காடரினக் கதைகள் – 7
கரடியின் கணவன்
தொகுப்பும் ஓவியத்தூரிகையும் :
ப. குணசுந்தரி & து. சரண்யா
குடும்பம் ஒன்று காட்டில் தனியே வசித்து வந்தது. அக்குடும்பத்தில் கணவனும் மனைவியும் அவர்களின் ஆண் குழந்தையும் இருந்தனர். கணவன் நாள்தோறும் தன் நாயுடன் தெள்ளி அதாவது குங்கிலியம் எடுக்கச் சென்றுவிடுவான். அப்போது மனைவியும் குழந்தையும்மட்டும் அவர்களின் வீட்டில் தனியேஇருப்பர்.
ஒரு நாள் கரடி ஒன்று அந்த வீட்டின் பக்கமாக நடந்து சென்றது. வழியில் இருந்த வீட்டைக் கண்டதும் வீட்டின் அருகே போய் யாராவது உள்ளே இருக்கிறீர்களா? எனக் கேட்டது.

கரடியின் குரலைக் கேட்ட குழந்தையின் தாய் நானும் என் குழந்தையும் தான் இருக்கிறோம் எனக் கூறினாள். இதைக் கேட்ட கரடி நான் உள்ளே வரட்டுமா? உங்கள் கதவைத் திறக்க முடியவில்லையே என்றது. அப்போது அந்தப் பெண் கதவை என் கணவன் வெளியில் சூரல் கொடியால் கட்டி வைத்துவிட்டு காட்டிற்கு தெள்ளி எடுக்கச் சென்று விட்டார் என்றாள்.
நீங்கள் இந்த வழியே உள்ளே வாருங்கள் என்று குழந்தையைக் குளிக்க வைக்கும் இடத்தைக் காண்பித்தாள். உடனே கரடி மண்ணை அகழ்ந்து உள்ளே போனது. கரடியைக் கண்ட பெண் பயந்து நடுங்கினாள். மனிதன் என நினைத்து உள்ளே அழைத்தால் இது மனிதனைப் போல் இல்லையே என அஞ்சினாள் அப்பெண். வீட்டிற்குள் சென்ற கரடி அவளிடம் அவள் அணிந்திருந்த சேலை, கம்மல், மூக்குத்தி என அனைத்தையும் வாங்கிக் கொண்டது.
இவள் தன் குழந்தையை அணைத்தபடி மூலையில் போய் அமர்ந்து கொண்டாள். கரடி அவளை அழைத்து பெண்ணே என் தலையில் பேன் ஓடுகிறது. அதைக் கொஞ்சம் பார் என்றது. பயத்தின் காரணமாக இவளும் கரடியின் தலையில் பேன் பார்த்தாள். உடனே கரடி எங்கே உன் தலையைக் காட்டு நான் உனக்குப் பேன் பார்க்கிறேன் என்று அவள் தலையை இறுகப் பற்றிக்கொண்டு கழுத்தைக் கடித்து ரத்தம் குடித்தது. வலி தாளாமல் அவள் இறந்தாள்.
குழந்தையைத் தரையில் போட்டுவிட்டு கரடி அந்தப் பெண்ணைத் தான் வந்த வழியிலேயே இழுத்துச் சென்று வீட்டின் பின்புறம் இருந்த விறகு அடுக்கி வைத்திருந்த கட்டிலின் அடியில் போட்டு விட்டது. மீண்டும் கரடி வீட்டிற்குள் வந்து குழந்தையைக் கையில் எடுத்தது.
கரடியின் முடிகள் குழந்தையைக் குத்தின. அதனால் குழந்தை இடைவிடாது அழத் தொடங்கியது. அப்போது கரடி குழந்தையின் அழுகையை நிறுத்த
ரோ ரோ ரோ ரோ ரோ ரா
சுண்ணாம்பு நூறா
சூரல் பிடுக்கா
வரையாட்டுக் காளா உறாங்குறாங்கு
என்று பாடியது. அப்போதும் குழந்தை அழுதுகொண்டே இருந்தது. அதுக்குள்ளேயே மாலை நேரமும் வந்துவிட்டது.
