சிறுகதை

நீ இல்லையென்றால்

பெரியார் விஜயன்

’உன்னாலே எந்நாளும் என் ஜீவன் வாழுதே,
சொல்லாமல் உன் சுவாசம் என் மூச்சில் சேருதே!

திறன்பேசியின் ரிங்டோன் முழுமையாக ஒலித்து அமர்ந்தது. இரவு முழுதும் தூக்கமின்றித் தவித்துவிட்டு, அதிகாலையில் சற்றுநேரம் கண்ணயர்ந்த அகிலனுக்கு அந்த ஓசை அவ்வளவு சுகமாகப் படவில்லை. கைபேசியை எடுப்பதற்குக் கைநீட்ட நினைத்தவன் சோம்பலால் விட்டுவிட்டான். ஓசை நின்றவுடன் கவிழ்ந்து படுத்துக்கொண்டு தூங்க எத்தனித்தான்.

’உன்னாலே என் ஜீவன்………………………..’. மூன்றாவது முறை ஒலித்தது பாடல். முடியும்போது கைநீட்டி எடுத்தான்.

“ஹலோ”

“டேய் அகில் குட் மார்னிங். இன்னும் தூக்கமா? கெட்டப் மேன். இன்னைக்கு ப்ரோகிராம் மறந்துட்டியா? பி குயிக்” – எதிர் திசையிலிருந்து நினைவூட்டினாள் அகிலனின் தோழி பவித்ரா.

“ஹாய் பவி. நைட்டெல்லாம் சரியா தூக்கமில்ல. நான் வாறேன். ஞாபகம் இருக்கு. 10 மணிக்குத் தானே” – பதிலிறுத்தான் அகிலன்
“ஓ கே மறந்துடாத. வி வில் பி வெய்ட்டிங் ஃபார் யூ தேர், பை” – அழைப்பைத் துண்டித்தாள் பவித்ரா.

தூக்கம் கலைந்த அகிலன் சற்றுநேரம் படுத்தே கிடந்தான். தூக்கம் கொள்ளாத நடு இரவில் அணிந்து செல்வதற்கான துணிகளை அயன் செய்து வைத்தது நல்லது என்று நினைத்தான். அத்துடன், ஷேவ் செய்ய வேண்டிய அவசியமும் இல்லை. தாடி வைத்துள்ளான். அதை அழகாக டிரிம் செய்துள்ளான். தன் நண்பர்களைப் போலவே. அதுதானே இன்றைய இளைஞர்களின் அழகு என்று கருதப்படுகின்றது. குளித்துக் கிளம்பினால் போதும். சாப்பிடவும் அவசியமில்லை. நண்பர்களுடன் சந்திப்பு என்றால் சாப்பாடு குறித்த கவலை இல்லை அல்லவா?

அகிலன் 25 வயது பொறியியல் பட்டதாரி. சரியான இடத்தில் எதிர்பார்த்த அளவு சம்பளம் கிடைக்காததால் ஒரு சில கம்பனிகளில் 3 முதல் 6 மாதங்கள் வரை வேலை பார்த்துவிட்டு தற்போது நண்பர்களுடன் மகிழ்ச்சியாகச் சுற்றிக்கொண்டிருக்கும் இளைஞன். காலையில் நண்பர்களுடன் பொழுதைக் கழிப்பது, மாலையில் உடற்பயிற்சிக் கூடம் செல்வது, இரவில் மறுபடியும் நண்பர்களுடன் உலவுவது. இவைதான் அகிலனின் தற்போதைய பணி.

மெள்ள எழுந்தான். அவசரமாகக் குளித்தான். அவசரமின்றி அலங்காரம் செய்துகொண்டான். 25 நிமிடங்களில் ‘இந்திரபிரஸ்தா’ ரெஸ்டாரெண்டை அடைந்தான்.
“ஹாய் அகில் கமான்” அருகில் சென்று கைகளை ஹை ஃபை அடித்துக் கொண்டாள் எதிர்பார்த்திருந்த தோழி பவித்ரா.

“ஆமா. எங்க நம்ம கேய்ஸ் சுனிதா, ராகவ், இளங்கோ, ப்ரியங்கா……….. யாரையும் காணோம். வாட் ஹாப்பண்ட். ப்கிராம் கேன்சல்டா” ஆர்வத்துடன் விசாரித்தான் அகிலன்.

“நோ நோ இப்போ வந்திருவாங்க. கம் லெட்ஸ் ஹாவ் அ காஃபி” – பதிலுரைத்தாள் பவித்ரா.

இருவரும் உணவகத்தின் வெளியே பசும் புல்வெளியில் இயற்கைச் சூழலில் அமைக்கப்பட்டிருந்த குடிலில் அமர்ந்து தேநீர் ருசித்துக் கொண்டிருந்தபோதே நண்பர்கள் அனைவரும் வந்துவிட்டனர். அனைவரும் அவரவருக்குப் பிடித்தவற்றை அருந்தும்படி பணித்தான் அகிலன்.

