பெருமாள் முருகனின் ~நெடுநேரம் புதினத்தில் மனிதஉரிமைகள் பற்றிய ஓர் அலசல்

த. ஆனந்தவள்ளி
உதவிப்பேராசிரியா்,
மாணிக்கம் ராமசுவாமி கலை மற்றும் அறிவியல் கல்லூரி, திருப்பரங்குன்றம், மதுரை – 625002.
ஆய்வுச்சுருக்கம்
மனிதனை மனிதனாக மதிப்பதே மனித உரிமை ஆகும். மனிதர்கள் பிறப்பிலேயே சமமான கௌரவம் மற்றும் உரிமைகள் உடையவா்கள். மனித உரிமை என்பது, ஒவ்வொரு மனிதனுக்கும் கிடைக்கப்பெற வேண்டிய மற்றும் உரித்தான அடிப்படை உரிமைகளும், சுதந்திரங்களும் ஆகும்.
சாதி, மதம், பால், இனம், நாட்டுரிமை ஆகியவற்றிற்கு அப்பால் ஒவ்வொரு தனிமனிதனுக்குள்ளும் பொதிந்திருக்கக்கூடிய பிறப்புரிமைகளும், மனித சுதந்திரத்திற்கும், கண்ணியத்திற்கும், நலன்களுக்கும் அவசியமான உரிமைகளை மனித உரிமைகள் என்று நாம் அழைக்கின்றோம். மனித உரிமைகளின் வளர்ச்சி நிலைகள் மனித சமுதாய வளர்ச்சயின் வரலாற்றோடு பின்னிப் பிணைந்தே இருக்கின்றது. சமுதாயத்தின் பல பிரிவுகளுக்கும் அல்லது எல்லா சமுதாயத்தினருக்கும் வேறுபாடு இல்லாமல் மனித குலம் முழுமைக்கும் மனித உரிமைகள் பொருந்தவன ஆகும். மனித உரிமைகளின் அடிப்படை நியாயமே அது மனித இனத்திற்குச் சொந்தமானது என்பதாகும். சுதந்திர வாழ்வின் முழுமை மனிதனுக்குக் கிடைக்க ஏதுவாகவும், சமுதாயத்திற்கு அவன் ஆற்ற வேண்டிய கடமைகளுக்கு ஏற்ப, தனிமனிதன் தான் எழுப்பும் கேள்விகளைச் சமுதாயம் அங்கீகரிக்கும் போது அவனது உரிமைகள் மனித உரிமைகள் எனுந் தொகுப்பில் சேர்கின்றன. இத்தகைய மனித உரிமைகளின் நோக்கில் பெருமாள் முருகனின் ~நெடுநேரம்| என்னும் புதினத்தை ஆய்வதே இவ்வாய்வின் நோக்கமாக அமைந்துள்ளது.
திறவுச் சொற்கள்:
பெருமாள் முருகன், நெடுநேரம், மனித உரிமைகள், ஆணவக் கொலை, திருமண உரிமை, சமய வழிபாட்டு உரிமை, சுதந்திர உரிமை, கல்வி உரிமை
முன்னுரை:
மனித உரிமைகள் என்பது தனிப்பட்ட மனிதனுக்கு வழங்கப்படுகின்ற குறைந்தபட்ச உரிமைகள் ஆகும். ஒவ்வொரு தனிமனிதனும் தனக்கென ஒவ்வொரு கௌரவமான, பாதுகாப்பான வாழ்க்கையை எதிர்பார்க்கிறான். தனிமனிதனின் கூட்டே சமுதாயம் என்ற வகையில் தனிமனிதனின் உரிமைகள் சமுதாய உரிமைகளுடன் தொடர்புடையதாகும். சமுதாயம் இல்லையென்றால் உரிமையும் இருக்கமுடியாது. மேலும் ஒவ்வொரு உரிமைக்கும் தொடா்பான கடமையும் உண்டு. உரிமையும் கடமையும் ஒரு நாணயத்தின் இரு பக்கங்களைப் போன்றது ஆகும். எல்லோருக்கும் பொருந்தும் வகையில் ஒழுக்க நீதியில் இணக்கமுடைய உரிமைகளை இன்று நாம் பெரிதும் பயன்படுத்துவதே இல்லை. மனிதனுக்கு உரிய உரிமைகளை முதலில் மனிதர்கள் தெரிந்து கொள்ள வேண்டும் என்ற முயற்சியே பெருமாள் முருகன் அவர்களின் ~நெடுநேரம்| புதினத்தில் உள்ள சமுதாய கருத்துகளோடு மனித உரிமைகளை ஒப்பிட்டு நோக்கச் செய்துள்ளது.
