சிறுகதை
காணாமல் போனவர்கள்
க. அம்சப்ரியா

பெயர் ; தெய்வாணை
வயது. : 60
நாள். 10. 9. 2025
காணாமல் போன அன்று வெளிர்நீல நிறச் சேலையும் அதே வண்ணத்தில் ரவிக்கையும் அணிந்திருந்தார். கண்டுபிடித்துத் தருபவர்களுக்குத் தக்க சன்மானம் வழங்கப்படும்.
– பேருந்து வருவதற்கு இன்னும் கூடுதல் நேரம் இருக்கிறது.
பேருந்து நிலையத்தின் சுவர்களில் துன்பப்பட்டுக் கொண்டிருந்தவர்களின் நிலைமையை வாசித்துக் கொண்டிருந்தான். இன்று மழை தூறிக் கொண்டிருக்கிறது. இரவு நல்ல மழை. பேருந்து நிலையத்தின் வெளியே கூடுதலாகத் துர்நாற்றம் தாங்கிக் கொள்ள முடியாத அளவு இருந்தது. மழை பெய்ததால் பேருந்து நிலையத்தின் அருகே இருக்கிற சாக்கடை உடைத்துக்கொண்டு வெளியே வந்துவிடுகிறது. அந்தத் தெருவே கழிவுகள் மண்டி வயிற்றைக் கலக்கிக் கொண்டு, வாந்தி வருவது போல இருக்கிறது. ஆனாலும் சகித்துக் கொண்டு கடைக்காரர்கள் கடையைத் திறந்து வைத்திருந்தார்கள். வேறு வழியொன்றும் இல்லை.
அந்தப் பலகாரக் கடையில் ஈக்கள் மொய்த்து கொண்டிருக்கும்போது எப்படி அதை வாங்க வருகிறார்கள் என்று யோசித்தபடி பேருந்து நிலையத்தின் மதிற்சுவரைக் கவனித்த போதுதான் இந்தக் காணவில்லை சுவரொட்டி மனதை இழுத்து பிடித்து நிறுத்தியது. வயது 60 என்று கூறினாலும் முகத்தோற்றம் இன்னும் 60 ஆகவில்லை என்று கூறியபடி இருந்தது.
ஒருவேளை பழைய படமாகவும் இருக்கலாமோ. . ? மனசுக்குள் ஏதோ ஒரு சஞ்சலம். குறுகுறுப்பு. வேணுவின் உடலுக்குள் நடுக்கம். யாரோ ஒருவரின் காணாமல் போனவரைப் பற்றிய அறிவிப்பைப் பார்த்து தன் மனம் ஏன் இப்படிப் படபடக்கிறது? இதே சுவரொட்டியின் அருகேயே விபத்தில் இறந்தவர்களுக்கான கண்ணீர் அஞ்சலிகளும் இருந்தன. இந்தச் சுவரொட்டியில் கண்களும் மனதும் ஒட்டிக் கொண்டு, விலக மறுக்கிறது. முகத்தில் லேசான வியர்வை அரும்பத் துவங்கியிருந்தது. கையில் இருந்த கைகுட்டையால் முகத்தைத் துடைத்துக் கொண்டான்.
மழை கூடுதலாகத் தூறத் துவங்கியிருந்தது. குளிரும் இருக்கிறது. இந்தக் குளிரையும் கடந்து ஏன் மனம் படபடக்க வேண்டும்? வியர்க்க வேண்டும்?
இந்த முகத்தை எங்கோ பார்த்தது போல் இருந்தது. எங்கோ பார்த்தது போல் என்றால் உறவுக்காரர்களில் யாராகவோ, நண்பர்களின் வீட்டுப் பெண்களின் முகமாகவோ, வேலை செய்கிற மளிகை கடைக்கு வந்து போகிறவர்களின் முகமாகவோ இல்லை. ஆனால் இப்படியான ஓர் இடத்தில் மனதுக்குள் வந்திடாத புதிய முகம்.