“என்ன அகில் போலாமா? ஷீ வில் பி வெய்ட்டிங் ஃபார் யூ தேர்” – ராகவ் தொடங்கினான். அனைவரும் ஆமோதித்தனர். 20 நிமிடங்களில் அங்கிருந்து புறப்பட்டனர்.

பெரிய ஷாப்பிங் மாலில் இருந்த ஏசி ரெஸ்டாரண்டில் ’வெயிட்டி’க் கொண்டிருந்தாள் ஜூலி (22). முதலாமாண்டு பொறியியல் படித்துக்கொண்டிருந்த அவள் ஒரு ஜாலி பேர்வழி. எதையும் பெரிதாக எடுத்துக்கொள்ளாத குணம் அவளுக்கு. அகிலன் மீது நாலு மாதங்களுக்குப் பிறகு இப்போதுதான் மெதுவாகக் காதல் மொட்டு விட்டிருக்கிறது.

காத்திருந்து சற்று சலிப்படைந்த அவள் கைபேசியை எடுத்து ’வாட்ஸ்ஸப்ப’ தொடங்கினாள்
’காதல்/ காதல் போயின் / வாழ்தல்’

நண்பர்களின் வாட்ஸப் குரூபில் வந்த ஒரு ஹைக்கூவை வாசித்தாள். ‘காதல் என்பது வெறும் பாலுணர்வுத் தூண்டல்தான். உள்ளத்துடன் நிரந்தரமான தொடர்புடையதும் நிலையானதும் அல்ல அது”. யாரோ வாட்ஸப் ஸ்டோரியாகச் சேர்த்திருந்தார்கள். அதை வாசித்துக் கொண்டிருந்தபோது நண்பர்கள் அனைவரும் வந்து சேர்ந்தனர். ‘ஹாய்’ சொல்லிக் கொண்டனர். அனைவரும் ஒன்றாக அமர்ந்து சற்று நேரம் பேசிக்கொண்டார்கள். பின்னர் அகிலனும் ஜூலியும் தனியாகப் பேசிக்கொள்வதற்கு வசதியாக மற்றவர்கள் அடுத்த மேசையில் சென்று அமர்ந்து அரட்டையடிக்கத் தொடங்கினர் . இடையிடையே கைப்பேசியையும் பார்த்துக்கொண்டிருந்தனர்.

பகலையும் இரவாக்கும் மெல்லிய ஒளி. அகிலனும் ஜூலியும் கண்களால் பேசிக்கொண்டிருந்தார்கள். ஜூலி தன்னிடமிருந்த பரிசுப் பெட்டியை எடுத்து மெதுவாக அகிலனிடம் நீட்டினாள்
“இதென்ன ஸர்ப்ரைஸ். எனி குட் நியூஸ்” – அகிலன் வினவினான் மெல்லிய குரலில்.


“சும்மாதான் அகில். ஓப்பன் பண்ணிப் பாரு”

மெதுவாகப் பிரித்துப் பார்த்தான் அகிலன். அழகான, பொன்னிறத்திலான, விலை உயர்ந்த டைட்டன் தயாரிப்பிலான ஒரு கைக் கடிகாரம்.

“ஓ வண்டர்ஃபுள். சூப்பர் செலக்‌ஷன். தேங் யூ”

“பிடிச்சிருக்கா”

“ரொம்ப. ஆனா நான் உனக்கு ஒண்ணும் கொண்டு வரலியே’ – குற்ற உணர்வுடன் சொன்னான் அதைச் சற்றும் எதிர்பார்த்திராத அகிலன்.

“அதான் நீ இருக்கியே. அதுக்குமேல நான் ஒண்ணும் எதிர்பார்க்கல” –ஜூலியின் அழகிய குரல்.

இருவரின் கைகளும் இணைந்தன. கைக்கடிகாரத்தை அணிவித்தாள் ஜூலி. கடிகாரத்தில் மெதுவாக முத்தமிட்டான். ஜூலியின் வலது கையிலும். அவனை அரைகுறை மனத்துடன் காதல் செய்வதாகக் கருதிய ஜூலி அப்போதுதான் முழுமனத்துடன் அவனைக் காதலிப்பதாக உணர்ந்தாள்.

அகிலனின் கையில் புதிய வாட்ச் ஜொலிப்பதைப் பார்த்த இளங்கோ அதைத் தன் நன்பர்களுக்குத் தெரிவிக்க, அனைவரும் அகிலனிடம் விரைந்தனர் . பரிசையும் பாராட்டினர்.

பின்னர்
“டுடேஸ் ட்ரீட் உன்னோட வகை தான்” – அகிலனிடம் முறையிட்டாள் சுனிதா.