ஆய்வு முன்முயற்சிகள்:
- “பெருமாள் முருகன் படைப்புகளில் வாழ்வியற் சிந்தனைகள்” – ஆய்வாளார் – I.பூமாரி, நெறியாளர் – S.ராமமூர்த்தி, அழகப்பா பல்கலைக்கழகம், காரைக்குடி, ஆண்டு – 2016
- “பெருமாள் முருகனின் கூளமாதாரி நாவலில் பாத்திரப்படைப்பு” – ஆய்வாளர் – பி.முனியாண்டி, நெறியாளர் – முனைவர்.கு.பகவதி, தஞ்சை தமிழ்ப்பல்கலைக்கழகம், தஞ்சாவூர், ஆண்டு – 2006
ஆய்வு அணுகுமுறைகள்:
பெருமாள் முருகனின் புதினமான ~நெடுநேரம்| மனித உரிமைத் துறையோடு ஒப்பிட்டு நோக்கப்பட்டுள்ளதால் ஒப்பீட்டு அணுகுமுறை, பகுப்புமுறை மற்றும் விளக்கமுறை அணுகுமுறை ஆகியவற்றின் அடிப்படையில் இவ்வாய்வுக் கட்டுரை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
மனித உரிமைகள் பற்றி அறிஞர்களின் கருத்துகள்:
ஒவ்வொரு மனிதனுக்கும் எந்தெந்த உரிமைகளுக்கு இயற்கையாகவே உரிமை உண்டோ, எந்தெந்த உரிமைகள் பாதுகாப்பிற்கு உரியனவோ அவற்றையே மனித உரிமைகள் என்று வரையறுக்கின்றனா்.
“ஒருவன் மனிதனாக இருப்பதனாலயே அவனுக்குள்ள இயற்கையான உரிமைகள் மனித உரிமைகள் ஆகும். இவை எல்லா மனிதர்க்கும் பொதுவானவை.”1 என்று டோனால்லி என்பவர் கூறுகிறார்.
டேக் ஹம்மாக் ஜோல்ட் என்பவர் மனிதஉரிமைகளுக்குச் சுருக்கமான விளக்கத்தைத் தருகிறார். “அச்சத்திலிருந்து விடுபடுவதே மனிதஉரிமை தத்துவத்தின் சாராம்சம்.”2 என்பது அவரது கருத்தாகும்.
“மனித உணர்வுளை உதாசீனம் செய்து விட்டு மனித உரிமைகள் பற்றிப் பேசுவது பட்டினி கிடக்கும் உரிமையை மட்டுமே பரிந்துரைக்கும் பழுதுபட்ட பார்வையாகும்”3 என்று அறிஞர் அரங்க.சுப்பையா குறிப்பிடுகிறார்.
“மனித உரிமை என்பது நீதித்துறையைச் சார்ந்தவா்கள் மற்றும் கல்வியாளர்கள் மட்டுமே கவலைக் கொள்கிற விசயமன்று. ஆகவே மனித உரிமை என்பது ஏதோ சட்ட நுணுக்க விவகாரம் அல்ல. மனிதன் மனிதனாக வாழ்வதற்கு அடிப்படைத் தேவையாகும்.”4 என்று மதிவாணன் குறிப்பிடுகிறார். இவ்வாறு மனிதஉரிமை என்பதற்குப் பல்வேறு விளக்கங்கள் கொடுக்கப்பட்டுள்ளன.

கல்வி உரிமை
உலகில் உள்ள எல்லா குழந்தைகளும் கல்வி உரிமையைப் பெற்றிருக்கவில்லை. இன்னும் பல மூலை முடுக்குகளில் உள்ள குழந்தைகளுக்குக் கல்வி என்பது எட்டாக் கனியாகவே உள்ளது. ஆய்விற்கு எடுத்துக்கொள்ளப்பட்ட புதினத்தில் காட்டப்படும் சில காட்சிகள் கிராமப்புற பின்புலத்தில் வரும் சூழலில் அங்குள்ள கல்வி நிலை ஆண்குழந்தைகளுக்கு ஒரு மாதிரியும், பெண் குழந்தைகளுக்கு ஒரு மாதிரியும் வரையறுக்கப்பட்டுள்ளது. கல்வி உரிமை குறப்பாக பெண் குழந்தைகளுக்கு மறுக்கப்பட்ட ஒன்றாக இருந்தள்ளது என்பதைப் புதினம் சுட்டிச் செல்கிறது.
