உச்சிவெயில் வரும் போது பச்சை நிறம் என் மேனி

ஜி. சிவக்குமார்

நீங்கள் பேயைப் பார்த்திருக்கிறீர்களா? அமானுட அனுபவங்கள் ஏதேனும் அடைந்திருக்கிறீர்களா?

பாலசமுத்திரம் ரோட்டில்
மயிலாடும்பாறை தாண்டியதும்
தேர்ப் புளியமரத்தில் உட்கார்ந்திருக்கும் பேய்.
வறட்டாற்று பாலத்தின்
மயானத்தினருகே காத்திருக்கும் பேய்,
மயக்கி உறவாடி ஆண்களின் உயிர் குடிக்க
ஒத்தப் பனமரத்தில் குடியிருக்கும் மோகினி,
ஆணி இல்லாமல்
அசைவ உணவுகளை எடுத்துச் செல்கையில்
பறித்துத் தின்னக் காத்திருக்கும் பேய்,
அடிவாரம் ஸ்கூலுக்குப் பின்னால
உச்சி உறுமற நேரத்துல VI A அம்மாபட்டிய அடிச்சு
ரத்தம் கக்க வைச்ச காட்டேரி,
சீவக்கா மடக் கிணத்துல முங்கு நீச்சல்ல போறப்ப
காலப் புடிச்சிழுத்து
மூச்சுத் திணற வைக்கற பேய்,
ரெங்கராஜா தியேட்டர்ல
இருட்டில முறுக்கு கேக்கற பேய்,
பெரிய மரங்கள்ல
ஆணிகள்ல அடங்கியிருக்கற பேய்,
தூக்கத்துல மேல ஏறி அமுக்கற பேய்,
நடுச் சாமத்துல
விடிஞ்சிருச்சுன்னு பொய் சொல்லி
கல்யாணமாகாத பொண்ணுகள
அழைச்சுட்டுப் போற பேய்,
ஆத்துல குளத்துல
தண்ணியெடுக்கப் போற பொம்பளைகளப்
பிடிக்கற பேய்,
கூட்டத்தின் நடுவ முடியை விரிச்சுப் போட்டு
பீடி குடிக்கும் பேய்,
நள்ளிரவுகளில்
பீடிக்கு நெருப்பு கேட்கும் பேய்
என
எத்தனை எத்தனை பேய்களோடு வாழ்ந்தோம்.
உபரியாக
தலையில்லா முண்டங்கள் வேறு.

பால்யத்திலிருந்த
சாமிகளெல்லாம் அப்படியேதானிருக்கிறார்கள்.
பேய்களைத்தான்
இப்போதெல்லாம் பார்க்கவே முடிவதில்லை. ,

இவையெல்லாம் எனது பால்யத்தில் பழனியில், பழனி சுற்றுவட்டாரத்தில் உலவிய பேய்கள். இது போல் உங்களின் பால்யத்திலும் ஒரு பேயாவது இருந்திருக்கும்தானே?

பேயைப் பார்த்திருக்காவிட்டாலும் இதுவரை மயிர்க் கூச்செரிய வைக்கும் ஒரு பேய்க் கதையையாவது கேட்டிருப்பீர்கள். அப்படியிருக்கும் போது, நம் வாழ்வின் ஒரு பகுதியாக இருந்த, நம் வாழ்வை ஓரளவு பிரதிபலிக்கும் திரைப்படங்களில் பேய்களும், ஆவிகளும் உலவாமல் இருந்திருந்தால்தானே ஆச்சர்யம்.

‘யார் நீ?’ படத்தில், ‘நானே வருவேன் இங்கும் அங்கும்’ என்ற இனிமையான பாடலைப் பாடியபடி மயானத்திலும், மலைச் சரிவுகளிலும், பள்ளத்தாக்குகளிலும் பாடியபடி அலைந்த ஜெயலலிதாவின் ஆவிதான் எத்தனை அழகு.

