முப்பரிமாணம் – நூல்வழிப்பயணம் 8
ஃ கவிதைகள், ததும்புதலின் பெருங்கணம், புத்தனிலிருந்து சித்தார்த்தனுக்குத் திரும்புதல்
அன்பாதவன்
7829985000

“கவிதையை உணர்ந்து கொள்வதும் வாழ்வின் பொருளை உணர்ந்து கொள்வதும் ஒன்றுதான். படைப்பின் இரகசியமும் அதுவே. என்றாலும் உணர்ந்து கொள்வது என்பது தனிப்பட்ட ஒவ்வொருவரையும் சார்ந்த விஷயம்.உண்மையோடு உறவுவைத்துக் கொள்ளாத எதுவும் படைப்பு ஆவதில்லை. கவிஞனின் படைப்பு உண்மையைத் தவிர வேறு எதையும் கொண்ட தில்லை.”
– மா.அரங்கநாதன்
முப்பரிமாணம் இம்முறை மூன்று பெண் படைப்பாளிகளின் கவிதை நூல் குறித்த விமர்சனப் பார்வை.மூன்று நூல்களும் தன்னளவில் ஒன்றுக்கொன்று வித்தியாசப்படுபவை.
வேறுபட்ட வாழ்வியல் அனுபவங்களைக்கொண்ட இக் கவிதைத் தொகுப்புகள் மூன்று தலைமுறைப் பிரதிநிதிகளின் தனித்துவ உள்ளடக்கமும், மொழியும் கொண்டவை.
ஃ கவிதைகள் – புதியமாதவி

புதிய மாதவியின் கவியாக்கங்கள் ஆட்டோ ரைட்டிங் எனும் உத்தியைச் சார்ந்தவை எனலாமா ..? காரணம் மீமெய்யியல் பாணியில் புள்ளி மான்களாய் துள்ளி மறையும் கவிதைக்கணங்களை வாசகன் வெகு கவனத்தோடு ரசிக்க வேண்டியிருக்கிறது , உள்வாங்க வேண்டி இருக்கிறது.
.படைப்புக்கும் பிரம்மத்துக்கும் நடுவில் வெந்து தணியுமோ காடு’[ ப. 21 ]
என்ற வரி ,பிரம்மம் தானே படைப்பின் கடவுளாய் கட்டமைக்கப்பட்டது எனில் பிரம்மம் வேறு படைப்பு வேறா என்றொரு கேள்வியை எழுப்புகிறது.
புதிய மாதவியின் கவிதைக் கருக்கள் – புராண, இதிகாச மற்றும் பண்பாட்டியலில் புழங்கும் தொன்மங்களின் மீதான கேள்விகள் – அவருடைய பலம் எனில் தேவைக்கு அதிகமாய்ப் புழங்கும் சொற்பிரயோகம் கவிதையின் செறிவான கட்டுமானத்தை நீர்த்துப் போகச் செய்வது அவருடைய பலவீனமென்பேன்.
புதிய மாதவியின் பல கவிதைவரித் துண்டுகள் படைப்பாளியின் சமூக அக்கறையின் மூலவித்தாக இருப்பதை உணர முடியும். வரிகளின் உள் பொதிந்த சூக்குமங்கள் வாசக அதிர்ச்சியைக் கூட்டுவதும் நிஜம் என்பேன்.
தொன்மத்துண்டுகள் கலந்துருவாகும் கலைடாஸ்கோப் காட்சிகளில் சமகால நிகழ்வுகள் கவிதையாகியுள்ளதும் நிகழ்கிறது. தொன்மங்களின் மீது புதிய மாதவி எடுத்துக் கொள்ளும் அதீத சுதந்திரம் படைப்பாளியின் புரிதலைத் தாண்டி வாசகப் புரிதலுக்குள் ஒருவித மயக்கத்தை நிகழ்த்த, மிகச்சரியாக தொன்மங்களைச் சமகாலத்துடன் இணைக்க முடியாத சூழல் சில கவிதைக் கணங்களிலிருந்து வாசகனை வெளியேறவும் நிர்பந்திக்கிறது. அதேநேரம் புதிய மாதவியின் வரிகளில் கூடு கட்டி இருக்கும் தொன்மங்களும் இதுகாறும் வாசகனுக்குக் கற்பிக்கப்பட்ட தொன்மங்களும் கலக்கையில் புதியதொரு காட்சி பிறக்கக் ,கவிதைக்குச் சிறகுகள் முளைத்து புதிய திசையில் பறந்து செல்வதையும் கண்ணுற முடிகிறது.