~நெடுநேரம்| புதினத்தில் ஒரு முக்கிய கதை மாந்தனாக வரும் ~முருகாசு| தன் குடும்பத்துடன் நகரத்தில் வாழ்க்கை நடத்தக்கூடியவன். படித்து தனியார் நிறுவனம் ஒன்றில் வேலை பார்த்து கொண்டிருக்கும் அவன் விடுமுறை நாட்களில் தன் பாட்டி வீட்டிற்குச் செல்வதற்காகத் தன் சொந்த கிராமத்திற்குச் செல்கிறான். அங்கே தன் மாமா வீட்டிற்குச் சென்ற போது மாமாவின் மகனையும், மகள்களையும் சந்திக்க நேரிடுகிறது. நீண்ட நாட்களுக்குப் பிறகு சந்தித்ததால் ஒருவரையொருவா் பற்றி விசாரித்துத் தெரிந்து கொண்டார்கள். அப்போது மாமாவின் மகனைப் பற்றி கூறும் இடத்தில் ஆசிரியா், “முருகாசுவை விடச் சில வயது கூடியவனாகவே மடலாசுரன் தெரிந்தான். ஊரிலிருந்து பத்துக்கல் தொலைவில் இருந்த தனியார் பொறியியல் கல்லூரி ஒன்றில் படித்திருந்தான். இப்போது இருசக்கர வாகனம் பழுது நீக்கும் நிலையம் ஒன்றில் மேற்பார்வைப் பணியில் இருந்தான்.”5 இவ்வாறாக அவனை அடையாளம் செய்தார். பெண்களைப் பற்றி பேசும் இடத்தில், “இருவரும் முருகாசுவை விட மிகவும் மூத்தவர்களாகத் தெரிந்தார்கள். ~எங்க படிக்க வச்சாங்க? ஊர்ல அஞ்சாவது வரைக்கும் இருந்துச்சு அதனால எதோ எழுதப் படிக்கத் தெரீது. இல்லீனா அதும் இல்லாத போயிருக்கும்.| என்றார் மூத்தவர். ~பெரியவளான ஒடனே புடிச்சுக் கலியாணம் பண்ணி வெச்சுட்டாங்க… கொழந்தகளப் பெத்துகிட்டுச் சோறாக்கிக்கிட்டுக் கெடக்கறம். இப்ப வந்து என்ன படிச்சிருக்கயின்னு கேக்கற| என்று கசப்போடு சிரித்தார் இளையவா்.”6 இவ்வாறாக ஆசிரியா் பதிவு செய்துள்ளார். எனவே ஆண் பிள்ளையைப் படிக்க வைத்து அழகு பார்க்கும் கிராமப்புற மக்கள் பலர் பெண் பிள்ளையின் படிப்பில் நாட்டம் செலுத்த முன்வருவதில்லை என்பது எடுத்துரைக்கப்பட்டுள்ளது.
“பெண்களுக்குக் கல்வி வேண்டும்
குடித்தனம் பேணுதற்கே
பெண்கட்குக் கல்வி வேண்டும்
மக்களைப் பேணுதற்கே
பெண்கட்குக் கல்வி வேண்டும்
உலகினைப் பேணுவதற்கே”7
நம் அறியாமையை அகற்றக்கூடிய கல்வியைக் கற்றவா்கள் மட்டுமே கல்வியாளர்கள் பட்டியலில் இடம் பெறுகிறார்கள். எவ்வாறு ஆண்களுக்கு கல்வி முகவரி போன்று அமைந்துள்ளதோ அது போன்று பெண்களுக்கும் கல்வி இன்றியமையாததாகும் என்ற பாரதிதாசனின் வரிகளுக்கேற்ப கல்வி உரிமை ஆண், பெண் இருபாலருக்கும் பொதுவாக வழங்கப்பட வேண்டும் என்பதே இங்கு எடுத்துரைக்கப்படும் செய்தியாகும்.
சுதந்திர உரிமை
சுதந்திரத்திற்கான உரிமை என்பது சித்தாந்ததத்தின் அடிப்படையிலானது. இது ஒவ்வொரு மனிதனுடைய சொந்த வாழ்க்கை, தேர்வுகள், செயல்கள் மற்றும் உணர்ச்சிகளின் மீதான அதிகாரம் தொடர்புடையதாகும். இந்திய அரசியலமைப்புச் சட்டம் உத்திரவாதம் அளித்துள்ள அடிப்படை உரிமைகளில் ஒன்று சுதந்திர உரிமை. மனிதன் வாழ்வில் பல துறைகளிலும் சுதந்திரமாகச் செயல்பட பலவற்றைச் சாதிக்க சுதந்திரம் அடிப்படையான அவசியமாகும். இல்லையேல் மிருகத்திற்கும் அவனுக்கும் வித்தியாசம் இல்லாமல் போய்விடும். வாழ்வே பொருளற்றதாக மாறிவிடும். சுதந்திரமில்லாத தனிமனிதனால் தன்னுடைய ஆளுமையை வளர்த்துக் கொள்ளவே முடியாது.