“இட்ஸ் ஓகே என்ஜாய் – தயக்கமின்றிப் பதிலிறுத்தான் அகிலன்
“தேங்க் யூ வெரிமச். கம் ஆன் லெட்ஸ் கோ” – ராகவ் சொன்னதும் எல்லாரும் அந்த மாலில் இருந்த ‘பாரு’க்குச் சென்றார்கள். அவரவருக்குத் தேவையானதைச் சாப்பிட்டார்கள். பெரும்பாலனவர்கள் ’ஸாஃப்ட் டிரிங்ஸ்’ அருந்தினர் .மீண்டும் ரெஸ்டாரெண்டுக்கு வந்து பிரியாணி, பீசா, கோபி65, சில்லிசிக்கன்65, பன்னீர் மசாலா, பேபிகார்ன் ஃப்ரை இன்னபிறவற்றை உண்டு மகிழ்ந்தனர். இரண்டு மணி நேரம் இருபது நிமிடங்கள் போல கடந்துவிட்டது.

“ஓகே புறப்படலாம்” தொடங்கினாள் பவித்ரா.

“கொஞ்சம் வெயிட் ப்ளீஸ்” – இது ப்ரியங்கா.

மேலும் இருபது நிமிடங்கள் அங்கே செலவிட்டபின் அந்த மாலில் நான்காவது மாடியிலிருந்த மல்டிஃப்ளக்ஸ் தியேட்டருக்குச் சென்றார்கள், அங்கு ஒன்றரை மணிநேர இரானியப் படத்தை ரசிக்க. அகிலனும் ஜூலியும் அருகருகே அமரவைக்கப் பட்டனர். படமும் இனித்தது; பக்கமும் இனித்தது. கண்டவர்கள் மகிழ்ந்தனர்; காதலர்கள் ருசித்தனர். படம் முடிந்தது. நேரம் போனதே தெரியவில்லை.

அடுத்த ப்ரோகிராமைத் திட்டமிட்ட பின் நண்பர்கள் பிரிந்து சென்றனர்.
*****

வீட்டில் தூக்கமின்றித் தவித்துக்கொண்டிருந்தான் அகிலன். மணிகள் பல கடந்தன. சற்றும் தூக்கம் பிடிக்கவில்லை. மணி இரண்டைத் தாண்டியது. நண்பன் ராகவிற்கு ஃபோன் செய்தான் அகிலன்.

“ஹலோ…..என்னடா மச்சி இந்த நேரத்தில தூக்கம் வரலியா? ஜூலிகூட சாட் பண்ணு ஓகே” தூக்கக் கலக்கத்தில் பேசிய ராகவ் அகிலனின் பதிலைக் கேட்காமலேயே அழைப்பைத் துண்டித்துவிட்டு தூக்கத்தைத் தொடர்ந்தான்.

இளங்கோவிற்கும் கால் பண்ணினான் அகிலன். அவனிடமிருந்தும் அதே பதில் தான் கிடைத்தது. தயங்கித் தயங்கி மெசேஜ் அனுப்பினான்.


கிட்டத்தட்ட அதே நிலையில் அவதிப்பட்டுக்கொண்டிருந்த ஜூலியும் தோழிகளான பவித்ரா, சுனிதா, ப்ரியங்கா ஆகியோரிடம் பேசிவிட்டாள். அகிலனுக்குக் கிடைத்ததுபோன்ற பதில்தான் அவளுக்கும் கிடைத்திருந்தது. அதைக் குறித்து யோசித்துக் கொண்டிருந்த வேளையில்தான் அகிலனிடமிருந்து மெசேஜ் வந்தது.

‘சாட்’ டத் தொடங்கிய இருவருக்கும் விடிந்ததுகூடத் தெரியவில்லை. விடிந்தபின்னர் சற்று நேரம் தூங்கினர்..

மறுநாள் திட்டமிட்டது போலவே இருவர் மட்டும் நண்பர்கள் யாருமின்றிச் சந்தித்துக் கொண்டனர்.

“அகில் இப்பொழுதெல்லாம் என் அகிலமே நீதான் தெரியுமா” – பூங்காவில் வீசிய தென்றலைக் கண்களை மூடி ரசித்துக்கொண்டு, அகிலனின் மார்பில் சாய்ந்தபடி சன்னமான குரலில் உரைத்தாள் ஜூலி.

“நீ இல்லாம நான் இல்ல. நீ இல்லாம எனக்கு இந்த உலகமே தேவையில்ல” – காதல் வழியக் குழைந்தான் அகிலன்.

