தொடர் : காடரினக் கதை 11

பொட்டிவூயும் பெருக்கித் தீனி
( தெறித்து விழுவதைப் பொறுக்கித் தின்பவன்)

கதைத் தொகுப்பு : ப. குணசுந்தரி


ஒரு காட்டுக்குள் தந்தையும் மகனும் ஒரு கூடாரம் அமைத்து வாழ்ந்து வந்தனர். மழைக்காலங்களில் அந்தக் கூடாரம் ஒழுகுவதால் வேறு ஒரு நல்ல வீட்டை அமைக்க வேண்டும் என்று இருவரும் காட்டுக்குள் போய் மரங்களை வெட்டினர். ஒருநாள் இருவரும் ஆற்று ஓரத்தில் இருந்த மூங்கிலை வெட்ட வேண்டும் என்பதற்காக காலையில் ஒரு பானையில் கஞ்சி சாதத்தை எடுத்துக் கொண்டு கிளம்பினர்.

சிறிது நேரம் கழித்தவுடன் மகன் தந்தையிடம் அப்பா எனக்குப் பசிக்கிறது என்றான். இப்பொழுதுதானே இங்கே வந்தோம். இன்னும் இரண்டு மூங்கில்களை வெட்டவில்லை அதற்குள் உனக்குப் பசித்துவிட்டதா? என்றான் அவனுடைய தந்தை. மீண்டும் அவனை நோக்கி சரி போய் பானையிலுள்ள கஞ்சியை மட்டும் குடி சாதத்தை எனக்கு வை என்றான் தந்தை.
அவன் போனவுடன் மரத்தில் கட்டித் தொங்கவிடப்பட்டிருந்த பானையின் அடிப்பாகத்தைத் துளைத்து கஞ்சியையும் சாதத்தையும் தான் ஒருவனே தின்று தீர்த்தான்.

பிறகு தன் தந்தை மூங்கில் வெட்டும் இடத்திற்கு வந்தான். அவன் தந்தை அவனை மூங்கிலைக் கொண்டுபோய் ஆற்றின் அக்கரையில் போடுமாறு கூறினான். ஆனால் இவனோ ஆற்றில் கொண்டுபோய் மூங்கில்களை எல்லாம் போட்டு விட்டான். இரண்டு மூங்கில்கள் மட்டும் மீதமிருந்தன.

தன் தந்தையிடம் போய் மீண்டும் அவனுக்குப் பசிக்கிறது எனக் கூறிவிட்டு வீட்டுக்கு வந்தான். வீட்டிற்கு வந்து கொள்ளை வறுத்துத் தின்று கொண்டிருந்தான். அப்போது முறத்தில் இருந்த கொள்ளை ஒரு எலி வந்து தின்றது. அதைக் கண்ட அவன் நான் எனக்காக வறுத்த கொள்ளை நீதான் திருடுகிறாயா? அதனால்தான் கொள்ளு தீர்ந்து விட்டதா? இரு இரு உன்னை என்ன செய்கிறேன் பார் என்று கூறி கொள்ளைத் தின்று முடித்தவுடன் கூடாரத்திற்குத் தீ வைத்துவிட்டான். அப்பாடா ஒருவழியாய் எலியைக் கொன்று விட்டேன் எனக் கூறி ஆற்றங்கரைக்குச் சென்றான்.

ஆற்றங்கரையில் அவன் தந்தை மூங்கிலை வெட்டி வெட்டிப் போட்டுக் கொண்டிருந்தான். சரி இனியாவது போய் கஞ்சி சாப்பிலாம் என்று பானையை நோக்கி வந்தான் அவன். பாதையிலிருந்த மரத்தில் தொங்கவிடப்பட்டிருந்த பானை துளையிடப்பட்டு கஞ்சி முழுவதுமாகக் குடித்திருப்பதைக் கண்டு சினந்தான். சரி என்ன செய்வது என்னுடைய மகன்தானே! நான் வீட்டில் போய் ஏதாவது உணவு இருந்தால் சாப்பிட்டு விட்டு வருகிறேன் என்றான். தன் மகனிடம் அவன் அடேய் மூங்கிலை எல்லாம் எடுத்துப் போடு நான் வீட்டுக்குப் போயிட்டு வாரேன் என்று கூறி விட்டு வீட்டை நோக்கி நடந்தான். ஆனால் மகனோ தந்தை வெட்டிய மூங்கில்களை எல்லாம் ஆற்றில் கொண்டு போய் போடுவதிலேயே இருந்தான்.

