பானையிசைக் கலைஞர்கள்
பாண்டிச்சேரி சிவஞானமும் அரிகிருஷ்ணனும்
முனைவர் த. செபுலோன் பிரபுதுரை
மாந்தரினம் தமது மண் சார்ந்த பண்பாட்டுப் பின்னணியுடன் பிணைந்தே அமைந்துள்ளது. மண் சார்ந்த பண்பாடாய் கலைகள் விளங்குகின்றன. இவற்றை நாட்டார் கலைகள் என்றும் நாட்டுப் புறக் கலைகள் என்றும் கூறுவர். இவை மக்களின் வாழ்வு சார் கலைகளாக அமைகின்றன. இவை மக்களை மகிழ்விப்பனவாகவும், மக்களின் வரலாற்றை அவர்களுக்கே நினைவூட்டுவனவாகவும் விளங்குகின்றன. இத்தகைய நிலையில் மக்களிடையே, மக்கள் கலையை நிகழ்த்தும் கலைஞர்களின் வாழ்க்கை நிலையும், அவர்கள் கலையைக் கற்கும் சூழலும் அவற்றை மக்களுக்காக பயன்படுத்தும் விதமும் இக்கட்டுரையில் பேசப்படுகின்றன.
பானையிசைக் கலைஞர் அரிகிருஷ்ணன் தாம்பரத்தில் வசித்துக் கொண்டு தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களுக்கும் சென்று தன்னிடம் இருக்கும் பானையிசைக் கருவியைக் கொண்டு மக்களிடையே கலை நிகழ்ச்சிகள் செய்து வந்தவர். கலைஞர் அரிகிருஷ்ணன். அவர்களின் குடும்பப் பின்னணி, இசைக்கலை பயின்ற நிலை தான் பயின்ற கலையைக் கொண்டு அவர் செய்து வந்த மருத்துவப் பணிகள் ஆகியவற்றை இக்கட்டுரையில் காணலாம். கலைஞர் அரிகிருஷ்ணனின் குருவாக இருந்தவரும் பானையிசைக் கருவியை உருவாக்கியவருமான பாண்டிச்சேரி சிவஞானம் குறித்தும் பானையிசைக் கருவி உருவாக்கம் குறித்தும் இக்கட்டுரையில் காணலாம்.
அரிகிருஷ்ணனின் பெற்றோரது வாழ்க்கைச் சூழலும், கலைச் சூழலும்
திருச்சி மாவட்டத்தில் உடையார் பாளையம் தாலுக்காவில் வானதெரியன் பட்டினம் என்னும் சிற்றூரில் ஒரு உழவர் குடும்பத்தில் 03.01.1937 ஆம் ஆண்டு கலைஞர் அரிகிருஷ்ணனின் தந்தை திரு. இராதாமணி பிறந்தார்.
அரிகிருஷ்ணனின் தந்தை இராதாமணியின் வாழ்க்கை:
இராதாமணியின் இளமைப்பருவம்
கரியில் மீசை வரைந்து கொண்டு நாடகம் நடித்துக் காட்டுதலும், தானே மாவு பூசி ஒப்பனை செய்து கொண்டு திரைப்படக் காட்சிகளைப் பாடி, ஆடி நிகழ்த்திக் காட்டுவதுமாய் இராதாமணியின் இளமைப் பருவம் இருந்தது.
இராதாமணி நோய்வாய்ப்படல்
இத்தகைய சூழலில் இராதாமணிக்கு இளமைப் பருவத்திலேயே தொழுநோய் வந்தது. இதனால் தமது ஊர் மக்களாலும், உறவினர்களாலும் ஒதுக்கப்பட்டார். மனம் வெறுத்து அவருக்கு இருந்த நிலங்களைக் குறைந்த விலைக்கு விற்று விட்டு வானதெரியன் பட்டினம் சிற்றூரை விட்டு வெளியேறினார்.