இப்படி இருவரும் அடிக்கடி சந்தித்துக்கொண்டனர். அப்பொழுதெல்லாம் வாய்கள் பேசின; கண்கள் பேசின; கைகள் பேசின; உள்ளங்கள் கலந்தன; உடல்கள் மலர்ந்தன. அப்படியே ஆறு மாதங்கள் ஓடிவிட்டன. இடையிடையே நண்பர்களுடனான சந்திப்புகளும் மகிழ்ச்சியும் நிகழ்ந்தேறின.

ஒருநாள் இளங்கோ தன் பிறந்தநாளுக்காக அனைவரையும் அழைத்திருந்தான். அனைவரும் குழுமினர்; ’கேக்’ வெட்டப் பட்டது. இளங்கோ விருந்தளித்து உபசரித்தான். எல்லாரும் வாழ்த்து மழை பொழிந்தனர்; சிலர் பரிசுகளும் தந்தனர். “நீண்ட நீண்ட காலம் நீ நீடு வாழ வேண்டும்” பாவலர் அறிவுமதியின் பிறந்தநாள் பாடலைப் பாடி வாழ்த்திப் பிரிந்து சென்றனர்.

இரவு 11 மணிக்கு இளங்கோவிடமிருந்து அழைப்பு வந்தது அகிலனுக்கு.

“அகில் தூங்கிட்டியா ட்ரீட் எப்படி இருந்தது”

“சூப்பர்டா. தேங்ஸ் நீ இன்னும் தூங்கலியா”

”என்னடா புதுசா தேங்ஸ் ஆமா. உன் முகத்திலே ஏதோபெரிய சேஞ்ச் தெரிந்தது. உன்னோட பெர்ஃபார்மன்ஸ்ல நீ அத மறைச்சதயும் கவனிச்சேன்.. கூட்டத்தில கேட்க வேண்டாம்னுதான். என்ன ஆச்சு எனி மிஸ் அண்டர்ஸ்டேண்டிங் வித் ஜூலி?’

“நோ நோ நத்திங். எங்க விஷயம் வீட்டுக்குத் தெரிஞ்சதோ என்னவோ? வீட்ல எனக்கு அல்லயன்ஸ் பாக்கறாங்க.”

“டோண்ட் வரி. நாங்க சொல்லிப் புரிய வைக்கறோம்”

“இல்லடா பேரண்ஸ் எனக்கு நிறையா ஃபிரீடம் கொடுத்திருக்கறாங்க. ஆனா அவங்க மனசு நோகறதுமாதிரி என்னால நடந்துக்க முடியாது” அகிலனின் குரல் தழுதழுத்தது. அழைப்பு துண்டிக்கப் பட்டது. சற்று நேரத்தில் ராகவிடமிருந்தும் கால் வந்தது

”அகில் இளங்கோ எல்லாம் சொல்லிட்டான் நீ ஜூலிய கூட்டிட்டு வா. ரெஜிஸ்டர் மேரேஜ் பண்ணிக்கோ. நாங்க ஹெல்ப் பண்றோம். போதுமா?’

“இல்லடா அது ஒத்துவருமான்னு தெரியல. பின்னாடி குடும்பம் ஒண்ணு சேருமா? சேர்ந்தாலும் ஹண்ட்ரட் பெர்சண்ட் சந்தோஷம் இருக்குமா? குறைகள் கண்டுபிடிக்கறதே வேலையாயிடும். அப்புறம் சண்டை அது இதுன்னு………….” – தயக்கத்துடன் பதிலளித்தான் அகிலன்.

“நோ நெவர்.அதெல்லாம் உன்னோட கற்பனைதான். வீணா மனசக் குழப்பிக்காத. காலைல டிஸ்கஸ் பண்ணலாம் எல்லாருமா சேர்ந்து. குட் நைட்”

பின்னும் தூக்கம் வராமல் தவித்த அகிலன் பலவாறு யோசிக்கத் தொடங்கினான். பல நிஜங்களும் உலகியல்புகளும் அவனது மனத்துக்குள் ஓடின சின்னத்திரை நாடகத் தொடர்கள் போல.
*** *** ***
ஜூலி தூக்கம் வராமல் துடித்தாள்; யோசித்தாள்; மீண்டும் மீண்டும் யோசித்தாள்; பவித்ராவை அழைத்தாள்.
“ஏய் ஒருத்தி இங்க தூக்கமில்லாம துடிக்கறா. நீங்கெல்லாம் சுகமா தூங்கணுமா?”

“ஜூலி என்னடி ஆச்சு. அதான் ஃபங்ஷன்ல ஒருமாதிரி இருந்தியா. சொல்லு”

”என்னத்த சொல்ல. வீட்ல மாப்ள பாக்கறாங்க. அகில எனக்கு ரொம்பப் பிடிச்சிருக்கு. என்ன செய்யறதுன்னு தெரியல. ஒரே குழப்பமா இருக்கு” – பதிலளித்தாள் ஜூலி

“ஏய். எங்களுக்குத் தெரியாம ஜாலியா சுத்தினீங்க. இப்போ என்னடி உளர்ற”

“இல்லடி எங்க வீட்ல நான் ஒன்லி டாட்டர். அகிலனும் அப்டிதான். நாங்க பேரண்ட்ஸ பகைச்சுகிட்டு மேரேஜ் செய்துகிட்டா நல்லா இருக்குமா? – வினா எழுப்பினாள் ஜூலி.