தந்தை மிகுந்த பசியுடன் வீட்டிற்குச் சென்றான். வீடு முழுவதும் கரிந்து கிடப்பதைக் கண்டு அலறினான். கடும் கோபத்தோடு தன் மகனை நோக்கி வந்தான். அட நாயே ஏண்டா வீட்ட எரிச்ச நாயே என்று மகனை நோக்கித் திட்டினான். அதோடு மகன் தான் வெட்டிய மூங்கில்களையெல்லாம் ஆற்றுத் தண்ணீரில் விட்டுக் கொண்டிருப்பதைப் பார்த்து விட்டான்.

நாசமாப் போனவனே நீ எதுக்கும் உதவ மாட்டடா போ. நான் கஷ்டப்பட்டு வெட்டின மூங்கில்களை எல்லாம் ஆற்றில் போட்டதுக்கு உனக்குத் தண்டனை கொடுக்காமல் இருக்க மாட்டேன் என்று அவனுடைய தந்தை நீயும் ஆத்தோடு போ என்று கூறி இரண்டு மூங்கில்களோடு அவனை வைத்துக் கட்டிப் போட்டு அருகில் ஓடிக் கொண்டிருக்கும் ஆற்றில் தூக்கிப் போட்டான்.

சிறிது தூரத்தில் ஆற்றின் அருகில் வாழை மரங்கள் மிகுதியாக இருந்தன. ஆற்றில் சென்ற அவன்,

எல்லாருக்கும் நல்ல பையன் ஆத்தோடு வருது
எல்லாருக்கும் நல்ல பையன் ஆத்தோடு வருது

என்று கூறிக்கொண்டே வந்தான்.

இதைக் கேட்ட வாழைத் தோட்;ட முதலாளி அவனைக் காப்பாற்றி வாழைத் தோப்புக்குள் அழைத்துப் போனான்.

அவனுக்கு உணவு கொடுத்தான். அவனைத்தன் வாழைத் தோப்பிற்குக் காவலனாக வைத்துவிடலாம் என நினைத்தான். பின் தம்பி உன் பெயர் என்ன? என்று கேட்க அதற்கு அவன் சுண்டிருக்கும் சுழா முழுங்கி என்று கூறினான். அப்படியா சரி என் வாழைத் தோப்பிற்குக் காவலாக இரு இன்றிலிருந்து எனக் கூறியபடியே முதலாளி சென்றுவிட்டான்.
இரண்டு மூன்று நாட்கள் அவன் அந்தத் தோப்பிலேயே இருந்தான். வாழைப்பழங்கள் பழுக்க ஆரம்பித்தன. தன் பெயருக்கு ஏற்ப சுண்டியை மட்டும் விட்டுவிட்டு வாழைப் பழங்களை மட்டும் தின்று வாழைப்பழத் தோலை குலைகளிலேயே இருக்குமாறு செய்தான். பழம் பழுத்த எல்லா மரங்களிலும் தோல் மட்டும் இருப்பதைக் கண்ட வாழைத் தோப்பு முதலாளி சுண்டிருக்கும் சுழா முழுங்கி இங்கே வாடா என்று அழைத்து இந்த மரத்தில் எல்லாம் சுண்டியும் வாழைப்பழத் தோலும் மட்டுமே தொங்கிக் கொண்டிருக்கிறதே பழம் எல்லாம் எங்கே? எனக் கேட்டதற்கு எனக்குத் தெரியாது எனக் கூறினான்.

மறுநாள் முதலாளி அந்த வாழைத் தோப்பில் இருக்கும் சுண்டிருக்கும் சுழா முழுங்கிக்குத் தெரியாமல் வேறு ஒருவனை வைத்து நோட்டம் பார்க்க வைத்தான். அன்று பகல் முழுவதும் சுண்டிருக்கும் சுழா முழுங்கி வாழைப்பழங்களைத் தின்பதை ஒற்றன் கண்டுபிடித்து முதலாளியிடம் கூறினான்.