சுதந்திரம் என்பது ஒவ்வொரு மனிதனின் பிறப்புரிமையாகும். அதில் தலையிடும் உரிமை பெற்றோருக்கும் கிடையாது. கட்டுப்பாடு என்ற பெயரில் பிள்ளைகளின் சுதந்திரத்தைக் கெடுத்தல் கூடாது. இது போன்ற நிகழ்வு ஒன்றை ~நெடுநேரம்| புதினம் பதிவு செய்கிறது. ~முருகாசு| என்ற இளைஞன் தன் தாய் தந்தையரின் கடைசிப் பிள்ளையாவான். கடைசிப் பிள்ளை என்பதால் அவனை கை்ககுள்ளேயே வைத்து வளர்த்தனா். அவனைத் தங்கள் கண் பார்வையிலேயே வைத்துக் கொள்ள விரும்பினர். இதனால் முருகாசு சுதந்திரமில்லாதக் கூண்டுக்கிளி போல உணர்ந்தான். அதனால் வெளி யூ+ரில் தங்கி வேலை செய்ய முடிவு செய்கிறான். அதை, “அம்மா அப்பா இருவரின் கவனமும் எந்நேரமும் முருகாசுவின் மீதே இருந்ததால் தான் அவன் பூவாசுரத்திற்குப் போவதென்று முடிவு செய்தான். ஒரு நிமிடம் கூட அவன் விருப்பப்படி எதுவும் செய்ய முடியாது. செல்பேசி கையிலிருந்தால் அவன் என்ன பார்க்கிறான் என்று விதவிதமாக நோட்டமிடுவார்கள். கழுவறைக்குப் போனால் ஐந்து நிமிடம் தங்க முடியாது. ~இவ்வளவு நேரமா என்னடா பண்ற| என்று குரல் வரும். அவன் தூங்குவது, எழுவது, குளிப்பது, சாப்பிடுவது, நடப்பது எல்லாமே இன்னொருவரின் கண்ணுக்கு உட்பட்டுத்தான் என்றிருந்தால் எப்படி? சொர்க்கமே என்றாலும் கண்காணிப்புக்கு உட்பட்டது என்றால் அங்கே நீடித்திருக்க முடியாது.”8 இவ்வரிகளில் காணமுடிகிறது. இந்த வரிகளில் ~முருகாசு| கூறியது போல சொர்க்கமாக இருந்தாலும் கண்காணிப்பிற்குள் இருக்க வேண்டுமென்றால் அது சுதந்திரமின்மையே ஆகும். தனியொருவரின் அந்தரங்கம், குடும்பம், இல்லம், தகவல் பரிமாற்றம் ஆகியவற்றில் பலாத்காரமாகக் குறுக்கிடவோ அவரது நன்மதிப்பிற்கும் பெருமைக்கும் களங்கம் ஏற்படுத்தவோ யாருக்கும் உரிமை கிடையாது. அது அவரது பெற்றோராகவே இருந்தாலும் உரிமை மறுப்பாகவே கருதப்படும் என்பது இங்கு கூறப்படும் முடிபாகும்.
அரசியல் மற்றும் குடிமையியல் உரிமை
ஒரு நாட்டின் அரசில் ஒரு குடிமகன் பங்கேற்க அவசியமான உரிமைகள் அரசியல் உரிமைகள் என அழைக்கப்படுகிறது. எந்தவொரு நபரையும் சித்ரவதை செய்யக்கூடாது. கொடூரமாக, மனிதத் தன்மையின்றி, கேவலமாக நடத்தக்கூடாது என்று பிரிவு 5இல் கூறப்பட்டுள்ளது. சட்டத்தின் முன் அனைவரும் சமம் மற்றும் எவ்வித பாகுாபடுமின்றி சட்டத்தின் சம பாதுகாப்பைப் பெறும் உரிமை அனைவருக்கும் உண்டு.
~நெடுநேரம்| புதினத்தில் அரசாங்க விடுதியின் அவலநிலை விளக்கப்பட்டுள்ளது. விடுதி என்பதே பொதுவாகத் தரம் குறைந்ததாகவே இருக்கும் என்பது மக்கள் மனக்கருத்தாக உள்ளது. அதிலும் அரசாங்கம் நடத்தும் விடுதி என்றால் சொல்லவே தேவையில்லை. உணவு போன்ற பழக்கங்கள் மிகவும் மோசமாகவே இருந்து வந்தது. வறுமை நிலையில் உள்ள மாணவர்கள் என்பதால் குடும்பச் சூழலுக்காக வேறு வழியின்றி அனைத்தையும் பொறுத்துக் கொண்டு இருக்கின்றனா். புதினத்தில் ~குமராசுரர்| என்பவர் தகப்பனில்லாமல் தாயால் வளர்க்கப்படுகிறார். அவர் சிறுவயதிலிருந்தே நன்றாகப் படிப்பவா். அவர் வசதியற்ற நிலையால் மேற்படிப்பிற்காக வெளி யூ+ரில் இருந்த அரசாங்க விடுதியில் தங்கி படிக்க நேரிடுகிறது. அந்த விடுதியைப் பற்றி அறிமுகம் செய்யும் இடத்தில், “பள்ளியில் படிக்கும் காலத்தில் ராசாங்கம் நடத்தும் இலவச விடுதியில் குமராசுரன் தங்கியிருந்தான். அந்த விடுதி பன்றிகள் திரியும் பெருஞ்சாக்கடை ஓரத்தில் இருந்ததாம். ஈயளவு பெருத்தக் கொசுக்கள் விடுதி முழுக்கத் திரியுமாம். விடுதிச் சோறு நாறுமாம். நாறும்படியான அரிசி எங்கே கிடைக்குமென்று இன்று வரை தனக்குக் தெரியவில்லை என்றார் குமராசுரர். இருப்பவற்றிலேயே மட்டமானவை, நாறுபவை எல்லாம் ராசாங்கத்திற்கு எப்படியோ கிடைத்து விடுகின்றன. குழம்பு என்பது வெந்நீரில் மிளகாய்த் தூளைக் கொட்டியது தான். அங்கே தான் ஏழுவருசம் இருந்தாராம்”9 இவ்வாறு விளக்கியுள்ளார். இதே போல் தான் அரசாங்கத்தில் இருந்து வழங்கப்படும் அநேகப் பொருட்கள் அதிக தரம் வாய்ந்ததாக இருப்பதில்லை. ஆனால் ஏழை எளிய மக்கள் வேறு வழியின்றி அதையும் வாங்கி பயன்படுத்தும் சூழலில் இருக்கின்றனர். இலவசமாக வழங்கப்படுவதால் எப்படி இருந்தாலும் அனுசரித்து தான் ஆக வேண்டுமென்ற அரசாங்கத்தின் மெத்தனப் போக்கு இவ்விடத்தில் எடுத்துரைக்கப்பட்டுள்ளது.