“என்னடி இப்ப இப்படிப் பேசற இத முன்னாடியே யோசிச்சிருக்கக் கூடாதா.? இப்படிபட்ட சிட்டிவேஷன் வரக்கூடாதுன்னுதான் நாங்கெல்லாம் ஃப்ரண்ட்ஸாவே இருக்கோம்” – உறுதியுடன் சொன்னாள் பவித்ரா.

“இல்லடி நல்லா யோசிச்சுப் பாரு. நாளைக்கு நாங்க ரெண்டு பேரும் ரெஜிஸ்டர் மேரேஜ் பண்ணீட்டு வெளியூர்ல எங்காவது ஒரு ஃப்ளாட்ல ஸ்டே பண்ணிட்டு, வேலைக்குப் போகனும். குழந்தையை யாரு பாத்துப்பாங்க. என்ன இருந்தாலும் எங்க பேரண்ட்ஸ் பாக்கறது மாதிரி வருமா? இப்பெல்லாம் வேலைக்காரிகள நம்பி வீட்டையும் விட முடியல. குழந்தைகள எப்படி விட முடியும் .சிட்டிகள்ல வேலைக்காரிக ஜாலியா சீரியல் பாக்கனுங்கறதுக்காகவும், வேல செய்யாம சும்மா இருக்கறதுக்காகவும் குழந்தையை நாள் முழுசா தூங்க வைக்கறாங்களாம். அதுக்கு பல ட்ரிக்ஸும் பண்ணறாங்களாம். அதுமட்டுமில்ல குழந்தையை பிச்சைக்காரிக்கு வாடகைக்கு குடுக்கறாங்களாம், அதெல்லாம் எவ்வளவு கொடுமை தெரியுமா?”

“ஆமாமா நானும் படிச்சேன். வெளிநாட்ல வேலக்காரிக கிட்ஸ பனிஷும் பண்ணறாங்களாம். பட் யூ டோண்ட் வரி. நம்ம ஊர்ல நிச்சயமா அப்டி செய்ய மாட்டாங்க. அதோட சிசிடீவி யும் இருக்குமே”

”நம்ப முடியாதுடி. அப்புறம் எங்க பேரண்ட்ஸ் எங்க மேரேஜால பகையா யிட்டாங்கன்னா எதிர்காலத்துல ஒண்ணு சேருவாங்கன்னு டெஃபனிட்டா சொல்ல முடியாது. அப்படியே சேர்ந்தாலும் ஈகோ ப்ராப்ளம் இருக்கும் .குழந்தைக்கு பேர் வைக்கறது, முடியெடுக்கறதுன்னு எல்லாத்திலயும் உங்க வழக்கமா? எங்க பழக்கமான்னு சிக்கல் நிறைய வரும். அது லைஃப் டைம் தொடரும். அதனால எங்களோட சந்தோஷம் தொலையுமில்லியா” – ஜூலியின் தீர்க்கமான பதில்.

“அடிப்பாவி. இதெல்லாம் நீ பழகறதுக்கு முன்னாடி திங்க் பண்ண வேண்டியது. பிடிச்சவங்க மேரேஜ் பண்ணா சிக்கல் இருக்காது. இப்பவே அதப் பத்திப் பேசி ஒரு அண்டர்ஸ்டண்டிங் போட்டுக்கிட்டா போதுமே. ஈஸி. மட்டுமில்ல இத முதல்லயே யோசிச்சிருக்கணும். இப்ப யோசிச்சி என்ன யூஸ்”
“இப்பவாவது யோசிக்கலன்னா. அப்புறம் எப்பவும் யோசிக்க முடியாது. என்னோட பேரண்ட்ஸ் சம்பாத்தியம் எல்லாம் எனக்காகத் தானே”

“நீ ஏதோ ரொம்ப குழம்பியிருக்க. நாளைக்கு நாம எல்லாரும் கலந்து பேசி ஒரு நல்ல முடிவு எடுப்போம். நீ கண்டிப்பா வருவதான”

“ ஆ……………மா. வருவேன்”

“சரி நிம்மதியா தூங்கு, குட் நைட்”

மறுநாள் நண்பர்கள் பூங்காவில் காத்திருந்தனர். அகிலனும் ஜூலியும் வருவதற்குத் தாமதமானது. காதலர்களின் சமீபத்திய செயல் குறித்தும் மனமாற்றம் குறித்தும் நண்பர்கள் கலந்துரையாடினர். அப்போது அகிலன் வந்தான்; நண்பர்களின் கேள்விக் கணைகளுக்குப் பதில் அளித்தான்.