அடத் திருட்டு நாயே நீயா இத்தனைப் பழங்களையும் தின்றாய்? உன்னை சும்மா விடப் போவதில்லை எனக் கூறிய முதலாளி அவனை அடித்து உதைத்து அவன் எந்த ஆற்றில் மிதந்து கொண்டு வந்தானோ அதே ஆற்றிற்கு அழைத்துப் போய் அவனை மீண்டும் கரையில் வைத்து அதே இரண்டு மூங்கிலில் கட்டி ஆற்றில் போட்டானர்.

ஆற்றில் மிதந்தபடி போன அந்தச் சிறுவன் ஆரஞ்சுப் பழத்தோப்பின் அருகே போனவுடன்

எல்லாருக்கும் நல்ல பையன் ஆத்தோடு வருது
எல்லாருக்கும் நல்ல பையன் ஆத்தோடு வருது

என அலறினான்.

இதைக் கேட்டு ஆரஞ்சுத் தோப்பில் களை பறித்தவர்கள் அவனைக் கரைக்கு இழுத்து வந்து காப்பாற்றி அந்த ஆரஞ்சுத் தோட்ட முதலாளியிடம் அவனைக் கொண்டு போய்விட்டனர்.

முதலாளி அவனை நோக்கி உன்னுடைய பெயர் என்ன எனக் கேட்டதற்கு அவன் என்னுடைய பெயர் பூ இருக்கும் பிஞ்சு திருடி எனக் கூறினான். சரி நீ இவர்களுடன் போய் என் ஆரஞ்சு தோட்டத்தில் வேலை செய் எனக் கூறினான் முதலாளி. இவனும் அதனைக் கேட்டு தோட்டத்தில் வேலை செய்பவர்களோடு ஆரஞ்சுத் தோட்டத்திற்குப் போனான். அங்கே இரண்டு மூன்று நாட்கள் இருந்தான்.

ஒவ்வொரு நாளும் ஆரஞ்சு தோட்டத்தில் இருக்கும் மரங்களிலும் பூக்களை மட்டும் விட்டுவிட்டுப் பிஞ்சுக் காய்களையும் பழங்களையும் பறித்துத் தின்றான். ஒருநாள் ஆரஞ்சுத் தோட்ட முதலாளி தன் தோட்டத்தில் ஆரஞ்சுப் பழங்களைப் பறிக்க வந்தான். அப்போது ஒரு மரத்தில் கூட காயும் பழமும் இல்லை. ஆரஞ்சுப் பூக்கள் மட்டுமே இருந்தன. இதைக் கண்டு சந்தேகித்த முதலாளி அந்தத் தோட்டத்திலும் ஒற்றனை வைத்து ஆரஞ்சுப் பிஞ்சுகளைத் திருடியவனைக் கண்டுபிடித்தனர். மீண்டும் அவனை அடித்து உதைத்து பூ இருக்கும் பிஞ்சு திருடியை அதே மூங்கில்களில் வைத்துக் கட்டி ஆற்றில் வீசினர். மீண்டும் தன் திருட்டு வேளையினால் ஆற்றிலேயே ஆரஞ்சு தோட்ட முதலாளி அவனை வீசி எறிந்தான். அவ்வாறே ஆற்றில் அவன் மீண்டும் மிதந்து சென்றான்.

சிறுவன் மீண்டும் ஆற்றில் மிதந்து சென்றான். அப்போது ஆறு சோளக்காட்டிற்கு நடுவே ஓடியது.

சோளக் காட்டில் நான்கு காவலாளிகள் வேலை செய்து கொண்டிருந்தனர். அவர்களைக் கண்ட அவன்,

எல்லாருக்கும் நல்ல பையன் ஆத்தோடு வருது
எல்லாருக்கும் நல்ல பையன் ஆத்தோடு வருது

எனக் கூறினான்.

அதைக் கேட்ட அந்த நான்கு காவலாளிகளும் அவனைக் காப்பாற்றிக் கரையில் கொண்டு சேர்த்தனர். சரி நீ இங்கேயே இந்தச் சோளக்காட்டுக்குக் காவலாக இரு. நாங்கள் போய் சாப்பிட்டு விட்டு மதியம் சாப்பாடு கொண்டு வருகிறோம் எனக் கூறினர்.