எப்படித் தனக்கு மிகவும் பரிச்சயமான முகமாக இருக்கும்? மறுபடியும் அந்த சுவரொட்டியை உற்றுப் பார்த்தான்.
லேசான சிரிப்பு. சிரிப்பு அல்ல புன்னகை. புரிந்து கொள்வதற்கு சொல்வதென்றால் புன்னகை முகம். திரை முகம் கே. ஆர். விஜயாவை நினைவூட்டியது.
ஒருவேளை இப்படியான முகங்கள் எங்கோ பார்த்தது போலவே இருக்கக் காரணம், தான் நிறையத் திரைப்படங்கள் பார்ப்பதாலோ, தொலைக்காட்சி தொடர்கள் பார்ப்பதாலோ, இருக்கலாம். எப்படி என்றாலும், தான் பழைய படங்களை பார்ப்பதில்லை. அதனால் அது கே ஆர் விஜயாவின் முகம் போல் என்று உறுதியாகவும் கூற முடியவில்லை. அம்மாவை அவரின் தோழிகள் இப்படிச் சொல்லி கேலி செய்து புன்னகைப்பது நினைவில் இருக்கிறது.
மூக்குத்தியில் முகம் வசீகரமாக இருந்தது. மூக்குத்தி அணிந்த பெண்களைச், சிறுமிகளை, வயதானவர்களை மறுபடியும் ஒருமுறை உற்றுப் பார்த்து ரசிப்பான். சிறிய வயதில் இருந்து இது பழகிப்போன ஒன்று.
ருக்குமணி டீச்சரைக் கூட இவனுக்கு மிகவும் பிடிக்கும். சிறிய அளவிலான கல் பதிக்கப்பட்ட மூக்குத்தி. சிரிக்கிற போது இன்னும் கொஞ்ச நேரம் பார்த்துக் கொண்டிருக்கத் தூண்டும். அம்மாவிடம் பிடித்ததும் மூக்குத்தி தான். அம்மாவிற்கும் கல் பதித்த சிறிய அளவிலான மூக்குத்திதான் பிடிக்கும். அதுதான் அம்மாவை எடுப்பான அழகாகக் காட்டும்
சுவரொட்டியில் இருப்பது ஒருவேளை அம்மாவோ ? அம்மா ஏன் இப்போதும் காணாமல் போக வேண்டும்? யாரிடமிருந்து காணாமல் போயிருப்பார்?
அம்மாவின் நினைவு இப்போது ஏன் வந்து தொலைக்கிறது? எப்போதும் யாராவது ஒருவரின் சாயல் நாம் பார்க்கிற ஒருவரில் தெரியும் என்று எங்கோ படித்த நினைவு.
ஒருவேளை அது மாதிரியாகவும் இருக்கலாம். கை தன்னிச்சையாக ஃபேண்ட் பாக்கெட்டில் இருந்த பர்சை எடுத்தது. உள்ளே பலவகையான கார்டுகள், துண்டு சீட்டுகளுக்கு மத்தியில் பல ஆண்டுகளுக்கு மேலாக மிகப் பத்திரமாக வைத்திருக்கிற அந்த புகைப்படத்தை வெளியே எடுத்தான்.
அம்மா வீட்டை விட்டு காணாமல் போவதற்கு ஒரு வாரத்திற்கு முன்பு அம்மா தன்னையும் அழைத்துக் கொண்டு பொள்ளாச்சியில் உள்ள ஸ்டுடியோவிற்குச் சென்றதும், அம்மா தன்னோடு படம் எடுத்ததும் மங்கலான நினைவில் இருக்கிறது. இருவரும் இணைந்து ஒரு படமும், அம்மா மட்டுமான சிறிய அளவிலான படமுமாக அப்போது கொடுத்தார்கள். அம்மா, தான் மட்டும் இருக்கிற படத்தைக் கொடுத்துப் பத்திரமாக வைத்துக் கொள் என்று கூறியது, இப்போதுதான் கூறியது போல் இருக்கிறது. அது வலி மிகுந்ததாக இருக்குமென அப்போது நினைக்கவில்லை. அம்மாவைப் பத்திரமாக வைத்திருக்கவில்லையோ? இல்லை , அம்மாதான் மகனைத் தொலைத்துவிட்டாரோ?
