தீர்ப்பும் நீதியும்

முனைவர் இ.கலைக்கோவன், ஈரோடு

சில நேரங்களில் சில வழக்குகளில் தீர்ப்பு வழங்கப்படும்போது இப்படி சொல்லப்படுவதுண்டு. “இந்த வழக்கில் நீதி வழங்கப்படவில்லை. தீர்ப்பு வழங்கப்பட்டிருக்கிறது” என்று.

பதின்ம வயது பையன் தன் அம்மாவிடம் கூறினான், “அம்மா இன்றைக்கு நம் வீட்டிற்கு என்னுடைய பெண் தோழிகள் வருவார்கள். அவர்களில் ஒருவரை நான் திருமணம் செய்யப் போகிறேன். யார் அந்த பெண் என்று கண்டுபிடித்து சொல்லுங்கள் பார்ப்போம்.” என்றான். அன்று வீட்டிற்கு வந்த தோழிகள் அனைவரிடமும் ஒரே மாதிரி பேசுவது என அந்த இளைஞன் முடிவெடுத்துக் கொண்டான். அப்படிப் பேசினால் அம்மாவால் கண்டுபிடிக்க முடியாது என்று நினைத்தான். அவர்கள் வந்து சென்ற பின்பு அந்தப் பையன் அம்மாவிடம், “யார் என்று கண்டுபிடித்து விட்டீர்களா அம்மா?” என்று கேட்டதற்கு, அவன் அம்மா, “அந்த சிவப்பு கவுன் போட்டிருந்த பெண்தானே” என்றார். இளைஞனுக்கு ஆச்சரியம் “எப்படி மா சரியா கண்டுபிடித்தீர்கள்?” என்றான். அதற்கு அம்மா சொன்னார், “வேறு ஒன்றும் இல்லை. நம்ம வீட்டுக்குள் பெண்கள் வந்தபோது ஏனோ அந்தச் சிவப்புக் கவுன் போட்ட பெண்ணை மட்டும் எனக்குப் பிடிக்கவே இல்லை. அப்போ அவள் தானே என் மருமகளா இருக்க முடியும்.” என்றார்.

இது வேடிக்கையாகச் சொல்லப்பட்டாலும் முன்வரையறுக்கப்பட்ட தீர்மானங்களின்படி வழங்கப்படுகிற தீர்ப்பு ஆகும். ஆம் தீர்ப்பு என்பது முன் வரையறுக்கப்பட்ட ஒன்று. நம் நாட்டில் நீண்ட காலமாக இப்படியான வரையறுக்கப்பட்ட தீர்ப்புகள் தான் நீதியாக வழங்கப்பட்டு வந்தன. அத்தீர்ப்புகளை இச்சமூகம் மெதுமெதுவாக விசாரணைக்கு உட்படுத்தத் தொடங்கியது. அதனை நாட்டுப்புறக் கதைகளில் நாம் உணர முடியும்.

கி.ரா –வின்  நாட்டுப்புறக் கதைகளில் அப்படி ஒரு சம்பவம் உண்டு.

ஒரு ராஜா தன் மகளுக்குக் கேட்டதெல்லாம் செய்து கொடுத்து அரண்மனையில் செல்லமாக வளர்த்து வந்தார். அந்தப் பெண் வளர்ந்து பெரியவளான போது அப்பாவிடம், “தான் அரண்மனைக்கு உள்ளேயே வளர்ந்து வந்துள்ளேன். நாடுகளைச் சுற்றிப் பார்க்க எனக்கு ஆசை”,  என்றாள். உடனே ராஜா நாட்டைச் சுற்றிப்பார்க்க ஏற்பாடு செய்தார்.

நாடுகளைச் சுற்றிப் பார்த்து வந்த மகள் மீண்டும் கூறினாள் “எனக்கு இன்னொரு ஆசை. காடுகளைச் சுற்றி பார்க்க வேண்டும்”,  என்று. மகளின் ஆசையை நிறைவேற்ற துணிகிற அந்த ராஜா சொன்னார், “தாராளமாகச் சென்று வா“,  என்று.

