தமிழ்க் காட்சி நெறியியல் : இயல் 1.

தமிழ்க் காட்சியியல் : நுதலியது அறிதல் (பகுதி 1)

நிர்மல் செல்வமணி


தமிழரின் மெய்ந்நூல் (மெய்ப்பொருளியல்) பற்றி இந்நூற்றாண்டில் பலர் கட்டுரைகளும் நூல்களும் எழுதியுள்ளனர். அக்கட்டுரைகளிலும் நூல்களிலும் தமிழரின் மெய்ந்நூல் இன்னது என்பதை எவரும் வரையறுத்திலர். அவ்வாறு வெளிப்படையாக வரையறை செய்யாதவிடத்தும் தமிழ் மெய்ந்நூல் பற்றிய முற்கோள்கள் அன்னோரின் கட்டுரைகளிலும் நூல்களிலும் கரந்துறைவதை நாம் அறியலாம். அம்முற்கோள்களை அறிந்தால் மட்டுமே தமிழ் மெய்ந்நூலைத் தமிழரும் பிறரும் எவ்வாறு கருதுகின்றனர் என்பது புலனாகும். அம்முற்கோள்களுள் குறிப்பிடத்தக்கன பின்வருவன: மெய்ந்நூல் என்பது சமயச்சிந்தனை (சைவ சித்தாந்தம் போன்றன) / உண்மைகள் மானிடவாதம் /பொருள்முதல்வாதம். இவை ஒவ்வொன்றைப் பற்றியும் தனித்தனியே சுருங்கக் காண்போம்.

  1. சமயச் சிந்தனை
    தமிழரின் மெய்ந்நூல் பற்றி எழுதுவோர் இறை, உயிர், உலகு பற்றியும் ஊழ், துறக்கம் போன்றவை பற்றியுமே கருத்துரைத்துச் செல்வர். இக்கருத்துக்கள் தமிழரின் சமயத்தையே அன்றி மெய்ந்நூலை முழுவதுமாகப் புலப்படுத்தா. தமிழரின் மெய்ந்நூலை உலகிற்கு உரைக்க வந்த தனிநாயகம் அடிகள் தமது தமிழ்ப்பண்பாடும் நாகரிகமும் (1970) என்ற ஆங்கில நூலில் விபுலானந்த அடிகளின் ‘தமிழ்ச் சமயச் சிந்தனை வளர்ச்சி’ (1959) என்ற ஆங்கிலக் கட்டுரையினின்று ஒரு பகுதியையே எடுத்துப் பதிப்பித்துள்ளார்.

    1.1.சைவக்கோட்பாடு
    தமிழரின் மெய்ந்நூல் என்பது முழுவதுமாகவோ அன்றிப் பெரும்பான்மையாகவோ சைவக் கோட்பாடே என்ற கருத்து இந்நூற்றாண்டின் தொடக்கத்தில் காலூன்றி இருந்தது. பூர்ணலிங்கம்பிள்ளை என்பார் தமது ‘தமிழ் இந்தியா’ (1927) என்ற ஆங்கில நூலில் தமிழ் மெய்ந்நூல் பற்றிக்கூறும் பகுதியில் சைவக் கோட்பாட்டையே முன்வைத்துள்ளார். இக்கருத்தை மிகவும் வலியுறுத்தியவர் மறைமலை அடிகள். அவரது ‘பழந்தமிழ்க்’ கொள்கையே சைவ சமயம்’ (1930), ‘தமிழர் மதம்’ (1941) போன்ற நூல்கள் இக்கருத்தை அடிப்படையாகக் கொண்டன.
  2. உண்மைகள்
    மெய்ந்நூல் என்பது சில உண்மைகள் என்பது மற்றுமொரு முற்கோள். தொல்காப்பியம் காட்டும் நெறியை விளக்க வந்த மொ.அ. துரை அரங்கசாமி தமது ‘தொல்காப்பிய நெறி’ (1963) என்ற நூலில் (நெறி-மெய்ந்நூல்) எழுத்ததிகாரம் உணர்த்தும். உண்மைகள், சொல்லதிகாரம் உணர்த்தும் உண்மைகள் பொருளதிகாரம் உணர்த்தும் உண்மைகள் என்று தலைப்புகளிட்டு அந்நெறியை வகுக்க முயன்றார். 1983இல் வெளிவந்த ‘தமிழ்நாட்டு வரலாறு’ என்ற நூலில் ‘மெய்ப்பொருளியல்’ என்ற இயலை வரைந்த கோ.தங்கவேலு என்பாரின் முற்கோளும் அதுவே.
  3. மானிடவாதம் (humanism)
    தெய்வத் துணையாலன்றி, அறிவாற்றலால் மனிதன் தன்னை அறிந்து தன்னிலையில் மேம்பட்டு விளங்கவியலும் என்று மனிதனைச் சிறப்பிப்பது மானிட வாதம். தமிழரின் மெய்ந்நூலும் அத்தகையதொரு மானிடவாதமே என்ற முற்கோளினைக்கொண்டு எழுதப்பெற்ற எழுத்துருக்களும் உள. இவ்வகையில், தனிநாயக அடிகளின் ‘தமிழ் மானிடவாதத்தின் கூறுகள்’ (1971) என்ற ஆங்கிலக் கட்டுரையும், சிவத்தம்பியின் ‘தமிழ்ப்பண்பாட்டின் மீள் கண்டுபிடிப்பு’ (1992) என்ற கட்டுரையும் குறிப்பிடத்தக்கன.
  4. பொருள்முதல்வாதம் (materialism)
    தமிழரின் மெய்ந்நூல் ஒருவகைப் பொருள்முதல்வாதமே என்று துணிந்தோரும் உளர். இக்கருத்திற்கு வித்திட்டவர் நா. வானமாமலை. பழந்தமிழ் நூல்களில் பொருள்முதல்வாதக் கருத்துக்கள் உள என்று அவர் கூறிச்சென்றார் (1970.)1 இக்கருத்தைத் தழுவிக் குணா2, கு.சா.ஆனந்தன்3, க.நெடுஞ்செழியன்4 போன்றோர் நூல்களை இயற்றியுள்ளனர்.