இரண்டு பேர் அவனிடம் தம்பி உன் பெயர் என்ன என்று கேட்டனர். அதற்கு அவன் என் பெயர் பொட்டிவூயும் பெருக்கித் தீனி எனக் கூறினான். நான்கு காவலர்களும் தங்கள் வீட்டுக்குச் சென்றனர். அவர்கள் சென்ற உடனேயே இவன் தோட்டம் முழுவதும் சோளக்கருது முற்றிக் கிடப்பதைக் கண்டவுடன் அந்தச் சோளக்காட்டில் தீவைத்தான். நெருப்பின் சுவாலையால் சோளக் கருதுகள் வெடித்துச் சிதறின. இதைக் கண்டதும் அவன் சிதறும் சோளத்தைப் பொறுக்கித் தின்ன ஆரம்பித்தான்.

நான்கு காவலர்களும் சோளக் காட்டில் தீ பிடித்ததைக் கண்டதும் பதறியடித்துக் கொண்டு ஓடிவந்தனர். ஐயோ! நம் சோளக்காடு பற்றி எரிகிறதே என்ன செய்வது எனச் சோளக்காட்டிற்குள் வருவதற்குள் சோளக்காடு முழுவதுமாக எரிந்து சாம்பலானது.

நாம் இங்கே காவலுக்கு விட்டுச் சென்றவன் நெருப்பில் கருகி இறந்துவிட்டான் என நினைத்து அனைவரும் தேடினர்.

அப்போது அவன் சோளப் பொறிகள் தெறித்து விழுவதைப் பொறுக்கித் தின்பதைக் கண்ட அவர்கள் சோள்காட்டிற்குத் தீ வைத்தது இவன்தான் எனக் கண்டுபிடித்து அடியும் உதையும் கொடுத்து மீண்டும் அவனை அதே மூங்கில்களில் கட்டி ஆற்றில் எறிந்தனர்.

கடைசியாக அந்தச் சிறுவன் துணி துவைத்துக் கொண்டிருந்த டோபிகள் இடத்திற்குப் போனான். அங்கே போனபோதும்,

எல்லாருக்கும் நல்ல பையன் ஆத்தோடு வருது
எல்லாருக்கும் நல்ல பையன் ஆத்தோடு வருது

எனக் கத்தினான்.

இதைக் கேட்ட ஒரு கணவனும் மனைவியும் ஆற்றிலிருந்து அவனைக் கரைக்கு இழுத்து வந்தனர். அவர்கள் துணி வெளுப்பவர்கள். அந்த டோபிகள் தாம் வைத்திருந்த உணவை அவனுக்குக் கொடுத்தனர். அவனும் அதை முழுவதுமாக உண்டான். டோபிப் பெண்ணின் கணவன் தான் துவைத்த துணிகளை எல்லாம் காயப் போடுவதற்காக புல்வெளிக்குக் கொண்டு போய் விட்டான்.

அவன் துவைத்த துணிகள் எல்லாம் பட்டுத் துணிகளும் முத்துக் கோர்த்த ஆடைகளும் தான். அனைத்தும் அரசர்களின் ஆடைகள். டோபியின் மனைவி சாப்பிடும் அந்தப் பையனை நோக்கி உன்னுடைய பெயர் என்ன? என்று கேட்டாள். அதற்கு வந்தான் வந்தான் எனக் கூறினான் அவன். உண்டு முடித்த பிறகு அந்தப் பாத்திரத்தைக் கழுவுவதற்கு அவன் ஆற்றிற்கு எடுத்துச் சென்றபோது அவளுடைய கணவன் வந்து அவனிடம் உன்னுடைய பெயர் என்ன? என்று கேட்டான் அவனிடம் என் பெயர் போனான் போனான் என்று கூறினான்.

சரி நாங்கள் துவைத்த துணிகளுக்குக் காவலாக இரு நாங்கள் வீட்டுக்குப் போய்விட்டு வருகிறோம் எனக் கூறி இருவரும் போன வேளையில், அந்தப் புல்வெளியில் காய்ந்து கொண்டிருந்த அனைத்துத் துணிகளையும் ஒரு மூட்டையாகக் கட்டி தலையில் சுமந்தபடி போய்விட்டான அந்தச் சிறுவன். வீட்டிற்குச் சென்றிருந்த கணவனும் மனைவியும் தாங்கள் துவைத்த துணிகளை எடுத்துச் செல்ல அங்கு வந்தனர். ஆனால் புல்வெளியில் ஒரு துணி கூட இல்லை. அங்கே காவலுக்கு இருக்க வைத்த அந்தச் சிறுவனும் இல்லை. அதனால் இருவரும் இரு திசைகளில் பிரிந்து போய் அவனைத் தேடினர்.