சாதி தொடா்பான உரிமைகள்
சாதியை முன்வைத்து எழும் அநேக உரிமைப் பிரச்சனைகளில் இங்கு சமய வழிபாட்டு உரிமை, திருமண உரிமை, ஆணவக் கொலை முயற்சி போன்றவை பதிவு செய்யப்பட்டுள்ளன.
சமயவழிபாட்டு உரிமை:
சமயச் சுதந்திரம் அல்லது இறை நம்பிக்கக்கான சுதந்திரம் என்பது தனிநபர்கள் அல்லது சமூகங்கள் எந்த ஒரு சமயம் தொடர்பாகவும், பொதுவிலோ தனிப்பட்ட முறையிலோ, நம்பிக்கைகளை வைத்திருப்பதற்கும், வழிபடுவதற்கும், சடங்குகளை நடத்துவதற்குமான சுதந்திரம் ஆகும்.
மதம் என்பது தனிப்பட்ட நம்பிக்கைகள் மற்றும் மதிப்புகள் சார்ந்த ஒன்றாகும். அதனால் தான் இந்தியாவில் மதத்தைத் தோ்ந்தேடுப்பது அடிப்படை உரிமையாகக் கருதப்படுகிறது. ~நெடுநேரம்| புதினம் வழிபாட்டு உரிமை தொர்பான செய்தியைப் பதிவு செய்துள்ளது. இவ்விடம் தங்களுக்குப் பிடித்தமான தெய்வத்தை வழிபட விடாமல் வழிபாட்டு உரிமை தடுக்கப்பட்டுள்ளது. அதுவும் சாதியை முன் வைத்து வழிபாட்டு உரிமை மறுக்கப்பட்டுள்ளது. கதையின் பின்னணி சூழலில் கூறப்பட்டுள்ள பகுதியில் கோயிலுக்குள் சென்று வழிபட சில இனத்தவருக்கு மட்டும் அனுமதி வழங்கப்பட்டு மற்ற சில இனத்தவருக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது என்பதை, “ஊருக்கு ஒரே தெய்வம் ஓலையாசுரன். தேங்குலத்தார் பு+ச்சாட்டி நோம்பி போடுவார்கள். பு+ங்குலத்தார் வெளியே நின்று கும்பிடுவார்கள். அவர்களுக்கென்று ஒதுக்கப்பட்ட ஒரு புறத்தில் பொங்கல் வைத்துப் படைப்பார்கள். தங்கள் பகுதியில் தனிக் கோயில் வைத்துக் கொள்ளப் பூங்குலத்தார் சிலர் முயன்றதை ~ஓலையாசுன் ஒரெடத்துல தான் இருப்பான். அவனுக்கு வேறெங்கயும் கோயக் கட்டக்கூடாது| என்று நம்பிக்கைச் சொல்லித் தடுத்து விட்டார்கள். எப்போதாவது வேண்டுதல் வைப்பதற்கும் கோயில் வாசலில் வந்து நின்று கும்பிட்டு விட்டுப் போவதே வழக்கம்.”10 இவ்வரிகள் வெளிச்சமிட்டுக் காட்டுகின்றன. தாழ்ந்த குலத்தைச் சார்ந்த மக்கள் பொதுக் கோயிலுக்குள் அனுமதிக்கப்படவில்லை. சரி தங்களுக்கென்று புதிதாகக் கோயில் அமைத்துக் கொள்ளலாம் என்று முடிவு செய்த போதும் அதற்கும் அவர்களை அனுமதிக்கவில்லை. தங்களுக்கு விருப்பமானக் கடவுளை வணங்கவும், சடங்குகளைச் செய்யவும் ஒவ்வொரு மனிதருக்கும் உரிமை உள்ளது. அதைப் பறிப்பது கலாச்சாரக் குற்றமாகவேக் கருதப்படுகிறது. இந்தியாவில் 25 முதல் 28 வரையிலான பிரிவுகளின் கீழ், ஒவ்வொரு தனிமனிதனுக்கும் மத சுதந்திரத்திற்கான உரிமை உள்ளது. எனவே ஒருவரது இறை சார்ந்த நம்பிக்கை மற்றும் கலாச்சாரங்களைச் சாதி, இனம் இவற்றின் பெயரால் தடுப்பது மறுப்பது என்பதோ மனித உரிமை மறுப்பாகவே கருதப்படுகிறது.