மருத்துவரான ஜெய்சங்கர் மனநிலை சரியில்லாதவராக மாறினால் அத்தனை சொத்துக்களும் அடுத்த வாரிசான உறவினரான ஆனந்தனுக்கு வரும் என்பதால், ஜெயலலிதாவை ஆவியாக நடிக்க வைக்கின்றனர். ஆவியான ஜெயலலிதா அடிக்கடி பாடும் பாடல்தான், ‘நானே வருவேன் இங்கும் அங்கும்.’

இசையமைப்பாளர் வேதா, கவனியுங்கள் தேவா அல்ல, வேதா என்கிற வேதாச்சலம் தந்த அற்புதங்களில் இதுவும் ஒன்று.

பாடலின் துவக்கமே நம்மை மயக்கத்திலாழ்த்தி ஒரு அமானுட உலகிற்குள் அழைத்துச் செல்கிறது.

இணைந்து பின் பிரிந்து மீண்டும் இணையத் தவிக்கும் ஒரு பெண் பாடும் இந்தப் பாடலில் ஏக்கமும், தாபமும் ததும்பி வழியும் இந்த வரிகளைப் பாருங்கள்.

என் பார்வை உனக்கும் ரகசியமா?
என் பாடல் உனக்கும் அதிசயமா?
உன் வானத்தில் நானொரு நிலவில்லையா?
உன் வாசல் தேடி வரவில்லையா?
ஒன்றும் ஒன்றும் இரண்டு
நம் இரண்டு உள்ளம் ஒன்று
அவன் தந்த உறவல்லவா

இந்த வரிகளையும் பாருங்கள்

மயங்கும் கண்ணைப் பாராமல்
கலங்கும் நெஞ்சைக் கேளாமல்
பிரிந்து செல்ல எண்ணாதே – என்
கண்ணீர் பேசும் மறவாதே

கருப்பு வெள்ளையில் இளம் ஜெய்சங்கரும், ஜெயலலிதாவும் அத்தனை அழகு.

மயானத்திலும், மழை இரவுப் பயணத்திலும் அமானுடமாகப் பார்த்த பெண் உருவத்தை, தாலி கட்டிய மனைவியாக முதலிரவு அறையில் பார்த்து அதிர்கிறார் ஜெய்சங்கர். அதன் பிறகு என்ன நடந்தது என்பதை மிகவும் சுவாரஸ்யமாகச் சொல்லும் திரைப்படம்.

‘பார்வை ஒன்றே போதுமே. பல்லாயிரம் சொல் வேண்டுமா?
என் வேதனையில் உன் கண்ணிரண்டும் என்னோடு அழுவதேன் கண்ணா?
பொன் மேனி தழுவாமல் பெண்ணின்பம் அறியாமல் போக வேண்டுமா?’

இப்படி அத்தனை பாடல்களும் எத்தனை முறை கேட்டாலும் திகட்டாத இனிமை.

ஆயிரம் ஜென்மங்கள் திரைப்படம். ரஜினிகாந்த், விஜயகுமார், லதா நடித்தது.

ரஜினியின் தங்கையான லதாவின் கணவர் விஜயகுமாரின் காதலி பத்மப்ரியா. படுகொலை செய்யப்பட்ட பத்மப்ரியாவின் ஆவி, லதாவின் உடலில் உள்ள அவரது ஆவியை வெளியேற்றி விட்டு உள்ளே நுழைந்து கொள்கிறது. எத்தனை எளிதான உயிர் மாற்று. அமாவாசைக்கு முன் இருவரும் இணைந்து விட்டால், நிரந்தரமாக லதாவின் உடலில் தங்கி விடலாம் என்ற பத்மப்ரியாவின் திட்டத்தை அறிந்து கொண்ட ரஜினி, தன் தங்கையைக் காப்பாற்றுவதற்காக இருவரும் இணைவதைத் தடுக்கிறார். ஒரு அண்ணனுக்கு வந்த சோதனை. யார் வென்றார்கள் என்பதைச் சொல்லுகிற திரைப்படம். மலையாளத் திரைப்படமான யட்ச கானத்தின் தமிழாக்கம்.