யட்சி, சமணத்தின் தொன்மமெனில் ’பச்சையம்மன்’ சிறுகுடியொன்றின் குலதெய்வம் என்கிற பண்பாட்டுச் செய்திகளும் படைப்பாளிக்குப் புரிய வேண்டும்.
’தவ்வையை விரட்டியவன் யாரிங்கே ?
மூதேவியென தெற்கு மூலையில்
கிடத்தியவன் யாரிங்கே ..?
_ மூத்த தேவியின் சக்தி இவ்வளவுதானா
இந்த தொன்மக்கலவை காட்டும் காட்சி பல கவிதைகளிலும் காணப்படுவதால் நேர்கோட்டுப் புரிதலில் புதிய மாதவின் கவிதைகளை அணுகுவதை விடவும் அவர் காட்டும் கவிதைக் கங்குகளின் மின்னலில் மாணிக்கப் பரல்களை தரிசிக்கக்கூடும் வாசகன்.
படைப்பிலக்கியத்தின் பன்முகங்களான கவிதை, கதை, நாடகம், புதினம், கட்டுரை என எல்லாவற்றிற்கும் அடிப்படை வாசல் வார்த்தைகளும் வாக்கியங்களும் தாம்.
மனிதரோடு மட்டுமின்றி இயற்கையின் அங்கங்களான விலங்கு தாவரம் என எதுவோடும் தொடர்பு கொள்ளும் மொழியின் கருவியாக வார்த்தைகள்தாம் நமக்கு வசதியானவையாக நடைமுறையில் உள்ளன. அதே நேரம் வார்த்தைகளின் வாக்கியங்களின் அதீதங்களும் உணர்த்தவே இயலா ஒன்றினை மௌனம் மிக எளிதில் கடத்தி விடுகிறது, உணர்த்தி விடுகிறது. துக்க வீடுகளில் நிகழும் தொடுகை அறிவோம், சொல்லாதன சொல்லும் வலிமையான மொழியது.
கவிதையின் அழகு அதன் சுருக்கச் செறிவான நுட்ப மொழியில் தான் இருக்கிறது. ஆனால் ஒரு நான்லீனியர் நாவலுக்கான அத்தியாயங்களை கவிதைகளாக்கி நல்லதொரு புதினத்தை இழந்து விட்டோமா என்ற கேள்வியும் எழுகிறது.
’பகல் வேட்டை’ [ப 39] கவிதையில் என்/ உன் களை நீக்கி வாசிக்க மிகச்சிறந்த குறியீட்டுக் கவிதை வாசகனுக்கு கிடைத்து விடுகிறது.
’எச்சம்’[ப 44] நல்லதொரு நவீன நாடகப் பிரதியாய் மலர வேண்டியது.
நூலில் பல கவிதைகள், சிறுகதைகள் மற்றும் நாடகப்பிரதிகளாய் அலர வேண்டியவை. மனதில் ஊறும் எல்லா சிந்தனைகளையும் கவிதைகளாகத் தான் வடிப்பேன் என்பது கூட படைப்பாளியின் மூடநம்பிக்கைதான்.
”தகத்தக தகத்தக தகவென
ஆடும் காற்றில்
நான் நீ காலம் “ (ப.29)-
இந்தக்கவிதை வரிகள் காட்டும் படிமக்காட்சி சொல்லாதன சொல்வது.
நான் கருப்பி’(ப.105)-தலித் பெண்ணியக் கூறுகள் உள்ளடங்கிய, தொகுப்பின் மிக முக்கியமான கவிதை . எனினும் கோபங்குறையாத வசவு வார்த்தைகள் மட்டுமே கவிதைக்கு வலு சேர்க்கா.