காடுகளைச் சுற்றிப் பார்த்த அந்த பெண் மலைகளைப் பார்க்கிறபோது அதில் விழுகிற அருவிகளில் குளிக்க ஆசைப்பட்டாள். அந்த ஆசையும் நிறைவேற்றப்பட்டது. அவள் அருவியில் குளித்துக் கொண்டிருக்கும் போது மீண்டும் அவளுக்கு ஒரு ஆசை வந்தது.

தன் மீது தெறித்து விழுகிற இந்த நீர்த்துளி முத்துக்களில் இருந்து மாலை செய்து போட்டுக் கொண்டால் என்ன என்று. அதையும் ராஜாவிடம் கூறினாள். ராஜாவும் அப்படியே செய்துவிடலாம் என்றார். உடனே அரசவை பொற்கொல்லர் வரவழைக்கப்பட்டார்.  ராஜா அவரிடம் கூறினார் “நீரில் இருந்து தெறிக்கும் முத்துக்களில் மணிகள் செய்து கொடுக்க வேண்டும். இது அரசனுடைய ஆணை. செய்யத் தவறினால் நீ கொல்லப்படுவாய்”,  என்றார்.

பொற்கொல்லனுக்கு நன்றாகத் தெரியும் அதைச் செய்ய முடியாது என்று. வீட்டிற்கு சோகமாகச் சென்றான். தன் மனைவியுடன் கலந்து கொண்டு “நாம் இருவரும் தற்கொலை செய்து கொள்ளலாம். முட்டாள் ராஜாவிடம் அகப்பட்டு இறப்பதை விட இது மேல்”  என்றான். இதைக்கேட்ட அந்த பொற்கொல்லனின் மகன் சொன்னான், “ நீங்க கவலைப்படாதீர்கள் அப்பா. ராஜாவிடம் சென்று சொல்லுங்கள் நாளை நாம் முத்துக்களில் இருந்து மாலை செய்து விடலாம் என்று.  அதற்கு ராஜாவையும் ராஜாவின் மகளையும் அருவிக்கு கூட்டி வாருங்கள்”  என்றான். 

அடுத்த நாள் ராஜா, ராஜாவின் மகள், பொற்கொல்லன், அவன் மகன், அரண்மனை அமைச்சர்கள் அத்தனை பேரும் அருவிக்கரையில் வந்து சேர்ந்தார்கள்.  பொற்கொல்லனுடைய மகன் அருவியின் ஓரத்தில் அமர்ந்து கொண்டு,  கையில் ஊசி எடுத்து நூலைக் கோர்த்துவிட்டு ராஜாவைப் பார்த்துச் சொன்னான், “ராஜா உங்கள் மகளை குளிக்கச் சொல்லுங்கள். அவர் குளிக்கும் போது தெறித்து விழுகிற ஒவ்வொரு நீர் முத்துக்களையும் பிடித்து என்னிடம் கொடுங்கள். நான் கோர்த்து கோர்த்து மணியைச் செய்து விடுகிறேன்”,  என்றான். உடனே ராஜா அவனைப் பார்த்து சொன்னார் “என்னடா முட்டாள்தனமாக இருக்கிறது. நீர்த்துளியை எப்படிக் கையில் பிடிக்க முடியும்?”  என்று. பொற்கொல்லன் மகன்  சொன்னான்,  “யார் முட்டாள்?  அரசே!“  என்று.

இப்படித்தான் எளிய மக்களால் அரச நீதி பகடி செய்யப்பட்டது. இதன் தொடர்ச்சியை செவ்விலக்கியங்களில் இன்னும் காத்திரமாகப் பார்க்க முடியும்.

