ஆய்வுக்கட்டுரை
பன்னாட்டு ஹைக்கூ கவிதைகளில் அணியிலக்கணம்!
அ. ஜமால் அப்துல் நாசர்
முனைவர்ப் பட்ட ஆய்வாளர்,
சென்னைப் பல்கலைக் கழகம்
முன்னுரை:
கவிதைகளுக்கு அழகு சேர்ப்பது அணியிலக்கணம். அந்தக் காலம் முதல் இந்தக் காலம் வரை எழுதப்பட்ட மற்றும் எழுதப்படும் எவ்வகையான கவிதைகளிலும், ஏதோ ஒரு வகையில் அணியிலக்கணம் இடம்பெற்று வருகின்றது. அதேபோல், இன்று பிரபலமாக உள்ள ஹைக்கூ வடிவக் கவிதைகளிலும் அணியிலக்கணம் இடம்பெற்று வருகின்றது.அப்படி எழுதப்பட்ட, பன்னாட்டு ஹைக்கூ கவிதைகளில் வெளிப்படும் அணிகள், கவிதையின் மையப் பொருளை உணர்த்தும் காரணிகளாக அமைகின்றன என்பதைக் கருதுகோளாகக் கொண்டு இக்கட்டுரை எழுதப்பட்டுள்ளது.
ஹைக்கூவில் இயல்பு நவிற்சியணி
விருந்தினர் வருகை
வாலாட்டிக்கொண்டே கூட்டிவரும்
தெரு நாய்
-மு.முருகேஷ் (தமிழ்நாடு, இந்தியா)
விருந்தினர் ஒருவர் வீடு தேடி வருகின்றார். அதைப் பார்க்கும் நாய் ஒன்று, அந்த நாய் அண்டிப் பிழைக்கும் தன் வீட்டுக்குத் தான் வருகின்றார் என்று கணித்து, அவர் அருகில் சென்று, வாலாட்டிக்கொண்டே கூட்டி வருகின்றது.அவர் ஏற்கனவே அந்த வீட்டிற்கு வந்திருக்க வேண்டும்.அந்த நாயின் மீது ஏதோ ஒரு வகையில் அன்பு காட்டியிருக்கவேண்டும். அந்த வகையில், இந்த நாயும் பிரதியுபகாரமாக வாலாட்டி, தன் நன்றியைச் செலுத்துகிறது. இது இயல்பாக நடக்கும் ஒரு விஷயத்தைத் தெரிவிப்பதால், இக்கவிதையில்இயல்பு நவிற்சியணிபயின்று வந்துள்ளது எனக் கூறலாம்.
ஹைக்கூவில் உவமையணி
விளக்கின் ஒளியிலே
தற்கொலை முயற்சிகள்
விட்டில் பூச்சி!
– நஸீரா எஸ். ஆப்தீன் (இலங்கை)
விளக்கில் எரியும் தீபம் தனக்குத் தீங்கு விளைவிக்கும் என்று தெரிந்தும், விளக்கைச் சுற்றும் விட்டில் பூச்சி, தற்கொலை முயற்சியில் ஈடுபடுவதாகக் கவிஞர் எழுதியுள்ளார். அந்தப் பூச்சியின் செயல், நமக்கு இரக்கத்தை ஏற்படுத்துவதாக உள்ளது. கவிஞர் இயல்பாக நடக்கும் ஒரு நிகழ்வின் மீது தன் குறிப்பை ஏற்றிக் கூறுகின்றார். ஆகவே, இதில் தற்குறிப்பேற்ற அணி பயின்று வந்துள்ளது.
காதல் சம்மதத்தை
இசையாகச் சொல்லும்
கொலுசின் சத்தம்.
– கதிர் எழில் (தமிழ்நாடு, இந்தியா)
காதலி நடக்கும்போது யதார்த்தமாகக் காலில் அணிந்துள்ள கொலுசுச் சத்தம் கேட்கிறது. அதைக் காதலியின் சம்மதமாகத் தற்குறிப்பேற்றமாக ஹைக்கூ கவிஞர் சொல்லியிருப்பது சற்று மெல்லிய புன்னகையை வரவழைக்கிறது.
காதல் நதிபோலப் பாயட்டும்;அது
என்னுடையது; முடியவிடுவேனோ..
டிசம்பரைப் போல!
-(ஆப்பிரிக்கா)
தமிழாக்கம்: சந்திரா மனோகரன், ஈரோடு
காதலையும், நதியையும் இணைத்து எழுதப்பட்டிருக்கும் இந்தக் கவிதை கவிஞரின் அளவுக்கு மீறிய அன்பை வெளிப்படுத்துகிறது. நதியின் செயல்பாட்டை டிசம்பர் மாதத்தோடு ஒப்பிட்டுச் சொல்கிறார் கவிஞர்.அதனால் இதில் உவமையணி பயின்று வந்துள்ளது எனக்கூறலாம்.