    இனி, பழந்தமிழ் நூல்களில் பிற மெய்ந்நூல் மரபுகளைத் தேடிக்காணும் முயற்சி பற்றிச் சுருங்கக் கூறுவோம். இப்பிற மரபுகள் இருவகையன:
    # பிற இந்திய மரபுகள்;
    # அயல்நாட்டு மரபுகள்.

    பிற இந்திய மரபுகள்
    தமிழில் வேதநெறி பற்றிப் பி. எசு. சுப்பிரமணிய சாத்திரி (1951) ஆய்ந்துள்ளார். பௌத்த, சமணக் கோட்பாடுகளை அடிப்படையாகக்கொண்டு கீழக்கணக்கு நூல்களும், காப்பியங்களும் தோன்றியமையால் அக்கோட்பாடுகளைப் பற்றிப் பல நூல்களும் கட்டுரைகளும் தமிழில் வெளிவந்துள்ளன. அவ்வாறே, தமிழில் சாங்கிய, ஓகக் கோட்பாடுகளை நாடும் நாட்டமும் உண்டு.

    அயல்நாட்டு மரபுகள்
    மேலை மெய்ந்நூற் கருத்துகளின் துணைக்கொண்டு பழந்தமிழ் நூல்களை ஆய்ந்து காணவும் முயன்றுள்ளனர்.
    பி.கே.சுந்தரம் என்பாரின் ‘புறநானூற்றில் சில மெய்ந்நூற் கருத்துருக்கள்’ (1979) என்ற ஆங்கில நூலினைச் சான்றாகக் காட்டலாம். மேலையோர் மெய்ந்நூலிற்கு வகுத்த பொருள் வரையறையை ஏற்று அதனைக் கொண்டு தமிழ்நூல்களை அணுகும் முறையை இத்தகு நூல்களில் காணலாம்.
    அழகியல் (aesthetics) என்பதை மெய்ந்நூல் துறையின் ஓர் உட்டுறையாக மேலை மெய்ந்நூலார் கருதுகின்றனர். அத்துறை பற்றிச் சில நூல்கள் தமிழிலும் வெளிவந்துள்ளன.5 இவை மேலையழகியல் அடிப்படையில் எழுந்தவையேயன்றி மரபான ‘தமிழ் அழகியல்’ அடிப்படை கொண்டு மலர்ந்தவை அல்ல.

    தமிழ்வழி மேலை மெய்ந்நூல்
    மேலை நாட்டில் தோன்றிய சில மெய்ந்நூல் வாதங்களைச் சிலர் தமிழில் அறிமுகம் செய்துள்ளனர். இவ்வகையில், மார்க்சியம், எக்சிசுடென்சியலிசம், உளவியல், அமைப்பியல், குறியியல், புலப்பாட்டு நெறி(rhetoric), இயங்கியல் (dialectic) போன்ற துறைகளைப் பற்றித் தமிழில் நூல்கள் செய்துள்ளனர். இத்தகு நூல்களைக் காட்டிலும் கு.கோதண்டபாணி பிள்ளையின் தலைமையில் அண்ணாமலைப் பல்கலைக்கழகம் வெளியிட்ட ‘கீழை மேலை நாடுகளின் மெய்ப்பொருளியல் வரலாறு’ (1970) என்ற தமிழாக்க நூலும், க.நாராயணனின் ‘மேலை நாட்டு மெய்ப்பொருளியல்’ (1989) என்ற நூலும் நல்ல தமிழில் நன்கு செய்யப்பட்டவை.
    இவை தவிர, மேலை மெய்ந்நூல்களின் தமிழ் மொழி பெயர்ப்பு நூல்களும் வெளிவந்துள்ளன. எடுத்துக்காட்டு; தமிழ்நாட்டுப்பாடநூல் நிறுவனத்தின் ‘தருக்க, விஞ்ஞான நெறி முறைகள்’ (1975).
    தமிழரின் மெய்ந்நூலை விளக்க முற்பட்ட அறிஞர் கொண்டிருந்த சில குறிப்பிடத்தக்க முற்கோள்களை எடுத்துரைத்தோம். அம்முற்கோள்களைக் கொண்டு அவர் வகுத்த மெய்ந்நூல், மரபான தமிழ் மெய்ந்நூலாகுமா?

