‘அயலான்’ நாவலில் இருத்தலியல்
முனைவர் நா. ஜிதேந்திரன்,
தமிழ்த்துறைத் தலைவர் & உதவிப் பேராசிரியர்,
அரசுக்கல்லூரி, காரியாவட்டம், திருவனந்தபுரம்- 695581.
(கேரளப்பல்கலைக்கழகத்துடன்இணைவுபெற்றது)
9789111234 jeethenthiran@gmail.com
பிரெஞ்சு எழுத்தாளரான ஆல்பெர் காம்யு ‘அயலான்’ (The Stranger) நாவலை 1942-இல் எழுதினார். இது 75 மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்ட புகழ்பெற்ற நாவல். ஏற்கெனவே வெ.ஸ்ரீராம் அவர்கள் (1985) பிரெஞ்சிலிருந்து நேரடியாகத் தமிழுக்கு ‘அந்நியன்’ என்று மொழிபெயர்த்திருக்கிறார். தற்போது அதே நாவலை சு.ஆ.வெங்கட சுப்புராய நாயகர் அவர்களும் பிரெஞ்சிலிருந்து நேரடியாகத் தமிழுக்கு ‘அயலான்’ என்று மொழிபெயர்த்திருக்கிறார். இந்த நாவல் திரைப்படமாகவும் வெளிவந்துள்ளது. வலையொளியிலும் கிடைக்கிறது. முழு படத்தையும் பார்க்கலாம். இந்நாவலை மறுபடியும் திரைப்படமாக்கியிருக்கிறார்கள். வருகிற ஜனவரி, 2026இல் புதிய வெளியீடு வர இருக்கிறது. மொழிபெயர்ப்பாளர் சு.ஆ. வெங்கட சுப்புராய நாயகர் அவர்கள் ‘அயலான்’ என்றும், ‘ஆல்பெர் காம்யு’ என்று நிலைத்துவிட்ட Alber Camus-ஐ ‘அல்பெர் கமுய்’ என்றும் குறிப்பிட்டிருக்கிறார். இந்தக் கட்டுரையில் ஏற்கெனவே பழகிவிட்ட சொல்லான ‘ஆல்பெர் காம்யு’ என்றே குறிப்பிடப்படுகிறது.

மெர்ஸோவின் அம்மா இறந்துவிடுகிறார். மெர்ஸோ அந்த இறப்புச் சடங்கில் கலந்து கொள்கிறான். வேறொரு நாளில், நண்பன் ரெமோனுடன் கடற்கரையிலிருக்கிற மசோன் வீட்டிற்குத் தன் காதலியுடன் செல்கிறான். குளிக்கிறார்கள். சாப்பிடுகிறார்கள். கடற்கரையில் மதிய வெயிலில் நடக்கிறார்கள். கடற்கரையில் மெர்ஸோ ஒருவனைத் துப்பாக்கியால் சுட்டுக் கொன்றுவிடுகிறான். நீதிமன்றத்தில் விசாரணை நடைபெறுகிறது. மெர்ஸோவுக்குத் தூக்குத் தண்டனை நிறைவேற்றப்படுகிறது.
இந்த நாவல் இரண்டு பகுதிகளைக் கொண்டிருக்கிறது. கொலை நடைபெறுவது வரை முதல் பகுதி. விசாரணைப் பகுதிகள் இரண்டாம் பகுதி. நாவல் ஒரு மரணத்தில் தொடங்கி, நடுவில் ஒரு கொலையில் விழுந்து, இறுதியில் ஒரு மரணத்தோடு முடிகிறது. மூன்று மரணங்களுக்கு இடையிலான சிக்கல்தான் நாவல். அயலானில் இருத்தலியல் கருத்துக்கள் நிரம்பியிருக்கின்றன.
மனிதனின் இந்த வாழ்க்கை அர்த்தமற்றது. வாழ்க்கைக்கு; பிறப்பிற்கு எந்த நோக்கமும், எந்தவித லட்சியமும் இல்லை. வெறும் பிறப்பு. வாழ்வு அதுபோல் வெறும் வாழ்வு. வெறும் காமத்தில், வெறும் ஆசையில், நிகழ்கிற ஒரு சாதாரணக் கலப்பு; ரசாயனக் கலப்பு. இதற்கு வேறு எந்தப் பிரபஞ்ச சக்தியும் காரணமில்லை. லக்னம், தசை இருப்பு, சூரியன், சந்திரன், புதன், ராகு, கேது என்று எந்த மாயக் கோள்களும் காரணமாக இருக்க முடியாது. ஆனால், பிறந்த ஒரு குழந்தைக்குப் புற உலகிலிருந்து நிறைய கொடுக்கப்படுகின்றன. முக்கியமாக – சொற்கள். சொற்களின் வழியே உறவுகள், சாதி, மதம், கடவுள், உண்மை, நேர்மை, நன்மை, தீமை, கல்வி, திருமணம், அரசியல், ஆட்சி, அதிகாரம், பதவி, பணம், புகழ், அன்பு, காதல், பாசம், சட்டதிட்டங்கள், விதிகள், தண்டனைகள் என்று எல்லாமே புற உலகிலிருந்து கொடுக்கப்படுகின்றன. இவை மனிதனை மகிழ்ச்சிப்படுத்துவதற்குப் பதிலாக, மனிதனைத் துயரத்திற்குள்ளாக்குகின்றன. இவற்றில் எதுவும் உண்மையில்லை. எல்லாம் போலியாகக் கற்பிக்கப்படுகின்றன. ஏமாற்றங்களும், சூழ்ச்சிகளும், குறுக்கு வழிகளும், சுயநலங்களும் நிரம்பிக் கிடக்கின்றன. சட்டதிட்டங்கள் சிலருக்குச் சாய்ந்துவிடுகின்றன. விதிகள் வளைந்து விடுகின்றன. மனிதன் தனக்கு மட்டும் ஏன் இப்படி நடக்கிறது என்று அங்கலாய்த்துக் கொள்கிறான். நோய் அவனைத் துயரத்தில் ஆழ்த்துகிறது. அவனுக்கு நெருக்கமான உறவின் மரணம் அவனை மேலும் அதிக துயரத்தில் உழலச் செய்கிறது. தனக்கும் மரணம் இப்போதே நேர்ந்துவிடுமோ என்று அஞ்சுகிறான். மரணம் எப்போது வேண்டுமானாலும் நிகழலாம் என்கிறபொழுது, அதுவரையிலான முன்திட்டமிடல்கள், லட்சியங்கள், கடின உழைப்புகள் எல்லாம் அர்த்தமிழந்து போய்விடுகின்றன. வாழ்வே அர்த்தமற்றதாகிவிடுகின்றது. இத்தகைய சிந்தனைகளை அடிப்படையாகக் கொண்டு இருத்தலியல் தத்துவம் தோன்றுகிறது.