இப்போதும் அந்த ஸ்டுடியோ இருக்கிறது. இப்போது அந்தப் பாதை போக்குவரத்து நெரிசலான பாதையாகி விட்டது. எப்போது அந்தப் பக்கம் சென்றாலும் அம்மாவின் விரல்களைப் பற்றிக் கொண்டு ஸ்டுடியோவிற்குள் செல்வதைப் போன்றும், கேமராவிற்கு முன் உட்கார்ந்து படம் பிடித்துக் கொள்வது போலவும் நினைவுகள் வந்து போகும். எத்தனை துன்பங்கள் வந்தாலும் அம்மா தன்னை விட்டுப் போயிருக்கக் கூடாது என்று நினைக்கிற போதெல்லாம் கண்களில் பெருகும் கண்ணீரை எப்போதும் நிறுத்திக் கொள்ளவே முடியாத அளவு பெருக்கெடுக்கும்.
தேவையில்லாமல் அந்தப் பாதையின் வழியே எப்போதும் போகமாட்டான். அப்படி ஒரு வேளை போக நேர்ந்தால் கொஞ்ச நாட்கள் வாழ்வைத் தொலைத்த காயத்திலிருந்து சீழ் ஒழுகி கொண்டே இருக்கும்.
திரைப்படம், புத்தகங்கள், கோவில் என்று எந்த வகையான மருந்து போட்டாலும் அது எப்போதும் ஆறாத காயமாகவே தங்கி விட்டது.
அம்மாவிடமும் இப்படியான ஒரு புகைப்படம் இருக்குமோ? தன்னை எப்போதாவது நினைத்துக் கொள்வாரா? புகைப்படத்தையும் சுவரொட்டியில் உள்ள படத்தையும் மாறிமாறி பார்த்தான். அம்மாவின் சிறுவயது புகைப்படத்தில் இருக்கும் படத்திற்கும் சுவரொட்டியில் இருக்கும் படத்திற்கும் கொஞ்சம்தான் வித்தியாசம் தெரிவது போல் இருந்தது.
அம்மாவின் முகத்தைப் பார்த்து எத்தனையோ வருடங்கள் ஆகிவிட்டது. அப்போது இருந்த முகம் மாறி இருக்கவும் வாய்ப்புண்டு.
” சார். . . ஆனைமலை போற பஸ் எந்த பக்கம் நிற்கும். . . . ?
யாரோ ஒருவரின் வினாவில் திடுக்கிட்டு நினைவிற்கு வந்தான்.
அவசரமாகப் புகைப்படத்தைப் பர்சில் வைத்துப் பாக்கெட்டில் வைத்துக் கொண்டான்.
இப்படி எல்லாம் பேருந்து நிலையத்திற்குள் பர்சைத் திறந்து பார்த்துக் கொண்டிருந்தால் யாரேனும் அதைத் திருடி விடவும் வாய்ப்புண்டு என்று பலமுறை நண்பர்கள் எச்சரித்து இருக்கிறார்கள். பேருந்து ஏறுவதற்கு முன்பே பொருத்தமான பயணக்கட்டணத்தைத் தனியே எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும் என்பது அவர்கள் வாதம்.
ஒரு நிமிஷம் தன்னைச் சமன்படுத்திக் கொண்டான்.
” என்ன கேட்டீங்க. . . . ? “
தன்னை விட வயதில் மூத்தவர் சார் என்று அழைத்தது நெருடலாக இருந்தது.
