காடரினக் கதைகள் -9
திருட்டு நாய்
தொகுப்பும் ஓவியத் தூரிகையும் :
ப. குணசுந்தரி & து. சரண்யா
கதை மாந்தர்கள்
- அரசன்
- நாய்
- அரசன் (அரசனின் மகன்)
- மந்திரி
- மூத்த பெண்
- இளைய பெண்
- ஜோசியக்காரி
ஒரு அரசன் தன் அரண்மனையில் ஒரு பெண் நாயை வளர்த்து வந்தான். அந்த நாய் ஊர் மக்கள் வீட்டில் எல்லாம் போய் பொருட்களைத் திருடியது. அதனை அறிந்த ஊர் மக்கள் அரசனிடம் போய் முறையிட்டனர். அதனால் சினமடைந்த அரசன் அந்த நாயை அடித்து அரண்மனையிலிருந்து துரத்தினான். அவ்வேளையில் அந்தப் பெண்நாய் கருவுற்றிருந்தது.
துரத்தப்பட்ட நாய் அங்கிருந்து காட்டிற்குள் ஓடியது. பின்னர் மீண்டும் ஊருக்குள் வந்து ஊர் மக்களின் வீட்டில் இருந்து புகையிலைத் தண்டையும் வெற்றிலையையும் திருடி வந்து தனக்கென ஒரு கூரையை உருவாக்கியது. அந்தக் கூரை சிறிது நேரம் கழித்தவுடன் பெரிய ஒரு வீடாக உருப்பெற்றது.
தான் குட்டிப் போடும்போது தன் குழந்தைகள் பயன்படுத்துவதற்குத் தேவையான பொருட்களை எல்லாம் அந்த நாய் தன் வீட்டில் திருடி சேகரித்து வைத்தது.
சிறிது காலம் கழித்து அந்தப் பெண்நாய் இரண்டு பெண் குழந்தைகளைப் பிரசவித்தது. இரண்டு குழந்தைகளும் தேவதை போன்ற அழகுடையவர்களாக இருந்தனர். இரு குழந்தைகளும் வளர்ந்து ஆளாகி குமரிப் பெண்களாயினர். சில ஆண்டுகள் கடந்த பின்பு நாயை வளர்த்த அரசன் இறந்து போனான். அவனுடைய மகன் அரசனாக இருந்தான்.
அந்த அரசனும் அவனுடைய மந்திரியும் வேட்டைக்குச் சென்றனர். அப்போது திடீரென அரசன் நடுக்காட்டில் மயங்கி விழுந்தான். மந்திரிக்கு என்ன செய்வது என்று தெரியவில்லை. உடனடியாக மந்திரிக்கு நீர் தேவைப்பட்டது. எங்காவது நீர் கிடைக்குமா என்று தேடிச் சென்றான். அவ்வேளையில் அந்த நாயின் வீட்டைக் கண்டான். அங்குச் சென்ற போது இரு சகோதரிகளும் வீட்டில் இருந்தனர்.

மந்திரியின் குதிரைச் சத்தத்தைக் கேட்ட தங்கை தன் அக்காவிடம் போய் கூறினாள். யாரோ நம் வீட்டிற்கு வருகிறார்கள் ஆகவே நாம் இருவரும் கரியை நம் உடல் முழுவதும் பூசிக் கொள்ளலாம் என்றாள். தங்களின் மேனி வண்ணத்தை எவரும் காணக் கூடாது என்பதற்காக அவ்வாறு செய்தனர். மந்திரி கதவைத் தட்டி நீர் கேட்டான்.
தங்கை வேகமாக ஒரு செம்பில் நீர் முகந்து கொடுத்தாள். அப்போது அந்த நீரில் அவளுடைய ஆள்காட்டி விரல் நனைந்து கரிகரைந்திருந்தது. அவளுடைய விரலினைக் கண்ட மந்திரி அவள் வாசலிலேயே மயங்கி விழுந்தான். பதறிய தங்கை மந்திரியின் முகத்தில் நீர் தெளித்து சட்டெனக் கதவை மூடினாள். மந்திரிக்கு மயக்கம் தெளிந்தவுடன் கதவைப் பார்த்தான். அங்கே நீர் இருப்பதைக் கண்டான். அந்த நீரை எடுத்துக் கொண்டு அரசனை நோக்கி விரைந்தான். அரசனின் மயக்கத்தைத் தெளியவைத்ததும் இருவருமாக அரண்மனைக்குத் திரும்பினர். அரசனிடம் மந்திரி தான் காட்டில் கண்ட பெண்களைக் குறித்துக் கூறினான்.