திருமண உரிமை
திருமணம் ஒரு சமூக, சட்ட, உறவு முறை அமைப்பு ஆகும். குடும்பம், பாலுறவு, இனப்பெருக்கம், பொருளாதாரம் போன்ற பல காரணங்களுக்காகத் திருமணம் செய்யப்படுகிறது. திருமணம் என்பது மனித இனத்தைப் பொறுத்த வரை ஓர் உலகளாவிய பொதுமையாக இருந்த போதிலும், வெவ்வேறு பண்பாட்டுக் குழுக்களிடையே திருமணம் தொடா்பில் வெவ்வேறு விதமான விதிகளும் நெறிமுறைகளும் காணப்படுகின்றன.
திருமணம் என்பதற்கு, “ஒரு ஆணும் ஒரு பெண்ணும் சேர்ந்து ஒருவருக்கொருவர் கட்டுப்பட்டு, அவர்களது வாழ்க்கையைக் கூட்டுப் பொறுப்பில் நடத்துவதற்குப் பலர் அறியச் செய்து கொள்ளும் செயலே திருமணம்”11 என்று விளக்கம் கூறப்படுகின்றது.
~நெடுநேரம்| புதினத்தில் ~குமராசுரன்| மூத்த மகன் ~அழகாசு| தாழ்ந்த குலப் பெண்ணைத் திருமணம் செய்து கொள்ள வேண்டி தன் தந்தையிடம் கூறுகிறார்.. இந்நிலையை, “என்ன இருந்தாலும் அவங்க நமக்குக் கீழடா, அவுங்க வீட்டுக்குப் போனாத் தண்ணி கூட வாங்கிக் குடிக்க மாட்டம்டா. இப்ப எப்படிச் சம்பந்தியாப் போயிக் கை நனைக்கிறது?…. ச்சீ….. ச்சீ….. நம்ம கொலத்துப் பொண்ணத் தொடறது புண்ணியம். வேற கொலத்துப் பொண்ணத் தொடறது பாவம்டா. இதெல்லாம் உனக்குப் புரியாது. நெனச்சாலே அருவருப்பா இருக்குது என்றார். மலத்தை மிதித்தவா் போல அவர் முகம் மாறியது.”12 இவ்வரிகளில் காணமுடிகிறது. கலப்பு திருமணத்திற்கு உடன்பட்ட ~அழகாசு|வை அவன் அப்பா மிகவும் கடிந்து கொள்கிறார். தன் மகன் தன் விருப்பப்படி திருமணம் செய்து கொள்ள மறுப்பதை நினைத்து ஒரு தந்தையாக வருத்ததத்திற்குள்ளாவது இயல்பாக இருக்கலாம். ஆனால் கலப்பு திருமணத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் பொருட்டு சாதியின் பெயரைச் சொல்லி அதை இழிவாகப் பேசுவது என்பது முறையற்ற செயலாகும். ~அழகாசு| மேஜர் என்ற நிலையில் தனக்குப் பிடித்தப் பெண்ணைத் திருமணம் செய்து கொள்ள அவனுக்கு உரிமை உள்ளது. இந்தத் திருமணத்திற்கு மறுப்பது உரிமை மறுப்பாகும். அவன் நினைத்திருந்தால், தானாகவே யாரும் அறியாமல் திருமணம் செய்திருக்கலாம். ஆனால் அவன் முறையாக அவன் தந்தையிடம் தெரிவிக்கிறான். அவனுடைய இந்த ஒழுக்கத்திற்கு மதிப்பு கொடுத்து திருமணத்திற்கு அனுமதி தருவதே முறை. அதை விடுத்து வீராப்பை விட்டுக் கொடுக்க மாட்டேன் என்று இவரைப் போன்று பலர் இன்றும் சாதியைத் தலையில் கர்வமாகத் தூக்கி வைத்துக் கொண்டு தான் திரிகிறார்கள். இது சட்டப்படி குற்றமாகும்.