”எனி வே ஐ லவ் ஜூலி சோ மச். அவ இல்லாம என்னால வாழ முடியாது. மோர் ஓவர் ஐ வில் பி நெவர் ஹாப்பி வித்தௌட் ஹர்”

“தென் ஏன் இந்தத் திடீர் மாற்றம்” – ப்ரியங்கா.

“ஜஸ்ட் திங்கிங் அவ்ளோதான், பட் வேறொரு பொண்ண மேரேஜ் பண்ணிக்க கண்டிப்பா நான் நினைக்கல. ப்ராமிஸ்- அகிலன் .

பதில் சொல்லிக்கொண்டிருக் கும்போது வந்தாள் ஜூலி
“வா. டேக் யுவர் சீட். என்ன சாப்பிடற” கேட்டாள் பவித்ரா.

“………………… ”

இரண்டு நிமிட மௌனத்திற்குப் பின்னர்
“பைன் ஆப்பிள் ஜூஸ் “ என்றாள் ஜூலி.

”சொல்லு. வாட் ஹாப்பண்ட் யூ. நைட் என்னவெல்லாமோ புலம்பினியாம். அதெல்லாம் உண்மையா?” – விசாரித்தான் இளங்கோ.

“பாரு ஜூலி நீங்க ரெண்டுபேரும் சந்தோஷமா இருக்கனும். மேரேஜ் பண்ணிக்கனும்; அதான் எங்க விருப்பம். அதுக்காக நாங்க என்ன ஹெல்ப் வேணாலும் செய்யத் தயாராய் இருக்கறோம். நீ என்ன சொல்ற” – ப்ரியங்கா.

பழச்சாறைக் குனிந்தபடி கொஞ்சங்கொஞ்சமாக அருந்திக்கொண்டிருந்த ஜூலி தலை நிமிராமல் அகிலனைக் கடைக்கண்ணால் நோக்கினாள். நண்பர்கள் அனைவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர்.

அருந்திய பிறகு ஜூலி மெதுவாக அங்கிருந்து புறப்பட எத்தனித்தாள். அகிலன் அவளது கையைப் பற்றினான். தனது மறு கையால் அவனது கையை மெதுவாக எடுத்துவிட்டாள். தான் பரிசளித்த கைக்கடிகாரத்தைக் கவனித்தாள். தன் கையில் அணிந்திருந்த மோதிரத்தைக் கழற்றி அகிலனது விரலில் மாட்டிவிட்டு வேகமாக அங்கிருந்து சென்றுவிட்டாள்.

நண்பர்களால் அவளைத் தடுக்க இயலவில்லை.

அணிவித்த மோதிரத்தையும் சென்றுகொண்டிருந்த ஜூலியையும் மாறிமாறிப் பார்த்துக்கொண்டே நின்றான் அகிலன்.

நண்பர்கள் அவனைச் சமாதானப் படுத்த முனைந்தனர். யாருடைய வார்த்தைகளும் அவனது செவிகளுக்கு எட்டவில்லை. அவள் மறைந்தவுடன் தானும் அங்கிருந்து புறப்பட்டான். நண்பர்கள் அவனைப் பின் தொடர்ந்தும் கூச்சலிட்டும் பயனில்லாமல் போனது.

அதன்பிறகு அகிலனுக்கும் ஜூலிக்குமிடையே தொடர்பற்றுப் போனது. நண்பர்கள் பலவாறு முயன்றும் தோற்றுப் போனார்கள்.


ஒரு மாதம் சென்ற பின்னர் ப்ரியங்காவிற்கு ஒரு வாட்ஸப் மெசேஜ் வந்தது. அது ஜூலியின் திருமண அழைப்பிதழ். நண்பர்களுக்கு அதை அனுப்பினாள். அனைவரும் அதைக்குறித்து விவாதித்தார்கள். ஜூலியைத் தூற்றவும் செய்தார்கள்.

அகிலன் சொன்னான்
“அதைக்குறித்து இனிமேல யாரும் எதுவும் பேச வேண்டாம். ஒரு நல்ல கிஃப்ட் ரெடி பண்ணுங்க. நாம கண்டிப்பா மேரேஜுக்கு போயாகணும்”.

அதற்குமேல் யாராலும் எதுவும் பேச முடியவில்லை. நண்பர்கள் எல்லாரும் திருமணத்திற்குச் சென்று வாழ்த்திவிட்டு வந்தனர். அகிலன் மட்டும் விருந்துண்ணாமலேயே வந்துவிட்டான்.