மாலை நேரத்தில் கணவன் நாயுடன் வீடு திரும்பினான். அவ்வேளையில் குழந்தையின் அழுகை பெரிய அளவிற்குக் கேட்டது. கரடி வீட்டில் இருப்பதை அறிந்த நாய் குரைக்கத் தொடங்கியது.
வழக்கத்திற்கு மாறாகக் குழந்தை ஏன் இப்படி அழுது கொண்டிருக்கிறது என நினைத்தபடி வீட்டை நோக்கி நடந்தான் அவன். உள்ளே கையில் குழந்தையை ஏந்தியபடி கரடி நின்று கொண்டிருந்தது. நாய் கரடியைக் கடிக்கச் சென்றது. உடனே கரடி ஏன் இப்படி குரைக்கிறாய். நாள்தோறும் என்னைப் பார்த்துக் கொண்டுதானே இருக்கிறாய். என்னங்க அந்த நாயை வெளியிலேயே கட்டிப் போடுங்க என்றது கரடி.
கணவனோ, என்ன இவள் இப்படி இருக்கிறாள் என்ன நடந்தது? என்று நினைத்து கரடியை உற்று நோக்கினான். அதனைக் கவனித்த கரடி ஏன் என்னை இப்படி பார்க்கிறீர்கள் உங்களுக்கு என்ன ஆனது? நான் தனியே இருந்த போது ஏதோ ஒரு குரலைக் கேட்டபோது என் உருவம் இப்படி மாறிவிட்டது என்றது. நாம் தினமும் இவளை நடுக்காட்டில் தனியே விட்டுவிட்டுச் சென்றதனால் இப்படி ஆகிவிட்டது என்று வருந்தினான் அவள் கணவன். சரி இப்படியே நிற்க வேண்டாம் குழந்தையைக் குளிக்க வைக்க வேண்டும் போய் விறகு வெட்டிக் கொண்டு வாருங்கள் என்றது கரடி.
கரடியின் நாடகத்தை நம்பி அவனும் தண்ணீரைச் சூடாக்க வேண்டும் என்பதற்காக விறகு வெட்டச் சென்றான். அவ்வேளையில் அவன் மனைவி விறகுகளின் அடியில் இறந்து கிடப்பதைக் கண்டான். தன் மனைவியைக் கொன்றது கரடிதான் என்பதை உணர்ந்து கொண்ட அவன் வேகமாக வீட்டிற்குள் சென்றான். குழந்தையை இங்கே கொடு. இந்த இடத்தில் இருக்க வேண்டாம் மற்ற மக்களோடு சேர்ந்து இருப்பதுதான் நம் எல்லோருக்கும் நல்லது. இங்குக்குழந்தை நிறுத்தாமல் அழுகிறான் போகலாம் என்று அவனுடைய புறையில் எல்லாப் பொருள்களையும் எடுத்து வைத்தான்.
குழந்தையைத் தான்வாங்கிக் கொண்டு புறையைக் கரடியிடம் கொடுத்தான். தன்னை நெருங்காதவாறு வெகுதூரம் தள்ளி நடந்தான். மெதுவாகச் செல்லுங்கள் ஏன் என்னை விட்டு விட்டுச் செல்கிறீர்கள் என்று கத்திக் கொண்டே கரடி அவன் பின்னால் ஓடி வந்தது. இவனோ வேகமாக நடந்தான.; சிறிது தூரம் சென்றதும் கரடி மெதுவாகப் பின்வாங்கியது.
மீண்டும் அந்த காட்டு வீட்டிற்குச் சென்று விறகுகளின் அடியில் கிடந்த அந்தப் பெண்ணை வெளியே இழுத்து அவளின் மார்பைப் பிளந்து இதயத்தைத் தின்றது. ஒருசிறிய துணுக்கு கரடியின் பல்லில் போய் சிக்கிக் கொள்ள கரடிக்கு வலிக்கத் தொடங்கியது. வலியைத் தாங்கிக் கொண்டு அவன் பின்னால் கரடி ஓடியது. இருவரும் அதிக மக்கள் வாழும் பகுதியை அடைந்தனர். அங்கே ஒரு வீடு அவர்களுக்கு இருந்தது. அவனும் அவனுடைய மனைவியும் முதலில் தங்கியிருந்த வீடு அது.
