வாசிப்பனுபவம்
ஒரு முதுகலை மாணவர் பார்வையில் கீதாரி நாவல்
மு. தனுஷ்,
முதுகலை இரண்டாமாண்டு
புதுக்கல்லூரி – சென்னை -14.
dhanushmurali12@gmail. com

நாவல்: கீதாரி
ஆசிரியர் : சு. தமிழ்ச்செல்வி
பதிப்பகம் : நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்
சமீபத்தில் சு. தமிழ்ச்செல்வி அவர்கள் எழுதிய கீதாரி என்னும் நாவலை நண்பரிடம் இருந்து வாங்கி வாசித்தேன். இந்த நாவலை வாசிக்கும் முன் சில எழுத்தாளர்களின் நாவலையும் வாசித்திருந்தேன், ஆனால் அதில் எந்த நாவலும் ஏற்படுத்தாத ஒரு தாக்கத்தை இந்த கீதாரி என்னும் நாவல் என் மனதில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. வாசிப்பாளரை எந்த இடத்திலும் சலிப்படையச் செய்யாமல் ஒரு திரைப்படத்திற்குள் செல்வது போல் அழைத்துச் சென்று இறுதியில் அழ வைக்கும் அளவிற்கு இவரின் எழுத்துத் திறமையும், மொழி நடையும் அமைந்திருந்தன. கதைக்களத்தையும் சிறப்பாக அமைத்துள்ளார்.
தங்கள் சொந்த ஊரை விட்டு விட்டு நாடோடி வாழ்க்கையை மேற்கொண்டு, செல்லும் இடத்தில் கிடையமைத்து தங்களுக்குத் தெரிந்த மேய்ச்சல் தொழிலையும், ஆடு போடும் புழுக்கையையும் நம்பித்தான் வாழ்க்கையை வாழ்கிறார்கள் என்று அவர்களின் அவல நிலையை கதை போகும் போக்கில் காட்சிப்படுத்துகிறார். தான் பசியோடு இருந்தாலும் தாங்கள் வளர்க்கும் ஆட்டுக்குட்டிகள் பசியோடு இருக்கக் கூடாது என்ற நல்ல மனநிலையும், மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணிற்கு பிரசவம் பார்த்து, பிறந்த இரண்டு பெண் பிள்ளைகளையும் யாரும் வளர்க்க முன்வராத நிலையில் தாமே வளர்ப்போம் என்று வளர்க்கும் கணவன் மனைவியின் கருணை உள்ளத்தையும் காட்டுகிறார் நாவலாசிரியர்.
சில வருடங்களுக்குப் பிறகு ஒரு பெண் குழந்தையை வேறொருவன் தத்தெடுக்கிறான். அங்கு சென்ற அந்த குழந்தை அவனின் இரு மனைவிகளிடம் சிக்கித் தவிக்கிறது. ஒருவனுடன் சிரித்து பேசியதற்காக தான் பெற்ற மகளையே அப்பனும் மகனும் சேர்ந்து அடித்து கொள்ளும் இரக்கமற்றவர்களின் மனநிலையையும், வயதுக்கு வந்த பெண் தலையில் தண்ணீர் ஊற்றும் வரை எந்த ஆண்களையும் பார்க்கக் கூடாது என்ற நிலைமையும், “வேண்டாம் வேண்டாம் நீ கைய வச்சிடாத கெட்டுப் பொயிரும்” என்று முகம் சுளிக்க வைக்கும் வார்த்தைகள் போன்றவற்றின் மூலம் இந்த சமூகத்தின் முட்டாள் தனத்தை காட்டுகிறார் நாவலாசிரியர். “இந்த பூவை எல்லாம் பொறுக்கி வந்தது நான் தானே அப்போது கெடாத பூ இப்போது மட்டும் கெட்டுவிடுமா?” என்ற சப்தமில்லாமல் முனங்குவது இந்த சமூகத்திற்கே முழங்குவது போல் உள்ளது.