அயலானில் மெர்ஸோ, மேற்குறிப்பிடப்பெற்ற பல இருத்தலியல் சிந்தனைகளைக் கொண்டிருந்தாலும் ஒருசில கூறுகளில் முரண்படுகிறான். பொதுவாக, ஒரு ‘உணர்வற்ற அல்லது உணர்வை வெளிப்படுத்தாத’ நிலையில் இருக்கிறான். நாவலி;ன் தொடக்கமே வாசகனை அதிர்ச்சியடையச் செய்கிறது. “இன்று அம்மா இறந்துவிட்டார். நேற்றாகவும் இருக்கலாம். தெரியவில்லை” (ப.13) என்று ஆரம்பிக்கிறது. 80 கி.மீ. தொலைவிலிருக்கிற அந்த முதியோர் இல்லத்திற்குப் புறப்படுகிறான். அந்தப் பயணத்திலோ, அம்மாவின் சவப்பெட்டி முன் அமர்ந்திருக்கும்பொழுதோ மெர்ஸோ கொஞ்சம்கூட அழவில்லை. அவனிடமிருந்து அழுகையோ, துக்கமோகூட வெளிப்படவில்லை. ஒரு பற்றற்ற நிலையில் இருக்கிறான். நாவல் முழுவதுமே மெர்ஸோ இப்படித்தான் படைக்கப்பட்டிருக்கிறான். பற்றற்ற, லட்சியமற்ற, எந்தவித முன்திட்டமிடலுமில்லாத மனிதனாக இருக்கிறான்.
பொதுவாக, இருத்தலியல் மனிதனை நான்கு நிலைகளாகப் பிரிக்கலாம்.
“அறிவியல் யுகத்தின் அவசர இயக்கத்தில் கலந்து, கும்பல் மனிதனாகி, சமுதாய விதிகளை விடாப்பிடியாகப் பின்பற்றி, தன் மனிதத்தைத் தொலைத்தவன். துயரத்தில் உழல்பவன் முதல்வகை இருத்தலியல் மனிதன்.
அர்த்தமற்றவைகளால் மனிதத்தைத் தொலைத்துக் கொண்டிருக்கிறோம் என்பதைப் புரிந்து, போலி ஒழுக்கத்தையும், பொய்யான உறவுகளையும் வெறுத்து, தனிமையை, சுதந்திரத்தை விரும்புகிறவன் இரண்டாவது வகை இருத்தலியல் மனிதன்.
சமுதாயத்தின் வறட்டுத்தனமான சட்டதிட்டங்களால் வெறுப்புற்று, ‘இதுவல்ல வாழ்க்கை’ என்றுணர்ந்து, அதனை மாற்ற முயல்கிற, ஒட்டுமொத்த புற உலகையே மாற்ற முயல்கிற புரட்சியாளன்; அதீத மனிதன்; கலகக்காரன் மூன்றாவது வகை இருத்தலியல் மனிதன்.
‘இதுவல்ல வாழ்க்கை’ என்று தெளிந்து, பிரபஞ்சத்திலிருந்தும் வரலாற்றிலிருந்தும் பிரிந்து, உலக உயிர்கள் அனைத்திற்குமான முழுசுதந்திரம் மற்றும் உண்மையான அன்பை வலியுறுத்துகிற, தன்னை அறிய முயல்கிற அன்புமயமானவன், உண்மையானவன் நான்காவது இருத்தலியல் மனிதன்”1
துயரத்தில் உழல்பவன், துயரத்திலிருந்து தான் விடுபட நினைப்பவன், துயரத்திலிருந்து சமுதாயத்தை விடுவிக்க நினைப்பவன், துயரத்தை நீக்கி, பேருண்மையை அறிய முற்படுகிறவன் என்ற வகையில் அமைகிறான்.
அயலான் மெர்ஸோ நான்காவது நிலையில் அமைகிறான். ஆனால், பேருண்மையை அறிய முற்படுபவனாக அல்ல. துயரம் இல்லை. இவனிடத்தில் கலகம் இல்லை. இவனிடத்தில் ஞானத் தேடல் இல்லை. ஆனால், இவனிடத்தில் பற்றற்ற மனநிலை இருக்கிறது. வாழ்வு அர்த்தமற்றது என்ற புரிதல் இருக்கிறது. உண்மையானவனாக, ‘அசலான’ மனிதனாக, பற்றற்ற நிலையில் இருப்பவனாக அமைகிறான்.
இருத்தலியல் முன்திட்டமிடுதலை, குறிக்கோளை நோக்கிய வாழ்வை மறுக்கிறது. தமிழின் முதல் இருத்தலியல் சிந்தனை இடம்பெற்றுள்ள பாடல் ‘யாதும் ஊரே, யாவரும் கேளிர்’. இருத்தலியல் மொழி, இன, சாதி, மத, நில, நாட்டுப் பிரிவினைகளை மறுக்கிறது. ‘நீர்வழிப்படூஉம் புணைபோல’ வாழ்வை எதிர்கொள்ளச் சொல்கிறது. மெர்ஸோ நாவல் முழுவதும் ‘நீர்வழிப்படூஉம் புணைபோல’த் தான் இருக்கிறான். அவனுக்கென்று தனிப்பட்ட ஆசைகள் எதுவுமில்லை. அவன் காதலி மரி கர்தோனா அவனிடம், ‘என்னை விரும்புகிறாயா?’ என்று கேட்கும்பொழுது, மெர்ஸோ ‘இது அர்த்தமற்ற கேள்வி’ என்றும், ‘தெரியவில்லை’ என்றும் கூறுகிறான். அவ்வப்போது இருவரும் ஒன்றாகத் தங்கி, உண்டு, உறவுகொண்டு வாழும் நிலையிலும் மெர்ஸோ எந்த முடிவும் எடுக்கவில்லை. மற்றொரு நாளில் மரி அவனிடம் தன்னைத் திருமணம் செய்துகொள்ள விருப்பமா? என்று கேட்கும்பொழுது, மெர்ஸோ அவளுக்கு விருப்பமானால் செய்துகொள்ளலாம் என்கிறான். “இது அர்த்தமற்ற கேள்வி என்பதோடு நிச்சயமாக அவளைக் காதலிக்கவில்லை என்றும் கூறினேன்….. திருமணம் என்பது முக்கியமானது என்று சுட்டிக்காட்டினாள். நான் மறுத்து, ‘கிடையாது’ என்றேன்…. ‘தன்னைப் போலவே தொடர்பிலுள்ள வேறு பெண் ஒருத்தி இதேபோல் கேட்டிருந்தால் அப்போதும் சம்மதித்து இருப்பேனா’ என்று கேட்டாள். ‘நிச்சயமாக’ என்றேன்.” (ப.52)
மெர்ஸோவின் இந்த மனநிலையைப் புரிந்துகொள்ள வேண்டும். தனக்கென்று சுய விருப்பு, வெறுப்புகளற்ற, முன்திட்டமிடாத இந்த மனநிலைதான் நாவலில் முக்கியமானது.