ஹைக்கூவில் ஒட்டணி
வசந்தம் போகத்தான் வேண்டுமா?
பறவைகள் அழுதன, மீன்களின்
வெளிறிய கண்களில் நீர்.
– பாஷோ (ஜப்பான்)
ஜப்பானில் ஒவ்வோர் ஆண்டும் ஏற்படும், வசந்த காலத்தைப் பறவைகளும், மீன்களும் அனுபவிப்பதாகவும், அந்த வசந்த காலம் போவதால், அவை வருந்துவதாகவும், பாஷோ கற்பனை செய்துள்ளார். ஒட்டணி அல்லது ஒட்டு அணி என்பது கவி தான் மனதில் கருதிய கருத்தினை நேரடியாகக்கூறாமல், அதனை வேறொரு பொருள் கொண்டு விளக்குவதாகும்.இதில் கவிஞர், தன் எண்ணங்களைப் பறவைகள் மூலமாகவும், மீன்கள் மூலமாகவும் தெரிவிக்கின்றார்.ஆகவே, இதில் ஒட்டணி பயின்று வந்துள்ளது.
ஹைக்கூவில் அவநுதியணி
மலை மேலே இப்போது
பூர்ணிமை நிலவு சிரிக்கிறது
பூத் திருடனைப் பார்த்து.
-இஸ்ஸா (ஜப்பான்)
மலை மேல் உலாவும் நிலவு, பளிச்சென இருப்பது, சிரிப்பதுபோல் நமக்குத் தோன்றும். அது அங்குப் பூத்திருக்கும் பூக்களைத் திருடும் திருடனைப் பார்த்துதான் சிரிக்கிறது எனக் கவிஞர், தன் கற்பனையைத் தற்குறிப்பேற்றமாகக் கூறியுள்ளார். அது நமக்குப் புன்னைகையை வரவழைக்கின்றது. பௌர்ணமி அன்று நிலவின் வெளிச்சம் அதிகமாய் இருக்கும்.அது இயற்கை.அந்த நிலவு, பூவைத் திருடும் திருடனைப் பார்த்து, சிரிப்பதாகக் கவிஞர் கூறுகின்றார். இது அவநுதியணிஆகும். ஒரு பொருளின் இயற்கையான குணத்தினை மறைத்து பிறிதொன்றாக உரைத்தலாகும். இங்ஙனம் உண்மையை மறுத்துப் பிறிதொன்றினை உரைக்குங்கால், அப்பொருளுக்குச் சிறப்புத் தோன்றுமாறு அமையும்.
தேய்பிறையாய் நிலா
அங்கும் லேசாய் ஒளிர்கிறது
உன் புன்னகை!
எம்.சேகர் (சிங்கப்பூர்)
பெண்ணைக் காதலிக்கும் ஒருவன், தேய்பிறையிலும், காதலியின் புன்னகையைப் பார்க்கிறான். இது அவளின் மேல் அவனுக்கு உள்ள அன்பினைக் காட்டுகிறது. இக்கவிதையில், ஒரு பொருளின் இயற்கையான குணத்தினை மறைத்து பிறிதொன்றாக உரைத்தலால், அப்பொருளுக்குச் சிறப்புத் தோன்றுகின்றது.
ஹைக்கூவில் வஞ்சப்புகழ்ச்சியணி
வாழ்த்துக்கள் இஸ்ஸா!
இன்னும் உயிர் வாழ்கிறாய்
இவ்வாண்டும் கொசுக்களுக்கு உணவூட்ட.
– இஸ்ஸா (ஜப்பான்)
இஸ்ஸா என்னும் கவிஞர் தன்னைத் தானே வஞ்சப் புகழ்ச்சியாகப் பாராட்டிக்கொள்கிறார். கொசுக்கள் அவரைத் துன்புறுத்துவதை, அவர் உயிர் வாழ்வது கொசுக்களுக்கு உணவூட்டத்தான் என்று சொல்லி, நம்மைப் புன்னகைக்க வைக்கிறார். இதில் புகழ்வது போல் மறைமுகமாக இகழ்வதும், இகழ்வது போல் மறைமுகமாகப் புகழ்வதும் இடம்பெற்று வந்துள்ளது.ஆதலால், இதில் வஞ்சப் புகழ்ச்சி அணி அமைந்துள்ளது.
ஹைக்கூவில் பிறிது மொழிதல் அணி
என்வீடு எரிந்து போனதால்
நன்றாகப் பார்க்கமுடிகிறது
உதிக்கும் நிலாவை
– மசாஹிடோ (ஜப்பான்)
கவிஞரின் வீடு எரிந்துபோனது சோகமான விஷயம். இருந்தபோதிலும், நிலவை நன்றாகப் பார்க்கமுடிவதாக அவர் கூறுகின்றார். கவிஞர், இந்தச் சம்பவத்தை எதிர்மறையாகச் சிந்திக்காமல், நேர்மறையாகச் சிந்தித்திருப்பது, நகைமுரணாகத் தோன்றி, புன்னகை பூக்க வைக்கின்றது.