வெறும் கோபங்கள் வார்த்தைச் சிதறல்களாக மறைந்து போகும் வாய்ப்பு உண்டு. கவிதையின் முன்மொழி வாசகனின் ரகசியச் சுரங்கத்தில் தேர்ந்தெடுத்த கவிதைகளுக்கு இடம் தேடிக் கொடுக்கும் .
கவிதை எவரையும் விமர்சிக்கும், எதன் மீதும் வினா எழுப்பும் எல்லையற்ற சுதந்திரம் கொண்டது. புதியமாதவியின் கவிதைகள் நம் முன்னே அமர்ந்து நம் கண்களை நேரடியாகச் சந்திக்கின்றன. பதில் சொல்ல வேண்டிய பொறுப்பு நம்முடையது. அவை நம்மைத் தப்பிக்க விடாது என்பதே நிஜம்
ததும்புதலின் பெருங்கணம் – ச.மோகனப்ரியா

நாம் அசைவற்றுக் காத்திருக்கிறோம்
உரையாடல்களில் ததும்பித் தத்தளிக்கும்
ஒன்றிற்கு இப்போது பெயரிட்டாக வேண்டும் “ –
என கவிதையின் அபூர்வக் கணங்களுக்காகக் காத்திருக்கும் ச.மோகனப்ரியா-வின் கவிதைத் தொகுப்பான ததும்புதலின் பெருங்கணம் நூலை வாசிக்கையில் மழைவில்லின் வண்ணங்கள் போல ரசனையின் நிறப்பிரிகையில் அகமகிழ்வு.
மாயநிலப்பாடல்கள்
உள் உறை வெளி
சொல் பிளந்து பூக்கும் உடல் – என 80 கவிதைகளை – மூன்று குப்பிகளில் நிரவிப் பகிர்ந்தளிக்கும் மோகனப்ரியாவின் குப்பிகள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு தனிருசி.
. புலம் பெயர் வாழ்வு சார்ந்த படைப்புகளை இரு கூறுகளாகப் பிரிக்கலாம்.
அரச பயங்கர வாதத்தால் தம் சொந்த மண்ணை விட்டு வெளியேற்றப்பட்டவர்கள், வாழ்வின் தேடலுக்காக பொருளாதார/சமூக இருத்தலியல் காரணங்களுக்காக வளர்ச்சிக்காக அந்நிய தேசங்களுக்கு குடியேறியவர்கள்.
மோகனப்ரியா இரண்டாவது வகையைச் சார்ந்தவர். மோகனப்ப்ரியாவின் கவிதை வாழ்வு கோவையில் தொடங்கி சிங்கப்பூரில் தொடர்கிறது.
தமிழ்க்கவிதை வெளியில் பெருநகர வாழ்வியலைப்பதிவு செய்த வரிசை இந்திரன், அன்பாதவன், பவுத்த அய்யனார் என சொற்பமே. மோகனப்ரியா இந்தப் பட்டியலில் இணைகிறபோது இயல்பாக அந்தப்பார்வை ஒரு தனித்துவம் பெறுகிறது. காரணம்,மாநகரத்தை ஒரு ஆண் பார்ப்பதும்,பதிவு செய்வதும் ஒரு விதமெனில்,பெண் [ணியப்]பார்வையில் அதே மாநகரம் வேறு கோணத்தில் புலப்படுகிறது.
இருத்தலியல் காரணங்களுக்காக பிற தேசத்தில் புகலிடம் தேடுபவர்கள் ‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’ என பூங்குன்றனாய் மனதளவில் மாறினாலும் அடிநாதத்தில் ‘அந்நியமாதல்’ எனும் அரற்றல், தாய்மண்ணை, உறவுகளைப் பிரிந்த விசும்பல் கேட்டுக்கொண்டே தான் இருக்கும். வாழ்வியல் நெருக்கடிகள் காரணமாகத் தன் ஊரையும் உறவுகளையும் மொழியையும் விட்டு அந்நியப்பட்டுப் போனதன் காரணமாக உருவாகிற அடையாளச் சிக்கலும் தனிமையின் வலியும் மோகனப்ரியாவின் கவிதைகளில் ஊடாடுவதைஉணரமுடிகிறது.