இசைத் தொழில்
அவருடைய உடல் இருந்த சூழலில் எங்கும் சென்று உழைக்க முடியாத நிலையில், ஊர் அருகே இருந்த ‘டூரிங் டாக்கீஸ்’ வாசலில் அமர்ந்து கொண்டு சினிமாப் பாடல்களைப் பாடினார். இதனைக் கேட்ட மக்கள் அவரது சூழலை எண்ணி அவருடைய பாடலுக்காகக் காசு கொடுத்தனர். அவரால் தன்னால் எந்த வேலையும் செய்ய முடியாத சூழலில் பாடுதலையே தொழிலாகச் செய்யலாம் என எண்ணினார். எனவே பாடல் பாடுவதையே தன் தொழிலாக்கிக் கொண்டு அவர் பயணத்தைத் தொடர்ந்தார்.
சரோஜா அம்மையார் அறிமுகம்
திரை இசைப்பாடல்களைப் பாடிக்கொண்டு ஊர் ஊராகப் பயணப்பட்டுக் கொண்டு திரு.இராதாமணி முறம் கட்டி விற்கும் நாடோடிக் குழுவினரைச் சந்தித்தார். அவரது இயலாமையைக் கண்ட அவர்கள் தங்களோடு இருந்த பெண் சரோஜாவை அவருக்குத் துணையாக விட்டுச் சென்றனர்.
காரைக்கால் வட்டத்தில் பேராளம் சிற்றூரைச் சேர்ந்த சரோஜா தந்தையை இழந்தவர். நோய்வாய்ப்பட்ட தாயோடு மருத்துவமனையில் அவர் தம்பி, தங்கையையும் விட்டு முறம் விற்கும் கூட்டத்தோடு சேர்ந்து அவர்களோடு முறம் விற்று, அதில் வரும் வருவாயைக் கொண்டு தாயைக் கவனித்து வந்தார். கலைஞர் இராதாமணிக்குப் பேருதவியாக இருந்தார். அதே நேரத்தில் மருத்துவமனையில் இருந்த தாயை அழைத்துக் கொண்டு தங்கையையும். தம்பியையும் தன்னோடு சேர்த்துக் கொண்டு இராதாமணிக்கு உதவியாக இருந்து வந்தார்.
நோய் தீர்தல்
வேலூர் மாவட்டம் சென்ற இவர்கள் அங்கு உள்ள கரிகிரி தொழு நோய் மருத்துவமனையில் மருத்துவம் பார்த்துக்கொள்ளத் தொடங்கினார். இதன் விளைவாக இவரது தொழுநோய் நீங்கியது. கை விரல்களில் பாதியை இழந்த இராதாமணிக்குக் குரலும் மாறுபட்டது. அவரது குரல் நடிகர் எம்.ஆர்.ராதாவின் குரலோடு ஒத்திருந்ததாலும் அவரது தொழுநோய் நீங்கிய உடல் ‘இரத்தக் கண்ணீர்’ எம்.ஆர்.ராதாவைக் கண் முன் கொண்டு வரும் நிலை இருந்ததாலும் மக்கள் நடுவே அவரது நடிப்புக்கும். பாடலுக்கும் குரலுக்கும் நல்ல வரவேற்பு இருந்தது. அவரைக் கண்ட மக்கள் ‘டூப்ளிகேட்’எம்.ஆர்.ராதா என அழைத்தனர்.
திருமணம்
நோய் நீங்கிய இராதாமணி தனக்கு உதவியாக இருந்த பெண் சரோஜாவை மணந்து கொண்டார். பின்னர் சரோஜாவின் தங்கைக்கும், தம்பிக்கும் திருமணம் செய்து வைத்தார். மணவாழ்வில் அரிகிருஷ்ணன் முதலாக நான்கு ஆண் பிள்ளைகளும், ஆறு பெண் பிள்ளைகளும் பிறந்தனர். அரிகிருஷ்ணன் பிறந்த பின்னர் இவரது தாய், கலை நிகழ்ச்சிகளில் பங்கு கொள்வதைத் தவிர்த்துக் கொண்டார்.