” ஆனைமலை போற பஸ் எந்த பக்கம் நிற்கும்னு கேட்டேன் சார். . . “
” சாரெல்லாம் வேண்டாம். . . வாங்க இங்கிருந்து சொன்னா புரியாது. கொஞ்சம் தள்ளி வாங்க. . . . “
வேணுவின் கட்டளைக்குக் கட்டுப்பட்டு கூடவே வந்தார் பெரியவர்.
” அதோ அங்கே வடகோட்டில நிறைய பஸ் நிக்குது பாருங்க. அதுல கேட்டு ஏறுங்க. . . நீங்க ஆனைமலைதான் போகணுமா இல்ல. . . . ” வினாவை முடிக்கவில்லை.
” மாசாணியம்மன் கோவிலுக்குப் போகணும் தம்பி. . . மதுரையிலிருந்து வரேன். கொஞ்சம் எனக்காக இந்தப் பையைக் கையில் எடுத்துக்க முடியுமா ?பஸ் வரைக்கும் வந்தால் ரொம்ப புண்ணியமா போகும். . . . ” பெரியவரின் குரலில் முதுமையின் குழைவு.
“புண்ணியம் எல்லாம் வேண்டாம். . . வாங்க போகலாம். . “
பெரியவரின் பையைக் கையில் எடுத்துக் கொண்டான்.
” அவ்வளவு தூரத்திலிருந்து தனியாகவா வந்தீங்க?”
” தனியா என்ன தம்பி தனியா? பஸ்ல என்ன பயம் . . . ?
“அதுவும் சரிதானுங்கய்யா. . . இந்த வண்டி காளியாபுரம் வரைக்கும் போகும். . . கோவில் ஸ்டாப்னு சொல்லி இறங்கிக்குங்க. . “
பெரியவரின் பையைச் சீட்டின் அடியில் வைத்துவிட்டு கீழே இறங்கும்போதுதான் கவனித்தான்.
சிறிது நேரத்திற்கு முன் சுவரொட்டியில் பார்த்த முகம் போல ஒரு முகம். சாயம் வெளுத்த சேலை. களையிழந்து போன ஒரு பெண் சோர்வான வகையில் இறங்கும் கூட்டத்தின் பகுதியில் இருந்து ஏறிக்கொண்டிருந்தார். சட்டென்று பேருந்திற்குள் தன்னைத் திணித்துக் கொண்டான்.
இந்தப் பேருந்தில் இவர் எப்படி ?
அந்த முகம்தானா? இவரைத்தான் காணவில்லை என்று தேடுகிறார்களா? தன்னிடம் இருக்கும் படம், சுவரொட்டியில் இருக்கும் படத்தைப் போல் உள்ளது. சுவரொட்டியில் இருப்பவர் இவரைப் போலவே இருக்கிறார். அப்படியென்றால்…?
பல வருடங்களுக்கு முன் தங்களிடமிருந்து காணாமல் போன அம்மா, இப்போது யாரிடமிருந்து காணாமல் போயிருக்கக் கூடும்? அந்தச் சுவரொட்டியைப் படம் எடுத்திருந்தாலோ, அதில் இருக்கிற எண்ணைப் பதிவு செய்திருந்தாலோ, தகவல் தெரிவித்திருக்கலாம்.
இன்றைக்கு எல்லாமே பிரம்மைதானா ?
தன் கனவில் எப்போதாவது மங்கலாக ஒரு உருவம் புகை போல வந்து மறையும். இன்னும் தூங்கலையா என்றோ, சாப்டாச்சா என்றோ, கேட்பது போல பிரம்மை. அந்த உருவம் தெளிவாக இதுவரை தெரிந்ததே இல்லை.
ஒருவேளை இப்போது இந்த வயதில் அம்மா காணாமல் போயிருந்தால் இதுபோல போஸ்டர் அடித்து ஒட்டியோ தெருத் தெருவாக அலைந்தோ கண்டுபிடித்திருக்க முடியும்.