    மரபுத் தமிழ் மெய்ந்நூல்
    தமிழ் மரபின் அடித்தளமாகக் கருதத்தக்கது திணைக் குமுகாயமே. இக்குமுகாயத்தில் வழங்கிய மெய்ந்நூலே மரபான தமிழ் மெய்ந்நூலாகக் கொள்ளத்தக்கது. முல்லை, குறிஞ்சி, பாலை, மருதம், நெய்தல் என்ற ஐவகைத் திணைக் குமுகாயங்களில் அவர்கள் வாழ்ந்து வந்தனர் என்பதும், ஒவ்வொரு குமுகாயத்திலும் ஒரு தலைமைத் தெய்வத்தினை வழிபட்டனர் என்பதும் நாம் அறிந்ததே. அவ்வாறெனின், தமிழர் ஐவகைத் தலைமைத் தெய்வ வணக்கம் உடையவர் என்பது விளங்கும். அத்தெய்வங்களுள் யாதொரு தெய்வத்தினையும் பெருந்தெய்வமாகக் கொள்ளுதல் அவர் மரபன்று என்பதும், அவ்வாறு கொண்டால் திணைகளின் இடையேயான சமன்பாடு சிதையும் என்பதும் நாம் உணரவேண்டுவது. திணைகளுள் உயர்வு, தாழ்வு இலது. இதனால், சிவனே தமிழரின் தலைமைத் தெய்வம் என்பது திணைக் கோட்பாட்டிற்கு ஒவ்வாத கருத்து என்பதும், சைவமே தமிழ்ச் சமயம் என்பதும் சைவக் கோட்பாடே தமிழரின் மெய்ந்நூல் என்பதும் ஏற்புடையனவல்ல என்பதும் விளங்கும். குறிஞ்சிக்குரிய சேயோனுடன் இணைத்துக் கூறப்பெறுபவன் சிவன். சிவநெறியே தமிழரின் தலையாய நெறி எனின், தமிழ் மெய்ந்நூல் குறிஞ்சித் திணையை மையமாகக் கொண்டது என்றாகும். இது ஏற்புடையதாகாது. அவ்வாறே, முல்லைக்குரிய மாயோனுடன் இணைத்துக் கூறப்பெறும் திருமால் நெறியாம் வைணவமும் தமிழ் மெய்ந்நூலின் அடிப்படை எனவியலாது. இதனால், ஒரு குறித்த திணைச் சமயத்தைத் தமிழரின் மெய்ந்நூல் என்பது பொருந்தாது என அறியலாம்.

    உண்மை இனி, மெய்ந்நூல் என்பதற்கே சமயம் என்ற பொருள் சாலுமா என்பது பின்னர் ஆயப்படும். அவ்வாறே, மெய்ந்நூல் என்பதற்கு ‘அடிப்படை உண்மை’ என்ற பொருள் கொள்ளத்தக்கதா? உண்மை என்பதை வாய்மை (வட. சத்- சத்தியம்) எனக் கொண்டால், அது மரபான பொருளாகாது. என்பது உள்ளமை, இருத்தல். அவ்வாறெனின், மெய்ந்நூல்என்பதை ‘உண்மை’ என்று பழந்தமிழர் பொருள் கொண்டனரா என வினவுதல் வேண்டும். இனி, உண்மை என்பதற்கு ‘அடிப்படைப் பொருள்’ (தத்துவம்) என்ற பொருளைக் கொண்டால், அதனைத் தமிழர் ‘முதல் பொருள்’ என்று குறித்து அறம், பொருள், இன்பம் என அது மூவகைப்படும் என்றனரே, அன்றி அவற்றை ‘உண்மை’ எனக் குறித்திலர்.

    மேலும், மானிடவாதம், பொருள்முதல்வாதம் என்பவை பழந்தமிழர் வகுத்தவை அல்ல; அவை பிற நாட்டவரிடமிருந்து கடன்பெற்ற கோட்பாடுகள். எனவே, அவையும் தமிழர் மெய்ந்நூல் என்பதற்கில்லை.
    ‘திணைமெய்ந்நூல் யாது என்ற வினாவை மேற்குறித்த கட்டுரைகளும் நூல்களும் எழுப்பவில்லை. அவ்வினாவிற்குரிய விடையைக் காண்பது இன்றியமையாதது. பழந்தமிழரின் மரபான காட்சியியலைக் காண்பதற்கு இவ்வினா பெரிதும் துணை புரியும்’ என்ற முற்கோளுடன் இக்கட்டுரை அமைக்கப்பெறுகின்றது.