சென்னைக்கு வருகை
1955-இல் சென்னை வியாசர்பாடியில் கலைஞர் இராதாமணியின் குடும்பம் குடியேறியது. இதன் விளைவாக சென்னையைச் சுற்றியுள்ள இடங்களில் நிகழ்ச்சிகளை நிகழ்த்தினர். இதன் பயனாக மக்களிடையே நல்ல பெயர் பெற்றனர். இத்தகைய சூழலில் பாடலாசிரியர் மதுரை திரு. டி.வி. பச்சையப்பனின் அறிமுகமும், பாண்டிச்சேரி பானையிசைக் கலைஞர் திரு. சிவஞானத்தின் அறிமுகமும் கலைஞர் இராதாமணிக்குக் கிடைத்தது. இதன் விளைவாக கலைஞர் இராதாமணியின் கலை நிகழ்ச்சி வலுப்பெற்று மக்களிடையே பரவியது.
மதுரை டி.வி. பச்சையப்பன்
மதுரையைச் சேர்ந்த பச்சையப்பன் கல்வி அறிவு பெற்றவராக இருந்தார். இவரது நட்பு சென்னைக்கு வந்ததால் இராதாமணிக்குக் கிடைத்தது. இராதாமணி பாடிய பாடல்கள் அனைத்தும் மதுரை டி.வி.பச்சையப்பனுடையவையே. இவரது திரையிசைப் பாடல்களில் ஒன்று;
காட பிடிப்போம் கௌதாரி பிடிப்போம்.
காக்கா பிடிக்க மாட்டோம்.
சீட்டி அடிப்போம், தெம்மாங்கு படிப்போம்
டேக்கா கொடுக்கமாட்டோம்.
பல்லாவரம் பஸ் ஸ்டாண்டு எங்க ஊருங்க
பாண்டி பஜாரு தங்குமிடங்க.
எல்லா ஊரையும் சுத்தி வந்தோங்க
எங்க சரக்குக்கு ஏகப்பட்ட கிராக்கிங்க.
என்ற திரை இசைப்பாடல் மக்களை அடைந்த மதுரை டி.வி.பச்சையப்பனின் பாடலாகும்.
பானையிசைக் கலைஞர் பாண்டிச்சேரி சிவஞானம்
பானையிசைக்கருவியை வடிவமைத்தவர் பாண்டிச்சேரி சிவஞானம் என்பவராவார். பாண்டிச்சேரி கோமட்டி குளத்தில் டாக்டர் அம்பேத்கார் தெருவில் ஒரு ஏழை தலித் குடும்பத்தில் பிறந்தார் சிவஞானம். இவருக்கு குழந்தைப் பருவத்திலிருந்தே இசை இயல்பான ஒன்றாக அமைந்தது.
குழந்தைப் பருவத்திலேயே பாத்திரங்களைத் தட்டித் தட்டி அதில் எழும் ஓசைகளைக் கேட்டு மகிழ்ந்தார். அதன் விளைவாக எல்லாப் பொருளிலும் இசையை எதிர்பார்த்தார். இவர் வாழ்ந்தது சிற்றூர் என்பதால் மாட்டுத் தோல் எளிமையாகக் கிடைத்தது.
பானையிசைக் கருவி உருவாக்கம்
கலைஞர் அரிகிருஷ்ணனிடம் இருக்கும் பானையிசைக் கருவி. இன்றைய நிலையை அடைய பல மாற்றங்களைப் பெற்று வந்துள்ளது.
கருவியின் முதல் நிலை
தன்னிடம் இருக்கும் பொருட்களிலெல்லாம் மாட்டுத் தோலை பொருத்திப் பார்ப்பது சிவஞானத்துக்கு வழக்கமானது. ஒருமுறை பிஸ்கெட் டப்பாவில் பொருத்தி, இசைக்கருவி கண்டுபிடித்த மகிழ்ச்சி அடைந்தார். இம்முயற்சியைத் தொடர்ந்து செய்ய பிஸ்கெட் டப்பாவில் தோல் கட்டி தொடர்ந்து இசைக்கத் தொடங்கினார்.
கருவியின் இரண்டாம் நிலை
இசைக் கருவி கண்டுபிடிக்கும் அவசரத்தில் ஒருமுறை பானையின் வாயில் தோலைக்கட்டி வாசித்தார். இது புதிய இசைக்குள்ளும் புதிய புதிய படிமலர்ச்சிகளுக்குள்ளும் இவரை அழைத்துச் செல்லவே, பானையிசைக் கருவியைத் தொடர்ந்து பயன்படுத்தத் தொடங்கினார்.