திடீரென்று தானாக வந்து நண்பனாகிறவன் ரெமோன் சேந்தேஸ். ரெமோன் அவனது ஆசை நாயகிக்குக் கடிதம் எழுதித் தருமாறு மெர்ஸோவிடம் கேட்கிறான். மெர்ஸோவும் கடிதம் எழுதிக் கொடுக்கிறான். ரெமோன் தனக்காகச் சாட்சி சொல்ல காவல் நிலையம் வருமாறு அழைக்கிறான். மெர்ஸோவும் சாட்சி சொல்கிறான். ரெமோன் கடற்கரையையொட்டிய நண்பர் மசோன் வீட்டிற்கு ஞாயிற்றுக்கிழமை போகலாம் என்கிறான். மெர்ஸோ அதற்கும் சம்மதிக்கிறான்.
அலுவலக மேலதிகாரி அவனைப் பாரீஸ் கிளை அலுவலகத்திற்கு மாற்றலாகி செல்கிறீர்களா? என்று கேட்கிறார். எங்கு வேலை செய்தாலும் தனக்கு ஒன்றுதான். அத்துடன் இங்கு அமைந்துள்ள வாழ்க்கை தனக்குத் திருப்தியாகவே இருக்கிறது என்கிறான். மரியிடம் மேலதிகாரியின் பாரீஸ் திட்டம் பற்றிக் கூறுகிறான். மெர்ஸோவுக்குப் பாரீஸ{க்குச் செல்வது அல்லது செல்ல வேண்டாம் என்கிற எந்த முடிவும் இல்லை. மரி, ரெமோன், மேலதிகாரி என யார் என்ன சொன்னாலும் அவனுக்கென்று தனித்த முடிவுகள் இல்லை. இப்படியாக, பல முன்திட்டமிடாமைக் குணத்துடன் இலக்கற்ற வாழ்க்கை வாழ்கிறான். அவன் மனம் திட்டமிடல்கள், லட்சியங்கள், ஆசைகள், எதிர்பார்ப்புகள் என்ற சுமைகளை; குப்பைகளைச் சுமப்பதில்லை. ஆல்பெர் காம்யு, “எல்லாவற்றிலும் அக்கறையின்மை கொள்ள வேண்டும். எந்தவிதமான குறிக்கோள்களும், இலட்சியங்களும் இல்லாமலிருக்க வேண்டும். ஏனெனில் ‘மரணம்’ திடீரென நிகழ்கிறது”2 என்கிறார்.
இந்த முன்திட்டமிடாமைதான் நாவலின் மையப்புள்ளியான கொலைக்குக் காரணம்.
“வாழ்க்கையில் தனிமை, அந்நியமாதல், வேதனை, இறப்பு, தவிப்பு போன்ற பல உணர்வு நிலைகளை முதன்மைப்படுத்தி அவற்றைப் புரிந்துகொள்வது எவ்வாறு என்பதை இருத்தலியம் விளக்கியது”3 என்று இரா.முரளி அவர்கள் குறிப்பிடுகிறார்.
மனச்சோர்வு, ஆழ்ந்த மௌனம், பெருந்தனிமை, வெறுமை, சுயமுரண், சுதந்திரம், அசலான வாழ்வு, வறட்டுத்தனமான சட்டதிட்டங்கள், மரணம், நன்மை X தீமை, நிகழ்காலம் முதலிய இருத்தலியல் கூறுகளை மெர்ஸோ கொண்டிருக்கிறான்.
இப்போது நாவலின் தொடக்கப் பகுதிக்கு வருவோம். அம்மா இறந்துவிட்டார். அந்தச் செய்தி அவனை எவ்வித அதிர்ச்சிக்கும் உட்படுத்தவில்லை. மெர்ஸோ பெரும்பாலும் ‘மனச்சோர்வினால்’ பீடிக்கப்பட்டிருக்கிறான். அவனுக்குத் தூக்கம் வருகிறது. அம்மாவைப் பார்க்க வருகிற பேருந்துப் பயணத்தில் தூக்கம். பயணம் முழுவதும் தூக்கம். இறந்தவர் உடல்முன் அமர்ந்து இரவு முழுவதும் ‘கண்விழிப்புச் சடங்கு’ இருக்கிறது. மெர்ஸோவுக்கு அப்போதும் தூக்கம் வருகிறது. பிறகு விழித்துக் கொள்கிறான். இடுப்பு வலியினால். அம்மாவுக்காக அல்ல. அம்மாவை அடக்கம் செய்தபிறகு, ஊருக்குத் திரும்புகிறான். அதுவே அவனுக்குப் பெருமகிழ்ச்சியாக இருக்கிறது. “இனி 12 மணி நேரத்துக்குத் தூங்கப் போகிறேன் என்ற நினைப்பு தந்த நிம்மதி” (ப.28) என்று குதூகலம் அடைகிறான்.