சட்டென்று இந்த அம்மாக்கள் ஏன் காணாமல் போய்விடுகிறார்கள்? தங்களின் குழந்தைகளின் எதிர்காலம் குறித்துக் கவலைப்படக் கூடாதா என்று ஒரு எண்ணம் வரும். அவர்கள் எத்தனை துன்பங்களை அனுபவித்தார்களோ? வாழும் வீட்டை விட்டு எல்லோருமா விலகி விடுகிறார்கள். ?
நான்கு சுவர்களுள் தங்கள் உலகத்தை சுருக்கிக் கொண்டவர்களாக, சமைப்பவர்களாக, பரிமாறுகிறவர்களாக, துணிகளை வெளுத்து தயார் செய்து வைப்பவர்களாக, வாய் இருந்தும் எதையும் மீற இயலாதபடி, வீட்டின் மூலையில் அழகுக்கென வைத்திருக்கிற மீன் தொட்டியில் நீந்தி கொண்டிருக்கிற மீன்களாக எத்தனையோ பேர் காலத்தின் கட்டாயத்தால் முடங்கி கிடக்கிறார்கள். ஏதோ ஒரு தைரியம் இருப்பவர்கள் கூண்டிலிருந்து தங்களைத் தாங்களே விடுவித்துக் கொள்கிறார்கள்.
சிலர் அதிகபட்சம் ,, அத்தனை காலமாக தேக்கி வைத்திருக்கிற கோபத்தை வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் , குடும்பத்தில் இருப்பவர்களையே தேள் கொட்டுவதைப் போல சொற்களால் காயப்படுத்துவதில் சுருங்கிப் போனவர்களாக நிலைத்துப் போகிறார்கள். சின்னச் சண்டைகளில் தங்களை நிரூபித்துக் கொள்கிறார்கள். மருமகளாக, மனைவியாக, மகளாக காணாமல் போவதை விட அம்மாவாக காணாமல் போவது பிள்ளைகளின் துயர வரம்
கூட்டத்தில் முன் பகுதிக்குப் போக வாய்ப்பில்லை. கிடைக்கிற இடைவெளியில் பார்த்தான். அவரும் உட்கார இடம் இல்லாமல் நின்று கொண்டுதான் இருந்தார்.
இப்போது அவர் எங்கு இறங்குவார் என்று எப்படித் தெரிந்து கொள்வது? எந்த ஊருக்கு, தான் பயணச் சீட்டு வாங்குவது? பேருந்து, நிலையத்திலிருந்து கிளம்பத் துவங்கி விட்டது. இது காளியாபுரம் வரை போகிற பேருந்து.
” டிக்கெட். . . டிக்கெட். . . ” நடத்துநரிடம் காளியாபுரத்திற்குப் பயணச்சீட்டு பெற்றுக் கொண்டான். எப்போது வேண்டுமானாலும் இறங்கத் தயாராகப் படிக்கட்டின் ஓரம் நின்று கொண்டான். தன் கண்கள் மட்டும் முன்பகுதியில் இருக்கிற அம்மாவைப் போன்ற உருவம் கொண்டவர் மீது கவனமாக இருந்தது. தன் அம்மாவா? சுவரொட்டியில் பார்த்த அம்மாவைப் போன்ற பெண்ணா? மண்டைக்குள் குழப்பம்.
இப்போது ஏன் இப்படிப் பின் தொடர வேண்டும்? காணாமல் போன ஒருவரைக் கண்டுபிடித்துத் தரப் போகிறாயா? இல்லை அம்மாவை இத்தனை காலத்திற்குப் பிறகு தேடிக் கண்டடைய போகிறாயா? தேவையில்லாமல் ஒருவர் காணாமல் போவாரா? உள் மனம் கேள்விகளால் அலைந்தபடி இருந்தது. ஒவ்வொரு நிறுத்தமாகக் கவனித்துக் கொண்டே வந்தான். அம்மாவைப் போன்றவர் இறங்கி விடக் கூடுமா? இறங்கியபின் அவரிடம் சென்று என்ன பேசப்போகிறோம்?