கருவியின் மூன்றாம் நிலை
பானையின் வாய்ப்புறத்தில் மட்டுமே தோலைக் கட்டி இசைத்தவர் பானையின் பின் பக்கமும் துளையிட்டு அதிலும் தோல் போர்த்தி இசைத்ததால் அது மிருதங்கத்தின் உருவத்தையும் தபேலாவின் இசையையும் கொடுத்தது. இவ்வாறாக; பானையிசைக் கருவியோடு சென்னை வந்த சிவஞானம் கலைஞர் என்.ஆர்.இராதாமணியைச் சந்தித்து அவருடன் சேர்ந்து கொண்டார்.


இருவரின் இசை நிகழ்ச்சிகள்
சென்னையில் மக்களிடையே புகழ் பெற்று வந்த கலைஞர் இராதாமணியை தி.க.விலிருந்து வெளியேறிய தி.மு.க.வினர் கண்டனர். பின்னர் தி.மு.க.வின் கொள்கைப் பாடல்களைப் பாட அழைத்தனர். இதன் விளைவாகக் கலைஞர் இராதாமணி தி.மு.க.வின் கொள்கைகளைப் பரப்பும் கட்சிப் பொறுப்பாளரானார். அத்தகைய சூழலில் மதுரை டி.வி.பச்சையப்பனின் பாடல்கள் மக்கள் நடுவே விழிப்புணர்வை ஏற்படுத்தின. கலைஞர் இராதாமணி அவர் மனைவி சரோஜாவுடன் சிவஞானத்தின் இசையில் பாடிய பாடல்கள் புகழ் பெற்றன.
போட்டிப் பாடல்
ஆண் : மாட்டிகிட்டு இருக்குதடி மானங்கெட்ட ரெண்டு காள – 2
மண்ட உடைஞ்ச காள கண்ணம்மா – இது
மாட்டு கயிர அத்து திரியுது பொன்னம்மா.
பெண் : ஆம்பூர்த் தேர்தலிலே ஆட்டங் கண்ட காள மாடு – 2
அடுத்து வரும் தேர்தலிலே கண்ணையா இது
அம்புட்டும் குப்புற சாயப்போது பொன்னையா.
போன்ற பாடல்கள் மக்கள் நடுவே பாடியதன் விளைவாக கலைஞர் இராதாமணியும் அவரது குழுவும் மக்கள் நடுவே புகழ் பெற்றனர்.
சென்னையில் கவனிப்புக்குள்ளாதலும், தி.மு.க.கட்சியில் வேலையும்
தி.மு.க.வின் கொள்கைகளை எடுத்துக் கூறுவதாக அமைந்த பாடல்கள் மக்களை தி.மு.க. மீது ஆர்வம் காட்டத் தூண்டியது. அக்கால அரசியல் சூழலில் சென்னை யானைக் கவுனியில் அரசியல் கூட்டங்களில், தி.க.விற்காக எம்.ஆர்.இராதாவும், காங்கிரசுக்காக சிவாஜி கணேசனும், தி.மு.க.விற்காக கலைஞர் இராதாமணியும் உழைத்தமை அக்கால அரசியல் சூழலைச் சூடுபடுத்தின. இவரது தி.மு.க. ஆதரவுப் பாடல்கள்.
உண்மை எது? பொய் எதுன்னு உணர்ந்து பாருங்க
உதய சூரியன் சின்னத்துல் ஓட்டுப் போடுங்க
போன்ற பாடல்கள் தி.மு.க.விற்கு வலிமை சேர்த்தன.
அண்ணாவின் மறைவு குறித்த பாடல்
அறிஞர் அண்ணாவின் மரணத்தின் போது அவருக்காக பச்சையப்பன் பாடலில், சிவஞானம் இசையில் இராதாமணி பாடிய இப்பாடல் மக்களை உருக வைத்தது.
அன்பான தோழர்களே ஆர்வமிக்க பொது மக்களே
அண்ணாவுடைய மறைவு கீதம் அனைவருமே கேளுங்க
அண்ணா வாழ்க அண்ணா வாழ்க
அண்ணா வாழ்க என்றே சொன்னோம்
அண்ணாவைத் தான் கால தேவன்
அபகரிக்கக் கொடுத்துவிட்டோம்
என்ற பாடல் குறிப்பிடத்தக்க ஒன்றாகும்.