நாவலின் இரண்டாம் பகுதியில் சிறையிலிருக்கிறான். தொடக்கத்தில் இரவு, பகல் தூக்கமில்லையென்றாலும், அதன்பிறகு, 16 மணிநேரம் தூங்குகிறான். சிறையில் பெரும்பாலும் தூங்கிக் கழிக்கிறான். அதிகப்படியான மனச்சோர்வுதான் மெர்ஸோவைத் தூக்கத்தில் ஆழ்த்துகிறது. விசாரணை நடைபெறும்பொழுதுகூட, அவன் அதன் அர்த்தமின்மையை உணர்கிறான். “இந்த இடத்தில் நான் பயனற்ற வகையில் செய்துகொண்டிருந்த அத்தனை விஷயங்களும் சேர்ந்து என் தொண்டையை அடைத்தன. எனக்கு இருந்த ஒரே அவசர வேலை விசாரணையை விரைவாக முடித்துக்கொண்டு சிறைச்சாலைக்குச் சென்று தூங்க வேண்டும் என்பதுதான்” (ப.115).
மெர்ஸோ ஆழ்ந்த மௌனத்தில் இருக்கிறான். அவனது இயல்பே அப்படித்தானிருக்கிறது. அதிகம் பேசுவதில்லை. மற்றவர்கள்தான் பேசுகிறார்கள். எதிலும் பிடிப்பற்றவனாக; எதையும் முழுதாக; சரியாகச் செய்யத் தெரியாதவனாக இருக்கிறான். பெரும்பாலும் அவனிடத்தில் பதிலில்லை. அதிக நேரங்களில் ‘தெரியவில்லை’ என்கிறான். முதியோர் இல்ல நிர்வாகி பேசுகிறார். கேட்டுக் கொள்கிறான். இறப்புச் சடங்கிலே பாதிரியார் பேசுகிறார். இவன் கேட்டுக் கொள்கிறான். மரி பேசுகிறாள். ரெமோன் நிறைய பேசுகிறான். ஒற்றை வார்த்தையில் ‘ஆம் / தெரியவில்லை’ என்று பேசுகிறான். அவனுடைய மௌனம் அவனை உளச்சிக்கலுக்கு உள்ளாக்குகிறது.
மெர்ஸோ பெருந்தனிமையில் இருக்கிறான். தன்னைத் தனியனாகவே உணர்கிறான். அவனுக்கு அவனுடைய அம்மா, காதலி, நண்பன் உட்பட எல்லோருமே இருக்கிறார்கள். யாரோடும், எதனோடும் அவனால் ஒன்ற முடியவில்லை. அம்மாவின் இறப்பு – இழப்பு – அவனால் சோகத்தை வெளிப்படுத்த முடியவில்லை. மரியின் காதல் அவனுக்குள் பெருமகிழ்ச்சியை ஏற்படுத்தவில்லை. அவள் வேண்டும் என்ற கட்டாயமில்லை. எல்லோரையும்விட்டு, மனதளவில் வெகுதொலைவில் நிற்கிறான். தனக்குள் தனிமைச் சிறையில் இருக்கிறான். சிறையில் தனிமையில் இருக்கிறான். மெர்ஸோ மற்றவர்களிடமிருந்தும், தன்னிடமிருந்துமே விலகி நிற்பதனால் தனக்கேகூட ‘அயலான்’ ஆக இருக்கிறான்.
மெர்ஸோவின் மனம் உணர்வுப்பூர்வமற்ற வெறுமையில் இருக்கிறது. அது ஆழ்கடல் போன்ற நிசப்தத்தில் இருக்கிறது. இருத்தலியல் மனிதன் திருமணம் என்கிற கட்டுப்பாட்டை மறுப்பவன். அவனால் எல்லோரையும்போல, காதலி மரியைத் திருமணம் செய்துகொண்டு, பாரீஸ{க்கு வேலை மாற்றலாகி, நல்லதொரு குடும்ப வாழ்வை வாழ்ந்திருக்க முடியும். ஆனால், அவன் எதைப் பற்றியும் அக்கறை கொள்ளாதவனாக வெறுமையில் இருக்கிறான். காதல், திருமணம், பந்தம், பாசம், கடவுள், நம்பிக்கை, நன்மை, தீமைகளைக் கடந்தவனாக வெறுமை நிலையிலிருக்கிறான் ; வெறுமனே இருக்கிறான். அரசுத் தரப்பு வழக்கறிஞர் இவ்வாறு குறிப்பிடுகிறார் : “மதிப்பிற்குரிய நீதிபதிகளே! இவரது ஆன்மாவை ஊடுருவிப் பார்த்தேன். அதில் எதுவுமில்லை’ என்ற அவர்.….. குறிப்பாக, இந்த மனிதரின் இதயத்தில் காணப்படும் வெறுமை சமுதாயத்தையே விழுங்கிவிடக்கூடிய அபாயமாக இருக்கும்போது இது ஜநீதியை நிலைநாட்டுவதுஸ மிகவும் அவசியமாகும்”(ப.111) என்று வாதிடுகிறார். அவர் கூறுவதிலிருந்து மெர்ஸோவின் மனதை; ஆன்மாவை; வெறுமையைப் புரிந்துகொள்ள முடியும்.
மெர்ஸோ தனக்குள் சுய முரண்களைக் கொண்டிருக்கிறான். இருத்தலியல் மனிதனால் யாருடனும் ஒன்ற முடியாது. சமுதாயத்துடனும் ஒன்ற முடியாது. எல்லாவற்றிலும் முரண்பட்டவனாக இருப்பான். தனக்குள்ளேயும்கூட. முதியோர் இல்லத்துக்குள் நுழைகிற மெர்ஸோ, உடனடியாக அம்மாவைப் பார்த்துவிட விரும்புகிறான் (ப.14). ஆனால், அடுத்த சில நிமிடங்களிலேயே, பொறுப்பாளர் சவப்பெட்டியைத் திறந்து அம்மாவின் முகத்தைக் காட்ட முனைகிறபோது, அதனைத் திறக்க வேண்டாம் என்கிறான். இறுதிவரை அம்மாவின் முகத்தைப் பார்க்கவில்லை. சவப்பெட்டியின் முன் வெறுமனே அமர்ந்திருக்கிறான். வெவ்வேறு சூழ்நிலைகளில், வெவ்வேறு நபர்களுடனான உரையாடல்களில், ‘அப்படிச் சொல்லியிருக்கக் கூடாதோ’ என்று பல இடங்களில் தனக்குள் குழம்புகிறான்; முரண்படுகிறான். ஆனால், சுட்டுக் கொலை செய்ததைப் பற்றி ஒருமுறைகூட, ‘அப்படிச் செய்திருக்கக் கூடாதோ’ என்று வருந்தவில்லை; நினைக்கவில்லை.
