கவிதை
உன் ஏமாற்றத்தினால் நான் கவிஞனானேன்
பாக்யபாரதி
உனக்கு நானென்றும்
எனக்கு நீயென்றும்
சொல்லி வளர்த்ததால்
குழந்தைப் பருவம் முதலே
கூடி விளையாடி,
கொஞ்சிப் பேசி
மகிழ்ந்து வந்தோம்…

எருக்கம் பூவைப் பறித்து
எண்ணும் போட்டியில்
உனக்காக விட்டுக் கொடுத்த
அந்த நொடியில்
என் கன்னத்தில் பதிந்த
உன் முதல் முத்தம் –
இன்றும் ஈரமாய் நினைவில்!
பள்ளிப் பாதையில்
சிதறிய உன் சிரிப்புகளும்
பேசிய சொற்களும்
பசுமரத்தாணி போல
என்னுள் பதிந்திருக்கின்றன.
அரும்பு மீசை முளைத்தபின்
பின்னாலிருந்து நீயென்னை
இறுக்கி அணைத்த
அந்த நொடிகளின் ஈரம்
இன்னும் காயவில்லை.
உன்னை யாராவது
வம்புக்கு இழுத்தால்
என்னிடமே ஓடிவந்து
சொல்வாய்…
உனக்காக நானிருக்கிறேன் என்ற
என் சொற்களில்
உற்சாக நதி ஓடியது.
பூப்பெய்திய உன் முகம்
பிரபஞ்சத்திற்கே ஒளி தந்தது;
தென்னை ஓலை இடுக்கில்
எட்டிப் பார்த்த
உன் ஒற்றைப் பார்வையில்
காதலின் சுவையை
மௌனமாக பருகினேன்.
உயிர் பிரியும் வரை
உன்னோடு வருவேன் என்றாய்;
என் கண்நீரை
உன் விரல்கள் துடைத்தபோது
என் உலகமே
உன் உள்ளங்கையில் தங்கியது.
ஆனால் –
ஒருநாள் திடீரென
என்னைப் பிடிக்கவில்லை என்றாய்…
இருபது வருடங்கள்
பழகிய என்னை
இரண்டே நாழிகையில்
அந்நியனாக்கி சென்றாய்!
அந்த கணம்
நெருஞ்சி முட்கள்
நெஞ்சை கிழித்தது போலிருந்தது.
உன் பிரிவின் வலி
பகலும் இரவும் விழுங்க,
கண்ணீர் வற்றும் வரை
அழுதேன்…
இறுதியில்
என் விரல்களுக்கிடையே
இடம்பிடித்த எழுதுகோல்
என் வலிகளை வரிகளாக்கி
என்னைக் காத்தது.
இன்றோ –
உன் ஏமாற்றத்தினால்
நான் கவிஞனானேன்!


Leave a comment