சிறார் பாடல்

நடைப்பயிற்சி

க. மகுடபதி

நடைப்பயிற்சி செய்யடா
நடைப்பயிற்சி செய்யடா.
மடைதிறந்த வெள்ளமென
விரைந்து நடை செய்யடா.

துயிலெழுந்து பல் துலக்கி
துரித நடை செய்யடா.
பழைய சோற்று நீரருந்தி
பலத்த நடை செய்யடா.

மெய் காக்கும் மெய்யடா
மனதில் இதை வைய்யடா.
மருந்தாலே உடல் இளைக்கும்
விளம்பரங்கள் பொய்யடா.

காயம் இதை காயமின்றி
காப்பதெல்லாம் நடையடா.
விடிந்த பின்னும் உறங்குகின்ற
சோம்பல் அதை உடையடா.

ஊஞ்சல் போல கைகள் வீசி
உற்சாகமாய் செல்லடா.
தீஞ்சுவையாய் வாழ்வினிக்கும்
திசையெல்லாம் சொல்லடா.

அங்கம் திடமாகுமடா
அஞ்சி ஓடும் நோயடா.
நடையினாலே நடப்பதெல்லாம்
நன்மைதானே பாரடா.

பேரழிவு செய்கின்ற
நீரிழிவு நீங்குமே.
வழிந்தோடும் வியர்வையாலே
வாழ்வில் இன்பம் ஓங்குமே.

நாள் முழுக்க புத்துணர்ச்சி
நடைப்பயிற்சி வழங்குமே
சீரான இரத்த ஓட்டம்
மாரடைப்பை நீக்குமே

தீராத வாய்வுத்தொல்லை
வீரநடை போக்குமே
நுரையீரல் நிறையும் வரை
ஆழ்ந்த மூச்சு வாங்கடா.

நரை விழுந்த பிறகு கூட
நடுக்கம் இன்றி வாழடா.
புடைத்திருக்கும் நரம்புகண்டு
பிரம்பு கூட ஏங்குமே

இடைஞ்சல் தரும் தொப்பையின்றி
இன்பம் உன்னைத் தாங்குமே.

தேகபலம் இல்லை என்றால்
வாழ்க்கை பெரும் தொல்லையே.
நோயற்ற வாழ்வை விட
வேறு செல்வம் இல்லையே.

Leave a comment

Trending