கணவன் போனான் போனான் என அழைத்தான். மனைவியோ வந்தான் வந்தான் என அழைத்தாள். அதைக் கேட்ட கணவன் மனைவியிடம் எங்கே எங்கே எனக் கேட்டான். என்ன என்றாள். நீ தானே வந்தான் வந்தான் எனக் கூறினாய் அதனால் தான் ஓடிவந்தேன் அவன் வந்துவிட்டானா? என்றான். இல்லை என்னிடம் அவன் பெயரை வந்தான் வந்தான் என்றுதான் சொன்னான் என்றாள்.

மனைவியிடம் கணவன் ஐயோ நம்மை ஏமாற்றி விட்டான் ஏமாற்றிவிட்டான். என்னிடம் அவன் பெயரைப் போனான் போனான் எனக் கூறினான். நாம் துவைத்த துணிகளை எல்லாம் இனி எப்படி அரசர்களுக்குக் கொண்டுபோய் கொடுப்போம். நமக்கு அவர்கள் தண்டனை தருவார்கள் என அஞ்சியே இருவரும் அந்த ஊரை விட்டு வேறு நாட்டுக்கு ஓடிவிட்டனர்.

துணிகளை மூட்டைக் கட்டி எடுத்துச் சென்ற அவன் ஒரு பெரிய ஆலமரத்தில் அதனைக் கட்டித் தொங்கவிட்டான். அந்த மரத்திலேயே தானும் ஒரு கிளையில் அமர்ந்து கொண்டான்.

அவ்வழியே சென்று கொண்டிருந்த வணிகன் ஒருவன் அப்பா இந்த மரம் என்ன பட்டுக் காய்க்கிற மரமா? என்றான். அதற்கு இவன் வணிகனிடம் ஆமாம். இது பட்டுக் காய்க்கிற மரம் தான். ஆனால் இது வருஷத்துக்கு ஒரு முறைதான் காய்க்கும் என்றான். சரி அப்படியானால் எனக்கு இதை விலைக்குத் தருகிறாயா? என்று கேட்க அதற்குச் சிறுவன் தருகிறேன் என்றான். அவன் விலை என்ன என்று கேட்டான். அதற்கு அவன் இந்த மரத்தை வேண்டுமானால் நான் தருகிறேன். ஆனால் இந்தப் பட்டுத் துணியை நான் எடுத்துக் கொள்வேன் என்றான் சரி சரி நான் இதற்கு ஒப்புக் கொள்கிறேன் என்றான் வியாபாரி.

வணிகன் சரி நீ விலை என்ன என்று சொல் நான் தருகிறேன். இந்த மரத்தை எனக்குக் கொடு என்றான். அதற்கு அவன் வாளுக்கு ஆயிரம் தோளுக்கு ஆயிரம் எனப் பன்னீராயிரம் தந்தால் நான் இந்த மரத்தைத் தருகிறேன் என்றான் அவன். வணிகனும் அவன் கேட்ட பணத்தைக் கொடுத்து மரத்தை வாங்கினான்.

வணிகனிடம் இந்த மரத்தில் தண்ணீரை நன்றாகக் கொதிக்க வைத்து ஊற்றுங்கள் அப்போதுதான் மரத்தில் அடுத்த வருஷம் நிறைய காய்க்கும் என்று கூறி அந்த வணிகனின் குதிரையிலேயே துணி மூட்டையையும் பணமூட்டையையும் ஏற்றிச் சென்றான். காலையிலும் மாலையிலும் மரத்தில் நீரைக் கொதிக்க வைத்து ஊற்றினான். இரண்டு நாள்களில் மரம் கருகிப் போனது. அப்போதுதான் தன்னை ஏமாற்றிவிட்டு சிறுவன் சென்றது அவனுக்குத் தெரிந்தது.