அ.தி.மு.க.வில் இராதாமணி
1972 ஆம் ஆண்டு தி.மு.க.விலிருந்து வெளியேறிய எம்.ஜி.ராமச்சந்திரன் அவரது கட்சியான அ.தி.மு.க.வின் கட்சியையும் கொள்கைகளையும் மக்கள் நடுவே கொண்டு செல்ல வேண்டும் என எண்ணி கலைஞர்களை நாடினார். அப்போது கலைஞர் இராதாமணியை அழைத்தார். இராதாமணியும் எம்.ஜி.ஆரோடு தி.முக.விலிருந்து வெளியேறி அ.தி.மு.க.விற்குச் சென்றார். அப்போது மாறிய இவரது பாடல்கள் மக்கள் நடுவே அ.தி.மு.க.வை கொண்டு சேர்க்க பெரும் பங்கு வகித்தன.
அ.தி.மு.க.வின் கொள்கைகளுக்காகத் திரைப்படப் பாடலான ‘என்னடி ராக்கம்மா’ என்னும் பாடலின் மெட்டில் திரு.பச்சையப்பனின் பாடலை இராதாமணி பாட, பெரும் வரவேற்பு பெற்றது.
ஓ என்னங்க அண்ணாத்த எம் பாட்ட கேளுங்க
எம்.ஜி.ஆர். பாடல்தானுங்க
நம் கழகத்தின் சிறப்பும் கடமையின் பொறுப்பும்
புரட்சித் தலைவர் தானுங்க. (1)
அஞ்சாத நெஞ்சம் கொண்ட எம்.ஜி.ஆர் – அவர்
அறிஞரின் வழி நடப்பார்.
அவர் வழியில் நடக்கின்ற வீரர்களும் – என்றும்
அஞ்சாது நிமிர்ந்து நிற்பார்.
எம்.ஜி.ஆர் கொள்கைகளைப் பார்த்தாலும் – அது
அறிஞரின் கொள்கையடா
நம் ஊக்கம், நம் உழைப்பு, நம் ஒட்டு இது எல்லாமே
எம்.ஜி.ஆருக்குத் தேவைதானடா.
இத்தகைய பாடல்கள் அ.தி.மு.க.வை மக்களிடையே கொண்டு செல்ல பெரும் பாலமாக அமைந்தன.
திருக்கழுக்குன்றத்திற்குப் பயணம்
அக்கால அரசியல் சூழலில் எம்.ஜி.ஆருக்கு ஒரே தேர்தலில்தான் தன் கலைச் சேவையைச் செய்தார். இதன் விளைவாக இராதாமணிக்கு சிக்கல்கள் ஏராளமாக வந்தன. அவை இராதாமணியின் உயிரைப் போக்கும் நிலைக்கு வந்ததால், எம்.ஜி.ஆர் இராதாமணிக்கு ஓய்வு கொடுத்து, ஒரு குறிப்பிட்ட தொகையையும் கொடுத்து 1975 ஆம் ஆண்டு ஒரு நாள் இரவு திருக்கழுக்குன்றத்துக்கு இராதாமணி குடும்பத்தை அனுப்பி வைத்தார்.
சித்த மருத்துவராதல்
திருக்கழுக்குன்றம் வந்த இராதாமணி பாடல் தொழிலை விட்டு அங்குக் கிடைத்த மூலிகைகளில் தான் அறிந்த வைத்திய முறைகளைக் கொண்டு பாடகர் இராதாமணி வைத்தியர் இராதாமணி ஆனார். இவ்வாறு வைத்தியராய், பாடகராய் இருந்த கலைஞர் இராதாமணி 1993 ஆம் ஆண்டு மறைந்தார்.
கலைஞர் அரிகிருஷ்ணனின் வாழ்க்கை
கலைஞர் அரிகிருஷ்ணனின் குழந்தைப் பருவம்
நாட்டுப்புறக் கலைஞர், பாடகர், சித்த மருத்துவர் திரு. என்.ஆர். இராதாமணிக்கும் திருமதி. என். ஆர். சரோஜா அவர்களுக்கும் 1963 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 17 ஆம் தேதி (சித்திரை மாதம் 4ஆம் தேதி) சென்னை எழும்பூர் பொது மருத்துவமனையில் அரிகிருஷ்ணன் முதல் மகனாகப் பிறந்தார்.