“ஒந் தங்கச்சிய வளர்த்த சித்தப்பாவே அவளை கட்டிக்கிட்டப்ப உன்னை எடுத்து வளர்த்த நான் உன்னை தொடக்கூடாதா” என்று தொட்டான், சிதைத்தான், புதைத்தான். அப்பாவை காணாதவள் வளர்த்தவனை அப்பா என்று அழைத்தவள். யாருமே இல்லாதவள் இனி யாரிடம் போவாள், படைத்த கடவுளிடமே போவோம் என்று தூக்கில் தொங்கினாள். இரு வேறு பிள்ளைகளை தத்தெடுத்து வளர்த்த ராமுக்கீதாரி இருவருக்கும் திருமணம் செய்து வைக்கிறார், திருமணமான சில வருடங்களிலேயே இருவரும் பிரியும் நிலை ஏற்படுகிறது இல்லை ஏற்படுத்துகிறார்கள். நாடோடிகளாகத் திரியும் கீதாரி தன் பேரப்பிள்ளைகள் இருவரையும் பள்ளிக்கூடத்தில் சேர்த்து கல்வியின் முக்கியத்துவத்தை உணர்த்துகிறார்.
கிடையமைத்ததற்கான கூலி கேட்ட கீதாரிக்கு, கொல்லைக்காரனின் பதில், “யோவ் கெடக்கூலி கெடக்கூலிங்கிறியே, ஓங் ஆடுங்க அத்தனையும் எங்கய்ய மேஞ்சிச்சி? எங்க ஊருல எங்க கொல்லயில கெடக்குற பில்லத்தானே மேஞ்சிச்சி? எங்க கொல்ல பில்லயே மேஞ்சிட்டு எங்க கொல்லயில போடுற புளுக்கக்கி நாங்க எதுக்குய்யா பணம் குடுக்கணும்?”என்று கொல்லைக்காரனின் அதிகார பேச்சும், உயரத்தில் இருப்பவர்கள் என்ன வேண்டுமானாலும் பேசலாம் என்ற ஆணவ எண்ணமும் மற்றும் ஏழையின் உழைப்பை எப்படி வேண்டுமானாலும் சுரண்டலாம், யாரும் எதிர்த்து கேள்வி கேட்க முடியாது என்ற அதிகாரப் போக்கும் இந்தப் பகுதியில் காட்சிப்படுத்தப்படுகிறது.
சொந்தமாக ஆட்டுக்கிடை போட்ட கீதாரி கடைசியில் ஆடுகள் இல்லாமல் பிறரிடத்தில் வாடகைக்கு ஆடுகள் வாங்கி கிடைப்போட்டு உயிர் வாழும் நிலையும் இடையர்களுக்கு மேய்ச்சல் தொழிலைத்தவிர வேறு என்ன தொழில் தெரியும் என்ற பரிதாப நிலையைக் காட்டுகிறது. கணவனோடு வாழ மாட்டேன் என்று வந்தவள் பாம்பு கடித்து உயிரை விடுகிறாள். அவள் பெற்ற குழந்தையை யாரிடமும் கொடுக்காமல் தன் தோளில் போட்டு தட்டிக் கொடுக்கிறார் கீதாரி. கீதாரியின் வாழ்நாள் காலம் இன்னும் நிறையநாள் பாக்கி இருக்கிறது போல.
ஒவ்வொரு கதாபாத்திரமும் ஒரு தாக்கத்தை ஏற்படுத்துகிறது இருப்பினும்குறிப்பாக கரிச்சா,சிவப்பி,ராமுக்கிதாரி, இருளாயி,வெள்ளைச்சாமிமற்றும்முத்தம்மாள் போன்ற பாத்திரங்கள் மனதை தொடுவது மட்டுமல்லாமல் அவர்களுடனே வாழச் செய்கிறது. கதாபாத்திரங்கள் ஏராளமாக இருந்தாலும் அவர்களைப் புரிந்து கொள்வதில் மனம் தாராளமாக தான் உள்ளது.
இந்த நாவல் ஆயர்களின் அவல நிலைமையும் அவர்கள் சந்திக்கும் சிக்கல்களையும் சிரமங்களையும் அவர்களுடனே நாமும் சென்று நேரில் பார்ப்பது போலவும்,செம்மறி ஆடுகளுக்குச் சென்ற வழியில் மீண்டும் வரத் தெரியாது, அப்படி வழி தவறிய ஆடுகளை வெள்ளாடுகள் தான் கிடைக்கு அழைத்து வரும். அதுபோல வழி தவறிய வாசிப்பாளர்களை வாசிப்பு என்னும் கிடைக்கு இந்த நாவல் அழைத்து வருவது போல் படைத்திருக்கிறார் நாவலாசிரியர் சு. தமிழ்ச்செல்வி.


Leave a comment