கங்கை வெள்ளம் செம்புக்குள்ளே அடக்கிய மேதை

ஜி. சிவக்குமார்

புராணங்களும் இதிகாசங்களும் அபத்தக் கட்டுக்கதைகள் என்று சிலரும், அவை சத்தியமான உண்மைகள் என்று சிலரும் காலகாலமாக வாதிட்டு வருகின்றனர். என்னைப் பொறுத்தவரையில், அவற்றின் மதப் பூச்சுக்களையெல்லாம் விட, ஒரு எழுத்தாளனாக நான் வியப்பது, அவை மனித மனங்களின் பல்வேறு வடிவங்களை, உணர்வுகளை எளிதாகத் தரிசிக்கத் தரும் அழகைத்தான்.

இராமாயணத்தையே எடுத்துக் கொள்ளுங்கள். அதன் தெய்வீகத்தன்மையெல்லாம் இருக்கட்டும். போக்குவரத்து வசதிகள் மிக மிகக் குறைவாக இருந்த அந்தக் காலத்தில் அயோத்தியையும், இலங்கையையும் இணைத்து ஒரு கதை எழுதப்பட்டதென்பதே பிரமிப்பாகத்தானே இருக்கிறது. அதே போல், மகாபாரதமும் வாசிக்க வாசிக்க, நுண்ணிய அடுக்குகளாலான மலர் போல விரிந்து கொண்டேதானே செல்கிறது.

புராண இதிகாசக் கதைகள், காலகாலமாக, கதைகள் வழியாகவும், நாடகங்கள் வழியாகவும், உபன்யாசங்கள் வழியாகவும், வாய் மொழியாகவும் மக்களின் மனதில் பதிய வைக்கப்பட்டுக் கொண்டேயிருந்தன. இப்போது தொலைக்காட்சித் தொடர்கள் அதைத் தொடர்கின்றன.

புராண, இதிகாசக் கதாபாத்திரங்களின் வாழ்வை, திரைப்படப் பாடல்களில் அழகாக, நேர்த்தியாகச் சொல்வதில் கவியரசருக்கு நிகர் யாருமில்லை.

மகாபாரதத்தின் துயர் மிகு பாத்திரங்களில் முக்கியமானவன் கர்ணன். பிறந்த உடனே தாயால் கை விடப்பட்டவன். முதலில் தேரோட்டி ஒருவரின், பின் அரசனொருவனின் என மரணம் வரை பிறர் கருணையிலேயே வாழ விதிக்கப்பட்டவன். வாழ்வின் பின் பகுதியில் தன் தாயையும், சகோதரர்களையும் அறிந்தும் அறியாதவன் போல வாழும்படி சபிக்கப்பட்டவன். அதுவும் தன்னை யாரென்று அறியாத, தானறிந்த சொந்தச் சகோதரர்களுக்கு எதிராகவே போரிடும்படி நிர்ப்பந்திக்கப்பட்டவன். பல பக்கங்களில் நீளும் அவனின் கொடுந்துயர் வாழ்வை ஒரு திரைப்படப் பாடலில் எத்தனை எளிமையாகச் சொல்கிறார் பாருங்கள்.

தாய்க்கு நீ மகனில்லை
தம்பிக்கு அண்ணனில்லை.
செஞ்சோற்றுக் கடன் தீர்க்க
சேராத இடம் சேர்ந்து
வஞ்சத்தில் வீழ்ந்தாயடா

கண்ணதாசனின் வார்த்தைகளில் கர்ணனின் வாழ்வு கண் முன்னே விரிகிறதல்லவா?

வஞ்சகன் கண்ணனடா என்றும்
முன்னவர் பணி ஏற்கும்
கண்ணனும் பணி செய்ய
உன் அடி பணிந்தானடா
கர்ணா,
மன்னித்து அருள்வாயடா

என்று கர்ணனிடம், கண்ணனுக்காக, கண்ணனே கேட்காத மன்னிப்பை, கண்ணதாசன் கேட்டு விட்டார்.

