மரபெண் 2: காளிகட்ஓவியங்கள்: திடம், சமகாலத்தன்மை, சமூகவிமர்சனம்
ஷாராஜ்
இந்திய ஓவிய மரபுகள் என்றதுமே எனக்கு நினைவுக்கு வருவதில் இரண்டாவது இடம் வகிக்கக்கூடியது காளிகட்ஓவியம் (Kalighat Painting).ஆனால், சமகாலத்தன்மை, திடமான வெளிப்பாட்டு முறைகள், எளிமை, துரித வரைதல், சமூக விமர்சனம் ஆகியவற்றால் மிக நெருக்கமானது என்றால் அது காளிகட்ஓவிய மரபு மட்டுமே!
மற்ற இந்திய ஓவிய மரபுகளுக்கும், காளிகட்ஓவிய மரபுக்கும் இடையே மிக முக்கியமான இரு மாறுபாடுகள் உள்ளன.
- பிற இந்தியஓவியமரபுகள் சில பல நூற்றாண்டுகளுக்கோ, ஓரிரு ஆயிரத்தாண்டுகளுக்கோ முற்பட்ட, நீண்ட காலத்துக்கு முந்தைய தோற்ற வரலாறு கொண்டவை. காளிகட்ஓவிய மரபு, இரு நூற்றாண்டு வயது மட்டுமே கொண்டது.
- மற்றஇந்தியஓவியமரபுகளில் அந்தந்தக் காலகட்ட வாழ்வியல் பதிவாகியிருக்குமே தவிர, நவீன காலக் கலை – இலக்கியப் படைப்புகளுக்கு உரிய வகையிலான கருத்தாக்கங்களோ, சமூக விமர்சனங்களோ இராது. காளிகட்ஓவியத்தில் சமகால வாழ்க்கை பதிவாவதோடு, சமூக விமர்சனங்களும் இடம்பெறும்.
மேலே குறிப்பிட்டதில் இரண்டாவது பண்பு, காளிகட்ஓவியத்தை, கருத்தாக்க ரீதியில் வரையப்படுகிற நுண்கலை ஓவியத்துக்கு – குறிப்பாக நவீன ஓவியத்துக்கு – நெருக்கமாக ஆக்குகிறது.
இந்தஓவிய மரபுபாணி, அதன்ஆற்றல்மிக்கதூரிகைத் தீற்றல்கள், அடர்வண்ணங்கள், வடிவங்களின்எளிமைப்படுத்துதல்ஆகியவற்றால்சிறப்பியல்புபெற்றது.என்னைப் பெரிதும் கவர்வதும் இந்த அம்சங்கள்தான்.அதோடு, சமகாலத் தன்மையும் சமூக விமர்சனங்களும் அதிகமாகவே பிடிக்கும்.என்றாலும் இவை நுண்கலை ஓவியம் அல்லது நவீன ஓவியம் அளவுக்கு ஆழமான கருத்தாக்கம், படைப்புத்தன்மை, சமூக விமர்சனம் ஆகிவற்றைக் கொண்டிராது.ஓவிய மரபுகளில் இது மட்டுமே அத்தகைய தன்மையைச் சிறிதளவேனும் கொண்டுள்ளது என்பதுதான் முக்கியம்.
*******
காளிகட் ஓவியங்களின் தோற்றம், 19 ஆம் நூற்றாண்டின் ஆரம்பகாலக் கொல்கத்தாவின் வளர்ச்சியுடன் நெருங்கிய தொடர்புடையது. இந்தப் பெருநகரம், பிரிட்டிஷ் காலனித்துவ ஆட்சியின் கீழ் ஒரு முக்கிய வர்த்தக, நிர்வாக மையமாக மாறிக்கொண்டிருந்தது. அப்போது, மிட்னாபூர், ஹூக்ளிபோன்ற வங்காள கிராமப்புறப் பகுதிகளிலிருந்து வந்த,பட்டுவா (Patua)எனப்படும் பாரம்பரியச் சுருள் ஓவியக் கலைஞர்கள் (scroll painters), பிரசித்தி பெற்ற காளி கோயிலைச் சுற்றி உள்ள சந்தைப் பகுதிக்குக் குடிபெயர்ந்தனர்.
