோடு இவளும் சேர்ந்து கொண்டாள்’ என்று தன்னையே கேட்டுக் கொண்டான்” ( மேலது,ப.7).

அவள் மீது ரகுவிற்கு ஒரு மனச் சாய்வு இருந்தது இங்கு குறிப்பிடப்படவில்லை. ஆனால் அறையின் ஜன்னல் வழியே வந்த மழைநீரில் நனைகிறான். கீழே தேங்கிய நீரை அறை முழுதும் எற்றி விடுகிறான். புத்தகங்கள், சுவர்கள், கட்டில் எல்லாமே நனைந்தன. அவனது காம உணர்வே அவனை இப்படிச் செய்ய வைத்தது எனலாம். கடும் காய்ச்சலால் அவதிப்பட்டவன் மனதில்,

“நான் ஏன் அவளுக்குப் போன் பண்ண வேண்டும். அவளுக்கும் எனக்கும் என்ன சம்பந்தம், அவள் யாரோ – நான் யாரோ” (மேலது,ப.9)

இந்த நினைப்பு கூட அவளோடு இணைய விழையும் மனதின் வெளிப்பாடுதான். அவனைப் பார்க்க வந்த பிந்துவோடு மீண்டும் கடற்கரைக்குச் சென்றவன்

“அவள் பேசப் பேச வாயையே பார்த்துக் கொண்டிருந்தான். மங்கிய நிலவொளியில் அவள் ரொம்பவும் நேர்த்தியாகக் காட்சியளித்தாள். பிறகு மீண்டும் பேச ஆரம்பித்தான். அவன் மனம் அடித்துக் கொண்டது. பிடியை இன்னும் அழுத்தினான். அவள் நெருங்கி வந்து அவனோடு இணைந்து வந்து உட்கார்ந்து கொண்டாள்” (மேலது,ப.10).

அவனுக்குள்ளிருந்த மனம் பெண்ணை இப்படிப் பார்க்கிறது ‘பிந்து – ஒரு பெண் …. ‘ஒரு பெண் எல்லா சந்தர்ப்பங்களிலும் பெண்ணாகவே நடந்து கொள்கிறாள்’ என்று டைரியில் குறிக்கிறான்.

பிந்துவுக்காக ஒரு புத்தகத்தைத் தேடுகிறான். கட்டிலுக்கு அடியில் புத்தகங்களை எடுத்த போது கரையான்கள் அரித்திருந்தது.

“விரல் இடுக்குகளில் கரையான்கள் குறுகுறுத்தன ………….கரையான் அவன் கையிலும், காலிலும், மார்பிலும் ஊர்ந்தன. கையிலிருந்த புத்தகத்தை வீசியெறிந்தான்”.

“பிரம்பு நாற்காலியில் தலையைச் சாய்த்துக் கொண்டான். அவன் மேலே கரையான்கள் ஊர ஆரம்பித்தன” (மேலது,ப.10).

இங்கு கரையான்கள் குறியீட்டுத் தன்மை பெறுகின்றன. அவை அவனின் அறிவை அரிக்கின்றன. ‘வருகை’ என்ற தலைப்பு, யாருடைய வருகை, மோகத்தின் வருகை, காமத்தின் வருகை’ என விரிவடைகிறது. அவன் தேடிய அறிவை மட்டுமல்லாமல் அவனுள்ளும் அரிக்கத் தொடங்குகிறது. கதையோட்டத்தில் வாசகன் குறிப்புப் பொருளைத் தொடர்ந்து வரும்போது கதையின் பொருளைத் தன் அறிவுக்கேற்பப் பொருள் கொள்ள முடியும்.

பாலகுமாரனின் ‘வழிமயக்கம்’ சூழலைக் குறியீடாக்குவதற்கு நல்ல எடுத்துக்காட்டு. காதல் முறிவிற்குப் பின், இலக்கியம் தெரிந்த, கதை எழுதும் ஒரு பெண்ணுடனான நட்பு, அவனுக்குள் உருவாக்கும் எண்ணங்களுக்கு, சூழல் எப்படிக் குறியீடாகிறது எனக் காணலாம்.

“இவளுடைய அனுதாபம் எனக்குத் தேவையாய் இருக்கு. சுகமாய் இருக்கு இவளுடைய அனுதாபம் எனக்குத் தேவைப்படறதினாலே, இவநட்பு தேவைப்படறதினாலே இவ அனுதாபத்துக்கு முயற்சிக்கிறேன். முடிவில்லாம என் மேல் இவ அனுதாபப் படனும்னு என்னைப் பத்தி முழுசும் சொல்லிடறேன். முடிவில்லாத அனுதாபம் கிடைக்குமோ,” (இ.எ.20, ஜூன்.1972, ப.11).