மறுநாள் காலையில் இருவரும் அந்தக் காட்டிற்குச் சென்றனர். அந்த நாயின் வீட்டை இராஜாவும் மந்திரியும் அடைந்தனர். அந்த இரு பெண்களிடமும் நீங்கள் யார்? உங்களுடைய பெற்றோர் எங்கே? எனக் கேட்டனர். அதற்கு மூத்தமகள் எங்களுக்குப் பெற்றோர் இல்லை. நாங்கள் அனாதை எனக் கூறினாள். தன் தாய் நாய் என்பதை அவள் கூறவில்லை. ஆகவே இதைக் கேட்ட அரசனும் மந்திரியும் இரு பெண்களையும் மணந்து கொள்ள விரும்பி அவர்களை அரண்மனைக்கு அழைத்துச் சென்றனர். போகும் வழியில் தன் தாய் அடையாளம் கண்டு வருவதற்காக இளைய மகள் தன் சேலை முந்தானையைக் கிழித்து போட்டபடியே போனாள்.
வேட்டைக்குப் போன நாய் திரும்பி வந்தபோது தன் இரு மகள்களையும் காணாது சுற்றிலும் முற்றிலும் தேடியது. அப்போது இளைய மகள் கிழித்துப்போட்ட முந்தானைச் சீலையின் மோப்பம் கிடைத்தது. அதை மோப்பம் பிடித்தபடியே நாய் அரண்மனையை அடைந்தது. அங்கு மந்திரி வீட்டின் பின்புறமாக அழுக்கு நீரைக் கொட்டும் இடத்தில் போய் நாய் படுத்துக் கொண்டது. இளைய மகள் அழுக்கு நீரைக் கொட்டுவதற்காக வெளியே வந்தாள். அங்கே நாய் படுத்திருப்பதைக் கண்டவுடன் அம்மா வா வீட்டிற்குப் போகலாம் என அழைத்துச் சென்றாள். தன் தாயைக் குளிக்க வைத்து சாப்பாடு போட்டு அன்றுவரை அந்த நாயை அவள் வீட்டிலேயே இருக்க வைத்தாள்.

மறுநாள் காலையில் நாய் தன் பெரிய மகளைப் பார்ப்பதற்காக அரண்மனையை நோக்கிச் சென்றது. மூத்த மகள் காலையில் குளித்துவிட்டு தன் தலை முடியை மைகோதியினால் சிக்கெடுத்துக் கொண்டு இருந்தாள். நாய் போவதைக் கண்ட அவள். அது தன்னுடைய தாய் என்பதையும் மறந்து மைகோதியினால் அதன் குடல் வெளியே வரும்படி வயிற்றில் குத்தினாள்.
நாய் வலியைத் தாங்காமல் இளைய மகளின் வீட்டிற்கு ஓடியது. அங்குச் சென்று இளைய மகளிடம் நடந்தவற்றைக் கூறியது. அவ்வேளையில் மூத்த மகளிடம் ஒரு ஜோசியக்காரி போய் உன்னுடைய தாய் வரும்போது கொன்று மூட்டையில் கட்டிவை பொன்னாக மாறும் என்றாள். அதைக் கேட்ட மூத்த மகள் தன் தாயை ஊருக்குள் போய் தேடினாள். அங்கிருக்கும் நாய்களில் எது தன் தாய் என்பதை அவளால் அடையாளம் காணமுடியவில்லை. தெருநாயைக் கண்டு தன்னுடைய தாய் என்று எண்ணிக் கொண்டு அதைக் கொன்று மூட்டையாகக் கட்டித் தன் வீட்டில் தொங்கவிட்டாள்.