பாரம்பரியமாக, இந்தப் பட்டுவா சமூகத்தினர் கிராமங்களில் மதக் கதைகளையும், புராணக் காட்சிகளையும் சுருள் ஓவியங்களில் வரைந்து, அவற்றை மக்களுக்குக் காட்டி, பாடல்கள் பாடி வாழ்க்கையை நடத்தினர். காளிகட் கோயில், வங்காளம் முழுவதிலிருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்களை ஈர்க்கும் முக்கிய யாத்திரைத் தலமாக இருந்தது. இந்த பக்தர்களுக்கு நினைவுப் பரிசாகவும், எளிதில் வாங்கிச் செல்லக்கூடியதாகவும், விரைவாக உருவாக்கக்கூடியதாகவும் புதிய கலை வடிவத்தின் தேவை ஏற்பட்டது. இந்தத் தேவையை உணர்ந்த பட்டுவா கலைஞர்கள், தங்கள் பாரம்பரியச் சுருள் ஓவிய பாணியைபுதிய நகரச் சூழலுக்கும், வளர்ந்து வரும் சந்தைக்கும் ஏற்றவாறு மாற்றியமைத்தனர். இதன் விளைவாகப்பெரிய சுருள் ஓவியங்களுக்குப் பதிலாக, தனிப்பட்ட தாள்களில் விரைவாக வரையக்கூடிய சிறிய ஓவியங்களை உருவாக்கத் தொடங்கினர். இதுவே காளிகட் ஓவியங்களின் பிறப்பிற்கு வழிவகுத்தது.
ஆரம்பத்தில், இந்த ஓவியங்கள் மதக் கருப்பொருள்களை மட்டுமே கொண்டிருந்தன. காளி, சிவன், துர்கா, லட்சுமி, கணபதி போன்ற இந்து தெய்வங்களின் உருவங்கள், புராணக் கதைகள் சித்தரிக்கப்பட்டன. ஆனால் விரைவில் ஓவியர்கள் தங்களைச் சுற்றியுள்ள சமூகத்தையும், நகர வாழ்க்கையையும் தமது படைப்புகளில் வெளிப்படுத்தலாயினர். அன்றாடவாழ்க்கைக்காட்சிகள், பிரிட்டிஷ் ஆட்சியின் தாக்கம், ஊழல்கள், புதிய “பாபு” கலாச்சாரம், சமூகச் சீர்திருத்தங்கள்ஆகியவை அவர்களின் ஓவியங்களில் இடம்பிடித்தன.இதன் மூலம்காளிகட் ஓவியங்கள் வெறும் மதக் கலையாக இல்லாமல், அன்றாட வாழ்வின் ஆவணமாகவும், சமூகவிமர்சனக்கருவியாகவும்மாறின.
காளிகட் ஓவியங்கள் அதன் குறுகிய கால இருப்பிலேயே (சுமார் 1830-கள் முதல் 1930-கள் வரை) பல கருப்பொருள்களில் பரிணமித்தன.
மதக் கருப்பொருள்கள்:
ஆரம்பகட்டத்தில்பெரும்பாலும் இந்து மத தெய்வங்களான காளி, துர்கா (சிங்கத்தின் மீது அமர்ந்திருக்கும் துர்கா), சிவன், கிருஷ்ணர், ராமர், லட்சுமி, சரஸ்வதி, கார்த்திகேயன், கணேஷ் போன்ற தெய்வங்களின் உருவங்கள் மிக முக்கியமான கருப்பொருள்களாக இருந்தன. இந்தக் கடவுள்கள் பெரும்பாலும் மனித உருவங்களாகவும், அன்றாட வங்காள மக்களின் உடைகள், ஆபரணங்களுடனும் சித்தரிக்கப்பட்டன.

ராமாயண, மகாபாரத இதிகாசங்களின் சில நிகழ்வுகள், பாகவத புராணத்தில் கூறப்படும் கிருஷ்ண லீலைகள், பிற இந்து புராணக் கதைகளின் காட்சிகள் எளிமையாகவும், நேரடியாகவும் வரையப்பட்டன. உதாரணமாக, கிருஷ்ணர் கோபியர்களுடன் விளையாடுவது, அல்லது ராமர் அசுரர்களை அழிப்பது போன்ற காட்சிகள்.