திரைப்படத்தில் அடிக்கடி பத்மப்ரியாவின் ஆவி பாடும் பாடல்,
வெண் மேகமே வெண்மேகமே கேளடி என் கதையை
மோகம், சோகம் என் விரக தாபம் தாளத்தில் பிறக்கும் இனிய ராகம்

இப்படி முதல் இரண்டு வரிகளிலேயே மொத்தப் பாடலின் சாரமும் வந்து விடுகிறதல்லவா?

முன்னாட்களில் பழகி பிரித்து வைக்கப்பட்ட காதலனிடம் பேசும் இந்த வார்த்தைகளில் எத்தனை உணர்ச்சிக் கொந்தளிப்பு

ஆனந்தக் குங்குமம் கொண்டாடும் நெற்றியில்
ஆரத்தி எடுத்தவன் அங்கே
அவன் சீராட்டும் தேவதை இங்கே
வருமோ இன்பத் திருநாள் வருமோ

இந்த வரிகளையும் பாருங்கள்.

பூமாலை சூடிய பொன் வண்ணத் தேரினில்
தேவாதி தேவனை அழைக்க
அந்த தெய்வீக ராகங்கள் வருக

நாயகி உன் நாயகி தன் காதல் என்னும்
சொர்க்கத்தின் வாசலில் தேடி அலைவாள் உனையே
தினம் பாடி அழைப்பாள் தனியே
வருமோ உந்தன் பொன் ஊஞ்சலே

என் பால்யத்தில் இந்தப் படம் எனக்கு மிகவும் பிடித்ததற்குக் காரணம் ரஜினிகாந்த் மட்டும்தான் என்று நான் சொன்னால் நம்பவா போகிறீர்கள்?

பனை மரத்தின் உச்சியில் யட்சி காத்திருக்கும். அழகான இளைஞர்களைக் கண்டதும் அப்படியே தூக்கிப் போய் பனைமரத்தின் உச்சியில் உள்ள நுங்கின் உள்ளே வைத்து பல நாட்கள் அழகு பார்க்கும் என்று சொன்னதை நம்பி கடுமையான வெயிலில் பனை மரத்தின் கீழ் என்னைப் போல் நின்றிருக்க மாட்டீர்கள் என்றாலும், இன்றைக்கு 50களில் இருக்கும் இந்தப் படத்தைப் பார்த்த அனைவரும் என்னைப் போல் பத்மப்ரியாவைத்தானே ஆதரித்திருந்தீர்கள்?
ஒரு நிமிடம். காற்றில் மிதந்து வருகிற பாடலைக் கேட்போம்.
மன்னவனே அழலாமா?
கண்ணீரை விடலாமா?
உன்னுயிராய் நானிருக்க,
என்னுயிராய் நீயிருக்க

இறந்த அன்பான மனைவியின் நினைவில் இரண்டாவது மனைவியுடன் வாழ மறுக்கும் கணவனை ஆற்றுப்படுத்தி இறந்த மனைவி பாடும் பாடல் அது.

கற்பகம் திரைப்படப் பாடல். சுசீலாவின் மயக்கும் குரலும், வாலியின் அழகிய வரிகளும் மெல்லிசை மன்னரின் இன்னிசையில் இரண்டறக் கலந்த அற்புதம் இது.

மன்னவனே அழலாமா
கண்ணீரை விடலாமா?
உன்னுயிராய் நானிருக்க
என்னுயிராய் நீயிருக்க

கண்ணை விட்டுப் போனாலும்
கருத்தை விட்டுப் போகவில்லை
மண்ணை விட்டுப் போனாலும்
உன்னை விட்டுப் போகவில்லை

என்று பாடுகிறவள், தன் கணவனின் இரண்டாவது மனைவிக்கு ஆதரவாக எந்த எல்லைக்குச் செல்கிறாள் பாருங்கள்.

இன்னொருத்தி உடலெடுத்து இருப்பவளும் நானல்லவா
கண்ணெடுத்தும் பாராமல் கலங்குவதும் வீணல்லவா?

இரண்டாவது தாரமாக வாழ்க்கைப்பட்ட அந்த அப்பாவிப் பெண், இந்தத் தண்டனையை அனுபவிக்க என்ன பாவம் செய்தாள்? ஒரு பெண்ணாக இன்னொரு பெண்ணின் நுண்ணுணர்வுகளை அறிந்தவள் கணவனை நோக்கி எழுப்புகிற இந்த கேள்விகள் எத்தனை ஆழமானவை.