விஸ்வாமித்திரனின் தவத்தைக் கலைக்க இந்திரனால் காமாஸ்திரமாக ஏவப்பட்ட மேனகை, தனக்கும் விஸ்வாமித்திரருக்கும் பிறந்த மேனகையை விட்டு விட்டு வானேகுகிறாள். கண்வ முனிவர், பறவைகளால் சூழப்பட்டிருந்த குழந்தையைக் கண்டு, அதே பொருள்படும் சகுந்தலா என்று பெயரிட்டு வளர்க்கிறார். மானைத் தொடர்ந்து வந்த மன்னன் துஷ்யந்தன், சகுந்தலையைக் கண்டதும் காதல் கொண்டு காந்தர்வ மணம் புரிகிறான். உறவின் நீட்சிக்கு சாட்சியாக அவன் தனது முத்திரை மோதிரத்தைத் தந்து செல்கிறான். சதா அவனது நினைவிலேயே இருக்கும் சகுந்தலை, துர்வாச முனிவரைக் கவனிக்காததால், துஷ்யந்தன் அவளை மறக்கும்படி சாபமிடுகிறார். துஷ்யந்தனைச் சந்திக்கப் போகும் வழியில் ஆற்றில் மோதிரத்தைத் தொலைக்கிறாள். பிறந்த உடன் தகப்பனாலும், பின் தாயாலும் கை விடப்படுகிற சகுந்தலையை, பின் துர்வாச முனிவராலும், துஷ்யந்தனாலும் கை விடப்படுகிற சகுந்தலையை ஒரு மீனவன் காப்பாற்றுகிறான். அவன் பிடித்த மீனின் வயிற்றில் இருந்த மோதிரம் சகுந்தலையின் வாழ்வை மீட்டெடுக்கிறது.

சகுந்தலையின் வாழ்வின் முக்கிய நிகழ்வொன்றை ஒரே பாடலில் வார்த்தெடுக்கிற கவிஞரின் திறமையை என்னென்பது

எங்கிருந்தோ வந்தாள் திரைப்படத்தில் இடம் பெற்ற காளிதாச மஹா கவி காவியம் என்கிற பாடல்தான் அது.

மானைத் துரத்தி வந்த துஷ்யந்தன் சகுந்தலையைக் காண்கிறான். அதனை இப்படிச் சொல்கிறார்.

வனத்து மான்தனை துரத்தி வந்தவன்
மன்னன் துஷ்யந்தன் மானைக் கண்டனன்
அந்த மானை மறந்து கோமகன்
இந்த மான் மகள் அழகில் ஆழ்ந்தனன்

உறவினை எழுதுகையில், படுக்கையறையின் கதவுகளையும், அத்தனை ஜன்னல்களையும் திறந்து வைக்கிற தற்காலத் திரைப்படப் பாடலாசிரியர்கள் திரும்பத் திரும்பக் கேட்டு கற்றுக் கொள்ள வேண்டிய அழகு இது.

மாறன் தொடுத்த கணைகளினால்
அவள் மன்னனுடன் கலந்தாள்

மஞ்சள்முகத் திரு வஞ்சி தனக்கவன்
காதல் விருந்தளித்தான்

அன்னம் தனக்கொரு சின்னமளித்தவன் சென்றதும்,

செவ்வரியோடிய கண்களினோடவன்
சிந்தனையில் விழுந்தாள்.
அவனே கனவானாள்
அவனே நினைவானாள்.

துஷ்யந்தனின் நினைவில் தன்னைக் கவனிக்க மறந்த சகுந்தலைக்கு, வெகுளி கண நேரம் காக்காத

துர்வாச முனிவர் தரும் சாபத்தைக் கேளுங்கள்.

எந்த எண்ணம் உனைக் கொண்டதோ
அதனை
இன்று தீர்த்துவிடுகின்றேன்

அந்த மன்னவனின் உள்ளம் என்பதனை
இன்று மாற்றி விடுகின்றேன்
எந்த நாளும் அவன் சொந்தமாவதில்லை
தீர்த்தம் அள்ளி இடுகின்றேன்

எந்த ஞாபகமும் அகன்று போவென
இன்று சாபமிடுகின்றேன்
மறந்து போ துஷ்யந்தா
இவளை மறந்து போ.

கவியரசர், மெல்லிசை மன்னர், சீர்காழி கோவிந்தராஜன், பி.லீலா கூட்டணியில் மற்றுமொரு அற்புதம்.