அன்றாட வாழ்க்கைக் காட்சிகள்:
வீடுகளில் பெண்கள் வேலை செய்தல், சந்தைக் காட்சிகள்ஆகியவையும், இசைக்கலைஞர்கள், நடனக் கலைஞர்கள், விலங்குகள், பறவைகள், பூக்கள் ஆகியவையும் ஓவியங்களில் இடம்பெற்றன.
சமூகக் கருப்பொருள்கள்மற்றும்விமர்சனங்கள்:
19 ஆம் நூற்றாண்டின் மத்தியில், பிரிட்டிஷ் ஆட்சியின் கீழ் கொல்கத்தா ஒரு புதிய நகர நாகரிகத்தை உருவாக்கியது.புதிய பணக்கார வர்க்கம், “பாபுக்கள்” என்று அழைக்கப்பட்டனர். இவர்கள் மேற்கத்தியக் கலாச்சாரத்தால் ஈர்க்கப்பட்டு, ஆடம்பரமாக வாழ்ந்தனர். காளிகட் ஓவியர்கள் இந்த சமூக மாற்றங்களையும், அதன் விளைவுகளையும் தங்கள் ஓவியங்கள் மூலம் விமர்சித்தனர்.பாபுக்கள், அவர்களின் ஆடம்பரமான வாழ்க்கை முறை (விலையுயர்ந்த ஆடைகள், காலணிகள், சிகரெட்டுகள், மது அருந்துதல்), மற்றும் சமூக நடத்தை ஆகியவை கேலிச்சித்திரங்களாக (caricatures) சித்தரிக்கப்பட்டன.
‘மீனுடன் பூனை’ஓவியம், துறவி வேடமிட்ட பூனை, மீனைத் திருடுவதைச் சித்தரித்து, மதப் போர்வையில் நடக்கும் பாசாங்குத்தனத்தையும், ஊழலையும் விமர்சித்தது.
அப்போது வங்காள சமூகத்தில் பெண்களின் நிலை, அவர்களின் போராட்டங்கள், சமூக அழுத்தம் ஆகியவற்றைக்காளிகட் ஓவியங்கள் தைரியமாகப் படம்பிடித்தன. உதாரணமாக, ‘கல்வியறிவு பெற்ற பெண்’ஓவியம், பாரம்பரியச் சமூகம் ஒரு படித்த பெண்ணை எவ்வாறு பார்த்தது என்பதைக் காட்டியது. விதவைகள், வரதட்சணைக் கொடுமையால் பாதிக்கப்பட்ட பெண்கள் போன்றோரும் சித்தரிக்கப்பட்டனர்.
காலனித்துவ அதிகாரிகள், நிலப்பிரபுக்கள் ஆகியோரின் அதிகார துஷ்ப்ரயோகச் செயல்கள், சமூகத்தில் நிலவிய ஊழல்கள், நீதித்துறைச் சீர்கேடுகள், சமூகக் கொடுமைகள் ஆகியவை ஓவியங்கள் மூலம் விமர்சிக்கப்பட்டன. உதாரணமாக, தாரகேஸ்வர்படுகொலைபோன்ற முக்கிய சமூக நிகழ்வுகள், ஓவியங்கள் மூலம் பதிவு செய்யப்பட்டன.
*******
காளிகட் ஓவியங்களில் தாரகேஸ்வர் சிற்றுறவு (Tarakeswar Affair) அல்லது தாரகேஸ்வர் படுகொலை கருப்பொருள் மிகப்பிரபலமானது.வழக்கமான மதக் கருப்பொருள்களிலிருந்து விலகிச் சென்று சமகால நிகழ்வுகளைப் பதிவு செய்ததன் காரணமாக இந்திய மரபு ஓவிய வரலாற்றில் முக்கியத்துவம் வாய்ந்ததும்கூட.
இது 1873 ஆம் ஆண்டு மேற்கு வங்காளத்தில் நடந்த ஒருபரபரப்பானகொலைச்சம்பவம்மற்றும்ஊழலைக்குறிக்கிறது.ஊர்: கொல்கத்தாவிற்கு அருகிலுள்ள புகழ்பெற்ற தாரகேஸ்வர் சிவன் கோயில். பாத்திரங்கள்: எலோகேஷி (Elokeshi) – 16 வயதுடைய திருமணமான பெண். நபின் சந்திர பானர்ஜி (Nobinchandra Banerji) – எலோகேஷியின் கணவர்.மாதவச்சந்திர கிரி (Madhavchandra Giri) – தாரகேஸ்வர் கோயிலின் தலைமை மஹந்த் (தலைமைக் குரு).