ஒரு மாதம் கழிந்தது. ராகவிற்கு ஒரு அழைப்பு வந்தது
“அகிலன் பேசறேன் வீட்டுக்கு வா”

ராகவ் இளங்கோவையும் அழைத்துக் கொண்டு அகிலனின் வீடு சென்றான். அவர்களை வரவேற்ற அகிலன் அவர்களிடம் தனது திருமண அழைப்பிதழை நீட்டியபடி சொன்னான்.

“நம்ம ப்ஃரண்ட்ஸுக்குக் கொடுத்திருங்க. எல்லாரும் கண்டிப்பா வந்திருங்க. நீங்கதான் எனக்கு எல்லா உதவியும் செய்யணும். அப்புறம் ஜூலிக்கும் வாட்ஸப் பண்ணீடுங்க முடிஞ்சா நேர்ல குடுத்திருங்க”

“சாரிடா அகில்…” ராகவ் கலங்கினான்.

“இட்ஸ் ஓகே”- அகிலனின் குரலில் மகிழ்ச்சி குறைந்திருப்பதை உணர்ந்தான் ராகவ்.

திருமணத்திற்கு நண்பர்கள் எல்லோரும் சென்றனர்; வாழ்த்தினர்; பரிசளித்தனர்; விருந்துண்டனர்; ஜூலியும் கலந்துகொண்டாள். எப்போதும் போல நண்பர்களுடன் பேசினாள்; விடைபெற்றுச் சென்றாள்


15 மாதங்கள் ஓடி விட்டன. எல்லாரும் அவரவர் வேலைகளில் மூழ்கியிருந்தனர்.

ஒருநாள் காலையில் ப்ரியங்காவிற்கு ஒரு வாட்ஸப் வீடியோ கால் வந்தது. அதில் ஒரு பெண் குழந்தை அழகாக முழித்துக் கொண்டிருந்தது. யாரென்று ஊகிக்கும் முன்னர் ஜூலியின் முகம் தென்பட்டது.

“ஹாய் ஜூலி. எப்டியிருக்க, குழந்த…………. அழகா இருக்கு”

“என் குழந்தைதான் 4 மாசம் ஆச்சு. அப்பா அம்மா என்கூட இருந்து கவனிச்சுகறாங்க. நீ எப்டி இருக்க, நம்ம ப்ஃரண்ட்ஸ் எல்லாரும் எப்டி இருக்காங்க”

“நல்லா இருக்கேன். எனக்கும் வரன் பாத்திட்டாங்க அடுத்த மாசம் என்கேஜ்மெண்ட். நானே கூப்பிடலாம்னு இருந்தேன். நீ கண்டிப்பா வந்திரு. ஆமா. உன்னோட லைஃப் எப்டி போய்ட்டிருக்கு?”

“ஓ நல்….லா போய்ட்டு இருக்கு. பிரச்சினை இல்ல நானும் நெக்ஸ்ட் வீக்கிருந்து வேலைக்குப் போகப் போறேன்.பேரண்ட்ஸ் கூட இருக்கறதால கவல இல்ல. அன்னைக்குச் சொன்னியே என்ன ஹெல்ப் வேணாலும் செய்யறேன்னு. உன்னால என் குழந்தைய பாத்துக்க முடியுமா. எனக்குன்னு ஒரு புது ஃப்ளாட் வாங்கித் தர முடியுமா? இதுதான் யதார்த்தம். வீட்டுக்காரரோடெ பேரண்ட்ஸும் ரிலேஷனும் அடிக்கடி வந்துபோறங்க. என்னோட பேரண்ட்ஸ் இல்லாதப்போ அவரோட பேரண்ட்ஸ் வந்திருந்து குழந்தையையும் வீட்டையும் பாத்துக்கறாங்க. ஆமா நீ எப்டி? நீயே மாப்ள பாத்தியா? இல்ல உன் வீட்ல பாத்தாங்களா?” — தொடர்ந்து பேசிமுடித்தாள் ஜூலி.

“வீட்ல பாத்ததுதாண்டி. ஆனா எனக்குத் தெரிஞ்சவங்கதான். பட் ரிலேஷன் கிடையாது. சரி நான் ஃப்ரண்ட்ஸ்கிட்ட சொல்றேன். ரொம்ப சந்தோஷம் நான் அப்புறம் கால் பண்ணறேன். குழந்த அழகா இருக்கா.பை”.

இரவு 11 மணி. தூக்கம் வராமல் திணறிக்கொண்டிருந்த அகிலன் இளங்கோவை கைபேசியில் அழைத்தான்.

“இளங்கோ ஹௌ ஆர் யூ. நம்ம ப்ஃரண்ஸ் எல்லாரும் நல்லா இருக்கறாங்க தான”

”ஃபைண்டா. நீ நல்லா இருக்கியா? உன் லைஃப் எப்டி போய்ட்டிருக்கு?. எதாவது ஸ்பெஷல் நியூஸ்?”