உன் மயக்கம் தீர்க்க வந்த பெண் மயிலைப் புரியாதா?
தன் மயக்கம் தீராமல் தவிக்கின்றாள் தெரியாதா?

இறுதியாக அவள் சொல்வது வேண்டுகோள் அல்ல. கட்டளை.

என் உடலில் ஆசையென்றால்
என்னை நீ மறந்து விடு
என்னுயிரை மதித்திருந்தால்
வந்தவளை வாழ விடு

இந்தப் பாடலின் படமாக்கலில் ஒளிப்பதிவு அருமை. குறிப்பாக நிலத்தில் ஜெமினி நிற்க, கே ஆர் விஜயா வானத்தில் நின்றபடி ‘கண்ணை விட்டுப் போனாலும் கருத்தை விட்டுப் போகவில்லை’ என்ற வரிகளைப் பாடும் காட்சி மற்றும் குளமொன்றின் படிக்கட்டுகளின் நீள்வரிசையில் ஜெமினி நடந்து செல்கையில், குள நீரில் நின்றபடி, ‘உன் மயக்கம் தீர்க்க வந்த பெண் மயிலைத் தெரியாதா?’ என்று பாடுகிற காட்சி இரண்டிலுமே கேமராக் கோணம் அற்புதம்.

இந்தத் திரைப்படத்தில் ஜெமினியின் கதாபாத்திரத்தில் எம்ஜிஆர்தான் முதலில் ஒப்பந்தமாகியிருக்கிறார். பின் சில காரணங்களால் நடிக்க மறுத்து விட்டாராம். அது போல், கே ஆர் விஜயாவின் பாத்திரத்திற்கு விஜயகுமாரியை அணுகி அவர் மறுத்ததால் கே ஆர் விஜயாவிற்கு அந்த வாய்ப்பு கிடைத்திருக்கிறது. அறிமுகமான முதல் படத்திலேயே எவ்வளவு முக்கியமான கதாபாத்திரம்.

இந்தப் பாடலைக் கேட்கும் போதெல்லாம், நினைக்கும் போதெல்லாம், பார்க்கும் போதெல்லாம் எனக்கு மதுரை அலுவலகத்தில் என்னுடன் பணிபுரிந்த சக அலுவலரின் நினைவுதான் வரும். நோய் வாய்ப்பட்ட மனைவி இறக்கும் தருணத்தில் மனைவி அழைத்தும் பார்க்க மறுத்து விட்டார். அதற்கான காரணமாக அவர் என்னிடம் சொன்னது, ‘இன்னொரு கல்யாணம் பண்ணிக்கக் கூடாதுன்னு என்கிட்ட சத்தியம் வாங்கிருவா சார்’.

தொலைக்காட்சியில் ‘துணிவே துணை’ திரைப்படப் பாடலான ‘ஆகாயத்தில் தொட்டில் கட்டும் மங்கை உன்னைக் கண்டாள்’ பாடலைப் பார்த்துக் கொண்டிருந்தேன். ஆலமர விழுதுகளில் ஆடியபடி பாடிக் கொண்டிருந்த ஆவியை, என் மகன் ப்ரணவை அழைத்துக் காண்பித்தேன். இதெல்லாம் ஒரு பேயா? என்றபடி போய் விட்டான். ‘உச்சி வெயில் வரும் போது பச்சை நிறம் என் மேனி’ என்று பாடிக் கொண்டிருந்த ஆவி, பாடியதை நிறுத்தி விட்டு ‘நான் செவனேன்னுதானடா போய்க்கிட்டிருந்தேன். இது எனக்குத் தேவையா?’ என என்னை முறைத்தது.
‘ராகவா லாரன்ஸ் சும்மா இருக்காம முனி, காஞ்சனான்னு தொடரா எடுத்துத் தள்ளிக்கிட்டிருக்காரு. அதுகளோட கான்ஜரிங் பேய்களையெல்லாம் பாத்தவன். உன்னைப் பாத்தா பயப்படுவானா? உங்கள மாதிரி ஆவிகள. சின்ன வயசுல சினிமால பார்த்து நாங்கள்லாம் பயந்தமில்ல. அத நெனச்சு பெருமப்படு’ என்றேன்.
‘அந்திப்பட்ட இந்நேரம் சந்திரனின் சஞ்சாரம்’ என்று பாடியபடி நகர்ந்தது.