    இங்கு எழுப்பத் தகுந்த வினாக்கள் பின்வருவன.
    திணைக் குழுகாயத்தில் மெய்ந்நூல் பயிற்சி இருந்ததா?
    அதில் ஈடுபட்டவர் யார்?
    ஊரில் எவ்விடத்தில் அது நிகழ்ந்தது?
    அது குறித்த நூல்கள் இருந்தனவா?
    இத்துறை பற்றிய அறிவை எவ்வாறு விளம்பினர்?

    இத்தகைய வினாக்களும் அவற்றிற்குரிய விடைகளுமே இத்துறை பற்றிய தெளிந்த செய்திகளை நமக்குத் தரவியலும்.

    தமிழ் மரபுத் தளத்தில் நின்று பழந்தமிழ்ச் சான்றுகளைக் கொண்டு தமிழரே பேணி வளர்த்த மெய்ந்நூல் யாது எனக் கண்டு அதனை வெளியிட வேண்டும்6; வழக்குறுத்த வேண்டும்.

    இவ்வணுகுமுறை சற்றுச் சிக்கலானது. ஏனெனில், இத் துறையின் பெயர், பொருள், வரையறை, உட்டுறைகள், குறிக் கோள் போன்றவற்றைப் பற்றி நாம் சில முற்கோள்களுடன்தான் பழந்தமிழ்ச் சான்றுகளை அணுக வேண்டிய நிலை உள்ளது.

    எடுத்துக்காட்டாக, மெய்ந்நூல் என்ற துறைக்குரிய பெயர் ‘மெய்ப்பொருளியல்! அல்லது ‘தத்துவம்’ என்பது நமது முற்கோள். பழந்தமிழர் அறியா, மரபற்ற இப்பெயர்களைப் பெயரெனக் கருதி, தவறான முற்கோளுடன்தான் ஆய்வைத் தொடங்குகின்றோம். இம்முற்கோள்களை அறியாதார் போல இவ்வாய்வை நடத்தவியலாது. ஆனால், இம்முற்கோள்கள் நம் ஆய்வைக் கட்டுப்படுத்துதல், அல்லது பொருள்வரையறை செய்தல் தகாது. செய்தால், பழந்தமிழரின் மெய்ந்நூலை உள்ளவாறே நாம் அறியவியலாது. இத்துறை இன்னது என்பது பற்றி இதுவரையில் நாம் அறிந்திராதவொரு கருத்தை, பழந்தமிழர் கொண்டிருந்திருக்கலாம் அன்றோ? மெய்ந்நூல் பற்றி நாம் கொண்டுள்ள கருத்தையே பழந்தமிழரும் கொண்டிருந்தனர் என்று பிழைபட நாம் எண்ணவும் எழுதவும் வாய்ப்புண்டு என்பதால் நமது முற்கோள்களைத் தேவை கருதி மாற்றிக்கொள்ளவோ, முற்றிலுமாகக் கைவிடவோ அணியமாக இருத்தல் வேண்டும்.

    மெய்ந்நூல் துறை பற்றிய நமது முற்கோள்களின் மூலம் யாது? அது, பற்று (பக்தி)க்கால நூல்களாகவோ, மேலை நாட்டு நூல்களாகவோ, பிறிதொன்றாகவோ இருக்கலாம். அவை அனைத்தையும் ஒரு புறம் ஒதுக்கி வைத்த பின்னரே ஆய்வை நடத்த வேண்டும். ஏனெனில், மெய்ந்நூலைப் பற்றிப் பற்றுக்காலத்தினர் கண்ட விளக்கம் மரபானது எனக் கூறவியலாது ; அவ்வாறே, மேலை நாட்டினர் தரும் விளக்கமும் தமிழ் விளக்கமும் ஒத்திருக்கும் எனவியலாது. பெட்ரண்டு இரசலும், பூங்குன்றனும் ‘மெய்ந்நூல்’ என்பதற்கு ஒரு பொருளையே சொல்லுவரா? மேலை இசையியலுக்கும் தமிழ் இசையியலுக்கும் பண், தாளம் என்பவற்றில் கோட்பாட்டு வேறுபாடுகள் உண்மை போல இத்துறையிலும் அடிப்படை வேறுபாடுகள் இருக்கலாம். எனவே, அவ்வேறுபாடுகள் கொண்ட ஒரு பொருள் நம் முன்னர்த் தோன்றும்போது அதை நாம் இனங் காண அணியமாதல் வேண்டும். இனங்கண்டு உறவு கொள்ள வேண்டும். ஒரு நிலையில் நாம் அதுவாதல் வேண்டும். தொல்பொருள் ஆய்வாளருக்கும், பழங்குடி மக்களிடையே களப்பணி செய்வாருக்கும் இப்பட்டறிவு இன்றியமையாதது.