சாபா மீனின் சாபம்
சுடும் கல்லின் மேல் துடிக்காது கிடக்கும் ஒரே நேர்கோட்டில் வெட்டப்பட்ட அரையுடல் சாபா மீனின் ஒற்றைக் கண் வழி கடந்த காலத்தைப் பார்க்கிறது.
… …
கூடலின் மத்தியில் இரையிட்டதும் விட்டுச்சென்ற வளர்ப்பு மீன்தொட்டியின் இணை மீனினைப் போல வேலை நிமித்தம் அலைபேசியினை மட்டுமே தழுவிக்கொண்டிருக்கும் உன் கரங்களைப் பற்ற இயலாது தவிக்கும் கைகளுக்குள் காலம் திணித்திருக்கும் முள் கரண்டிகளின் ரணம்.
விளங்கிக்கொள்வதற்குள் வீங்கிய பொருளாதாரம் இதோ பிரித்துவிட்டது ஒரு மீனை.. எனக்கு இப்போது இருக்கும் பயமெல்லாம் நம் பிணைப்பும் இப்படியொரு வலுலிழந்த காலத்தின் நேர்கோட்டில் துல்லியமாகப் பிரிக்கப்பட்டுவிடுமோ
சாபா மீனாய் நாம் மாறிவிடுவோமோ என்பதும்தான்.
மேற்சொன்ன கவிதை பேசுவது மீன்கள் குறித்தா..? மாநகர அதிவேக வாழ்வில் வயிற்றுக்கு அள்ளிப்போட்டுக்கொண்டு..மனசும் உடலும் விரும்பினாலும் வெறுமனே எந்திரகதியாய் அனைத்து,இதழ்ப்பூச்சு கலையாமல் ,மிக லீசக் கன்னம் தொட்டு, வாகனம் உயிர்ப்பிக்கும் இணைகளின் துன்பியல் நாடகமல்லவோ…!
“ஞாயிறு மதியங்கள் கொண்டு வருகின்றன/ மெளன கலவரங்களை../தேர்வுக்காய் பயமுறும்/ மாணவனின் மனமென/அவ்வளவு அழுத்துகிறது காலம் / ஞாயிற்றுக்கிழமையின் அந்தியை”[ப.79]
ஞாயிறு பிற்பகலிலேயே பிறந்து துரத்தும் திங்களின் நீள்நாக்கும் கோரப்பற்களும் கச்சிதமான சொற்களால் கட்டமைக்கப்பட்டிருப்பது கவிதை ருசி.
மாநகரத்தில் மனிதர்களின் தன்னடையாளம் தொலைதலை இயல்பான மொழியில் கடத்துவதே மோகனப்ரியாவின் வெற்றி.
காலணிகளின் காதை
“மிதிபடும் சாத்தியங்களை உள்ளடக்கியே வைத்திருக்கின்றன, காலணிகள்.
இருந்தும் மென்மையின் கருணையில் பற்றுக்கொண்ட பாதங்களை
அவை ஒரு நாளும் தண்டிப்பதில்லை .
தன் முதுகில் ஏற்றவிருக்கும் முட்களை கிரீடங்களாகத் தரித்து வலம் வருகின்றன.
கால் இடறுகையிலெல்லாம் தன் மேல் மட்டும் அவச்சொற்களை
சேகரித்துக்கொள்கின்றன மௌனமாய்.
இருந்தும் எளியவருக்கு ஈவதையே வலியோர்க்கும் ஈந்து
தேய்ந்துகொண்டிருக்கும் நதிமேல் அலைவுறும் பிம்பங்களென
அவை கானல் சுவடுகளில் முதிர்ந்து மறையக் காத்திருக்கின்றன” [ப.42]
மேற்சொன்ன கவிதையில் காலணி எனும் சொல் அரசபயங்கர வாதமெனும் சப்பாத்துகளின் குறியீடாக ஒலிப்பதை வாசகன் உணர இயலும்.