குதிரை ஓட்டிக் கொண்டு போன அந்தப் பையன் ஒரு அரசனின் அரண்மனையில் போய் இன்று இரவு எனக்கு உங்கள் அரண்மனையில் தங்குவதற்கு இடம் கொடுங்கள் என்றான். தன்னுடைய குதிரையை மட்டும் குதிரைத் தொழுவத்தில் கட்டப் போவது இல்லை எனக் கூறினான். அதற்கு அரசன் அவனை நோக்கி ஏன் அப்படி என்ன சிறப்பு எனக் கேட்டான். அரசனிடம் அவன் தினமும் காலையில் என் குதிரையின் சாணத்தில் பணம் இருக்கும் அது பணம் கழியும் குதிரை என்று கூறினான்.

இதைக் கேட்ட அரசன் அவன் சொல்லை நம்பவில்லை. அதற்கு அவன் நாளை காலையில் வந்து பாருங்கள். நான் அதை நிரூபித்துக் காட்டுகிறேன் என்றான். நடுச்சாம வேளையில் அனைவரும் உறங்கிய பிறகு குதிரையின் சாணத்தில் சில்லரைப் பணத்தைப் போட்டான். மறுநாள் காலையில் அரசன் அவன் இருந்த இடத்திற்கு வந்தான்.

குதிரையின் சாணத்தை ஒரு வாளியில் போட்டுக் கரைத்து அதில் தான் போட்ட சில்லரைப் பணங்களை வாரி வாரி எடுத்தான். அதைப் பார்த்த அரசன் என்ன ஒரு அதிசயம் பணத்தைக் கழியும் குதிரையா? இதை நாம் வைத்துக் கொண்டால் நம்மைப் போன்ற கோடீஸ்வரன் இந்த உலகில் இருக்க மாட்டான் என நினைத்து அரசன் அந்தக் குதிரையை அவனிடம் விலை பேசினான். அரசனிடம் வாளுக்கு ஆயிரம் தோளுக்கு ஆயிரம் பன்னீராயிரம் கொடுங்கள் என்றான்.

அரசனும் அவன் கேட்ட பணத்தைக் கொடுத்தான்.

குதிரையை விட்டுவிட்டு அவன் பண மூட்டையையும் துணி மூட்டையையும் எடுத்துக் கொண்டு தன் தந்தை இருக்கும் இடத்தை நோக்கி நடக்க ஆரம்பித்தான். அதற்குமுன் அரசனிடம் இந்தக் குதிரைக்கு நீங்கள் புல்லைக் காட்ட மட்டும் செய்யுங்கள். உணவாகக் கொடுக்க வேண்டாம். தண்ணீரைக் காட்டுங்கள் குடிக்கவிட வேண்டாம். அது மட்டுமில்லாமல் பணத்தைச் சாணத்துடன் போடவில்லை என்றால் இரண்டு பக்கத்தையும் (அதாவது) வயிற்றுப் பகுதியைக் கட்டையால் அடியுங்கள் என்றான்.

அரசனும் அவன் கூறியவாறே செய்தான். குதிரை பசியால் மெலிந்து நடக்கக்கூட முடியாமல் இருந்தது. ஆனாலும் அவன் பணம் வேண்டுமென்று நினைத்த அரசன் குதிரைக்காரனை அழைத்து இனி கட்டையால் அடி அப்போதுதான் பணம் கிடைக்கும் என்றான். குதிரைக்காரனும் குதிரையைக் கட்டையால் அடித்து குதிரைத் தொழுவத்தில் கொண்டு போய் அதைக்கட்டினான். மறுநாள் காலையில் குதிரைக்காரனும் அரசனும் வந்து பார்த்தனர். குதிரை இறந்து கிடந்தது. அரசனிடமும் பணத்தை ஏமாற்றி அவன் கொண்டு சென்றான்.

கடைசியாக தன் தந்தை இருந்த காட்டுக்கே அவன் சென்றான். இரண்டு மூட்டைப் பணத்தையும் பட்டாடைகளையும் நகைகளையும் கொண்டு போய் அவன் தந்தையிடம் கொடுத்தான். தன்னுடைய மகன் சம்பாதித்து வந்தான் என அவனுடைய தந்தை மகிழ்ச்சி அடைந்தான். ஆனால் ஏமாந்தவர்களுக்கும் அவனுக்கும் இறைவனுக்கும் மட்டுமே தெரியும். அவன் தன்னை நம்பியவர்களை எல்லாம் மோசம் செய்தான் என்று.
………….
(தகவல். மங்கம்மாள் பாட்டி, வயது72. வில்லோனி செட்டில்மென்ட். 13.10.2018.)

Leave a comment

Trending