அவர்கள் வீட்டை அடைவதற்கு இரவு நேரம் ஆனது. மறுநாள் காலையில் கரடி எழுந்து வாசல் நிறைய கிடந்த குப்பைகளை எல்லாம் பெருக்கிக் கொண்டிருந்தது. அதைக் கண்ட மற்ற பெண்கள் எல்லாம் கரடியை அதிசயமாகப் பார்த்துக் கொண்டிருந்தனர். சிறிது நேரத்தில் கரடிக்கு மீண்டும் பல் வலிக்க ஆரம்பித்தது. அதனால் தன் கையிலிருந்த ஈர்க்குமாறில் இருந்து ஒரு குச்சியை எடுத்து தன் பல்லைக் குத்தியது.

அப்போது பல்லில் இருந்த கரித்துணுக்கு வெளியே எகிறிப் போய் வீட்டின் முன் நின்று கொண்டிருந்த வாழை மரத்தின் அடியில் போய் புகுந்து கொண்டது. அதைக் கண்ட கரடி அந்த கரித்துணுக்கைத் தோண்டி எடுக்க முயன்றது. ஆனால் அதன் முயற்சி தோல்வியில் முடிந்தது.
அந்த வாழை மரம் தளதளவென வளர்ந்து வாழைக் குலையும் தொங்கிக் கொண்டிருந்தது. குழந்தை நடக்கவும் பேசவும் தொடங்கியது. தன் பல்லில் இருந்த கரித்துணுக்கு வாழை மரத்தின் அடியில் போய் புகுந்து கொண்டதால் தன்னுடைய வயிறு வீங்கி விடுமோ எனக் கரடி அஞ்சியது.
(வாழை மரத்தின் அடியில் துப்பினால் வயிறு வீங்கும் என்ற நம்பிக்கை இன்றும் காடர்களிடத்து இருக்கிறது. ஏன் அவ்வாறு நடக்கும் என்பதற்கான விளக்கம் எதுவும் இன்றைய காடர்களிடத்து இல்லை.)
அதனால் குழந்தையின் தந்தையிடம் வேகமாக ஒடிச்சென்று என்னங்க என்னங்க அந்த வாழை மரத்தைப் போய் வெட்டுங்க வெட்டுங்க என்றது. அவன் எதற்காக அதை வெட்டச் சொல்லுற. அதெல்லாம் முடியாது என்றான்.
என் குழந்தைக்காக வைத்த வாழை மரம் அது. அதனால் அதை வெட்ட முடியாது என்றான். ஐயோ என் வயிறு வீங்கி நான் செத்துப் போயிட்டாதான் உங்களுக்குத் தெரியும் என்றது கரடி. நீ செத்தாலும் பரவாயில்லை என்றான் அவன். கரடி கோபித்துக் கொண்டு போய் வாசலில் உக்கார்ந்து விட்டது. அப்போது குழந்தை ஓடி வந்து அந்த வாழை மரத்தின் சுண்டியினைக் குடித்துக் குடித்து விளையாடியது. கரடியால் கொல்லப்பட்ட அவன் மனைவியின் உயிர் அந்த வாழை மரத்தில் போய் தங்கியது.
குழந்தை வாழைச் சுண்டியினைக் குடிக்கும் பொழுது எல்லாம் அது பாலைச் சுரந்தது. சில நாட்கள் கழிந்த பிறகு குழந்தையிடம் வாழை மரம் பேசத்தொடங்கியது. கரடி அணிந்திருந்த கம்மல், வளையல், சேலை என அனைத்து அணிகலன்களையும் போய் வாங்கிக் கொண்டு வா என்றது. குழந்தையும் வாழைமரம் கேட்ட அனைத்துப் பொருளும் வேண்டும் என்றது கரடியிடம். கரடி குழந்தையிடம் இது என்ன விளையாட்டு உனக்கு அதையெல்லாம் கொடுக்க மாட்டேன் என்றது. இதைக்கேட்ட அப்பெண்ணின் கணவன் கரடியிடம் அவன் கேட்பது எல்லாம் கொடு இல்லையேல் உன்னை ஒழித்துக் கட்டி விடுவேன் என்றான். உடனே கரடி இதற்கெல்லாம் எதற்காக கோபம் கொள்கிறாய். கொடுத்து விடுகிறேன் என்றது.