“முகடு விட்டுவரும் சாலையொன்றின் திருப்பத்தில் தொடங்கின மழைக்காலத்தின் துளிகள்.
கரங்களில் பற்றிய வானவில்லை உனக்கென விரிக்கிறேன்.
ஒவ்வொரு நிறத்திலும் பட்டுத்தெறிக்கிறது உணர்வுகளின் சொற்கள்.
அதில் நிதானித்துத்தான் இயங்குகிறாய்.
எல்லா உணர்வுகளையும் அரும்பிட்டு விளிம்பில் நிற்கச்செய்கிறாய்.
காதலின் வண்ணத்தில் மெல்ல வழியவிடும் உன் கரங்களையே வேண்டுகிறேன். நின்றுவிட்ட மழையைச் சாடி மொத்தமாய் தலையைத் தரையில் கவிழ்க்கும் முன் மீண்டும் வந்துவிடச் சொல். காதலின் சில துளிகளையேனும் தொட்டுப் பார்க்கிறேன். கரங்களெங்கும் பூத்திருக்கும் இளஞ்சிவப்பு நிறம் உன் காதல்தானே?”[ப.112]
காமம் அரும்பும் தருணமொன்றின் அடர்மவுனம் மென்காதலின் இசையாய் வழியும் வரிகளிவை. சொற்கள் தோற்கும் கணத்தில் நல்கவிதை தன்னை நுண்ணுணர்வோடு முகம்காட்டி முகிழ்க்கிறது.
மோகனப்ரியாவின் கவிதைமொழியில் கொஞ்சம் மது…அதுவும் அந்நிய நாட்டு மது…கொஞ்சம் தேன்..கொஞ்சம் சங்கப் பாடல்களின் மெல்லிய சரடுகள்..கொஞ்சம் வாழ்வின் துவர்ப்பும் இனிப்பும்.
வாசகனை வாசித்த இடத்தில் கட்டிப்போடும் ஆச்சர்யக் குறியீடுகள்;அசத்தலான படிமங்கள்!
புதிய காட்சிகளைக் கொண்ட பின்புலங்கள்..அதன் வழியாக வசீகர மொழி என கவிதையின் மாய உலகுக்கு உயர்த்திசெல்லும் மின்னேணிகள் நம்மை அழைத்துச் சென்றாலும் வாழ்வின் நடைமுறை யதார்த்தம் எனும் படிகள் சமகாலத்துக்கு இறங்குவது நிகழ்கிறது.
ததும்புதலின் பெருங்கணத்தை உணர்பவருக்கு காத்திருக்கிறதோர் அதீதத்தின் புதிய ருசி.
புத்தனிலிருந்து சித்தார்த்தனுக்கு திரும்புதல் – தீபிகா நடராஜன்

படைப்பாளியின் நுன்னுணர்வுகளின் வேண்டல் பெரிய சங்கதிகளில் அல்ல .சிறிய விஷயங்களிலீஈ திருப்தி அடைந்து விடுகிறது ,மட்டுமல்ல மிக விரைவாக எளிதாக அதிருப்தியும் அடைந்து விடும் வாய்ப்புமுண்டு. விதி விலக்காக சில படைப்பு மனம் தற்காலிகமான மகிழ்ச்சிகளில் ஆசுவாசமடைவதைக் காட்டிலும் துக்கத்தின் நித்தியத்துவம் பற்றிய காரணங்களில் ஆழ்ந்திருப்பதையே பெரிதும் விரும்புகிறது.
“ இறந்த காலத்தில் உறைந்து விட்ட / என்னைப்போலவே / யாரினும் இருக்கிறீர்களா என்ன..? “ எனும் வேதனை வினாவோடு,படிமம் , குறியீடு எனும் சமகாலத்துக் கவிதைப்பிரக்ஞைகள் குறித்து கிஞ்சித்தும் கவலையின்றி தன் வழியை, வாழ்வு துப்பிய தாங்கவொண்ணாத் துயரத்தைக் கவிதைகளாக்கித் தந்திருக்கிறார் தீபிகா.