குழந்தை பாக்கியம் வேண்டி எலோகேஷி கோயிலின் மஹந்த்தைச் சந்திக்கச் சென்றபோது, மஹந்த் அவளைத் தவறாகப் பயன்படுத்திக்கொண்டதாகவும், பின்னர் இது கள்ள உறவாகத் தொடர்ந்ததாகவும் கூறப்படுகிறது. தனது மனைவி மஹந்துடன் வைத்திருந்த உறவு குறித்து அறிந்த நபின், கோபம் மற்றும் அவமானத்தின் உச்சத்தில், 1873 மே 27 அன்று எலோகேஷியின் கழுத்தை மீன் வெட்டும் கத்தியால் அறுத்துக் கொன்று, பின்னர் சரணடைந்தார்.

இந்த விவகாரம் கொல்கத்தா சமூகத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.பாரம்பரிய மத நம்பிக்கைகள் கொண்ட ஒரு தலைமை குருவின் ஒழுக்க வீழ்ச்சி, ஆங்கிலேயர் காலத்திய சட்டம் மற்றும் நீதி விசாரணை ஆகியவற்றை இது கேள்விக்குள்ளாக்கியது.காளிகட் கலைஞர்கள் இந்த நிகழ்வை வணிக ரீதியாகவும், சமூக விமர்சனத்திற்காகவும் ஒரு கருவியாகப் பயன்படுத்தினர்.
ஓவியங்களில் தாரகேஸ்வர் விவகாரம் பல தொடர் காட்சிகளாகப் பதிவு செய்யப்பட்டது.
- மஹந்த் எலோகேஷிக்கு வெற்றிலை (பாண்) கொடுப்பது அல்லது விசிறி விடுவது போன்ற, இருவருக்குமிடையேயான ரகசிய உறவைத் தொடங்கும் காட்சிகள்.
- நபின் ஆவேசத்துடன் எலோகேஷியின் தலையைத் துண்டிப்பது அல்லது அது தொடர்பானது.
- ஆங்கிலேய நீதிபதி, வழக்கறிஞர்கள், கூண்டில் நிற்கும் மஹந்த் போன்ற வழக்கு விசாரணைக் காட்சிகள்.
- மஹந்த் சிறைக்குச் சென்று, ஆயில் பிரஸ் (Oil Press) சுற்றுவது அல்லது தோட்ட வேலை செய்வது போன்ற கடின வேலைகளில் ஈடுபடுவது.

காளிகட் கலைஞர்கள் இந்த ஓவியங்களினூடாக சமூக விமர்சனத்தை முன்வைத்தனர்.மஹந்த்பாலியல் குற்றவாளியாகவும், மதகுரு / பூசாரியின் போலி முகமாகவும்சித்தரிக்கப்பட்டார் அல்லது அடையாளப்பட்டார்.பல ஓவியங்கள் நபினைத் தனது கௌரவத்தைக் காப்பாற்றிய வீரனாகவே, ஆணாதிக்கப் பார்வையில் சித்தரித்தன.ஒழுக்கக்கேட்டில்ஈடுபட்ட மனைவியைக் கொன்றதைச் சமூகம் நியாயப்படுத்தியது.
காளிகட் ஓவியங்கள், பொதுவாகப் புராணக் கடவுள்களை வரைவதிலிருந்து விலகி, சமகால நிகழ்வுகள், ஊழல்கள், சமூகச் சீர்கேடுகளைப் பதிவு செய்யத் தொடங்கியதற்கு இந்தச் சம்பவம் திருப்புமுனையாக அமைந்தது. இது, இந்து மதக் கலையான காளிகட் ஓவியம், எவ்வாறு தனது மரபுகளைத் தாண்டி சமூகப் பிரக்ஞை மற்றும் வணிக யதார்த்தத்தின் அடிப்படையில் கருப்பொருள்களைத் தேர்வு செய்தது என்பதற்கு மிக முக்கியமான எடுத்துக்காட்டாகும்.