மெர்ஸோ போலியான வாழ்வு வாழ்வதில்லை. எந்தச் சூழ்நிலையிலும், எந்த இடத்திலும் போலியாக இருக்கவில்லை. உண்மையாக இருக்கிறான். அவனளவில் அசலான வாழ்வு வாழ்கிறான். அசலான வாழ்வு என்பது சார்த்தரின் இருத்தலியல் விளக்கக் கூறுகளில் ஒன்றாகும். “மரபுவழிப்பட்ட ஐதீகங்கள், முன்கூட்டியே நிர்ணயிக்கப்பட்ட அறநெறிகள், தத்துவ அமைப்புகள் ஆகியவற்றுக்குக் கட்டுப்படாமல், தனது வாழ்க்கையைத் தானே தேர்ந்தெடுக்கிற, தனது வாழ்வுக்குத் தானே அர்த்தம் தருகிற, தான் மேற்கொண்ட முடிவுகளுக்கான பொறுப்பை மேற்கொள்கிற பேச்சொன்றும் செயலொன்றுமாக இல்லாத, பொய்யான உணர்வு இல்லாத நிலை”4 என்பது அசலான வாழ்வாகும்.
மெர்ஸோ அம்மாவின் இறப்பின்போது, அழுது அரற்றியிருக்க முடியும். மரியின் ‘காதலிக்கிறாயா? / திருமணம் செய்துகொள்ள விரும்புகிறாயா?’ என்ற கேள்விகளுக்கெல்லாம், ‘ஆமாம், உண்மையாக, உறுதியாக’ என்று பொய் சொல்லியிருக்க முடியும். மரியோடு முத்தமிட்டாலும், உறவுகொண்டாலும்கூட, அவன் ‘தெரியவில்லை’ என்றே உண்மையாகப் பதிலளிக்கிறான். அதனால் அவள் மனம் புண்படக்கூடும் என்றுகூட அவன் நினைப்பதில்லை. தன்னளவில் உண்மையாக இருக்கிறான். அசலாக இருக்கிறான். அசலான வாழ்வு வாழ்கிறான். மற்றவர்களுக்காகத் தன்னை மாற்றிக் கொள்ளவில்லை.
மெர்ஸோ மிகவும் சுதந்திர மனிதனாக இருக்கிறான். மற்றவர்கள் எதிர்பார்ப்பதைச் செய்யும் நெருக்கடிக்குத் தன்னை உட்படுத்திக் கொள்வதில்லை. மற்றவர்கள் என்ன நினைப்பார்கள்? என்ன சொல்வார்கள்? சமூகம் என்ன சொல்லும்? என்ற சிந்தனைக் கட்டுப்பாடெல்லாம் மெர்ஸோவுக்கு இல்லை. அன்பு, காதல், கருணை போன்றவை அசட்டுணர்ச்சிகளே என்கிறார் சார்த்தர். மெர்ஸோ இந்த அன்பு, காதல், என்பவைகளைக் கடந்து நிற்கிறான். அவன் எந்த உறவு வளையத்திற்குள்ளும் சிக்குவதில்லை. எங்கு வேலை செய்தாலும் ஒன்றுதான், யாரைத் திருமணம் செய்தாலும் ஒன்றுதான் என்கிற மனநிலை. தனக்கென்று விருப்பு, வெறுப்பற்ற நிலை.
இருத்தலியல் மனிதன் வறட்டுத்தனமான சட்டதிட்டங்களை ஏற்பதில்லை. மனிதனும் மனிதநேயமுமே முக்கியம். இங்கே சட்டம், விதி என்ற பெயரில் மனிதனை அந்தச் சட்டகங்களுக்குள்ளே அடைத்து வைக்கிறார்கள். மெர்ஸோ தன் அம்மாவின் இறப்புக்கு விடுமுறை கேட்பதற்கே தயங்குகிறான். மேலதிகாரி 2 நாட்களுக்கு மேல் விடுமுறை தர எரிச்சல்படுகிறார். அதில் (அம்மா இறப்பில்) என் குற்றம் எதுவுமில்லையே என்றுகூட நினைத்துக் கொள்கிறான். அலுவலில் இருக்கிற மனிதனே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தாலும், படுக்கையில் இருந்தபடியே, அலுவல்களைப் பார்க்க முடியுமா எனக் கேட்கிற மேலதிகாரிகளும் சமூகத்தில் இருக்கிறார்கள். அலுவல் நியதிகளும் வறட்டுத்தனமாக இருக்கின்றன.
மெர்ஸோ வேறொரு இடத்தில் ‘எனக்குக் காவலர்களைப் பிடிக்காது’ என்கிறான்.
