தொல்காப்பியத்தில் ஒன்பது (பகுதி 2)
முனைவர் த.கண்ணன்
பேராசிரியர் & தலைவர்
அரிய கையெழுத்துச்சுவடித்துறை
தமிழ்ப் பல்கலைக்கழகம், தஞ்சாவூர் .
(இக்கட்டுரையின் முதற்பகுதியை வாசிக்க இங்கு சொடுக்கவும்)
ஒன்பது x நூறு = தொள்ளாயிரம்
ஒன்று முதல் ஒன்பது வரையிலான எண்களுடன் நூறு சேர்ந்த எண்ணுப் பெயர்களின் புணர்ச்சியில், ஒன்று முதல் ஒன்பதுடன் பத்து புணருமிடத்து நிலைமொழியில் ஏற்பட்ட மாற்றங்களை அவ்வாறே பெறுகின்றன. இதனைத் தொல்காப்பியம்,
”நூறுமுன் வரினுங் கூறிய இயல்பே” (தொல்.எழுத்.460)
எனச் சுட்டுகிறது. ஆனாலும் மூன்று என்பது பத்துடன் புணர்கின்ற பொழுது, முன் எனக் குறுகி நின்று னகர ஒற்று பகரமாகியது போல் அல்லாமல் நூறுடன் புணர்கின்ற பொழுது நகரமாகிறது.
பத்துடன் புணர்கின்ற போது, நிலைமொழியாகிய நான்கு, ஐந்து என்பதன் ஒற்றுக்கள் முறையே றகர ஒற்றாகவும் மகர ஒற்றாகவும் மாறின. இவையே நூறுடன் புணர்கின்ற பொழுது, நான்கு ஐந்து என்பதில் உள்ள ஒற்றுக்கள் மாற்றமடைவதில்லை. இவற்றைத் தொல்காப்பியம்,
“மூன்ற னொற்றே நகாரம் ஆகும்” (தொல். எழுத்.461)
“நான்கும் ஐந்தும் ஒற்றுமெய் திரியா” (தொல். எழுத்.462)
என்றுரைக்கிறது.
ஒன்பது என்பதுடன் பத்து எனும் வருமொழிப் புணர்ந்து தொண்ணூறு எனப் புணர்வதில் இருந்து ஒன்பதுடன் நூறு புணர்வது மாறுபட்டு அமைகிறது. அதனைத் தொல்காப்பியம்,
“ஒன்பான் முதனிலை முந்துகிளந் தற்றே
முந்தை யொற்றே ளகாரம் இரட்டும்
நூறென் கிளவி நகார மெய்கெட
ஊஆவாகும் இயற்கைத் தென்ப
ஆயிடை வருதல் இகார ரகாரம்
ஈறுமெய் கெடுத்து மகாரம் ஒற்றும்” (தொல். எழுத்.463)
என்றுரைக்கிறது.
ஒன்று முதல் ஒன்பது வரையிலான எண்கள் நூறு என்பதுடன் புணர்வதைக் குறிக்கும் தொல்காப்பியம் அவ்வாறே ஒன்று முதல் ஒன்பது வரையிலான எண்களின் மாற்றம் நூறாயிரம் என்பதுடன் புணர்கின்ற பொழுதும் அமையும் என்பதைக் குறிப்பிடுகிறது. இதனை,
“நூறா யிரமுன் வரூஉங் காலை
நூறெ னியற்கை முதனிலைக் கிளவி” (தொல். எழுத்.471)
என்றுரைக்கிறது. மேற்சுட்டியவாறு ஒன்று முதல் ஒன்பது வரையிலான எண்களுடன் நூறு, நூறாயிரம் எனும் எண்கள் புணர்வதைக் கீழ்வருமாறு விளக்கலாம்.
