கவிஞர்கோ வசந்தகுமாரன் கவிதைகள்

வசந்தகுமாரன்

சோளக்காட்டுப்
பொம்மைகளைக் கண்டு
அஞ்சுவதில்லை
பறவைகள்.
மாறாக
முட்டைகளிட்டுக்
குஞ்சுபொரிக்கத் தோதான
கூடுகளாக
வனைந்துகொள்கின்றன அவற்றை.

மனிதனின்
சோளக்காட்டுப் பொம்மை
கடவுள்.
—————————-
அந்தப் புத்தகத்தை
என்னால்
மூடிவைக்க முடியவில்லை.
அதில்
கதாபாத்திரமாய்
உலவும் ஒரு
வண்ணத்துப் பூச்சி
நசுங்கிப்போய்விடுமோ
என்று பயந்தேன்.
———————————-
ஒரு கவிதை எழுதினேன்.
அதை வாசிக்க
மூன்று கண்களை
வரைந்தேன்.
அதிலொன்று
நெற்றிக்கண்!
——————————
பூங்காக்களில் அமர்ந்து
பேசுவதைத் தவிருங்கள்.
பேச்சு சுவாரஸ்யத்தில்
உங்களைக்
கடந்து செல்லும்
வண்ணத்துப்
பூச்சிகளைக்
கவனிக்கத்
தவறிவிடுவீர்கள்!
———————————
இடி விழும்
சப்தம் கேட்டும்
கலையாத என் கனவு
பூ விழும் ஓசை கேட்டுக்
கலைந்துவிடுகிறது.
————————————
உதிர்ந்துவிட்டது பூ.
காம்பிலேயே
தங்கிவிட்டது
பூவின் மௌனம்!
———————————
வறட்சி மிகுந்த
பருவமொன்றில்
தாகம் கெஞ்சிய
இரவு நேரம்
என் தொண்டையிலிருந்தே
ஒரு நதி
உற்பத்தியாவதாகக்
கனவு கண்டேன்!
————————————
என் விழிகளாக
நீயிருந்தால்
எப்படி நான் உன்னைக்
காண்பது?
————————————
வண்ணத்துப்
பூச்சிகளைக் காட்டிலும்
பேரழகு
குழந்தைகள்
சுவரில் கிறுக்கிய
வண்ணத்துப்பூச்சிகள்!
———————————-
பிறந்துவிட்டோம்
என்பதற்காகவே
வாழ்ந்து தொலைக்க
வேண்டியிருக்கிறது!
————————————
யாருக்கும் தெரியாமல்
அழ முடிவதில்லை.
காட்டிக்
கொடுத்துவிடுகிறது
கண்ணீர்!
————————————
அலைகளுக்கு
பேதம் தெரிவதில்லை.
குழந்தைகளின்
கால்களிலும்
விழுகிறது!
————————————
எனக்கு
வண்ணத்துப்பூச்சி
பிடிக்கத் தெரியும்.
காக்காய் பிடிக்கத்
தெரியாது!
———————————
மனிதனைப் படைத்த
குற்றத்திற்காக
யாரிடம்
பாவ மன்னிப்புக்
கோருவான் கடவுள்?
———————————
கோ.வசந்தகுமாரன்

One response to “கவிஞர்கோ வசந்தகுமாரன் கவிதைகள்”

  1. ஒவ்வொரு கவிதையும் தனித்துவமான வரிகளால் செதுக்கப்பட்டுள்ளது. அனைத்தும் யதார்த்தமானவை.

    Like

Leave a comment

Trending