ஆணவக்கொலை முயற்சி
ஆணவக்கொலை என்பது ஒரு குடும்பத்தின் உறுப்பினரை, அவர் குடும்பத்திற்கு இழிவு கொண்டு வந்தார் என்று கருதி அக்குடும்பத்தின் உறுப்பினர்கள் சிலர் கொலை செய்வதைக் குறிக்கிறது. பொதுவாகப் பெண்களையே இப்படிக் கொல்கின்றனர். காதல், மணவிலக்கு, கள்ள உறவு, கற்பழிக்கப்படல், முறை பிறழ் புணர்ச்சி, நிச்சயிக்கப்பட்ட திருமணத்தை மறுத்தல், குடும்பக் கட்டுப்பாடுகளை மீறல் எனப் பல காரணங்களால் கௌரவக்கொலை நடைபெறுகிறது. தமிழகம், இந்தியா என்றில்லாமல் சர்வதேசப் பரப்பிலும் இதன் மூல வேர்கள் பரந்து விரிந்து கிடக்கின்றன.
“குடும்ப கௌரவத்தைக் காப்பாற்றுவதாகக் கூறிக் கொண்டு குடும்பத்தினராலும், சமுதாயத்தாலும் ஆண்கள் மற்றும் பெண்கள் இரு பாலரும் கௌரவக் கொலை செய்யப்படுகின்றனா். இந்தியா, வங்கதேசம், பாகிஸ்தான், துருக்கி, ஜோர்டன், பாலஸ்தீனம் போன்ற நாடுகளில் இக்கொலைகள் அதிகம் நடத்தபடுகின்றன.”13 என்று மனித உரிமைக் கங்காணி இதழில் ஆணவக்காலை தொடா்பான ஒரு கட்டுரையில் பதிவு செய்யப்பட்டுள்ளது.
ஆய்விற்கு எடுத்துக் கொண்ட புதினத்தில் உயர்ந்த சாதியைச் சேர்ந்த ~மங்காசுரி| என்ற பெண்ணைத் தாழ்ந்த சாதியைச் சேர்ந்த ~மதுரன்| என்பவன் காதலிக்கிறான். இருவரும் மனம் ஒன்றுபட்டு ஒருவரையொருவர் விரும்பும் சூழலில், ~மங்கா|வின் வீட்டில் இது தெரிந்து விடவே, அவளின் குடும்பத்தார் ~மதுரனி|ன் வீட்டிற்குச் சென்று, அவன் குடும்பத்தையும் அவனையும் மிரட்டி ஊரை விட்டே செல்லுமாறு கூறுகின்றனர். ~மதுரன்| அதைப் பொருட்படுத்தாத காரணத்தினால், ~மங்கா|வின் குடும்பத்தாரும் அவர்களது சாதிக்காரர்களும் சோ்ந்து சென்று அவனை அடித்து தரதரவென இழுத்து வந்து ஊரின் நடுவில் வைத்து அவமானப் படுத்துகின்றனா். அவன் பூங்குலத்தைச் சார்நதவன் என்பதால் அந்தச் சாதிப் பெயரைக்கூறி இழிவாகப் பேசுகின்ற சூழலை, “ பூ நாயே…. பூ நாயே…. என்று பற்களைக் கடித்துக் கொண்டு திட்டினார்கள்…..”14 என்ற வரிகள் படம் பிடித்து காட்டுகின்றன. இவ்வாறு கொடுமைப்படுத்திய மதுரனை அத்துடன் விட்டுவிடவில்லை. தன்னைத் தானே தற்கொலை செய்து கொள்ள முயலும் அளவிற்குக் கொடுமை செய்கின்றனர். அவன் தன்னைத் தானே மாய்த்துக் கொள்ள நினைக்கும் நிகழ்வை, “மங்காசுரியை உள்ளிழுப்பதும் ஜன்னல் அடைவதும் அவனுக்குக் கேட்டன. உடனே ‘மதுரா’ என்று உச்சக் குரலில் ஆங்காரமிட்டுத் தலையை வான் பார்த்து உயர்த்தினான். கையிலிருந்தப் பனங்கருக்கைக் கொண்டு தன் வயிற்றை நீள வாக்கில் அறுத்துக் கிழித்தான்….. வயிற்றிலும் கைகளிலும் ரத்தம் வழிந்து ஓடியது. ரத்தம் பெருகி மண்ணில் கொட்டியது. ‘மதுரா மதுரா’ என்னும் குரல் மெல்ல அடங்கி அப்படியே கீழே சாய்ந்தான்”15 என்ற வரிகள் மூலம் அறியமுடிகிறது. ஒருவனைச் சாதியின் பெயரில் கொடுமைப்படுத்தித் தன்னைத் தானே தற்கொலை செய்யத் தூண்டுவதும் ஆணவக்கொலையில் அடங்கும் என்பதால் இதுவும் ஆணவக் கொலை முயற்சியாக எடுத்துக்காள்ளப்படுகிறது.
இந்திய தண்டனைச் சட்டத்தின்படி கௌரவக் கொலைகள் கொலைகளாகவே கருதப்பட்டு தண்டனை வழங்கப்படும். ஆனால் இது போன்ற கொடுமைகளை அடியோடு நீக்க சட்டம் மட்டும் போதுமானதல்ல. மூடபழக்கவழக்கங்களும், அறியாமையும், சாதி, மத, இன வெறியும் நிரம்பிய மக்களின் மனம் அதை விட்டொழித்து வழிப்புணர்வு அடைந்து பண்பட வேண்டும்.