தீர்ப்பின் பிழையைச் சுட்டுவது மட்டுமின்றி எதிர்த்துக் கேள்வி கேட்கிற இடமும் அங்கே உருவானது.  “தேரா மன்னா“ எனக் கண்ணகி வெடித்தது அரசத் தீர்ப்பின் பிழையினால் தான். மேற்சொன்னவை இரண்டும் அரச நீதியானது பிழையான போது எளிய மக்கள் சுட்டிக்காட்ட வாய்ப்பாய் இருந்தது என்பதை.

இந்த இடத்திற்குச் சமூகம் வருவதற்கு பல காலம் பிடித்தது. ஆனால் இந்தச் சமூகம் அரச நீதியை விடவும் கொடிய நீதியையும் கடந்துதான் வந்துள்ளது.  அது மனுச நீதிக்கு நேர் எதிரான மனுநீதியாக இருந்தது. அதில் நீதியோ தீர்ப்போ இல்லை. உண்மையில் அதில் அநீதி மட்டுமே இருந்தது. அரச நீதியில் நொந்து கிடந்த இந்தச் சமூகம் உண்மையான நீதியை நோக்கி நடக்க நீண்ட காலம் பிடித்தது. அந்த மனுச நீதியின் பெயர் சமூகநீதி. அதனை நோக்கிய பயணத்தின் முதல் புள்ளியை இந்திய அரசியல் சாசனம் வைத்தது.

இடமிருந்து வலமாக அமர்ந்திருப்போர் : சர்.நியாபதி மாதவன், சையத் முகமது சாதுல்லா, அண்ணல் அம்பேத்கர், அல்லாடி கிருஷ்ணசுவாமி, பெனகல் நரசிங்
நின்றிருப்போர் : சுரேந்திர நாத், ஜூகல் கிஷோர், கேவல் க்ரிஷன்

இந்தியா உலகின் பலம் வாய்ந்த மக்களாட்சி நாடாக இன்று வரைக்கும் உலக அரங்கில் போற்றப்படுவதற்கும் அதன் கண்ணியம் உலக மக்களால் புகழப்படுவதற்கும் காரணம்,  இந்த பரந்துபட்ட பல்வேறு வேற்றுமை உடைய தன்மையைக் கட்டி நிலை நிறுத்துகின்ற இந்திய அரசியல் சாசனமே ஆகும். 

இந்த அரசியல் சாசனம் ஒரு நாள் உட்கார்ந்து மறுநாள் எழுதி முடிக்கப்பட்டது அல்ல.  இதற்கென்று நீண்ட வரலாற்று பின்னணி உண்டு. 

கிபி 1600 -இல் ஆங்கிலேயக் கிழக்கிந்தியக் கம்பெனியின் வருகையை ஒட்டி அது தொடங்கியது. அதற்கு முன்பு வரை தனித்தனி அரசநீதிகள் அந்தந்த மன்னர்களின் மனநிலைக்கு ஏற்ப பின்பற்றப்பட்டன. கிழக்கிந்தியக் கம்பெனித் தோற்றத்தின் போது இங்கிலாந்து நகரின் வணிகப் பெரு முதலாளிகள் பேரரசி எலிசபெத்திடமிருந்து சாசன வரைவு (charter)  ஒன்றினைப் பெற்றனர்.  இவ்வரைவு கம்பெனியின் வணிக மற்றும் நாடுகளுடனான போக்குவரத்து மற்றும் உரிமை குறித்து பேசியது. அதைத் தொடர்ந்து 1726 இல் ஆங்கில அரசு கிழக்கிந்திய கம்பெனிக்கு வழங்கிய சாசனம் குறிப்பிடத்தக்கது. இது ஆங்கிலேய இந்தியாவின் பம்பாய், மெட்ராஸ், கல்கத்தா ஆகிய மாநிலங்களின் ஆளுநருக்கு இந்தியச் சூழலுக்கும் தன்மைக்கும் ஏற்ப சட்டங்களை இயற்றும் அதிகாரத்தினை வழங்கியது. இருப்பினும் இயற்றப்பட்ட சட்டங்கள் இங்கிலாந்து மையக் குழுவின் அனுமதி பெற வேண்டிய கட்டாயம் அப்போது இருந்தது.