    மெய்ந்நூல் துறையைப் பழந்தமிழ் இலக்கியத்தில் தேடிக் கண்டிட நாம் கொண்டு செல்லும் கைவிளக்கே துறைப்பெயர். எனவே, அதனை நன்கு கருதுதல் வேண்டும். இன்று வழங்கும் சில பெயர்களாவன: தத்துவம், மெய்ப்பொருளியல், மெய்யியல் என்பன. இவை தவிர, மெய்ந்நூல், மெய்ந்நெறி, மெய்த்திறம், மெய்கண்ட நூல், மெய்கண்ட சாத்திரம், மெய்ஞ்ஞான விளக்கம், மெய்யுணர்வு நூல், மெய்விளக்கியல், மெய்விளக்கத் துறை, பட்டாங்கு, சமயக்கணக்கு, சமயக்காட்சி, சமயவாதம், மதம், ஞானம், மெய்ஞ்ஞானம், தரிசனம் போன்ற பிற சொற்களும் வழங்கின. இவற்றைச் சுருங்க விளக்குவோம்.

    தத்துவம்
    வட. தத், அது+தத்வ; தத்வ என்ற சொல்லிற்கு வடநூல்கள் மூன்று பொருள்களைத் தருகின்றன. 7
    அவை:
    1) ஒரு பொருளின் மூலக்கூறு (essence),
    2) பதார்த்தம் (category). எ-டு: சிவன், அசீவன் (சமணத்தில்);
    புருடன், பிரக்குருதி8 (சாங்கியத்தில்);
    3) அடிப்படை (real), எ-டு. சைவத்தில் 36, அல்லது 96;
    சாங்கியத்தில் 25 போன்றன

    தமிழில் ‘நான்மணிக்கடிகை’9 என்ற நூலில் இச் சொல் இடம் பெறுகிறது. பின்னர்ச் சிலம்பிலும் குறிக்கப் பெற்றது.10 இச்சொல் தமிழ்ச் சொல்லன்று. ஆதலால் நீக்குதற்குரியது; கனியிருக்கக் காய் கவர்ந்தற்று என்பதால்.

    மெய்ப்பொருளியல்
    திருக்குறளில் பயின்ற ‘மெய்ப்பொருள்’ என்ற சொல்லுடன் ‘இயல்’ என்பதைச் சேர்த்து இக்காலத்தவர் வழங்கி வருகின்றனர். இது, ஆக்கச்சொல். குறளில் இச்சொல் ‘பொருளின் உண்மை நிலை’11 என்ற பொருளில் பயலுகின்றதேயன்றி மெய்ந்நூல் துறையைக் குறித்திலது. பொருளின் நிலை என்ற அளவில், மெய்ந்நூல் துறையின் ஒரு பகுதியாம் பொருள் குறித்ததே அன்றி, அத்துறை முழுவதையும் குறித்திலது. மேலும், ‘மெய்’ என்ற சொல் பழந்தமிழகத்தில் பெற்றிருந்த பொருளை நோக்க வேண்டும். திணைக் குமுகாயத்தில் (தொல்காப்பியக் காலத்தில்) மெய் என்ற சொல் பெரும்பாலும் உடலையே குறித்ததன்றி, உண்மையை அன்று. எனவே, ‘மெய்ப்பொருள்’ என்றால் ‘உடற்பொருள்’ என்னும் பொருள் தோன்றும். இனி, வள்ளுவர் கருதிய மெய்ப்பொருளைத் தொல்காப்பியரும் அவர் காலத்துச் சான்றோரும் ‘முதற்பொருள்’ என்றே குறித்தனர்.12 இதனால், ‘மெய்ப்பொருளியல்’ என்பது தொன்மரபு உடையது அன்று என்பது விளங்கும்.

    அவ்வாறே, மெய்யியல் என்பதும் இக்காலத்து ஆக்கச சொல். ஆனால், மெய்ந்நூல்13 மெய்ந்நெறி,14 மெய்த்திறம்,15 மெய்கண்ட நூல் அல்லது மெய்கண்ட சாத்திரம் (சைவ சித்தாந்தத்தைக் கூறும் 14 நூல்கள்) என்ற சொற்கள் தமிழ் நூல்களில் இடம்பெற்றவை.
    இன்றைய அகராதிச் சொற்களான மெய்யுணர்வு நூல் மெய் விளக்கியல், மெய்விளக்கத்துறை என்பனவும் ஆக்கச் சொற்களே. அவையும் ‘மெய்’யடிப் பிறந்தனவாகையால் நன்கு பொருந்துவன அல்ல.