திருமால் பெருமை படத்தில், திருமால் பெருமைக்கு நிகரேது பாடலில், விஷ்ணுவின் தசாவதாரங்களை ஒரே பாடலில் சொல்லியிருப்பது பிரமிப்பின் உச்சத்திற்கே கொண்டு செல்கிறதல்லவா

கடல் நடுவே வீழ்ந்த சதுர்வேதம்
தனைக் காப்பதற்கே கொண்ட அவதாரம்
மச்ச அவதாரம்

அசுரர்கள் கொடுமைக்கு முடிவாகும்
எங்கள் அச்சுதனே உந்தன் அவதாரம்
கூர்ம அவதாரம்

பூமியை காத்திட ஒரு காலம்
நீ புனைந்தது மற்றொரு அவதாரம்
வராக அவதாரம்

நாராயணா என்னும் திருநாமம்
நிலை நாட்டிட இன்னும் ஒரு அவதாரம்
நரசிம்ம அவதாரம்

மாபலிச் சிரம் தன்னில் கால் வைத்து
இந்த மண்ணும் விண்ணும் அளந்த அவதாரம்
வாமன அவதாரம்

தாய் தந்தை சொல்லே உயர்வேதம்
என்று சாற்றியதும் ஒரு அவதாரம்
பரசுராம அவதாரம்

ஒருவனுக்கு உலகில் ஒரு தாரம்
எனும் உயர்வினை காட்டிய அவதாரம்
ராம அவதாரம்

ரகு குலம் கொண்டது ஒரு ராமன்
பின்பு யது குலம் கண்டது பலராமன்

அரசு முறை வழிநெறி காக்க
நீ அடைந்தது இன்னொரு அவதாரம்
கண்ணன் அவதாரம்
விதி நடந்ததென மதி முடிந்ததென

வினையின் பயனே உருவாக
நிலை மறந்தவரும் நெறியிழந்தவரும்
உணரும் வண்ணம் தெளிவாக
இன்னலொழிந்து
புவி காக்க -நீ எடுக்க வேண்டும்
ஒரு அவதாரம்
கல்கி அவதாரம்


இந்தப் பாடலில்

ரகு குலம் கொண்டது ஒரு ராமன்
பின்பு யது குலம் கண்டது பலராமன்

ஆஹா, ஆஹா

இந்த வரிகளில் தென்றலாய்த் தழுவும் டிஎம்எஸ்ஸின் குரல், .

விதி நடந்ததென மதி முடிந்ததென
வினையின் பயனே உருவாக
நிலை மறந்தவரும் நெறியிழந்தவரும்
உணரும் வண்ணம் தெளிவாக
இன்னலொழிந்து
புவி காக்க -நீ எடுக்க வேண்டும்
ஒரு அவதாரம்
கல்கி அவதாரம்

என்ற வரிகளில் சூறாவளியெனச் சுழல்கிறது.

பாரடி கண்ணே கொஞ்சம் பாடலில், துடிக்கும் ஏழை நெஞ்சை, நெல்ஞ்சை என்று பாடிய டிஎம்எஸ், இந்தப் பாடலிலும் அவதாரம் என்ற வார்த்தையை எத்தனை அவதாரங்களை எடுக்க வைக்கிறார் கவனியுங்கள்.

அந் நாட்களிலேயே பாடல் காட்சியில் அத்தனை அவதாரங்களையும் சித்திரித்திருக்கும் விதம் பிரமிக்க வைக்கிறது.

பாடல் காட்சியைப் பார்க்கிற யாரும் இந்தப் பாடலை சிவாஜி பாடவில்லை என்றால் நம்ப மாட்டார்கள். ஏன், டி. எம். எஸ்ஸே நம்ப மாட்டார்.

கண்ணதாசன், கே. வி. மகாதேவன், டி. எம் எஸ் இணைப்பில் நாமடைந்த ஒரு வைரம் இந்தப் பாடல்.

****
அபிராமி அம்மனின் நினைவின் பரவசத்தில் தன்னை மறந்திருந்த சுப்பிரமணிய அய்யர் என்கிற அபிராமி பட்டர், தன்னிடம் இன்று என்ன திதி? என்று கேட்ட மன்னர் சரபோஜியிடம் பௌர்ணமி என்று சொல்லி விடுகிறார். நெருப்பு மூட்டி அதன் மேல் நின்று தன்னுடைய வார்த்தையை மெய்ப்பிக்கும்படி அபிராமி அம்மனை வேண்டும் அல்ல அல்ல உத்தரவிடும் பாடல் இது.