தந்தையும் தாயும் இசைத் துறையைச் சார்ந்த கலைஞர்களாக இருந்ததால் பள்ளிக்கூடம் போகும் வரை அரிகிருஷ்ணான் தமது பெற்றோருடன் கலைநிகழ்ச்சிகளின் போது உடனிருந்தார். இவரது பெற்றோர் வியாசர்பாடியில் வசித்துக் கொண்டு சென்னையைச் சுற்றியுள்ள இடங்களுக்குக் கலை நிகழ்ச்சி நிகழ்த்தியதால் குழந்தைப் பருவத்தில் இருந்தே அரிகிருஷ்ணனுக்கு பாடல், இசை, இசைக் கருவிகள் மீதான ஆர்வம் ஏற்பட்டது.
பள்ளிப்பருவம்
கலைஞர் அரிகிருஷ்ணன் பள்ளி செல்லும் அகவை அடைந்த போது அவரது பெற்றோர், கும்பகோணத்தில் உள்ள முத்துப் பிள்ளை மண்டபம் என்னும் ஊரில் உள்ள கிறித்தவக் கல்வி நிறுவனத்தால் நடத்தப்பட்டு வந்த விடுதியுடன் சேர்ந்த பள்ளிக் கூடத்தில் சேர்த்தனர். மூன்றாம் வகுப்பு வரை அங்கு பயின்று வந்த அரிகிருஷ்ணன் தன்னைத் தன் அம்மா, பார்க்க வராததால் விடுதியில் இருந்து தப்பி வீட்டிற்கு வந்துவிட்டார். அதோடு இவரது பள்ளிப்படிப்பு முடிந்தாலும், அவ்வப்போது வியாசர்பாடியில் உள்ள பள்ளிகளில் இவரது முறைசாராக் கல்வி தொடர்ந்தது.
கலைஞர் அரிகிருஷ்ணனின் ஆசிரியர்கள்
1975ஆம் ஆண்டு எம்.ஜி.ஆரால் திருக்கழுக்குன்றம் அனுப்பப்பட்ட தந்தை இராதாமணியிடம் வளர்ந்த அரிகிருஷ்ணன் தமது தந்தையிடம் மருத்துவத்தையும், கலையையும் கற்று வளர்ந்தார்.
அரிகிருஷ்ணன் குழந்தைப் பருவத்தில் இருந்தே தந்தையுடன் இருந்ததால், அப்பா இராதாமணியிடம் பாடல் பாடுவதற்கும், தந்தையுடன் இருந்த பாடலாசிரியர் மதுரை டி.வி.பச்சையப்பனிடம் எழுதுவதற்கும், பானையிசைக்கலைஞர் பாண்டிச்சேரி ஆசிரியர் சிவஞானத்திடம் பானையிசைக்கருவியில் தாளம் வாசிப்பதற்கும் கற்றுக் கொண்டார். பானையிசைக் கருவி வாசிக்கக் கற்றுக் கொண்டதோடு டிகிரி கட்டை, செரட்டை போன்ற கருவிகளையும் இசைக்கக் கற்றுக் கொண்டார்.

தந்தை இராதாமணியிடம் பாடல்கள் பாடுவதைப் பயின்றதோடு மக்களைக் கவருவதையும் அரிகிருஷ்ணன் பயின்றுகொண்டார்.
அரிகிருஷ்ணன் காதலால் ஊரை விட்டு வெளியேறல்
திருக்கழுக்குன்றத்தில் தன் தந்தையுடன் வாழ்ந்து வந்த அரிகிருஷ்ணன் அதே ஊரைச் சேர்ந்த காமாட்சி என்பவரைக் காதலித்தார். இவர்கள் காதல் வளர்ந்து, திருமணம் செய்யப் பெண் கேட்கச் சென்ற போது இருவரும் நாயக்கர் ஜாதியைச் சேர்ந்தவராக இருந்தாலும் பொருளியல். ஏற்றத்தாழ்வால் பெண் கொடுக்க மறுத்துவிட்டனர். இத்தகைய பெரும் எதிர்ப்புகளுக்கிடையே 15.06.1983 அன்று அரிகிருஷ்ணன் காமாட்சி இணையரின் திருமணம் நடைபெற்றது.