ஆனாலும் அப்போதும் கூட இங்கிலாந்து அரசு இந்தியாவை ஆளும் அதிகாரத்தினை நேரடியாகவும் முழுமையாகவும் பெற்றிருக்கவில்லை. 1757-க்குப் பின்பான பிளாசிப்  போரில் ஆங்கில கிழக்கிந்தியக் கம்பெனியின் வெற்றிகளுக்குப் பிறகு ஆலம் ஷா மன்னர் நில வருவாயை வசூலிக்கும் பொறுப்பைக் கம்பெனிக்கு வழங்கினார். இந்த நடவடிக்கை உரிமையியல் நீதிநிலையை நிர்வகிக்கும் தன்மையை இயல்பாக ஆங்கிலேயரிடம் கொண்டு சேர்த்தது. கம்பெனியின் மறைமுக ஆட்சியும் அப்போது நிறைவுக்கு வந்தது.

அப்போது ஆங்கில அரசின் நேரடி நிர்வாக முறை கம்பெனியின் ஆளுமையில் நடந்த சில நிர்வாகச் சீர்கேடுகளைக் களைய 1773 -இல் ஒழுங்குமுறைச் சட்டத்தை (Regulating Act -1773)  பிரிட்டன் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றியது. இந்திய அரசியலமைப்பின் வளர்ச்சி இச்சட்டத்திலிருந்து தான் துவங்கியது. இதைத் தொடர்ந்து இந்திய நடைமுறைக்கு ஏற்ப கால இடைவெளிகளில் புதிய புதிய சட்டங்கள் ஆங்கிலேய அரசால் உருவாக்கப்பட்டன. அதில் 1784இல் உருவாக்கப்பட்ட பிட் இந்திய சட்டம் (Pitts India Act 1784)  குறிப்பிடத்தக்கது. இது மொத்த இந்திய நிலப்பரப்பை ஒன்றிணைக்கிற சட்டத்தின் முன் வடிவமாகப் பார்க்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து தொடர்ச்சியாக சட்டங்கள் இயற்றப்படுவதும், புதுப்பிக்கப்படுவதும், சீர்திருத்தப்படுவதுமாக ஆங்கில ஆட்சியின் நிறைவு வரைக்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுக்கொண்டே இருந்தன. அதன் இறுதியாக இந்திய மன்றங்கள் சட்டம் 1909 (Indian Councils Act – 1909) மார்லி மிண்டோ சீர்திருத்தங்களோடு அறிமுகப்படுத்தப்பட்டது. இதுவே இந்தியத் தன்னாட்சி நோக்கிய பயணத்திற்கு அடிகோலியது. அதன் பிறகான காலம் என்பது இந்திய விடுதலை குறித்துப் பேசப்பட்ட காலகட்டம். தன்னாட்சி அதிகாரத்தை ஆங்கில அரசிடமிருந்து பெறுவதற்கான செயல் திட்டங்கள்  அப்போது வகுக்கப்பட்டன.

1919 -இல் மாண்டேகு செம்ஸ்போர்டு அறிக்கையின் (Montagu Chelmsford Report) அடிப்படையில் இந்திய அரசுச் சட்டமானது (Government of Indian Act 1919)   இயற்றப்பட்டது.  இச்சட்டத்தின் நோக்கம் இந்தியர்களுக்கு நிர்வாகத்தின் ஒவ்வொரு துறையிலும் கூடுதலான பிரதிநிதித்துவம் கொடுத்து தன்னாட்சிக்குத் தயார் செய்வதே ஆகும். அதன் பின்பாக சைமன் குழு இந்திய மாகாணங்களில் தன்னாட்சி குறித்த வரைவினை முன் வைத்தது. அதன்படி 1935-இல் ஆங்கில நாடாளுமன்றம் மீண்டும் ஒரு சட்டத்தை இயற்றியது. அது இந்திய அரசு சட்டம் 1935 என்று அழைக்கப்பட்டது. இச்சட்டத்தின் அடிப்படையில் இந்தியாவில் கூட்டாட்சி நீதிமன்றம் நிறுவப்பட்டது.