வானில் சுடர் வருமோ?
எனக்கு இடர் வருமோ?

என்ற இரண்டே வரிகளில் கதையை வழக்கம் போல் அலட்சியமாய்ச் சொல்லி விடுகிறார்.

நீ சொல்லுக்கெல்லாம் சிறந்த சொல் அல்லவோ?

அடடா, அடடா.

செங்கையில் வண்டு கலின் கலின் என்று
செயம் செயம் என்று ஆட, இசை
சங்கதம் என்று சிலம்பு புலம்பொடு
தண்டை கலந்து ஆட,
இரு கொங்கை கொடும் பகை வென்றனம் என்று
குழைந்து குழைந்தாட,
மலர்ப்பைங்கொடி நங்கை வசந்த சவுந்தரி
பந்து பயின்றாளே!

என்ற குற்றாலக் குறவஞ்சி பாடலில், கடைசி இரு வரிகளை மட்டும் மாற்றி

செங்கையில் வண்டு கலின் கலின் என்று
ஜெயம் ஜெயம் என்றாட இடை
சங்கதமென்று சிலம்புப் புலம்பொடு
தண்டைக் கலந்தாட இரு
கொங்கைக் கொடும்பகை வென்றனமென்று
குழைந்துக் குழைந்தாட மலர்ப்
பங்கயமே உனைப் பாடிய பிள்ளை முன்
நிலவு எழுந்தாட

என எழுதிய அழகை என்னவென்பது.

*****

அக்பரின் அரசவைக் கவிஞரான இசை மேதை தான்சேன் பாடல்களாலே தீபங்களை எரிய வைத்தவர் என்று ஒரு கதை உண்டு.

தவப்புதல்வன் திரைப்படத்தில் அந்தக் காட்சிக்கான பாடலை கவியரசர் எழுதியிருக்கும் அழகைப் பாருங்கள்.

இசை கேட்டால் புவி அசைந்தாடும் அது இறைவன் அருளாகும் என்று துவங்குகிற பாடல் அது.

விதியோடு விளையாடும் ராகங்களே. .
விளக்கேற்றி உயிர் காக்க வாருங்களேன்
கனலேந்தி வாருங்கள் தீபங்களே. .
கரைந்தோடுமோ எங்கள் பாவங்களே.

இதே பாடலில்,

என் பாடல் சேய் கேட்கும் விருந்தாகலாம்
என் பாடல் நோய் தீர்க்கும் மருந்தாகலாம்

என்கிற வரிகள் தான்சேனுக்காக எழுதப்பட்டாலும், அது கண்ணதாசனுக்கும் பொருந்துகிறதுதானே?

*****

மகாகவி காளிதாஸ் திரைப்படத்தில், சென்று வா மகனே சென்று வா, அறிவை வென்று வா மகனே வென்று வா பாடலைக் கேட்டிருப்பீர்கள்தானே?

மற்றவர்களின் பார்வைக்கு முட்டாளாக இருக்கும் வெகுளியான காளிதாசனை ஏமாற்றி அரண்மனைக்கு அழைத்துச் செல்கையில் பாடும் பாடல் அது.

அறிவுலகம் உன்னை அழைக்கின்றது
ஏதும் அறியாதவன் என்றே நினைக்கின்றது
அரண்மனை வாசல் திறக்கின்றது
அங்கே ஆணவம் புன்னகை புரிகின்றது

இந்த வரிகளைத் தட்டச்சு செய்து கொண்டிருக்கையில் நினைவில் நடிகவேள் எம். ஆர். ராதாவின் குரல் அதிர்கிறது. “கலை, மனிதனாகப் பிறந்த ஒவ்வொரு மனிதனும் அள்ளி அள்ளிப் பருக வேண்டிய அமுதமடா அது.” ஆம், தமிழ்த் திரைப்படப்பாடல்களும் அள்ளி அள்ளிப் பருக வேண்டிய அமுதம்தான். பருகுவோம்.

Leave a comment

Trending