*******
காளிகட் ஓவியங்கள்அவற்றின் எளிமை, வீரியம், நேரடித் தன்மை ஆகியவற்றிற்காகத் தனித்து நிற்கின்றன.
பட்டையானதும் வலுவானதுமான கோடுகள்:
இது காளிகட் ஓவியங்களின் மிக முக்கியமான சிறப்பம்சம். ஓவியங்கள் குறைந்த எண்ணிக்கையிலான, ஆனால் துல்லியமானதும் வலுவானதுமான கோடுகளால் வரையப்பட்டன. இந்தக் கோடுகள், உருவங்களுக்கு உறுதியான வரையறையையும், இயக்கத்தையும் கொடுத்தன. ஒரே மூச்சில் வரையப்பட்ட (single, sweeping stroke) இந்தக் கோடுகள், ஓவியங்களுக்கு உயிரோட்டத்தையும், ஆற்றலையும் கொடுத்தன.
பிரகாசமானவண்ணங்கள்:
சாயங்கள் பெரும்பாலும் தாவரங்கள், பிற இயற்கைத் தாதுக்களிலிருந்து பெறப்பட்டன.சிவப்பு, மஞ்சள், நீலம், பச்சை, கருப்பு, வெள்ளைபோன்றபிரகாசமானவண்ணங்கள்பூசப்பட்டு, ஓவியங்களுக்கு உயிர்த்துடிப்பானதோற்றத்தைஅளித்தன.
எதார்த்தமானஉருவஅழகியல்:
முகலாய அல்லது ராஜபுத்திர ஓவியங்களின் செவ்வியல்தன்மையான மென்மைக்கு மாறாக, காளிகட் ஓவியங்களில் உள்ள மனித உருவங்கள் எதார்த்தமான, நாட்டுப்புற அழகியலைக் கொண்டிருந்தன. குறிப்பாக, கண்கள் அகலமாகவும், கூர்மையாகவும், நீளமாகவும் வரையப்பட்டு, உருவங்களுக்குக் குறிப்பிட்ட வெளிப்பாட்டைக் கொடுத்தன. உடல் அமைப்புகள் உறுதியாகவும், எளிமையாகவும் சித்தரிக்கப்பட்டன.
மினிமலிசம்:
காளிகட்ஓவியங்களின்முக்கிய சிறப்பம்சங்களில் ஒன்று அதன் மினிமலிசம்.
வீணானஅலங்காரங்கள், நுணுக்கங்கள்இல்லாதது:
மற்ற பாரம்பரிய இந்திய ஓவியங்களில் காணப்படும் விரிவான அலங்காரங்கள், ஆடம்பரமான ஆபரணங்கள், நுட்பமான பின்னணி வேலைப்பாடுகள் காளிகட் ஓவியங்களில் அரிது. ஓவியர்கள்முக்கியக் கருப்பொருளை மட்டுமே மையமாகக் கொண்டு, தேவையற்ற விவரங்களைத் தவிர்த்தனர்.
வலுவானகோடுகளைமட்டுமேபயன்படுத்துதல்:
உருவங்களின் வடிவம் மற்றும் இயக்கத்தை வெளிப்படுத்த, அடர்த்தியான கோடுகள் மட்டுமே பயன்படுத்தப்பட்டன. இது, ஓவியத்திற்கு நேரடித் தன்மையையும், சக்தியையும் கொடுத்தது.
தேவையானஉருவங்களைமட்டுமேகாட்சிப்படுத்துதல்:
ஓவியத்தில் மிகக் குறைந்த எண்ணிக்கையிலான உருவங்களே சித்தரிக்கப்படும். இவை, கதையின் மையக்கருத்தையோ அல்லது சமூகச் செய்தியையோ நேரடியாக வெளிப்படுத்தும்.
பின்புலத்தைப்பெரும்பாலும்வெற்றிடமாகவிடுவது:
பெரும்பாலான காளிகட் ஓவியங்களில் பின்னணி மிகக் குறைவாகவே இருக்கும் அல்லது முற்றிலும் வெற்றிடமாக விடப்படும். இது, முக்கிய உருவங்களின் மீது பார்வையாளரின் கவனத்தைக் குவித்து, ஓவியத்திற்கு நவீனத்தன்மையைக் கொடுத்தது. இந்த எளிமை, ஓவியங்களை விரைவாகவும், பெரிய அளவில் தயாரிக்கவும் உதவியது.