1946ஆம் ஆண்டு இந்திய விடுதலை நோக்கிய பயணமாக மூன்று முக்கிய தீர்மானங்கள் ஆங்கில பாராளுமன்றத்தால் முன்வைக்கப்பட்டன. (i) இங்கிலாந்தில் இருந்து கேபினட் மிஷனை (Cabinet Mission) இந்தியாவிற்கு அனுப்பி இந்திய ஒன்றியத்தை நிறுவுதல். (ii) புதிய அரசியல் அமைப்புச் சட்டத்தை உருவாக்குதல்.  (iii) இடைக்கால அரசு ஒன்றை ஏற்படுத்துதல்.

பின்பாக மவுண்ட்பேட்டனின் பரிந்துரையை ஏற்று இங்கிலாந்து நாடாளுமன்றம் இந்திய சுதந்திரச் சட்டத்தினை 1947 (The Indian Independence Act 1947) இயற்றி நாட்டிற்கு விடுதலை அளித்தது. அச்சமயத்தில் எடுக்கப்பட்ட மிக முக்கியமான முடிவுகளில் ஒன்று சுதந்திர இந்தியா தனக்கான முழுமையான அரசியல் சாசனத்தை வரையறுத்துக்கொள்கிற வரையிலும் 1935 ஆம் ஆண்டின் இந்திய அரசு சட்டமே நடைமுறையில் இருக்கும் என்பது ஆகும்.

இதனைத் தொடர்ந்து 1947 ஆகஸ்ட் 29 இல் டாக்டர் பி. ஆர். அம்பேத்கர் தலைமையில் ஒரு வரைவுக் குழு (Drafting Committee) நியமிக்கப்பட்டது. இதன் பணி சுதந்திர இந்தியாவில் அமைக்கப்பட்ட பல்வேறு குழுக்களின் பரிந்துரைகளை ஏற்று ஒரு வரைவு அறிக்கையினை தயார் செய்தல் ஆகும். இந்த வரைவின் அடிப்படையில் அரசியல் அமைப்பு ஆலோசகர் டாக்டர் பி. என்ராவ் அவர்களால் வரைவு அரசியலமைப்புச் சட்டம் (Draft Constitution) ஒன்று உருவாக்கப்பட்டது.

முன்மொழியப்பட்ட இச்சட்டத்தை மீண்டும் டாக்டர் அம்பேத்கர் தலைமையிலான வரைவுக் குழு ஆய்ந்து, 315 சரத்துக்கள் மற்றும் 8  அட்டவணைகள் கொண்ட அரசியலமைப்பு வரைவினை உருவாக்கியது. இவ்வரைவு மேலும் மேலும் விவாதிக்கப்பட்டு இறுதியாக, 395 சரத்துக்களும் 8 அட்டவணைகளும் கொண்ட வரைவாக ஒப்புக்கொள்ளப்பட்டு 1948 ஜனவரியில் வெளியிடப்பட்டு, அதில் வரைவினை குறித்து மீண்டும் விவாதிக்கவும், திருத்தங்களை முன்மொழியவும் குடிமக்களுக்கு 8 மாத கால அவகாசம் வழங்கப்பட்டு, இறுதியாக புதிய அரசியலமைப்புச் சட்டம் அரசியலமைப்பு அவையால் 1949 நவம்பர் 26 ஆம் நாள் ஏற்றுக் கொள்ளப்பட்டது. இந்த நாளையே இன்றைக்கு நாம் இந்திய அரசியல் சாசன தினமாகக் கொண்டாடிக் கொண்டிருக்கிறோம்.

