மொழிபெயர் சிறுகதை
தொடர்கின்ற பயணங்கள்
மலையாளப் படைப்பு : சிவதாஸ் மடத்தில்
தமிழாக்கம் : சு. பாத்திமா

வறண்ட வயல்வெளிகளையும் இலையுதிர்ந்த மரங்களையும் பின்தள்ளி இரயில் மிகவிரைவாகப் பாய்ந்து கொண்டிருந்தது.
முன் இருக்கையில் அம்மா மடியில் நின்றுகொண்டிருந்த மூன்றோ நான்கோ வயதுடைய குழந்தை, இரயிலின் சிறிய அசைவிற்கேற்ப துள்ளிக் குதித்து சிரித்துக்கொண்டிருந்தது. அந்தக் குழந்தை, தான் விழாமல் இருக்க அம்மாவின் தலைமுடியைப் பிடித்துக் கொண்டிருந்தது. வலி இருந்தபோதிலும் அம்மா புன்னகையுடன் அதனை ஊக்குவித்துக் கொண்டிருந்தார்.
மேல் படுக்கையில் தனது பையில் சாய்ந்து கொண்டு அலைபேசியைப் பார்த்துக் கொண்டிருந்த இளம்பெண் ஒருத்தி அலைபேசியின் திரையில் உள்ள காட்சிகளுக்கும், தனது செவியொலிப்பான் வழி கேட்கும் ஒலிகளுக்கும் பதிலளிக்கும் விதமாக தனது முகபாவனைகளை மாற்றி மாற்றி புன்னகைத்துக் கொண்டிருந்தாள்.
இதற்கிடையில் வந்த, அலைபேசி அழைப்பிற்கு அவள் மனதில்லா மனதோடு பதிலளித்தாள்.
“இல்லம்மா, சாப்பிட நேரமாகவில்லை. நான் அப்புறம் சாப்பிடறேன். இரயிலில் கொண்டு வருவாங்க..”
“…”
“சரிம்மா , நான் உன்னை அப்புறமா கூப்பிடுறேன் .”
அவள் தன் அலைபேசி அழைப்பைத் துண்டித்துவிட்டு மீண்டும் காட்சிக்குத் திரும்பும்போது, இரசனைச் சரடறுந்த ஏமாற்றத்தை அவள் முகத்தில் காண முடிந்தது.
ஊரிலிருந்து திரும்பும் மூன்று நாள் பயணத்தில், இரண்டாவது நாளைத் தள்ளி நீக்குவது எப்போதும் கடினம்தான். முதல் நாள், என் மனம் வீட்டைப் பற்றிய பழைய நினைவுகளாலும் என் அம்மா சொன்ன விஷயங்களாலும் நிறைந்திருக்கும். மூன்றாவது நாள், விடுமுறைக்குப் பிறகு செய்து முடிக்க வேண்டிய வேலைகளின் சிந்தனையில் மும்முரமாகி ஒவ்வொரு மாதமும், வரவுசெலவுக் கணக்கைச் சரி செய்ய முடியாத அளவிலான செலவுகளுடன், வீட்டிற்கு வந்து போவதற்கான கூடுதல் செலவுகளையும் சேர்க்க வேண்டியிருக்கும் என்ற கவலையில் மூழ்கடிக்கப்படுவேன்.
இரண்டாம் நாள் வெறுமைதான் இந்தப் பயணம் முழுவதும் நீடித்திருந்தது.
ஒரேயொரு பையைத் தவிர வேறு எந்தப் பைகளும் இல்லை. இதுவரையில் நான் பயணித்த போதெல்லாம் பல பெட்டிகள் கையிலிருக்கும்…….
ஊருக்கு வருவதை அறிந்தவுடன் அம்மாவின் தயாரெடுப்பில் உருவாகியிருந்த மிளகாய் வற்றல், முறுக்கு, பலாப்பழ ஊறல், ஊறுகாய், தேங்காய் போன்றவற்றை பெட்டிகளில் நிறைப்பதில் தொடங்கி, அந்தப் பெட்டிகளை அடைத்து, கயிறுகளால் இறுக்கிக்கட்டி, ஓர் ஆட்டோ ரிக்சாவில் வைப்பது வரை தொடரும்.
நான் கடைசியாக வந்தபோது என் அம்மா சொன்னது எனக்கு ஞாபகம் வந்தது.
“அடுத்த முறை வரும் போது சரிதாவையும் குழந்தைகளையும் உன்னுடன் அழைத்து வா. அவர்களைப் பார்த்து ரொம்ப நாள் ஆகிவிட்டது.”
சரிதாவின் முதுகுவலி, குழந்தைகள் பள்ளிக்குச் செல்ல வேண்டும் போன்ற காரணங்களைக் கூறினாலும், நான்கு பேருக்கு ஆகும் பயணச் செலவும், உறவினர்களைப் பார்ப்பதற்கான செலவும்தான் மனதில் மின்னி மறைந்தது.
“அம்மா அங்கு வந்து என்னுடன் சில நாட்கள் தங்கியிருக்கலாமில்லையா?”
வழக்கமான இந்தக் கேள்விக்கு ஒரே பதில்….. கண்களை மூடியபடியுள்ள புன்னகையும் பக்கவாட்டில் தலையசைப்பதும் மட்டுமே.
ஒரு சிறிய அறையும் ஒரு சமையலறையும் மட்டுமே இருந்த நகரத்திலிருந்த எனது வாடகை வீட்டின் நிலைமையை அம்மா மனக்கண்ணில் பார்த்திருக்க வேண்டும்.
என் அம்மா அவளுக்கான அழைப்பை இப்போதுதான் ஏற்றுக்கொண்டுள்ளாள்.
இந்தப் பயணத்தில்… அம்மா என்னுடன்தான் இருக்கிறார். நெஞ்சோடு அணைத்துப் பிடித்திருந்த பையில் ஒரு மண் கலயத்தில் கங்கையில் கரைக்கும் ஒரு கைப்பிடிச் சாம்பலாக…..
(இக்கதையின் மலையாள மூலத்தைப் படிக்க இந்த வரியின்மீது சொடுக்கவும்)

Leave a comment