“அறைந்து சாத்தப்பட்ட கதவுக்கு பின்நின்று சாவித் துவாரத்தின் வழியே மீண்டும் மீண்டும் யாரேனும் வருகிறார்களா என கால்கடுக்க காத்திருந்த காலத்திலிருந்து எழுதிய கவிதைகள் இவை. அச்சமூட்டும் எதிர்காலத்தை பற்றி, சிந்திக்க விரும்பாதவர்களுக்கு இறந்த காலத்தை விட்டால் வேறு ஏது நிம்மதி? என் நினைவுகளின் ரயில்கள் பின்னோக்கி ஓடியே பழகியவை. கடந்தகாலத்துக்கும் நிகழ்காலத்துக்குமான இந்த இடைவெளியை, கேள்விகளை கோவத்தை, கவிதைகளாக்குவதைத் தாண்டி வேறு எந்த வாய்ப்பையும் நான் எடுத்துக்கொள்ளவில்லை. இத்தொகுப்பின் ஒவ்வொரு கவிதைக்குள்ளும் ஏதோ ஒரு சம்பவமோ, ஏதோ ஒரு மனிதனோ நிச்சயம் உண்டு. இவ்வளவு காலமும் நான் கொண்டிருந்த ஆற்றாமையிலிருந்து இத்தொகுப்பின் வழி என்னை நான் விடுவித்துக்கொள்கிறேன். சிறு எறும்பினைப்போல் இனி அவை தன் திசைகளையும், மனிதர்களையும் தாமே கண்டுகொள்ளட்டும்.”[தீபிகா முன்னுரையில்]
தீபிகாவின் கவிதைகள் சமகாலப் பெண்கள் எதிர்கொள்ளும் கசந்தவாழ்வின் துயரத்தருணங்கள். இவருடைய கவிதைகளை வாசிக்கையில் பிரிவாற்றாமையின் அரற்றல் வாசகனுக்கும் கடத்தப்படுகிறது.
“தனித்து விடப்பட்ட நோய்மையின் இரவொன்றில்தான்
திரும்பத் தொடங்கினான் சித்தார்த்தன் புத்தனிலிருந்து”.(ப.11)
வரலாற்று நிகழ்வொன்றிலிருந்து தன் கவிதைக்கான மூலத்தை கண்டடையும் தீபிகாவின் சிறு வரியும் அவரது வலி வாதுமையை வாசகனுக்கு உணர்த்துகிறது. கவிதைக்குள் கட்டமைக்கப்படும் எந்தவொரு நிகழ்த்துதலும் அந்த ஒரு செயலை மட்டும் குறிப்பது இல்லை. அந்நிகழ்வின் பின்னணியில் வேறு செய்திகள் காத்திருக்கின்றன என்பதை புத்தன், சித்தார்த்தன் எனும் சொல்லாடல்கள் உணர்த்தும்.
துரத்தியடிக்கப்பட்ட பூனைக்குட்டியின் சப்தமில்லாத உள்நுழையல் போல மறக்க நினைக்கும் கடந்த காலங்களின் நியாபகப் பிசுக்குகள் படைப்பாளியைக் கிள்ளும் போதெல்லாம்
“என் தேவனே என் தேவனே என்னை ஏன் கை விட்டீர்?” என்கிற அரற்றல்.
“.வெளிச்சம் ததும்பும் வீட்டின்
கதவிடுக்கு இருளை யாரறிவார் “ (ப.55)-
ஆனால்
“இனி இவ்விடத்திலிருந்து
தொடங்குகிறது ஒரு வாழ்வு” – என கவிஞர் ப்ரிம்யா கிராஸ்வின் வரிகளால் யதார்த்தம் உணர்த்தி, ஆதுரமிக்க ஆறுதல் விரல்களால் ஆசுவாசப்படுத்தி வாழ்வின் நம்பிக்கைக் கீற்று உரத்தக் குரலில் கூவுகிறது.
” நான் உன்னை விட்டு விலகுவதுமில்லை..கைவிடுவதுமில்லை..!”

Leave a comment