பாலியல் உணர்வு ஓயாமல் அவனைத் துரத்துகிறது. வெறும் நட்புதானா என்ற கேள்வி எழுகிறது. அவன் தன்னையே ஏமாற்றிக் கொள்கிறான். தன் முன்னாள் காதலியோடு அவளை ஒப்பிட்டுப் பார்க்கிறான். சாலையில் நடக்கும் போது ஓயாமல் ஓடும் எண்ணங்கள். தனக்குள்ளேயே பேசிக் கொண்டு வரும் போது சாலையில் செல்லும் ரிக்‌ஷாவில் கை இடித்து விடுகிறது.

“ரிக்‌ஷாவின் சக்கரம் இவனுக்கிணையாக உருண்டு கொண்டிருந்ததைக் கவனித்தான்” (மேலது,ப.13).

ரிக்‌ஷாவில் வாழைத்தார்கள் அடுக்கப்பட்டிருந்தன.

“எல்லாம் காய் வெட்டாக, பச்சை நிறமாக உள்ள பழங்கள். ஒரு பழம் கூட மஞ்சள் இல்லை. கடையில் கொண்டு போய் தொங்க விட்டால் பழுத்து விடும். இந்த வெய்யில் காற்றுக்கே கனிந்து போய் விடும் .வைக்கோலை மூடி புழுங்க விட்டால் சீக்கிரமே கனிந்து விடலாம்” ( மேலது,ப.13).

“எந்தா சாரே…வாழைத்தார் வாங்கிட்டு போதோ, எந்தா விலை? பெட்டிக் கடை நாயரின் குரல்… … …. பிந்துவைப் போல் இவனுக்கு மெல்லப் பேசத் தெரியாது என்று நினைத்துக் கொண்டான். அதிக சந்தோஷம் ஏற்பட்டால் கூடப் பிந்து கத்தமாட்டாள். அப்பா… என்று நெஞ்சில் கை வைத்துக் கொண்டு லேசாய்க் கூவுவாள், அவ்வளவுதான்” (மேலது,13).

எதனையும் பிந்துவின் நினைவுகளோடே தொடர்புபடுத்திக் கொள்கிறான். ரிக்‌ஷாவும் அவனும் இணை வேகத்திலேயே பயணிக்கின்றனர். வழியில் வரும் அலுவலக நண்பன், வாழைத்தார் பற்றிக் கேட்கிறான்.

“இந்த மடையன்கிட்டே பேசறத விட வீட்டுக்கே போகலாம். போய் லெட்டர் எழுதலாம் மூர்த்திக்கு….. பிந்துவைப் பத்தி….”(மேலது,ப.14).

“என்னா ஐயரே என்னா விலைக்குப் புடிச்சே, பழத்தே…” என்ற கூடைக்காரியின் கேள்வி,

“ஒரு கணம் பளீரென்று தலையில் வெடிவெடிக்கிற மாதிரி ஒரு வலி மின்னிற்று. அழுந்தத் தலையைப் பிடித்துக் கொண்டு மரத்தடியில் நின்று விட்டான். தொண்டை வறண்டது…டசன் பதிமூன் ரூபாம்மா….. என்று பதில் சொன்னான்………. இவனுக்கு கண்ணை இருட்டிக் கொண்டு வந்தது” (மேலது,ப.14).

வாழைத்தார் ஏற்றிவரும் ரிக்‌ஷாவின் சக்கரம் அவனின் பிந்து பற்றிய எண்ண ஓட்டத்திற்குக் குறியீடாய் மாறி நிற்கிறது. புற உலகோடு அவனால் ஒன்ற முடியவில்லை. அவனுள் எங்கும் வியாபித்த பாலுணர்ச்சி, பிந்து மீதான கவர்ச்சி, அதை நட்பாகத் தள்ளி நிறுத்தினாலும் முடியாமல் ஒத்துக் கொள்வதாகவே முடிக்கிறார் பாலகுமாரன். தனக்கும் வாழைப்பழத்திற்கும் தொடர்பில்லை என்றவன் விலை சொல்லுமளவு அதுவாகவே ஆகிவிட்டதைக் காணமுடிகிறது. சூழல் இங்கு ஒரு குறியீடாக மாற்றப்பட்டுள்ளது.