முடிவுரை
- உலகில் உள்ள எல்லா குழந்தைகளும் கல்வி உரிமையைப் பெற்றிருக்கவில்லை. ஆனால் ஆண், பெண், உயர்ந்தோர், தாழ்ந்தோர் என்று எந்த பாகுபாடுமின்றி அனைத்து குழந்தைகளுக்கும் ஆரம்பக்கல்வி வழங்கப்பட வேண்டும் என்பதில் அரச கவனமுடன் செயல்பட வேண்டும்.
- சுதந்திரம் என்பது ஒவ்வொரு மனிதனின் பிறப்புரிமையாகும். அப்படிப்பட்ட சுதந்திரத்தைப் பாதிக்கும் உரிமை என்பது அவரவர் பெற்றோருக்குக்கூட கிடையாது. அப்படி அவர்கள் தங்கள் பிள்ளைகளின் சுதந்திரத்தில் தலையீட்டால் அது உரிமை மறுப்பாகவே கருதப்படுகிறது.
- அரசியல் மற்றும் குடிமையியல் சார்ந்த உரிமைகளிலும் ஒவ்வொரு மனிதனுக்கும் உரிமை உள்ளது. அரசாங்க வசதியை மட்டுமே நாடிப் பிழைக்கும் மக்கள் நாட்டில் பலர் உள்ளனா். அவர்களுக்கு அரசு தரப்பில் இருந்து கிடைக்கும் பொருட்கள் மற்றும் வசதிகள் தரமானதாக இருக்க வேண்டும். இல்லையேல் அதை எதிர்த்து கேள்வி கேட்கும் உரிமை மக்களுக்கு உள்ளது.
சமயம் சார்ந்த நம்பிக்கை தனிமனித உரிமையாகும். அதை யாரும் ஒருவருக்கு ஒருவர் நிர்ணயம் செய்யும் உரிமை கிடையாது. ஒருவரின் நம்பிக்கையை மறுக்கும் உரிமையும் யாருக்கும் கிடையாது. ஒரு ஆணோ, பெண்ணோ தங்களுக்கு பிடித்தவரைத் திருமணம் செய்து கொள்ள உரிமை உள்ளது. சாதியின் பெயரால் அதற்கு மறுப்புத் தெரிவிப்பது உரிமை மறுப்பாகும். இது சாதியின் பெயரால் அந்தத் திருமணம் சில சமயங்களில் மறுக்கப்பட்டு ஆணவக்கொலை முயற்சி வரை செல்கிறது. எனவே சாதியின் பெயரைக்கூறி இது போன்ற தனிமனித உரிமைகள் மறுக்கப்படுவது தவறாகும்.
அடிக்குறிப்புகள்:
1.ஜே.தர்மராஜ், மனித உரிமைகள், ப.4
2. மேலது.,
3. ஆ.ஜெகதீசன், இலக்கியத்தில் மனித உரிமைக் கோட்பாடுகள், ப.41
4. மேலது., ப.45
5. பெருமாள் முருகன், நெடுநேரம், ப.284
6. மேலது.,
7. பாரதிதாசன், பெண்கல்வி, இசையமுது 1, ப.207
8. பெருமாள் முருகன், நெடுநேரம், ப.139
9. மேலது., பக். 165 – 166
10. மேலது., ப.323
11. https://ta.m.wikipedia.org/wiki/ திருமணம்
12. பெருமாள் முருகன், மேலது., பக்.15 – 16
13. மனித உரிமைக் கங்காணி இதழ், ஆகஸ்ட் 2010, ப.5
14. பெருமாள் முருகன், நெடுநேரம், பக்.321 – 322
15. மேலது., ப.326
துணைநூற்பட்டியல்
முதன்மை ஆதாரம்
- பெருமாள் முருகன், நெடுநேரம், காலச்சுவடு பதிப்பகம், நாகர்கோவில், முதற்பதிப்பு – 2022
துணைமை ஆதாரங்கள்
- ஜே. தர்மராஜ், மனித உரிமைகள், டென்சி பப்ளிகேஷன்ஸ், சிவகாசி, நான்காம் பதிப்பு – 2014
- ஆ.ஜெகதீசன், இலக்கியத்தில் மனித உரிமைக் கோட்பாடுகள், தாமரை பப்பளிகேஷன்ஸ், சென்னை, முதற்பதிப்பு – 2008
- ராஜசேகரன் (தொ.ஆ.), பாரதிதாசன் கவிதைகள், சாரதி பதிப்பகம், சென்னை
இதழ்கள்
- மனித உரிமைக் கங்காணி, பீப்பிள்ஸ் வாட்ச், தமிழ்நாடு அமைப்பின் காலாண்டு இதழ், ஆகஸ்ட், 2010
இணையதளம்

Leave a comment