குழந்தை அனைத்து அணிகலன்களையும் கொண்டுபோய் வாழை மரத்திற்கு அணிவித்தது. பின்பு வீட்டிற்கும் வாழைமரம் இருக்கும் இடத்திற்கும் சேர்த்து கற்களைப் போடும்படியாகக் குழந்தை கரடியிடம் கூறினான். கரடி போய் குழந்தை சொன்னது போலவே செய்தது. பின்னர் குழந்தை தன் தந்தையிடம் போய் அப்பா நீ அந்த மரத்திற்குப் பக்கத்தில் வந்து உட்கார் நான் விளையாடுகிறேன் என்றான். அவனும் தன் குழந்தையுடன் வாழை மரத்தின் அருகே போய் உட்கார்ந்தான். அப்போது வாழை மரத்திலிருந்து அவனுடைய மனைவியின் குரல் குட்டது. அவள் தன் கணவனை நோக்கி நீ இந்தக்கரடியுடனேயே வாழப் போகிறாயா? என்று கேட்டுவிட்டு அதன்பின்னர் அவனிடம் கரடியைக் கொன்றுவிட்டு என்னை மேளதாளத்துடன் வீட்டிற்கு அழை என்றாள்.
நான் கரடியை எப்படிக் கொல்வது என்றான் கணவன். நாளை அந்தக் கரடியை ஆற்றிற்கு அழைத்துச் செல். ஒரு மீனைப் பிடித்து அதனிடம் கொடு. மஞ்சள் அரைத்து குளிக்கச் சொல்லு. பின்னர் அதன் தலையை வெட்டிவிடு என்றாள்.
தன் மனைவி கூறியவாறே அவனும் மறுநாள் காலையில் கரடியை அழைத்துக் கொண்டு ஆற்றிற்குச்சென்றான். அங்கு ஒரு பெரியமீனைத் தூண்டில் போட்டு பிடித்து மூங்கில் குழாயில் போட்டு தீயில் வைத்து சமைத்துக் கொடுத்தான்.

அந்த மீனைக் கண்ட கரடி துள்ளிக் குதித்தது. இந்த மீனை நான் யாருக்கும் தரப் போவதில்லை நான் மட்டுமே சாப்பிடப் போகிறேன் என்று கூறியது. கரடி மீனைத் தின்று கொண்டிருந்த வேளையில் கணவன் போய் மஞ்சள் அரைத்தான். அந்த மஞ்சளைக் கரடியிடம் கொண்டு போய் கொடுத்து உன் தலை முதல் கால்வரை பூசி அந்த அருவியில் போய் அலசு என அருகே இருந்த அருவியைக் காண்பித்தான்.
கரடியும் அவ்வாறே செய்தது. அருவியில் தலையை அலசிக் கொண்டிருந்த போது தன் கையிலிருந்த வெட்டுக் கத்தியால் அதன் கழுத்தை வெட்டினான் கணவன்;.

கரடி இறந்த மறுகணமே இறந்த பெண் வாழை மரத்தில்இருந்து வெளியேவந்தாள்.

மாலையில் மேளதாளத்துடன் தன் மனைவியை வீட்டினுள் அழைத்து வந்தான் கணவன். பின்னர் கணவனும் மனைவியும் குழந்தையும் இணைந்து மகிழ்வுடன் வாழ்ந்தனர்.
……………….
(தகவல். மங்கம்மாள் பாட்டி, வயது72. வில்லோனி செட்டில்மென்ட். 22.09.2018.)

Leave a comment