| புணர்ச்சி மொழிகள் | புணர்ச்சி மாற்றங்கள் | எண்ணுப் பெயர்கள் வரிவடிவம் | எண் மதிப்புகள் | நூறாயிரம் நூறு x ஆயிரம் தொல்.எழுத்.471 | நூறாயிரம் நூறு x ஆயிரம் தொல்.எழுத்.471 |
| ஒன்று + நூறு | ஒன் + நூறு ஒரு + நூறு (438 – 439, 460) | ஒருநூறு | 1 x 100 = 100 ௱ | ஒருநூறாயிரம் | 1x100x1000= 100000 ௱௲ |
| இரண்டு + நூறு | இரண் + நூறு இரரு + நூறு இரு + நூறு (438 – 440, 460) | இருநூறு | 2 x 100 = 200 ௨௱ | இருநூறாயிரம் | 2x100x1000= 200000 ௨௱௲ |
| மூன்று + நூறு | மூன் + நூறு (438, 460) முந் + நூறு (461) | முந்நூறு | 3 x 100 = 300 ௩௱ | முந்நூறாயிரம் மூன்றுநூறாயிரம் | 3x100x1000= 300000 ௩௱௲ |
| நான்கு + நூறு | நான் + நூறு நான் + நூறு (438, 460, 462,) | நானூறு | 4 x 100 = 400 ௪௱ | நானூறாயிரம் நான்குநூறாயிரம் | 4x100x1000= 400000 ௪௱௲ |
| ஐந்து + நூறு | ஐந் + நூறு ஐமந் + நூறு 438, 460, 462, ஐநூறு (இளம்.) | ஐந்நூறு ஐநூறு (இளம்.) | 5 x 100 = 500 ௫௱ | ஐந்நூறாயிரம் ஐந்துநூறாயிரம் | 5x100x1000= 500000 ௫௱௲ |
| ஆறு + நூறு | ஆறு + நூறு அறு + நூறு (438, 441, 460) | அறுநூறு | 6 x 100 = 600 ௬௱ | அறுநூறாயிரம் ஆறுநூறாயிரம் | 6x100x1000= 600000 ௬௱௲ |
| ஏழ் + நூறு | எழு + நூறு எழு + நூறு (390, 391, 460) | எழுநூறு | 7 x 100 = 700 ௭௱ | ஏழ்நூறாயிரம் (393) | 7x100x1000= 700000 ௭௱௲ |
| எட்டு + நூறு | எட் + நூறு எண் + நூறு (438, 444, 460) | எண்ணூறு | 8 x 100 = 800 ௮௱ | எண்ணூறாயிரம் எட்டுநூறாயிரம் | 8x100x1000= 800000 ௮௱௲ |
| ஒன்பது+ நூறு | ஒன்ப + நூறு, தொன்ப + நூறு (438) தொள்ள்ப + நூறு, தொள்ள்ப + ஆஇரறு, தொள்ள் + ஆஇரம், தொள்ளா + இரம், தொள்ளாயி + ரம் (463) | தொள்ளாயிரம் | 9 x 100 = 900 ௯௱ | ஒன்பது நூறாயிரம் | 9x100x1000= 900000 ௯௱௲ |
“நானூறு என்புழி வருமொழி ஒற்றாகிய நகரக்கேடு கொள்க. இன்னும் அதனானே, ஒற்றின்றி ஐநூறு என வரும் முடிபும் கொள்க” என்பர் இளம்பூரணர். (ப.263)
மேற்சுட்டியவற்றால் ஒன்பதுடன் நூறு புணர்ந்தே தொள்ளாயிரம் என்றாவதும், ஒன்பதும் நூறு என்பதற்கான எழுத்து வடிவங்களே தொள்ளாயிரம் (௯௱) என்பதில் எழுதப்படுகின்றன என்பதும் கவனிக்கத்தக்கது.
ஒன்பது நூறுகளை ஆயிரத்தின் பெயரால் அழைப்பதும் மக்கள் எடுத்தாண்டு வழக்காறாக இருந்துள்ளது என்பதை, சுந்தரசண்முகனார்,
“மூன்று நூறுகளை முந்நூறு எனவும் எட்டு நூறுகளை எண்ணூறு எனவும் கூறும் மக்கள் ஒன்பது நூறு என்பது ஆயிரத்தை நெருங்கிவிட்டதால், குறைந்த ஆயிரம் என்னும் பொருளில் அதனைத் தொள்ளாயிரம் (தொள்+ஆயிரம்) எனக் கூறுவதும் சுவையான வழக்காறேயாகும்” என்பர் (புலவர் சுந்தரசண்முகனார் 1971:23).
இவற்றால் ஒன்பதுடன் நூறு இணைந்தே தொள்ளாயிரம் என்றாவது கணக்கியல் முறையாலும் புணர்ச்சி முறையாலும் உறுதியாகிறது.