பொன் வயல் என்றொரு கிராமம். அங்கு நடக்கும் மர்மமான சம்பவங்களைக் கண்டுபிடிக்க ஒரு காவல்துறை அதிகாரி அனுப்பப்படுகிறார். கிராமத்திற்குச் செல்லும் வழியில் பல அமானுடங்களைச் சந்திக்கிறார். உச்சமாக, காவல்துறை அதிகாரியின் கண்களுக்கு மட்டுமே தெரிந்து மாட்டு வண்டி ஓட்டுபவரின் கண்களுக்குத் தெரியாத வெண்ணிற ஆடை அணிந்த அழகிய பெண் உருவம். மாட்டு வண்டி ஓட்டுபவரின் காதுகளுக்குக் கேட்காமல், காவல்துறை அதிகாரியின் காதுகளில் மட்டும் கேட்கும்படி ‘ஆகாயத்தில் தொட்டில் கட்டும் மங்கை உன்னைக் கண்டாள். ஆசைத் தேரில் ஏறிக் கொண்டு நேரில் இங்கே வந்தாள்’ என்று பாடியபடி காவல்துறை அதிகாரியை அலைக்கழித்து இரத்தம் கக்கி சாக வைக்கிறது.

இடைவேளை வரை செமையான த்ரில்லராக இருந்து, இடைவேளைக்குப் பிறகு வெகு சாதாரணமாகி விட்ட படம்.

பால்யத்திலிருந்து இன்று வரை எனக்கு தீராத சில சந்தேகங்கள்.

பெண் ஆவிகள் ஏன் கைம்பெண்களின் வெண்ணிற ஆடையையே தேர்ந்தெடுக்கின்றன? இந்த வெண்ணிறச் சேலையை எந்தக் கடையில் வாங்குகின்றன? புடவைக்குப் பொருத்தமான வெண்ணிற இரவிக்கையை எந்தத் தையல் தொழிலாளியிடம் தைத்து வாங்குகின்றன? கொலுசுகளை எந்த நகைக்கடையில் வாங்குகின்றன? இவ்வளவு வாங்கும் ஆவிகள், ஏன் தலையை விரித்துப் போட்டபடியே அலைகின்றன? தேங்காய் எண்ணையும், சீப்பும் ஆவிகள் உலகில் தடை செய்யப்பட்ட பொருள்களா?

என்ன பெண் ஆவிகள் பாடிய பாடல்களைப் பற்றியே பேசிக் கொண்டிருக்கிறாயே, ஆண் ஆவிகள் தமிழ்த் திரைப்படங்களில் பாடியதே இல்லையா? என்கிற உங்கள் மைன்ட் வாய்ஸ் (மனக்குரல்) சத்தமாக எனக்குக் கேட்கிறது.

ஏன் இல்லை? ஜப்பானில் கல்யாணராமனில் கமலஹாசன் ஆவி பாடும் பாடல் இருக்கிறது. ஏன் அதைப் பற்றியெல்லாம் எழுத மாட்டாயா? என்பவர்களுக்கு கண்ணதாசனிடம் கேட்கப்பட்ட கேள்வி ஒன்றையும் அதற்கு அவர் சொன்ன பதிலையும் சமர்ப்பணம் செய்கிறேன்.

கேள்வி : பெண்களை மட்டும் வர்ணித்து கவிதைகள் எழுதுகிறீர்களே. ஆணைப் பற்றி ஏன் எழுதுவதில்லை?
கண்ணதாசன் பதில் : ஆண்டவன் படைப்பில் ஆண் என்பவனே ஒரு அபத்தம். அவனைப் பற்றி எழுத என்ன இருக்கிறது?

Leave a comment

Trending