இந்த இந்திய அரசியலமைப்புச் சட்டத்தை உருவாக்க எடுக்கப்பட்ட காலம் இரண்டு ஆண்டுகள் 11 மாதங்கள் 17 நாட்களாகும். சட்டத்தின் சரத்துகளில் ஐந்து முதல் எட்டு மற்றும் 60, 324, 366, 367, 372, 380, 391 முதல் 393 ஆகியன உடனடியாகச் செயலுக்கு வந்தன.  மற்றவை 1950 ஜனவரி 26 ஆம் நாள் முதல் செயலுக்கு வந்தன.

பரந்துபட்ட பல்வேறு இனங்களையும் ஒன்றிணைத்து உருவாக்கப்பட்ட சாசனமானது அது உருவாக்கப்பட்ட காலந்தொட்டு இன்று வரையிலும் பல்வேறு திருத்தங்களையும் கண்டுள்ளது. அது காலத்தின் தேவையாகப் பார்க்கப்படுகிறது. ஒரு தேசத்தின் ஆன்மாவாக விளங்கும் சாசனம் புனிதத் தன்மையுடன் மட்டுமே அணுகப்படுமானால் அதன் நிலைப்பும் உறுதியும் தொடருமா என்ற வினாவிற்கு விடை தான் அதன் திருத்தங்கள். தீர்ப்புகள் நீதிகளாக வடிவம் பெறுவதற்கு இத்திருத்தங்கள் தேவையானவையாகப் பார்க்கப்படுகின்றன.  அப்படியான முதல் திருத்தமே இட ஒதுக்கீடு சார்ந்த திருத்தமாகத் தான் நம் அரசியல் சட்டத்தால் மேற்கொள்ளப்பட்டது.

இந்தியா அரசியலில் சமத்துவத்தை அடைந்துள்ளதா என்றால் உறுதியாக அடைந்துள்ளது எனலாம். ஆனால் பொருளாதாரத்தில், சமூகத்தில் சமத்துவத்தை அடைந்துள்ளதா என்றால் இன்றைக்கு வரைக்கும் இல்லை என்பதே பதிலாக உள்ளது. இந்த நிலை மாற வேண்டுமானால் டாக்டர் அம்பேத்கர் கூறியது போல நம் நாடு அரசியல் ஜனநாயகமாக மட்டுமல்ல சமூக ஜனநாயகமாகவும் மாற வேண்டும். அப்படியான சமூக ஜனநாயகத்தை நோக்கிய இந்தியாவின் பயணத்தில் நம்மை முன்னெடுத்துச் செல்பவை அரசியல் அமைப்புச் சட்டங்களே. அதன் முகவுரையில் கூறப்பட்டுள்ள “நாங்கள் இந்திய மக்கள்”  “மதச்சார்பற்ற”  “மக்களாட்சி” “சமத்துவ குடியரசு” போன்ற வார்த்தைகள்தான் அதன் ஆன்மா. அதனை உணர்ந்து உள்ளார்ந்து கொண்டாட ஒவ்வொரு இந்தியனும் கடமைப்பட்டுள்ளான். உண்மையான சமூகக் குடியரசு நோக்கிய டாக்டர் அம்பேத்கரின் கனவை நினைவாக்கத் தொடர்ந்து பயணிப்போம். அரச நீதியிலிருந்து மனுஷ நீதிக்கான அனைத்து வாய்ப்புகளையும் நோக்கிய பயணம் இது. இதில் தீர்ப்புகள் நீதிகளாக வழங்கப்படும். அவை சமூக நீதியாக அமைந்திருக்கட்டும்.

துணை நூல்கள்

  • அரசியலமைப்புச் சட்டம் – டாக்டர் பி.ஆர். ஜெயராஜன் ( தமிழில்)
  • இந்திய அரசியல் சட்டம் முதல் திருத்தம் ஏன்? எதற்காக? – கி.வீரமணி
  • தந்தை பெரியாரும் டாக்டர் அம்பேத்கரும் – திராவிடர் கழக வெளியீடு
  • நாட்டுப்புறக் கதைக்களஞ்சியம் – கி.ராஜநாராயணன்

முனைவர் இ.கலைக்கோவன்
ஈரோடு
9944336007

Leave a comment

Trending