இதில் பிறிது மொழிதல் அணிவந்துள்ளது.கவிஞர் தான் கருதும் பொருளை வெளிப்படையாகக் கூறாமல் பிறிதொன்றால் ஏற்றிக் கூறுதல். அதாவது கருத்திலே ஒன்றைக் கொண்டு, அது குறிப்பால் விளங்கித் தோன்றுமாறு வேறு ஒன்றைக் கூறுவது, கவிஞர் தன் வீடு முழுவதையும் இழந்ததை இவ்விதம் குறிப்பால் உணர்த்துகின்றார்.
ஹைக்கூவில் நிதரிசன அணி
புகுந்த வீட்டில் அடித்து விரட்டினார்கள்
விழுந்து அழுகிறது
மழை!
– இன்பா (சிங்கப்பூர்)
சிங்கப்பூர்க் கவிஞர் இன்பா அவர்கள், பெண்ணைப் புகுந்த வீட்டில் அடித்து விரட்டியதால் தான், மழைகூட விழுந்து அழுகிறது என்று கவிதை எழுதி, பெண்ணின் மேல் இரக்கம் ஏற்பட வைக்கிறார். உலகில் இயற்கையாகச் சில நிகழ்ச்சிகள் நிகழ்வதைக் கவிஞர்கள் காண்கிறார்கள். அவற்றை உலக மாந்தர் வாழ்க்கையோடு இயைத்துப் பார்க்கின்றனர். தாம் கண்ணுற்ற இயற்கை நிகழ்ச்சிகள் மாந்தருடைய நல்ல பண்புகளையும் தீய பண்புகளையும் எடுத்துக்காட்டுவதற்காவே நிகழ்கின்றன என்ற அரிய நோக்கில் பாடத் தலைப்படுகின்றனர். இப்பொருள்பட அமைந்த அணியே நிதரிசன அணி. அல்லது காட்சிப் பொருள் வைப்பு அணி என்று அழைக்கப்படுகிறது. இக்கவிதை, அவ்வகையில் அமைந்துள்ளது.
ஹைக்கூவில் புகழாப்புகழ்ச்சியணி
காதலர் தினம்
ஓர் உண்மையான காதல்
மற்றொன்றுக்குப் பிறகு!
– ஷெர்ரி கிராண்ட் (நியூசிலாந்து)
காதலர் தினத்தன்று ஓர் உண்மையான காதல் தொடங்குகிறது. ஏற்கனவே, ஏற்பட்ட காதல் ஒன்றின் தோல்விக்குப் பிறகு. இதைப் படிக்கும்போது, நம் மனதில் சற்றுப் புன்னகை தோன்றுகின்றது.
புகழாப்புகழ்ச்சி யணி என்பது ஒன்றைப் பழிப்பது போன்ற முறையில், அதன் மேன்மை தோன்றக் கூறுவது ஆகும். அதாவது புகழாமல் புகழ்தல். இக்கவிதையில், புகழாப்புகழ்ச்சியணி பயின்று வந்துள்ளதை உணர முடிகின்றது.
நிறைவுரை:
மற்றைய கவிதை வடிவங்களில் அணியிலக்கணம் பயின்று வருவது போலவே, ஹைக்கூ கவிதை வடிவங்களிலும், அணியிலக்கணம் பயின்று வருவதைப் பல்வேறு ஹைக்கூ கவிதைகளிலும், கண்கூடாகக் காணமுடிகிறது. எடுத்துக்கொண்ட கருதுகோளுக்கு ஏற்ப, ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டஇந்தியா, இலங்கை, ஆப்பிரிக்கா, ஜப்பான், சிங்கப்பூர், நியூசிலாந்துபோன்ற பல்வேறு பன்னாட்டுக் கவிதைகளிலும்,இயல்புநவிற்சியணி,தற்குறிப்பேற்ற அணி, உவமையணி,ஒட்டணி, அவநுதியணி, வஞ்சப்புகழ்ச்சியணி, பிறிதுமொழிதலணி, நிதரிசன அணி, புகழாப் புகழ்ச்சியணி முதலிய அணியிலக்கணங்கள் பயின்று வந்துள்ளதை, பல்வேறு சான்றுகளின் மூலம் இக்கட்டுரையில், நிறுவ முடிந்துள்ளது என்பது கண்கூடு. மேலும், ஹைக்கூ கவிதைகளில் வெளிப்படும் அணிகள் கவிதையின் மையப் பொருளை உணர்த்தும் காரணிகளாக அமைகின்றன என்ற கருதுகோளும் நிரூபணமாகிறது.

Leave a comment