காளிகட் ஓவியங்களின் கோட்டு வேலைப்பாடு, துல்லியம் மற்றும் வேகத்தின் கலவையாகும்.நவீன ஓவியர்கள் இந்தக் கலையிலிருந்து கோடுகளின் பொருளாதாரம் (Economy of Line) என்ற தத்துவத்தைக் கற்கலாம்.அதாவது, குறைந்தபட்சக் கோடுகளைப் பயன்படுத்தி, அதிகபட்ச வடிவத்தையும், உணர்ச்சியையும் வெளிப்படுத்துவது.இது, நவீன வெளிப்பாட்டுவாதம் (Expressionism), பொழிப்புக் கலை (Abstract Art) பாணிகளில் காணப்படுகிற ‘கோடுகளின் சக்தி’யுடன்நேரடியாகத் தொடர்புடையது.பின்னணியில் வெற்றிடம் விடுவது, முக்கிய உருவத்தின் வீரியத்தையும், நாடகத்தன்மையையும் மேலும் மேம்படுத்துகிறது.இது, ‘எதைச் சேர்க்க வேண்டும்’ என்பதைவிட, ‘எதைத் தவிர்க்க வேண்டும்’ என்றதெளிவான நவீன அழகியலைக் குறிக்கிறது.
*******
காளிகட் ஓவியங்கள், 19 ஆம் நூற்றாண்டு வங்காளச் சமூகத்தின் கலாச்சாரத்தையும், சமூக மாற்றங்களையும் பிரதிபலித்தன. நகரமயமாக்கல், பிரிட்டிஷ் காலனித்துவம், புதிய சமூக வகுப்புகளின் எழுச்சி போன்ற மாற்றங்களை வெளிப்படுத்தின. அவை சமூகத்தின் நல்லதும் கெட்டதுமான பக்கங்களை, சில சமயங்களில் நகைச்சுவையுடனும், சில சமயங்களில் கூர்மையான விமர்சனத்துடனும் படம்பிடித்தன.இவற்றின் மூலம் சமூகக்கண்ணாடியாக இந்த “நவீன மரபு” ஓவியங்கள் செயல்பட்டன.
இது சாமானிய மக்களுக்கானகலைவடிவம் என்பது அடிக்கோடிட்டுக் குறிப்பிட வேண்டியதாகும்.அரசர்கள், பிரபுக்கள், நிலச்சுவான்தார்கள், பிற செல்வந்தர்கள் ஆகியோருக்காக அல்லாமல், ஏழை எளிய மக்களுக்காக உருவாக்கப்பட்ட ஓவியங்கள்.இதனால், அவை மக்களின் அன்றாட வாழ்வு, நம்பிக்கைகள், மற்றும் கவலைகளைப் பிரதிபலித்தன. சந்தைகளில்விற்கப்பட்டதால்இந்த ஓவியங்கள், “பஜார் கலை” (Bazaar Art) என்றும் அழைக்கப்பட்டன.
பட்டுவா ஓவியர்கள்தங்கள் பாரம்பரியக் கலை வடிவத்தை, மாறிவரும் சமூகத்திற்கும், சந்தைத் தேவைக்கும் ஏற்ப எவ்வாறு மாற்றியமைத்துக்கொண்டனர் என்பதற்குக்காளிகட் ஓவியங்கள் சிறந்த எடுத்துக்காட்டு. இது, இந்தியக் கலையின் தகவமைக்கும் திறனை வெளிப்படுத்தியது.
ஆயினும்20ஆம் நூற்றாண்டின் ஆரம்பகாலத்தில்காளிகட் ஓவியங்கள் மெதுவாக வீழ்ச்சியடையத் தொடங்கின.
இதற்குப் பல காரணங்கள்:
- அச்சிடும் தொழில்நுட்பத்தின்வருகை: 19 ஆம் நூற்றாண்டின் இறுதியில், அச்சிடும் தொழில்நுட்பம் (lithography) பிரபலமடையத் தொடங்கியது. அச்சிடப்பட்ட படங்கள் மலிவாகவும், எளிதாகவும் கிடைத்தன. இதனால், கையால் வரையப்பட்ட ஓவியங்களுக்கான தேவை குறைந்தது.
