முருங்கை விதை
கனலி

(விரைவில் வெளிவரவிருக்கும் ‘நாங்களும் உண்டு’ கவிதைத்தொகுப்பில் இடம்பெற்றுள்ள கவிதை)
இந்தக் காய் காய்ந்து வெடிக்கும் போது
பயந்து விடாதே
இந்த மெல்லிய சிறகுகள்
உன்னை காற்றில் ஏந்தி சற்று தூரத்தில் கொண்டு விடும்
என்னை விட்டு தூரத்தில் போய்விட்டதாய் துடிக்காதே
இங்கிருந்து உன்னை நான் எட்டிப் பார்த்துக் கொள்வேன்
தாய் முருங்கை கருவிலே புகட்டியது இன்னும் நினைவிலே உள்ளது.
அம்மா சொன்னது சற்று தூரம் தானே
ஆனால் மூன்று நாட்கள் தொடர்ந்து பறந்தேனே அது எப்படி
காற்றில் கலந்து கனவு சுமந்து கவலை மறந்து பறப்பதன் சுகம் எங்கே
காகித பொதிக்குள் மூச்சு முட்ட ஒரு பெட்டியின் மூலையில் கசங்கிப் பறந்தது எங்கே
ஆறு மாதம் இதம்தரும் வெயிலில் ஆனந்திக்கவோ
ஆறு மாதம் அலைகழிக்கும் குளிரில் அவதிப்படவோ
அடிக்கடி நிகழும் சூறாவளியில் உடைபடும் கிளைகளில் தளரவோ செய்யாதே என்றாரே
இங்கு காலம் முழுதும் கத்திரி வெயில் கழுத்தறுகிறதே
காற்றே இல்லாமல் கசகசாவென்று வேர்த்து ஒழுகுகிறதே
ஏன் அம்மா என்னிடம் பொய் சொன்னார்…
கண்ணும் கருத்துமாய் களை பறித்து வளமிட்டு
காய்த்து நிற்கும் உன்னை கட்டியணைத்து
கருணையுடன் வலியின்றி காய்பறிப்பர் என்றாரே
இங்கு வேலிக்கு வெளியே சற்று நீண்டு போன என் கிளையை அடியோடு வெட்டி அப்புறப்படுத்தி
கிளை உடைத்து காய் பறிக்கும் என் நிலையை யாரிடம் சொல்வேன்.
எங்கிருந்து கொண்டு வந்தாய் இப்படி காய்க்கும் ஒரு மரத்தை?
திருட்டு காய் பறித்த முரட்டுப் பெண் கேட்டாள்
விதைதந்தாள் விருந்துக்குப் போனபோது அமெரிக்காவில் ஒரு அன்புத்தோழி
அதுதானே பார்த்தேன்
அமெரிக்க இறக்குமதியா
இறக்குமதி என்னவோ உண்மைதான் ஆனால் அவருக்கு
ஆத்தூரில் இருந்து அவர் அம்மா கொடுத்து விட்ட விதையாம்
ஓ அப்படியா……
அமெரிக்க மண்ணின் ஆவேசம் பார்த்தாயா முருங்கையின் விதையில் கூட…
என்னது….,
ஆம்……
நாங்கள் அப்படித்தான்….
இறக்குமதிகளை
இணையற்றதாக நினைக்கும் மேற்கின் அடிமைகள்.

Leave a comment