ஒன்பதினாயிரம்
தேவநேயப் பாவாணர், தொள்ளாயிரம் எனும் எண்ணுப் பெயர் 9000 என்ற மதிப்பை முன்பு குறித்தது எனவும் பிறகு தொண்டு என்ற எண்ணுப்பெயரின் மறைவிற்குப் பின், தொள்ளாயிரம் என்பது 900 என்பதைக் குறிக்கத்தொடங்கியது எனவும் குறிப்பிடுகிறார். இந்நிலையில் ஒன்பதினாயிரம் என்பது 90000 என்ற எண்மதிப்பைக் குறிக்கும் என்றும் சுட்டுகிறார். ஒன்று முதல் ஒன்பது வரையிலான எண்கள் ஆயிரத்துடன் புணர்வதைத் தொல்காப்பியம் குறிப்பிடுகிறது. அதனைக் கீழ்வருமாறு அட்டவணை செய்யலாம்.
| புணர்ச்சி மொழிகள் | புணர்ச்சி மாற்றங்கள் | எண்ணுப்பெயர்கள் வரிவடிவம் | எண்மதிப்புகள் |
| ஒன்று + ஆயிரம் | ஒராயிரம் (464) ஓராயிரம் (465) | ஒராயிரம் ஓராயிரம் | 1 x 1000 = 1000 ௲ |
| இரண்டு + ஆயிரம் | இராயிரம் (464) ஈராயிரம் (465) | இராயிரம் ஈராயிரம் | 2 x 1000 = 2000 ௨௲ |
| மூன்று + ஆயிரம் | முவ்வாயிரம் (466) | முவ்வாயிரம் | 3 x 1000 = 3000 ௩௲ |
| நான்கு + ஆயிரம் | நாலாயிரம் (467) | நாலாயிரம் | 4 x 1000 = 4000 ௪௲ |
| ஐந்து + ஆயிரம் | ஐயாயிரம் (468) | ஐயாயிரம் | 5 x 1000 = 5000 ௫௲ |
| ஆறு + ஆயிரம் | அறாயிரம் (469) ஆறாயிரம் (469 – இளம்.) | அறாயிரம் ஆறாயிரம் | 6 x 1000 = 6000 ௬௲ |
| ஏழ் + ஆயிரம் | எழாயிரம் (392) | எழாயிரம் | 7 x 1000 = 7000 ௭௲ |
| எட்டு + ஆயிரம் | எண்ணாயிரம் (469 இளம்.) | எண்ணாயிரம் | 8 x 1000 = 8000 ௮௲ |
| ஒன்பது+ ஆயிரம் | ஒன்பதினாயிரம் (470) | ஒன்பதினாயிரம் | 9 x 1000 = 9000 ௯௲ |
ஒன்பது என்பதுடன் ஆயிரம் புணர்கின்ற பொழுது, இன் சாரியை பெற்று, ஒன்பதினாயிரம் என்று புணர்கின்றது. கணிதமுறையில் எண்கள் எழுதப்படும் போது, ௯௲ என்றே எழுதப்படுகிறது.
முடிவுரை
தொல்காப்பியம், ஒன்பது ஒன்பான் ஒன்பஃது, தொண்டு எனும் எண்ணுப் பெயர்களை 9 என்னும் எண் மதிப்பிற்குச் சுட்டுவதற்கு எடுத்தாள்கிறது. ஒன்று முதல் எட்டுவரையிலான எண்களுடன் பத்து இணைந்து வருகின்ற போது ஒருபஃது, இருபஃது என்றாவதைக் காணமுடிகிறது. இந்நிலையில் ஒன்பஃது, என்பது அவ்வாறு இல்லாமல் ஒன்பது என்பதன் செய்யுள் விகாரமாக இடம்பெறுவதை உரையாசிரியர்கள் சுட்டுகின்றனர்.
தேவநேயப் பாவாணர், தொண்டு என்பது ஒன்பதிற்கான பழமையான பெயர் என்றும் அப்பெயர் தொல்காப்பியர் காலத்தே உலகவழக்கிழந்தது என்றும் குறிக்கப்படுகிறார். தொல்காப்பியர் ஒன்பது என்பதைக் குறிக்க தொண்டு என்னும் சொல்லைக் குறிப்பிட்ட போதும் எண்ணுப் பெயர்ப் புணர்ச்சியில் எந்த இடத்தும் தொண்டு என்பதைக் குறிப்பிடவில்லை.
