காடரினக்கதை 10
சப்புக்கும் முக்குக்கும் தொய் தொய்
தொகுப்பு: ப. குணசுந்தரி & சரண்யா
ஒரு கணவனும் மனைவியும் அவளுடைய பெண்குழந்தையும் காட்டுக்குள் போய்க் கொண்டிருந்தபோது அங்கிருந்த ஒரு குகையில் மழைக்காக ஒதுங்கி அங்கேயே சிலகாலம் வாழ்ந்தனர். சிறிது காலம் போனது. அந்தக் குகையிலேயே கணவன் இறந்து போனான். பெண்குழந்தையும் குழந்தையின் தாயும் தனியே வாழ்ந்து வந்தனர். ஒருநாள் அந்தத்தாய் தன் குழந்தையை அருகில் அமர்த்தி வைத்துவிட்டு கிழங்குகளைப் புறையில் போட்டுக் கொண்டிருந்தாள். அவ்வழியே சென்று கொண்டிருந்த புலி ஒன்று அவர்களைக் கண்டது.

பச்சிளம் குழந்தையைத் தன் முன்னே அமர்த்திவிட்டுக் கொண்டிருந்த போது புலி அவள் பின்னே போய் நின்று கொண்டிருந்தது. அந்தக் குழந்தை தன் தாயிடம்
அம்மா புலி வருடு அம்மா
அம்மா புலி வருடு அம்மா
புலி வருகிறது என அக்குழந்தை கூறினாள். ஆனால் குழந்தையின் தாய்க்கு அது விளங்கவில்லை. குழந்தையை நோக்கி அவள்
புளியும் சளியும் இல்லால
பள்ளியிலே புளி கேட்பிட
என்று புளியும் சளியும் இல்லாத இடத்திலேயே வந்து புளி கேட்கிறாயே என்றாள்.
இதைக் கேட்ட குழந்தை தன் தாயிடம் போய் அவள் சேலையைப் பிடித்து இழுத்து புலியைக் காட்டியதும்தான் கிழங்குகளை எடுத்துப் போட்டுவிட்டு நாம் இனி வீட்டுக்குப் போகலாம் என்று தன் குழந்தையைத் தூக்கிக் கொண்டு அந்த இடத்தை விட்டு அகல முயன்றாள். ஆனால் புலி அவளை அழைத்து
பெண்ணே கிடாவுனே என்டே கையிலு தா
நீ கொக்கல் கூடையினே எடுத்தோ
பெண்ணே உன் குழந்தையை என் கையில் கொடுத்துவிட்டு கிழங்கு உள்ள கூடையை நீ எடுத்துக் கொள் என்று புலி அந்தப் பெண்ணிடம் கூறியது. அதற்கு அவள் இல்லை இல்லை கிழங்குக் கூடையை நீ எடுத்துக் கொள் என்றாள்.
புலி சினமடைந்து குழந்தையைக் கொடுக்குமாறு கூறியது. ஏனென்றால் குழந்தையை முதலில் தின்றுவிட்டு பிறகு அவளையும் தின்றுவிட அது நினைத்திருந்தது. தாயும் தன் குழந்தையைத் தன் மனதைக் கல்லாக்கிக் கொண்டு அதனிடம் கொடுத்துவிட்டு புறையை எடுத்துக் கொண்டாள். புலி குழந்தையைத் தின்பதற்காக மெதுவாக நடந்தது. சிறிது தொலைவு போனதும் குழந்தையின் கைகளைக் கடித்துத் தின்றது. பின் கால்களைக் கடித்துத் தின்றது. அதன் பிறகு குழந்தையை முழுவதுமாகத் தின்று விட்டு குழந்தையின் தலையை மட்டும் வாயில் கவ்வியபடி வந்தது.
தன் குழந்தை இறந்து விட்டது என அவளுக்குத் தெரிந்திருந்தும் அதனைத் தன்னால்ஒன்றும் செய்யமுடியவில்லையே என்று அவள் தன் தலையையும் மார்பையும் தட்டி அழுதுகொண்டே ஓடினாள். அவள் வேகமாகச் செல்வதைக் கண்ட புலி அவளை அழைத்து அந்தக் குழந்தையின் தலையை அவள் காலடியில் போய் சேருமாறு உருட்டி விட்டது. அதைக் கண்ட அவள் தன்னுடைய உயிரில் பாதி இழந்தது போல அவள் அழுதாள். கூடவே போன புலி அன்று இரவு அவளுடனேயே தங்க முடிவு செய்தது.