- சமூகமாற்றங்கள்: கொல்கத்தா நகரத்தில் ஏற்பட்ட அடுத்த கட்ட சமூக மாற்றங்கள், “பாபு” கலாச்சாரத்தின் சரிவு, தேசிய இயக்கங்களின் வளர்ச்சி ஆகியவைஓவியர்களின் கருப்பொருள்களைப் பாதித்தன.
- மரபுவழிஆதரவின்மை: அரசவை ஆதரவு இல்லாதது, பாரம்பரிய ஓவியர் சமூகத்தின் வாழ்வாதாரப் போராட்டம் ஆகியவை காளிகட் ஓவியக் கலையின் வீழ்ச்சிக்கு வழிவகுத்தன.
இருப்பினும், காளிகட் ஓவியங்கள் நவீன இந்தியக் கலை மீது குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தின. புகழ்பெற்ற இந்திய ஓவியரான ஜாமினிராய் (Jamini Roy),காளிகட் ஓவியங்களின் எளிமை, வலுவான கோடுகள், மற்றும் துடிப்பான வண்ணங்களால் ஆழமாக ஈர்க்கப்பட்டார். அவர் காளிகட் பாணியைப் பின்பற்றி, தனது சொந்த, தனித்துவமான பாணியை உருவாக்கினார், அதன் மூலம் நாட்டுப்புறக் கலையின் மகத்துவத்தை நவீனக் கலை உலகில் மீண்டும் கொண்டுவந்தார். ஜாமினி ராயின் ஓவியங்கள், காளிகட் ஓவியங்களின் அழகியல் மற்றும் சமூகப் பார்வையை உலகின் கவனத்திற்குக் கொண்டுவந்தன.
*******
இன்று, காளிகட் ஓவியங்கள் பாரம்பரியக் கலை வடிவமாகப் பாதுகாக்கப்பட்டு, ஆராயப்படுகின்றன. உலகெங்கிலும் உள்ள முக்கிய அருங்காட்சியகங்களில்காளிகட் ஓவியங்களின் சேகரிப்புகள் உள்ளன. இதுஇந்தக் கலையின் உலகளாவிய முக்கியத்துவத்தை உறுதிப்படுத்துகிறது.
சில கலைஞர்கள், குறிப்பாக பட்டுவா சமூகத்தைச் சேர்ந்தவர்கள், காளிகட் ஓவியப் பாரம்பரியத்தை மீட்டெடுக்கவும், புதுப்பிக்கவும் முயற்சிக்கின்றனர். அவர்கள் பாரம்பரிய நுட்பங்களைப் பயன்படுத்தி, சமகாலக் கருப்பொருள்களைச் சித்தரிக்கின்றனர்.
கலை வரலாற்றாசிரியர்கள் மற்றும் ஆய்வாளர்கள் காளிகட் ஓவியங்களின் சமூக, கலாச்சார, கலை முக்கியத்துவம் குறித்து தொடர்ந்து ஆய்வு செய்கின்றனர்.
இது தவிர நாடெங்கிலுமுள்ள ஓவியர்கள் பலரும் இந்த பாணியில் தங்கள் ஓவியங்களை வரைவதும் நடக்கிறது.இவற்றின் அசல் ஓவியங்களே இன்று மலிவான விலையில் கிடைக்கின்றன. 25×17 அங்குலம் அளவிலான ஓவியம் ஏழாயிரம் ரூபாய்க்குக் கிடைக்கிறது.
சில ஆண்டுகளுக்கு முன் நாடெங்கும் பேரதிர்ச்சியை ஏற்படுத்திய நிர்பயா பாலியல் வன்கொடுமைக் கொடூரக் கொலை பற்றிய ஓவியமும் சமகாலப் பிரதிபலிப்பாக வரையப்பட்டுள்ளது.