    பட்டாங்கு
    உள்ள நிலைமை’, ‘நூல்’. இக்காலத்தில். பாவாணர்16 இச்சொல்லை மெய்ந்நூல் என்ற பொருளில் பயன்படுத்தியுள்ளார். கீழ்க்கணக்குள் முதன்முதலாக இடம்பெறும் இச்சொல் முற்காலத்திலும் பிற்காலத்திலும் பெருவழக்குப் பெற்றிலது. எனவே இதுவும் இன்று போற்றுதற்குரியதன்று.

சமயக்கணக்கு
சமயம், மதம், கோட்பாடு; கணக்கு, ஆராய்ச்சி; கண், எண்ணு, ஆராய்; சமயக் கணக்கு, சமய ஆராய்ச்சி.
இச்சொல் மணிமேகலையில் முதன்முதலில் வழங்குகிறது.17 அயற் சமயங் கள் தமிழகத்தில் புகுந்த காலத்தது. ஆதலால் திணைக் குமுகாயத்திற்கு இது பொருந்தாது. சமயம் என்பதனடித் தோன்றிய பிற சொற்களாவன: சமயக்காட்சி18 சமயவாதம்19 என்பன. இன்று ‘சமய மெய்ப்பொருளியல்’ (Philosophy of religion) என்று வழங்கும் மெய்ந்நூல் துறையின் ஒரு பிரிவிற்கு இச்சொற்கள் பொருந்துவன. இரண்டிலும், முந்தையது ஏற்புடையது. இனி, ‘மெய்ந்நூற்கோட்பாடு’ என்ற பொருளில் ‘மதம்’ என்ற சொல்லை மாணிக்கவாசகர் ஆண்டுள்ளார்.19

மெய்ந்நூலுக்குச் ‘சமயம்’ என்ற சொல் பொருந்துவதன்று. மெய்ந்நூலும் சமயமும் ஒரு பொருள் உடையன என்ற மயக்கம் தோன்றிய வரலாற்றைச் சுருங்கச் சொல்லுவோம்.

மதம்
பழந்தமிழ்க் காட்சித் துறைச் சொல்லான ‘கோள்’ என்பதற்கு நிகராக ‘மதம்’ என்பது பிற்காலத்தில் வழக்குப்பெற்றது. ‘தன்கோள்’ எனத் தொல்காப்பியம் குறித்ததைத் ‘தன்மதம்’ என் நன்னூல்20 குறித்தது. நாளடைவில் மதம் என்பது கோளினைக் குறிப்பதை விடுத்துச் சமயக் கோளினைக் குறித்தது. பற்றுக் (பத்திக்) காலத்தில் ஒருவரின் சமயக் கோட்பாடே அவரது கோளாக இருந்தமையால் அதனை ‘மதம்’ என்றனர் (மது, வலிமை; மதம் வலியது; வலியப் பற்றியது). இதனால் மெய்ந்நூலாரின் கோள் (மதம்) எப்போதும் சமயக்கோளாக இருத்தல் வேண்டும் என்பதன்று. தமிழ் மெய்ந் நூற்படி, சமயப் பொருளான இறை, உயிர், உலகு என்பவை மட்டும் மெய்ந்நூல் என்பது எப்பொருள் ஆயினும் அப்பொருள் பற்றிய உண்மையை, அறத்தை, அது விளைக்கும் இன்பத்தை ஆய்வது. அதாவது, அப்பொருளின் உண்மையையும் (being) அவ்வுண்மையை அறியும் (தருக்க) நெறியையும் உள்ளடக்கியது ஆகும். ஆனால், சமயக் கோட்பாடே மெய்ந்நூல் எனக் கருதுவார் தருக்கத்தைப் பெரும்பாலும் மெய்ந்நூலின் பகுதியாகக் காட்டார். இதனால், அவர் மெய்ந்நூலினைப் பற்றிக் கொண்ட கருத்து முழுமையானதன்று என்பது விளங்கும். அவ்வாறே, தமிழ் மெய்ந்நூல் என்பது ‘உண்மைகள்’, மானிட வாதம், பொருள்முதல்வாதம் என்று கருதியவரும் தருக்கத்திற்கு உரிய இடத்தைத் தந்திலர் என்றே கூறவேண்டும். சமணம், பௌத்தம் போன்ற பிற மெய்ந்நூல் மரபுகளைத் தமிழில் கூறும் நூல்களே தருக்கத்திற்கு உரிய இடத்தைத் தந்துள்ளன. எடுத்துக்காட்டாக, தருக்கத்தில் மிகச் சிறந்த ஓர் உறுப்பான ‘காண்டிகை’ என்பதைப் பற்றித் தொல்காப்பியம் முதலிற் கூறினும், காண்டிகையின் உறுப்புகளுக்குரிய எடுத்துக்காட்டுகளை முதன்முதல் கூறும் இலக்கியம் பௌத்த நூலான மணிமேகலையே. காண்டிகை என்னும் சொல்லை மணிமேகலை குறிப்பிடாவிடினும் அதற்குரிய பிற்காலச் சொல்லைக் குறித்துள்ளது.
ஞானம், மெய்ஞ்ஞானம்
தமிழ் ஏடுகளுள் மெய்ந்நூல் ஏடுகளும் உள. அவற்றுள் சில வருமாறு: அகத்தியர் ஞானம், கமலமுனி ஞானம், சுந்தர மூர்த்தி சூத்திர ஞானம், ஞானச் சுருக்கம், ஞான நூறு, ஞான தீபப்பொருள் விளக்கம், மாணிக்கவாசகர் ஞானத்தாழிசை, வால்மீகர் ஞான சூத்திரம். கைலாச சட்டை முனி ஞானம், கைலாச சட்டை நாதர் மெய்ஞ்ஞானம் என்பன. இவற்றில் ஞானம், மெய்ஞ்ஞானம் என்ற சொற்கள் மெய்ந்நூல் என்ற பொருளில் வழங்கியமை காண்க. சூடாமணி நிகண்டு, ஞானம் என்பதற்குத் ‘தத்துவ நூல்’ எனப் பொருள் உரைக்கின்றது.
தரிசனம்
மெய்ந்நூல் எனப் பொருள்படும் ஆன்வீக்சிகி என்ற வட சொல் ஏறத்தாழ கி.மு. 650 இல் தர்சன, ‘ஏது’ என இரு கிளையாகப் பிரிந்தது என்பர்.21 தர்சன22 என்பது ஆன்மாவைக் காணத் துணைபுரியும் துறை என்பர். ஏது என்பது தருக்கம். இங்கு, தர்சன என்பதைச் சற்று விளக்குவோம். தியானத்தின் மூலம் ஆன்மாவைக் காண்பதே மிக உயர்ந்த நற்செயல் என யாஜ்னவால்கிய சமிதை (1.8) என்ற நூல் கூறும் என்பர். ஆன்மாவைக் காணும்போது இதயத்தின் முடிச்சு அவிழ்கின்றது என்றும் அனைத்து ஐயமும் நீங்கி வினைமுயற்சி முற்றிலும் ஒடுங்குகின்றது எனவும் (11.28) முண்டகோபனிடதம் கூறும் என்பர்.22