மெர்ஸோவின் கொலைக் குற்றத்திற்கு நீதிமன்ற விசாரணை நடைபெறுகிறது. நீதிபதிகள், அரசு வழக்கறிஞர், அவனுக்காக வாதாடும் வழக்கறிஞர், கேள்விகள்…. அதே சலிப்புற்ற கேள்விகள், பெயர், வயது, தொழில், இடம்…… மற்றும் பொய்கள். மெர்ஸோவின் நீதிமன்ற விசாரணைப் பகுதிகள் மெர்ஸோவுக்குக் கேலியாக இருக்கின்றன. நீதிபதிகளை டிராம் வண்டியில் வரிசையாக அமர்ந்திருக்கும் பயணிகள்போல இருக்கிறார்கள் என்று நினைத்துக் கொள்கிறான். மெர்ஸோ தான் சுட்டதை ஒத்துக்கொள்கிறான். மறுக்கவில்லை. ஆனாலும், விசாரணை நடைபெறுகிறது. நீதிமன்றத்திற்குக் காரணங்களே தேவையாக இருக்கின்றன. அதைவிடவும், மெர்ஸோவின் உளவியல் தன்மையும், கொலைக்கு முந்தைய நடவடிக்கைகளும் ஆய்வுக்குட்படுத்தப்படுகின்றன. மெர்ஸோவின் வாழ்வில் நடைபெற்ற அத்தனை நிகழ்வுகளுக்கும் வேறொரு அர்த்தம் கற்பிக்கப்படுகிறது. அவன் வழக்கில், அவனைப் பேசவிடாமல், அவனைத் தள்ளிவைத்துவிட்டு வாதங்கள் நடைபெறுகின்றன. சட்டங்கள் அப்படித்தான் அர்த்தமற்றவையாக இருக்கின்றன. “‘என் மனதைப் பல விஷயங்கள் குடைந்துகொண்டிருந்தாலும், விசாரணையின் இடையில் அவ்வப்போது குறுக்கிடவேண்டும்போல் இருந்தது. ஆனால், என் வழக்குரைஞரோ, ‘பேசாமல் இருங்கள்; உங்கள் வழக்குக்கு உங்கள் பேச்சு எந்த வகையிலும்பயன்படாது’ என்று சொல்லியபடியே இருந்தார். இந்த வழக்குக்கும் எனக்கும் எந்தவிதத் தொடர்பும் இல்லை என்பதுபோல் அவர்கள் வழக்கை நடத்திக் கொண்டிருந்தார்கள். அனைத்தும் என்னுடைய குறுக்கீடு எதுவுமின்றி நடந்து வந்தது. எனது கருத்தைக் கேட்காமலேயே என் விதியை நிச்சயிக்கும் வேலை நடந்தது” (பக். 108, 109) என்பதிலிருந்தும், “எனக்கு என்னவோ, இந்த வழக்கிலிருந்து என்னை விலக்கிவைத்து என்னை ஒன்றுமில்லாமல் பூஜ்யமாக்கிவிட்டு, ஒருவிதத்தில் பார்த்தால், எனக்குப் பதிலாக இயங்கும் நடவடிக்கையாகத் தெரிந்தது. எப்படியும் இந்த வழக்குமன்ற அறையிலிருந்து நான் ஏற்கெனவே வெகுதூரத்தில் இருந்தேன் என நினைத்தேன். என் வழக்குரைஞரும் கேலிக்குரியவராகத் தெரிந்தார்” (ப.113) என்பதிலிருந்தும் நீதிமன்ற நடவடிக்கைகளைப் பற்றிப் புரிந்து கொள்ள முடியும்.
அதிலும், சுடப்பட்ட முதல் குண்டுக்கும் இரண்டாவது குண்டுக்குமான இடைவெளி நேரத்தைக் குறித்தும், அதற்கான காரணத்தை நோக்கியும் வாதங்கள் அமைகின்றன. பகுதி – 2 முழுவதும் தீவிரமான இருத்தலியல் கருத்துக்கள் நிரம்ப இருக்கின்றன. தவறுகள், தண்டனைகள் குறித்து ஆல்பெர் காம்யு மெர்ஸோவின்வழி விவாதிக்கிறார். ஒருவனைச் சிறைப்படுத்தும் அதிகாரத்தை; ஒருவனது சுதந்திரத்தைப் பறிக்கும் அதிகாரத்தை இந்தச் சமூகத்திற்கு யார் கொடுத்தது? எந்தத் தவறுக்கு எத்தகைய தண்டனை? எல்லா வழக்குகளிலும் உண்மையான குற்றவாளிகள் தண்டிக்கப்படுகிறார்களா? எல்லா நாட்டிலும் சட்டங்கள் ஒரே மாதிரியாக இருக்கின்றனவா? எல்லா நீதிமன்றங்களிலும் ஒரே வழக்கிற்கு ஒரே மாதிரியான தீர்ப்புகள் வழங்கப்படுகின்றனவா? மெர்ஸோவின் வழக்கு 11 மாதங்களுக்கு மேல் நடைபெறுகிறது. அரசுத் தரப்பு வழக்கறிஞர் மெர்ஸோவின் கொலைக் குற்றத்திற்குச் சற்றும் தொடர்பில்லாத, அவனுடைய அம்மாவின் இறப்பில் ‘அவன் அழவேயில்லை’ என்பதைக் கொண்டுவந்து இணைக்கிறார். சங்கிலித் தொடராக, அம்மாவின் இறப்பிற்குப் பின், அவன் காதலி மரியோடு உறவில் இருந்தது, அவளோடு சேர்ந்து நகைச்சுவை நடிகர் ஃபெர்னாந்தேல் நடித்த நகைச்சுவைப் படத்திற்குச் சென்றது என்று மெர்ஸோவின் நடவடிக்கைகளைப் பட்டியலிடுகிறார்.
உண்மையில் இந்த நீதிமன்றங்கள் அளிக்கும் தண்டனைகளால் என்ன நிகழ்கிறது? தண்டனைகள் அர்த்தமுள்ளவையா? என்று ஆல்பெர் காம்யு விவாதிக்கிறார். ஒரு மனிதன் எதையெல்லாம் இழக்கிறான்? முதலில் சுதந்திரம் பறிக்கப்படுகிறது. பெண் சார்ந்த விருப்பம் நிறைவேறுவதில்லை. பெண்சுகம் கிடைப்பதில்லை. “இது நியாயமற்ற செயல்பாடு என்றேன். அதற்கு அவர் ‘அதற்காகத்தானே உங்களைச் சிறையில் வைக்கிறார்கள்’ என்றார்” (ப.80). சிகரெட் முதலான போதை வஸ்துகளும் அதில் அடங்கும். மூன்றாவதாக நேரம். சிறைக்குள் நேரத்தை; காலத்தை எப்படிக் கடத்துவது என்று தெரியவில்லை. அதுவும் மிகப்பெரிய தண்டனைதான். “சிறைக்குள் இருக்கும்போது காலம் என்ற விஷயத்தையே இழந்துவிடுவோம் என்று வாசித்திருக்கிறேன்….. நாட்கள் ஒரே சமயத்தில் எந்த அளவு நீண்டதாகவும், குறுகியதாகவும் இருக்கும் என்பதும் அப்போது புரியவில்லை. வாழ்ந்து முடிப்பதற்கான நாட்கள் நிச்சயமாக நீளமானவையாகத்தான் இருக்கின்றன என்றாலும் அவை பறந்து விரிந்து கிடப்பதால் தொடக்கம், முடிவு தெரியாத அளவு ஒன்றோடொன்று பிணைந்தபடி இருக்கின்றன. அப்போது, நாட்கள் என்பவை அவற்றின் பெயர் அடையாளத்தை இழக்கின்றன. என்னைப் பொறுத்தவரை நேற்று, நாளை என்ற சொற்களை மட்டுமே இன்னும் பொருள் பொதிந்தவையாகப் பார்க்கிறேன்” (பக். 90, 91) என்கிறான். சிறைக்குள் காலம் அழிகிறது.