தேவநேயப் பாவாணர் குறிப்பது போல், ஒன்பது என்பது 90 என்றும், தொண்ணூறு என்பது 900 என்றும் தொள்ளாயிரம் என்பது 9000 ஆயிரம் என்றும் கொள்வதற்கு தொல்காப்பிய விதிகள் இடமளிக்கவில்லை. தொல்காப்பியம் சுட்டும் எண்ணுப்பெயர்கள் எண்கள் எழுதப்படும் முறைக்கும் இரண்டு எண்களின் சேர்க்கையில் உள்ள கணிதமுறைக்குமான உறவாகவும் உள்ளன. இந்நிலையில் தொண்ணூறு என்பதை, ஒன்பதுடன் பத்து என்பதற்கான எண்ணால் (௯௰) எழுதுவதையும் தொள்ளாயிரம் என்பதை ஒன்பதுடன் நூறு என்பதற்கான எண்களால் (௯௱) எழுதுவதையும் காணுமிடத்து கணித எழுதியல் முறையில் எண்களுக்கான சொற்களும் தோற்றம் பெற்றுள்ளன என்பதை உறுதிசெய்ய முடிகிறது. இப்புணர்ச்சிகளின் அடிப்படையில் நோக்குகின்ற பொழுது ஒன்பது என்பது 9 என்ற எண் மதிப்பாக அமைகின்றதேயன்றி 90 என்ற மதிப்பாக அமையவில்லை.
பத்தின் மதிப்பாக வரும் 90 என்பதை நூற்றின் பெயருடன் கூறுவதும் நூற்றின் மதிப்பாக 900 என்பதை ஆயிரத்தின் பெயருடன் கூறுவதும் மக்கள் வழக்காற்றில் தோன்றியிருக்க வேண்டும். அந்நிலையில் தொல்காப்பியம் அச்சொற்களுக்கான புணர்ச்சிவிதிகளை கணக்கியல் நெறியில் இருந்து பிறழாத வகையில் அமைத்துச்சென்றுள்ளது. எனவே உலக வழக்கை நன்கு ஆராய்ந்து மொழி புணரும் இயல்பை நன்கு ஆராய்ந்து தெளிந்து எழுதப்பட்ட தொல்காப்பியத்தின் முடிவுகள் என்றும் போற்றத்தக்கன என்பது விளங்கும்.
ஆய்வுத் துணைநூல்கள்
இளங்குமரானர்.இரா.(பதி.ஆ), (2004), தேவநேயம் (பாவாணர்) தொகுதி 8, தமிழ்மண் பதிப்பகம், 2, சிங்காரவேலர் தெரு,தியாகராயர் நகர், சென்னை -17.
புஷ்பரத செட்டியார் (பதி.ஆ), (1887), கணிமேதையார் செய்த ஏலாதி மூலமும் உரையும் (1887), கலாரத்நாகர அச்சுக்கூடம், சென்னை.
இளவழகன்,கோ(பதி.ஆ), (2003) தொல்காப்பியம் எழுத்திகாரம், இளம்பூரணம், தமிழ்மண் பதிப்பகம், 2, சிங்காரவேலர் தெரு,தியாகராயர் நகர், சென்னை -17.
இளவழகன்,கோ(பதி.ஆ), (2003) தொல்காப்பியம் சொல்லதிகாரம், இளம்பூரணம், தமிழ்மண் பதிப்பகம், 2, சிங்காரவேலர் தெரு,தியாகராயர் நகர், சென்னை -17.
இளவழகன்,கோ(பதி.ஆ), (2003) தொல்காப்பியம் பொருளதிகாரம், இளம்பூரணம், தமிழ்மண் பதிப்பகம், 2, சிங்காரவேலர் தெரு,தியாகராயர் நகர், சென்னை -17.
இளவழகன்,கோ(பதி.ஆ), (2003) தொல்காப்பியம் எழுத்திகாரம், நச்சினார்க்கினியம், தமிழ்மண் பதிப்பகம், 2, சிங்காரவேலர் தெரு,தியாகராயர் நகர், சென்னை -17.
இளவழகன்,கோ(பதி.ஆ), (2003) தொல்காப்பியம் சொல்லதிகாரம், நச்சினார்க்கினியம், தமிழ்மண் பதிப்பகம், 2, சிங்காரவேலர் தெரு,தியாகராயர் நகர், சென்னை -17.
இளவழகன்,கோ(பதி.ஆ), (2003) தொல்காப்பியம் பொருளதிகாரம், நச்சினார்கினியம், தமிழ்மண் பதிப்பகம், 2, சிங்காரவேலர் தெரு,தியாகராயர் நகர், சென்னை -17.
சுந்தரசண்முகனார், (1971), தொண்ணூறும் தொள்ளாயிரமும், புதுவைப் பைந்தமிழ்ப் பதிப்பகம், புதுச்சேரி -1.
(இக்கட்டுரையின் முதற்பகுதியை வாசிக்க இந்த வரியின் மீது சொடுக்கவும்)

Leave a comment