ஏறத்தாழ கி.மு.1 ஆம் நூற்றாண்டில் ஆன்வீக்சிகி23 என்ற வடசொல்லிற்குப் பகரம் தர்சன என்ற சொல் வழங்கலாயிற்று. சாங்கியம், ஓகம், உலோகாயதம் என்ற ஆன்வீக்சிகப் பகுதிகள் இப்போது தரிசனங்கள் ஆயின. எனவே, கி.மு. முதல் நூற்றாண்டிற்கு முன் தர்சன என்ற சொல் மெய்ந்நூல் துறைப்பெயராக வழங்காமை அறிக.

(பகுதி 2)
இனி, இத்துறைக்கு உரிய மரபான தமிழ்ப் பெயர் யாது எனக் காண்போம். அதற்குத் துணையாகத் தொல்காப்பியத்தையும் பத்துப்பாட்டையும் எட்டுத்தொகையையும் கொள்ளுவோம் இவையே திணைக் குமுகாய மரபைப் பேணும் நன்னூல்களாதலால் இந்நூல்களில் மெய்ந்நூல் தொடர்பான் தொடர்களை விளக்க முற்படுவோம்.


(பகுதி 2 – அடுத்த இதழில் தொடரும்)


சான்றெண் விளக்கம்

  1. பழந்தமிழ் இலக்கியத்தில் பொருள் முதல்வாதக் கருத்துக்கள், ஆராய்ச்சி, 1970, 9-28.
  2. தமிழர் மெய்யியல், சென்னை: பொதுமை வெளியீடு, 1980.
  3. வள்ளுவரின் மெய்யியல், சிதம்பரம்: மணிவாசகர் பதிப்பகம், 1986.
  4. தமிழ் இலக்கியத்தில் உலகாய்தம், சென்னை: பாரி நிலையம், 1990.
  5. பெ. திருஞானசம்பந்தனின் இந்திய எழிற்கலை, சென்னை: சென்னைப் பல்கலைக்கழகம், 1977;
    தெ.பொ.மீனாட்சிசுந்தரனின் Aesthetics of the Tamils. Madras: University of Madras, 1977;
    வெங்கட் சாமிநாதனின் கலை, வாழ்க்கை, அனுபவம், வெளிப்பாடு, சிவகங்கை: அன்னம், 1982;
    கா. ந. சுப்ரமண்யத்தின் கலை நுட்பங்கள், சென்னை: வேள் பதிப்பகம், 1988;
    முருகானந்தம் எழுதிய அழகியல், சென்னை: உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், 1992;
    இந்திரனின் தமிழ் அழகியல், சென்னை: தாமரைச்செல்வி பதிப்பகம், 1993 ஆகியன குறிப்பிடத்தக்கன.
  6. தமிழ் மெய்ந்நூல் என்ற தனித்துறையை வகுக்க முயன்றோர் பலர். அவருள், பூர்ணலிங்கம்பிள்ளை (1927), மறைமலைஅடிகள் (1930), (1941), தேவநேயப்பாவாணர் (1940) போன்றோர் குறிப்பிடத்தக்கவர். இன்னோர் இட்ட அடித்தளத்தினின்று எழுந்ததே தெ.பொ. மீனாட்சி சுந்தரனாரின் “தமிழ்ச் சிந்தனையை எழுதுதற்கான வேண்டுகோள்” என்ற ஆங்கிலக் கட்டுரை (Journal of the Annamalai University, vol xvi, July, 1951.) பின்னர் அவரது 61ஆம் அகவைப் பிறந்தநாள் சிறப்புநூலிலும் (1961) சேர்க்கப்பட்டது). இக்கட்டுரையில், தமிழ் மற்றும் பிற மொழிகளில் உள்ள தமிழ் மெய்ந்நூற் சிந்தனைகளையும் தொகுக்க வேண்டும் எனவும், இதற்கான மூலங்களுள் சிந்துசமவெளிச் செய்திகளுக்கு முதன்மை இடம் தர வேண்டும் எனவும் குறித்துள்ளார். ஆனால் தொல்காப்பியத்தை அடிப்படையாகக் கொண்டே இக்கட்டுரையை வரைந்துள்ளார்.