இரு நூற்றாண்டுகளுக்கு முன்பு தோன்றி வளர்ந்து, தனது வலுவான அடையாளங்களைப் பதித்த காளிகட்ஓவிய மரபு, குறுகிய காலத்திலேயே அழியவிருந்தது துயரமானது.ஆயினும் அது அழிவின் விளிம்பிலிருந்து புத்துயிர் பெற்றிருப்பது மகிழ்ச்சிக்கும் கொண்டாட்டத்துக்கும் உரியது. ஆனால், முந்தைய அத்தியாயத்தில் தற்கால மதுபானி ஓவிய ஆக்கங்கள் பற்றிக் குறிப்பிடும்போது சுட்டிக் காட்டிய ஒரு பெரும் குறை, கலைச் சீர்கேடு இதிலும் நேர்கிறது. அக்கறையும் பொறுப்பும் அற்ற அரைகுறை ஓவியர்களால் காளிகட் ஓவியங்கள் என வரையப்படுகிறவற்றில் சந்தால் போன்ற வங்காளத்தின் பிற வகை ஓவிய மரபும் கலக்கப்படுகின்றன.அல்லது சந்தால், படச்சித்ரா உள்ளிட்ட பிற வகை ஓவியங்கள் காளிகட்ஓவியங்கள் என்ற பேரில் இடம்பெறவும் செய்கின்றன. ஓவிய மரபுகள் சார்ந்த சுத்திகரிப்பு, நேரடிச் சந்தைகளிலும் இணையத்திலும் மேற்கொள்ளப்பட்டால் மட்டுமே இத்தகைய கலைக் கலப்படங்கள், போலிகள், ஏமாற்றுகள் ஆகியவற்றிலிருந்து ஓவியக் கலை மரபுகளை அவற்றின் அசல் தன்மைகளோடு பாதுகாக்க முடியும்.
*******
இந்திய நவீன ஓவியர்கள், நவீன ஓவிய மாணவர்கள் ஆழ்ந்து கவனிக்கத் தக்க விஷயங்கள் இவை:
இந்தியக் கலை, மேற்கத்திய பாணியில் அல்லாமல், அதன் சொந்த நாட்டுப்புற மற்றும் பிராந்தியக் கலைகளில் வேரூன்ற வேண்டும் என்ற தத்துவத்தை நிலைநாட்டப் போராடிய முன்னோடி இந்திய நவீன ஓவியர்களுக்குக் காளிகட் ஓவியங்கள் திருப்புமுனையாக அமைந்தன.
ஜாமினி ராய்ஐரோப்பிய அகாடமிக் பாணியைக் கைவிட்ட பின், தனது உத்வேகத்திற்காக வங்காளத்தின் நாட்டார் கலைகளையும், குறிப்பாக காளிகட் படசித்ராவையும், மதுபானியையும் ஆராய்ந்தார். இவர் காளிகட் ஓவியங்களில் காணப்படுகிற அகன்ற, வளைந்த கோடுகள், பெரியதும் எளிமைப்படுத்தப்பட்டதுமான கண் வடிவங்கள், தட்டையான மண் வண்ணங்கள் (Earthy Colours) ஆகியவற்றைப் பயன்படுத்தினார்.ராயின் இந்தச் சுவீகரிப்பு, இந்திய நவீன ஓவியத்திற்கு தேசிய அடையாளத்தை வழங்கியது.இவரது உருவங்களில், காளி அல்லது யேசுவின் உருவச் சித்தரிப்பில்கூடகாளிகட் உருவங்களின் வீரியமும், எளிமையான ஆழமும் பிரதிபலிக்கும்.
சமகாலத்தில்சில ஓவியர்கள் காளிகட் பாணியின் சமூக விமர்சனப் பார்வையை உள்வாங்கி, நவீன டிஜிட்டல் ஊடகங்கள் (Digital Mediums) அல்லது கலப்புக் கலைகளில் (Mixed Media) அன்றாட நகர வாழ்வின் கேலிச்சித்திரங்களை உருவாக்குகின்றனர். இந்த அணுகுமுறை, மரபுக் கலை எவ்வாறு சமகால ஊடகத்திலும், கருப்பொருளிலும் அதன் வீரியத்தைத் தக்க வைத்துக் கொள்கிறது என்பதைக் காட்டுகிறது.
காளிகட் ஓவியங்கள், ஒரு நவீன கலைஞன்சந்தைப் பொருளாக இருக்கும் கலையையும், சமூக விமர்சனப் பார்வையையும் எவ்வாறு இணைத்து, கலை இலக்கணத்தின் தரத்தைக் காக்க முடியும் என்பதற்கு ஒரு வலுவான அஸ்திவாரத்தை இடுகிறது.
*******


Leave a comment