புறையை குகையில் இறக்கி வைத்த அவள் இன்று இரவு உறங்கினால் புலி தன்னையும் தின்று விடும் அதனால் உறங்கக் கூடாது என்று நினைத்தாள். அதனால் புலியை இன்று குகையில் என்னுடன் இருக்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும் என்று முடிவு செய்த அவள், புலியை நோக்கி என் தாய் தந்தையின் வீட்டில் நான் இருந்தால் தீப்பெட்டி இருந்திருக்கும் என்றாள். அதற்குப் புலி அவளை நோக்கி பேடிக்கண்டே பெண்ணே நான் வாங்கி வருகிறேன் என்று கூறி கடைக்குச் சென்றது. கடைக்குப் போன புலி கடைக்காரனை நோக்கி
கடக்காரா கடக்காரா
உசிருக்குப் பாரமா தீப்பெட்டிக்குப் பாரமா
என்று கேட்டது. இதைக் கேட்ட கடைக்காரன் புலியைக் கண்டு அஞ்சியபடியே
இல்லையப்பனே உசுருக்குத்தான் பாரம்.
என்று கூறி தீப்பெட்டிகளை அள்ளி புலியிடம் கொடுத்தான். தீப்பெட்டிகளை எடுத்துக் கொண்டு புலி குகைக்குச் சென்றது. தீப்பெட்டியை எடுத்துக் கொண்டு அவள் மீண்டும் புலியிடம் என் வீட்டில் இருந்தால் அரிசியும் பருப்பும் என மளிகைப் பொருள்கள் எல்லாம் கிடைத்திருக்கும். சுவையான உணவைச் சமைத்து உண்டிருப்பேன் என்றாள். மீண்டும் புலி பேடிக்கண்டே பெண்ணே எனக் கூறியபடியே மளிகைக் கடைக்காரனிடம் சென்றது. அவனிடம்
கடக்காரா கடக்காரா உசுருக்குப் பாரமா
மளிகைப் பொருளுக்குப் பாரமா
எனக் கேட்டது. புலியைக் கண்டு பயந்த கடைக்காரன் புலியிடம்
இல்லையப்பனே உசுருக்குத் தான் பாரம்
என்று கூறியதுடன் புலி கேட்ட மளிகைப் பொருள்களை எல்லாம் கொடுத்தான். மளிகைப் பொருட்களை எல்லாம் புலி குகையில் கொண்டு போய் போட்டது. நள்ளிரவில் குளிரின் மிகுதியால் அந்தப் பெண் விறகு வெட்டி தீ எரிக்க வேண்டும் என்று கத்தியைக் கேட்டாள். புலி கத்திக் கடைக்குப் போய் .கத்தியையும் கொண்டு வந்து கொடுத்தது.
விடியற்காலையில் இனி என்ன செய்து புலியை அனுப்பி விடுவது என நினைத்ததும் இரண்டு கைகளையும் தன் தலையில் வைத்துக் கொண்டு குகையில் படுத்து உருண்டாள். புலி குகைக்கு உள்ளே சென்று பெண்ணே எந்து பற்றீ உனக்கு என்று கேட்டது. உடனே அந்தப் பெண் எனக்குத் தலைவலி தலை வலியைத் தாங்க முடியவில்லை. என் கண்கள் இரண்டும் பிதுங்கி வெளியே வந்துவிடும் போல இருக்கிறது என்று அழுதுகொண்டே புரண்டு கொண்டிருந்தாள்.
புலியிடம் அழுது கொண்டே அந்தப் பெண் என் கணவன் உயிருடன் இருந்தபொழுது என் தலைவலி போவதற்காக கப்பல் நுரையைக் கடலில் போய் கொண்டு வந்து தருவான். இனி என் தலைவலியை எப்படி போக வைப்பேன் என்றாள். உடனே புலி ஒரு ஓட்டைக் கூடையை எடுத்துக் கொண்டு கடலுக்கு கப்பல் நுரையை எடுக்கச் சென்று விட்டது.
புலி குகையை விட்டுச் சென்ற உடனேயே அந்தப் பெண் தன் தாய் தந்தையர் இருக்கும் ஊருக்கு ஓடிவிட்டாள். அங்கே போனவுடன் என் கணவன் இறந்து விட்டான். என்னுடைய குழந்தையைப் புலி அடித்துவிட்டது. இப்பொழுது அது என்னைத் தேடித்தான் வரப்போகிறது என்றாள். அதனால் அதைக் கொல்ல வேண்டிய ஏற்பாடுகளைச் செய்ய வேண்டும் என்று ஊர்மக்களிடம் கூறினாள். அதனால் அவர்கள் ஒரு பெரிய குழியை வெட்டி அதில் மூங்கில்களை ஊசிபோல வெட்டி அந்தக் குழியில் பதித்து வைத்தனர். ஆழமான அந்தக் குழியின் மேல் சிறுசிறு காய்ந்த குச்சிகளைப் போட்டு அதன் மேல் பாயை விரித்து புலிக்காகக் காத்திருந்தனர்.