ஒரு மனிதனுடைய வாழும் சுதந்திரத்தை அழிப்பது என்பது அவனை உயிரோடு கொல்வதற்குச் சமம். அவனது இருப்பை; இருத்தலை; ‘தான்’ என்கிற நுண்ணுணர்வை அழிப்பதாகும். ஆல்பெர் காம்யு சமூகத்தின் இந்த ஏற்பாட்டைக் கேள்விக்குட்படுத்துகிறார். மெர்ஸோவின்வழி அலசி ஆராய்கிறார். சிறைக்குள் காலத்தைக் கடத்துவதற்கு மெர்ஸோ ஒரு யுக்தியைக் கையாள்கிறான். வீட்டிலிருக்கிற அறை, நாற்காலி, மேஜை என்று ஒவ்வொரு பொருளாக நினைத்துப் பார்க்கிறான். மேஜையின் மீதுள்ள பொருட்கள், அதிலுள்ள விரிசல், கீறல் என்று ஒவ்வொன்றிலும் உண்டாகியிருக்கும் மாற்றங்கள் என்று நினைத்துக் கொண்டு, தான் அறையில் இருப்பதாகப் பாவித்துக் கொள்கிறான். “வெளியுலகில் ஒரே ஒருநாள் வாழ்ந்திருந்தால் போதும். அதன்பின் நூறு ஆண்டுகள்கூட எளிதாகச் சிறையில் கழிக்கலாம்” (ப.89). அவன் மெல்ல மெல்ல கற்பனை உலகில் நுழைகிறான். மெர்ஸோவின் ‘தான்’ அல்லது மனம் அழியத் தொடங்குகிறது. அவனுடைய குரல், அவனுடைய முகம் எல்லாம் அவனுக்கு மறந்து போகிறது. நாட்களும்கூட. சிறைக்கு வந்து ஐந்து மாதங்கள் ஆகின்றன என்றபோது, அவன் அதனை நம்புகிறான்.
இருத்தலியல் மனிதன் மரணத்தைப் பற்றி விரிவாகச் சிந்திக்கிறான். மெர்ஸோவும் அப்படியே. “நான் இறந்துவிடுவேன். அதாவது, மற்றவர்களைவிடச் சீக்கிரமாக என்பது தெளிவாகத் தெரிகிறது. வாழ்க்கை என்பது வாழ்வதற்குத் தகுதியான இல்லை என்பது எல்லோருக்கும் தெரிந்ததுதான். ஆழ்ந்து சிந்தித்தால், முப்பது வயதில் இறப்பதும், எழுபது வயதில் இறப்பதும் ஒன்றுதான்….. இப்போதோ இன்னும் இருபது ஆண்டுகள் கழித்தோ எப்போது இறந்தாலும் இறக்கப் போவது நான்தான். இப்படியெல்லாம் பார்க்கும்போது இன்னும் சிந்தித்துக் கழிக்க வேண்டிய இருபது ஆண்டுகள் இருக்கின்றன என்ற எண்ணம் என்னுள் பயங்கரமான எழுச்சியை உண்டாக்கிவிடும்” (ப.124). வாழ்க்கைக்கு எந்தவித அர்த்தமுமில்லை என்கிறான். இந்த வாழ்வு அபத்தமானது என்று உணர்கிறான். “என் வாழ்க்கையைப் பற்றியும், இதோ வரப் போகும் இந்த மரணத்தைப் பற்றியும் எனக்குத் தெளிவு இருந்தது….. நான் ஒரு வகையான வாழ்க்கையை வாழ்ந்தேன். ஆனால், நான் வேறுவிதமாகவும் வாழ்ந்திருக்க முடியும்…. இதுவரை கழிந்த அபத்தமான என் வாழ்க்கை முழுவதும்….” (பக். 130, 131) என்று மெர்ஸோ இறுதி அத்தியாயத்தில் தன்னிலை குறித்தும், வாழ்வு குறித்தும் பேசுகிறான். வாழ்வு அபத்தம் என்று உணர்ந்திருந்தாலும், வாழ்வை மகிழ்ச்சியாகவே வாழ்ந்திருக்கிறான். மகிழச்சி எனினும், தப்பும் தவறுமாகப் போய்விட்ட இந்த வாழ்வை, மீண்டும் முதலிலிருந்தே வாழ விரும்புகிறான். இத்தகைய சிந்தனையை அவனது இறுதி உரையாடல்களில் புரிந்துகொள்ள முடிகிறது.
இருத்தலியல் மனிதன் நன்மை, தீமைகளுக்கு அப்பாற்பட்டவன். இந்த உலகில் நன்மை X தீமை என்று எதுவுமில்லை. நன்மை X தீமை கற்பிதங்கள் அவரவர் பார்வையில் மாறுபடுகின்றன. மெர்ஸோ பாவம், புண்ணியக் கணக்குகளிலெல்லாம் கவனம் செலுத்தவில்லை. “என் பாவச்சுமையிலிருந்து நான் விடுபட்டாக வேண்டும் என்று கூறினார்….. எனக்கு மரண தண்டனை வழங்கியது மனிதன்தானே என்று சுட்டிக்காட்டினேன்….. பாவம் என்றால் என்னவென்று தெரியவில்லை. நான் குற்றவாளி என்று மட்டுமே எனக்குத் தெரிவிக்கப்பட்டது. நான் குற்றவாளி என்பதால் அதற்கான தண்டனையை அனுபவிக்கிறேன். அவ்வளவுதான்” (ப.128) என்கிறான். நன்மை, தீமை என்பவை வெறும் குறியீடுகளே. குற்றத்தைப் பாவமாக்கி, அவனைப் பெருங்குழியில் விழச் செய்யும் செயல்களிலிருந்து தப்பிக்கிறான். ஒவ்வொரு சிறிய குற்றத்தையும் பெரும் பாவமாக்குகிற கிறிஸ்தவத்தை ஆல்பெர் காம்யு விமர்சிக்கிறார். ஃபாதரை ‘சார்’ என்றே மெர்ஸோ அழைக்கிறான். “ஏனென்றால், நீங்கள் என் அப்பா இல்லை” (ப.130). பாதிரியாருக்கும் மெர்ஸோவுக்கும் நடக்கிற உரையாடல்கள் கடவுள் நம்பிக்கை, பாவம், மன்னிப்பு பற்றியது. அந்தப் பகுதிகளிலும், வேறு சில இடங்களிலும் மெர்ஸோ கிறிஸ்தவத்தை, நம்பிக்கைகளை மறுதலிக்கிறான்.