ஒருவேளை அது அம்மாவாக இருந்து தன்னை அடையாளம் கண்டுபிடிக்க முடியாவிட்டாலோ, அடையாளம் தெரியாத மாதிரி நடந்து கொண்டாலோ, தன்னால் தாங்கிக் கொள்ள முடியுமா?
ஒருவேளை அது அம்மாவாக இருந்து தன்னைத் தெரியாதது போல் நடந்து கொண்டால் என்ன செய்வது?
நான்காம் வகுப்பு முடித்து ஐந்தாவது போகும்போதுதான் அந்த போட்டோ எடுக்க போனார்கள். அப்படி சென்று வந்த ஒரு வாரத்தில் தனக்கு எத்தனையோ எதிர் பாராதவைகள் நடந்ததெல்லாம் நினைவில்தான் இருக்கின்றன.
பிடித்த ஐஸ்கிரீம் பல முறை கிடைத்தது. பள்ளியிலிருந்து வந்தவுடன் அம்மா பொள்ளாச்சி அழைத்துச் செல்வது நான்கைந்து நாட்கள் தொடர்ந்து நடைபெற்ற இனிமையான தருணங்கள். பொள்ளாச்சியிலேயே மிகவும் ஆடம்பரமான ஓட்டலுக்கு அழைத்துச் சென்று தனக்குப் பிடித்த புரோட்டா, ஐஸ்கிரீம் என்று வாங்கிக் கொடுப்பதும் ஏதேனும் ஒரு கோயிலுக்கு அழைத்துச் சென்றதும் புதிய புதிய சட்டை, ஃபேண்ட் எடுத்துக் கொண்டு வந்ததும் ஏனென்று யோசிக்காமல் மகிழ்ச்சியாய் அனுபவித்தான். எல்லாம் ஒரு வாரம்தான்.
ஒருநாள் பள்ளிக்கூடம் முடிந்து வருகிற போது அம்மா இல்லை. அப்பா அம்மாவை நாக்கே அழுகும்படி திட்டிக் கொண்டிருந்தார்.
்எல்லோரும் ஏதேனும் முணுமுணுப்பதும் ரகசியமாக பேசுவதுமாக இருந்தார்கள். அம்மா இனி வரப்போவதில்லை என்பது ஒரு வாரத்திற்குள் புரிந்து போயிற்று.
்கடைசியாக ஒருநாள் அம்மா கூறியது நினைவில் இருக்கிறது
“என்னை மன்னிச்சிரு ராசா. . எப்போதாவது வந்து உன்னையும் கூட்டிட்டு போறேன். . . “
அம்மா இப்படி சொல்லிக் கொண்டே அழுததும் இவனைக் கட்டிக் கொண்டதும் தழும்புகளாக இருக்கின்றன. அம்மாவின் அணைப்பின் போது சேலையில் பரவியிருந்த ரசத்தின் வாசனை இன்னும் இருப்பதாகவே கற்பனை.
அம்மா அப்படிச் சொன்னதைப் பற்றி கொஞ்சம் பயம்.
குழப்பமும் இருந்தது. அம்மா வெளியூர் வேலைக்குப் போகிறாரா? ஏன் அப்படிச் சொல்ல வேண்டும்? குழப்பத்தைத் தீர்த்துக் கொள்வதற்கு முன்பே அம்மா இல்லாமல் போனார்.