  7. John Grimes, A Concise Dictionary of Indian Philosophy, Madras: University of Madras, 1988, pp. 361-62.
  8. தமிழில் ‘பகுதி’ என வழங்கும்.
  9. “தத்துவமான நெறிபடரும்”, 30:3
  10. “தத்துவன்”, 10:182.
  11. 249, 355, 356, 423, 857.
  12. தொல். III 8.102.
  13. திவ். பெரியதி. 2, 5, 2.
  14. திருவாசகம், 26, 10.
  15. மத உண்மையை உணர்த்தும் நூல், மணி 27:106.
  16. ஒப்பியன் மொழிநூல், சென்னை: தி.தெ.சை.நூ கழகம், மறுபதிப்பு, 1990, ப. 130.
  17. பதிகம் 88; 27 ஆம் காதைத் தலைப்பு
  18. பெருங். உஞ். 36, 252.
    19 திருவாசகம் 4.52
  19. 11:6
  20. S. Chandra Vidyabhusana, A History of Indian logic, Delhi & other Places: Motilal Banarsidass, 1978, pp. 5-6.
  21. S. Chandra Vidyabhusana, முந்தைய நூல், பக்கம் 6; . கி.மு. 400- க்கு முன்னரே தர்சன் என்ற சொல் இப்பொருளில் வழங்கிற்று என்ற மாறுபட்ட கருத்தும் உண்டு. காண்க: Surendranath Dasgupta, A History of Indian Philosophy, vol. 1, Cambridge University Press, 1932 (1922) P. 68.
  22. இச்சொல்லின் பொருள் ‘காட்சி’ என்பதே. இது, அன்வ், அக்ஷ என்ற இரு சொல்களாகப் பிரியும். அன்வ், பின்னர்/உடன் செல், போல+அக்ஷ, கண் = அன்வீக்க்ஷி,கண்ணால் நடத்தப் பெறுவது, காட்சி. அக்ஷ என்ற வடசொல் அக்கு என்ற தமிழ்ச்சொல்லுடன் பெரிதும் ஒப்புமை உடையது, அக்கு, சுருங்கு (அஃகு, தொல் 1.2.7:3), கண், புற ஒளிக்கு ஏற்பச் சுருங்கும் இயல்புடையதால் அக்கு, அக்கம் எனப்பட்டது. அக்குள் சுருங்கியது, கமுக்கட்டு; அக்குணி, சுருங்கிய அளவு. வடமொழி அக்க்ஷி என்பதற்குத் தமிழ் ‘அக்கு’ என்பதே மூலம் என்பார் ஞானப்பிரகாசர். காண்க : அவரது சொற்பிறப்பு-ஒப்பியல் தமிழ் அகராதி, முதல் தொகுதி, சுன்னாகம்; 1938, ப. 9.
    அக்கம் + வட. அக்க்ஷ என்பதுடன் ஒப்பு நோக்கத்தக்கன: பக்கம் + வட். பக்க்ஷ; சுக்கு வட. சுக்ஷக.
    கன்னடத்திலும் அக்கு என்பதன் வடிவங்கள் உள. அக்கு, இறு முடிந்துவிடு; அக்குடிசு, சிறிதாகு, சுருங்கு; அக்குளிசு, அக்களிகெ, வயிற்றுத் தசைகளைச் சுருக்கு.

Leave a comment

Trending