இருத்தலியல் மனிதனுக்கு நிகழ்காலமே முக்கியம். கடந்த காலத்தைப் பற்றியும், நிச்சயமில்லாத எதிர்காலத்தைப் பற்றியும் அக்கறை இல்லை. மெர்ஸோ நிகழ்காலத்தில்தான் இருக்கிறான். “எந்த விஷயத்துக்கும் என்னால் உண்மையிலேயே வருத்தப்பட முடிந்ததில்லை என்பதை அவரிடம் தோழமையுடனும், சொல்லப்போனால் பரிவுடன்கூட விளக்க விரும்பினேன். இன்றோ நாளையோ உடனே நடக்கவிருக்கும் விஷயத்தில் மட்டுமே ஈடுபாடு காட்டுவது என் வழக்கம்” (ப.111) என்கிறான்.
கொலைக்குப் பிரத்யேகக் காரணம் எதுவுமில்லை. எல்லாம் தற்செயலாக நிகழ்ந்தது என்கிறான். கடுமையான வெயில்கூட காரணம் என்கிறான். மண்டையைப் பிளந்த வெயில், வெயிலில் மண்டை காய்ந்து சுற்றுதல், வெயிலில் மண்டை கொஞ்சம் இளகிவிடும் என்பன போன்ற கருத்துக்கள் தமிழ்ச் சூழலில் உண்டு. மண்டையைப் பிளக்கிற அந்த வெயிலைத்தான் கொலைக்குக் காரணமாக மெர்ஸோ குறிப்பிடுகிறான்.
இந்த உலகம் ஏற்படுத்தி வைத்திருக்கிற சட்டங்கள், விதிகள், நடைமுறைகள், பழக்க வழக்கங்கள், எதிர்பார்ப்புகள், நெருக்கடிகள் எல்லாவற்றிலிருந்தும் மெர்ஸோ தனித்து வேறுபட்டு நிற்கிறான். மெர்ஸோ இந்த உலகிற்கு அயலான். மெர்ஸோவுக்கு அம்மாவே ‘அயலான்’ ஆகத்தான் இருக்கிறார். அவன் முத்தமிடும் மரியையும் ‘அயலானா’கவே பார்க்கிறான்.
நாவலை வேறொரு கோணத்தில் ஆராய்ந்தால் ‘அயலான்’ யார் என்பது மாறிவிடுகிறது. “எங்கள் தளத்தில் வசிக்கும் மற்றொருவன் வந்தான்” (ப.38). உண்மையில் அந்த மற்றொருவன்தான் – அயலான் – ரெமோன் சேந்தேஸ். மெர்ஸோவின் வாழ்க்கையில் வந்த அயலான். அவன் பிரச்சனை இவன் பிரச்சனையாக மாறுகிறது. ரெமோனுக்காக கடிதம் எழுதிக் கொடுக்கிறான். ரெமோனுக்காக காவல் நிலையம் செல்கிறான். சாட்சி சொல்கிறான். ரெமோனின் வற்புறுத்தலில்தான் கடற்கரைக்குச் செல்கிறான். கடற்கரையில் ரெமோனுக்கும் அரேபியனுக்கும்தான் பிரச்சனை. இப்படி, அந்நியனின் ஃ அயலானின் பிரச்சனைகள் அல்லது வாழ்வுச் சிக்கல்கள் மெர்ஸோவின் உளச்சிக்கலோடு சேர்ந்து, மனதிற்குப் பாரத்தைக் கொடுக்கிறது. அந்தப் பாரம், அழுத்தம் வாழ்வின் திசையை மாற்றிவிடுகிறது. ஊர் மக்களின் முன்னிலையில் தலை கொய்யப்படும் தண்டனை மெர்ஸோவுக்கு விதிக்கப்படுகிறது.
நாவலுக்கு வெளியே செல்லும் ஒரு நிகழ்வு செக்கோஸ்லோவோகியா சம்பவம். சிறையில் கிடைக்கிற ஒரு நாளிதழில் இடம்பெற்ற செய்தி. பணத்திற்கு ஆசைப்பட்டு, அம்மாவும் சகோதரியும் சேர்ந்து ஒருவனைக் கொன்று விடுகிறார்கள். அவன் தன் மகன்தான் என்று தாயும், அவன் தன்னுடைய சகோதரன் என்று சகோதரியும் அறிந்தபிறகு, தாய் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொள்கிறாள். சகோதரி கிணற்றில் விழுந்து தற்கொலை செய்து கொள்கிறாள். அந்தச் செய்தியை ஆயிரம் முறையாவது மெர்ஸோ வாசிக்கிறான். வேறொரு வழக்கு – மகன் தந்தையைக் கொன்ற வழக்கு. பணவெறி மிகுந்த உலகில் உறவுகள் அர்த்தமிழக்கின்றன என்று இருத்தலியல் மனிதன் மெர்ஸோ உணர்கிறான்.
அயலான் நாவலில் இருத்தலியலின் பல கூறுகள் இடம்பெற்றுள்ளன. முன்திட்டமிடாமை, மனச்சோர்வு, மௌனம், தனிமை, வெறுமை, சுயமுரண், சுதந்திரம், அசலான வாழ்வு, வறட்டுத்தனமான சட்டதிட்டங்கள், மரணம், நன்மை X தீமை, நிகழ்காலம் முதலிய இருத்தலியல் கூறுகள் சுருக்கமாக விளக்கப்பட்டுள்ளன.

அடிக்குறிப்புகள் :
1. முனைவர் நா. ஜிதேந்திரன், இந்திரா பார்த்தசாரதி, கிரிஷ் கர்னாட் நாடகங்களில் இருத்தலியல் ஒப்பாய்வு, பக். 57, 58.
2. மேலது, ப. 69.
3. இரா. முரளி, இருத்தலியம் ஓர் அறிமுகம், ப.24
4. எஸ்.வி.ராஜதுரை, சார்த்தர்: விடுதலையின் பாதைகள், ப.39.
*****


Leave a comment