தனிக்குடும்பமும், தாம்பரத்தில் குடியேற்றமும்
இவர்களின் திருமணத்திற்கு எதிர்ப்பு இருந்ததால் திருமணத்திற்குப் பின்பு திருக்கழுக்குன்றத்தில் வாழ்வது இயலாமல் போனது, இவரது தந்தை இராதாமணியின் அறிவுரையால் 1983ஆம் ஆண்டு திருக்கழுக்குன்றத்திலிருந்து இவரது இணையர் காமாட்சியுடன் கன்னியம்மாள் பாட்டி உதவியுடன் மேற்கு தாம்பரம் குளக்கரையில் குடியேறினார்.
கலை தொழிலான சூழல்
தந்தையோடு இருந்த காலத்தில் அவர் செய்யும் மருத்துவச் சேவையைக் கூர்ந்து கவனித்து வந்த அரிகிருஷ்ணன் மருத்துவத்தைத் தனது தொழிலாக்கிக் கொண்டார். மருத்துவப் பணி செய்யும் முன்னர். மக்களைக் கவரும் வண்ணம் பானையிசைக் கருவியை இசைக்கும் இவரது குருவான சிவஞானத்தைத் தனது தந்தையின் அறிவுரைபடி தன்னோடு வைத்துக் கொண்டார். இவ்வாறாக இவரது கலையும் மருத்துவப்பணியும் சார்ந்த தொழில் தொடங்கியது. இது இவரது தனிக்குடும்பத்துக்கு உதவியாக அமைந்தது.
மருத்துவத் தொழிலுக்காய் கலை
மக்களைக் ஈர்ப்பதற்காக பானையிசையுடன் பாடல்களைப் பாடும்போது மக்கள் கூடுவர். அப்போது இவர் வைத்திருக்கும் சித்த மருத்துவ மருந்துகளை மக்களுக்கு அறிமுகம் செய்து வழங்குவார். இந்த மருந்துகள் விலை குறைவாகவும், ஏழை எளிய மக்களுக்கு ஏற்றதாகவும் அமைந்தன.
மருத்துவப் பங்களிப்பும், பட்டமும்
ஏழை மக்களுக்காக மட்டுமே தன்னை ஒப்படைத்துக் கொண்டு எளிமையான மருத்துவச் பணியைச் செய்து வரும் அரிகிருஷ்ணனைப் பாராட்டி வேலூர் மருத்துவர் டாக்டர் அர்ச்சுனன் அரிகிருஷ்ணனுக்கு ‘மருத்துவச் சுடர்’ என்னும் பட்டத்தை வழங்கி பெருமிதம் செய்தார்.
சென்னை சிந்தாதிரிப்பேட்டையில், தமிழகம் முழுவதும் உள்ள 25000 சித்த மருத்துவர்களைக் கொண்ட “மருத்துவப் பேரணிச் சங்கத்தின்” உறுப்பினராக இருந்து, சங்கப் பணிகளையும் செய்து வருகிறார். பாடகரும், இசைக் கலைஞரும், சித்த வைத்தியருமாகிய அரிகிருஷ்ணன்.

முடிவுரை அரிகிருஷ்ணன் தன் சித்த வைத்திய முறையை தந்தையிடமும், பாடலைப் பச்சையப்பனிடமும், இசைக்கருவி இசைப்பதைச் சிவஞானத்திடமும் கற்றுக் கொண்டு இன்று மூன்று தொழிலையும் ஒருங்கே செய்யும் கலைஞராகத் திகழ்ந்து வந்தார். காலப்போக்கில்(2005) இவரது கலைநிகழ்ச்சிகளுக்கும் மருந்துகளுக்கும் மக்கள் வரவேற்பு குறைந்ததால் தமது சொந்த ஊரான திருக்கழுக்குன்றத்துக்கு பெயர்ந்தார். இன்றைய நிலையில் பானையிசைக்கருவி வாசிக்கப்படாமல் இருக்கிறது எனலாம்.

Leave a comment