“ஆமாடா கேள் பேபி. மாமனார் வீட்லதான் தாயும் சேயும் இருக்கறாங்க. நான் நாளைக்குத்தான் அங்க போகணும்”

“ஏண்டா சொல்லவேயில்ல. வைஃப் எப்டி”

“மூட் இல்லடா. அவ ஓகேடா. ஆனா” இழுத்தான் அகிலன்.

“ஆனா என்னடா. சந்தோஷமா இருக்கியில்ல?”

”ஓ பட் உள்ளுக்குள்ளே முழுசா நிம்மதி இல்லடா. தூக்கமும் சரியா இல்ல ரொம்பக் கஷ்டமா இருக்குடா. ஒருவழியா அட்ஜஸ்ட் பண்ணிட்டுப் போறேன்”

”சாரிடா நாங்க என்ன பண்ணறது. ஜூலிதான் கேக்கலியே. வெரி சாரி”

“நீங்க தாண்ட இதுக்கெல்லாம் ஒருவகையில காரணம்”
”என்ன நாங்களா. நீ என்ன சொல்ற”

“ஆமாடா. நான் லவ் பண்ணறேன். அவகூட டேட்டிங் பண்ணறேன்; சாட் பண்ணப் போறேன்னு சொன்னப்ப எல்லாம் ஆளாளுக்கு ஐடியா குடுத்தீங்க. யாராவது ஒருத்தன் கல்யாணம் பண்ண முடியுமா? அதனால வரும் பின் விளைவுகள் என்னவாக இருக்கும். வாழ்க்கையோட எதார்த்தம் இதுதான்னு சொல்லி எனக்குப் புரிய வச்சீங்களா? என் காதல அன்னிக்கே தடுத்தீங்களா? எவனாவது நல்ல வழிகாட்டி அட்வைஸ் பண்ணியிருந்தா நானும் இன்னைக்கு உங்கள மாதிரி சந்தோஷமா இருந்திருப்பேன்” – தன் குமுறல்களைக் கொட்டினான் அகிலன்.

”ஏய் அகில் என்ன பேசற”

“எஸ்.என்னோட கரியரும் வளர்ந்திருக்கும். நான் இன்னும் நிறைய அச்சீவ் பண்ணிருப்பேன். சில ஏழை குழந்தைகள படிக்க வைக்கவும் நினச்சேன் அதுவும் நடந்திருக்கும். ஆனா இப்போ. ……………. போங்கடா நீங்கெல்லாம் ஒரு ஃப்ரண்ட்ஸ்” – அவனது ஆதங்கம் குரலில் வெளிப்பட்டது.

“அகில் காதலிக்கற யாரும் நண்பர்கள் சொல்லறத கேக்கறதில்ல. பொறாமையில சொல்லறதா நெனைக்கறாங்க. கோபப்படறாங்க. அட்வைஸ குப்பையில போடுங்கறாங்க. வீணா நண்பன ஏன் பகைச்சுக்கனும்னு தான் யாரும் அட்வைஸ் பண்றதில்ல. அவனவன் பட்டு அனுபவிக்கும் போதுதான் நண்பர்களோட அட்வைஸ் புரியும். ஆனா அப்போ அதுக்கு எந்த யூஸும் இருக்காது”

“உங்களுக்கு என்மேல உண்மையிலேயே அக்கறை இருந்தா நான் கோபப்பட்டாலும் அத மைண்ட் பண்ணாம நண்பனோட நன்மையை எண்ணி, எப்டியாவது தடுத்திருக்கனும்; அடிச்சாவது திருத்தியிருக்கனும். ஸ்கூல் டீச்சர் மாதிரி. பட் நீங்க?

“…………………………..”

”இப்போ என்னோட சந்தோஷம் சமாதானம், வளர்ச்சி, உயர்ச்சி எல்லாம் தடைபட்டுப்போனதா நான் உணர்றேன். இனியாவது இப்படி யாரையும் கெடுக்காதீங்க. நல்ல வழி காட்டமுடியாவிட்டாலும். தீமையான வழிகள்ல கூட நிக்காதீங்க” அகிலன் அழைப்பைத் துண்டித்தான்.

“டே அகில் .. அகில்..
’இப்பல்லாம் எவன் சார் டீச்சர் சொல்றத கேட்கறாங்க, டீச்சர்ஸயே ஸ்டூடண்ட்ஸ் அடிக்கறானுக, கொலகூட செய்யறாங்க. ஆனா அகில் சொல்லறதிலயும் ஒரு நியாயம் இருக்குதான். நம்ம பக்கமும் தவறுகள் உண்டு’ என்று எண்ணி வருந்தினான் இளங்கோ.

தன்னை அறியாமல் அவனது கண்களிலிருந்து இரண்டு துளிகள் விழுந்தன.

Leave a comment

Trending