உடம்பில் தழும்பு இருந்தால் தடவி பார்த்துக் கொள்ளலாம். வருவதாக சொன்ன அம்மா அதற்குப் பிறகு வரவே இல்லை. ஏன் அப்படி வீட்டை விட்டுப் போனார் . அப்பா மீது வெறுப்பா? வேறொன்றின் மீது விருப்பமா ? எதையும் புரிந்து கொள்கிற வயதும் இல்லை. இடைவிடாமல் அழுது கொண்டிருந்தவனை ஆறாம் வகுப்பு படிக்கத் தூரத்தில் இருந்த விடுதியில் சேர்த்தினார் அப்பா.
கடைசி வரை விடுதிதான் வாழ்க்கை என்றாயிற்று. பள்ளியில் எப்போதும் சுட்டித்தனமாக நடந்து கொள்வதால் சில பிரச்சனைகள் வந்தன. சிறப்பு விருந்தினர்கள் ஏதாவது வினாக்கள் கேட்கிற போது , பட்பட்டென்று பதில் கூறுவான். அப்போது வியந்து போகிற விருந்தினர், அம்மா என்ன செய்கிறார், அப்பா என்ன செய்கிறார் என்று விசாரிக்கத் தொடங்கிவிடுவார்கள். அம்மாவைப் பற்றி என்ன சொல்ல முடியும்? எரிச்சல், கோபம் பொங்கி வரும். பொறுத்துக் கொள்வான். பிறகு கொஞ்ச நாட்களில் இதற்குப் பயந்தே, பதில் தெரிந்தாலும், தெரியாதது மாதிரி அமர்ந்து கொள்ளப் பழகிக் கொண்டான். முந்திக் கொள்கிற அறிவை தூக்கி எறிந்தான். .
.
அம்மா இறந்துவிட்டார் என்று சொல்ல ஏனோ நடுக்கம். ஆனால் அம்மாவை என்றைக்காவது ஒரு நாள் சந்திக்கக் கூடும். அப்படியொரு நாள் வாய்க்கிற போது, கேட்பதற்கு ஒரே ஒரு வினாதான் இருந்தது.
” ஏன் என்னையும் அழைத்துச் செல்லவில்லை?
ஏன் வருவதாகச் சொல்லிவிட்டு வரவில்லை என்று கேட்கப்போவதில்லை. என்றாவது ஒரு நாள் வருவார்தான். கண்களில் வழிந்த கண்ணீரை யாரும் அறியாமல் துடைத்துக் கொண்டான்.
வேலை ஒன்றை தேடிக்கொள்வது வரை, விடுதியில்தான் வாழ்க்கை என்றாகிவிட்டது. சம வயது பெண்களைப் பார்க்கிறபோது தங்கை என்பதா? தோழி என்பதா? பெயர் சொல்லி அழைப்பதா? பேசலாமா? வேண்டாமா? என்றெல்லாம் மனம் தடுமாறும். யாரிடம் பழகினாலும் ஒரு நாள் அம்மாவைப் போல விட்டுவிட்டு போய்விடுவார்களோ? என்கிற தடுமாற்றமும் தாழ்வு மனப்பான்மையும்தான் சூழ்ந்து கொள்கிறது.
” சார். . . காளியாபுரம் இன்னும் பதினைந்து கிலோமீட்டர் போகணும். இப்படிப் படியிலே தொங்கனுமா? கொஞ்சம் உள்ள போங்க சார். . . படிச்சவங்களே இப்படி செஞ்சா எப்படி சார்?
மிதமான புன்னகையோடு கட்டளையிட்ட நடத்துநரின் குரலுக்குச் செவி சாய்த்து சற்று உள்ளே நகர்ந்தான் வேணு.