காயத்துடன் இளைய மகளிடம் சென்ற நாய் தான் இறந்ததும் தன்னை ஒரு மரப்பெட்டியில் போட்டு வைக்குமாறு கூறி இறந்தது. இளையமகளும் தன்னுடைய தாய் கூறியவாறே செய்தாள். சில மாதம் கழிந்தன. மூத்த மகளின் கணவன் அந்த மூட்டையில் என்ன என்று கேட்டான். உடனே அவள் அது என் தாய் தந்தையர் கொடுத்த சீதனம் என்றாள். உடனே அதைப் பார்க்க வேண்டுமென மூத்த மகளின் கணவன் அதைப் பிரித்தான். அதில் புழு தள்ளிய நிலையில் நாயின் உடல் இருப்பதைக் கண்டு சினந்தான். இவ்வாறு அறுவருப்பான சீதனத்தைக் கொடுத்த மூத்த மகளின் பெற்றோரைக் காண வேண்டும் என்றான். மூத்த மகளுக்கு என்ன செய்வதென்றே தெரியாமல் விழித்தாள்.
இளையமகளைத் தேடிச் சென்றாள். இளையமகளின் வீட்டில் இருந்த மரப்பெட்டியைக் கண்டு இளையமகனின் கணவன் அது என்ன? அதில் என்ன இருக்கிறது? என்றான். உடனே இளயமகள் அது என் தாய் தந்தையர் எனக்குக் கொடுத்த சீதனம் என்றாள். அந்தப் பெட்டியை எடுத்து இருவரும் திறந்து பார்த்தனர். அதில் பொன்னும் பொருளும் நிறைந்து கிடந்தது. இவ்வளவு சீதனத்தைக் கொடுத்த இளைய மகளின் பெற்றோரைக் காண வேண்டும் என்றான். இளையமகள் தான் அனாதை என்று கூறித்தான் மந்திரியை மணந்திருந்தாள். இப்போது பெற்றோரை நான் எவ்வாறு என் கணவனிடம் காட்டுவேன் என இறைவனிடம் முறையிட்டாள். உடனே இறைவன் இளையமகளின் கண்முன் தோன்றி நீ உன் வீட்டுக்குக் கணவனுடன் போ அங்கு உனக்குத் தாயும் தந்தையுமாக நான் இருப்பேன் என்று கூறி மறைந்தார். இந்த நிகழ்வு அனைத்தையும் மூத்த மகள் மறைந்து நின்று கவனித்தாள்.
மறுநாள் காலையில் அரசனும் மூத்த மகளும் மந்திரியும் இளையமகளும் புறப்பட்டுச் சென்றனர். காட்டில் இருக்கும் தாயின் வீட்டை நோக்கிச் சென்றனர். பாதி வழியில் மூத்த மகளுக்கு வயிறு வலி வந்தது மலம் கழிப்பதற்காக காட்டுக்குள் சென்றபோது அவளைப் பாம்பு கடித்துவிட்டது. அந்தக் காட்டினிலேயே அவள் இறந்து போனாள். அரசன் தன் மனைவியை அரண்மனைக்கே மீண்டும் கொண்டு வந்தான்.
மந்திரியும் இளையமகளும் பெற்றோரை அழைத்துவர வேண்டும் என்று அந்தக் காட்டு வீட்டுக்குச் சென்றனர். அங்கே போனவுடன் இளையமகள் பெற்றோரை மந்திரிக்கு அறிமுகம் செய்து வைத்தாள். மூத்த மகள் இறந்த செய்தியைக் கூறி தன் பெற்றோரை அரண்மனைக்கு அழைத்துச் சென்றாள்.
இளையமகள் தன் தாய் ஒரு நாயாக இருந்தாலும் மதித்தாள். அதனால் அவளுக்குப் பொன்னும் பொருளும் கிடைத்தது. மூத்தமகள் தனக்கு நல்ல வாழ்க்கை கிடைத்தவுடன் தன் தாயை மதிக்க மறந்தாள். ஆகவே அவளுக்கு மரணம் மட்டுமே கிடைத்தது.
…………………
(தகவல். குஞ்சிவள்ளி பாட்டி, வயது 63. உடுமன்பாறை செட்டில்மென்ட். 08.06.2018.)


Leave a comment