கப்பல் நுரைக்காகச் சென்ற புலி ஓட்டைக் கூடையில் நுரையை அள்ளிக் கொண்டு சிறிது தூரம் வந்தது நுரையெல்லாம்கூடையிலிருந்த ஓட்டை வழியாகத் தரையில் வழிந்தது. மீண்டும் போய் கூடையில் அள்ளிக் கொண்டு வந்தது. மீண்டும் நுரை தரையில் வழிந்தது. தொடர்ந்து புலி இவ்வாறு செய்து கொண்டிருப்பதை மரத்தில் இருந்து கொண்டே பார்த்துக் கொண்டிருந்த குருவி சிற்சிலுவான் (தையல் சிட்டு).

அந்த மரத்தில் இருந்தபடியே புலியை நோக்கி
சப்புக்கும் முக்குக்கும் தொய் தொய்
சப்புக்கும் முக்குக்கும் தொய் தொய்
என்று கூடையின் அடியில் இருக்கும் ஓட்டையில் இலை தழைகளைக் கொண்டு அடை எனக் கத்தியது. இதனைக் கேட்ட புலி குருவியின் ஓசையைக் கேட்டு இலைகளைக் கொண்டு இந்த கூடையில் இருக்கும் ஓட்டையை அடைக்கத்தான் இந்தக் குருவி கத்தியது என்பதைப் புரிந்து கொண்டு அந்த ஓட்டைக்கூடையில் இலைதழைகளைக் கொண்டு அடைத்து நுரையை அள்ளிக் கொண்டு குகையை நோக்கி வேகமாக ஓடியது. குகையில் போய்க் கூடையை வைத்துவிட்டு அந்தப் பெண்ணைத் தேடியது புலி. அந்தப் பெண் குகையில் எங்கும் காணவில்லை. அவள் தன்னை ஏமாற்றியதை நினைத்து சினமடைந்து அந்தப் பெண்ணைத் தேடி அவள் போன வழியே சென்றது.
இன்று அவள் மட்டும் என் கையில் கிடைத்தால் அவள் ஈரலை நான் கடித்துத் தின்று விடுவேன் என நினைத்தபடியே அவளுடைய ஊரை நோக்கி தாவி ஓடியது. அந்த ஊரை அடைந்தவுடன் ஊர்மக்கள் அனைவரும் அதன் வருகையை எதிர்நோக்கி வழியில் ஒரு பெரிய குழியினை வெட்டி அக்குழிக்குள் பச்சை மூங்கிலாலான கூர் குச்சிகளைப் பதித்துவைத்து அதற்கு மேலாகக் காய்ந்த குச்சிகளைப் போட்டு அதற்கும் மேலாக பாயினைப் போட்டு மறைத்து அந்தக் குழியின் அருகில் தாங்களும் பாயை விரித்து அமர்ந்திருந்தனர். வேகமாக வந்த புலியினைக்கண்ட ஊர்மக்கள், மருமகனே வா வா வந்து இந்தப் பாயில் அமர்ந்து கொள் என்றனர்.
கூட்டத்துடன் என் கையில் சிக்கி விட்டார்களா? இன்று எனக்கு நல்ல வேட்டைதான் என்று தன் மனதில் நினைத்துக் கொண்டே அந்தப் பாயில் போய் அமர்ந்தது புலி. காய்ந்த குச்சிகள் உடைந்து பாய் விலகியது. குழியினுள்ளே வைக்கப்பட்டிருந்த மூங்கில் ஊசிகளின்மேல் போய் புலி விழுந்தது. புலியின் உடலில் ஊசிகள் ஏறின.

புலி இரத்த வெள்ளத்தில் மிதந்தது. அதைக் கண்ட ஊர்மக்கள் விறகுகளை வெட்டிக் கொண்டு போய் புலியின் மேல் போட்டு நெருப்பு மூட்டினர். புலியைக் கொன்று விட்டதாக அனைவரும் நினைத்தனர். ஆனால் அந்தப் புலியின் ரோமம் மட்டும் பறந்து போய் என் தந்தையைக் கொன்றவர்களைப் பழிதீர்க்காமல் விடமாட்டேன் எனக் கூறி காற்றிலே பறந்து சென்றது. அந்த ரோமம் விழுந்த இடத்திலேயே மீண்டும் புலியாக மாறி காட்டுக்குள் ஓடி வாழ்ந்தது.
…………………
(தகவல். மங்கம்மாள் பாட்டி, வயது72. வில்லோனி செட்டில்மென்ட். 07.10.2018.)
அருஞ்சொற்பொருள்
பேடிக்கண்டே – பயப்பட வேண்டாம்,
கிடாவு – குழந்தை,
என்டே – என்,
கொக்கல் – கிழங்கு,
எடுத்தோம் – எடுத்துக் கொள்,
எந்து பற்றீ – என்ன ஆனது,
சப்புக்கும் – இலை,
முக்குக்கும் – தழை,
தொய் – அடை

Leave a comment