” ஊத்துக்குளி இறங்குறவங்க வெளியே வாங்க. . . “
நடத்துநரின் குரல் கணீரென்று பரவியது. தன்னிச்சையாக முன் படிக்கட்டில் கவனம் சென்றது. அம்மாவை நினைவூட்டும் அம்மா இறங்கிவிட்டால் தானும் இறங்க வேண்டியதாக இருக்கும். அதனால் எல்லாவற்றுக்கும் தயார் நிலையிலே இருந்தான். அம்மா வயதில் இருப்பவர்களை எப்போதாவது அம்மா என்று உள்ளத்தின் அடியாழ பூரிப்போடு அழைத்துத் திருப்திப்பட்டுக் கொள்வான். கடும் கோடையில் லேசாக விழுகிற துளிகள் தரையை நனைப்பது போல, நடந்து நடந்து சோர்வுற்ற நேரத்தில் இளைப்பாற கிடைக்கிற சிறு நிழலைப் போல ஆறுதலானது அது.
தன்னோடு வேலை செய்கிற மூத்த அதிகாரி ரகுவரன் சாரின் அம்மாவிற்கு வயது 90. இன்றுவரை, தானே அவரைக் கவனித்துக் கொள்வதாக கூறுகின்ற போது மகிழ்ச்சிக்கு பதிலாக ஏதோ தனக்குள் உடைந்து சிதறுவதைப் பலமுறை உணர்ந்திருக்கிறான். தாயாரின் பிறந்தநாளைக் கொண்டாடுவதாக அலுவலகம் முழுக்க அழைப்பு விடுத்திருந்தார்.
வேணுவும் கலந்து கொண்டான். எல்லோரும், வேணு வாங்கிச் சென்ற பரிசுப் பொருள் மீதுதான் கவனமாக இருந்தார்கள். பல கடைகளில் தேடித் தேடி வாங்கிய பரிசுப் பொருள். ஒரு தாய் தன் குழந்தையை இடுப்பில் வைத்துக் கொண்டு குனிந்து முத்தமிடும் உருவம். ஏதோ ஒரு வகை களிமண்ணில் செய்யப்பட்டது என்றார்கள். தன் தகுதிக்கு மீறிய விலைதான் என்றாலும் பிறந்த நாளுக்கான பரிசாக இவ்வளவு முக்கியத்துவம் கொடுக்கிற அளவுக்கு நெருக்கமில்லை என்றாலும் அப்படி வழங்க எதுவோ காரணமாக இருந்தது.
பேருந்து நின்று நின்று சென்று கொண்டிருந்தாலும் வேணுவின் ஒரு கண் படிக்கட்டில்தான் இருந்தது. இறங்கிச்சென்று என்ன கேட்கப் போகிறோம்? இது என்னுடைய அம்மா தான் என்று எப்படி முடிவு செய்வது ?! வேறு ஒருவரின் அம்மாவாக இருந்தால் என்ன செய்வது? அப்படி கேட்டுத்தான் என்ன ஆகப்போகிறது? காணாமல் போகிறவர்களை ஏன் மறுபடியும் கண்டுபிடித்து அவர்களின் வாழ்வைத் தொலைக்க வேண்டும்?
நடத்துநர் தன்னை நெருக்கி நெருக்கி முன் பகுதிக்கு நகர்த்தி இருந்தார். இவ்வளவு நேரம் யோசனையில் படிக்கட்டை விட்டு நகர்ந்தது உணரவில்லை. உறைக்கவில்லை. முன்பக்கம் அவசரமாகப் பார்வையை செலுத்தினான். அந்த அம்மா போன்ற அம்மா தன்னையே பார்த்துக் கொண்டிருப்பதாக உணர்ந்தான். பிறகு அவர் வேறு எங்கோ முகத்தைத் திருப்பிக் கொண்டார்.
பேருந்து ஆனைமலை போகும் வரை கூட்டமாகவே இருந்தது. மாசாணி அம்மன் கோயிலில் பலரும் இறங்கி இருக்கக்கூடும். தான் எப்போது இருக்கையில் அமர்ந்தோம் ? அவசரமாக முன்பக்கம் பதற்றத்தோடு பார்த்தான்.
அம்மாவைக் காணவில்லை.
***


Leave a comment