சில கதைகளில் ஒன்றுக்கு மேற்பட்ட அழகியல் கூறுகள் இடம் பெற்றிருக்கும். ‘நினைவுகள்’ கதையில் குறியீட்டுத்தன்மை ஓவியம் வழியே சுட்டப்படுகிறது. தத்துவத்தில் ஈடுபாடு கொண்டவன் தன் தோழியான லளிதாவிற்கு உடல்நலக்குறைவு என்பதால் பார்க்கப் போகிறான். இருவருக்கும் உள்ளுர ஓர் ஈர்ப்பு இருந்தது. இதை,

“மேகங்களால் மூடப்பட்ட ஆகாயத்தைப் போல களையற்றிருந்தது அவள் முகம்… அதை என் கையில் திருப்பித் தந்த போது அவளுடைய விரல் என் கையில் பட்டது. திடீரென்று அவள் முகத்தைப் பார்த்தேன். தெரிந்து கொள்ளும் படியாக ஒன்றும் அங்கே இருப்பதாகத் தெரியவில்லை….அவளுடைய முகத்திலிருந்து மேகங்கள் மறைய ஆரம்பித்தன” (இ.எ.4,ஜன.1971,ப.3)

எனக் காட்டுகிறார். சுவரில் மாட்டிய ஓவியத்தைப் பார்க்கிறான்.

“எனக்கு எதிரில் சிவனைக் கடவுளாக அடைய வேண்டும் என நினைத்து தவம் புரியும் பார்வதியின் உருவம். கொட்டும் மழை. கண்ணீரும் தண்ணீரும் சேர்ந்து மார்பின் வழி வயிறின் மேல் பாய்ந்து தொடை வழி ஒழுகுவதைக் காணலாம். இளமையின் வனப்பு மிக்க தொடைகள், மார்பு எல்லாம் ஓவியத்தின் பின்னணியோடு (Background) சேர்ந்து மறைந்து விடுகின்றன. அவள் அழகு ஒரு தனி உருவத்தின் அழகாய் அமையாது இயற்கை முழுவதும் வியாபித்திருந்தது. அவ்வியற்கையில் வேட்கை அருவி சுடர்விட்டு ஒழுகுகிறது. இதை இம்பிரெஷனிஸ்டிக் என்று கூறலாமா?” (மேலது,ப.4)

என்ற நினைப்பு வெறும் ஓவியத்திற்கானது மட்டுமல்ல. எதிரில் லளிதா. ஓவியம் அவளின் தந்தை வரைந்தது என்ற வரிகள் குறிப்புப் பொருளாய் மாறுகின்றன. வீட்டிற்கு வந்து போனபின் அவனுடனான நட்பை முறித்துக் கொள்ளும் லளிதா குறித்து பின்னாட்களில் தெரிய வரும் போது குறிப்புப் பொருள் மேலும் வலுவடைகிறது.

“நேற்று சென்னையிலிருந்து வந்த டாக்டர் ராமனைப் பார்த்தேன். அவர் அவளுடைய அப்பாவின் ஆப்த நண்பர். அவரிடம் அவளைப் பற்றியும் அந்த நாயைப் பற்றியும் விசாரித்தேன். அவள் இப்போது அமெரிக்காவில் மின்னி சோட்டாப் பல்கலைக்கழகத்தில் பிஎச்.டி.,க்குப் படிக்கிறாள். இரண்டு வருடங்களாகின்றன. அந்த நாய் – செல்லமாக வளர்க்கப்பட்ட நாய் அது – மூன்று வருடங்களுக்கு முன் இறந்து விட்டது” (மேலது,ப.4)

என்று கதை முடியும் போது குறியீட்டுத்தன்மை பெற்று விடுகிறது.

பூனைகள், தனி ஊசல், நிழல்மரம், நிழல் போன்ற கதைகளையும் குறியீட்டுத் தன்மை கொண்ட கதைகளாகக் காண இயலும்.

நேர்கோட்டு கதைசொல்லல்முறை வாசகனுக்கு சலிப்பை ஏற்படுத்தக்கூடியதாக மாறுகிறது. வாசகனுக்கு எந்த சிரமுமும் கொடுக்காத எழுத்துக்கு மாறாக வாசக பங்கேற்பைக்கோரி நிற்பவை நவீனத்துவப் படைப்புகள். படைப்புமொழியை செறிவாகக் கையாளும்போது வாசிப்பும் நுட்பமாகிறது. வாசிப்பு ,மறுவாசிப்பு என படைப்பை வாசகனோடு உறவுகொள்ளச் செய்வதில் குறியீடுகள் முக்கியப்பங்களிப்பை அளிக்கின்றன. கசடதபற இதழ்களில் வெளியான சிறுகதைகளில் குறியீட்டு உத்தி சிறப்பாகக் கையாளப்பட்டுள்ளதைக் காணமுடிகிறது.

Leave a comment

Trending